Monday, February 04, 2013

நினைவுகளே புதையல்களாய்..


நினைவுகளே  புதையல்களாய்..

   திருவல்லிக்கேணியில்   ஒரு பிள்ளையார் கோவில் தெருவில் நாங்கள் வாடைகைக்கு குடியிருந்தோம். வடக்குப் பார்த்த  இரண்டுகட்டு ஓட்டு வீடு அது.  தெருவின் அகலம் ஒரு நாற்பது அடி இருக்கும், எதிரே ஒரு ஆஞ்சனேயர் கோவில், ஒரு பள்ளிக் கூடம்.

      அந்த வீட்டின் முதல் கட்டில் இருக்கும் முற்றத்தின்  உள் அளவே 150 சதுர அடி இருக்கும்.  நாலு பக்கமும் சுற்றி ஆறு அடி வராண்டா, இரு பக்கமும் எதிர் எதிரே இரண்டு கூடங்கள். கூடங்களின் வலப்பக்கம்  தெரு  பார்த்த பெரிய உள் அறைகள் , இடப்பக்கம் தலா ஒரு சின்ன அறை.   முன் கட்டு முவதும் வீட்டின் உரிமையாளர் ஆண்டு கொண்டிருந்தார் . இரண்டு சின்ன அறைகளில் ஒன்று அவர்களின் சமையல் அறை மற்றொன்று  பூஜை அறை.

   அந்த பூஜை அறையின் வாசலருகில் நின்றாலே நல்ல சந்தனம், துளசி, ஜாதி மல்லி வாசனை இருக்கும்.  அந்த அறையில் கோயில்களில் இருப்பதைப் போல  வில்லேந்திய ராமர், அழகிய வளைவுகள் நெளிவுகளுடன் ஒல்லியான சீதை, சகோதர வாஞ்சையுடன் லக்ஷ்மனன், பய பக்தியுடன் பணிவாய் ஆஞ்சனேயர் – ஆகிய பஞ்சலோக சிலைகள் வைக்கப் பட்டிருக்கும். வீட்டின் உரிமையாளர் மிகவும் பக்திமான்.  அது எங்களுக்குத்தான் வசதியாக இருந்தது.  மாதத்தில் பத்து பன்னிரெண்டு நாட்கள் பூஜை மற்றும் பஜனைகள் தான். பஜனை முடிந்ததும் ஒரு இருபத்தி ஐந்து பேருக்கு வாழை இலை போட்டு  இனிப்பு, வடை பாயசத்துடன் முழு சாப்பாடு. அவ்வளவு ருசியாக இருக்கும்.

       நான் கலந்து கொள்ளாமல் ஒரு நாள் பூஜை கூட நடக்காது. சின்ன உத்திரனியில் ஸ்வாமிக்கு தீர்த்தம் கொண்டுபோய் வைத்துவிட்டு..சப்ளாங்கால் போட்டு உட்கார்ந்து கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு, எங்கள் போர்ஷனுக்கு வந்து சொப்பு வைத்து விளையாடுவேன். அவர்கள் பரிமாறிய பச்சை கலர் போட்ட வெறும் ஜவ்வரிசி பாயசத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.     

 அம்மாவை செய்ய சொல்லி சாப்பிட்டாலும் அந்த ருசியாய் அவளுக்கு வைக்கவே தெரியவில்லை. “கைவேலையாய் இருகேண்டி” என சலித்துக்கொள்ளும் அம்மாவின் மேல் சாய்ந்த படி அடுப்பின் பக்கத்தில் நின்று கொண்டு எட்டி எட்டி பார்த்து எவ்வளவு கலர் பொடி என் கைப்பட போட்டாலும் அந்த அடர் பச்சை நிறம் பாயசத்தில் வரவே இல்லை.

