Monday, November 07, 2011

இரயில் பயணங்களில்….

அமரர் கல்கி நினைவு சிறுகதை-2011 போட்டிக்கு அனுப்பி -ப்ரசுரம் ஆகவே ஆகாத எனது சிறு கதை

இரயில் பயணங்களில்….

1984 டிசெம்பர் 7 ஆம் தேதி.. சென்னை .. மன்னிக்கவும்…மெட்ராஸ் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்த ரயிலில் ஏறிய நிலாவும் அவளது தங்கை பவித்ராவும் மிக அழகாக இருந்தார்கள். (குறிப்பு :- இச் சிறுகதையின் கதா நாயகிகள் இருவருமே அழகாக இல்லாமல்.. த்ராபையாக, மொக்க ஃபிகராகவும் இருக்கலாம், அது ஒரு மேட்டரே இல்லை. ஆனாலும், பைபிள் காலத்திலிருந்து -சிறு, குறு கதையாக இருந்தாலும் கதா நாயகி என்றால் அழகாகத்தான் இருக்கணும் என்ற மூட நம்பிக்கையினை வளர்க்கும் பொருட்டு அவர்கள் அழகாக இருந்தார்கள் என எழுத வேண்டிய கட்டாயமாகி விட்டது.)

ஜன்னலோர, ஒரு ஆள் இருக்கையை தங்களுடையது என இடம் பிடித்து உட்கார்ந்தும் கொண்டார்கள். வெற்றிப் புன்னகையை முகத்தில் தவழ விட்டார்கள்.. (புன்னகையை முகத்தில தவழ விடாம முதுகிலயா தவழ விட முடியும்..? இதெல்லாம் ஒரு சிறு கதை… இதயும் நீங்க படிச்சிட்டிருக்கீங்க..?!! திருத்தவா முடியும் உங்களையெல்லாம்?) .

ரகசியமாக சதிதிட்டம் தீட்டும் குரலில் பவித்ரா.. “ அக்கா ..?” ஸ்.. அக்கா..?
“ என்ன..?”
“நான்.. சேர்த்து வச்சிருந்த முப்பத்தினாலு ரூபாய இப்ப கொண்டு வந்திருக்கேன்….”
“ நானும் கொண்டு வந்திருக்கேன், அறுபத்தியெட்டு ரூபா.. ரெண்டும் சேர்த்தா மொத்தமா முழூ நூறு ரூபா பவி.. நாம வைஸாக்ல (விசாக பட்டினம்) க்ரிஸ்டல் கம்மல் வாங்கிக்கலாம் ..எனக்கு ப்ளூ கலர் உனக்கு ப்ளாக்.. ஒகே வா?..”
“மாத்தி மாத்தி போட்டுக்கலாம் அக்கா.. ப்ளீஸ்…”

இந்தக் க்ரிஸ்டல் கம்மல் என்பது இவர்களின் காவியக் கனவு. 1984 ல் வாழ்ந்த லோயர் மிடில் இன்கம் க்ளாஸ் டீன் ஏஜ் பெண்களுக்கு அது அதிக பட்சக் கனவு. அப்போதெல்லாம் வீட்டுக்கு வந்து பத்து பதினைந்து நாள் தங்கிவிட்டு திரும்பி செல்லும் விருந்தாளிகள், திரும்பி செல்லும் நாள் அன்று வீட்டின் மூத்த குழந்தைக்கு ரெண்டு ரூபாய், அடுத்த குழந்தைக்கு ஒரு ரூபாய்.. அதுக்கு அடுத்த அடுத்த குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஆளுக்கு எட்டணா –( தற்போதைய ஐம்பது காசு) என்று தருவார்கள்.

அம்மா ரெண்டு நாள் முன்னமே, விருந்தாளிகள் வெளியே போயிருக்கும் சமயத்தில் , கூடத்தில் பிள்ளைகளை வட்டமாக உட்காரவைத்து, திரி திரித்த படியோ, விளக்கை துடைத்த படியோ இப்படி சொல்லி வைப்பாள்
“இங்க பாருங்க பிள்ளைகளா… விருந்தாளிங்க கிளம்பும் போது காசு தந்தா வாங்க கூடாது.. வீட்ல நிறைய இருக்குன்னு சொல்லிட்டு வாசலுக்கு ஓடிடனும்.. தெரிஞ்சுதா..? நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு”. ( மூன்று வயது கடை குட்டிக்கு இந்த டயலாக் ரொம்ப அதிகம்)
எல்லா குஞ்சு குளவாங்களும் குடும்ப பாரம்பரிய கௌரவத்தை தன் தோளில் தூக்கி சுமக்கும் பாவத்தில் “ சரிம்மா..” என்று சொல்லிவிட்டு ஓடும். ஆனால்.. விருந்தாளிகள் கிளம்பும் நாள் அன்று நடக்கும் சூப்பர் ட்ராமாவில் யார் யார் எப்படி எப்படி நடப்பார்கள் என சொல்லவே முடியாது. ஒன்று அம்மாவின் பாடத்தை சுத்தமாக மறந்துவிட்டு கொடுத்தவுடன் வாங்கிக் கொள்ளும். இன்னொன்று வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டும். இன்னொன்று வாங்கிவிட்டு அம்மாவை பார்க்கும். கடை குட்டி ரெண்டு கையையும் நீட்டும். ஆனால் வாங்கிய பின்.. அம்மா அடிப்பாளோ….என்ற பயம் மட்டும் எல்லா பிள்ளைகளின் முகத்திலும் இருக்கும். ஆனால் அம்மா அடிப்பாளா? அடிக்க மாட்டாள் “ ஐஸ் தண்ணி.. கலர் மிட்டாய்ன்னு வாங்காம.. உருப்படியா ரப்பர்.. பென்சிலுன்னு வாங்கிக்கங்கடா பிள்ளைகளா..” என்பாள்.
கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் – கலர் ஐஸ், மிட்டாய் வாட்ச், மிட்டாய் பாம்பு, சென்ட் ரப்பர், ராட்டினம்.. போன்ற தங்களது அதிக பட்ச ஆசைகளை அடக்கி சேர்த்து வைத்த அந்த சிருவாட்டு பணத்தை பற்றித்தான் நிலாவும் பவித்ராவும் மேற்கண்டவாறு பேசிக் கொண்டார்கள்.

