Sunday, August 21, 2005

சிறுகதை - பரிணாம வளர்ச்சி ...!!?

எப்டி ஏறினேன்...!?

யாருக்கு தெரியும்...?

நிக்க முடியுது என்னால...!!?

நானும்தான் நின்னுட்டு இருக்கேன்...?

பேச வேற பேசறோம்...!!?

இந்தக் கூட்டத்துலயும் .. காத்து வருதே அதபாரு.. எதோ போன ஜென்ம புண்யம்தான்..சரி சில்லறையை அனுப்பி டிக்கட் வாங்கு.. செக்கிங் ஏறினா கஷ்ட்டம்.

பக்கத்தில் நின்ற ஒரு சின்ன பெண்ணிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டி“ ரெண்டு ஸ்பென்சர்ஸ்... கொஞ்சம் பாஸ் பண்ணும்மா .. ப்ளீஸ்” என்றாள் பவித்ரா.

அந்த சின்னப் பெண் பவித்ராவின் கண்களைக் கூட சந்திக்கவில்லை, ஜன்னல் வழியாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.. உடல் மொழியாலேயே அளவுக்கு அதிகமாக அலட்சியம் காட்டியது.. இந்த வயதில் இவ்வளவு திமிரா..?அதிர்சியாக இருந்தது.. மிஞ்சிப் போனால் அதற்கு பன்னிரண்டு வயதிற்குள்தான் இருக்கும்.. அவளை விட இவள் நிச்சயம் ஒரு எட்டு அல்லது பத்து வயது பெரியவளாகத்தான் இருப்பாள்.. இவளது வயதிற்கு கூட மதிப்பில்லை.. இவளிடம் பணத்தை வாங்கி தனக்கு பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் தரக் கூடிய சிறிய உதவியைக் கூட செய்ய மனமில்லை.. அப்படி செய்யாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை என்பதையும் திடகாத்திரமாய் நின்று ..முகபாவத்திலேயே உணர்த்தியது.

தலைமுறை இடைவெளி....!!!? எங்கே போகிறது இளைய சமுதாயம்..? இவளது வயதில் தான் எப்படி இருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தாள்.. எழுந்து ஓடிப்போய் பயணச் சீட்டு வாங்கித் தந்தது... குழந்தையுடன் வருபவர்களுக்காக எழுந்து இடம் கொடுத்து.. பயணம் முழுதும் நின்றுக் கொண்டு வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

பாத்தியா சரண்யா...?

விடு... ஜென்ட்ஸ் பக்கம் கொடுத்தனுப்பு.

ஏம்ப்பா.. எந்திரிங்கப்பா... லேடீஸ் சீட் காலி பண்ணுங்கப்பா- குரல் கொடுத்தது இந்த நிறுத்தத்தில் ஏறிய – வட்டக் கொண்டை போட்ட ஒரு பெரியம்மா. .. இவ்வளவு நகைகளை போட்டுக் கொண்டு எந்த தைரியத்தில் இந்த சென்னை மா நகரப் பேருந்தில் ஏறுகிறார்கள்?

அந்த கடைசி நீள இருக்கை முழுதும் அடைத்தார் போல உட்கார்ந்திருந்த ஆண்கள் ஒருவர் கூட அசையவில்லை. அவர்களால் நிற்க முடியும்.. ஊனமேதும் இல்லை.

“ ஐய்ய.. சொல்றமில்ல..? எந்திரிங்க.. உக்காந்துனே இருக்க..? பொம்பளங்க உக்கார எடம் உடுங்கப்பா.."

ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த இருவரும் தூங்குவது போலவும், வாந்தி வருவது போலவும் நடித்தனர்... அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவர்களின் உயிர் தோழர்கள் இருவரும் அவர்களின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக காட்டிக் கொண்டனர். நடுவில் உட்கார்ந்திருந்த இருவரும் யாருடைய கண்களையும் சந்திக்காமல், நக்கல் சிரிப்புடன் மையமாகப் பார்த்தனர்.

"எத்னி தபா சொல்றது...? எந்திரிங்கடா."

"இன்னாது....? டா வா? " – நடுவில் உட்கார்ந்திருந்தவன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். ஆனால் அதற்காக எழுந்துக் கொண்டான் இல்லை.

"என் புள்ள வயசுதான் இருக்கும் உங்க எல்லாத்துக்கும்.. எந்திரிங்கப்பா.. லேடீஸ் நிக்க முடியாம கஸ்ட பட்றமில்ல..?"

"உன்ன மாறித்தான் நாங்களும்.. டிக்கட் வாங்கி இருக்கோம்."

" நீ வாங்கு.. இல்ல வாங்காதே.. அத்த பத்தி இன்னா..? இப்ப எடத்த காலி பண்ணு.. இது லேடீஸ் சீட்டு."

ஒவ்வொருவவும் வெவ்வேறு திசைகளைப் பார்த்தார்கள்.

"ஆரம்பிச்சிட்டான் சரண்யா.. பின்னாடி தடவறான்.. வாந்தி வரமாறி இருக்குப்பா"

"இப்டி என் பக்கம் வந்துரு பவி"

எந்தவித மாற்றமும் இல்லை.. அவன் உரசுவதும்.. மேலே விழுவதும் அதிகமாகியது.. சரண்யாவயும் சேர்த்து உரசினான்.. திரும்பி பார்த்தார்கள்.. அவன் ஜன்னல் வழி மும்முரமாகப் பார்ப்பதாய் நடித்தான்.

"சனியன்.. எருமைமாடே தேவலாம் " - சத்தமாக சொல்ல நினைத்து.. மொள்ளமாக சொன்னாள்.

அந்த வட்ட கொண்டையம்மா.. இருக்கைக்காக – சுதந்திரப் போராட்டத்தை விட ஒரு படி அதிகமாக போராடுவது தர்மப்படி நியாயம். இந்த எருமைமாடுகிட்ட இருந்து தப்பிப்பதற்காகவே லேடீஸ் சீட் காலியாக வேண்டும். இதெற்கெல்லாம் காந்திஜீ வரமாட்டார்.. ஆனால் வந்தால் தேவலை.

