அடுக்ககம் .
“அண்ணீ..
அண்ணீ.. அண்ணா எங்க?” – என கேட்டுக்கொண்டே பாவாடை தாவணி பற பறக்க எங்கள் ஒண்டுக் குடித்தன
போர்ஷனுக்குள் ஓடி வந்தாள் என்னுடைய சின்ன அத்தை… புவனேஷ்வரி.
“உங்கண்ணா
இப்போதான் ஆஃபீஸ் கிளம்பினார் டி.. என்ன விஷயம்?. என் கிட்ட சொல்லு” – என் அம்மா
பதில்
சொன்னாள்.
கபாலீஸ்வரர்
கோயிலுக்கு போய் விட்டு திரும்பி வந்தவளிடம்..ஒரே
பரபரப்பு.. .. ஒரு பிங்க் கலர் துண்டு சீட்டு அவள் கையில் பட படத்தது. புவனா அத்தைக்கு
வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்… நல்ல மூக்கும் முழியுமாய்.. இப்போதான் பறித்த
வாழைதண்டு போல் எப்போதும் ப்ரெஷாக … அந்தக்கால நடிகை ஜெயா வை நினைவு படுத்துவாள். நான்காவது படித்துக் கொண்டிருந்த நான் அவளுக்கு ஒரு நல்ல தோழி.
எனக்கு அவள் தாயுமானவள்.
என் அப்பா கொண்டு வரும் பல திராபையான மாப்பிள்ளைகளை…
.. அத்தையின் முகத்தை பார்த்தே அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை நான் கண்டு பிடித்து
…” வேண்டாம் பா இந்த மாப்பிள்ளை” என்று அப்பாவிடம் சொல்லி விடுவேன்.
“என்
கிட்ட சொல்லேன் அத்தை.. என்ன விஷயம் ?”
– நானும் கேட்டேன், அந்த பிங்க் பேப்பரை வாங்க
முயன்றேன்.
“இங்க
பாரு ராதா… கபாலி கோயில் குளத்துக்கு .. நேர் எதுத்தாப்ல… நார்த் மாடா ஸ்ட்ரீட்ல… புதுசா ஃப்ளாட் கட்றாங்க….
வெறும் மூன்றரை லட்சம் தானாம்… - அந்த பிங்க்
நிற காகித விளம்பரத்தை காட்டினாள் அத்தை.
.
என்
அம்மா அப்பாவிற்கு மைலாப்பூரில் ஒரு சொந்த
வீடு என்பது ஜென்ம, அனு ஜென்ம, த்ரி ஜென்மாந்திரக் கனவு. அதை இந்த பிங்க் நிற துண்டு விளம்பரம் நிறைவேற்றும் என ஓடோடி வந்திருக்கிறாள்
என் செல்ல அத்தை. நான் வாஞ்சையுடன் அவள் வலது கையை பிடித்துக் கொண்டு, அவளது தோள் மேல்
சாய்ந்துக் கொண்டேன்.
இதற்குள்
மற்ற ஐந்து ஒண்டு குடித்தனக்காரர்களும், ஏதோ ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு… காபி பொடி
வேணும் ராதாம்மா.. ஸ்க்ரூ ட்ரைவர் வேணும் ராதாம்மா … இந்த வார விகடன் வாங்கிட்டீங்களா
ராதாம்மா…என்ன இங்க சத்தம்.?.. ராதாம்மா, என் பேரனுக்கு ரெண்டு இட்லி தாங்க ராதாம்மா
– என எங்கள் போர்ஷனுக்கு வந்துவிட்டார்கள்.
இந்த
இடத்தில் பின் வரும் விஷயங்களை நினைவு கூர்ந்தே ஆக வேண்டும் இல்லையெனில் எனக்கு அம்னீஷியா என்று என் குடும்பதினர் முடிவெடுத்து மன நல நிபுணரை அழைக்கக் கூடும்... அதாவது எங்கள் குடும்ப ரகசியம் எதுவும் பேச வேண்டும் என்றால் குடும்பத்தோடு
லீவ் போட்டுவிட்டு. வெளியே சுற்றுலா போனால் தான் பேச முடியும்.. வலது புற காது, வலது
புற கண் மற்றும் வலது புற நாசி – இந்த மூன்றையும் எங்கள் போர்ஷனில் வைத்திருப்பார்கள்… மீதி மட்டுமே அவர்களுடன் போகும்.
நாங்களும் அப்படித்தான். . ஊரோடு
ஒத்துப் போகனுமில்ல?
என்றாவது
திடீர் என்று வரும் விருந்தாளிகளின் உறவு முறை என்ன என்பது நினைவு வராமல் குழம்பி தினறுவேன்…
“ என்னடி
ராதே.. திரு திருன்னு முழிக்கற.. உங்க பெரியம்மாவோட…
நாலாவது தம்பிடி .. என்னப்பா நாராயணா நன்னா
இருக்கியோ?..உள்ள அழைசிண்டு போடீ ராதே”… - என்பார்கள்..
திரும்பி
உள்ளே செல்ல எத்தனிக்கயில்…பின்னாடியே எங்கள் வீட்டுக்குள் வந்து..
“என்னடாப்பா…
புவனா மாடி ஆத்துல டிவி பாக்கறா.. நான் காஃபி கொண்டு வரவா”- என்பார்கள். என்னமோ இந்த
நாராயணர் என் அத்தை புவனாவை பார்க்கத்தான்
கிளம்பி வந்தார் போல. யூகங்களாய் பரப்பி..
வந்த விஷயத்தை வந்தவர்கள் வாயிலேயே சொல்ல வைப்பார்கள், மௌனமாயிருந்தால் சம்மதத்திற்கு
அறிகுறி என்று எடுத்துக் கொண்டு பக்கத்து போர்ஷனுக்கு
போய் அவர்கள் யூகித்ததை உண்மை போல சொல்லுவார்கள். அந்தக் கால CC TV கேமராக்கள். இவர்கள் எல்லோரும் 1983 ஆம் வருடத்தில் எங்களுடன்
வாழ்ந்த neighbours .
Coming
back to the story… அத்தையிடம் இருந்த அந்த
விளம்பர சீட்டு.. இப்போது ஐந்து கைகளால் பிடிக்கப் பட்டு , படிக்கப் பட்டு இரு பாதியாக
கிழிக்கப் பட்டு விட்டது…
என்னது..…??
வெறும் அறுனூறு சதுர அடி..அதுவும் மூனாது மாடில.. மூன்றை லட்சமா?- அன்னியாய விலை இல்லே
இது ??? -முதலாமவர்
தரை
நமக்கு சொந்தமில்ல, கூறை நமக்கு சொந்தமில்லை..-இரண்டாமவர்
பக்க
சுவர் மட்டும் நமக்கு சொந்தமா என்ன? ஒரு ஆணி கூடஅடிக்க முடியாது? பக்கத்து போர்ஷன்காரா
சண்டைக்கு வந்துடுவா –மூன்றாமவர்
தண்ணி
வரலன்னா.. மூனு மாடிக்கு… ராதா குட்டி தான் கொடம் கொடமா தூக்கனும்- நாலாமவர்
மெயின்டனன்ஸ்
சார்ஜ் மாசத்துக்கு நூறூ ரூவாயாமே…?? அதுக்கு மேல நானூறு போட்டா… அடையாரில ஜாம் ஜாம்ன்னு தனி வீடு வாடகைக்கு
கிடைக்கும்.. தொளசி மாடம் மொதக்கொண்டு ப்ரீயா…- இது ஐந்தாமவர்.
இதற்கெல்லாம்
அம்மா ஒரே வாக்கியத்தில் பதில் சொன்னாள் “ புவனா கல்யானத்தை முடிக்காம வேற எதை பத்தியும்
யோசிக்கறதா இல்ல மாமி… அது முடிச்சதும்.. ராதா படிப்பு அப்புறம் அவ கல்யாணம்..ராதாக்கு
அப்புறம் சீனு (என் தம்பி) படிப்பு.. எக்கசக்கமா செலவு இருக்கு..இந்த விளம்பரத்தை கூட
ராதாப்பா வாங்கி பாக்கமாட்டாரு.
அப்பாடா
.. எல்லார் முகத்திலும் நூறூ வாட்ஸ் பல்பின் ப்ரகாசம்.
“என்னமோடிம்மா..
சொல்றதை சொல்லிட்டோம்… எலி வளையானாலும் தனி வளை நல்லதுதான்… உனக்குதான் இவ்ளோ செலவுகள்
இருக்கே… ஆசை இருக்கு தாசில் பண்ண… ஆனா அம்சம் இருக்கனுமே! “ என்று சொல்லிக் கொண்டே
கலைந்தார்கள் அந்த இந்திய நண்டுகள் .( நான் மேல ஏறு வதை விடமிக முக்கியம்…, நீ மேல ஏறாம பாத்துக்கனும்… கண்டிப்பா
உன் காலை பிடிச்சி இழுப்பேன் என்று எவெர்சில்வெர்
தூக்குக்குள்ளயே இருக்கும் நண்டுகள். எப்படி
அதில் ஒன்று கூட மேலே வராமல் தூக்கு உள்ளேயே இருக்குமோ… அது போல நாமாக சிந்தித்து
, முன்னேற நினைத்தாலும் முடியாது இந்த மனிதர்களிடம் மாட்டிக்கொண்டால்.)
அப்பா
இரவு சாப்பிடும் போதுஎல்லா விஷயத்தயும் பொறுமையாக கேட்டார். கொஞ்ச நேரம் பொறுத்து சொன்னார்
“ ஊர்ல இருக்குர நாலு ஏக்கரை வித்துட்டு..
ஒரு ப்ளாட் வாங்கினாத்தான் என்ன??
அம்மா
துர்காதேவி, பத்ரகாளியாய் ஆனாள் – இங்க பாருங்க.. நம்ம சீனுக்குன்னு இருக்குறது அது
ஒன்னுதான்.. அதை ஒன்னும் பண்ணக்கூடாதுன்னு உங்கம்மா சாகும்போது எங்கிட்ட சொல்லிட்டு
தான் செத்தாங்க.
அப்பா
ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.. .””. எங்கம்மா சாகும்போது உங்களுக்குள்ள பேச்சு வார்த்தயே
இல்லயேடி!!! என்றார்.
சொல்றதை
சொல்லிட்டேன்..பேசாம சாப்ட்டு எழுந்திருங்க என்றாள் அம்மா.