நிலா, பவித்ராவின் வயதும், தாவணி உடையும் அவர்களை அந்த ரயில் பெட்டிக்கு அந்த நேரத்து டெம்பொரரி தேவதைகளாக்கியது. அப் பெட்டியிலிருந்த பசங்களுக்கு கொஞ்சம் உற்சாகத்தை தந்தது. தேமேன்னு உட்கார்ந்திருந்த பசங்கள் எழுந்து நின்று தலை சீவுவது, தேவையில்லாமல் நடந்து போவது, போன வழியே திரும்பி வருவது, மீண்டும் போவது , திரும்பி வருவது, இஞ்சி மொராப்பா வாங்குவது, ரயிலில் இருந்து இறங்கி ப்ளாட்ஃபார்மிலிருந்து இவர்களையே பார்ப்பது, ரயில் கிளம்பும் போது மட்டுமே ஓடி வந்து ஏறுவது- போன்ற 1984 ல் பையன்கள் பின் பற்றிய அத்தனை வழிமுறைகளையும் நடை முறைப் படுத்தி சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

நிலாவின், கடைசீ, ஒல்லி சித்தப்பா வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு தங்களது உடமைகளை ரயிலின் பரணையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். கழனி வேலையாட்களுடன் சேர்த்து மொத்தம் இருபத்தி ஐந்து பேர். ஆளுக்கு ஒரு நம்பரை அவர் நேற்றே ஒதுக்கி இருந்தார். இன்று பயணம் செய்யும் அனைவருக்கும் அதை விலாவாரியாக, தனிப்பட்ட முறையில் அருகில் சென்று அவர்களிடம் அறிவித்துமிருந்தார். அதே அதீத ஆர்வத்துடன் சூட் கேஸ், ஹோல்டால் ,இன்ன பிற மூட்டை முடிச்சுகளுக்கும் அவர் ஒதுக்கி இருந்த எண்களை அட்டையில் எழுதி, அவற்றின் கழுத்தில் சிகப்பு நாடாவால் கட்டி, தொங்க விட்டிருந்தார்.
பஸ்ஸிலும் ,ட்ரெயினிலும் , எறிய உடனும் , இறங்கிய உடனும் ,வரிசையாக 1 ல் இருந்து பின் தொடரும் 2,3 போன்ற எண்களை அவர் சத்தமாக அழைப்பார் என்றும் , அந்த எண்ணுக்கு உரியவர், அதே எண்ணுடைய லக்கேஜுக்கு பாதுகாவலர் என்றும், அந்த பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டக்டர், பரம்பரை பரம்பரையாக அந்த பஸ்ஸில் வாழைப் பழம் விற்பவர், (ட்ரெய்னாக இருந்தால் இஞ்சி மொரப்பா விற்பவர்), சக பயணிகள் ஆகியோரின் இருப்பையோ, அவர்களுக்கு தேவையான சமூக, சுற்றுச் சூழல் அமைதியையோ சிறிதேனும் கவனத்தில் கொள்ளாமல் சித்தப்பா கூவி கூவி பெயர்சொல்லிஅழைக்கும் பொழுது”” இங்கே இருக்கே..…ன், என் பையும் என் கிட்ட தான் இருக்கு சித்தப்பா “” …… என பதில் சொல்லியாக வேண்டும் என்பது சித்தப்பாவின் ஆணை.

இந்த சங்கம் மருவிய கால உத்தரவுக்கு அவரது அண்ணன்கள், அண்ணிகள் , முக்கியமாக, எது எடுத்தாலும் எதிர்த்தே பேசும் அவரது மனைவியே கட்டுப் படும் போது, நிலாவும், பவித்ராவும் எந்த மூலைக்கு?.. சான்ஸே கிடையாது.. நிலாவின் எண் 18, அவளது தங்கையின் எண் 16. அவர்களிருவரின் வயதும் அதுவே. அவர்களின் எண்கள் அழைக்கப் படும் போது ஜன்னல் வழியாக பராக்கு பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் பெயர் இன்னும் சத்தமாக அழைக்கப் படும். இம்மாதிரியான பயணங்களால் நிலாவின் பெயரும், பவித்ராவின் பெயரும் ஒருங்கே வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் இலந்தைப் பழம் விற்பவர் வரை ப்ரசித்தம். படித்து முடித்து, ஒரு வேலைக்குப் போய் தன் காலில் தான் நிற்கும் போது, சித்தப்பாவின் இந்த இம்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதென்றும் , அதுவரை வேறு வழி இல்லாததால் சும்மா இருப்பதென்றும் நிலாவும், பவித்ராவும் போன மாதமே முடிவெடுத்திருந்தனர். சித்தப்பாவின் இந்த கம்பீரத்தில் மனதை பறி கொடுத்த சக பயணிகளில் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தை தவற விட்டு , தொலை தூர பயணத்தை தொடர்ந்தவர்கள் பாதிபேர், இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு ரெண்டு ஸ்டாப் முன்பே இறங்கியவர்கள் மீதி பேர்.

1980 களில் தமிழ் நாட்டில் ப்ரசித்தமாயிருந்த கூட்டுக் குடும்ப முறையால் சீரழிந்த மாபெரும் குடும்பங்களில் ஒன்று நம் நிலாவின் குடும்பம் . ஏமாந்த, இளிச்சவாய் பெரியண்ணனின் ஒரு சம்பளத்தை நம்பி , மீதியுள்ள தம்பிகளின் மொத்த குடும்பமும், உட்கார்ந்து சாப்பிடுவது என்ற ஒரு கான்செப்ட்டுக்கு கூட்டுக் குடும்பமென்று பெயர் வைத்திருந்தார்கள். அதன்படி, நிலாவின் அப்பா, கிடைத்த கவர்ன்மென்ட் உத்யோகத்தில் ஒண்டிக்கொண்டு ஓடி ஓடி சம்பாதிக்க, தாத்தா, பாட்டியின் செல்ல கவனிப்பில் தம்பிகள் மூவரும் ஆற அமர படித்து – வளர்ந்தார்கள். ஒரு தம்பி வைஸாக் போக, மற்றொரு தம்பி செத்து போக, கடைசி தம்பி சரியாக படிக்காததால் நில புலங்களை பார்த்துக் கொள்கிறெனென்று அண்ணனோடு செட்டில்லாகி விட்டார்.