அந்த கொண்டை அம்மையார் மட்டும் தனியாகப் போராடுவதும்.. தானும் சரண்யாவும் ஏதும் பேசாமல் வருவதும் அன்னியாயம் என மனசாட்சி எடுத்துரைத்தது.

மிக நீண்ட மனப் போராட்டத்துக்குப் பின், ஒட்டு மொத்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு.. அந்த ஆண்களை (!????) பார்த்து “ நீங்க எல்லாரும் லேடீஸா.. இல்ல ஹான்டிகேப்டா..?” என்றாள் பவித்ரா. கொஞ்சமே கொஞ்சூண்டு அசைவு தெரிந்தது அனைவரிடமும். ஆனால் அதற்காக யாரும் எழுந்துவிடவில்லை.. இவளைப் பார்த்துக் கொண்டிருந்த சாதாரணப் பார்வையை நீக்கி.. வெறுப்பான கடித்துக் குதறும் பார்வையாக மாற்றிக் கொண்டார்கள்.

திடீரென ப்ரேக்.. கை வழுக்கி அந்த தடியன்கள் மேலேயே விழப் போனாள் பவித்ரா.

"மயக்கமா...? கலக்கமா..? "– பாடினான் ஒருவன்

"ஆக்ட் உட்ராங்கப்பா..."-இன்னொருவன்.

சே... என்ன மனுஷங்க இவங்க...? மனிதாபிமானம்.. தார்மீக நியாயங்கள் எங்கே போயின? வீக்கர் செக்ஸ் எக்ஸ்ப்ளாய்டேஷன் அதிகமாகிவிட்டதா..? அறுபது வயதிலும்... நாலைந்து லேடீஸ் சீட் காலியாக இருந்தாலும்..” வேண்டாம்... திடீர்னு லேடீஸ் ஏறிட்டா.. எழுந்துக்கனும்.. அதுக்கு நின்னுகிட்டே வரலாம்..” என்று சொல்லிய அப்பாவும். கர்பிணியும், கைக்குழந்தைகாரியும் ஏறிய போது.. சட்டென எழுந்து தங்கள் இருக்கைகளை அவர்களுக்கு தந்த சித்தப்பாக்களும்... “ லேடீஸ் சீட்டுக்கு ஆளுங்க ஏற்ற வரைக்கும் உக்காருவோம்.. வந்ததும் எந்திரிச்சுருவோம்” என்று பெண்கள் ஏறியதும் எழுந்துக் கொண்ட அண்ணன்களும் நினைவுக்கு வந்தனர்.

“ எங்கப்பா...? அந்த கண்டிக்டரு..? ஐய்ய.. இத்தக் கேளு.. லேடீஸ் சீட் எந்திரிக்க சொல்லு.. உங்க அம்மா.. தங்கச்சின்னா இப்படித்தான் இருப்பீங்களாடா? “ – கொண்டையம்மாத்தான் .. விடாமல் போராடினாள்.

பெண்கள் படிப்பறிவு பெறாமல் இருப்பதே ஓரளவு நல்லதோ..? படித்துவிட்டால்.. தேவை இல்லாமல் நாகரீகம், பண்பாடு, நல்ல பழக்க வழக்கம் எனப் பார்த்துப் பார்த்து, கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளைக் கூட கேட்க இயலாமல் கோழையாக்கிவிடுகிறது அந்தப் படிப்பு.

வட்ட கொண்டையம்மா நிச்சயம் படித்திருக்க மாட்டாள்... அதனால்தான் கேள்விகளை தைரியமாகக் கேட்டு, தனக்கான உரிமைக்காகப் போராடுகிறாள். கண்டக்டர் பேருந்தின் முன்புறமிருந்து நீந்தி கரைசேர்ந்து தனது இருக்கைக்கு பத்திரமாக வந்தார்.. அதில் அமர்ந்திருந்த கர்பிணிப்பெண்ணை தொடர்ந்து அமருமாரு சைகை காட்டிவிட்டு, கொண்டையம்மாவைப் பார்த்து “ இன்னாமா..?” என்றார்.

“ லேடீஸ் சீட்டு... காலி பண்ணி உடு”

“எல்லாம் எந்திரிங்கப்பா.. லேடீஸ் சீட் காலி பண்ணி உடுங்கப்பா”

கடமை முடிந்ததென.. எச்சில் தொட்டு டிக்கட் கிழித்தார்.

கண்டக்டரின் இந்த கடுமையான ஆணையைக் கேட்டு பயந்து அலறி, அடித்து பிடித்து.. தட்டு தடுமாறி.. வேகமாய் எழுந்து நின்று- அவர்களில் யாரும் அந்தப் பெண்கள் இருக்கையை காலி செய்துவிடவில்லை. .. பதிலாக.. கூடுதல் நக்கல் புன்னகையுடன்.. கொண்டையம்மா.. பவித்ரா.. மற்றும் சரண்யா, இன்ன பிற நிற்கும் பெண்களைப் பார்த்து ரசித்து சிரித்தனர்.

கடவுள் என ஒருவர் இருக்கிறார்..அவர் அவ்வப்போது மனித உருவிலும் வருவார் என நமது இந்திய தாய் திரு நாட்டின் முன்னோர் சொல்லி வைத்தது - சத்தியமான தீர்க தரிசனம்.

வீறு கொண்டு எழுந்தார் ஒருவர்.. அவரது தோற்றம் முதலில் கருத்தை நிறைத்தது.. ஒன்று அவர் மப்டி போலீஸாக இருக்க வேண்டும்.. அல்லாது எக்ஸ் மில்ட்ரியாக இருக்க வேண்டும். அகன்ற தோள்களும்.. திடகாத்திரமான கை கால்களும் பேசாமல் பேசின.

"டேய்.. இப்ப எந்திரிக்க போறீங்களா..? இல்லயா..? அப்போ முச்சூடும் பாத்துட்டிருக்கேன்.. சத்தாய்க்ரீங்களா..? எந்திரிங்கடா..” - என்றார். எருமை மாடுகள் கொஞ்சம் அசைந்தன.. அப்படியும்.. எண்ணி மூன்று பேர் மட்டுமே எழுந்தனர்.

