Sunday, May 29, 2005

முன் குறிப்பு

முன் குறிப்பு

பின் வரும் " சுமி " யும் காதல் என்ற ஒரே ஒரு வார்த்தையை தேடி அலைந்த இரு இதயங்களின் தேடல் தான்...

தெய்வீகத்தை விட ஆத்மீகம் உணர்வு பூர்வமானது ... வலி நிரம்பியது அல்லவா?

ஆத்மாவின் வலியை அனுபவித்திருக்கின்றீர்களா? சுமியை படிங்க .. .கொஞ்சம் புரியும்.

அப்புறம் ...தேடல் - 3 ஐ தேடாதீங்க.. அது அடுத்த வாரம் வரும்

(ஐயா.. ஜாலி ந்னு குதிக்க வேண்டாம்...அடுத்த வாரம் கண்டிப்பா தேடல் - 3 ப்ளாகிடப்படும் .. .தப்பிக்கவே முடியாது கண்மணிகளா)

சுமி

சுமி


இன்னைக்காவது சொல்லிடு சுமி இதை விட்டா சான்சே இல்ல... போ.. போய் சொல்லு

ஏன் அவன் தான் சொல்லட்டுமே?

நீதான் சொல்லேன் . . .? இதுல நீ... நான்னு ...சண்டை எதுக்கு?

நெவர். . . அவங்கதான் சொல்லனும். . . அதுதான் முறை

உன் சார்பா நான் போய் சொல்லட்டா?

மீனா. . . என்னை புரிஞ்சுக்க. . நாமளா போய் சொல்லவே கூடாதுப்பா. . . இன்னைக்கு இல்லன்னாலும்... என்னைக்கும் அது நமக்கு வீக் பாயின்ட்

நீ உன்னோட வாழ்க்கையோட விளையாடற சுமி

அவனோட வாழ்க்கையும் இதுல தானே அடங்குது..? அவனுக்கு நான் வேண்டாங்கறதாலதான இப்ப கூட சொல்லாம இருக்கான்....? நிஜமாவே அது போல எதுவுமே இல்லயோ என்னமோ. ..? நான் போயி ... உளறி ...அசிங்கமாயிடும் மீனா... வேண்டாம் நானா சொல்லமாட்டேன். . . நான் அவனுக்கு வேணும்னா. . . அவன் வந்து சொல்லட்டும் -

அழுகையோடு முடிந்தது
--------------------------------------------------
முதல்லயே சொல்லித் தொலைச்சிருக்கலாண்டா நீ..சொதப்பிட்ட. . . உன் தலைஎழுத்து..

சட்டுன்னு நிசயமாயிடும்னு நான் துளி கூட நினைக்கலடா. . . கொஞ்சம் கண்ணாமூச்சி விளையாடிட்டு. . .அவ எதிர் பார்த்து ஏமாறும் போது ரசிச்சிட்டு... நல்ல நாள்ள சொல்லனும்னுதான் தள்ளி போட்டேன்

மண்ணாங்கட்டி . . . நான் வேணா மீனாவ இங்க வர சொல்றேன் ... அவ ஸ்மார்ட்.. அவ கிட்ட சொல்லி நிறுத்த சொல்லலாமா?

இப்பவா..? பாக்கு வெத்தல மாத்தியாசுன்னாங்களே...?

போனவாரம் ஆனுவல் டே பங்ஷன் அன்னைக்காவது நீ சொல்லி இருக்கலாம். . . வண்டி எதுத்துட்டு கிளம்பிட்ட. . . பெரிய_________
(கெட்ட வார்த்தைகளை போட்டுக் கொள்ளுங்கள்)

மறு நாள் அவ பர்த்டேக்கு ப்ரசன்ட் வாங்கதானடா போனேன்?

நல்லாத்தான் பாடினா. . . உன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை பாராட்டு வரும்னு எதிர்பார்த்தா.... எங்க நின்னுட்டு இருந்தாலும் உன்னையே பார்த்துட்டு இருந்தா. . . நீ ரொம்ப சிலுப்பிக்கிட்ட. . . இப்ப... தாழியே உடைஞ்சாச்சு. . . போடாங். . நீ எல்லாம் வேஸ்ட்றா. . .

அவ மனசில நான் இருக்கேன்னு எனக்கு புரியவே ரொம்ப லேட்டாயிடுச்சு.. அத கன்பர்ம் பண்ணணும் பண்ணனும்னே நாள் கடத்திட்டேன். .ப்ச்...

டேய் மாமூ. . . நீ ஜாயின் பண்ண முதல் நாள் . . . உன்னை பார்த்ததும் போட்ட 1000 வாட்ஸ் பல்பை.. அவ மூஞ்சியில இருந்து இன்ன்ன்ன்னும் ஆப் பண்ணல. . .அது உங்களுக்கு இன்னும் புரியல..? உனக்கெல்லாம் எதுக்குடா லவ்வு...?
( வேற நல்லதா நாலு கெட்ட வார்த்தை போட்டுக் கொள்ளுங்கள்)

-------------------------------------------------

நீ வேணும் ஷிவா. . . நீ வேணும் டா எனக்கு..ப்ளீஸ். . . இன்னைக்கு வந்து சொல்லிடு. . .இல்லைன்ன அவ்ளோ தான் . . இன்னைக்கு ஈவ்னிங் 5.30க்குள்ள நீ எங்க டிபார்ட்மென்ட் வற. . வந்து. . .என் கிட்ட வந்து ஐ லவ் யூன்னு சொல்ற. . .ஆமா சொல்லிட்டேன்.. –
--மனதுக்குள் பேசிக் கொண்டாள்.

--------------------------------------------------
எனக்கு நீ வேணும் சுமி. .. நீ இல்லாம நான் எப்படி. . . எப்படி..?
நான் எப்பவுமே எதிலயுமே லேட்தான் சுமி. . . உன்னை ஓவரா வெறுப்பேத்திட்டேன். . . அதுக்காக.. நீ எப்படி நிச்சயத்துக்கு சம்மதிக்கலாம்?

-- மனதிற்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------

எத்தனை சந்தர்ப்பம் வந்துச்சு? ஏண்டா சொல்லாம நின்ன?அன்னைக்கு எங்க புது வீட்டுக்கு பர்ஸ்ட் டைம் என் வண்டில என் கூடத்தான வந்த..? அப்ப சொல்லிருக்கலாமில்ல? அன்னைக்கு நான் எவ்ளோ எதிர் பார்த்தேன் தெரியுமா?
அம்மாக்கு நீ குடுத்த கிப்ட் ரொம்ப பிடிச்சது. . உன்னையும் சேர்த்துதான். . . அப்பா கூட உன்ன ஸ்மார்ட்டுன்னாரு. . . அவரே உன்ன ஸ்மார்ட்டுன்னா. . நீ நிஜமாவே ஸ்மார்ட் தான். . . தம்பி கூட உன்னோட பேசிட்டு இருந்தா ஜாலியா இருக்குன்னு சொன்னான் - எல்லாரையும் அட்ராக்ட் பண்ணியே. . . அன்னைக்கே நீ சொல்லிருக்கலாம். . .

உங்க அப்பா அம்மாவை என்கிட்ட அறிமுகம் படுத்தினியே.. அன்னைக்கு ஈவ்னிங்காவது சொல்லுவேன்னு எவ்ளோ ஏங்கினேன் தெரியுமா?

மனதுக்குள் பேசிக்கொண்டாள்.
--------------------------------------------------

உங்க வீட்டுக்கு உன்னோட வண்டில வரும்போதே தீர்மானம் பன்னேன். . .திரும்பும் போது நீ என்னை டிராப் பண்ணுவ. . .அப்போ . . .பெரிய கோயிலுக்கு போகச் சொல்லி. . . அங்க அமைதியான கல் படியில உட்கார்ந்து. . . பௌர்ணமி நிலவு சாட்சியா. . . உன் கைய பிடிச்சு “ ஐ லவ் யூ சுமி. . ஐ லவ் யூடா” ந்னு சொல்லனும்னு ஆசையா இருந்தேன். . . ஆனா உன் தம்பியை டிராப் பண்ண சொல்லிட்டாரு உங்க அப்பா.. . நான் அன்னைக்கு எவ்ளோ வருத்தப்பட்டேன்னு உனக்கு தெரியுமா?