அத்தைக்கும்
எனக்கும் அந்த பிளாட்டை வாங்கினால் தான் என்ன? என்றிருந்தது.
அத்யாயம் – 2
அத்தைக்கு
அழகான, நல்ல கணவர் அமைந்து அவள் வேலூரில் தனி
குடித்தனம் போனாள். நாங்கள் சென்னை புற நகர் பக்கம் குறைந்த வாடகையில் கொஞ்சம் பெரிய
தனி வீடு எடுத்து குடி போனோம். அத்தை எங்கள்
வீட்டுக்கு வரும் போது கற்பகவல்லி சமேத கபாலியை தவறாமல் தரிசிப்போம். ஒவ்வோர் முறையும் அந்த அடுக்ககத்தினை ஏக்கத்துடன்
பார்ப்போம்.. அதன் அடித்தளம் இப்போது ஷாப்பிங்க் மால், வங்கிகள், ATM கள், நிறைய கார்கள்
நிறுத்தப் பட்டு ஜகஜ்யோதியாய் மின்னியது.. ஜன்னலை திறந்தால் கோபுர தரிசனம், பூக்கடை முதல் புத்தக கடை வரை.. சில்லென்று கபாலி
குளத்திலிருந்து வரும் காற்று…இவற்றையெல்லாம் பார்க்க பார்க்க…ச் சே…… இதையெல்லாம்
நாங்கள் இழந்துவிட்டோம் என மனதுக்குள் சொல்லிக்கொள்வோம்..
கொஞ்சம் அழுகையாக வரும்.
புற
நகர் வீட்டில் வெள்ளம் போல் தண்ணீர் , விசாலமான
வீடு,, காற்றோட்டம், கண் எதிரே கறந்து தரும் பசும்பால், பின்புற காலி யிடத்தில் நாங்கள்
பயிரிட்ட கீரை வகைகள் என எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லை என்பது போல் இருக்கும்.
இந்த மைலாப்பூரில் இருந்த ஏதோ ஒரு உயிர்ப்பு
அங்கில்லை. பெரிய புராதன கோயில்கள் அங்கே இல்லாதது
கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
எங்கள்
காலத்தில் மைலாப்பூரில் படித்தவர்கள் எல்லோரும் அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட்டார்கள்,
அதனால் இங்கே வீடு வாங்கி என் பையனை இங்கே படிக்க வைத்தால் அமெரிக்காவில் செட்டில்
ஆகிவிடலாம் என்று அத்தை உறுதியாக நம்பினாள். இங்கே ஒரு ஃப்ளாட்டாவது வாங்கனும்
என அடம் பிடிப்பதற்கும் அதுவே காரணாம். வாடகை
வீட்டிலிருந்தே அவள் மகன் படிக்க முடியும் என்பதை அவள் மறந்து விட்டாள்.
“என்னதான்
சில்க் ஸ்மிதா கவர்ச்சியாய் முதல் ரீலில் இருந்து கடைசீ ரீல் வரை வந்தாலும்.. பத்து ரீல் மட்டுமே தலை காட்டும் அம்பிகா தான் ஹீரோயின் என நாம் ஏற்றுக் கொள்வதைப்போல…. மைலாப்பூர் தான் ஊர்.. மற்றதெல்லாம்
வேஸ்ட்” - என அத்தை சொன்னாள். என்ன லாஜிக்கில்
அதை சொன்னாள் என அப்போதும் புரியவில்ல, இப்போதும்
புரியவில்லை.
ஆனாலும்
எனக்கு அத்தை தானே ரோல் மாடல். எனவே எனக்கு
கல்யாணம் ஆனதும் முதல் வேலை மைலாப்பூரில் ப்ளாட் வாங்குவதுதான் எனஅந்தக் குளக்கரையிலேயே
வீர சபதம் எடுத்தேன்…
ஆனால்
நல்ல வேளை .. நான் அந்த சபதத்தை நிறைவேற்றவில்லை .
இதற்கெல்லாம்
காரணம் இதே புவனேஷ்வரி அத்தை தான்.
அத்யாயம்-3
இருபது
வருடங்கள் ஓடிப்போனது தெரியவே இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் எனக்கு திருமணம் பேசும்பொழுது
நான் போட்ட ஒரே கண்டிஷன் – மைலாப்பூரில் ஒரு லக்ஸுரி ப்ளாட் இருக்கனும் அல்லது கல்யானத்துக்கு
அப்புறமாவது வாங்கனும். என் மணவாளர் என் முகத்தை
பார்த்ததுமே – இந்த லூஸையா சமாளிக்க முடியாது? இப்போதைக்கு தலையாட்டுவோம், கல்யாணத்துக்கு அப்புறம் ப்ரெயின் வாஷ் பண்ணி காட்டாங்குளத்துர்ல வாங்கி கொடுக்கலாம் “ என நினைத்தாராம், இதை என்னிடம்
முதல் நாளே சொல்லியும் விட்டார்… கனவுகள் சிதைந்தன.. இதற்காக கட்டிய கணவனை விட்டு விடுவதா?
.. நாம் இவரை ப்ரெயின் வாஷ் செய்தால் என்ன??? என்று எனக்கு தோன்றியது… ஆனால் எப்படி
என்றுதான் தெரியவில்லை.
புவனா
அத்தையின் கணவர் துபாயில் வேலை கிடைக்கவே, வேலூரிலிருந்து வீட்டை காலி செய்துவிட்டு
அத்தையையும் அவளது பதினைந்து வயது மகனையும் என் அப்பாவிடம் கொண்டுவந்து விட்டுவிட்டு
துபாய் போய் விட்டார். ஆறுமாதம் கழித்து என் கணவரும், என் அப்பாவும் சுற்றுலா விசாவில்
துபாய் சுற்றிப் பார்க்கப் போய் விட்டனர்.
கணவர்
கை நிறைய சம்பாதிக்கும் தைரியத்தில் அத்தை
அவளது கனவு அப்பார்ட்மென்டை மைலாப்பூரில் தேட ஆரம்பித்தாள். தனி வீடு பார்த்தால் கோடிக் கணக்கில் விலை.. விக்கித்து
போனோம்.. கடைசியில்.. அத்தையின் விருப்பப்படி
நல்ல விசாலமான தெருவில் மைலாப்பூர் முடியும் எல்லையில் புதிதாக கட்டிக்கொண்டிருந்த
ஒரு பிளாட்டில் தரைதளத்தில் ஒரு பிளாட் மட்டும் பாக்கி இருந்தது.
பில்டர்
வளர்ந்து வரும் இளைய தலை முறை ரௌடி போல இருந்தார், கதர் சட்டை, பர்மா பஜார் சென்ட்
, செல் ஃபோன் , கை எடுத்து கும்பிடும் போஸ் கொடுத்து அந்த போட்டோவை நாலுக்கு ரெண்டு சைசில் ப்ரேம் போட்டு
மாட்டி இருந்தார்.
தயங்கி
தயங்கி ஆபீஸ் ரூமில் உட்கார்ந்தோம்… புரோக்கர் எங்களை பில்டருக்கு அறிமுகப் படுத்தினார்
“ “இன்னிக்குள்ள பத்து பர்சென்ட் அட்வான்ஸ் குடுத்தீங்கன்னா.. ஒரு காப்பி தாய் பத்திரம்
குடுத்திடுவோம்… எங்க லாயர் இருக்கார்.. அவரே பார்த்து குடுத்துடுவார்.. அதுக்கு பீஸ்
அஞ்சாயிரம் தனியா தரனும். என்று சொல்லி ஒரு
பிட் பேப்பரில் நாலு லட்சத்து ஐம்பத்தி ஐந்தாயிரம் என எழுதி கொடுத்தார்.
டாக்டர்
sugar டெஸ்ட்டுக்கு எழுதி கொடுத்தால் என்ன முக பாவனையோடு வெளியே வருவோமோ அது போலவே வெளியே வந்தோம்.
“ அப்பா,
மாமா, என் வீட்டுக்கார் எல்லார்கிட்டயும் பேசிட்டு முடிவு பண்ணலாமே.. அத்தை”– என்றேன்.
“ஷ்..மூச்சு
விடாத.. உன் மாமா லீவ் ல வரும் போது …. அவருக்கு
இதுதான் சர்ப்ரைஸ்” என்றாள் அத்தை
எங்கள்
முகத்தை பார்த்த புரோக்கர் “ என்ன மேடம்… கவலை படாதீங்க ..இதுக்கு யூசீயூசீ
யூபேங்க்ல இம்மீடியட்டா பத்து நாள்ள லோன் தருவாங்க”
என்றார்
“இன்னும்
ரெண்டு நாள்ள அட்வான்ஸ் தரலன்னா.. பிளாட் கை விட்டு போய்டும் மா.. நான் சொல்றதை சொல்லிட்டேன்
– என்று போய் விட்டார் புரோக்கர்.
ஐ..
பிளாட் வாங்கறது இவ்ளோ ஈஸியா? இது தெரியாம போச்சே இவ்ளோ நாளா? என நினைத்துக் கொன்டேன்.
“ ஆறு
மாசமாக மாமா துபாயிலிருந்து அனுப்பிய பணத்தில்
நாலு லட்சத்தி ஐம்பதாயிரத்துக்கு ஒரு
செக்,, தனியாக ஐந்தாயிரத்துக்கு ஒரு செக் கொண்டு வந்து தந்துடலாம் ராதா என்றாள் அத்தை.
மறு
நாள் அம்மாவோடு வந்து அவளுக்கு பிளாட்டை காண்பித்தோம். “ நல்லாதாண்டி இருக்கு.. எங்க இடுக்கு முடுக்கான சந்துல
வாங்கிட போறியோன்னு நினச்சு பயந்துட்டு இருந்தேன்”- என்றாள் அம்மா. ரகசியம் காக்க அவளும்
சம்மதித்தாள்.
ஒரு
நல்ல நாள் பார்த்து பில்டரிடம் செக் கொடுத்து விட்டு அக்ரிமென்ட்டில் கையெழுதிட்டாள்
என் அத்தை… அந்த நேரம் என்ன விஷ வேளையோ… அவள் பட்ட பாடு…சொல்லி மாளாது… வத்தக் குழம்பு
.. சுட்ட அப்பளம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டது அவளது குடும்பம்…
அத்யாயம் -4
பில்டரிடம்
,செக் கொடுத்த கையுடன் ,
“நீங்க
சொன்னீங்களேஅந்த பேங்க்காரரையே எங்க வீட்டுக்கு அனுப்புங்கோ .. லோன் அப்ளை பண்ணாலாம்னு
இருக்கேன்”என்றாள் அத்தை.