முதலாவதாக இந்த ஆவேசப் போராட்டத்தில் வீரமுடன் தலைமை தாங்கிய தானைத் தலைவி..தருமமிகு சென்னைத் தலைமகள்... தன்னிகரற்ற வட்ட கொண்டையம்மா,

அடுத்ததாக - திடீர் மரணத்துக்கும் துணிந்து .. லேடீஸா ..? என்று நறுக்கென தீனக் குரலில் கேள்வி கேட்ட துணைத்தலைவி பவித்ரா..

மற்றும் வெறுமனே நின்று கொண்டிருந்த சரண்யா ஆகிய மூவருக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனவே.. மக்கா...

படிப்பறிவு -தேவையில்லாத மனத் தடங்கல்களைத் தருகிறது.. போராடும் குணத்தை குறைத்து பெண்களை கோழையாக்குகிறது.. ஆனால் படிப்பறிவில்லாத, போன தலைமுறை பெண்.. எப்படி விடாமல் போராடி.. தனது உரிமயை பெறுகிறாள் என்பதே இச்சிறுகதையின் (!!!!???) வாயிலாக நான் சொல்ல வரும் நீதி என நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து... முதல் பரிசையும் இரண்டாவது பரிசையும் ஒரு சேர வழங்க கிளம்பினா.. சாரீ மாக்கான்ஸ்.. மன்னிச்சுடுங்க.. நீங்க இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவே இல்ல.. இன்னும் மேஜர் சுந்தர்ராஜனாவே வாழ்ந்துட்டு இருக்கீங்க..போன தலை முறை ஆளாவே இருக்கீங்களேய்யா...அப்பிராணிகளா....! உங்களை என்னத்தை சொல்ல?

இக்கால இளைய தலைமுறை பழக்க வழக்கங்களுக்கும், வளர்ச்சியடைந்து விட்ட கலாசார (!!!!), பண்பாட்டு (!?) மறுமலர்ச்சி மாறுதல்களுக்கும் நீங்கள் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்பதை நான் சொல்லித்தான் ஆகணும். அப்டேட் ஆகணும்னா.. மேற்கொண்டு படியுங்க....அப்ப புரியும்...

வட்ட கொண்டையம்மா வெற்றிப் பெருமிதத்துடன் ஜன்னலோரமாய் அமர்ந்தாள்... ஆட்சேபிக்க முடியாத தேர்வு.. போராட்டத் தலைவி வேணுங்றத எடுத்துக்கிட்டு மிச்ச மீதியை .. மத்தவங்களுக்கு தரலாம்.. தப்பில்லை... அடுத்ததாக.. எங்கிருந்தோ திடீரென நீந்தி வந்திருந்த மற்றொரு குண்டம்மா உட்கார்ந்து விட்டாள்...அதை பார்த்து அதிர்ந்த பவித்ரா.. மீதமிருந்த கொஞ்சமே கொஞ்சுண்டு இடத்தில் உட்காரலாமா.. உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவன் எது வேணும்னாலும் செய்வானே.. அதுக்கு பேசாம சரண்யாவுக்கு ஆறுதலா நின்னுட்டே வரலாமா என பலவிதமாக யோசித்து, சிறிதே அசையும் போது..

“ அட இரும்மா.. சுரேசு... சுரேசு.. இங்க உக்காரு.. பக்கத்துல ஆம்பளைங்கதான் உக்காந்திருக்காங்க “ என்று பாசத்துடன் அழைத்தாள் வட்ட கொண்டையம்மா.

அந்த சுரேசு எனப்பட்டவன் வேறு யாருமில்லை... தானை தலைவியாக இல்லாவிடாலும்.. ஓரளவு துணைத் தலைவியாக போராடிய பவித்ராவையும், பவித்ராவுக்கு பக்க பலமாக, தளரா உறு துணையாக... வெறுமனே நின்ற சரண்யாவையும் பின்பக்கம் உரசிக் கொண்டிருந்த அதே எருமைமாடுதான்.

உட்கார்ந்திருந்த எருமைகள் எழுந்து நின்றன. உரசிக் கொண்டிருந்த எருமை உட்கார்ந்துக் கொண்டது.

எங்கே செல்லும் இந்தப் பாதை.... யாரோ.. யாரோ.. அறிவாரோ..?

சுபம்.

Thursday, August 18, 2005

நிலா - 5


நானும் வரட்டுமா?

வேண்டாம்... பேஷன்ட்டுன்னு சொல்லி உள்ள பிடிச்சு வச்சுருவாங்க

அப்படியெல்லாம் இல்ல.. புது டாக்டர்னு நினைச்சு எல்லாரும் விஷ் பண்ணுவாங்க

நினைப்புத்தான்..... நீ எதுக்கு அங்க?

அவங்களுக்கு அங்க என்ன ட்ரீட்மெண்ட் தராங்கன்னு நான் தெரிஞுக்கணும்

தெரிஞ்சு....? தெரிஞ்சு என்ன பண்ண போற?

இந்த ட்ரீட்மெண்ட் சரியில்லன்னா... வேற ட்ரீட்மெண்ட்டுக்கு மாத்தலாம்னு பாக்கறேன்

இதோடா... இந்தம்மா டாக்டர் ருத்ரனோட சிஷ்யை ... வந்துட்டாங்க... ட்ரீட்மெண்ட்பன்ன

இல்ல சார்... நானும் வரேன் .. ப்ளீஸ்

இங்க பாரு நிலா...பூனா, ரிஷிகேஷ், மதுரா எல்லா இடத்துக்கும் அழைச்சுட்டு போயிட்டு வந்துட்டேன்.. அப்பப்போ ஒரு வாரம் லீவ் போட்டேனே .. எதுக்கு? இவளை அழைச்சுட்டு போய் ஒவ்வொரு வைத்தியமா பார்க்கத்தான்

திருவண்ணாமலை போனீங்களா?

இல்ல

சரி ..நான் இன்னைக்கு கீழ்பாக்கம் வரேன்.. அவங்க என்ன ட்ரீட்மென்ட் தராங்கன்னு பார்த்துட்டு அப்புறம் டிசைட் பண்ணலாம் .. ஓ.கே..?