கடை குட்டி தான் என்றாலும், இப்போது இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டால் அசிங்கமாக இருக்கும் என்று அனைவரும் சொன்னதால் அதை செய்யாமல் வெறும் செல்லம் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார் பாட்டி. இதெல்லாம் நடந்த போது சித்தப்பாவுக்கு வயது முப்பத்தி மூன்று. சவலை பிள்ளை அடம், அதிகாரம், முரண்டு எல்லாம் அதிகம். “” நான் பார்த்து வளர்ந்த பையன் “”என்று சித்தப்பாவின் நாற்பத்தி ஐந்து வயது வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள் அண்ணன்மார்கள். எனவே பல்பொடி வாங்குவதிலிருந்து அவர் பெற்ற பிள்ளைகளின் படிப்பு செலவு வரை நிலாவின் அப்பாவின் ஒற்றை சம்பளத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நிலா, பவித்ரா அதன் பிறகு சீனு என மூன்று பிள்ளைகளோடு நிலாவின் பெற்றோர் நிறுத்திக்கொள்ள, சித்தப்பா சித்தி சளைக்காமல் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள். ஐந்து ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லும், மணிலாவும் வளமையான அன்றாட வாழ்க்கைக்கும், அப்பாவின் சம்பளம் துணி மணி , படிப்புக்கும் சரியாய் போனது. ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் மூச்சு திணறும் போது சென்னைக்கு ட்ரன்ஸ்ஃபெர் என்ற காரணத்தை காட்டி அகதிகளாக ஓடி வந்தார்கள் நிலாவின் பெற்றோர். ஆனாலும் மணியார்டர் மூலமாக அந்த குடும்ப பாரத்தையும் சென்னையிலிருந்து சுமந்தனர்.

வீட்டு விசேஷங்கள், திருமணங்கள், திருப்பதி தரிசனம் என எதுவாக இருந்தாலும் மொத்த செலவும் நிலாவின் பெற்றோருடையது. சித்தப்பாவுக்கு கவர்ன்மென்ட் உத்யோகம் இல்லை அதனால் அவர் எந்த செலவும் செய்ய மாட்டார் என்பது எழுதப் படாத சாசனமாகியது. சில சமயம் சித்தியிடம் திட்டு வாங்கும் போது சித்தப்பாவை பார்த்தால் பாவமாக இருக்கும். “”நான் படித்து முடித்து வேலைக்கு போகும் போது, கண்டிப்பாக சித்தப்பாவுக்கு மாதம் ஐம்பது ரூபாய் தருவேன்மா , அதை கொண்டு அவர் சித்தி வாயை அடைக்கணும்”” என தன் அம்மாவிடம் சொல்லியிருந்தாள் நிலா. தான் சம்பாதிக்காததை ஈடுகட்ட அவர் விவசாயத்தை கவனித்தாலும் அதிலும் நஷ்டம் என்றே சொல்லப்பட்டது.

ஆனால் கூட்டுக்குடும்பத்திலிருந்து தப்பித்து போனதாலோ என்னவோ வைஸாக் சித்தப்பா, ப்ரம்மிக்கும் அளவுக்கு பணக்காரராயிருந்தார். பகலிலேயே மெல்லிய குளிர் நிலவும் சிறு குன்றாக இருந்த மலை சரிவில் அழகிய பங்களா கட்டியிருந்தார். அது போன்றதொரு பங்களாவுக்குள் சென்று தங்கியது நிலாவின் வாழ்வில் அதுவே முதல் முறை. காஷ்மீரி அடர் சிவப்பு நிற ரோஜாக்கள் கூட அந்த மண்ணுக்கு செழித்து வளர்ந்தன. வைசாக் சித்தப்பா ஒரு புது அம்பாசிடர் கார் வைத்திருந்தது கூட ஆச்சர்யமாக இருந்த து. அந்த சித்தப்பாவின் மகனின் திருமணத்திற்காகத்தான் அனைவரும் வந்திருந்தனர்.

திருமணத்தை விட முக்கியமான அந்த நாளும் வந்தது. அதேதான், அதே நாள்தான்.. “” எல்லாரும் தயாராகுங்க.. கல்யாணத்துக்கு போட்டுக்க பொட்டு இல்ல, மணி இல்ல மாட்டல் இல்ல, லொட்டு லொசுக்கு இல்லன்னு யாரும் சொல்லக்கூடாது பெரியம்மாவோட கடை தெருவுக்கு போய் எல்லாம் வாங்கிக்கங்க –“” சித்தப்பாவிடம் இருந்து ஒரு பெரிய உத்தரவு வந்ததும் நிலாவும் பவித்ராவும், குன்றின் சரிவுகளில் கதா நாயகிகளைப் போல ஓடினார்கள். ஆம்.. க்ரிஸ்டல் கம்மல்.. அவர்களின் ஆதர்ஷ கனவு நினைவாகப் போகிறது.

அந்த ஃபேன்ஸி ஸ்டோரைப் பார்த்து ப்ரம்மித்து போயினர் . அரக்கோணத்து பட்டிக் காட்டு மக்களுக்கு அது மாய லோகம். வித, வித, விதமான அணி மணிகள், எதை எடுத்தாலும் ஆனை விலை சொன்னர்கள்.