        இந்த முன் கட்டிற்கு  முன்னால் தெரு பக்கமாக  எட்டு அடி அகல - நாலடி உயர இரண்டு பக்க திண்ணைகள், அதற்கும் முன்னால் இருபக்கமும்  இருந்த பன்னிரெண்டு அடி திறந்த வெளி தாழ்வாரம் அதில் உட்கார்ந்து கொள்ள கட்டப்பட்டிருந்த சிகப்பு நிற சிமென்ட் பென்ச், ஈஸி சேர் போல சாய்ந்துக் கொள்ள அதில் அமைக்கப் பட்டிருந்த சிமென்ட் சாய்மானம் –இவற்றையெல்லாம் பாதுகாப்பது போல் தெரு ப்ளாட் பார்ம் ஒட்டி கட்டப்பட்டிருந்த ஒன்னரை அடி அகல, இடுப்பு உயர காம்பவுண்ட் சுவர் – அதன் முனையில் செய்யப்பட்டிருந்த சங்கு , சக்கர சிமென்ட் கட்டுமானங்கள் எல்லாம்  என் உயரத்துக்கு ஏறவே முடியாதவை. எப்பாடு பட்டாவது திண்ணையில் ஏறி நிற்பதே  அப்போதய  நிரந்தர குறிக்கோளாய் இருந்தது எனக்கும் என் வயதுடைய சிறுமிகளுக்கும் .  ஆனால் என் வயது பையன்கள் எப்படியோ திண்ணையில் ஏறி பம்பரம் வேறு விளையாடுவார்கள்.

     நாங்கள் பின் கட்டில் குடி இருந்தோம்.  எங்களோடு சேர்த்து மொத்தம் ஆறு குடித்தனங்கள். பின் கட்டு முற்றம் முன் கட்டை விடப் பெரியது. அம்மாவும், பாட்டியும் இந்த முற்றத்தில் கயிறு கட்டிலை போட்டு  அப்பாவின் வேட்டியை பரப்பி அரிசி வத்தல், ஜவ்வரிசி வத்தல் எல்லாம் போடுவார்கள்.  கடுகு, சீரகம், வெங்காயம், வெந்தயம் போன்ற  பதினாறு வித மசாலா சாமான் களை கூடம் முழுதும் பரப்பி, கல் மண் எடுத்து சீர் செய்து , கல் உரலில் உட்கார்ந்தார் போல இடித்து  பெரிய பானையில் போட்டு அப்பாவின் வேட்டியால் அதன் வாயை மூடி இழுத்து கட்டி வெயிலில் பிரமனை மீது வைத்து விடுவார்கள்.  காய்ந்து போன வெங்காய மசாலாக்களை வெயிலில் காயவைத்து, திரும்ப பானைக்குள்ளே போட்டு, திரும்ப காயவைத்து திரும்ப பானைக்குள்ளே போட்டு என பாட்டியும் அம்மாவும் ஒரு இருபது, இருபத்தி ஐந்து நாட்கள் அதன் மீதே  கவனமாக இருப்பார்கள்.  அந்த வெயிலில் காயும் வெங்காய வாசனை வீடு முழுதும் இருக்கும் பல நாட்களுக்கு.  கடைசி நாள் கையில் விளக்கெண்ணை தடவித் தடவி இருக்கமான உருண்டையாக பிடித்து புது பானையில் வட்டமாக அடுக்கி சமையல் அறை மர பரணையில் மண் தட்டு போட்டு மூடி அப்பாவின் வேட்டியால் கழுத்தை சுற்றி கட்டி வைத்து விடுவார்கள்.  ஒரு வருடத்திற்கு குழம்பு, சாம்பார் தாளிக்க நன்றாக இருக்கும்.

