Tuesday, May 23, 2006

ம.. திரு நிச்சயிக்கப்படுகின்றன- அத்யாயம் 3

"அப்பா.. இந்த இடத்தியே முடிச்சுருங்கப்பா.. "– தனது வாழ்க்கையின் அந்திமபயணத்திற்கான முடிவினை.. நெஞ்சம் வலிக்க.. தீனக் குரலில் சொல்லி விட்டாள்.

அவ்வளவுதான்..ஆரம்பித்துவிட்டனர் வேலைகளை..ஜம்பமாய் மூன்று நட்சத்திர ஹோட்டலில் மாலைப் பொழுதில் நிச்சய தார்த்தம்..வண்ண விளக்கொளியில் வாசனை திரவியம் தெளிக்கப்பட்ட ஏ.சி. ஹாலில் நலங்கு வைத்து நிச்சய தார்த்தம் முடிந்தது.

நிச்சயத்திற்கு வந்திருந்த அத்தனை உறவுகளும், நண்பர்களும் மாப்பிள்ளையை பார்த்ததும் விக்கித்து,பேச நா எழாமல் அமர்ந்திருந்தனர். சில பேர் சாப்பிட பிடிக்காமல் பவித்ராவின் அருகில் வந்து,சோகத்தை மறைக்கத் தெரியாமல் “ வரோம்மா..” என்று மட்டும் சொல்லிச் சென்றனர். உண்மையான சொந்தமெது போலியான பந்தமெது என்பதை புரிந்துக் கொண்டாள். எது புரிந்தால் என்ன..புரியாவிட்டால் என்ன.. அவள் வாழ்க்கை அஸ்தமிக்க துவங்கியது. அந்த இருளில் அவள் நிழலாகிப் போனாள்.

“ என்ன கோபாலன் இது...? பையன் ரொம்ப குள்ளம்.. பொன்னு வேற நல்ல ஹைட் வெயிட்டா இருக்கா..கொஞ்சம் நிதானமா பார்த்திருக்கலாமில்ல..? – ஆத்மார்த்தமாய் பழகிய குடும்ப நண்பர் ஆதங்கபட்டு கேட்ட கேள்வியை எதிர் பார்க்கவில்லை அப்பா.. தம்பிதான் அவரை சாப்பிட அழைத்து செல்வதுபோல் விலக்கி கொண்டு சென்றான்.

“என்ணண்ணா இது.. நான் கிளம்பி வற்றத்துக்குள்ள இப்டி அவசரப் பட்டுட்ட..?
பூனாவிலிருந்து வந்த சித்தப்பா நிச்சயம் முடிந்த மறு நாள் கேட்ட கேள்விக்கு

“ பவித்ராவுக்கு பிடிச்சிடுச்சி..அப்புறம் என்ன..? நானும் சரின்னுட்டேன், நாள் நல்லாருக்குன்னு நிச்சயம் வச்சுட்டேன்..”

“ நான் வந்தப்புறம் முடிவு சொல்லியிருக்கலாம்ல..? சரி .. என்ன படிச்சிருக்கான்.. எங்க வேலை செய்யறான்.

"பி.ஏ. முடிச்சுட்டு..ஸ்கூல்ல வாத்யாரா இருக்கான்"

"என்ணண்ணா இது..? நம்ம பவி எம்.ஏ. சரி விடு படிப்பு வந்து என்ன செய்யப் போவுது... பையன் நல்லவனா இருந்தா படிப்பு முக்கியமா?சரி எவ்ளோ வருஷம் சர்வீசு.. என்ன சம்பளம்.. இங்க பக்கத்துல இருக்கற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமா? உனக்கு பக்கத்திலேயே பவி இருந்தா உன்னையும் பார்த்துப்பா"

“மண்ணடியில வடக்கத்திகாரங்க நடத்ற ஸ்கூல்ல வேலை செய்யறான்.. அவங்க பிரான்ச் இங்க இருக்கான்னு தெரியல..சம்பளம் என்னா..ஒரு ரெண்டாயிரம் தர்றாங்களாம்.. சாயந்திரம் வீட்ல டியுஷன் எடுக்கறானாம்"