எங்க அப்பா அம்மா உன்ன பார்த்ததும் ப்ளசன்ட் ஆயிட்டாங்க.. ஆனாலும் அம்மாகிட்ட உன்ன பத்தி சொல்லி அவங்க சம்மதத்தை வாங்கி அவங்களை ட்ரெயின் ஏத்திட்டு வற்றதுக்குள்ள நீ ஊருக்கு போயிட்ட சுமி... ஆன் தட் டே ஐ மிஸ்ட் யு லாட் சுமி. ..

மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

--------------------------------------------------

உனக்காகத்தானே ஆனுவல் டேக்கு அந்த பாட்டை பாடினேன்.. . . நல்லா இருக்குன்னு ஒரு வார்த்த.. .ஒரே ஒரு வார்த்த சொன்னியா? எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணாங்க.. நீ மட்டும் வண்டி எடுத்துக்கிட்டு வேகமா போயிட்ட..

நீ.. என்னை லவ் பண்ணலடா. . . லவ்வே பண்ணல.. நான் தான் தப்பா எடுத்துக்கிட்டு..கனவுல மிதந்தேன்னு நினைக்கிறேன்..

மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்
--------------------------------------------------

நீ எனக்காகத்தான் அந்தப் பாட்டை பாடினேன்னு எனக்கு தெரியும் சுமி. . . எல்லாரோட கண்ணும் அன்னைக்கு நம்ம மேலதான் சுமி.. லவ்வெல்லாம் எல்லார் எதிர்லேயும் டிக்ளேர் பண்ற விஷயம் இல்ல டா...

மனதுக்குள் நினைத்துக் கொண்டான்
--------------------------------------------------

அவ இன்னைக்கு லஞ்ச்சே சாப்ட்லடா. . . அழுத மாதிரி இருந்தது அவ முகம்.. அவ சந்தோஷமாவே இல்ல. . . நிச்சயம் ஆன பொண்ணு மாதிரியா இருக்கா? இப்ப கூட லேட் இல்லடா. . . கான்டீனுக்கு கூட்டிட்டு வரேன்.. நிச்சயம் ஆச்சோ .. ஆகலயோ... அதப் பத்தி கவலப் படாம ஒரு வார்த்தை சொல்லிடு சிவா .. எனக் கென்னவோ நீ ரொம்ப லேட் பண்ற மாதிரி இருக்கு

இல்லடா. . . நேத்து வரைக்கும்னா.. நான் பயப்பட மாட்டேன்.. இன்னைக்கு இவ மட்டும் இல்ல இவளோட சேர்த்து இவ அத்தை பையன் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு.. விருப்பமிலாமயா நிச்சயத்துக்கு சம்மதிச்சிருப்பா?. . . எனக்காக ஒன்னு செய்றியா? மீனாவ கூட்டிட்டுவா. . . நான் அவ கிட்ட பேசனும்... நான் சொல்றேனோ சொல்லலையோ... அது வேற விஷயம்... அவ என்னை லவ் பன்னிணாளா..? எதுக்காக இப்படி திடீர்னு நிச்சயம் பண்ண சம்மதிச்சான்னு தெரியனும்..

தெரிஞ்சி...? தெரிஞ்சி என்னடா பண்ணப்போற? தும்ப விட்டுட்டு வால பிடிக்கற.. சரி.. நான் போயி மீனாவ வர சொல்றேன்.. திஸ் சிகார் மஸ்ட் பி த லாஸ்ட் ஒன் ஷிவா.. ஒடம்ப கெடுத்துக்காத. . .
--------------------------------------------------

சுமி ஜன்னல் வழியா பாரு . . . இதோட மூனு பாக்கெட் புடிச்சி தீர்த்துட்டான்.. போடி போயி சொல்லு... இப்பவாவது சொல்லித் தொலை.. நீ அவனை லவ் பன்றத

புரிஞ்சுதான் பேசறியா மீனா.. அவன் எனக்காகத்தான் சிகரெட் பிடிச்சு தள்றான்னு என்னை இமேஜின் பண்ணிக்கச் சொல்றியா..? இமேஜின் பண்ணி . . இமேஜின் பண்ணி நான் எமாந்தது போதும்.. நான் போய் சொல்லமாட்டேன்.. நாங்க சேரனும்னு இருந்தா... இன்னைக்கு ஈவ்னிங்குள்ள அவன் வந்து கண்டிப்பா சொல்லுவான்

--------------------------------------------------

யாற்றா அவன் கார்ல வந்து சுமியையும் மீனாவையும் அழைசிட்டு போறான்? சுமி ஏன் அழறா?

சுமியோட அப்பாக்கு மேசிவ் அட்டாக், மலர்ல சேர்த்திருக்காங்க.. அவன் தான் அவளுக்குன்னு நிச்சயம் பண்ண அத்தை பையன்

சரி.. வண்டி எடு ... நாம மலருக்கு போறோம்

--------------------------------------------------

இந்த மூணு நாள் நாயா அலைஞ்சியே... நடுவிலே எப்பவாவது சொன்னியா ஷிவா?

எங்கடா... அவ அழுதுகிட்டே இருக்காடா..? அவ அத்தை பையன் வேற.. கூடவே நிக்கறான்... “ நான் இருக்கும் போது நீ என்ன இங்க “ ந்ன்ற மாதிரி பாக்கறான். . .இப்ப போயி நான் எப்டி..?

இன்னைக்கு சுமிய கூப்பிட்டு சொல்லிடு

இன்னைக்கா..? இன்னைக்குத்தான் ஐ.சீ.யூ ல இருந்து அவங்க அப்பா வெளியில வந்திருக்காரு..

சொல்லித் தொலைடா முண்டம்.... சொல்லித் தொலை.

--------------------------------------------------

நான் இவ்ளோ அழறேனே . . . எதாவது வந்து பேசுறியா... மக்கு மாதிரி வெளியிலேயே நில்லு.. என்னமோ எங்களுக்கு வேல செய்யவே வந்த மாதிரி ஓடி ஓடி போயிடுடா.. பக்கத்துல வந்து நான் இருக்கேன் சுமி.. கவலப்படாதேன்னு ஒரு வார்த்த .. ஒரே ஒரு வார்த்த சொல்லு ஷிவா..
மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

--------------------------------------------------

என்னடா ஷிவா? இன்னைக்குத்தான் ஜெனரல் வார்டுக்கு வந்தாரு.. இப்ப திரும்பவும் ஐ.சீ.யூக்கு மாத்தி இருக்காங்க.. சுமி மட்டும் உள்ள இருக்கா?

காலைலயே திரும்பவும் சம் ப்ராப்ளம்.. ஐ.சீ.யூக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.. சுமியோட பேசியே ஆகனும்னு அவள உள்ள அழைச்சுக்கிட்டாரு அவ அப்பா..ஐயோ . . . அவ கைய பிடிச்சுகிட்டு அவர் எதோ கேக்கறாரு... சுமியும் தலைய ஆட்டி ஆட்டி அவர் கைல ப்ராமிஸ் பன்றாடா..

வேறென்ன நம்ம குல கௌரவத்தை காப்பாத்து.. கல்யாணத்துக்கு அப்பா இருப்பேனோ இல்லையோ தான்... அவ்ளோதான்டா... உனக்கு இருந்த கடைசீ சான்சும் முடிஞ்சுது... மாங்கா டா நீ.. சொல்லு சொல்லுன்னு தலபாடா அடிச்சிகிட்டேன்... முண்டம் மாதிரி நின்ன .. இப்ப பாரு.. அவ ப்ராமிஸ்லாம் பண்றா.

இப்ப என்னடா பண்றது...?

--------------------------------------------------

ஷிவா நீ ஏன்டா இப்டி இருக்க..? பேச முடியாத வலியிலேயும் என் கைய பிடிச்சிகிட்டு “ யார் மேலயாவது ஆசை இருந்தா அப்பாகிட்ட சொல்லிடுடா.. உன் கல்யாணத்துக்கு அப்பா இருப்பேனோ என்னவோ.. உன் மனசில யாராவது இருந்தா அப்பா கிட்ட சொல்லு. .. உன் அம்மா இதெல்லாம் கேப்பாளோ மாட்டாளோ.. நான் இருக்கும் போதே.. உன்னை உன் மனசுக்கு பிடிச்சவன் கையில பிடிச்சி கொடுத்திட்டா.. நான் நிம்மதியா கண்ண மூடுவேன்” ந்னு அப்பா கேக்கும் போது துணிஞ்சு, தைரியமா என்னால உன்னப்பத்தி சொல்ல முடியல.. உன் கிட்ட இருந்து ஒரு வார்த்தை வராம நான் எப்படி.. நான் எப்படி அப்பா கிட்ட..? அதனாலேயே நான் “ அதெல்லாம் ஒன்னுமில்லப்பா.. அதெல்லாம் ஒன்னுமில்லப்பா” ந்னு அழுத்தி அழுத்தி சொல்லிட்டு வந்தேன்.