பில்டரும் ஒரு விசிட்டிங்க் கார்டை எடுத்து கொடுத்து,
“இந்த
நம்பருக்கு போன் பன்னா அந்த பேங்க்ல இருந்து வருவாங்க, ஃபுல் செட் தாய் பத்திரம், பிளான்
ப்ளூ ப்ரின்ட் எடுத்து வச்சுக்கோங்க, பேங்க் ரெப்ரெசென்டடிவ் கிட்ட குடுங்க, ஒரு வாரத்துல
செக் தருவான் “ என்றார்.
மாமா
இப்பொதான் துபாய் போயிருக்கார் .. மீதி பணம் மொத்தமா தர முடியுமான்னு தெரியல .. லோண்
தான் பத்து நாள்ள ஈசியா கிடைக்கும்ன்றாங்களே அண்ணி.. வாங்கிட்டா நல்லதுதானே என்றாள்
அத்தை, அம்மா எதுவும் சொல்லவில்லை.
இப்போ
அட்வான்ஸ் குடுத்த கையோட.. திருப்பி ஒரு முறை நம்ம பிளாட்டை (கவனிக்கவும் “ நம்ம பிளாட்..??)போய்
பார்க்கலாமா என குழந்தை போல உற்சாகமானாள்அத்தை மூவரும் போனோம்..
வாங்கப்
போகிற பிளாட்டுக்கு பக்கத்து வீட்டிலிருந்த மாமா. ரிடையர் ஆகிவிட்டார் என்று அவர் அணிந்திருந்த
குறுக்கு கோடு போட்ட பச்சை பனியன், நாலு முழ வேஷ்டி எல்லாருக்கும் சொல்லியது. மதன்
ஜோக்ஸில் வரும் பக்கத்துவீட்டு வேஷ்டி uncle போலவே இருந்தார்.
தெரு காம்பவுண்ட்
சுவரில் முழம் கைகளில் முகம் பதித்து தெருவை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்.. தானாக எங்களிடம் வந்து
நின்றுக்கொண்டு.. ரொம்ப நாள் பழகின மாதிரி
“ நல்ல பில்டர் இவர்… மேஸ்திரியா இருந்து..இப்போ
பில்டரா உழைப்பால் ஒசந்திருக்கார்… ஆமா உங்காத்துகாரர் என்ன பண்றார் “? என ஆரம்பித்து
எங்கள் மொத்த குடும்ப வரலாறையும், என்ன ஜாதி என்பது வரை இம்மி விடாமல் கேட்டுக் கொண்டார்.
ஆக
.. புருஷாள் எல்லாரும் துபாய்ல இருக்காளா? என அவர் கேட்டது அச்சானியமாக பட்டது. ஆனால் அம்மா மட்டும் சிலாகித்துக் கொண்டே வந்தாள் “மைலாப்பூர் காரங்க
தான் மனுஷங்க.. எப்டி அவங்களே வந்து கல்மிஷமில்லாம பேசராங்க பாரு மொதல் நாளே” என்றாள்.
மாலையில், பில்டெர் போன் செய்து , அந்த பேங்கிலிருந்து
இன்ன பெயர் கொண்ட ஒருவர் வருவார் அவர் கேட்கும் பேப்பர்களை தர சொன்னார். அதே போல்அந்த
பேங்க் காரன் வந்து … மாமாவின் சம்பளம் இத்யாதி இத்யாதி பார்துவிட்டு, ஒரு நகல் எடுத்துக்
கொண்டு, சில பல விண்ணப்பங்களில் அத்தையின் கையெழுத்தினை வாங்கிக் கொண்டு’
” மேடம்
.. இந்த பேப்பர்ஸ் வச்சி நான் ஐம்பது லட்சம் வரைக்கும் லோன் கிடைக்க டிரை பன்றேன்.. அப்படி இல்லன்னா நாப்பத்தியஞ்சி லட்சமாவது கண்டிப்பா கிடைக்கும்…
அதுக்கு ப்ரொசசிங் ஃபீஸ் ஐயாயிரம்.. செக்கா
குடுங்க போதும்”என்றான்.
அத்தை
செக் எடுக்க எழுந்தாள், அவளை கையால் தடுத்து..” சேங்க்ஷன் பண்ற பனத்துல இந்த ஐயாயிரத்தை
மைனஸ் பன்னிட்டு மீதி குடுங்களேன்” என்றேன் நான்.
நாங்க அந்த
மாதிரி பண்றதில்ல என்றான். அத்தை ஐந்தாயிரத்துக்கு
செக் குடுத்தாள்.. நாலு நாள் வரை அவனிடமிருந்து
எந்த தகவலும் இல்லை. பில்டர் போன் மேல் போன்
போட்டு .. ஒரே டார்சர்..
“ ஒரு
எட்டு அந்த பேங்க் பிரான்ச் போய் பாக்கலாமா ராதே? என்றாள் அத்தை.. அவள் குரல் தேய்ந்து..
சோர்வாக இருந்தது. கண்டிப்பா போகலாம் அத்தை
என அவளை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அண்ணா சாலையின் சின்ன சந்தில் அந்த விலாசத்தை கண்டு
பிடித்தோம்..
பேங்க்
என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.. ஆனால் அந்த பையன் அங்கே இருந்தான்.. எங்களை பார்த்ததும்
தலை குனிந்துகொண்டு வேலை பார்ப்பதை போல் நடித்தான்.
அத்தை
“என்னடி இது? என்றாள்..
நான்
அந்த பையனின் அருகில் சென்று எங்களோட லோன் என்னாச்சு? என்றேன். அவன் நிமிர்ந்து கூட
பார்க்காமல் “ உங்களோட அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடுச்சு “ என்றான். நாங்கள் இருவரும் கால்களில் மெல்லிய நடுக்கத்தை
உணர்ந்தோம். இடம் தேடி போய் நாற்காலிகளில்
அமர்ந்தோம். அத்தை அழ ஆரம்பித்தாள்.. அதை அந்த பையன் அங்கிருந்து பார்த்து விட்டு தலையை
குனிந்துக் கொண்டான். நான் சுதாரித்து எழுந்து
போய்
“என்ன
காரணத்துக்காக ரிஜெக்ட் ஆச்சு? என்றேன்,
“ தெரியலைங்க
மேனஜரை தான் கேக்கனும்” என்றான்,
“மேனேஜரை
நான் பார்க்கனும் “ என்றேன்
“அவர்
வெளிய போயிருக்கிறார்” என்றான்
நாங்க வெயிட் பன்றோம் என சொல்லிவிட்டு அத்தையின்
பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன்.
மிகவும்
பலவீனமாகி இருந்தாள் அத்தை . நான் தப்பு பன்னிட்டேண்டி
ராதே என சொல்லும்போதே தேம்பி தேம்பி அழஆரம்பித்தாள். யாரும் பார்க்காத வண்ணம் முகத்தை
முந்தானையால் மறைத்துக் கொண்டாள்.
“அத்தை
வா.. அத்தை ஏதாவது சில்லுன்னு குடி.. நீ அழுதா எனக்கும் அழுகை வருது “என வெளியே கூட்டி
சென்று பன்னீர் சோடா வாங்கி பெட்டி கடையின் ஓரமாக நின்று குடித்தோம்.அப்பா, மாமா, என்
கணவரை எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று நினைத்ததும்
என் அடி வயிறு பயத்தில் சில்லிட்டது.
பன்னீர்
சோடாவை குடித்து முடித்ததும் “வா போகலாம்”
என்றாள் அத்தை.
“இரு..மேனேஜரை
பார்த்து என்ன காரணம்னு கேட்டு, சரி பண்ண முடிஞ்சா
சரி பண்ணலாம் அத்தை” என சொல்லிவிட்டு மீண்டும் பேங்க் உள்ளேபோனோம். அது பேங்க் இல்லை என்பது நிச்சயமாக தெரிந்தது… Franchisee , கலெக்க்ஷன் ஏஜென்ட்டுகள் கூடும் அலுவலகம்
என புரிந்தது. நாங்கள் உள்ளே போனதும் ஏற்கெனவே
நாங்கள்முதன் முதலில் போகும்போதே நின்றிருந்த ஒருவன் வந்து
“ சொல்லுங்க
நாந்தான் மேனேஜர் என்றான்..
“ நீங்க நான் வரும்போதே இருந்தீங்க.. வெளிய போயிருக்குரதா
சொன்னாரே?”என கேட்டேன்.
“என்ன
விஷயம்.. எதுக்கு வந்தீங்க என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. அந்த பையன் வந்து
அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.. உடனே மேனெஜர்
என சொல்லிக் கொண்டவன் “
“ ஓ..
பாம்பேல ரிஜக்ட் ஆன கேசா? மேடம் உங்க அப்ளிகேஷன்
பாம்பே ல ரிஜெக்ட் ஆயிடுச்சு.. நாங்க ஒண்ணும்
செய்ய முடியாது” என கூறிவிட்டு வேகமாக
அவனது அறைக்குள் சென்று விட்டான்.
அவரை
கூப்பிடுங்களேன் என அங்கிருந்தவரிடம் சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து வந்தவன்
“…
வேலையை கெடுக்காதீங்கம்மா. எதுவானாலும் பாம்பேல போய் கேட்டுக்கோங்க என எரிந்து விழுந்தான்.”
“சரி
என்னோட அப்ளிகேஷன், ஃபுல் டாக்குமென்ட் செட்.. கிட்ட தட்ட நூறு பக்கம்.. ப்ளான் ப்ளூ ப்ரின்ட்,, நாங்க கட்டின
ஐந்தாயிரமும் குடுங்க “என்றேன்
“அது
எதுவும் திருப்பி வராது மேடம் பாம்பேல இருந்து……உங்க அப்ளிகேஷனை ப்ராசஸ் பண்ணும்போது
ரிஜெக்ட் ஆனதால அந்த அஞ்சாயிரமும் வராது “
என சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.
ஓரமாய்
நின்று பேசிக் கொண்டிருந்த சில கலெக்ஷன் பையன்கள் எங்களை பாவமாக பார்த்தார்கள்.
இந்த
பேங்க் நாசமா போக.. விளங்காம போக என மனதிற்குள் சாபமிட்டுக் கொண்டேவெளியில் வந்தேன். அத்தை மனதொடிந்து போனாள். ஆட்டோவிலேயே அழுதுக் கொண்டே
வந்தாள். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னதும்அம்மா
பயந்து போனாள்.