தரையில் கால் நழுவுவதைப் போல் இருந்தது பவித்ராவுக்கு“ வாத்யாருன்னு சொன்னீங்களேப்பா..? ப்ரைவேட் ஸ்கூல்னு சொல்லவே இல்லயேப்பா? இரண்டாயிரம் தான் சம்பளமா? அதை வச்சு நான் என்ன குடும்பம் நடத்தறது?- அழுதபடியே கேட்டாள் சமையல் அறையில் இருந்து.

“ வாத்யாருன்னு நான் சொன்னேன்.. எந்த ஸ்கூல் வாத்யாருன்னு நீ கேக்கவே இல்ல..? ஏன் நீ சம்பாதிக்கற இல்ல? அது போதாதா..? கல்யாணத்துக்கு அப்புறம் உன் சம்பளத்த எனக்கா தருவ?"

எவ்வளவு சாமர்த்தியமான பதில், வார்த்தைகளை வைத்து விளயாடும் லாவகம். துவண்டு போனாள்.. நிற்க முடியாமல்.. சுவரோடு தேய்ந்து தரையில் உட்கார்ந்தாள்..இறந்து போன தாயை நினைத்து அழுதாள்..அழுது கொண்டே சமைத்தாள்.. பத்து பதினைந்து விருந்தாளிகளுக்கு உணவிட வேண்டுமே.

“ அண்ணா.. இது என்னமோ என் மனசுக்கு சரியா படல.. அவன் படிக்கவும் இல்ல.. நிரந்தரமில்லாத ப்ரைவேட் வேலை.. வீட்டுக்கு கடைகுட்டி.. எட்டாவது பையன்.. சொத்தும் இல்லை.. எத வச்சு நம்ம பவியை நீ அவனுக்கு தரன்னு சொன்ன?’’

“ நீ சும்மா இருடா.. வயசு பொண்ணை வீட்ல வச்சுகிட்டு.. நெருப்ப மடில கட்டிகிட்ட மாதிரி இருக்கு”

“அதுக்காக ... அந்த நெருப்ப என் தலையில வச்சிட்டீங்களாப்பா..?- என கேட்க நினைத்து அழுகையோடு சேர்த்து அந்த கேள்வியையும் விழுங்கினாள்.

“ சரி..எவ்ளோ நகை கேட்டாங்க?“ அவங்க எதுவுமே கேக்கல.. நானா இருவது சவரன் போடறேன்னு சொன்னதும்.. உடனே சரின்னுட்டாங்க.

சரி என்றுதான் சொல்வார்கள்.. நல்ல திடகாத்திரமாக.. கவர்ன்மென்ட் உத்யோகத்தோடு..பிக்கல் பிடுங்கல் இல்லாமல் வீட்டுக்கு ஒரே பெண்ணாக..குள்ளமான தனது மகனை மணக்க ஒருத்தி வரும் போது..வேண்டாம் என்பார்களா?

“ அண்ணி சாவுபடுக்கைல கிடந்தப்போ.. பவிக்கு ஐம்பது சவரன் சேர்த்து வச்சிருக்கேன்.. நல்ல இடமா பாத்துமுடி தம்பின்னு சொல்லுச்சேன்னா..!???

“ அவ சொல்லிட்டு செத்துட்டா..இங்க நான் தானே பாக்கணும் எல்லாம். இருபது போடறேன்னதும் அவங்களே சரின்னுட்டாங்க. நிச்சயம் ஆனதும் அதுங்களுக்கே பேராசை தானே வந்துரும்...போதாத குறைக்கு நீயே சொல்லி குடுத்திறு”