உன்னை நான் பார்த்திருக்கவே கூடாதுடா.. பார்த்தாலும் உன்னை விரும்பி இருக்க கூடாது.. உன்னை விரும்பினாலும்.. நீயும் என்னை லவ் பண்றேன்னு நினைச்சு ஏமாந்திருக்க கூடாது.. என்னை சாகடிக்கிறியே ஷிவா.. ஆனா நானா வந்து உன்கிட்ட எப்படி... எப்படி சொல்வேன் ஷிவா.. நெவர்.. சொல்ல மாட்டேன்.. சொல்ல முடியாதுடா என்னால..

மனதிற்குள் பேசிக் கொண்டாள்... வெளியில் அழுதாள்
--------------------------------------------------

அவங்க அப்பா இருந்தாலாவது. . . அவர் கிட்ட நான் போயி பேசி எதாவது பண்ணலாம்... அவரும் போயி சேர்ந்துட்டாரே ஷிவா

முடிஞ்சதை பத்தி பேசாத.. நாளைக்கு கிளம்பறேன்... பூனால நம்ம பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டேன்.. போறதுக்கு முன்னாடி எனக்கு அவள பார்க்கணும்.. அவ வீட்டுக்கு என்னோட வற்றியா?

-------------------------------------------------

நீ வீட்டுக்கு வந்தது இதுக்காகவா ஷிவா? பூனா போறேன்னு சொல்றத்துக்காகவா? கடைசீ வரைக்கும் சொல்லவே இல்லியே ஷிவா?...!? நிஜமாவே நீ என்னை லவ் பண்ணலயா? நீ லவ் பண்ற அளவுக்கு நான் இல்லையா? அப்ப ஏன் எனக்கு இவ்ளோ உதவி பண்ண? போ.. போ..பின்னாலேயெ சுமி செத்துட்டான்னு நியூஸ் வரும்.. போ

மனதிற்குள் அழுதாள்

--------------------------------------------------

வீட்ல மாப்ள பாக்கறாங்க. .. பாக்கு வெத்தலை மாத்த போறாங்கன்னு ஒரு வார்த்தை .. ஒரே ஒரு வார்த்தை வந்து சொல்லி இருந்தீன்னா.. அந்த பாக்கு வெத்தலையை எங்க அப்பா அம்மா மாத்தி இருப்பாங்களே? எதுவுமே சொல்லாம நிச்சயத்துக்கு சம்மதிச்சிட்ட இல்ல?

நீ என்னை விரும்பலை சுமி.. விரும்பவே இல்ல.. சும்மா டைம் பாஸ்க்காக என்னோட பழகி இருக்க.. நான் தான் நீ என்னை லவ் பண்றியோன்னு தப்பா நினைச்சுட்டேன்

மனதிற்குள் நினைத்துக் கொண்டான்

--------------------------------------------------

வீட்ல மாப்ள பாக்கறாங்க . . . அடுத்த மாசம் பாக்கு வெத்தலை மாத்த போறாங்கன்னு நியூஸ் பரப்பியும்.. அவன் வந்து அவனோட லவ்வ சொல்லலைன்னா.. அவன் உன்னை நிஜமாவே லவ் பண்ணல சுமி... அவனையே நினைச்சு அழாதே சுமி...

இப்ப புரிஞ்சிதா.. என்னை போயி சொல்லு சொல்லுன்னு சொன்னியே.. நானா போயி சொல்லி.. அதுக்கு அவன் .. சே சே.. நான் உங்க கூட ப்ரென்ட்லியாத்தான் பழகினேன்.. லவ்வெல்லம் எதுவும் இல்லைன்னு சொல்லி இருப்பான். . . அதை விட பெரிய அவமானம் எதுவும் இல்ல மீனா.. எதுவும் இல்ல

அவனையே நினைச்சு அழாதடா.. அழுது என்ன ஆகப் போகுது? உங்க அம்மா ஆசைப்படி உன் அத்தைப் பையனையே கல்யாணம் பண்ணிக்க.. அதுதான் உனக்கும் நல்லது.. உங்க பேமிலிக்கும் நல்லது சுமி

ப்ச்.. என் உயிரே என்கிட்ட இல்ல மீனா..

மனதிற்குள் அழுதாள்

--------------------------------------------------

அண்ணா .. வற்ற வாரமே வந்து பாக்கு வெத்தலை மாத்திரு.. இவ அவங்க அப்பா போனதிலேர்ந்து தெம்பாவே இல்லை.. எனக்கு பயமா இருக்கு.. நீ முதல்ல வந்து சேரு. . ..
போனில் அழுதாள் சுமியின் அம்மா

--------------------------------------------------

அடர்ந்த காரிருளில் ஒரு புள்ளியாய் கரைந்து போனது பூனா நோக்கிச் செல்லும் அந்த ரயில்... அந்த இருளிலேயே இரு புள்ளிகளாய் கரைந்து போயின அவ்விருவரின் இதயங்களும் அவற்றின் உயிர்ப்பும்.

Sunday, May 22, 2005

பின் குறிப்பு
(சாரீ... இப்போ இது முன் குறிப்பு)

எனது தேடல் - 1 க்கு பின்னூட்டமிட்டுள்ள கடைசீ இரு வாசக ஜாம்பவான்களுக்கு எழுதிக் கொள்வது. . .

(துளசி மேம் நீங்க இல்ல, உங்களுக்கு அடுத்து பின்னூட்டமிட்ட அந்த இரண்டு பேர்)
(தேடல் - 2 க்கு உங்கள் பின்னூட்டத்தை எதிர் பார்க்கிறேன்)

ஜாம்பவான்களே. . .

இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் தனது பாடல் காட்சிகளை செதுக்கி வடிப்பதைப் போல, நீங்களிருவரும், உங்களது பின்னூட்டத்தை செதுக்கி இருந்தீர்கள்.

கருத்தாழமிக்க சொற்களாலும், வடிவான வாக்கியங்களாலும் தங்களது விமர்சனத்தை ஒரு கவிதையை போல வடித்திருந்தீர்கள்.

தங்களது பின்னூட்டத்தில் இருந்து தாங்கள் இருவரும் எனது தேடல் - 1 கதையை ஒரு வரி விடாமல், கூர்ந்து கவனம் செலுத்தி படித்திருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்துக் கொண்டேன். தங்களது விமர்சனம் என்னை மேன்மேலும் சிறப்பாக எழுத வைக்கிறது.

நிற்க. . .

இச்சூழலில், தாங்கள் இருவருக்கும் இவ்வெளிய எழுத்தாளினியின் வேண்டுகோள் என்னவெனில். ..

புலம்பிக் கொண்டோ. .. அழுது..மூக்கை சிந்தி வேஷ்ட்டியில் துடைத்துக்கொண்டோ.. எனது பதிவுகளுக்குப் பின்னூட்டமிடவென்டுமென்ற அரசாணை ஏதும் தற்போது தமிழ் நாட்டில் இல்லை...
எனவே ...
எனது பதிவுகளைப் படித்த பிறகு.. உயிரோடிருந்தாலே போதுமானது.

(மவன்களே... யாரு கிட்ட. . . மெட்ராஸ் பொன்னு நானு... வந்தன்னா அவ்ளோதான்.. ஒருத்தர் வேளச்சேரி.... ஒருத்தர் பொள்ளாச்சியா? உங்ள அடிக்றத்துகாவ வேண்டி அவ்ளோ தூரம் வர முடியாது.. அதால பொழச்சீங்க. . பதிவுகளை படிச்சமா. . . பொழப்ப பார்த்தமான்னு இருக்கோணும். . . கரீட்டா? .ம்.. அந்த பயம் இருக்கட்டும்)


தேடல் - 2

தேடல் - 2

“ நீ வீட்டுக்கு வா.. இன்னைக்கு இருக்கு பஞ்சாயத்து ” - என்றான் தம்பி.

அவன் வருந்துவதிலும் ஒரு வாஸ்தவம் இருக்கத்தான் செய்தது. ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் ஸிக்சர்லாம் அடிச்சி ஒழுங்கா சீன் காட்டிட்டு இருந்தான். நான் தான் “ இப்போ வரப்போறியா. . . இல்ல. . . சுமி மேட்டரை வீட்ல சொல்லட்டா” என்று மிரட்டி அழைத்து வந்தேன்.