“பவி இங்க பார் நீ கேட்ட மதிரியே ப்ளாக்லயும், ப்ளூலயும் முத்து ட்ரொப்ஸ் வெச்சு…ரொம்ப அழகா இருக்கு “

“”அக்கா.. நமக்கு மட்டும் வாங்கினா நல்லா இருக்காதுக்கா, செல்விக்கும் சுமதிக்கும் நம்மள மாதிரியே ஒரு செட் வாங்கிடலாம் “” (செல்வியும் சுமதியும் சித்தப்பாவின் மகள்கள்)

“ இருக்கற நூறு ரூபால நாலு செட் வருமா பவி ? “

“ நீ அம்மாவ கூப்பிட்டு பேரம் பேச சொல்லு..கண்டிப்பா விலை குறைப்பாங்க..”

சவுரிகள், ரெடிமேட் கொண்டைகள், பன்(Bun) கொண்டைகள் என்பதான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் விற்கும் செக்ஷனில் இருந்த சித்திக்கு ஸ்கூட்டர் ஸ்டெப்னியை விட ஒரு சுற்று சின்னதாக இருந்த கொண்டையை கடைக்காரர் சிபாரிசு செய்து கொண்டிருந்தார். அதையே வாங்கலாமா அல்லது அதைவிட பெரியதாக அரிசி அள்ளும் கூடை போல இருந்த டிசைனை வாங்கலாமா என் குழம்பி தவித்த சித்தியின் பக்கத்தில் சும்மாவே நின்றுக் கொன்டிருந்த அம்மாவை கையை பிடித்து இழுத்து வந்தனர் நிலாவும் பவித்ராவும்.

பெரிய கொண்டை போட்டிருப்பவர்கள் பெரிய பணக்காரரின் மனைவி எனவும், சிறிய கொண்டை போட்டிருப்பவர்கள் ஏழைக் குடியானவனின் மனைவி எனவும் ஒரு கான்செப்ட் திரைப்படம் முதல் சாதாரன கல்யாணம் வரை நிலவி வந்த பொற்காலம் அது. எனவே, ஆனந்த விகடன் சிரிப்பு ஓவியம் முதல் வசந்தமாளிகை வாணிஸ்ரீ வரை - வளர வளர கொண்டை போட்டுக்கொண்டு வாழ்ந்த காவிய காலம் அது. உண்மையை சொல்லப் போனால் பல கல்யாணங்களில், விடியற் காலையிலிருந்து, கொண்டையும் கோபுரமுமாக பார்த்த தன் மனைவியை சாயங்காலம் கொண்டை இல்லாமல் எதிர் கொள்ளும் பொழுது அடையாளம் தெரியாமல் “ யாரோ ஒரு பெண்மணி ” என்று பவ்யமாக ஒதுங்கி வழிவிட்டிருக்கிறார் நம் சித்தப்பா

“அம்மா.. இந்த க்ரிஸ்டல் கம்மல பாரேன்.. எவ்ளோ அழகா இருக்கு.. நானும் அக்காவும் ஆளுக்கு ஒரு ஜோடி வாங்கிக்கறோம்மா… ப்ளீஸ்..”- பவித்ரா அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு மன்றாட, நிலா அம்மாவின் இன்னொரு கையை பிடித்துக் கொண்டாள்.

“ இது எண்பது .. நூறு ரூபா ஆகும் போல இருக்கே..? என் கிட்ட அவ்ளோ காசு கிடையாது.. அப்பாவத்தான் கேக்கனும்..”

ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அப்பாவத்தான் கேக்கணும் என்று அம்மா சொன்னால் கடைசி வரை அது கிடைக்காது என்று நிலாவுக்குத் தெரியும்.

“ அம்மா.. அப்பாட்ட காசு கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்மா.. நானும் பவியும் சேர்த்து வச்சிருக்கரதே நூறு ரூபா இருக்கு.. அதுல வாங்கிக்கலாம்மா…ப்ளீஸ்மா - இதை சொல்லும் பொழுதே அழுகை வரும் போல இருந்தது நிலாவுக்கு. கடை க்காரன் எதிரில் அழுவதாவது..?

“நீங்க ரெண்டு பேரும் மட்டும் கல்யாணத்தன்னைக்கு இதை போட்டுக்கிட்டா.. பாவம், செல்வி சுமதி ஆசை பட மாட்டாங்க?”

அதுக்குத்தாம்மா உங்களை கூட்டிட்டு வந்தோம்.. நீங்க பேரம் பேசினா.. நாலு ஜோடி நூறு ரூபாய்க்கு வாங்கலாம்மா.. ப்ளீஸ்மா.. (வீடாக இருந்தால் அம்மாவுக்கு ஆறேழு முத்தங்கள் கொடுத்து கூல் பண்ணியிருப்பார்கள்) . இந்தக் கடைகாரனைப் பார்த்தால் “ எனக்கும் ரெண்டு ” என்பான் போலிருந்தது. அதனால் கொஞ்சல் இல்லாமல் வெறும் கெஞ்சல்களோடு நிறுத்திக் கொண்டார்கள்.

“கருப்புல ரெண்டு ஜோடி, நீலத்துல ரெண்டு ஜோடி சேர்த்து மொத்தம் நூறு ரூபாய்..”-தருவீங்களா? என்றாள் அம்மா. கடைக்காரன் பிகு பண்ணுவதைப் போல நடித்ததும், அதுதான் சாக்கு என்று நகரத்துவங்கினாள் அம்மா. கடைக்காரனே “ சரி சரி எடுத்துக்குங்க” என தமிழில் பேசினான், கம்மல்களை பேப்பர் கவரில் போடத் துவங்கினான். ஆனால் அம்மாவோ “ இதே கம்மல் நம்ம மெட்ராஸ்ல அஞ்சு ஜோடி நூறு ரூபாய் தான், அது இன்னும் ஒஸ்த்தி குவாலிட்டி.. அங்க வாங்கிக்கலாம்டா செல்லம் என்றாள்”- “ அம்மா ப்ளீஸ் மா..” பவி அழத் துவங்கினாள். “ வேண்டாம்னா வேண்டாம் தான் “- தீர்மானமாக கூறி விட்டு கடையை விட்டு இறங்கி நடந்தாள். அம்மா ஒரு பொருளை வாங்க வேண்டாம் என்றால் வாங்க கூடாது . மீறி வாங்கினால் அந்தப் பொருள் உடைந்து போகும் வரையோ, தேய்ந்து போகும் வரையோ திட்டித் தீர்ப்பாள். அந்த திட்டு தரும் அழுகையை விட அந்தப் பொருளால் வரும் சந்தோஷம் மனதில் தங்காது. நிலா மனதை தேற்றிக் கொண்டாள்.. ஆனால் பவித்ரா மொட்டை மாடிக்கு சென்று சில, பல மணி நேரங்கள் அழுதாள். அவளைப் பார்த்தால் தான் பாவமாக இருந்தது.