பவித்ராவின் அம்மா அனைத்திலும் சரி சமமாக,எண்ணி எண்ணி சேர்த்து வைத்தாள்..இவளுக்கு ஐம்பது சவரன் என்றால் ..வரப்போகும் மருமகளுக்கும் ஐம்பது. அவற்றோடு அம்மாவின் நகைகளே ஒரு நாற்பது சவரன் இருக்கும். ஆனாலும் பவித்ராவிற்கென சேர்த்து வைத்திருந்ததில் முப்பது சவரனை நிறுத்திக் கொள்ளும் அப்பாவை என்ன கேள்வி கேட்பது? அப்படி கேள்வி கேட்டால் மட்டும் தந்து விடுவாரா?வாழ்கையே முடிந்து விட்டது.. பிறகு நகை எதற்கு..? பணம் எதற்கு.

“அதை விடு அண்ணா.. பையன் குள்ளமா இருக்கானே.. என்ன ஏதுன்னு விசாரிச்சியா? அவன் அண்ணங்க எல்லாம் நார்மலாத்தானே இருக்காங்க.. அப்பா அம்மா கூட நார்மல் ஹைட்டா இருக்காங்க... இவன் மட்டும் ஏன் குள்ளம்? கண்ணாடி அதிக பவர் இருக்கும் போல தெரியுதே?

“கடைசீ.. ஈவிடை பொறப்பு.. சத்து குறைச்சல்.. வேற ஒன்னும் இல்லடா..”

“இல்ல.. அவங்க குடும்பத்துல வேறயாராவது இப்படி குள்ளமா இருந்தா.. பரம்பரை பரம்பரையா ஏதாவது ஒரு புள்ளைக்கு அந்த வாகு வரும்னு சொல்வாங்களே.. அதை விசாரிச்சியா?

ஐயோ.. கடவுளே...இந்த திசையில் நான் சிந்திக்கவே இல்லையே? நாங்களிருவரும் வெளியே போனால் அனைவரும் கேலி பேசுவார்களே.. தன்னை இளக்காரமாகப் பார்ப்பார்களே என்று மட்டும்தான் இது வரை நினைத்து பயந்திருந்தாள்.. இப்போது.. பரம்பரை பரம்பரையாக அப்படி ஜீன் வருமா? என் குழந்தைகள் குள்ளமாக பிறப்பார்களா? ஐயோ.. நான் என்ன செய்வது? என் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது.. யாருடைய கேலிக்கும் ஆளாகக் கூடாது.

“அப்பா என்னப்பா இது... இந்த ஆங்கிள்ள நீங்க யோசிக்கவே இல்லயாப்பா..? நாந்தான் சின்னவ.. எனக்கு எதுவுமே தோணல?“

"இன்னும் பத்தாம் பசலியாவே பேசிட்டு.. இப்போ எவ்ளவோ மருந்து மாத்ரைங்க வந்துருச்சு “ – என்றான் தம்பி.

“எத்தனை பொருத்தம் இருக்கு ஜாதகத்துல..?“

"ஜாதகம் இல்லன்னுட்டாங்க, நான் மெனகெட்டு மனசு தாங்காம பேர் ராசி மட்டும் பார்த்தேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு..மனசு நல்லார்ந்தா எல்லாம் நல்லா இருக்கப் போவுது”

அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாய் தள்ளிவிட்டு எழுந்த சித்தப்பா,
“சரி .. நான் கிளம்பறேன் அண்ணே.. பவி..சித்தி கிட்ட சொல்லி பெட்டி படுக்க எடுத்துட்டு வர சொல்லு” என்றார்.

"சாப்டுட்டு போங்க சித்தப்பா..ப்ளீஸ்"

சித்தப்பா மெல்ல அருகில் வந்தார்..இரண்டு கைகளால் பவித்ராவின் நெற்றியை அழுத்தி பிடித்தார்.. “ நல்லா இருப்பம்மா நீயி.." என்றார்.

சாப்பிடாமல் அப்பொழுதே புறப்பட்டு சென்ற சித்தியும் சித்தப்பாவும் இவளது கல்யாணத்திற்கு வரவே இல்லை.