(அது என்ன. . . சுமி மேட்டெர்? என்று நீங்க கேட்டா . . . விரைவில் வெளியாகும் என்னோட அடுத்த நாவலில் காண்க அப்டீன்னு பதில் சொல்லும் படியா ஆயிடும்)

( நாவலா ஆஆஆஆன்னு நீங்க மயங்கி விழுந்தாலும். . . கண்டிப்பாக நாவல் எழுதப்படும்)

“ இன்னா...! வந்டீங்க ” என்றார் இடுப்பில் கை வைத்த ஆட்டோ காரர்

“ அங்க போனோம். இங்க அனுப்னாங்க” என்றோம்

அதற்க்குள் “ இன்னா மேட்டரு” என்றபடி ஓர் கட்டிளம் ஆட்டோ காரர் வந்தார். டெரி காட்டன் காக்கி ஷர்ட் போட்டிருந்தார். பேக் கோம்பிங் செய்து, நீல நிற கர்சீப்பை காலருக்கு பின்னாடி மடித்து வைத்து ஒரு மார்க்கமாக இருந்தார்.

காக்கி ஷர்ட்டையும், காலர் கர்சீப்பையும் கழட்டி கடாசிவிட்டு க்ரீம் கலர் டீ ஷர்ட்டும். ஜீன்சும் போட்டால் விஜய் பக்கத்தில் குரூப் சாங்கில் ஆடக்கூடிய கெட்டபில் இருந்தார்.

“இவன்ட்ட சொல்லு” என்பதைப்போல என் தம்பியைப் பார்த்தார் இடுப்பில் கை வைத்த ஆட்டோ காரர்.

சொன்னான்.. அனைத்தையும் சொன்னான்
( இவ்வாறு சொல்லி சொல்லி நொந்து நூடுல்ஸ் ஆனாலும். . . அவனது முகக்களயை சிறிதும் இழக்கவில்லை என் தம்பி)

“ அட...! அது இந்த தெரு கட்சீல இருக்குதுங்க” என்றார் கட்டிளம் ஆட்டோகாரர்.

திடுக்கிட்டு “எதுடா” என்றார் இடுப்பில் கை வைத்த ஆட்டோகாரர். எனக்கு தெரியாம. . .! எப்போ? என்பதைப்போல முகத்தை வைத்துக்கொண்டார்

“அதான் தல. . . சௌகார் ஜானகி மாறி புல் கை ஜாக்கெட்லாம் போட்டுகிட்டு பூஜ பண்றாங்களே அந்த மடம் ” என்றார் கட்டிளம்

“அது நாலு தெரு தள்ளி டீக்கடை பக்கத்துல இல்ல இருந்துச்சி” என்றார் தல.

“இப்ப மாத்திட்டாங்க” என்றார் கட்டிளம்.

“இதெல்லாம் சொல்றதில்லியா? என்பதைப் போல முகபாவத்தை மாற்றி எங்களைப் பார்த்து
“ நேரா போங்க” என்றார் தல.

போனோம், நேரா போனோம்

நிலா முற்றம் வைத்துக் கட்டிய பழைய காலத்து பங்களா. தென்றல் தேகத்தை வருடி நின்றது. மஞ்சள் நிறக் கொடியில் அன்னப் பறவை - ஓ. . . இதுதான் அவர்கள் சின்னம்.

“வாங்க வாங்க”-என்று வரவேற்றனர் இரு பெண்மனிகள். . .

“ இங்க சாந்த சக்த்தி சங்கம்னு. . . .

இதுதான் இதுதான் - யார் அனுப்ச்சாங்க?

சரஸ்வதின்னு மடிப்பாக்கத்தில இருக்காங்களே அவங்க அனுப்ச்சாங்க.

ஓ. . .ஒல்லியா இருப்பாங்களே அவங்களா?

ஆமா. . .

(மடிப்பாக்கத்தில் ஒல்லியாக ஒரேஏஏஏஏ ஒரு சரஸ்வதி தான் இருப்பாங்களான்னு மட்டும் என்னை கேட்டுராதீங்க. . . ஏன்னா லாஜிக் எதிர்பார்க்காதீங்க ப்ளீஸ். . . லாஜிக்கோடத்தான் கதை எழுதனும்னா.. . ஒரு கதை கூட என்னால எழுத முடியாது. . . அப்புறம் மிகச்சிறந்த எழுத்தாளினியை இழந்து சோகமாயிடுவீங்க.)

"செப்பல்சை கழட்டிட்டு உள்ள வாங்க. . ."- என்றார் சின்ன பென்மணி

ஸ்ருதி, ஸ்ரேயா கம் இயர். அரேஞ் இட் - என்றார் பெரிய பென்மணி.

(ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை ஆங்கிலம்...!)

ஸ்ருதி, ஸ்ரேயா என்றதுமே என் தம்பியிடம் இருந்து அவசரமான உயிர் துடிப்பொன்றை உணர்ந்தேன் நான். தலை முடியை விரல்களாலேயே பேக் கோம்பிங் செய்தான், நேற்றைய கர்சீப்பால் முகத்தை அழு ழு ழு த்தி துடைத்தான். அழகாகி விட்டதாக நினைத்து ..... ஸ்டைலாக நின்றான்.

வாவ். . .! உள்ளிருந்து இரு மின்னல்கள். . . நூடுல்ஸ் ஸ்ட்ராப் வைத்த க்கிப் சீ டாப்ஸ் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்த இரு தேவதைகள். . . ஆகா. . . என்ன அழகு. .! என்ன களை ...! என்னை கவர்ந்துவிட்டார்கள் அவர்கள்.

அவர்கள் இருவரும் என் தம்பியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் என் தம்பி உருகிப்போய் நின்றான். கண்கள் மின்ன தயங்கி தயங்கி ஒருத்தியின் அருகில் சென்று தைரியமாக அவளின் கன்னங்களைத் தொட்டான். . . அவள் சிணுங்கினாள்.

( நினைச்சேன். . . ஆன்மீகம்ன்றாங்க. . மடம்ன்றாங்க இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்னு நீங்க நினைக்கறது எனக்குத் தெரியும். . நினைக்கறதை நிறுத்திட்டு அடுத்த வரியை படிங்க.. . )

ஆன்மீகம் என்பது ஆத்மாக்களின் சங்கமம், ஆத்மாவில் ஆண் பெண் பாகுபாடு கிடையாது. . . ஆனால் அந்த ஆத்மாக்கள் ஆண் பெண் உடல்களில் பிறப்பதால் நாம் அவற்றை வேறு
படுத்தி பார்க்கிறோம். . . ஆசையை அடக்க நினைக்காதே. . . .அது உன்னை அடக்கிவிடும். . ஆசையை அடைந்து விடு அது அடங்கி விடும் - இது தானே ஓஷோவின் தத்துவம் ? ( யாருக்கு தெரியும். . . சும்மா. .. ஜுஜூபி..)

ஒருத்தி கன்னத்தை தொட்டது போதாது என்று. . இன்னொருத்தி பக்கத்தில் சென்றான் என் தம்பி. . . விட்டால் முத்தம் கொடுத்து விடுவான் போல இருந்தது. . அப்படி அவன் செய்திருந்தாலும் அங்கு ஆட்சேபிக்க யாரும் இல்லை. . .

(ஓவரா பண்ணாத ப்ரியா, கம் டு தி பாயின்ட் - ந்னு சொல்றீங்களா? அப்ப சரி..)

வேற ஒன்னுமில்லீங்க. . .ஸ்ருதி, ஸ்ரேயா ரெண்டு பேருக்குமே சேர்த்து மொத்தம் எட்டரை வயசு இருக்கலாம்.

ஆனால் அடுத்ததாக அந்த பெரிய பெண்மணியின் கட்டளயின் படி ஸ்ருதி, ஸ்ரேயா செய்த செய்கைகள் என்னையும் என் தம்பியையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

வலப்புரமாக நாங்கள் கழட்டி விட்ட செருப்புகளை தூக்கிச் சென்று இடப்பக்கம் ஏற்கெனவே உள்ள செருப்பு வரிசையில் அடுக்கினர்.. மற்ற செருப்புகளையும் இடைவெளி இல்லாமல் அடுக்கத் துவங்கினர்

தூக்கி வாரிப் போட்டது எனக்கு. . . வேண்டாம் ஸ்ருதி. . . இரு...இரு.. நாங்களே அங்க வைக்கிறோம். . .டோண்ட் டச். . . என்று சொல்லி முடிப்பதற்குள் அடுக்கி முடித்திருந்தனர்

கோபமாக வந்தது எனக்கு.