என்னமோ பண்ணு

கிழ்பாக்கம் மனனல மருத்துவமனை.. கிண்டல் கேலிகளில் தவறமல் இடம் பெறும் அதே கீழ்ப்பாக்கம் மென்டல் ஆஸ்பிடல்... கார் உள்ளே நுழையும் போதே எதோ சொல்ல முடியாத சோகம் நெஞ்சினை தழுவியது.. பின் சீட்டிலிருந்து இரங்கி நின்றதும் தன்னை சுற்றி கவனித்தாள்.. சினிமாவில் பார்த்து பார்த்துப் பழக்கப்பட்ட காட்சிகள் இல்லை..மிக மிக மெல்லிதான நடவடிக்கைகளிலேயே வித்யாசம் தெரிந்து நோயாளிகளை அடையாளம் காண முடிந்தது...வேறு எவற்றில் இல்லையென்றாலும் கண்கள் சொல்லின அவர்களின் மன நிலையை பற்றி. கணவனை அரவணைத்தபடி வரும் மனைவி, மனைவியை கவனத்துடன் அழைத்துவரும் கணவன், வளர்ந்த வாளிப்பான தங்கையை பரிதவிப்புடன் அழைத்துவரும் அண்ணன்.. நோய் குணமாகிவிட்டாலும் இயல்பு நிலைக்கு வராமல் நிலைகுத்திய கண்களுடன் சுவற்றை வெறிக்கும் இளம் பெண்..கூட நிற்பது அவளது கணவனாக இருக்கலாம்..- இவர்களைப் பார்த்த பொழுதில்.. மனித உறவுகள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை உணர்ந்தாள்..மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதும் புரிந்தது.. இதை எல்லாம் மீறி.. அந்த நோயாளிகளை காணும் பொழுதில் இனம் புரியாத சோகத்தை
உணர்ந்தாள்..

ஏன் இப்படி ஆயிடறாங்க? சந்தோஷமா இருக்கலாம்.. அதை விட்டுட்டு மனசிதைவுக்கு ஆளாகி.. கூட இருப்பவங்களுக்கும் கஷ்ட்டத்தை தராங்க..

அப்படி சொல்லாத நிலா.. அவங்க சுய நினைவில இருந்தா கஷ்ட்டம் தருவாங்களா? தன்னிலை இழந்து சூழ் நிலை மறக்கும் போதுதான் அவங்க செய்யறது அவங்களுக்கே தெரியாது.. சரி.. நீ இங்கயே நில்லு நான் போயி பைல் நம்பர் போட்டுட்டு வரேன்

நானும் வரேனே...

சரி.. வா

வரிசயில் நின்று பைல் நம்பெர் பெற்றார்கள்

எதுக்கு இந்த பைல் நம்பர்?

இந்த பைல் நம்பெர் வச்சுத்தான் சுமதியோட கேஸ் பைல் எடுப்பாங்க

எடுத்து..?

எடுத்ததும் என்னை கூப்பிடுவாங்க.. கூப்பிட்டு இப்ப நிலைமையை கேப்பாங்க.. எப்பவும் போலத்தான்னு நான் சொன்னா அதே டேப்ளட்ஸ் தருவாங்க.. இல்ல.. பிகேவியர் மாறுது.. விகரஸா ஆயிடறா.. கன்ட்ரோல் பன்ன முடியல்லன்னு நான் சொன்னா..அப்ப சுமதியை நேர்ல அழைச்சுட்டு வர சொல்லுவாங்க..அவளை அழைச்சுட்டு வந்தா அப்சர்வ் பண்ணிட்டு .. வேற மருந்து மாத்திரை தருவாங்க.. இல்லைன்ன அட்மிட் பண்ண சொல்லுவாங்க

இது தான் நீங்க உங்க வைஃபுக்கு தர ட்ரீட்மெண்ட்டா?

ஆமா.. ஏன் கேக்கற?

கொள்ள கொள்ளயா எவ்ளோ சம்பாதிக்கறீங்க? இப்ப கொஞ்சம் முன்னாடி காருக்கு பெட்ரோலே ஐனூறு ரூபாய்க்கு போட்டீங்க.. ஆனா உங்க வைஃபுக்கு மட்டும் கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல அவுட் பேஷன்ட் க்யூல நின்னு.. கலர் கலரா கவர்ன்மெண்ட் மாத்திரை வாங்கிட்டு போய் அவங்க க்யூர் ஆயிடாம கவனமா பாத்துக்கறீங்க? ஏன் சார் இப்படி? ஏன் இப்படி சிக்கனம் பன்றீங்க?

பேசி முடிச்சுட்டியா..? நான் பேசட்டா?

எதாவது சப்பைகட்டு கட்டுவீங்க.. சொல்லுங்க அதையும் கேட்டுக்கறேன்..

புரியாம பேசற நிலா நீ.. உனக்கு ஒண்ணு தெரியுமா..? இங்க தர ட்ரீட்மெண்ட் போல வெளியில எங்கயும் தரதில்ல. வெளியில கிடைக்காத மாத்திரைங்க இங்கதான் கிடைக்கும்.. வெளியில வைத்தியம் பாக்கிற சைக்கியாட்ரிஸ்ட்.. தனக்கு வேண்டபட்டவங்க.. நிஜமாவே குணமாகனும்னு நினைக்கற பேஷன்ட்டுகளுக்கு ரெகமண்ட் பண்றது இந்த ஆஸ்பிட்டலத்தான்.. வெளியில மாத்திரைங்களை நம்பி வாங்க முடியல.. அத்தனையும் டூப்ளிகேட்.. டெல்லி.. பூனா.. மதுரா எல்லாம் சுத்திட்டு கடைசீல இங்க வந்து சேர்ந்துதான் அவ கொஞ்சம் இம்ப்ரூவ் ஆனா.. இதே ஆஸ்பிட்டல்ல ஆறு மாசம் அட்மிட் ஆகி இருந்தா.. இப்ப நல்ல சேஞ்சஸ் தெரியுது.. பணம் ஒரு ப்ரச்சனையே இல்ல நிலா.. நான் சம்பாதிக்கறது பெரிய விஷயமில்ல.. அவ அப்பா அம்மா சேர்த்து வச்சதே நாலு தலமுறைக்கு காணும்

ஆனாலும் முழுசும் குணமாகலயே..?