இவளை பத்து வயது வரை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்த அந்த சித்தப்பா தன் கூடவே இருந்தால் ஆறுதலாயிருக்கும் என நினைத்தாள் பவித்ரா. முதன் முதலில் ஸ்கூல் வாசலில் இவளை விட்டுவிட்டு வெகு நேரம் கேட் அருகில் நின்றிருந்த சித்தப்பாவின் தோற்றம் நினைவுக்கு வந்தது. அவரின் கை விரல்களை பற்றிக் கொண்டு வயலுக்கு நடந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. வளரவே வளராமல் ஸ்கூல் பிள்ளையாகவே இருந்து விட்டால் எவ்வளவு நிம்மதி, எவ்வளவு சந்தோஷம்.

தொடரும்...

Friday, May 12, 2006

ம.. தி.. நிச்சயிக்கப் படுகின்றன- அத்யாயம் 2

"ஆபிஸுக்கு சைக்கிள்ள போ.. நாலு ஸ்டாப்பிங்குக்கு எதுக்கு பஸ்ஸு? "..மத்யானம் ஆபீஸ் கான்டீன்ல சாப்ட்டுக்க..சப்ஸிடிய எதுக்கு வேஸ்ட் பன்ற?-

எல்லாம் அப்பாவின் ஆணை. காலையில் எழுந்து ஓடி ஆடி என்னதான் சுவையாக சமைத்தாலும் அதை சாப்பிடும் பாக்கியம் அவளுக்கு இருந்ததில்லை. காலையில் எலுமிச்சம் பழச் சாறு.மதியம் வாயில் வைக்க வழங்காத கான்டீன் உணவு.

காபி குடித்து முடித்ததும் அந்த டம்ளரை டேபிள் மீது வைக்காமல் வேண்டுமென்றே லாப்ட்டில் வைத்துவிட்டு போகும் தம்பி. பாத்திரம் விளக்கும் போது ஸ்டூல் போட்டுத்தான் எடுப்பாள். இதையெல்லாம் கேட்டால் பெரிய சண்டையாகும், “ காலா காலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பு.. வேலைக்கு போனாலே திமிரு ஜாஸ்த்தியாய்டும்” என்று கூறும் உறவு வட்டங்கள்.

“ எனக்கு கல்யாணமே வேணாம்பா.. நான் இப்டியே இருந்துடறேம்பா..”

“ எவனையாவது லவ் பன்றயா? அப்டி ஏதாவது இருந்தா செருப்பு பிஞ்சிடும்”

“ அப்டியெல்லாம் எதுவும் இல்ல.. ஆனா இப்ப பார்த்த மாப்பிள்ளை குள்ளம்பா”

வற்ற எடத்தையெல்லாம் தட்டிக் கழிச்சுட்டே இருக்கா.. வேற என்ன விஷயமோ என்னவோன்னு “ எதிர்வீட்டு தாமோதரன் கூட கேட்டாரு

“ அவர் அப்டித்தான் கேப்பாரு.. ஏன்னா அவங்க மிஸஸ் அவரை விட முக்கால் அடி உயரம் ..அவங்க எவ்ளோ வருத்தப் படறாங்கன்னு எனக்கு தெரியும்”

“இந்த வாய்தான் உனக்கு நல்லது எதுவுமே நடக்க விடாம செய்யுது”

இந்த மாதிரி கல்யாணம்தான் எனக்கு நடக்கபோற நல்லதா?

“ அப்பாவோட உடம்பு கன்டிஷன் தெரிஞ்சுதான் பேசறியா? உன்னாலயே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்.. அவ்ளதான் நான் சொல்லுவேன். சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வா”

இருபது வயது கூட நிரம்பாதவன்.. டிப்ளமோ அரியர்ஸ் வைத்துவிட்டு வெட்டியாய் ஊர் சுற்றுபவன்.. வீட்டு வேலைகளை சிறிதளவு கூட பகிர்ந்து கொள்ளாதவன் – குற்ற உணர்வு ஏதுமின்றி மிரட்டுகிறான்.. அவனை விட நான்கு வயது பெரியவள்.. தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

படிப்பு - தன்னம்பிக்கையையும், பொருளாதாரம் - தைரியத்தையும் தந்துவிடும் என்பது கற்பனை. தன்னம்பிக்கையை திமிர் என்றும், தைரியத்தை அடங்க பிடாரித்தனமெனவும் பெயரிட்டு ஆவேச கூச்சல் போடும் ஆண்வர்கம் வீட்டை ஆளும் தேசமிது. அவர்களது ஆட்சியில் பெண்கள் கொத்தடிமைகள்தான்.