" குழந்தைங்களைப் போய். . . செப்பல்சை அடுக்கச் சொல்லி. . இட் இஸ் நாட் ஐஜீனிக் மேம் "- என்றேன் நான்

" நோ...ஆன்மீகத்தின் முதல்படியே பணிவுதான். . அதைத்தான் இங்க சொல்லித்தறோம்" என்றார் கர்வப் புன்னகையுடன்.

பணிவா. . .! கண்ட செருப்புகளை அடுக்கி வைக்கறது தான் பணிவா? அதுவும் தெய்வதம் தங்கும் குழந்தைகளைப் போய். .! அழுகை வரும் போல இருந்தது.

எனக்கு அந்த இடமே பிடிக்காமல் போய் விட்டது. உடனே திரும்பி வீட்டுக்கு போய் விட வேண்டும் என்று இருந்தது.

"உள்ள வாங்க, க்ளாஸ் அட்டென்ட் பண்ணுங்க. . .கோடீயில ஒருத்தரைத்தான் அவர் தனது பிள்ளையா செலக்ட் பன்றார்" – என்றபடி உள்ளே சென்றார் அந்த அம்மாள்.

உள்ளே சென்றோம்.

ஆனால் ...எந்த தெய்வமும் அங்கே வசிக்கவில்லை.
எந்த தெய்வதமும் என்னால் அங்கு உணரப்படவில்லை.

------------------------
தொடரும். . .
--------------

Monday, May 16, 2005

தேடல் - 1

தேடல் - 1
“ இதுக்கு மேல போகமுடியாது, நிறுத்து “ – என்றான் என் தம்பி. தெரு ஓரக் கோவில் தான் என்றாலும் அவள் அங்கே வசித்திருந்தாள். பாஸ்போர்ட் சைஸ் அம்மன் தான் என்றாலும், மூக்குத்தி எல்லாம் போட்டு , மலர்ந்த கண்களுடன், கடைவாய் புன்னகை கொண்டு அழகாக இருந்தாள்.

இடப்புறம் ஆண்களும், வலப்புறம் பெண்களும் – அட..! இந்த பெண்களும் அழகாத்தான் இருக்காங்க.. இவங்களைப் பார்க்கவே வாரா வரம் வராலாம் போலிருக்கே என்று நினைத்துக்கொன்டேன்.

வழக்கம்போல பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மஞ்சள், குங்குமம் இத்யாதி.. இத்யாதிகளை கடைசீ குட்டி பெண்வரை கொடுத்த பின்பே ஆண்கள் வரிசை என ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது பூசாரிக்கு... அவர் அவ்வளவு தாமதமாக தங்கள் பக்கம் திரும்பியதற்கு ஆண்கள் யாரும் வருந்தவில்லை..வருந்தினாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதும் அவர்களுக்கே தெரியும்.

“அதோ அந்த ஆட்டோ காரரை கேளுடா” – என்றேன் நான்
“இங்க சாந்த சக்தி சங்கம் எங்கன்னு தெரியுமா உங்களுக்கு?” – என்றான் அவரிடம்
“தெரு பேரு தெர்யுமா?” – என்றார் அவர்
“ இல்ல.. ஏதோ கிறிஸ்டியன் நேம்..பேரு கரெக்ட்டா தெரியாது.. தியானம் சொல்லித்தராங்களே அது “ – என்றேன் நான்
“முந்திரிக்கொட்டை” – என்பதைப்போல முறைத்தான் என் தம்பி
தோராயமாக ஏற்கெனவே தூக்கி இருந்த கையை இன்னும் மேலே தூக்கி“ நேரா போயி பஸ்ட் ரைட் திரும்பி, அப்புறம் அதுலயே நாலாவது ரைட் திரும்புங்க” என்றார் ஒரு தீர்மானத்தோடு.

நாம் நமது வாழ் நாளில், யாரிடம் வழி கேட்டாலும்,“ வாங்க சார்.. கரெக்ட்டா வந்திருக்கீங்க.. இதோ எதிர் வீடு தான் நீங்க கேட்ட அட்ரஸ்... இதோ பக்கத்து பில்டிங்தான் நீங்க கேட்ட ஆபீஸ்” என்று யாராவது சொல்லி இருக்காங்களா? கிடையவே கிடையாது.
ஏப்பவும் “ நேரா போயி மூணாவது ரைட். இல்லைன்ன “ ஐயையோ.. ஏரியா தாண்டி வந்துடீங்களே … வந்த வழியே திரும்பி போயீ. . .போயீ... அப்டீயே வீட்டுக்கு போயிடுங்க “ – என்பதைப் போலத்தான் வழி சொல்கிறார்கள்.

இன்னும் ரெண்டு பேரை விசாரிக்கலாமே – என்று நான் நினைத்ததை என் முட்டைக் கண் மொழிகளால் புரிந்துக்கொண்ட ஆட்டோகாரர் “ ம். . கிளம்புங்க” என்பதைப் போல முறைத்தார். நாங்கள் நேரா போயி வலது பக்கம் தான் திரும்புகிறோமா என்பதை வேறு இடுப்பில் கை வைத்தபடி கவனித்ததாக, திரும்பி பார்த்த என் தம்பி சொன்னான்

மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில், அக்காவாகவே இருந்தாலும், அவள் வண்டி ஓட்டி, தம்பி பின்னால் உட்கார்ந்து வந்தால்... அந்த தம்பியின் இமேஜ்..!(?) ஒரு கெத்து.. !(?) என்னாவறது..? நாளை. . . பின்ன.. பிகருங்க மதிக்குமா அவனை?
“ நீ இறங்கி பின்னாடி உக்காரு, நான் ஓட்டறேன் “- என்றான் என் தம்பி. இது நான் எதிர் பார்த்தது தான்.

ஆட்டோகாரர் பார்வையிலிருந்து அகன்று விட்டோம் என்றாலும்கூட, அவர் மீதான மதிப்பு, மரியாதை காரணமாக அவர் சொன்னபடி நாலாவது ரைட் திரும்பினோம்.

டீக்கடைக்கு சற்று தள்ளி இருந்த ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரிக்கடை நிறுவனரை கேட்போம் என நாங்களிருவரும் ஒரு மனதே முடிவெடுத்தோம். ஏனெனில் அவர்தான் சாதுவாக தானுன்டு தன் வேலை உண்டு என துணிகளை தேய்த்தபடி இருந்தார்.

“இங்க சாந்த சக்தி சங்கம் எங்க இருக்குன்னு தெரியுமா”? என்றான் என் தம்பி
“லோன் குடுப்பாங்களே அந்த கட்டடமா”? என்றார் அவர்
திரும்பி முறைத்தால் நேரமாகும் என்பதால் திரும்பாமலேயே என்னை முறைத்தான் என் தம்பி. அதெப்படி..? அவன் திரும்பாமலேயே உன்னை முறைத்தான்னு உனக்கு எப்படி தெரியும்..? என்று நீங்கள் கேட்டால்..
எல்லாம் ஒரு சைக்காலஜி தான்.. ரியர் வியூ கண்ணாடி எதுக்கு இருக்கு..?

அது என்ன..? அப்பா. அண்ணன், தம்பி கூட போகும் போது...
அவங்க மட்டும் தான் அட்ரெஸ் விசாரிப்பாங்க.. நாங்க விசாரிக்கவே கூடாது..அது வரைக்கும் கூட நடந்து வந்தாலும், அட்ரெஸ் விசாரிக்கும் போது ரென்டடி பின்னாடி நின்னுடனும்.. வண்டி பின் சீட்ல உக்கார்ந்திருந்தாலும் விளக்கங்கள் எதுவும் தரக்கூடாது...
அவங்களுக்கு புரியாத வழி எங்களுக்குப் புரிஞ்சாலும்
“ புரியலயே. . !!!!!!?
என்பதைப்போல முகத்தை வைத்துக்கொள்ளனும். கஷ்டம்டா சாமீ..!

புள்ளிக்கு வருவோம்... (அதாங்க.. கம் டு த பாயின்ட் தான்...)
“தெர்லீங்க” என்றார் ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரி நிலைய நிறுவனர்.
அதற்குள் மூன்று , நான்கு பேர் எங்களை சூழ்ந்தனர்.
“இன்னாப்பா. . . இன்னாது”? என்றார் ஒருவர். இவர் பிளம்பராக இருக்கலாம்.