அது அந்த ஆண்டவன் கருணைதான்.. அவன் மனசு வச்சாத்தான் நடக்கும்

அந்த நம்பிக்கை இருக்குல்ல..? அப்ப சுமதியையும்.. சாரீ .. உங்க வைஃப்பையும் அழைச்சுகிட்டு கிளம்புங்க..

எங்க..?
திருவண்ணாமலைக்கு

அங்க எதுக்கு..?

நீங்க வாங்க சொல்றேன்.. இப்ப போய் மருந்து வாங்கிட்டு வாங்க..

வரிசையில் பொறுமையாக நின்று.. தன் முறை வந்ததும் உள்ளே சென்று டாக்டரிடம் பேசி.. அவர் எழுதிக் கொடுத்த சீட்டினை எடுத்துச்சென்று மற்றொரு வரிசையில் பொறுமையாக நின்று பணம் கட்டி.. மாத்திரைகளை வாங்கி வரும் ஷிவாவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் இனம் புரியாத சோகம் இன்னும் அதிகமாகியது.

.-------------------------------------------------------------------------------------------------------

அன்னைக்கு அவ சாப்டவே இல்ல தெரியுமா?

என்னைக்கு..?

அதான்.. எம்.டி பார்டில.. அவ பாஸ் வைஃப் லட்ச்சணம் தெரிஞ்சதும் தட்டயும் ஸ்பூனையும் கீழ வச்சவதான் தேம்பி தேம்பி அழுதா.. சாப்டாமயே கிளம்பினா

இது என்ன புது கதை? தென்ன மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல ஏன் நெறி கட்டுது?

இப்படில்லாம் அழுதாதனே.. அவ பாஸ் மனசில இடம் பிடிக்க முடியும், மனசில இடம் பிடிச்சு .. அப்புறம் மடியில இடம் பிடிச்சு.. அப்புறம் அரசாட்சியை புடிக்க முடியும்

அதுக்கு அவ அழவே வேண்டாமே..? சின்ன சிரிப்பு.. கடைவாய் புன்னகை போதுமே?

சென்டி “ மென்டலா” டீல் பண்ணி அப்புறம் காமெடிக்கு வருவாளா இருக்கும்

அம்மாவா..? அப்பாவா..? அண்ணனா ..? தம்பியா..? யார் கேக்கப் போறா? அனாதை ஆஸ்ரமத்துல படிச்சுட்டு ஏதோ ப்ளூக்ல இந்த வேலைக்கு வந்துட்டா.. தானா தேடித்தானே புளியங்கொம்பா வளைக்கனும்

ப்ராங்க்கா சொல்லனும்னா.. அவ இருக்கற அழகுக்கு யார் வேணா வளைவாங்க.. இவனுக்கு.. பொண்டாட்டியே மென்டல்.. ரெண்டு பேருமே கஷ்ட்டப் பட வேண்டியதில்லை.. சுபம் போட வேண்டியதுதான் பாக்கி.

பாலகுமாரன் நாவல்களால் புகைந்தது... எம்.டி பார்ட்டியால் பற்றி எறிந்தது. நாவினால் தீ வளர்த்து.. நாகங்களாய் படமெடுத்தனர் நிலாவின் சக பணியாளர்கள்.. சூழ்ந்துவரும் புகைமூட்டமும்.. தீ கொழுந்துகளையும் அறியாமல் திருவண்ணாமலை நோக்கி ஷிவா கார் ஓட்ட, பின் இருக்கையில் தன் தோளில் சாய்ந்து தூங்கும் சுமதியின் தலையில் தலை சாய்த்து தூங்கியபடி பயணித்தாள் நிலா..


தொடரும்…

Friday, August 05, 2005

நிலா - 4

அடுத்தடுத்த மாதங்களில் சுனாமி பயம் அதிகமாகத்தான் இருந்தது.

அந்த வீட்டை காலி பன்னிட்டு சிட்டிக்கு உள்ள வீடு பாருன்னா பாக்க மாட்டீங்களோ..?

இல்ல சார் நந்தினி.....

என்ன நந்தினி.. எவ்ளோ ரிஸ்க் அந்த வீடு... வெரி நியர் டு பீச்..

போகனும்னு இருந்தா போய்த்தானே ஆகனும் ..?

நூத்துக் கிழவி மாதிரி பேசு

நள்ளிரவில் மாண்புமிகு பாஸ் போன் பேசி நிலைமையை ஆற தீர விசாரிப்பதும், மேதகு மேடம் பயம் ஏதும் இல்லை என பதிலிறுப்பதும், போர்வையை விலக்கி பார்க்கும் நந்தினி தலையில் அடித்துக் கொண்டு திரும்பிப் படுப்பதும் – அன்றாட வாழ்க்கையின் அத்யாவசிய நிகழ்ச்சிகளாகிவிட்டன.

சுனாமி வருதோ இல்லையோ.. போன்கால் வருது - நந்தினி

மேடம் யாரு...!? பின்னாடி ஒரு காலத்துல நம்ம ஆபீஸ்க்கு நானே எம்.டி.. ஆகலாம்.. அதை புரிஞ்சு .. இப்பவே மரியாதையா நடந்துக்கறாரா இருக்கும் - நிலா

நினைப்புதான் பொழப்ப கெடுக்கும் எப்பவும்-– நந்தினி.

உண்மையிலேயே இரண்டாம் முறை காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு, இரவு எட்டு மணிக்கு மீன்டும் நந்தினியின் அத்தைவீட்டுக்கு பயணப்படும் வேளையில்.. ஷிவாவின் கால் வரும் என எதிபார்த்து.. எதிர்பார்த்து ஏமாந்தன நிலாவின் அழகிய காதுகள்.. என்னாச்சு..? என்ற அவளின் கேள்விக்கு விடை ... ஷிவா மீன்டும் ஒரு வாரம் லீவ் என்ற செய்தி.