மாலை பில்டரிடம் நேரில் சென்று அந்த பேங்கை பற்றி சொன்னதும்,
சிறிதும் அதிர்சி அடையாமல்
“ உங்க
ஆபீஸ் பேப்பர்ல தான் ஏதாவது தப்பு இருக்கும்… சரி எப்போ மீதி நாற்பத்தி ரெண்டு லட்சம்
கட்ட போறீங்க ? என்றார்.
திடுக்கிட்டுவிட்டு. “மீதி நாற்ப்பது லட்சத்து ஐம்பதாயிரம்
தானே? என்றாள் அத்தை ஈனஸ்வரத்தில்.
“த்ரீ
பேஸ், EB டெபாசிட் எல்லாம் சேர்த்து நாப்பத்தி ரெண்டு ஆவுதுங்க.. இன்னும் லேட் பண்ணீங்கன்னா
இன்னும் அதிகம் ஆகும்” என்றார் புரோக்கர். இது இல்லாமல் ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் தனி என்றார்
பில்டர்.
“ கொஞ்சம்
டைம் குடுங்க.. வேற பேங்க்ல ட்ரை பண்ணி உங்களுக்கு
குடுத்திடரோம் “ என எனக்கு on the spot தோண்றிய
விடையை சொன்னேன். அத்தை பெருமூச்சு விட்டாள். என்னுடைய திடீர் யோசனையை நினைத்து நானே
பெருமிதம் கொண்டேன்.
அத்யாயம்-5
துபாயில்
இருந்து சுற்றுலா முடிந்து..அப்பாவும், என் கணவரும் திரும்பி வருவதாக போனில் சொன்னார்கள். ஆனால் வந்ததோ… மூன்று பேர்… ஆம்….. அத்தையின் கணவரும் வந்து இறங்கினார், தூக்கி வாரி போட்டது எங்கள் மூவருக்கும். அத்தைக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வந்ததாக மாமா
சொன்னார். “ அதை விடபெரிய சர்ப்ரைஸ் இங்கே அத்தை செய்து வைத்திருக்கிறாளே” என்று தோன்றியது
எனக்கு.
வந்து இறங்கியதிலிருந்து அவர்கள் மூவரும் கொஞ்சம் சோகமாக இருந்த மாதிரி இருந்தது
.
“என்ன
விஷயம் ஏன் சோகமாக இருக்கீங்க? என்றேன் என் கணவரிடம்.
“உங்க
மாமா வேலையை Resign பண்ணிட்டு வந்துட்டார்…
அந்த ஊர் சூடு எங்க யாருக்குமே ஒத்துக்கலை.. so.. resigned.”. என்றார். அதளபாதாளத்துக்கு போய் கொண்டிருந்தேன் நான்.
நீ
ஏன் dull ஆ இருக்குற ? என என்னை பார்த்துக் கேட்டார். பதிலேதும் சொல்லவில்லை நான்.
மாமா
வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்ததற்கு அத்தை மிகவும்வருந்தினாள்…நடந்த விஷயத்தை
எப்படி சொல்ல போகிறோம் என்ற பயம் வேறு.அவள் முகமே இருளோவென இருந்தது.
அப்பா அவரது கடை குட்டி தங்கயை .. அதான் என் புவனா
அத்தயை கவனித்து விட்டு “விடும்மா .. இது இல்லைன்னா
வேற வேலை.. கல கலன்னு இருங்க” என்றார்.
நான்
எண் கணவரிடம் விஷயத்தை சொல்லி , அவர் என் அப்பாவிடம் காலையில் விஷயத்தை சொல்லும் போதே…
மாமா டிபன் சாப்பிட வந்துவிட்டார்… அப்பா என் அம்மாவை பக்குவமாக எடுத்து சொல்ல சொன்னார்…
அம்மா சொல்ல சொல்ல..மாமாவின் கண்கள் ரத்த நிறம் ஆகின.. எதையும் சாப்பிடவில்லை
சட்டையை
மாட்டிக் கொண்டு வெளியே போனவர் …சிறிது நேரத்தில் திரும்பி வந்து..
“ நான்வேலூர் போறேன்” என்று கிளம்பினார்.
இருங்க .. அவசரப் படவேனாம்.. பொம்பளைங்க ஏதோ விளையாட்டுக்கு
செஞ்சிடுச்சுங்க.. உக்கார்ந்து யோசிப்போம் “ என்றார் அப்பா
மாமாவின்
கோபம் அவர் கட்டிலில் கையை அழுத்தி உட்கார்ந்ததிலேயே
தெரிந்தது.
“ஒன்னும்
ப்ரச்சனை இல்லை…பில்டெர் கிட்ட போய் இந்த பிளாட்டை எங்களால வாங்க முடியல .. பேங்க் லோனை தான் நம்பி இருந்தோம், உங்களுக்கே தெரியும்
லோன் சாங்க்ஷன் ஆகலன்னு.. so அக்ரிமென்டை கேன்சல் பண்ணிட்டு பணத்தை திருப்பி குடுங்கன்னு
கேக்க வேண்டியதுதான்.. எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடும்” – என்றார் அப்பா..
நாம ஒன்னு நினைச்சா … வேற ஒன்னு நினைக்கறது தானே தெய்வ லக்ஷணம்
..
அதுதானே உலக வழக்கமும் கூட..
மாலை
ஆறு பேரும் பில்டரை பார்க்கப் போனோம்…
“இப்போ
போய் இப்படி சொல்றீங்க… முடியவே முடியாதுங்க.. எப்படியாவது பணத்த கட்டி வீட்டை வாங்க
பாருங்க.. ஒரு பார்ட்டி அட்வான்ஸ் கொடுத்துட்டு....வீட்டை வாங்காம போயிட்டா.. .வீட்ல
என்னமோ ஏதோன்னு.. வீடு நின்னுடுங்க… அக்ரிமென்ட் போட்டு கேன்சல் பன்றேன்னு சொல்றது
நீங்கதான் மொத பார்ட்டி.. சரியான ரப்ச்சரா இருக்கு… இன்னாப்பா இது? என புரோக்கரை பார்த்து
அலுத்துக் கொண்டான்.
மாமா
வேலையை ராஜினாமா செய்ததை எடுத்து சொல்லி, அத்தையின் அவசரத்தால் இதெல்லாம் நடந்தது ..
எனவே சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றெல்லாம் கூறி, ஆறு பேரும் மாற்றி மாற்றி கெஞ்சியபின், எல்லாவற்றையும்
அலட்சியமாக கேட்டுவிட்டு.. பேப்பர் வெயிட்டை உருட்டியபடி
“வேணும்னா
முப்பது பர்சென்ட் பிடிச்சிகிட்டு ..மீதிய
…வேற பார்ட்டி, இந்த பிளாட்டை ரிஜிஸ்டர் பண்னப்புறம் தருவேன்..அதுவும் நாலு தவணையா- என்றான் பில்டர்.
நாலரை
லட்சத்தில் முப்பது பர்சென்ட்ன்னா … ஒரு லட்சத்து முப்பத்தி அஞ்சாயிரம், லாயருக்கும்
பேங்க்கிற்கும் தலா ஆஞ்சாயிரம்.. ஆக மொத்தம் ஒரு லட்சத்து நாற்பத்தி அஞ்சாயிரம் … என்னடீ இது..
இப்படி மனசாட்சியே இல்லாம.. ???? என்றாள் அத்தை மெதுவாக என்னிடம்..,
அவரு
துபாய் வெய்யில்ல கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு
டீ, இப்படியா கரியா போகனும்?? என சொல்லிவிட்டு, அயலார் எதிரில் அழக்கூடாது என்பதால்
பொங்கி வரும் கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கி உள்ளேயே
விழுங்கிக் கொண்டிருந்தாள்.
அப்பா
எழுந்துக் கொண்டார்.. நாங்க யோசிச்சி சொல்றோம்
– என வெளியே வந்தார்.
அப்பாவின்பின்னாடி
நடந்து வந்த அம்மா, அடுத்த தெரு தாண்டியதும்
, எங்களைப் பார்த்து“ இந்த பில்டர் பெரிய கிராதகனா இருப்பான் போலிருக்கே!!!!!” – என்றாள்
..
“ அப்படி
என்ன பெரிய ராஜஸ்தான் அரச மாளிகை அது… நாமளும் போய் பாப்போம் “ என மூன்று ஆண்களும்
அந்த ஃப்ளாட்டுக்கு அழைத்து போக கேட்டனர் எங்களிடம்.
ஃப்ளாட்டையும்,
அதில் பதித்திருந்த பப்பளப்பள டைல்ஸ்களையும்,
நல்ல விசாலமான, அமைதியான, அகலமான தெருவையும்
பார்த்ததும் மூவரும் கொஞ்சம் கிறங்கித்தான்
போயினர்,
அங்கே
காவலுக்கிருந்த வாட்ஸ்மேனும், அவன் மனைவியும் எங்களை பச்சாதாபமாக, கழிவிரக்கத்துடன்
பார்த்தனர். வாட்ச்மேன் மனைவி “ இந்த பூந்தொட்டி இங்க வைக்கலாமான்னு சொல்லுங்கம்மா?
என்று என்னை தனியே கூப்பிட்டாள். நான் , அத்தை
, அம்மா மூன்று பேரும் அங்கே போனோம். எங்களை பார்த்து தாழ்ந்த குரலில் அவள் சொன்னாள்
“ யம்மா..
தாயீ… நான் சொன்னேன்னு வெளிய சொல்லிடாத… நீங்க
வீட்ட வாங்க போறதில்லை.. அட்வான்ஸ திருப்பி கேட்டிங்கன்னு கேள்விபட்டேன்…. எப்டியாவது இந்த வீட்டை வாங்கிடுங்கம்மா…
அவன் ராட்சஸன்…. கண்ணுல ரத்தம் வர வைப்பான்…. அவனுக்கு பணம் வாங்கி கல்லால போடத்தான்
தெரியும்.. திருப்பி குடுக்க வராது.. யானை வாயில இருந்து கரும்பை உருவ முடியுமா உங்களால..
ஒரு மேஸ்திரி ஒரு நாள்முழுசும் கட்டினா ஐனூறு செங்கல் தான் அடுக்கி கட்ட முடியும்..