கல்யாணம் என்ன கல்யாணம்?, ஆர்வமே இல்லாமல் கலந்துக்கொண்டனர் நிலாவும், பவியும். ஏதோ ஒரு அலங்காரம், எதோ ஒரு உடை என அணிந்து கொண்டார்கள். சில சமயம் பவி தனியாக சென்று அழுதுவிட்டு வருவாளோ என் தோன்றியது நிலாவுக்கு. “ மெட்ராஸ் போனதும் வாங்கிக்கலாம் பவி” என சொன்னாள். ஆனால் பவி பதிலேதும் பேசாமல், தனது சிவந்த மூக்கையும், கண்களையும் துடைத்துக் கொண்டாள்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து, வந்த அத்தனை பேரும் மெட்ராஸுக்கு கிளம்பினர். வழியில் சாப்பிடுவதற்காக இருபத்தி ஐந்து பேருக்கு இரண்டு வேளைக்கு தாராளமாக வரும் அளவில் புளியோதரையும், இட்லியும் செய்து தந்து வழி அனுப்பினார் வைஸாக் சித்தி. ஆனால் மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் வண்டி சோறு கட்டி சென்ற பீமன் அத்தனையும் ஒரு வேளையில் காலி செய்ததை நினைவூட்டும் வகையில், ரயில் , தான் கிளம்பிய ரயில் நிலையத்தை கடப்பதற்கு முன்னமேயே “ அந்த இட்லி தூக்க எடும்மா.. இப்பவே பசிக்குது .. ஆளுக்கு ரெண்டு சாப்டலாம் “ என்றாள் சித்தி. ஆளுக்கு ரெண்டா..? பத்து பன்னிரெண்டு சாப்பிட்டார்கள் சித்தியும் அவரின் பிள்ளைகளும். மதிய உணவு முடித்த கையோடு ரயில் ஏறியதால் உடனே எப்படி சாப்பிட முடியும் என குழம்பியவர்கள் நிலா குடும்பத்தினரும், கழனி ஆட்களும் தான். அவர்கள் குழம்பி தெளியும் முன்னமே, குழம்பு தூக்கும் , இட்லி தூக்கும் கழுவி கவிழ்க்கப் பட்டன. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்க்கு முன்பே “ ராத்திரி ஏழு மணியானா நாங்க சாப்ட்ட்டு படுத்துடுவோம் “என்றாள் சித்தியின் மூத்த மகள். புளியோதரை தூக்குகள் ரயில் பரணிலிருந்து இறக்கப் பட்டன. ஏழே காலுக்குள் கழுவி கவிழ்க்கப் பட்டன. சித்தப்பாவும், அப்பாவும் ஏன் இன்னமும் லோயர் மிடில் இன்கம் க்ரூப்பிலேயே நீண்ட நெடு நாட்களாக தங்கி இருக்கிறார்கள் என்பது நிலாவுக்கு புரிந்தது.

மறு நாள் காலை ரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேஷனின் ஆஸ்தான பலகாரக் கடைகளில், இட்லிகளும் வடை களும் நூற்றுக் கணக்கில் வாங்கப் பட்டன. ரயிலின் வேகத்தை விட, அதி வேகமாக இட்லிகள் சித்தியின் வயிற்றின் உள்ளே சென்றன. நிலாவின் அப்பாவின் பர்ஸிலிருந்து ரூபாய் நோட்டுக்கள் காற்றாடி போல் பறந்து போயின. பேஸின் ப்ரிட்ஜ் வரும் போது அவர் திவால் ஆனார்.

சென்ட்ரலில் இருந்து குடியிருக்கும் வீட்டிற்க்கு செல்ல அத்தனை பேருக்கும் பஸ் டிக்கெட் வாங்கக் கூட பணமில்லாமல் போய் விடுமோ என பயந்து “ உங்கிட்ட பஸ் டிக்கெட்டுக்காவது பணம் இருக்கா கமலா ?” என்றார் ஈனஸ்வரத்தில்.

“எங்கிட்ட இருபத்தி அஞ்சு ரூபா இருக்கு” என்றாள் அம்மா. மோகம் கொண்ட சினிமா காதலன், காதலியை தள்ளிக் கொண்டு ஒதுக்குப் புறாமாய் செல்வதைப் போல, அப்பா அம்மாவை தள்ளிக் கொண்டு ரயிலின் பாத் ரூம் வரை சென்று அந்த இருபத்தி ஐந்து ரூபாயை வாங்கி பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டார். பல்லவன் பஸ்ஸில் குடும்ப கௌரவம் காப்பாற்றப் படும் என நம்பி தலை நிமிர்ந்து நடந்தார். அவரது மானம் சித்தியாலும், சித்தியின் பிள்ளைகளாலும் சென்ட்ரல் ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்மிலேயே காற்றில் பறக்கும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை.

சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ஆளை எண்ணி, லக்கேஜ்களை எண்ணி ஒரு வழியாக டிக்கெட் செக்கரை தாண்டி விட்டோம் என நினைக்கையில், சித்தியின் கடைசி மகன் சென்டரல் ஸ்டேஷனின் நிர்வாகத்தால் நடத்தப் படும் கான்டீனையும் அதில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பூரிகளையும் பார்த்துவிட்டான்.
அவ்வளவுதான்…..