சொந்த பந்தங்களோ,வழியில் பார்ப்பவர்களோ, அலுவலக நண்பர்களோ - பொழுது போகாமல்.. பேச வேறு விஷயம் இல்லை என்றவுடன் “ பவிக்கு எப்போ கல்யாணம்.. .. இன்னும் பார்த்துண்டு இருக்கீங்களா? என்ற ஒரு கேள்வியை போகிற போக்கில் கேட்டுவிட்டு போய்விடுகின்றனர். ஒரே நாளில் நாலு பேராவது இப்படி கேட்கும் போது ப்ரச்சனையின் தீவிரம் அதிகரிக்கின்றது.

இந்த தொல்லைகளில் இருந்து விடுபட.. கண்ணை மூடிக்கொண்டு இந்த இடத்தையே ஏற்றுக் கொள்ளலாமா? தற்கொலை செஞ்சுக்கலாமா? தற்கொலை செஞ்சுக்க அசாத்திய தைரியம் வேணும்..

அலுவலக தோழிகள் அனைவருக்கும் நல்ல நல்ல வரன்கள் அமையும் போது எனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது... அப்பா, தம்பி திட்டுவதைப்போல நான் அதிர்ஷ்டம் இல்லாதவளோ.. இருந்தாலும் இந்த இடத்தை சரியென்று சொல்ல மனம் உடன்படவில்லை.

“ இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தா.. நல்ல இடமா அமையும்ப்பா?

“ எனக்கு ஒன்னும் இல்ல.. நீயும் உன் தம்பியும் போட்டுக்கற சண்டையில.. நான் நிம்மதியா இருக்க முடியல.. நான் பேசாம முதியோர் இல்லம் போய்ட போறேன் .. அப்புறம் நீங்களா பார்த்து ஏதாச்சும் பண்ணிக்குங்க”

“ஆபீஸ் ப்ரண்ட் கல்யாணத்துக்கு மொழி எழுதக் கூடாதுங்கறான்.. எதிர்த்து கேட்டா தண்ட செலவு பண்றேன்னு என்னையே திட்டறான்.. நான் திருப்பி கேட்டா சண்டை”

“ஆமா.. ஒரு மாசத்துல எத்தன கல்யாணம்..? எத்தனை தடவை ஐம்பது நூறுன்னு அழறது?

விக்கித்து நின்றாள். “ முழு சம்பளத்தையும் பே ஸ்லிப்போட தந்துடறேனேப்பா.. மொழி எழுதலைன்னா ஆபீஸ்ல கேவலமா பார்ப்பாங்கப்பா” - என சொல்ல நினைத்து, பயத்தால் சொல்லாமலே விழுங்கி விட்டாள்.

“ டேய்.. டேய் .. நில்லுடா..இந்தா.. இந்த நூரு ரூபாயை வச்சுக்கோ.. க்ரிக்கெட் ஆடிட்டு திரும்பி வர லேட்டானா.. ஆட்டோலயே வந்துரு... உன் ப்ரண்ஸ்க்கு ஏதாச்சும் வாங்கி தா.. அவங்க கையையே எதிர்பார்க்காதே” – பள்ளி நண்பர்களோடு க்ரிக்கெட் விளையாடுவதற்காக புற நகர் பகுதியிலிருந்து சென்னைக்கு கிளம்பும் மகனுக்கு,வாரத்தில் மூன்று முறையாவது இவ்வாறு பணம் தந்து அனுப்புவது பவித்ராவின் தந்தையின் தலையாய கடமையாய் இருந்தது. பவித்ராவால் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஒப்பிடலில் தனது தந்தை செய்யும் ஓரவஞ்சனை புரிந்து அழாமல் இருக்க முடியவில்லை.