இவன் அறனூறு கல்லு கட்டினாதான் அன்னிக்கு கூலின்னுவான்… மா பாதகன்.. நூறு தடவை அலயவுட்டுதான்
கூலியே குடுப்பான்.. இன்னோரு பார்ட்டி வாங்க
வந்து…. பேரம் முடிஞ்சி… அவங்க பணத்தை பொரட்டி … பத்ரம் பதிஞ்சப்புரம் உங்களுக்கு குடுக்க
வேண்டியதுல பாதி புடிச்சிகிட்டு, மீதியை இப்ப வா … அப்ப வான்னு சொல்லி கொஞ்ச கொஞ்சமா
குடுப்பான் மா…முள்ளுல சேலைய போட்டுட்டீங்க.. எப்டியாவது இந்த வீட்டை வாங்கிடுங்க”
என்றாள் அவள். அம்மா, அத்தை , நான் மூன்று
பேருமே.. பேய் அறைந்தாற் போன்று.. சோர்ந்து போனோம்.
இரவு
உணவின் போது அப்பா, மாமா, என் கணவர் ஆகியோரிடம் வாட்ச்மேன் மனைவி சொன்னதை அப்படியே
சொன்னோம்… மூன்று பேருமே தலை குனிந்துக் கொண்டு யோசித்துக் கொண்டே இருந்தார்கள்… மிக
நீண்ட அமைதி.. இரவு ஒரு மணிக்கு மேல் அப்பா சொன்னார் “
நாம அந்த ஃப்ளாட்டை வாங்கலாம்.. மாப்பிள்ளை உங்களுக்கு
இப்போ வேலை இல்லாததால… என் பேர்ல லோன் எடுக்கறேன்.. என் பேர்லயே ரிஜிஸ்டரும் ஆயிடும்,
அப்பறம் நிலமை சீரானதும்.. உங்க பேர்ல மாத்திக்கலாம் வீட்டை என்றார்..”
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை….
அத்யாயம்-6
அத்தை
பேரில் இருந்த அக்ரிமென்டை அப்பாவின் பெயருக்கு
மாற்ற வேண்டும் என கேட்க போனோம் இந்த சாதாரண, சின்ன விஷயத்திற்கு பில்டர். வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்… பதிலுக்கு
அப்பா, மாமா, என் கணவர் என மூவரும் மாறி மாறி நாற்காலியை தள்ளிக்கொண்டு எழுந்து நின்று
போலீசில் பேசிக் கொள்கிறோம், லாயரை வச்சி பாத்துக்கறோம்,
பேச வேண்டிய இடத்தில பேசிக்கறோம் என்று கத்தவே.. ஒரு வழியாக மாற்றித்தர ஒப்புக் கொண்டான்.
மாற்றிய
அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும்போது “ ப்ரகாஸு (புரோக்கர் name) ப்ரகாஸு… இனிமே நீ பார்ட்டியே கொண்டாரா வேண்டாம்…
ரப்ச்சர் புடிச்ச பார்ட்டியாவே தேடி கொண்டாருவியா??? என நாலு கேள்வி புரோக்கரை கேட்டான். நல்ல வேளை எங்களை எதுவும் கேட்கவில்லை என நினைத்துக்
கொண்டேன்.
வீட்டுக்கு
வந்ததும் அப்பா, அம்மாவை கூப்பிட்டு –“அதுங்கதான் சின்னதுங்க, உனக்கு எங்க போச்சு அறிவு?
– என கேட்டார்.
மாமா
அத்தையை பார்த்து அவ்வளவு முந்திரி கொட்டை
தனம் உனக்கு எதுக்கு ?-என கேட்டார்.
எங்கள்
அறைக்குள் சென்றதும் “பொம்பளைங்க வேலையே இப்படிதான்.. பெண் புத்தி பின் புத்தி “ என்றார்
என் கணவர். எதிர் பார்த்ததை விட இது கம்மி
தான் என தோன்றியது எனக்கு.
ஆனால்
அப்பா சொன்னதைப் பொல எல்லாம் சுமூகமாக நடந்துவிடவில்லை…
ஒன்றன்பின்
ஒன்றாக நான்கு வங்கிகளில் அப்பாவின் கடன் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப் பட்டன.
ஒவ்வொரு
முறையும் நூற்றி ஐம்பது ரூபாய் செலவு செய்து, ப்ரதிகளும், புளூ ப்ரின்ட்களும், புராஸஸின்
சார்ஜ் மூவாயிரம், நாலாயிரம் என்று .. ஒரு பதினைந்தாயிரம் செலவு ஆயிற்று.
ஏன் நிராகரிக்க படுகிறது என ஒரு வங்கி கூட சொல்லவில்லை. மிஞ்சி கேட்டால் கௌஹாத்தி, பூனா, டெல்லியில் உள்ள
த;லைமை அலுவலகத்தால் நிராகரிக்கப் பட்டது என கூறினர். அது பொய் என புரிந்தாலும் வாய் மூடி வெளியே வந்தோம்.
ஆண்கள்
சோர்ந்து போயினர், நாங்கள் செய்த தவற்றை உணர்ந்து, எங்களால் ஆண்கள் படும் வேதனையை நினைத்து
மருகி மருகி தனிமையில் அழுது துவண்டு போனோம்.
வீடே நிறமிழந்து, சிரிப்பு இல்லாமல் வெறிச்சோடியது.
இறுதியில்
அப்பாவின் நண்பர் ஒரு சிறந்த வக்கீலிடம் அழைத்து சென்று எல்லா பத்திரங்களையும், பிளான்
ப்ரின்ட்டையும் காண்பித்தார்… அந்த வக்கீல்
அரை மணி நேரம் படித்துவிட்டு
“ இந்த
பிளான் அப்ரூவே ஆகலங்க… நீங்க அட்வான்ஸ் குடுத்த போர்ஷன்ல பெட்ரூம் மட்டும் தான் அப்ப்ரூவ்ட்.
மீதி இடம் கார்பார்க்கிங்க் , டூ வீலர் பார்க்கிங்கை..
உங்களுக்கு கிச்சன், ஹால், பாத்ரூம் என்று பொய் பிளான அம்மோணியா பிரின்ட் எடுத்து குடுத்திருக்கான்..
எந்த பேங்க்லயும் லோன் தரமாட்டாங்க என்றார்.
அடப்பாவீ….. அவன் மேல தப்பை வச்சிகிட்டு… நம்மளை மரியாதை இல்லாம நடத்தினான்..
அவனை நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கலாம்.. வாங்க என புறப்பட்டனர் எங்கள் வீட்டு மூன்று
தெய்வங்கள்.
அவனது
அலுவலகத்திற்கு போனால் பில்டர் இல்லை… அரை மணியில் வருவார் என சொன்னார்கள்.
நாங்கள்
எல்லாரும் அங்கிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்துக் கொண்டோம்..உடல் வலி, மன வலி தான்
காரணம். ஆனால் அப்பா உட்காரவே இல்லை…. கோபமாக
இருந்தால் அவர் உட்கார மாட்டார். தெருவுக்கும் அந்த அலுவலக அறைக்கும் நடந்து கொண்டே
இருந்தார்.
பில்டர்
வந்தான் … என்ன முடிவெடுதிருக்கீங்க ? என்றான்.
நீ
என்ன முடிவெடுக்க போற .. அதை சொல்லு முதல்ல… அப்ரூவல் ஆகாத பிளானை, வாட்ச்மேன் ரூமை
ஒரு பெட்ரூம் ஆக்கி, டூ வீலர் பார்கிங்க்கை ஹாலா மாத்தி எங்க தலைல கட்ட பார்த்திருக்க..
போலீஸுக்கு போகட்டா ??- என்றார் கோபமாக
இது
சிவில்ங்க….. போலீஸ் என்ன பண்ணமுடியும் ? என்றான்.
அப்ப
சரி .. நாங்க CMDA ல போய் பேசிக்கறோம் – என்றார்
அப்பா
“கொஞ்ச
நேரம் யோசித்து விட்டு, பிளான் rectification க்கு அப்ளை செஞ்சிருக்கேன்
பாருங்க “—என இரண்டாயிரம் ரூபாய் கட்டிய ரசீதை காட்டினான்.
அடப்பாவீ… இதை மொதல்லயே சொல்லி இருக்கனுமில்ல நீ… இப்படி பாடா
படுத்தினியே இந்த அப்பாவி பொம்பளைங்களை !! என்றார் அப்பா
சரி..சரி
எங்க பணத்தை முழுசாவட்டி போட்டு தந்தாகனும்.. ஒரே தவணையா தானே நாங்க குடுத்தோம்.. அதே
மாதிரி நீயும் குடுக்கனும்.. எப்போ தருவ ?என்றார் அப்பா
ஓரேயடியாய்
இறங்கி வந்தான் பில்டர்…
எல்லா
பணமும் இன்னோரு சைட் ல முடங்கிருச்சுங்க…நானே நினைச்சாலும் நாலற லச்சம்
பெரட்ட முடியாதுங்க.. ஒன்னு சொல்றேன் … உங்களுக்கும் வாணாம்.. எனக்கும்
வாணாம் .. அஞ்சு லட்சம் குறைச் சிக்கிறேன்.. மீதி முப்பத்தி ஐந்து லட்சம் மட்டும் குடுங்க போதும்…
மேற் கொண்டு ஒத்த பைசா வாணாம்.. – என்றான்.
அத்தையின்
முகம் மலர்ந்ததை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.
ப்ரகாஸு
புரோக்கர் நடுவில் புகுந்து… “ அண்ணே பார்த்து .. கொஞ்சம் குறைச்சி.. சொல்லுங்க… வியாபாரம்
கூடி வரட்டும்” என்றான்.
விடாமல்
பேசி பேசி… மொத்தம் மீதி முப்பது லட்சம் கொடுத்தால்
நாங்கள் எப்படியாவது வாங்குகிறோம் என்று அனைவரும்
விவாதித்து பில்டரை முப்பது லட்சத்திற்கு சம்மதிக்க வைத்தோம். மூன்றாவதாக அக்ரிமென்ட்
போடப்பட்டது. ஏமாறுகிறோமோ…??? இல்லை இல்லை ஏமாறவில்லை என மனதுக்குள் விவாதம் நடந்தது.
எப்படி
அந்த முப்பது லட்சத்தை திரட்ட போகிறோம் என்று
யாருக்கும் திட்டமில்லை, பில்டர் ஏற்றுக் கொள்ள மாட்டன் என்ற தைரியத்தில் பேசினோம்..