வண்டி மாடு நகராமல் சண்டித்தனம் செய்வதைப் போல பூரியை கை காட்டி அழ்த் துவங்கினான்.. நேரம் எற ஏற சத்தம் அதிகமாகியது.. அவனுக்கு மட்டும் வாங்கக் கூட நிலாவின் பெற்றோரிடம் பணம் இல்லை.

நிலாவின் அம்மா அவன் அருகில் சென்று “ சன்முகம் இங்க பாரு கண்ணா.. பெரியம்மா வீட்டுக்குப் போனதும் இதே போல பெரிய பூரி செஞ்சு தரேன்.. அஞ்சு நிமிஷம் பஸ்ல போனதும்.. நம்ம வீட்ல சாப்டலாம்” என சமாதானம் செய்ய முயன்றாள். அதை அவன் சட்டையே செய்யவில்லை .. அறிஞர் அண்ணா போல பூரியை நோக்கி நீண்ட கை நீண்டதுதான்.

சித்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தூரமாகப் போய் நின்றுக் கொண்டாள்.. எதோ முனு முனுத்த மாதிரி இருந்தது.

பையனின் அழுகையின் சத்தமும் அதிகமானது.. ஆளாளுக்கு சோர்ந்து போய் கிடைத்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டார்கள். நிலாவின் சித்தப்பா பக்கத்தில் இருக்கும் குழாயை விட்டுவிட்டு.. ப்ளாட்ஃபார்மின் கடைசியில் இருக்கும் குழாயை நோக்கி தண்ணீர் பாட்டிலுடன் நடந்து கொண்டிருந்தார்.

நிலாவின் அம்மாவும் எனக்கென்ன வந்தது என ஓரிடத்தில் உட்கார்ந்து இருக்கலாம்.. இவ்வளவு செய்ததற்கு அவனை ஒரு அடி அடித்து அடக்கி இருக்கலாம் ( சித்தி பிலு பிலுவென்று பிடித்துக் கொள்வாள் என்ற பயம்). ஆனால் எதுவுமே செய்யாமல் அப்பாவிடம் போய், நான் , பவி , நிலா மூனு பேரும் நடந்து வந்திடறோம், அவனுக்கு மட்டும் ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு பூரி செட் வாங்கி கொடுத்திடுங்க என்றாள்.இவ்வாறான சரித்திரப் புகழ் பெற்ற உரையாடல்கள் நடந்துக் கொண்டிருக்கும் போதே, ஃப்ளாட்ஃபார்ம் மறியல் செய்துக் கொண்டிருந்த சன்முகத்தின் பெரிய அண்ணன் “ பெரியம்மா எனக்கும் பூரி வேணும் “ என கேட்டுக் கொண்டான், தலை சுற்றி நிலாவின் அப்பாவும் அம்மாவும் தரையிலேயே உட்கார்ந்துக் கொண்டார்கள்.

குடும்ப மானம் கப்பலேறியது என்று சொல்வதை விட, ரயிலேறியது என சொல்வது பொருத்தமாயிருக்கும்.ஆனால்..

திடீரென்று நிலாவின் அம்மாவுக்கு முகத்தில் ஃப்ளாஷ் லைட் அடித்ததை போன்றதொரு ஒளி..

புத்தரே அப்போது அம்மா பக்கத்தில் வந்திருந்தாலும் சற்று டொங்கலாகத்தான் தெரிந்திருப்பார்.

நிலா பவி இங்க வாங்க என்று அழைத்து அவர்களிடமிருந்த முப்பத்தி நாலு ரூபாயும், அறுபத்தியெட்டு ரூபாயையும் லஞ்ச ஊழல் ஆஃபிஸரைப் போல பறிமுதல் செய்தாள். அம்மாவின் கையிலிருந்த பணத்தைப் பார்த்ததும்.. சித்தியும் அவர் பெற்ற மக்களும் பலாப்பழ ஈக்களைப் போல் சூழ்ந்துக் கொண்டார்கள்.

மொத்தம் நூற்றி ரெண்டு ரூபாய்.. ஐந்தால் வகுத்தால் இருவது பூரி செட் வரும் என கணக்குப் போட்டாள் சித்தியின் மூத்தப் பெண். நிலாவையும் பவித்ராவையுமே அனுப்பி அந்தப் பூரிகளை வாங்க வைத்தாள் அவள் அம்மா. பூரி கவுண்ட்டரில் ஒவ் வொன்றாக வாங்கி பாஸ் பண்ணி, மீதி சில்லறையை வாங்கிவிட்டு திரும்பி பார்த்தால் அவர்களிருவருக்கும் ஒரு பூரி செட் கூட எடுத்து வைக்கப் பட வில்லை. நிலாவின் குடும்பத்தை தவிர மற்ற அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதற்காக நிலாவின் அம்மா பெருமை பட்டுக் கொண்டாள். கழனி வேலை ஆட்கள் எதிரில் அவளது மானம் காப்பாற்றப் பட்டு விட்டதாம்.

தனது மகள்கள் ஐந்தாறு வருடங்களாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்தப் பணம் இப்படி ஊதுவத்திப் புகைப் போல காற்றில் கரைந்து போனதில் அவள் ஒன்றும் அதிகமாக வருத்தப் படவில்லை. க்ரிஸ்டல் கம்மல் வாங்கித் தருவதாகவோ, அவர்களின் சேமிப்பை திருப்பித்தருவதாகவோ அவள் இவர்களைத் தேற்றக் கூட இல்லை. விக்கித்து நின்றனர் நிலாவும் பவியும்.