  இது போதாதென்று, ப்ரௌன்  பார்டர் போட்ட வெள்ளை நிற பீங்கான் ஜாடிகளில் சில பல ஊறுகாய்களைப் போட்டு, அப்பாவின் வேட்டியை ஐந்தாறு துண்டுகளாய் சர் சர் என்று கிழித்து, அந்த ஜாடிகளின் வாயை இறுக்க கட்டி, வெயிலில் காலை எட்டு மணிக்கே கொண்டு வந்து வைத்து விடுவார்கள்.  அராபிய ஷேக்குகள் வட்டமாக நிற்பதை போல் இருக்கும்.  அந்த வடகம் பானை இவற்றுக்கெல்லாம் தலைமை வில்லன் போல இருக்கும். “ இன்னைக்கு வெயில் ஜாஸ்தி..” “ என்னை குலுக்காமலேயே கொண்டு வந்து வச்சிட்டாங்க..” “பசங்க நம்ம மேல விழுந்துடாம இருக்கனும்..”  – என அவற்றுக்கிடையே ஏதேனும் சம்பாஷனைகள் நடக்குமோ என்று கூட சிலசமயம் தோன்றும்.

        இந்த இரண்டாம் கட்டு முற்றத்தைப் பார்த்தபடி எங்களது கூடம் திறந்த வெளியாய் இருக்கும். மூங்கில் கழியை செங்குத்தாய் இரண்டாய் பிளந்து குறுக்கு நெடுக்காய் கட்டி அதுதான் சுவர் அதிலேயே ஒரு கதவு, அதை பூட்டிக் கொள்ள ஒரு நாதங்கி வேறு.   அவ்வளவு வெளிச்சம், அவ்வளவு காற்று அந்த கூடத்தில் வந்து போகும். அங்கு குடி இருந்த குடித்தனங்களில் மிகவும் பணக்காரரான எனது அப்பா எங்களது வால்வ் ரேடியோவை அனைவரும் பார்க்கும்படி அந்த கூடத்தில் தான் வைத்து இருந்தார்.  சாயங்காலம் சரியாக ஐந்து மணிக்கு சிலோனில் இருந்து புது தமிழ் பாட்டுக்கள் விட்டு விட்டு கேட்கும். ரேடியோ நின்னுடிச்சோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்த பாட்டு திரும்ப கேட்கும். பாட்டு கிடைத்த மகிழ்சியில் உதட்டோரம் சின்ன புன்னகை கூட வந்ததுண்டு. இரவு ஏழு மணிக்கே விவித் பாரதி ஹிந்தியில் பேச ஆரம்பித்துவிடும். எட்டு மணிக்குள் ஊர் அடங்கி தூங்கியே போய்விடும்.

     இவற்றையெல்லாம் விட இதே சிலோன் ரேடியோவை அதிகாலையில் அதாவது ..நாலு மணிக்கு கேட்பது விவரிக்க இயலாத ஒரு சந்தோஷத்தை தரும். அம்மா முதல் நாள் வாங்கிய கதம்பத்தை தண்ணீர் தெளித்து சிமென்ட் தரையில் வைத்து, எவர்சிவர் பாத்திரத்தை அதன் மேல் கவிழ்த்து மூடி இருப்பாள்.   இந்த அதி காலையில் குளித்துவிட்டுவந்து அந்த கதம்பத்தை ஸ்வாமிக்கு போடவும், தனக்கு வைத்துக் கொள்ளவும் அவள் எடுக்கும் போது அந்த கூடமே கதம்ப வாசனை வீசும்.  சிலோன் ரேடியோக்காரர்கள் பேசும் மாறுபட்ட தமிழ், என்ன பாட்டு போடப் போகிறார்களோ என்ற சஸ்பென்ஸ், பாட்டி போட்டு தரும் வெல்ல காப்பி, அம்மா கோபமிலாமல்  சிரித்த முகமாய் " வாடி குட்டி .. சுடு தண்ணிரெடி  .. வந்து குளிச்சிக்கோ" என கூப்பிடுவது  என அந்த மாசற்ற, விடிந்தும் விடியாத இளம் குளிர் காலை பொழுதுகள்.. சந்தோஷத்தையும் அதைவிட என்னவென்று சொல்லத் தெரியாத பாதுகாப்பையும் தந்தன.  இதமான இந்த காலை பொழுதுகளாலேயே  நாள் முழுதும் மகிழ்சியாக ஓடி விளையாடிய  நாட்கள் அவை..

தொடரும்...