இப்படி முடிந்து விட்டதே.. சந்தோஷப் படுவதா,, கவலைப்படுவதா..?, எப்படி பணம் திரட்டப்
போகிறோம் என பல்வேறு சிந்தனைகள்.. தனித்தனியாக சிந்தித்துக் கொண்டிருந்தோம்.,
அத்தை என்னருகில் வந்து.. second hand ஃப்ளாட்டையே
நாற்பத்தி அஞ்சு லட்சம் சொன்னாளே … அந்த சித்திர குளத்தாண்ட…அதுக்கு இது தேவலாம் என்றாள்
ரகசியமாய்.. பில்டர் விலையை இவ்வளவு குறைத்த சந்தோஷம், அவள் வாய் விட்டு சிரிக்கவில்லை
என்றாலும் , அவளது மின்னும் கரு விழிகளிலும், கன்னக் கதுப்புகளிலும் தெரியத்தான் செய்தது.
நடையில் ஒரு துள்ளல் தெரிந்தது.
அத்தியாயம்-7
மாமா
மண்ணடியில் கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு காலை ஏழு மணிக்கு போய் இரவு எட்டு மணிக்கு
வந்தார். அத்தையும் வேலைக்கு போகப் போறேன் என்று கிளம்பினாள்.. “பேசாம உக்காரு” என
உட்கார வைத்துவிட்டோம்.
மரக்காணதில்
இருந்த அவரது பூர்வீக நிலங்களை விற்றார் மாமா.. அத்தையும் …அவளது நகைகள் அவ்வளவையும்
விற்கக் கொடுத்தாள்.. அம்மாதான் “ வழிச்சு துடைக்காத, காது, மூக்கு, கை, கழுத்துக்கு
தங்கம் இருக்கனும்… மீதியை வேனுன்னா வித்துக்கோ என கண்டிப்பாக சொல்லி விட்டாள். பாதி தொகையை கூட எட்டவில்லை.
பாரதி
ராஜாவின் புதுமைப்பெண் படத்தில் வக்கீலாக வரும் நீலு, ரேவதி ஓடி ஓடிவந்து தரும் பணத்தை
எப்படி பல்லை காட்டிக் கொண்டு எண்ணி, எண்ணி டேபில் டிராயரில் திணிப்பாரோ.. அதே போல பில்டரும்
எண்ணி எண்ணி போட்டுக் கொண்டு அடுத்து எப்போ பணம் தருவீங்க என்ற கேள்வியை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தான்..
அப்பா மட்டும் பில்டரிடம் கொடுத்த பணத்துக்கு ரசீது
தவறாமல் வாங்கி பத்திரப் படுத்தினார்.
அப்பா
ஊரில் இருக்கிற நாலு ஏக்கர் விளை நிலத்தை விற்கலாம் என தீர்மானித்தார். அம்மா தீர்கமாய் “வேணவே வேணாம்…. விற்கக் கூடாது..
வேணும்னா அங்கயே ஏதாவது பேங்கில அடமானம் வச்சு.. உங்க தங்கைக்கு குடுங்க… அசலை அவங்க
குடுக்க முடிஞ்சப்ப குடுக்கட்டும்… அதுவரை வட்டிய நாம கட்டுவோம் “என்றாள்.
நன்றியினாலும்,
இழையோடிய சோகத்தில் நெஞ்சம் நெகிழ்ந்ததாலும்-
அத்தை மாமாவின்கண்களில் கண்ணீர். அம்மாதான்
அத்தையை கை பிடித்து இழுத்துச்சென்று , சமயலறை
மோடாவில் உட்காரவைத்து, அவள் கண்களை துடைத்து, ஒரு நல்ல காஃபியை போட்டுக் கொடுத்து
அமைதி ஆக்கினாள்.
பின்பு
சுறு சுறுப்பாக எழுந்து சென்று சூடாக வத்தக் குழம்பு, துவையல், அப்பளாம், சாதம், ரசம் என்று இலகுவான சமையல் செய்து, எங்கள் அனைவரையும் உட்கார வைத்து பறிமாரி .. எங்களின்
பசியாற்றி, ஒரு கதகதப்பு மற்றும் பாதுகாப்பு
உணர்வுடன் அன்றிரவு அனைவரையும் நிம்மதியாக உறங்கச் செய்தாள். சலனமின்றி அனைவருக்கும்
ஆழ்ந்த நித்திரை.
இதுவும்
போதவில்லை… பற்றி எறியும் கொழுந்து தீ, நாம் போடும் ஒரு வைக்கோலை ஒரே சுருட்டில் பஸ்பமாக்கி விடுவதை போல், அந்த ஃப்ளாட் மொத்த சேமிப்பு,
சொத்துக்கள் என அனைத்தையும் விழுங்கிக் கொண்டிருந்தது,
அத்தை
மனதொடிந்து போனாள்… என்னால் தானே இத்தனையும் என்ற குற்ற உணர்வு அவளுக்கு. அகலக்கால்
வைத்துவிட்டேன் என தினமும் புலம்பினாள்..
அத்யாயம் - 8
அவ…
சிரிச்சே அழ வைப்பா. ராதே. ஆயுசு முழுக்க அவளை
சுத்தி சுத்தி வந்தாலும்.. நம்மள சிரிக்க விடமாட்டா. அவளுக்கு திருவிழான்னா.. குதூகலமா பழ ஜடை, பூ ஜடைன்னு போட்டுகிட்டு,
ஊஞ்சலாடுவா..இதுல பாட்டுக் கச்சேரி வேற… அவளுக்கு நம்ம கஷ்ட்டம் புரியுமா? - …அழுது
கொண்டே சொன்னாள் அத்தை… கொஞ்ச நேரம் குழம்பினேன்.
ஓ.. அத்தை கபாலீஸ்வரரின் மனைவி கற்பகவல்லியை திட்டுகிறாள்
என புரிந்தது.
இனிமே
நான் அவளை கும்பிடவே போறாதில்லை… ஒரு எட்டு என் கூட சாந்தோம் சர்ச் வற்றியாடி ராதே
-என கேட்டள். எனக்கும் பரந்து விரிந்த விசாலமான
இடம் தேவைப்பட்டது இந்த மன உளைச்சலை நீக்க.
அங்கே..
இப்போது புதிதாக கண்ணாடி மாளிகையுள் மண்டியிட்டு
உட்கார்ந்த நிலையில், மரத்தால் செய்யப்பட்ட கன்னி மேரி மாதா சிலை நிறுவப் பட்டிருந்தது.
நான் பள்ளி செல்லும் காலத்தில் இவள் இங்கில்லை.
அழகான டிஷ்யூ சேலை அகல
ஃப்ளீட்ஸ் வைத்து, தலையை கிருத்துவ பெண்மனிகள் ப்ரேயர் செய்யும் போது போட்டுக்கொள்ளும்
முக்காடை போல போட்டு, அவள் முகம் மறைக்காமல் மல்லிகை மாலை போட்டு உட்கார்ந்திருந்தாள்
மேரி.
இந்த உடை அலங்காரம் அத்தனையும் செய்வது சர்ச்சில்
மணி அடிப்பவர்.
“அந்த
பீட்டர் தான் அலங்காரம் செய்யறான்… ஒரு நாள்ள எத்தன தபா புடவ காணிக்கை வந்தாலும், மூனு
மாடி மணி கூண்டுல இருந்து எறங்கி வந்து.. அம்சமா புடவை கட்டி, முக்காடு போர்த்தி..
ஒரு நிமிஷம் நின்னு அழகு பார்த்துட்டு தான் திருப்பி மேல ஏறுவான். அடுத்த அரை மனி நேரத்துல இன்னோரு புடவை வரும்- சலிக்காம
திரும்பி இறங்கி வருவான்” என்று சொன்னாள் யாரோ ஒரு பெண்மனி.
நிறைய புடவைகள், காணிக்கைகள் குமித்து வைக்கப் பட்டிருந்தது. மேரியை பார்த்தால் மரச்சிலை என
தெரியாது, ஒரு இளம் வயது தாய் மண்டியிட்டு இயேசுவை வேண்டுவது
போல் தான் இருக்கும். வந்தவர்கள் அனைவரும், அவள் பாதங்களை தொட்டும், கைகளை பிடித்து கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டும் இருந்தனர். அனைவரும்
போகட்டும் நாம நிம்மதியாக வேண்டலாம் என்றாள்
அத்தை.
எனக்கு கண்ணீர் வரும்
என்றோ, அத்தைஇப்படி தேம்பித் தேம்பி அழுவாள்
என்றோ நான் எதிர்பார்க்கவே இல்லை. மேரியின் மடியில் அத்தை தலையை புதைத்துக் கொண்டு
விசும்பிக் கொண்டிருந்தாள்… மனதுக்குள் அவள்கேவிக் கேவி தன் நிலையை அந்த சின்ன தாயிடம்
– கன்னி மேரியிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்..
ஏன் அழுகிறேன் என புரியாமலேயே நானும்
அழுதுக் கொண்டிருந்தேன்.
அத்தை மெல்ல தலை நிமிர்ந்தாள்…
புடவை வாங்கி சாத்தறேன்டி தாயே.. என்னை கை தூக்கி விடுன்னு சொல்லி அழுதேன்… சரி அழாதே…
வீடு ரெஜிஸ்டெர் பண்ணி தரேன்னு என் காதுல வந்து சொன்னா ராதே..!! என்றாள். நான் மௌனமாய் நின்றேன்.
அத்யாயம் -9
அன்று இரவு, என் கணவரிடம்
தயங்கி தயங்கி “ நம்ம நகைகளை அடகு வச்சி அத்தைக்கு தரலாமா? அவ ரொம்ப அழறா.. மனசொடிஞ்சி
போய்ட்டா.. சின்ன வயசுல என்னை தூக்கி வளர்த்திருக்கா..ப்ளீஸ்.. என கேட்கும் முன்பே,
ராதா நான் ஒரு ஐடியா
சொல்றேன்.. உனக்கு சரின்னு பட்டா அதை செய்யலாம் என்றார்
“என்னது… சொல்லுங்க”-
என்றேன்
நான் போட்டு வசிருக்குற ஃபிக்ஸட் டெபாசிட் ஒரு ரெண்டு லட்சம் இருக்கு, அதை முறிச்சிட்டு, உன்னோட
நகை யை அடகு வச்சா இன்னும் ஒர் ரெண்டு லட்சம் வரும்.. அதை மாமா கிட்ட குடுத்தா ரெஜிஸ்ட்ரேஷனுக்கு
சரியா இருக்கும். எல்லாரும் நிம்மதியா இருக்கலாம்.. உன் அத்தைக்கு எப்போ முடியுமோ அப்போ குடுக்கட்டும்…
நமக்குரெண்டும் பையனுங்க தான்.. so கல்யாணம் அது இதுன்னு இப்போ எந்த அவசரமுமில்ல… என்றார்.