பசியும் துக்கமுமாக அந்த பெருங் கூட்டத்துடன் வீடு வந்து சேர்ந்தனர் நிலாவும் பவியும். மனம் விட்டு அழக் கூட அவர்களுக்கு தனிமை வழங்கப் படவில்லை. மதியம் உணவு சமைத்து முடித்ததும் நன்றாக சாப்பிட்டு தூங்கி எழுந்த அவளின் சித்தி “ எங்க மாமா பொண்ணு இங்க பெரிய கோயிலாண்ட இருக்கா இல்லயா.. ஒரு எட்டு அவள பார்த்திட்டு வந்திடறோம்.. நிலா, பவிய வேணா கூட அனுப்புங்களேன் “என அம்மாவிடம் கேட்டுக் கொண்டாள். நிலாவும், பவியும் வேண்டா வெறுப்பாக கிளம்பி வெளியே வாசலில் வந்து நின்று காத்திருந்தனர்.

மேக் அப் முடித்து தெருவுக்கு வந்த சித்தி பெண்கள் சுமதி, செல்வியைப் , பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது நிலா, பவித்ராவுக்கு. அவர்கள் இருவரின் காதுகளிலும் , வைஸாக் கடையில் இவர்கள் தேர்வு செய்து வாங்காமல் வந்த ப்ளூ கலர் க்ரிஸ்டல் கம்மல்கள் முத்து தொங்கட்டான்களுடன் மின்னியது.

“ இந்த க்ரிஸ்டல் கம்மல் எங்க வாங்கினீங்க சுமதி? “ என கேட்டாள் நிலா.

“வைஸாக்லதான் வாங்கினோம்.. பெரியம்மா வேண்டாம்னு சொல்லி உங்களை கூட்டிட்டு போனதும், நாங்கமட்டும் அங்க இருந்து ரெண்டு செட் வாங்கிட்டு வந்தோம்.. பெரியம்மா உங்களுக்கே வாங்கித் தரல, நாங்க வாங்கினது தெரிஞ்சா திட்டு வாங்கன்னு பெட்டிகுள்ளயே வெச்சிட்ட்டோம்”

நிலாவுக்கும் பவித்ராவுக்கும் இந்த துரோகம் புதியது.. இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு நடந்ததில் தெருவின் சப்தங்கள் எதுவுமே அவர்கள் காதில் விழவில்லை.

“ஏய்.. நிலா பவி.. எங்க நீங்க பாட்டுக்கு நேரா போறீங்க..? இங்க உள்ள வாங்க ..” என்ற சித்தியின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்த நிலாவும், பவியும் நின்றிருந்தது ஒரு எவர்சில்வர் பாத்திரக் கடை வாசலில். ஏனோ வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல – என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது.

“உங்க மாமா பொண்ணு வீட்டுக்கு போகனும்னு சொன்னீங்களே சித்தி?”

“அவ கெடக்குறா.. அவளத்தான் போயீ பாக்கனுமாக்கும்..நான் வந்ததே எவர்சில்வர் பால் கொவளை வாங்கத்தான்.. வா இங்க வந்து பேரம் பேசி .. நல்ல விலைக்கு முடிச்சி கொடு.. உங்க அம்மா இங்கத்தானே உங்களுக்காக பாத்திர சிட்டு கட்றாங்க..”

தொடர்ந்து கரந்தாலும் இரண்டு லிட்டருக்கு மேல் பிடிக்கக் கூடிய, கைப்பிடி, பீடம் வைத்த ஒரு பால் குவளையை சித்தியே செலெக்ட் செய்தாள்.

“தொன்னூத்தியெட்டுன்னு வெல போட்டிருக்கு, தொண்ணூறு வெச்சிக்குங்க “- சித்தியே பேரம் பேசினாள். அப்புறம் என்னை எதுக்கு கூட்டி வந்தாள் என யோசித்தாள் நிலா

“கட்டுப்படி ஆகாதம்மா… சரி இந்தப் பொண்ணு ரெகுலர் கஸ்டமர்ன்றதால .. நீங்க சொன்ன விலைல எடுத்துக்குங்க.”

“சரி.. இவங்க சீட்ல இருந்து களிச்சிக்குங்க, அதுக்குத்தான் பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கேன் –“ என்றாள் சித்தி

என்னது…? அதிர்ந்து போனார்கள் பவியும் நிலாவும்.. இந்த சீட்டு.. பணம் விவகாரமெல்லாம் அவர்களைப் பொருத்தவரை மிகப் பெரிய விஷயம்.. அம்மாவுக்கு தெரியாமல் அவள் கட்டும் சீட்டுப் பணத்தில் பால் குவளை வாங்க சித்தியை அனுமதிப்பதா… தலை தெறிக்க வெளியே ஓடிவிட வேண்டும் போல் இருந்தது அவர்களுக்கு..

“அவங்க அம்மா வந்து கையெழுத்து போட்டாத்தான் இப்படி பொருள் வாங்க முடியும்.. சீட்டு முடிய இன்னும் ஆறு மாசம் பணம் கட்டனும்..பால் குவளைய வச்சிட்டு போங்க.. அவங்க வரட்டும் பேசிக்கலாம்” கராராக சொன்னார் கடைக்காரர். அப்பாடா… போன உயிர் திரும்பி வந்தது நிலாவுக்கு.

சித்தி மனதொடிந்து போய், பால் குவளை வாங்க முடியாத கவலையில் சோகமாக வீட்டுக்கு திரும்பி வரப் போகிறார். தன் எரிச்சலை பிள்ளைகள் மீதும் சித்தப்பாவின் மீதும் எரிமலையாய் கொட்டித் தீர்ப்பார். சித்தப்பாவை எப்படி எதிர் கொள்வது, இந்த சித்தியை எப்படி சமாதானப் படுத்துவது – என நிலா பலவாறாக யோசித்து கடையைவிட்டு நகர முயற்சிக்கையில்தான் …… அது நடந்தது..

“சரி இந்தாங்க பணம் வாங்கிக்கங்க “என சொல்லிய படி தனது ஜாக்கெட்டில் இருந்து பர்ஸ்ஸை எடுத்து அதில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை உறுவி நீட்டினாள் சித்தி. மேலும் பல நூறு ரூபாய் நோட்டுக்கள் அதில் இருந்தது.

தூக்கிவாறிப் போட்டது நிலாவுக்கும், பவித்ராவுக்கும்.