அது ஏன் ஒருவர் செய்யும் தொழில் அவரது உடல் மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி அவரது ஆளுமையை மாற்றுகிறது ? ( எனக்கே ஒரு மண்ணும் புரியல.. உங்களுக்கு போயி புரியுமா என்ன? கொஞ்சம் ஓவர் தான்..என்ன பண்ணட்டும்..? இப்டி எழுதற எனக்கும் - புரியாம, படிக்கற உங்களுக்கும் - புரியாம ஒரு மையமா எழுதினாத்தான் சாகித்ய அகாடெமி விருது தருவாங்கன்னு என் பிரண்ட் சொன்னா அதான். ஆனா அவசரத்துல இப்படி எழுதிட்டேனா? இப்ப பாருங்க . .. அத வாங்கவேற லீவு போட்டுட்டு போகனும் இங்க இருந்து..ப்ச்)

“இன்னாமோ சக்த்தி சாந்த சபாவாம்" . . . என்றார் ஓம் ரா. பா ந.இஸ். நி. நிறுவனர்
“அடப்பாவிங்களா. . . சொல்லி ரெண்டு நிமிஷம் ஆகல அதுக்குள்ள பேரையே மாத்திட்டீங்களா ? என நினைத்துக் கொண்டேன்.
“சபாவா..? அதெல்லாம் பீச்சாங்கரைப் பக்கம் “-என்றார் அவர்.
” இன்னா எடோம் அது” என்றார் மற்றொருவர். இவர் மேஸ்த்திரியாகத் தான் இருக்க வேண்டும்.
“டேய்.. வீட்டுக்கே போயிடலான்டா” என்றேன் நான்
“இதுக்கு ஒரு முடிவு கட்றேன்” என்பதைப்போல டீ கிளாசை வேகமாய் வைத்துவிட்டு எங்கள் அருகில் வந்தார் டீ குடித்துக் கொண்டிருந்தவர்.. இவர் நிச்சயம் எலெக்ட்ரீஷியனாத்தான் இருக்கணும்.. பால் பாயின்ட் பேனால்லாம் வச்சிருக்காரே.
சொன்னான். . . அனைத்தையும் சொன்னான் என் தம்பி..( தேவையா இது எனக்கு ? மவளே.. வீட்டுக்கு வா. . . அங்க இருக்கு உனக்கு. . . நற.. நற.. நற..”) – என்று அவன் மனதிற்குள் திட்டியது, திவ்யமாக என் மனக்காதுகளில் கேட்டது. (என்னாது..!? மனக் காதுகளா..? என்னா ஓவரா ரீல் சுத்தர..? அப்டீன்னு நீங்க கேட்டா – “ ஏங்க . . மனக் கண்கள் இருக்கும் போது. . மனக் காதுகள் இருக்கக் கூடாதா..?” அப்டீன்னு நான் பதில் சொல்ல வேண்டி வரும்)
"ஓ . . அதுவா. .. சாமி கும்ப்ட்டு. . பொங்கல் தராங்களே அந்த இடமா”? என்றார்
வேகமாய் தலயாட்டினோம் நாங்கள். அப்போதும்.. அவன் மட்டும் தான் தலை ஆட்ட வேண்டும் , நான் வெறுமனே நிற்க வேண்டும் என் தம்பிக்கு. மேல் சாவனிஸம் எதெதில் இருக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த எலக்ட்ரீஷியனும் – “ நேரா போங்க. பஸ்ட் ரைட் கட் பண்ணுங்க.. அங்கேர்ந்து எண்ணி நாலாவது ரைட் போங்க.. அங்க மிடில்ல இருக்கு “ என்றார் என்னையே பார்த்துக்கொன்டு. என்னவோ நான் அவரை "இங்க வாங்க மிஸ்டர்னு " - கூப்பிட்டு கேள்வி கேட்ட மாதிரி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
கேட்டது என் தம்பி, அவன் இருந்ததையே மறந்து விட்டார் போல.

“ பர்ஸ்ட் ரைட், அப்புறம் நாலாவது ரைட்டா”? என்று கேட்டான் தம்பி “ஆமாங்க பர்ஸ்ட் ரைட், அப்புறம் போர்த் ரைட்”? என்றார் என்னிடம் இதற்காகவே வண்டியை வேகமாக கிளப்பினான் தம்பி.

நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பி மீண்டும் நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பினால் இடுப்பில் கை வைத்த அதே ஆட்டோகாரரை சந்திப்போம் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை நாங்கள்.தூக்கி வாரி போட்டது எனக்கு.

“ நான் வர்ல இந்த ஆட்டத்துக்கு” – என்றேன்
-------------
தொடரும். . .
-----------

(இன்னாது. .?! தொடருமா..?! இதோடா. . .? பெரிய பெரிய ஜாம்பவான்க நாங்களே சிறுகதை, சிறு நீள சிறுகதை. . . மிக நீள சிறுகதை தான் எழுதறோம். . . இப்ப வந்த இந்தம்மா தொடர்கதை எழுதுவாங்களாமில்ல. . .? திஸ் ஈஸ் டூ மச்சுன்னு நீங்க நினைச்சாலும். . . சாரீ... தொடரும் தான். .

“தானா வருதுங்க. . . மடை திறந்த வெள்ளம் போல வருது. . . நான் என்ன பண்ணட்டும்? என்னோட மனோ வேகத்துக்கு என்னோட டைப்பிங் வேகம் போதல..”இப்படியெல்லாம் நான் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தா - சாரீ ... நீங்க தேரமாட்டீங்க..

ஏன்னா. .? ஏதோ ஒரு லாஜிக், ஒரு ப்ளாட் இருக்கேன்னு நினைச்சு பந்தாவா ஆரம்பிச்சிட்டேன். . எப்படி முடிக்கறதுன்னு தெரியல. . . அதான். . .தொடரும்னு போட்டுட்டு ஒரு வாரத்துல, அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க நாலு பேரு கிட்ட கேட்டு வாங்கி டெவெலப் பண்ணலாம்னு இருக்கேன். . ஓகே யா? வர்ட்டா. . ஸீ யூ )

Sunday, May 08, 2005

பயணங்கள் முடிவதில்லை
“ எதுவுமே தேறாதுக்கா “ என்றாள் என் தங்கை

“ அப்படி இல்ல.... ஒன்னு , ரென்டு சுமாரா இருக்கு” – நான்
“எது? அந்த க்ரீம் கலர் ஷர்டை சொல்றியா?.... அவ்ளோ ஒன்னும் நல்லால..“ இருக்கறதுல ....அது தேறுதா? இல்லயா? அத சொல்லு ”
“தேறும்..... ஆனா மாங்கா மாதிரி நிக்குதே?
“அம்மாஞ்ஜியா இருந்தாதான் நல்லது. .... இல்லைன்னா சித்தப்பா சீட்டை மாத்திடுவாரு”
“ஆமாமா.... அம்மாஞ்ஜியாவே இருக்கட்டும்... அதான் நமக்கு நல்லது – ஆனா பார்கபிளா இருக்கு இல்ல”
“ம் ம் ... அது ” – என்றேன் நான்
“அப்டி பார்த்தா..... அந்த ப்ளூ டீ ஷர்ட் கூடத்தான் அழகா இருக்கு... இது ரெண்டும் தான் தேறும் போல” – என்றாள் .

இருபத்தி மூன்று பேர் கொண்ட எங்கள் குடும்ப கும்பலில் அடித்து பின்னி துவைத்து கட்டி ரவுடி ரங்கோலிகளாக ஜன்னல் சீட் பிடித்த நானும் எனது தங்கையும் –--- எங்கள் எதிர் சீட்டில் தூங்கிகொண்டே வரும் ஒரு ஜிப்பாகாரரும், கனகாம்பர கொண்டை போட்டு மூன்றுவட செயின் போட்ட ஒரு குண்டு அம்மவும், அந்தம்மா பக்கத்தில் அமர்ந்து, ஸ்வாரஸ்யம் ஏதும் வரவழைக்காமல் கொய்யா பழம் சாப்பிடும் வேஷ்டி கட்டிய ஒருவரும் எங்கள் சக பயணிகளாக வர வேண்டும் என நாங்கள் விரும்புவோம் என நீங்கள் நினைத்தால் -- மன்னிக்கவும் நீங்கள் நியாயத்திற்கு அப்பாற்பட்டவர்,

தூர தேச புகை வண்டிப் பயணம் நெடீஈஈ ய பயணமாக இருக்கும் பட்சத்தில் சக ப்ரயாணிகளாக வருபவர்கள் கொஞ்சம் சைட்டபிள்ளாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமில்லையா? நீங்களே சொல்லுங்க. . . கண்கள் அப்டி இப்டி போகும் போது கொஞ்சமாவது கலர் வேண்டாமா?
“ அம்மா.... கற்பகவல்லி தாயே..! அந்த ரெண்டு பசங்களும் எங்க பெட்டியிலயே ட்ராவல் பண்ண நீதாம்மா அருள் புரியனும் ” -தேங்காய் உடைப்பதாகவோ, கற்பூரம் ஏற்றுவதாகவோ எந்த கமிட்மென்ட்டும் இல்லாத சர்வ ஜாக்ரதையான ப்ரார்தனையை செய்தோம்.