அடுத்தவாரம்....

நந்தினி சுட்டிக் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நிலா.. அதிர்ந்து.. செயலிழந்து.. விக்கித்துப் போய் நின்றாள்....

" வழக்கமா கூட்டிண்டு வரமாட்டான்... எம்.டி. ரொம்ப கேட்டுண்டாரேன்னு அழைச்சுன்டு வந்தான்.. இப்போ ரொம்பவே டிஸ்டிங்விஷ்டா தெரியற்து..யார் செஞ்ச பாவமோ.. இவனுக்குன்னு இப்படி வாய்ச்சுடுத்து... நான் பார்த்து வளர்ந்தவன்.. கல்யாணம் பண்ணின்ட நாள்ளேற்ந்து பட்டுன்டு இருக்கான்..." - கண்களில் நீர் மின்ன கேஷியர் சேஷாசலம் சக ஊழியர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஆறு வயது மகளிடம் இருந்த ஒரு ஐஸ் க்ரீமுக்காக அவளது பின்னலைப் பிடித்து இழுத்து அந்தக் குழந்தை கதறக் கதற அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கி.. இடது கையில் ஐஸ்க்ரீமும்.. வலது கையில் ஸ்வீட்டுமாக நின்ற அந்தப் பெண்தான் தனது பாஸின் மனைவி என்பதை தாங்கிக் கொள்ளவே இயலவில்லை நிலாவால்.

சிலர் உதடு பிரியாமல் சிரிக்க, சிலர் ஏளனப் புன்னகை புரிய, சிலர் எதுவும் தோன்றாமல் பார்க்க.. சிலர் எப்படி உதவுவது என தெரியாமல் அருகில் செல்ல

-ஒரு நாடகம் நடப்பதைப் போல.. புது ஐஸ்க்ரீம் கிண்ணத்துடன் மனைவியை அணுகி.. அவளது கவனத்தை கவர்ந்து, அந்த ஐஸ்க்ரீமை அவளிடம் கொடுக்கும் போதே மகளை தன் பக்கம் அழைத்து காருக்கு அனுப்பி விட்டு.. மனைவியை அரவணைத்து நடந்துக் கொண்டே திரும்பிப் பார்த்து கண்களால் விடை பெரும் தனது பாஸைப் பார்க்கப் பார்க்க நெஞ்சம் வலிக்க அழுகை வந்தது நிலாவுக்கு.

" கல்யாணத்துக்கு முன்னாடியே மென்ட்டல் தான்.. பையன் நல்லாருக்கானேன்னு அவளோட அப்பா.. அம்மா மறச்சுட்டா.. நிறய சொத்து இருக்கேன்னு இவனோட அப்பா அம்மா தெகச்சுட்டா.. இவன் மாட்டிண்டான்.. ஆனா ஒன்னு.. தங்கமா பார்த்துப்பான்.. இவ்ளோ பன்றாளே.. ஒரு முகம் சுழிக்கறது.. திட்றது .. எதுவும் இல்ல.. கண்ணுல வச்சு தாங்கறான் ....ம்.. புருஷன் அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்... ஒரே புள்ளைக்கு.. இப்டி ஆயிடுத்தேன்னு.. கவல பட்டு கவல பட்டே அப்பா அம்மா ரெண்டு பேரும் போய் சேர்ந்துட்டா. சாகற வரைக்கும் .. “ டைவர்ஸ் பண்ணிடு.. ரொம்ப ஈஸியா டைவர்ஸ் கிடைச்சுடும்.. இல்ல.. வேண்டான்னா.. இவ பாட்டுக்கு இவ இருந்துட்டுப் போகட்டும்.. வேற நல்ல பொண்ணா பார்த்து பண்ணிக்கோடான்னு” தலபாட அடிச்சுக்கிட்டாங்க.. “ அவ என்ன தப்பு பண்ணா? அவளை டைவர்ஸ் பண்ண.. தப்பு பண்ணினது நாம மூணு பேர்.. அதனால நாமதான் தண்டனை அனுபவிக்கனும்னு சொல்லிட்டு ஒரே நிலையா நின்னுட்டன்... நானும் சொல்லிப் பார்த்தேன்.. எனக்கு தெரிஞ்சவாளோட பொண்ணை முடிச்சுடலாம்னு பேசி முடிச்சுட்டேன்.. "வாண்டாம் மாமா.. என்ன பாவம் செஞ்சேனோ.. இப்படி விழுந்துட்டேன் இன்னோரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்க வெண்டாம்" னு சொல்லிட்டான்.."

- கேஷியர் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்கக் கேட்க.... சூழ் நிலை மறந்து அழுதுவிடுவோமோ என பயந்தாள்... சாப்பிடப் பிடிக்காமல் கையிலிருந்த பீங்கான் தட்டையும்.. ஸ்பூனயும் மேசைமேல் வைத்தாள்... நந்தினி பார்த்து விடப் போகிறாளே என சர்வ ஜாக்ரதையாக திரும்பி கண்களை துடைத்துக் கொண்டு.. நந்தினியைப் பார்த்து “ போலாமா “ என்றாள்... இந்த ஒரு வார்த்தை பேசுவதற்க்குள் தொண்டயும் நெஞ்சமும் வலித்தது நிலாவுக்கு.

முழு ப்ளேட்டையும் முழுங்கிவிட்டு.. ஐஸ்க்ரீம், ஸ்வீட் இரண்டயும் இரண்டு முறை வாங்கி சாப்பிட்டு விட்டு.. பீடா.. ஸ்வீட் சோம்பு, ப்ரூட் சாலட்.. இன்னும்.. மற்றும்.. பிற அனைத்து வகையான, பறிமாறப்பட்ட அத்தனை பொருட்களையும் வாங்கி ஆற அமர நிறுத்தி நிதானமாக சாப்பிட்டுவிட்டு.. மினரல் வாட்டரை போதுமான அளவுக்கு குடித்துவிட்டு.. பின்பு நிலா நிற்குமிடம் வந்து “ போலாம்” என்றாள் நந்தினி.