தெய்வமே…. மேரி மாதா
நீ என் வீட்டுக்காரரா இப்போ என் முன்னாடி நிக்கற..” என கூறினேன். மாலையில் சர்ச்சில் நடந்ததெல்லாம் சொன்னேன்.
அப்ப்போ நாம காண்டிப்பா
இந்த உதவியை செய்யறோம்.. என்றார்.
இங்கிவரை நான் பெறவே
என்னத் தவம் செய்து விட்டேன்…. கண்ணா.
அத்யாயம்-10
வேண்டாம்
மாப்பிள்ளை…. நான் PF லோன் அப்ளை பண்லான்னு இருக்கேன். கை கடனா வாங்கலாமான்னும் யோசிசிட்டு
இருக்கேன்… ஒன்னும் அவசரமில்லை… வீட்ல பெரியவங்களுக்கு தெரிஞ்சா.. பின்னாடி வருத்தப்
படுவாங்க, கோபப் படுவாங்க” –என்றார்
பொண்ணை
கட்டி குடுத்த இடத்துல .. கை நீட்டக் கூடாது மாப்பிள்ள, அவரு ஏதாவது ஏற்பாடு செஞ்சிருவாரு
– என்றாள் அம்மா.
என்னோட அப்பாதான் இந்த ஐடியாவே சொன்னாரு வேணும்னா அப்பாக்கு
போன் போட்டு தறேன்.. கேளுங்க அத்தை”- என்றார் என் கணவர்
அட..
என்ன மாப்ளை நீங்க… ராதா என்னதிது? என்றார்
அப்பா
அப்பா
அத்தை ரொம்ப வருத்தப் படறா.. என்னோட பேராசையால தானா.. நாம எல்லாரும் கஷ்டப் படறோம்.. எனக்கு எதுக்கு இந்த வீடு… வேலூருக்கே போயிடறேன்ரா…
அவ
இளைச்சி போய்ட்டேஇருக்கா,, இவ்ளோ தூரம் வந்துட்டோம்..
என் அத்தைக்கு .. நாங்க மனசார தற்றோம் பா.. வேணாம்னு சொல்லாதீங்க- என்றேன்.
சொந்த
வீடு அமைவதைவிட, நல்ல உத்யோகம் அமைவதைவிட…ஒருவருக்கு நல்ல சொந்தங்கள் அமைவது தான்இறைவனின் கொடுப்பினை.. நாங்கள் அனைவருமே ஒரு கொடுப்பினை தான் என் அத்தைக்கு
என நினைத்துக் கொண்டேன்.
அப்பாவும்
அரை மனதாக வாங்கிக் கொண்டார்.. தனியாக என்னிடம் “ ஏதாவது இதனால ப்ரச்சனைன்னா.. என்
கிட்ட உடனே சொல்லும்மா.. நான் திருப்பி தந்துடுவேன்..
ஜாக்ரதை” – என சொன்னார்.
கௌரீ
கல்யாண வைபோகமே… சீக்ரமேவ க்ரஹ ப்ரவேசம் ப்ராப்த்தி ரஸ்தூ….
ஆம்
.. இமயமலையை ஏறி, தாண்டி, அந்தப் பக்கம் போன மாதிரி, இருந்தது…ரிஜிஸ்ட்ரேஷன் சுபமாக
முடிந்தது. அத்தையின் பேரில் பத்திரம் பதியப்பட்டது.
நிம்மதியாக
ஸ்வாசித்து, குளித்து, டிஃபன் சாப்பிட்டு… நிம்மதியாக தூங்கினோம். , நெருக்கடி அற்ற, சாதாரண day to day life எவ்வளவு ரம்யமானது என ஒவ்வொரு நாளின்
துவக்கத்திலும் தோன்றியது. ஆனால் அந்த சாதாரண
நாளின் மகிமை அன்றைக்கு புரியாது. அல்லல் படும்போது
புரியும்.
அத்யாயம் -11
கிரஹப்ப்ரவேசம்
--சம்பந்திகள், அவர்கள் பிள்ளைகள் என மொத்தம் ஒரு இருபத்தி ஐந்து பேர் மட்டும் கலந்துக்
கொண்டு, அய்யர் ஹோமம் வளர்த்து.. என் அத்தையின் மாமியார் இல்லாததால் என் மாமியார் கையால்
பால் காய்ச்சி … பெரும் பொங்கலாய்… கிழக்கு பார்த்து பொங்கி வழிந்தது.. அப்பாடா என்று
இருந்தது.
ஆனால்..
அத்தையும் மாமாவும் மன நிறைவாய், சந்தோஷமாய் அங்கே வாழவே இல்லை.. அந்த வீடு அப்படி… அங்கே இருந்த மனிதர்கள் அப்படி.
வாழும்
போதும், வாழ்க்கைக்கு பின்பும் என
LIC விளம்பரத்தை நினைவு படுத்தியது,
இந்த ஃப்ளாட்டை வாங்கும்போதும், வாங்கிய பின்னும் என் அத்தை பட்ட பாடு, அவள் சிந்திய
கண்ணீர்.
பால்
காய்ச்சிய , கொஞ்ச நேரத்தில் புரோக்கர் வந்து வாசலில் நின்றான்- பிளாட் விலையில் ரெண்டு பர்சென்ட் , இவ்வளவு இழுத்தடித்து வாங்கியதால்,
பில்டர் கமிஷன் தமாட்டேன் எங்கிறான்.. அதனால் “ நீங்கள் ரவுண்டாக பத்தாயிரம் தர வேணும்
என்றான். வேண்டும் என்றே சத்தமாகப் பேசி, வருவோர் போவோரை திரும்பி பார்க்க வைத்தான்
பால்
காய்சிய அரை மணி நேரத்தில் பக்கத்து வீட்டு மாமா, நாங்கள் கூப்பிடாமலேயே, ஹாலில் வந்து அணைவரையும் நலம் விசாரித்தார்… ஆனால்.. காய்சிய
பாலை டம்பளரில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தால் வாங்க மறுத்துவிட்டு, அச்சானியமாய்….
“ என்னதான் சிமென்ட்டு கட்டடம்ன்னாலும்… இப்பெல்லாம் ஃப்ளாட் எல்லாம் ஒரு நாற்பது வருடம்
கூட தாங்க மாட்டேங்குது, இடிஞ்சி விழுந்துடுது “ என்றான்.
தூக்கிவாரி
போட்டது எல்லோருக்கும், அவன் போனபிறகு-“காலம்
காலமாய், தலைமுறை தலைமுறையாய் வாழப் போறோம்னு கிரஹப் ப்ரவேசம் செஞ்சாக்கா.. இப்படி
அச்சான்னியமா ..இடிந்து விழும்றானே, துக்கிரிப் பய… கரி நாக்கா இருந்துடக் கூடாது”-
என்றாள் அம்மா,
இந்த
கோணத்தில் நாம் யோசிக்கவே இல்லயே.. நாப்பது வருஷந்தான் தாங்குமா?
எங்க யோசிக்க விட்டான் இந்த பில்டர்?
நாப்பது வருஷத்துக்கு அப்புறம் என்ன செய்வது? என யோசித்தோம்
ரெண்டு
மாடி படியேறி போய் ஒவ்வொரு ஃப்ளாட்டாக காலிங்க் பெல் அழுத்தி , மஞ்சள் குங்குமம் ,
அரை முழம் மல்லிகைப் பூ கொடுத்து நாங்கள்அழைத்த சக ஃப்ளாட்காரர்கள்.. ஹோமத்திலும் கலந்து
கொள்ளவில்லை.. அப்படி கலந்து கொள்ளாதத்திற்க்கு ஒரு justification
உம் சொல்லவில்லை. நாங்கள் தந்த மல்லிகை
சரம் ஜன்னலில் தொங்கியது, “ Turmeric, kum kum…jasmin flower.. comedy yaar” என எங்கள் காதுபட பேச்சு வேறு.
கலந்துகொண்டால் தானேஅவர்களுக்காக எங்கள் தகுதியில் நாங்கள்
வாங்கிவைத்திருந்த A2B ஸ்வீட்ஸையும்
எடுத்திருப்பார்கள்.. ஜாதி வித்தியாசம் பார்ப்பது நன்றாகத் தெரிந்தது.
அந்த
பக்கத்துவீட்டுக் கிழவன்.. எங்கள் கேட் அருகே நின்றுக் கொண்டு, இவ்ளோ அகலமா யாருக்கும்
வாசல் முற்றம் அமையல பாருங்கோ…நீங்க சாமர்தியமா கிரவுன்ட் ஃப்ளோர்ல தெருவ பாத்தாப்ல
வாங்கிட்டேள்.. இங்கயே ஒரு சின்ன மாருதி நிறுத்திக்கலாம்… கார் பார்க்கிங்க் வாங்கவே
வேண்டாம்…என்றான்.. . அப்பாவும் அவனை அனுப்பி வைப்பதற்காக ஆமாம் ஆமாம் என்றார்.
இதன்
விளைவு மறு நாள் தான் தெரிந்தது.. எங்கள் தலைக்கு நேர் மாடி வீட்டு மாமி, பேங்கில்
வேலை பார்ப்பவள், எப்போது கடந்து போனாலும் எங்கள் போர்ஷனை கேவலமாக பார்த்து செல்பவள்..
இன்று காலை எட்டு மணிக்கே காலிங் பெல்லை அழுத்தினாள்.
“க்ரஹப்
ப்ரவேசத்திற்கு வர முடியல. மாமி. மஞ்சள் குங்குமம் எடுத்துக்கலாம்ன்னு வந்தேன் “ – என்பாள் என் நினைத்து பெண்கள்அனைவரும் பரபரப்பாகி
, ஆண்கள் கையில் கிடைத்த ஷர்ட்டை மாட்டிக்
கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் நின்றனர்.
வந்தவள்..