“இதோ.. 20 ம் 21 ம் ... இங்க இருக்குதுங்க....”- என்று எங்கள் தலைகளை எண்ணியபடியே கடந்து சென்றார் எங்கள் சித்தப்பா.

நாலைந்து குடும்ப சமேதரராக வெளியூருக்கு கிளம்பும் சித்தப்பா ( மன்னிக்கவும்... நாலைந்து என்றால் அவருடையதே ... நாலைந்து அல்ல. அவர் குடும்பத்துடன் அண்ணன்கள் மற்றும் அக்கம் பக்கத்தாரின் குடும்பங்களையும் சேர்த்து) தவறாமல் அவரவர் வயதின் அடிப்படயில் அவரவர்க்கு ஒரு நம்பரை, அவர் வழங்குவதைப் பற்றி நான் இங்கு சிலாகித்தே ஆக வேண்டும்.

நம்பர்களை சத்தமாக கூப்பிட்டு யாரும் தொலைந்து போகாமல் பாதுகாக்கிறாராம்.

மேலும் அவரது உருவ பராக்கிரமும் இங்கு எழுத தக்கதே.. செயின் ஸ்மோக்கர்....அவருக்காகவே புதூ சிகரெட் பாக்டரி ஆரம்பித்தார்கள் என்றால் பார்துக்கொள்ளுங்கள்.

நடிகர் பார்த்திபன் சொல்வதானால்....என் சித்தப்பவை பற்றி இப்படி சொல்வார்
“ ஒரு பெரிய சிகரெட்

ஒரு சின்ன சிகரெட்டை .. பிடிக்கிறதே...! ?
கமா.. ஆச்சர்ய குறி..”

“ அக்கா.... அப்பா நம்மளை இங்க இருந்து எழுப்பி... அம்மா காபின்ல உக்கார சொன்னா என்னக்கா செய்றது”?
“வாந்தி வற்ற மாதிரி ஆக்ட் பண்ணி நாம இங்கயே இருக்கறோம்னு சொல்லிட்லாம்”


வாந்தி வரவேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லை... வாந்தி என்ற வார்த்தை மட்டுமே போதும்... அது யாருடைய வாயிலிருந்து வந்தாலும் வட்ட வட்டமான பின்புலத்துடன் தனது தேன் நிலவு நினைவுகளுக்குச் சென்று விடும் சித்தப்பா அதற்கு மேலும் எங்களை வலியுறுத்தவே மாட்டார் என்பதை நான் இங்கு வலியுறுத்தலாம்.

“அது என்ன...?அவரது தேன் நிலவு நினைவுகள்..? வாந்தியுடன் தொடர்பு படுத்தி..?” – என்று நீங்கள் கேட்டால்...
“ சாரீ.. அதை நீங்க சித்தப்பாவிடம் தான் கேக்கணும்... அது அவரோட பர்சனல் மேட்டர்” – என்ற பதில் மட்டுமே என்னிடம் உள்ளது.

( இருந்தாலும் ரசிகரா ஆய்ட்டீங்க.... சோ... உங்களுக்கு மட்டும்.. ரகசியம் .. ஓகே ..—புதூ பட்டு சட்டை, புதூ பட்டு வேட்டியொடு, தேன் நிலவு மூடுடன் தனது புதூ மனைவியுடன் இரயில் பயணத்தை அவர் துவக்கியதெல்லாம் வாஸ்தவம்தான்.. ஆனால்.. அடுத்த அரை மணி நேரத்தில்.. அவரது தோளில் இருந்து ஆரம்பித்து.. அவரது உள்ளங்கால் வரை வாந்தி எடுத்த சித்தி ஊட்டி போய் சேரும் வரை நிறுத்தவில்லை என்று கேள்வி)

சரி.. சரீ.. முக்கிய நீரோடைக்கு வரும் பட்ச்சத்தில் ( கம்மிங் டு தி மெயின் ஸ்ட்ரீம் என்பதின் தமிழாக்கம்....)

“ நம்ம கம்பார்ட்மென்ட் தான் கா அதுங்களும்” - என்றாள் என் தங்கை என் காதோரமாய். ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா என்பது அவள் கொள்கை.

“ சரீ.. சரீ.. அதுக்காக ஆயிரம் வாட்சை முகத்துல காட்ணுமா”? – என்றேன் 1500 வாட்ஸ் முகத்துடன்.

ஆம்... அவ்விரு கதா நாயகர்களும் தாவி ஏறி.. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நேரெதிர் இருக்கைகளில்... ஆமாம்.. எங்களின் நேர் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்,

“ அக்கா....!?”
“ அடக்கி வாசி.. சித்தப்பா வெளியில நின்னுட்டு இருக்காரு”

ரயில் கிளம்பும் கடைசி நொடி வரை ரயில் நிலைய குடி நீர் குழாய்களில் தண்ணீர் பிடிப்பதை ஒரு வாழ் நாள் கொள்கையாகவே வைத்திருந்தார் எங்கள் சித்தப்பா. கடைசி நிமிட கதா நாயகனாக ரயில் படிக்கட் ரஞ்ஜித் போல அவர் தாவி ஏறி பயணிப்பதை சித்தி கூட ரசிப்பதில்லை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

அது என்ன... இந்த ஜென்ட்ஸ் எல்லோரும்
ரயில் கிளம்பினதுக்கப்புறம் ஏற்றது

சினிமா ஆரம்பிச்சதுக்கப்புறம் சீட்ல வந்து உக்காற்றது
பஸ் கிளம்பினதுக்கப்புறம் ஓடி வந்து ஏற்றது

இதெல்லாம் மாத்திக்கவே மாட்டாங்களோ..?

வெளியில் நின்ற சித்தப்பா எங்களை நோக்கி சைகையால் –
“ தண்ணீ வேணுமா?”
நாங்கள் சைகையால் – “ வேண்டவே வேண்டாம்”

ரயில் தனது பயணத்தை “ என் இனிய தமிழ் மக்களே” என்று துவக்கியது.. “ ஐய்யோ... நம்ம கம்பார்ட்மென்ட்லதான் ஏறுராருக்கா சித்தப்பா ”- அதிர்சியில் உறைய ஆரம்பித்தாள் என் தங்கை.
“ ஆகா.. மாட்னோம் இன்னிக்கி .. அம்மா பக்கத்துல போயி உக்கார சொல்ல போறாரு ”- வருத்தத்துடன் சொன்னேன் நான்.


ஆனால்... எங்களிருவருக்கும் ஆளுக்கோர் பாப்பின்ஸ், விகடன், குமுதம் தந்துவிட்டு அடுத்த கம்பார்ட்மென்ட் போக நகர்ந்தவர் மீண்டும் நின்றுவிட்டார்..

ஐயோ..புன்னகை மன்னன் கிளைமாக்ஸ் பார்ப்பதுபோல எங்கள் இதயங்கள் ...தடக்..... தடக்.... தடக்...
ஆனால்... நின்று நிதானித்து ... அந்த பையன்களை நன்றாக பார்த்துவிட்டு.. பின்பு நகர்ந்தார் எங்கள் சித்தப்பா.


ஆப்பாடா.. இனி நம்ம ராஜ்ஜியம் தான்..

அவர் அப்படி போனதும்.. பசங்களை கவனித்தோம்..

ஆகா.. ஆரம்பிசிட்டாங்கையா.. ஆரம்பிசிட்டாங்க..

கலைந்திராத கிராப்பை 5 நிமிடங்களுக்கும் மேலாக சீவினார்கள். கட்டம் போட்ட கர்சீபை நிதானமாக நீவி மடித்து காலருக்கு பின் புறம் வைத்துக் கொண்டார்கள்.

