Wednesday, April 20, 2005

அவன்

அவனை எனக்குப் பிடிக்கும்
முந்தானை சரி செய்தல் போலும்
முன் நுதல் குழல் ஒதுக்குதல் போலும்
அவன் முகம் பார்ப்பேன்.

விழியால் இணைந்தோம்
இணைந்தே வீழ்ந்தோம்
காதலில்.

எங்கள் அகங்களோ அருகருகே
ஆனால் இல்லங்களோ எதிரெதிரே.

புதூ வண்டி.. . புதூ ஆரன்
அதிக அழுத்தம்
எனக்காக என் வீட்டு வாசலில்.

பின் இருக்கையில்
நான் வரவா என்றால்
வா என்கிறான்
பின் விளைவுகளை எண்ணாமல்.

தலையணை மந்திரத்தால் - என்
தலைவனை மந்திரித்தால்
தடையேதுமில்லையென - என்
தலை வருடி முத்தமிடுவார்.

ஆனால் . . . என்

மாமியாருக்கான மந்திரம்
ஏதுமில்லை என்னிடம்.

தன் தாய்க்கும் என் மாமிக்குமான
சண்டையை நிறுத்த
அவனுக்கு
இன்னும் வேண்டும் வயது
இப்போது தானே நான்கு...!

Sunday, April 17, 2005

செல்லம்

மழைக்காலம்
மாலை மயக்கத்தில்
மௌனமாய் சூரியன்

இருபத்தியெட்டு கிக்குகளுக்குப்பின்
உறுமும் என்
இரு சக்கர வாகனம்

உடை விலகலை
மழையிலும்
தவறாது கவனிக்கும்
சக வழி போக்கர்கள்

நனைந்து, தலைவழி வரும்
மழை நீரை குடித்து
தவணை முறையில் வந்தடைந்தேன்
என் செல்லமே
உன்னைக்காண.

உலராடை உடுத்தாமல்
உனது பசியறிந்து
குழம்பாய் காய்ச்சிய பாலை
இளஞ் சூட்டுடன்
அருகில் வைத்தால்

பஞ்சுப் பொதிபோல்
உருண்டையாய் எழுந்து
சின்ன
முழங்கால் நீட்டி
சோம்பல் முறித்து
கார்பெட் மேல்
மீண்டும் தூங்கும்
என் குட்டி நாயே. . .

ஆறிய பாலை குடிக்க
உனக்கு பிடிக்காதேடா. . .
அதற்காகவாவது எழுந்திரு.

Wednesday, April 13, 2005

தமிழரின் புத்தாண்டு..?

ஆலய மணி ஓசையில்
ஆண்டவன் சன்னதியில்
ஆரம்பமாவது
ஆங்கிலப் புத்தாண்டு

மலர்களும் கனிகளும்
மகிழ்வோடு குவித்து
கூடி வணங்கி பிறப்பது
மலையாள விஷுகனி

அடுத்து வரும்
ஆண்டிற்கான
அடையாள விலங்கினை
அறிவித்துப் பிறப்பது
சீனப் புத்தாண்டு

அவரவர் அடையாளங்களை
அடுத்த தலைமுறைக்கு
அழகாய் அளித்துவிட்டார்கள் அவர்கள்.

நாம்...?

ஸதா - அரட்டை, சிறப்பு விருந்தினர் மும்தாஜ்
செல்லமே, ஜெமினி, அரசாட்சி,
குஷி, த்ரீ ரோஸஸ் - இன்னும் பல. .

சிந்தனை சலவை செய்து
கேபிள் முக்தி தந்து
நாற்காலி மோன நிலை அருளும்
கலாச்சார வேர் புழு...

தொலைக்காட்சி பெட்டி மட்டும்தான்
நாம் அளிக்க நமது அடையாளம்.

தமிழரே. . . மன்னிக்கவும். . .

ஏனோ நினைவில் வந்து தொலைகிறது. . .

கல் தோன்றி மண் தோன்றா காலத்து
முன் தோன்றிய மூத்த குடி நம் குடி.


Tuesday, April 05, 2005

உயிரின் உருவம்

எளிதாய் எடுத்தாளலாம்
எளிமையாய் புரியவைக்கலாம்
ஏங்கினேன் என எழுதியே
ஏங்கவைக்கலாம்

கடும் விமர்சனம்
கண்டிப்பாய் விழாது
கருத்தை கவரவில்லை
என்றாலும்
கடுஞ்சொல் வராது

காவியங்களோ
கருத்தோவியங்களோ
தேவையில்லை
கருகிய காதல்
கவிதைகள் போதும்
கவிஞர் என முகவரியிட

இங்கு..
காதலைவிட
காதல் கவிதைகள் மட்டுமே
உண்மையான உயிர்ப்புடன்

காதல்...!?
இறந்த காலத்தில் இருந்திருக்குமோ!
இப்பொழுது இருக்கிறதோ!
இனிமேலும் இருக்குமோ ! இல்லை. . .
இருக்கவே இருக்காதோ. . . ஆனால்

கால காலத்திற்கும்
கட்டாயம் இருக்கும்
காதல் கவிதைகள்.