எங்கள் வாசல் படியினை ஒட்டி, அவள் இடது காலால்
தரையில் தேய்த்து, கோலம் கலைகிறதே என்று கூட கவலைப் படாமல் , ஒரு மாய லக்ஷ்மனன்
கோடு வரைந்து விட்டு… “ இங்க பாருங்க ..இந்த வாசப் படியோடு உங்க போர்ஷன் முடியுது… இந்த path way பொது வழி.. இங்க சைக்கிள் கூட நிறுத்தக்
கூடாது என்றாள்.
நான்
சண்டை போட கிளம்பினேன்… அவள் வீட்டு வாசலில் இதுபோல கோலம் கலையும் படி இடது காலால்
தரையில் தேய்த்து.. இந்த வாசப்படியோட உன்னோட லிமிட் முடிஞ்சுது.. எங்க காலிங்க் பெல்லை
தொட்ர வேலை வெச்சுக்காத” – என்றெல்லாம் அவளிடம் சண்டை போடலாம் என்றிருந்தேன். அம்மாதான் “
ராதே.. உள்ள வா” என அழைத்துச் சென்றாள்.
ஓ…
இப்போதான் புரியுது.. பக்கத்து வீட்டுக் கிழவன் .. நேத்து இங்க கார் நிறுத்தலாம்ன்னு
பேசிட்டு இருந்தான் இல்ல.. அவன் நேத்து சாயங்காலம் மாடி ஏறி போனான்.. அவன் தான் ஏதாச்சும்
சொல்லி இருப்பான்..என்றார் அப்பா.
“கூப்பிடாமயே
உள்ள தடுக்குன்னு வந்துடரான்.. அவன் பார்வையும் சரி இல்ல… அவனை உள்ள விடாத புவனா” என்றார்
மாமா.
அவன்
அப்படி பட்டவன் தான் என்று அடுத்த வாரம் புரிந்தது,, காய்கறிகாரி அவன் வீட்டுக்குள்
சில கத்திரி காய்களுடன் நுழைந்தாள், அவளுடைய
தள்ளு வண்டி தெருவில் அனாதையாக அரை மணி நேரம் நின்றது, அந்த வழியாக மாடு வந்தது., அது கடக் மொடக் என்று
வாழைக்காயை கடித்து சாப்பிட்டது. அரை மணிக்கு
பிறகு வந்தவள் மீதியை நிதானமாக கூவி விற்றாள்..
ஒரு
வாரம் அந்த ஃப்ளாட்டில் தங்கி இருந்ததிற்கே அப்பா விரக்தியின் எல்லைக்கே சென்றார்
” அதுக்குதான் அந்தக் கால ராஜாக்கள் அவங்கவங்களை தனித்தனியா
வச்சாங்க.. ஊர்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தெருன்னு வகுத்து வச்சாங்க.. நாமளும் நிம்மதியா
இருந்தோம்.. இப்போ எல்லாம் கலந்து போச்சு..இவங்களோட
வந்து சேர்ந்தா இப்பிடி கஷ்டப்படுத்துவாங்களா?? முதலியார்ன்னாக்கா இளக்காரமா போச்சா…… என்றார்
விடிகால
நாலு மணிக்கு எழுந்து, தட தட தடன்னு கேரட் துருவுரதும், கேஸ் சிலிண்டர் உருட்டுரதும்,
தொம் தொம்ன்னு அந்த பையன் ஸ்கிப்பிங்க் குதிக்கறதும்….கீழ மனுஷங்க தூங்கறாங்களேன்னு
ஒரு எண்ணம் இல்லை..- அப்பா வெறுத்துப் போனார் என்பது இந்த பேச்சில் தெரிந்தது..
அத்தை
மாமா அங்கிருந்த ஒரு வருடத்தில் படாத பாடு பட்டு விட்டார்கள். ஒவ்வொன்றிலும் ப்ரச்சனை…
பொதுவான இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் கண்டிப்பாக இவர்கள் ஒரு வண்டி தான் நிறுத்த
வேண்டும், மற்றவர்கள் ரெண்டு , மூன்று வண்டிகள் கூட அங்கே நிறுத்திக் கொள்வார்கள்.
தண்ணீர்
மெல்லிசாக வரும்படி வால்வை திருப்பி வைப்பார்கள்,
ஒவ்வொரு முறையும் மொட்டை மாடிக்கு போய் சரி
படுத்திவிட்டு வருவார் மாமா.
புதிய
போர்வெல் எடுக்க பத்தாயிரம் தரனும் என்றார்கள்.. அதற்க்கு கணக்கு வழக்கு கேட்டாலும்
தர மாட்டார்கள்..
என்
அத்தையின் மகனுடன் அவர்கள் பிள்ளைகளை பழக விடவே மாட்டார்கள்.
இன்னும்
பல.. நிம்மதியே இல்லை என்றார் மாமா.
அத்யாயம்-12
உலகிலேயே
வயதான கிழட்டு நகரம் என்று கங்கை கரையோர காசியை அழைப்பார்கள்… க்ருத, திரேதா, த்வாபர யுகத்திலிருந்தே காசி மா நகரம் உள்ளது என்பார்கள். அனால் அது இன்னமும் உயிர்ப்போடும், யௌவனத்தோடும்
இருப்பதை நம்மால் உணர முடியும். என்னதான் காசியில்
இறந்தால் முக்தி என்றாலும், வாழும் வரை உயிர்ப்போடு இருக்க அங்கே அன்ன பூரணி இருக்கிறாள்.
இங்கே தமிழகத்தில் விருதாச்சலம், ஒரு வயது முதிர்ந்த
ஊர். விருதன் என்றால் கிழவன். சலம் என்றால்
மலை. ஆக கிழட்டு மலை.
என்னை
கேட்டால்.. இப்போதைய மைலாப்பூரைப் பார்த்தால்… ஒரு வயது முதிர்ந்த..குரூர கிழவன், முட்டிக்காலுக்குள்
முகத்தை மறைத்து உட்கார்ந்திருப்பதை போலத்தான் தோன்றுகிறது.
மைலாப்பூர்
அதன் ஆன்மாவை தொலைத்து விட்டதோ? இந்த சின்ன
கிராம-நகரம் அதன் பொலிவை, இளமையை, உயிரோட்டத்தினை இழந்து விட்டதோ.
வடக்கு
மாட வீதியில் எப்போதும் காற்றில் கமழும் அரைத்த மஞ்சள் வாசனை , தாழம்பபூ குங்கும, வாசனை,
டப்பா செட்டிக்கடை மூலிகை மருந்து வாசனை எல்லாம்,
சிக்கன் பாஸ்ட் புட் கடை எண்ணை பாத்திரத்துள் கரைந்துதான் போனதோ.
மாமாவும்
அத்தையும் ஒரு நாள் அப்பாவின் வீட்டுக்கு வந்தார்கள், எங்களையும் அழைத்திருந்தார்கள்.
அண்ணா,
அண்ணீ நாங்க ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்குறோம்
.. போதும் அந்த பிளாட்டுல இருந்தது வாழ்ந்தது… கூண்டு மாதிரி இருக்கு.. சந்தோஷமில்ல,
நிம்மதி இல்ல.. இங்கயே உங்க பக்கத்துல ஒரு தனி வீடு வாடகைக்கு பாருங்க.. தினம் தினம்
நம்ம மனுஷங்க முகத்தை பார்த்த மாதிரி இருக்கும்.
நான் இங்கிருந்தே ஆபீஸ் போய்ட்டு வறேன்.. வேற நல்ல வேலை கிடைக்கிற வரை” என்றார்
மாமா
இப்போதைக்கு
வாடகைக்கு விடலாம்.. கடன் அடைக்க முடியலன்னா .. கைய கடிக்காத மாதிரி நல்ல விலைக்கு
வித்துடலாம்- என்றாள் அத்தை.
சரி..
சரி இங்கயே வந்துருங்க என்றர்கள் அப்பாவும் அம்மாவும், இது எதிர் பார்த்தது தான் என்பதைப்
போல.
ஒரு
நல்ல நாள்பார்த்து, ப்ரகாஸூ புரோக்கரை அழைத்து, “இந்த ஃப்ளாட்டை வாடகைக்கு விடலாம்ன்னு
இருக்கோம்” என்றார் அப்பா .
இப்பொ
யாரு சார் சிங்கிள் .. பெட்ரூம் கேக்குறாங்க… வேனும்ன்னா பேச்சிலர்ஸ் கூட்டியாரட்டா…
நாலு பேரு, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு எட்டாயிரம்
தருவாங்க.. OK யா என்றான் எங்கள் ஃபிளாட்டை மேலும் கீழும் கேவலமாக பார்த்தபடி.
என்னது
எட்டாயிரமா.. வட்டிக்கு கூட காணாது- என்றார் அப்பா.
“சரி..
விக்கலாம்னு நினைக்கறோம்.. வாங்குனது உனக்கே தெரியும் முப்பத்தி நாலறை, ஒரு வருஷம்
ஆச்சு நாப்பது வந்தா முடிச்சிடலாம் ப்ரகாஸூ
. பத்து வருஷ பழய ஃப்ளாட்டே, சித்திர குளத்தாண்ட,
நாப்பத்தி அஞ்சன்னு ரெண்டு வருஷம் முன்னாலயே சொன்னாங்களே என்றார் அப்பா.
இன்னாது..
நாப்பதா…??? எல்லாரும் மறந்துட்டீங்களா… இந்த ஃப்ளாட்டுக்கு பிளான் அப்ரூவலே இல்ல…
எப்படி விக்க முடியும்,,?? யாரு வருவாங்க வாங்க…?? கைக்காசை போட்டு வாங்குரவன் வந்தாகாட்டி
ஒரு முப்பதுக்கு முடிக்கலாம்… எனக்கு மூனு
பர்சென்ட் கமிஷன்”- என்றானே பார்க்கலாம்.
இதற்க்கு
மேலும் இந்த சோக சித்திரத்தை நான் தொடர விரும்பவில்லை.
அடுக்ககம்
இல்லை இது அடக்ககம்..
ஆம்
நமது, நிம்மதி, சந்தோஷம், நகைகள், சேமிப்புகள், நிகழ் கால சம்பளம், எதிர்கால PF, Graduvity,
etc., ect என அனைத்தையும் தனக்குள் விழுங்கி
புதைக்கும் புதைகுழி,
வாங்கியவரை வேளியே வரவிடாமல் , தன்னுள் அடக்கம் செய்யும்
அதள பாதாள அ ட க் க க ம்.
சிறுகதை by divya.darshini552@gmail.com
Date
: 30.6.2020, Chennai.
________________________