அடுத்ததாக.. இக் கதையின் முக்கிய கட்ட திருப்பத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள்....
அவர்கள்... அவர்கள்... நாங்கள் பார்த்துக் கொன்டிருக்கும் போதே.....அவர்களது பைகளை பெர்த்தில் வைத்தார்கள்

உட்கார்ந்தார்கள்...
எழுந்தார்கள்...
பெர்த்தில் இருந்த பைகளை மீண்டும் கால்களுக்கடியில் வைத்துக் கொண்டார்கள்.

“ இதுங்க மாங்கான்னு நான் அப்பவே சொன்னன்ல...” என்பதைப்போல பார்த்தாள் என் தங்கை.அவளது பார்வையை தவிர்க்க வேறு பக்கம் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு.

அவர்களை பார்க்கவே விருப்பமில்லாதவர்களைப்போல் எங்கள் முகங்களை வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.
காரணமே இல்லாமல் சிரித்தாள் என் தங்கை.அக்கா எண்ணும் பொறுப்பிலிருக்கும் நான் அவளை அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.


எதேச்சையாக பார்ப்பது போலவும், எதிர் பக்க ப்ளாட்பார்மை பார்க்க விரும்புவது போலவும், எதிர் பக்க மேல் பர்த்தை பார்ப்பதைப் போலவும் பல வழி முறைகளை கையாண்டு நாங்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க...
இவ்விதமான எந்த முயற்சிகளையும் கையாளாமல் நேருக்கு நேராக, காந்திக்கு நேராக பார்த்துக்கொண்டிருந்தனர் அவ்விருவரும் எங்களை..


இந்த அண்ணலும் நோக்கினான்.. அவளும் ஜன்னலில் நோக்கினாள் என்ற காட்சி முடிவுக்கு வரும் படி..... அவர்களில் ஒருவன் எழுந்தான்.... எழுந்து................ அந்த பைகளை எடுத்து மீண்டும் பெர்த்தில் வைத்தான்

எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை,

“ எங்களுக்கு இல்லயா பாப்பின்ஸ்”?
“ கொஞ்சம் விகடன் தற்றீங்களா”?
“ சென்னையா நீங்க "?
“ எங்க போறீங்க... விசாக பட்ணமா”?


இவற்றுள் ஏதேனும் ஒரு கேள்வியை கேட்பார்கள் , அப்போது தெலுங்கும் தமிழும் அறவே தெரியாததாக பாவிக்க எண்ணியிருந்தோம் ங்கள்.ஆனால்.. விதி வலியதாக இருக்குமென்றாலும்... இவ்ளோ வலியதாகவா..?!
கதை பேச தைரியம் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் கண்களிலாவது காவியம் படைப்பார்கள் என என்னாலும் என் தங்கையாலும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் இருக்கை ஏகாம்பரர்கள் மீண்டும் எழுந்தார்கள்...

என்ன செய்ய போகிறார்களோ என எதிர் பார்த்திருக்கையில்...
தங்களது பைகளை பெர்த்தில் இருந்து இறக்கினார்கள்.


விழுந்து விழுந்து சிரித்தோம்...
கண்களில் நீர் வரும் வரை சிரித்தோம்..
நிறுத்த நினைத்தால் கூட நிறுத்த முடியவில்லை எங்களால்.
பக்கத்து காபினிலிருந்து சித்தப்பாவின் கனைப்பு சத்தம் கேட்டதும் சிரிப்பதை நிறுத்திக் கொண்டோம்.. ஆனால் அப்போதுதான் அதிகமாக சிரிக்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால்... நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு சிரிசிட்டு இருக்கோம்.. அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுபோல்.. இந்தக் கதையின் (!?)இறுதி கட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள்..

இறுதியாக ... நீக்கள் எதிர் பார்த்த க்ளைமாக்ஸ் வந்தே விட்டது..அதிர்ஷ்டசாலி தான் நீங்க..போங்க வேற என்ன தான் சொல்ல முடியும் நான்?

ஆம்.. அவர்கள் தங்களது பைகளை திறந்து அதிலிருந்து இரண்டு பொட்டலங்களை வெளியே எடுத்தார்கள்..
அந்த பொட்டலங்களை சுற்றி இருந்த நூலை நிதானமாக... மென்மையாக ஆன்ட்டி கிளாக் வைசில் சுற்றி சுற்றி பிரித்தார்கள்...


பிரித்ததும்...?!

வேறு என்ன..? இட்லி...கோங்குரா சட்னி தான்.
ஒரு பிடி இட்டிலி... ஒரு பிடி சட்டினி... என்று கணக்காக சாப்பிட்டார்கள்.
முழு பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்தார்கள்.... கை கழுவினார்கள்...
மறக்காமல் அவர்களது பைகளை மீண்டும் பெர்த்தில் வைத்தார்கள்.


திடீரென... எங்களை நோக்கி... எங்களை நோக்கி... ஒரு ஸ்னேகப் பார்வைப் பார்த்தார்கள்..
"இது என்னடா புது வம்பு ? " என்று நினைத்து முடிக்குமுன்பே ...ஆளுக்கு ஒரு பர்த்தில் ஏறினார்கள் ..பையை தலைக்கு வைத்து கால் நீட்டி வசதியாக படுத்துக் கொண்டார்கள்.


"அடங்கொக்கா மக்கா... கொல்ட்டீங்களா நீங்க”?

அம்மாஞ்சியா இருக்க வேன்டியது வாஸ்தவந்தான்... அதுக்குன்னு இவ்ளோ அம்மாஞ்சியாவா?"

சுத்த மாக்கான்களா இருக்கீங்க.. தேரவே மாட்டீங்கடா நீங்க ஜென்மத்துக்கும்"
என்று மனதிற்குள் திட்டி தீர்த்தோம்.


(லாஜிக் இல்லாம கதைய முடிசிட்டேன்னு நீங்க என்னை தப்பா நினைச்சுட கூடாது இல்லயா? அதுக்காக பின் வரும் வாக்கியத்தை படிக்கவும்)

எங்க சித்தப்பாக்கு நாங்க பயப்படனும்..... அது லாஜிக்... இவன்க ஏன்..?

( கவனிக்க...லாஜிக் வந்துடுச்சி...சரியா?)

ரயிலின் வேகம் அதிகமாகியது..... மெல்லிய இருளில் மரங்கள் அடர்த்தியாயின...தங்கை என் தோள் மீது தலை சாய்த்து தூங்கி இருந்தாள்... நான்.. செம்மையாகியிருந்த அந்தி வானத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.

நன்றி... வணக்கம்... சுபம்... முற்றும்...

(சினிமான்னாதான் கல்யாண சீன் போடுவாங்க.. சிறுகதைக்கு அதெல்லாம் போடமாட்டாங்க ... அதனால நான் கிளம்பறேன்.. நீங்களும் கிளம்புங்க)

Sunday, May 01, 2005

பூந்தோட்டம்

இடது மதிற் சுவரில் படர
நித்ய மல்லி
வலது பக்கத்திற்கு ஜாதி

பின்புற மதிலில் அடுக்கு மல்லி
கூடவே வெறும் மல்லி
வாயில் பிறை வளைவில்
பிடித்துப் படர கொடி சம்பங்கி

அடர்தியாய் சிரிக்க
அடுக்கு செம்பருத்தி
ஆசைக்கு சிவப்பு ரோஜா
ஆன்மீகத்திற்கு செவ்வரளி

முடிந்தால் மூலையில்
முல்லைக் கொடி ஒன்று

சிறு வெந்தயம், கொத்துமல்லி
சிந்தினாற் போல் சிறு கீரை

அவ்வளவும் இந்த
அரை கிரவுண்ட்
அடுக்ககத்தில் வளர்க்க
ஆசை என்றதும் - என்னை
அடித்து துவைக்கும்
ஆவேசத்தில் என்
அகத்தினர்.

ஆனாலும் அடமாய்
ஆறேழு தொட்டிகளில்
முளைக்கவே முளைக்காத
வெந்தயம், மல்லி
மொட்டே விடாத ரோஜா
மூன்றே இலை மனி பிளான்ட்.

அறுவடையை மேற் பார்வையிடும்
நிலக்கிழாத்தி போல்
அரையடித் தொட்டிகளை
ஆராய்கையில். . .

ஐ. . . .சின்னூன்டு வேப்பங் கன்று...!
எங்கிருந்து வந்தாயடி நீ....?

என்னிடம் ஏன் சேர்ந்தாயடி. ..?