இருப்பதாக நம்பப்படுவதால் .. இறைவன்
காதல்
இருப்பதாக நம்பப்படுவதால்.. . கவிதைகள்.

தீபாவளி

தீபாவளி விடிந்தபின்
விலாவரியாய்
தினத்தந்தியில் சுருட்டி தந்து
திகைப்புறச் செய்த
குடும்ப தையல்காரரும் -
அவர் தைத்த மாடர்ன் உடைகளும். . .

ஒரு தாய் மக்களென்பதை - அந்த
ஒரே டிசைன் உடையணிந்து நிரூபித்த
நானும் எனது தம்பி தங்கையரும். . .

முப்பது ரூபாய் வெடிகளுக்கு
முதல் நாள் இரவே நடந்த
பாகப்பிரிவினையும். . . .
அதனால் வந்த மனத்தாங்கலும்
அதற்கு சித்தப்பாவின் மத்யஸ்தமும்....

விடிந்ததும்
அத்தனை பேர் பாகத்தையும்
ஒற்றை ஆளாய்
அசராமல் வெடித்து தீர்த்த
அதே சித்தப்பாவும். . . .

அவரை அடித்து பின்னி
துவைக்க ஆவேசித்து. . .
பின்
எதுவும் செய்யாமல்
அவர் அருகே
வெறுமனே நின்ற நாங்களும்...

தட்டு நிரம்பிய பட்சணங்கள்
போதாதென
வேகவைத்த உப்பு வேர்கடலையோடு
மழை விழும் முற்றம் சுற்றி
ஆளுக்கொரு தூணில் சாய்ந்து
ஆரவாரமாய் பேசி சிரித்த
ஊர்க்கதையும் . . . பேய்க்கதையும். . .

கடுங்காப்பி மணத்துடன்
வெட்டு, குத்து, கொலைப் பழியுடன்
தாயக்கட்டை விளையாடிய
அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பாவும்...

ம். . ஏனோ . .
நிகழும் பொழுதைவிட
நினைக்கும் பொழுதில்தான்
என்னை நெகிழ்விக்கின்றன
சில தீபாவளிகள். . ...

என்னதான் செய்வது

தூரத்திலிருந்து தூக்கி எறிய மனமில்லை
கொஞ்சம் உள்சென்று
விட்டு விட்டு வரவும் துணிவில்லை

நாலணாவிற்கு நச்சரிக்கும் சிறுவரிடம்
தூக்கி கொடுக்கவும் விருப்பமில்லை
காலருகில் வைத்துவிடுவதும் சரியில்லை

ப்யூர் வெஜிடேரியனை
மீன்களுடன் சேர்ப்பதும் முறையில்லை

என்னதான் செய்வது...?

கடற்கரைக்கு வந்தபின்னும்
போகமாட்டேன் என்னும்
இந்த மண்ணு பிள்ளையாரை.....

மேற்கு சுனாமி

மேற்கு சுனாமி

இரு சக்கர வாகனத்தில்
இருவர் மூவராய். .
நாராச கூச்சலிட்டு
நகரெங்கும் சுற்றி. . .

நள்ளிரவில்
நடுத்தெருவில்
நட்சத்திர ஓட்டலில்
நளினங்களற்ற
நடனங்கள் ஆடி. . .

காரணமேயின்றி
காரிருளில்
கடற்கரையில் கூடி...

பொங்கும் பீர்
போதை ஏற்றி
போக்குவரத்தை தன்
போக்குக்கு மாற்றி...

அலட்டல் அலப்பரியாய்
ஆன்மீகச் செம்மலென
ஆண்டிறுதி நாளின்
அர்த்த ராத்திரியில்
ஆலயம் நோக்கி ஓடி . . . - என

இவை எதையுமே செய்யாமல். . .

இளம் காலை விடியலில்
இதமாய் உச்சி முகர்ந்து
" புது வருஷம் டா "" என்று
கன்னம் தட்டிச் சென்ற
என் தந்தையொடு. . .

இயல்பாய் வாழ்ந்த தமிழன்
அழிந்துதான் போய் விட்டான்.