என்னால வண்டி ஓட்ட முடியாது நந்து.. நீ ஓட்டு

சரீ.. வெறும் வயத்தோட வற்றியே.. எதாச்சும் வேண்டுதலா..

ப்ச்.. பேசாம ஓட்டு

ஏன் அழற?

யார் அழறா?

நீதான்... இப்ப எதுக்கு அழறன்னு எனக்கு தெரிஞ்சாகனும்.. ?

நான் ஒன்னும் அழல..

முண்டம்.. அது அவரோட தலை எழுத்து.. அதுக்கு நீ சாப்பிடாம அழுதா அவங்க வைஃப் .. நார்மலாகி.. ஜீனியஸ் ஆயிடுவாங்களா..? நீ இப்டி அழறதும் அப் நார்மல் தான் நிலா.

நான் அழல..

உன் முகம், கண்ணு, குரல் எல்லாமே அழுது... ஐஞ்சு வருஷமா உன்னொடயே இருக்கேன் .. என்கிட்டயே..அழலன்னு சாதிக்கற..?

ரூமிற்கு வந்ததும்..கதா நாயகி படுக்கையில் விழுந்து தலயணையில் முகம் புதைத்துக் கொள்ள.. நந்தினி பால் சுட வைத்து காம்ப்ளான் கலந்தாள்..பிஸ்கெட்டையும் எடுத்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து

“ எழுந்திரி.. இந்த பிஸ்கெட் சாப்டு நிலா.. நடு ராத்ரில.. பசிக்குதுன்னு சொல்லத்தெரியாம வயத்த வலிக்குதுன்னு தூங்க மாட்ட”

வேண்டாம் நந்து

ஏய் .. ச்சீ..... சாப்டு

அவள் மடியில் முகம் புதைத்து.. கேவிக் கேவி அழுதாள்.. நிறுத்த நினைத்தாலும் நிறுத்த இயலவில்லை நிலாவால்...

எதுக்கு அழற இப்போ..?

தெரியல

நீ அழறதால எந்த யுஸும் இல்ல

தெரியும்

அப்புறம் ஏன் அழ்ற?

அழுக வருது அழறேன்

அப்ப அழு

நந்து.. போகாதே.. உன் மடி வேணும் எனக்கு

என்னடி நீ.. உன் உடம்புதான் பாழாப் போகும்

நந்து.. நந்து.. நான் போன் பண்ணி பேசட்டா?

யாரோட?

ஷிவாவோட

எந்த ஷிவா?

ப்ச்.. என்னோட பாஸோட

இது எங்கப் போயி முடியப் போகுதோ...? ம்.. எதோ செய்.

முதன் முறையாக நள்ளிரவில்.. நிலாவின் செல்லிலிருந்து ஷிவாவின் செல்லுக்கு சென்றது ஓர் உயிர்ப்பு

என்ன நிலா..?

ஒன்னும் இல்ல

இதை சொல்லத்தான் போன் பண்ணியா? குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு..? கோல்டா..?

இல்லல்ல...

தென்.. எதுக்கு போன் பன்ன?

ஆர் யூ சேஃப்

தலையிலடித்துக் கொண்டாள் நந்தினி..."பைத்தியம்... அபத்தமா உளற்ற.. "என்று சொல்லிக்கொண்டே செல்லை வாங்கி “ சார் .. தப்பா எடுத்துக்காதீங்க.. ஈவ்னிங் பார்ட்டில.. நீங்க திடீர்னு கிளம்பி போனதை விசாரிக்கறாளாம்.. ஓ.கே பய்.” என்று சொல்லி காலை கட் செய்தாள் நந்தினி....

ஆரம்பிச்சிட்டாங்கையா... ஆரம்பிசிட்டாய்ங்க...தொடராம ...இருப்பாய்ங்களா..?

தொடரும்

Wednesday, August 03, 2005

நிலா - 3

வழக்கமான அலட்டலோடு ஸ்டைலாக நடக்கலாம் என்று நினைத்தாலும் கால்கள் விந்தி விந்தித்தான் நடக்க முடிந்தது

குட் மார்னிங் சர்

வெரி குட் மார்னிங்... இப்ப எப்டி இருக்கு

நத்திங்.... ஆனா வண்டி ஓட்ட முடியாம கஷ்ட்டமா இருக்கு

அடுத்தவாரம் ஓட்டிக்கலாம்... போய் சீட்ல உட்காரு... அப்பாடா .. இனிமே சீட் சீட்டா நின்னு வம்படிக்காம, உக்காந்து ஒழுங்கா வேலை செய்வ

(உன் கண்ணே பட்டிருக்கும் கருத்து.. உன் கண்ணே பட்டிருக்கும்.. உன்னை என்ன பண்ணா தகும்) - என்று நினைத்தாள்.. பின்பு சத்தமாக

நீங்களும் என்னையே வாட்ச் பண்ணாம ஒழுங்கா வேலை செய்வீங்க - என்றாள்

முறைத்தது கந்தசாமி.

அவளும் முறைத்தாள், எனக்கென்ன பயமா என்பதைப் போல ( ஆனாலும் உள்ளூர பயம் தான்.. வாபஸ் வாங்கின மெமோவை திருப்பி குடுத்துறுமோ? கொஞ்சம் அடக்கி வாசியேன் நிலா.. உனக்கு வாய் ஜாஸ்தி தான்)

தாகமாய் இருந்தது.. சீனு என்ன ஆனான்.. டிஸ்பென்சர் நோக்கி நடந்தாள்

என்ன... எங்க போற?

வந்து... தண்ணீ வேணும்

சீனு எங்க.. சரி நீ போ.

தண்ணி குடிக்க கூட போகக் கூடாதுன்னா.. உனக்கு கொத்தடிமையா நாங்க..? மவனே வா.. தப்பு தப்பா பில் பாஸ் பண்ணி உன்னை மாட்டவைக்கறேன்.. நினைத்துக் கொண்டே நான்கு நாள் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

ஐ.. இங்கயே கூலர் வந்து நிக்குது.. எப்ப வச்சாங்க..? என்றாள் நந்தினி

அட.. ஆமா.. எப்ப? எனக்கு தெரியாதே..!