------------------------------------

“ நந்தினி.. பேசாம இந்த இடத்தையே சரின்னு சொல்லிடட்டா.. இதுதான் எனக்கு விதிச்சிருக்குன்னா நான் போராடி என்ன பயன்?

“ என்னடி இது...!? ஈக்வல் ஹைட் இருந்தா கூட பரவாயில்ல.. உன்னை விடவும் ரொம்ப குள்ளம்.. சரியா வரும்னு எனக்கு தோணல”

“ எனக்கு துளி கூட பிடிக்கல நந்து..ஆனா அப்பா, தம்பி டார்ச்சர் தாங்க முடியல.. வீட்ல எப்பவும் சண்டை தான்.. வீட்டு வேலையும் செஞ்சு.. ஆபீஸ் வேலையும் செஞ்சு.. வம்பு சண்டைக்கு வந்தாலும் வாய் தொறக்காம இருந்து.. எனக்கு த்ரானி இல்ல நந்து.. தினம் தினம் நான் தூங்காம,சத்தம் போடாம தலையணைல முகம் புதைச்சு அழறது எனக்குத்தான் தெரியும்”.

“ இந்த பையனை விட.. போன தடவை வந்த இடமே பெட்டர்.. கால்தான் விந்தி.. விந்தி நடந்தான்.. நல்ல கலர்.. ஹைட் வெயிட்டா..முகம் கூட அழகா இருந்துச்சு”

“ அந்த இடமே திருப்பி கேளுங்கப்பான்னா.. அப்பாக்கு ஈகோ ப்ராப்ளம்.. அவன் கால்ல போய் விழ சொல்றியா என்னைன்னு?” கத்தறாரு

" எதிர் நீச்சல் படத்துல பாலசந்தர் ஒரு வசனம் வச்சிருப்பார்.. ஜெயந்தியோட அம்மா ஜெயந்திக்கு எப்டியாவது கல்யானம் செஞ்சு அனுப்பிடனும்னு தவிப்பாங்க.. அதுக்கு அவளோட அப்பா “ என் வீட்டுக்காரியோட தலைவலி, திருகுவலி என் பொன்னோட வாழ்க்கையை தீர்மானிக்க கூடாதுன்னு" சொல்லுவாரு.. ஆனா இங்க உங்க அப்பாவே இப்படி இருக்காரு.. கொஞ்சம் வெயிட் பண்ணா நல்ல இடமா வரும் பவி”

“ இதத்தான் நானும் சொன்னேன்.. யாரையாவது லவ் பண்றியான்னு கேக்கறாங்க ரெண்டுபேரும்.. செத்து போய்டலாம்னு தோணுது”

“ப்ச்.. உன் அழகுக்கும் பொறுமைக்கும் .. உங்க அம்மா இருக்கும் போதே நல்ல இடமா பார்த்து முடிச்சிருக்கலாம்.. நாத்தனார் இருக்க கூடாது.. மாமியார் நல்லவளா? பையன் டாக்ட்டரா இருக்கனும், இஞ்சினீயரா இருக்கனும்னு செலக்ட் பண்ணி செலக்ட் பண்ணியே உன்னை கவுத்துட்டு போய்ட்டாங்க”

" நேத்து அத்தை வந்திருந்தாங்க நந்தினி"

" என்னவாம்..?"

.. சுமதிக்கும் இடம் அமைஞ்சிடுச்சாம்.. பேசி முடிக்க அப்பாவ வந்து கூப்ட்டாங்க”

“என்னது...!? சுமதிக்கா.. ? பதினேழு வயசுதானே ஆகுது அவளுக்கு? அவ அக்காக்கே இப்பத்தானே ரெண்டு மாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு”?

“ இதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு நந்தினி.. அப்பாக்கு திடீர்ன்னு எதாவது ஒன்னு ஆயிருச்சுன்னா..? நாங்க ரெண்டு பேர் என்ன செய்றது..? ஏதோ ஒன்னு.. என் தலையெழுத்து படி நடக்கறது நடக்கட்டும்”

தன்னைவிட சின்னவளுக்கு திருமணம் ஆகிறது என தெரியவந்தால்..மறை முகமான அந்த அதிர்ச்சியில்.. மன அழுத்தத்தில் – பவித்ரா இந்த இடத்தியே முடிக்கச் சொல்லுவாள் என எதிர்பார்த்து அவளது அத்தை விரித்த வஞ்சக பொய் வலை அது. அப்படி வலை விரிக்கச் சொன்னது அவளது அப்பாவேதான் என்பதும் கடைசி வரை பவித்ராவுக்கு தெரியாது.

.... தொடரும்..

Thursday, May 04, 2006

மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

“ உன்னை விட அவரு குள்ளம் கிடயாது... அது போதாதா..?

“ இல்லடா.. நானே கொஞ்சம் குண்டு.. அதுக்கு ஏத்த மாதிரி அவரும் கொஞ்சம் ஹைய்ட் வெயிட்டா இருந்தாத்தானே .. வெளிய தெருவ போகும் போது நல்லா இருக்கும்..?

“ இப்டி சொல்லி சொல்லியே வர்ற இடத்தையெல்லாம் தட்டி கழி. இப்பவே இருபத்தி நாலு.. என் ப்ரண்டோட அம்மால்லாம் “ ஏன் உன் அக்காக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஆகலன்னு தொளைச்சு எடுக்கறாங்க.. வெளிய தல காட்ட முடியல”

உண்மையில் இப்போது பவித்ராவிற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை அவளைவிடவும் அரையடியாவது குள்ளமாக இருப்பார்.

“ பொண் பார்க்க வந்த அன்னைக்கே .. நடு ஹால் வரைக்கும் ஷூ போட்டுன்டு வந்துட்டார். அது ஷூவே கிடையாது.. சின்ன சைஸ் ஸ்டூல்.. எனக்கு ஈக்வல் ஹைட்னாலும் பரவாயில்லை.. என்னைவிட குள்ளம்ன்னா எல்லாரும் கேலி பண்ணுவாங்கப்பா..?

“ நேத்து டாக்ட்டர்ட்ட போனேன்.. அதே டேப்லட்ஸ் கன்டினியு பண்ணச் சொன்னார்.. நெய் எண்ணெய்லாம் அதிகம் சேர்த்துக்க வேண்டாம்னார்..”

அதாவது என்னோட உடல் நிலை அதே நிலைமைலதான் இருக்கு.. இதையெல்லாம் கன்சிடர் பண்ணி ஒரு முடிவுக்கு வா..ஒரு முடிவு என்ன? இந்தப் பையனையே முடிச்சுடுங்கப்பான்னு வாயை திறந்து ஒரே ஒரு வார்த்தை சொல்லிடு .. உன்னை பிடிச்சு தள்ளிடறோம் என்பதைப் போலத்தான் பெற்றெடுத்த தந்தையும் ,பின்னால் அவதரித்த தம்பியும் பேசினார்கள்.

கண்ணில் நீர் வழிய, நெஞ்சம் வலிக்க ஜன்னல் கம்பிகளின் வழி வெளியே பார்த்தாள் பவித்ர. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காலி மனைகள்..அதில் இரை தேடும் சிறு பறவைகள் தங்கள் மனதுக்குப் பிடித்த இணைகளோடு .. அவற்றிற்கு இருக்கும் சுதந்திரம் கூட தனக்கில்லை என நினைக்க நினைக்க மௌனமாய் அழுகை வந்தது.

அவள் அழுதததை கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவேயில்லை தனயனும் தகப்பனும்.

தொடரும்...