Sunday, March 27, 2005

பயணம்

இலைகளின் அசைவில் சோகம்
காற்றின் பயணத்தில் பெருமூச்சு
சருகின் துவளலில் உயிர்ப்பு - என
குறிப்பால் உணர்த்துகிறாய்.

சிந்தனையற்று வெறுமை பெற
உன்னிடத்தில் அமர்கையில்
பரபரப்பாய் புகை வண்டி
கூட்டம் கலைந்ததும்
மீண்டும் மௌனத்தில் நாம்

மழை தூறும் மாலைப் பொழுதில்
உனைக்காண வருகையில்
காற்றால் தழுவி
சருகால் வருடி
சாரலைப் பரிசளித்தாய்

ஆலும் அரசுமே நம் நண்பர்கள்

உன் மேல் காதலிருந்தாலும்
உனது நீண்ட நெடும் பாதையில்
உன்னுடன் இணைந்து
ஊர் எல்லை வரைதான்
நான் ஓடி வருவேன் -

பள்ளி செல்லும் பெண் பிள்ளைக்கு
ஆளில்லா ரயில் பாதையில்
தனியே என்ன வேலை என்பார்களே ?

கடிதம்

கவிஞன் என்றாய்
" கவிதைகள் ஐம்பது " என வெளியிட்டாய்
இரண்டு கிடைத்தது. மற்றவை?

புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும்
புரட்சி தலைப்பிட்டிருந்தாய்
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய்.

உணர்ச்சி பூர்வமானவன் கவிஞன் என
உருவேறியிருந்த எங்களுக்கு - நீ ஒரு
மின்சார தாக்குதல்.

சண்டையிடும் சகாக்கள் இருவரை
சலனமின்றி கடந்து
" சமூக நீதி " கவிதையை
சமூகத்திற்கு அர்பணித்தாய்.

முறுகக் காயும் வெயிலில்
பிச்சை கேட்ட
முதியவரை விரட்டி
கார் கண்ணாடி உயர்த்தி
" கருணை மழை" கவிதையை
கண் பார்வை அற்றோருக்காக என்றாய்.

வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை - பின்பு
எப்படி கவிஞனாவாய் ?
அடிப்படையில் மனிதனாகு
அதன் பிறகு கவிஞனாகலாம்.

அச்சக உரிமையாளரான நீ
கவிதை தொகுப்பென ஒன்று
தாராளமாய் வெளியிடலாம்
யாராலும் தடுக்க இயலாது - ஆனால்
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல்

1. அட்டையின் மேல் " அபாயம் " என்றும்
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் " உபயம் " என்றும்
அச்சிட வேண்டும்.

என் விருந்தாளி

சீராய் பெருக்கிய முற்றத்தில் - மீண்டும்
சின்னஞ்சிறு சிறகுகள்
இது அவற்றின் வேலை தான்.

முடிந்தவரை ஓரிரு சிறகுகள் - என்
முற்றத்து எல்லைக்குள் விழும்படி
கவனமாய் கோதி காற்றினில் அனுப்பும்
கூடத்து கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பும்.
சீவி சிங்காரிக்க என் வீடுதான் கிடைத்ததா ?

கோதுமை நிறத்தில் ஒன்று - மனைவி
அடர் நிறத்தில் ஒன்று - கணவன்
தம்பதியர் தங்க தடை ஏதுமில்லை என் வீட்டில்.
ஆனாலும் வேறு நல்ல வீடாய் பார்த்து கூடு கட்டி

அடிக்கடி வந்து போகும் என் முற்றம் தாண்டி.

என்றைக்கேனும் சில மணி அரிசிகளைச் சிதறுவேன்
சிறு அலகால் கொத்துவதை அருகிருந்து பார்ப்பேன்
ஆனால் இனி . . . கட்டாயம் பிடி அரிசி
தினம் தினம் சிதற வேண்டும் - ஏன் எனில்

கட்டுரையில் கரைந்திருந்தது இன்டியன் எக்ஸ்ப்ரஸ்
" "சிட்டுக் குருவி இனம் 80 விழுக்காடு அழிந்து விட்டது

மீதமுள்ளதோ வெறும் 20 விழுக்காடு மட்டுமே ""

கண்ணீர் உப்பிட்டு கைப்பிடி அரிசியை வைத்தேன் - ஏனோ
காணவில்லை இதுவரை என் சிட்டுக்களை.

Friday, March 25, 2005

இது ஒரு சோதனை பதிவு

இது ஒரு சோதனை பதிவு