மேடம்க்கு கால்ல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.. அவங்க நார்மலா துள்ளி குதிக்க ஒரு மாசம் ஆகும்.. அவங்க கஷ்ட்டப்படக் கூடாது இல்லயா..? அதுக்குத்தான்..

லூசா நீயி... இதெல்லாம் மேனேஜ்மென்ட் டாக்டிஸ்.. உனக்கு வேணுங்கற வசதிய சீட்லயே தறேன்.. சீட்டோட சீட்டா தேஞ்சு ஒழைச்சு ஓடாப் போயிடுங்கறது தான் அதோட கான்சப்ட்.. இது புரியாம... பேசாம சாப்டு நந்து..

மறு நாள்..அப்பாடா கருத்து கந்தசாமி ஒருவாரம் லீவ்.. அந்த ஒரு வாரம் அம்சமாகப் போனது

ஆனால் அடுத்தவாரம்.. சோக வாரம்..கருத்துவின் முகம் சோகமாய் இருந்தது போலப் பட்டது..” என்னாச்சு..!?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்
--------------------------------------------
அழகிருக்குமிடம் ஆபத்தும் இருக்குமல்லவா?

“இந்த பால்கனியில நின்னுன்டு பார்த்தா சூர்யோதயமும் சந்ரோதயமும் சூப்பரா தெரியும்.. சிலு சிலுன்னு காத்து, உங்களுக்கு முன்னாடி இருந்தவோ இந்த பால்கனியில உக்காந்து படிச்சு இப்போ ஸ்டேட்ஸ்ல இருக்கா”- பேயிங் கெஸ்ட் ஆஸ்ட்டல் நடத்தும் மாமி செய்த விளம்பரம்..துளியும் தப்பில்லை, இடது பக்கம் நித்யமல்லி படர்ந்து மலர, வலது பக்கம் தென்னக்கீற்றின் இடைவெளியில் தெரியும் சந்திரன் அழகுதான்... முக்யமாக.. இயற்கையை ரசிக்கும் இவர்களை ரசிக்க எதிர்த்தாப்ல மாடி வீட்டு மாமாவோ, ரோட் சைட் ரோமியோவோ, மெயின் ரோட் மெக்கானிக்கோ இல்லாதது இன்னும் அம்சம்..

ஆனால் அந்த அம்சமெல்லாம் டிசம்பர் 26 சுனாமியில் அடித்துக் கொண்டு போனது..

காலை... பால்கனியில் நந்தினியோடு காபி சாப்பிட்டபடி வேடிக்கை பார்க்கையில்தண்ணி வருது.. தண்ணி வருது – என அழுதபடியே குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி மெயின் ரோட்டை நோக்கி நடந்த கும்பல் .. “ஏதோ விபரீதம் “ என்பதை மட்டும் புரியவைத்தது.

நந்தினி டிவி ஆன் செய்ய.. அழைக்கும் தனது செல்லை எடுத்தாள் நிலா

" நிலா முக்யமான சர்டிபிகேட்ஸ், கிரெடிட் கார்ட், ஜுவல்ஸ், கொஞ்சம் டிரஸ்ஸஸ் எடுத்துக்கிட்டு உடனே கிளம்பு.. நேரா இங்க சி.ஐ.டி நகர் வந்துரு.. இல்லன்னா வெஸ்ட் சைட் யாராவது ரிலேட்டிவ்ஸ் இருந்தா அங்க போய்டு... கடல் தண்ணி உள்ள வந்துட்டு இருக்கு "– இதை சொன்னது யாராக இருக்கும்.. ?வேற யாரு..? நம்ம கதையின் நாயகர் சிவக்குமார் தான்.

நந்தினியிடம் விஷயம் சொல்லி முடிப்பதற்க்குள் அவள் இவளுக்கும் சேர்த்து அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டாள்...
“உங்க பாஸ் வீட்டுக்கெல்லாம் போகவேண்டாம், என்னோட அத்தை வீடு அண்ணா நகர்ல இருக்கு... அங்க போயிடலாம்” என அவளே தீர்மானித்து, அவளே ஆட்டோ பேசி, அவளே இவளை அழைத்தும் சென்று விட்டாள்... " சி.ஐ.டி நகர் போய்த்தான் பார்த்தா என்ன..? அண்ணா நகரை விட இது கிட்டத்தானே..” – என்று நினைத்துக்கொண்டாள் நிலா...

" கிளம்பிட்டியா... எங்க இருக்க..? நான் வேணா கார் எடுத்துண்டு வரட்டா? ஆர் யூ சேஃப்..? கேஷ் இருக்கா கையில..? – அரை மணிக்கொருமுறை ஷிவாவிடம் இருந்து வந்த கால்கள் அவளை என்னவோ செய்தது.. சந்தோஷமாக இருந்தது..சிரித்துக்கொண்டே இருந்தாள்.. இந்த வகையான அக்கறை புதியது.... நந்தினி இதைவிட அக்கறை காட்டுகிறாள்... அவளுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்வதில்லை இவள்.. ஆனால் இதற்கு..? உடனே ஓடிப்போய் “ நீங்க எப்டி இருக்கீங்க..? நந்தினிதான் அண்ணா நகர் அழைச்சிட்டு போய்ட்டா” என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது நிலாவுக்கு.

மறு நாள்.. விடிந்ததும் வேகமாய் அலுவலகம் வந்து “ தேங்க்ஸ் சர்.. தேங்க்ஸ் பார் யுவர் கர்டஸி “ என சொல்ல நினைத்த நிலாவுக்கு.. அவளது பாஸ் மீண்டும் ஒரு வாரம் விடுமுறை என்ற செய்தி மிதமான அதிர்ச்சி மற்றும் லேசான ஏமாற்றம் ....மட்டும் அளித்திருந்தால்.. இந்தக் கதை கந்தலாகியிருக்கும்..

ஆனால் அவ்வாறில்லாமல்..

கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் கோபம் ஆகியவற்றை வரவழைத்ததால்.. இந்தக் கதை காவியமாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் தென்படுகின்றன.. எனவே டோன்ட் மிஸ் இட்.. ஓகே..

தொடரவேண்டியவைகள்......தொடரும்........