எத்தனை தடவைதான் அதிர்ச்சியாகி, விக்கித்து நிற்ப்பது?

சித்தியின் இந்த துரோகக் கத்தி நிலா, பவித்ராவின் நேர் நெஞ்சில் சரக்கென்று பாய்ந்தது. தங்களது அம்மாவும், அப்பாவும் எப்படி பாடு பட்டார்கள்? சென்ட்ரல் ஸ்டேஷனில் மானம் காற்றில் பறந்ததே..!! அவளது பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கக் கூட அப்போது இந்தப் பணத்தை இந்த சித்தி எடுக்கவே இல்லயே.!! எங்கள் குடும்பம் முழுதும் பட்டினி கிடந்து இந்த குடும்பத்துக்கு உணவளித்ததே..? என்ன உலகம் இது.. என்ன மனுஷி இவள்.. ? மன சாட்சி இருக்கா இவளுக்கு.. ?அம்மாக்கு இதெல்லாம் பழகி விட்டதோ?

நிலாவுக்கும்..பவித்ராவுக்கும் உலகம் புரிய ஆரம்பித்தது.

நீங்க வீட்டுக்குப் போங்க சித்தி.. நாங்க கோயிலுக்குப் போயிட்டு வரோம் என சொல்லி பெரிய கோயிலுக்குச் சென்றார்கள்.

நடக்க முடியாமல் அவர்களின் கால்கள் துவண்டன. சன்னதி எதிரில் உட்கார்ந்தார்கள்,.

சித்தி மற்றும் சித்திப் பெண்களால் நடத்தப் பட்ட இந்த துரோக நாடகம் ஆழமாய் நெஞ்சில் பதிந்தது . அந்த காயத்தில் இருந்து கசிந்த ரத்தம் நிறமிழந்து அவர்களின் கண்ணீராய் வழிந்தது. எவ்வளவு கட்டுப் படுத்தினாலும் அழுகை வந்துக் கொண்டே இருந்தது.

“ரெண்டும் சின்ன வயசாத்தான் இருக்குதுங்க .. கல்யாணம் ஆகலன்னு இப்பவே கோயில்ல வந்து அழுவுதுங்க”- என சொல்லியபடி நடந்தனர் சில பக்தர்கள்.
--------------------------------------------------------------------------------------------------------












Saturday, April 16, 2011

மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப் படுகின்றன - அத்யாயம் 4

அதி காலையிலேயே,பூக்களின் வாசம் குளுமையான காற்றோடு கலந்திருக்கும் ப்ரம்ம முஹுர்த்தத்தில், தோழிகளின் கலகலப்பான சிரிபொலிகளின் இடையே , பலவித உணர்வு கலப்பினூடே, கரம் பற்ற போகிறவரின் கடைவிழி பார்வையை கலந்து, மலர் மாலையோடு அவரின் பக்கத்தில் அமர்ந்து, கழுத்தில் மாங்கல்யம் புனையப்பட வேண்டுமென அவள் செய்த கற்பனைகள் எதுவும் அவளது திருமணத்தில் நடக்கவில்லை. நல்ல வெயில் ஏறிய 9-10.30 முஹுர்த்தம்.

ஒரு சிறிய மலைக் கோயிலில், பனியில் நனைந்த கருங்கல் படிக்கட்டுகளில், பட்டு புடவை சரசரக்க, புது தாலிச்சரடு மினுமினுக்க கணவனின் விரல்களை பற்றியும் பற்றாமலும் நடந்து செல்லும் கல்யாணப் பெண்ணை பார்க்கும் போதெல்லாம், நாமும் இப்படித்தான் கல்யாணம் முடிந்ததும் கணவனுடன் முதன் முதலில் நடந்து செல்லும் இடம் கோயிலாகத்தான் இருக்கவேண்டும் என விரும்பியிருக்கிறாள் .ஆனால் அவள் திருமணம் நடந்ததோ புழுதி பறக்கும் மாநில நெடுஞ் சாலையில் இருந்த ஒரு பழைய திருமண மண்டபத்தில்.

“ உன் மாமியார் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கனும்னு சொன்னாங்க.. இந்த சத்ரம் தான் காலியா இருந்தது.. உடனே அங்க இங்க பிரட்டி பணத்த கட்டினோம்..” - தம்பியின் விளக்கம்..

திருமணம் நிச்சயமாகியதுமே “ மொதல்ல மேரேஜ் அட்வான்ஸ் அப்ளை பண்ணி.. பணத்தை கொண்டா..” என அலுவலகத்திற்கே வந்து அட்வான்ஸ் பணத்தினை வாங்கிக் கொண்டவன் இவன்.. அம்மா இவளது திருமணத்திற்காக போதுமான அளவுக்கு ரொக்கமாக பணம் சேர்த்து வைத்திருந்தாள் என்று மட்டும் இவளுக்கு தெரியும்.. ஆனாலும் இவளது திருமணத்தை காரணம் காட்டி புற நகரில் அம்மாவும் அவளது அண்ணனும் பக்கத்து பக்கத்து மனைகளாக வாங்கி போட்டிருந்ததில் ,அம்மாவின் மனையை வந்த விலைக்கு விற்று பணமாக்கினர் அப்பாவும், தம்பியும். இவளின் அப்பாவுக்கும் மாமாவுக்கும் ஆகவே ஆகாது.

“நாலும் பையனா பெத்துட்டான்னு திமிரு .. நான் என் பொண்ண கிணத்துலயாவது பிடிச்சி தள்ளுவேனே ஒழிய அவன் பசங்களுக்கு தரவே மாட்டேன்”. – அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை வான வெளியில் செல்லும் தேவதைகள் கேட்டு “ததாஸ்து” என்று சொன்னதாலோ என்னவோ.. மாமாவும் பெண் கேட்டு வரவில்லை.. பாழுங்கிணறும் நகர்ந்து வந்து அவளை விழுங்கிக் கொண்டது.

“இந்த வீடே வேண்டாம்.. நல்லவர்களோ.. கெட்டவர்களோ.. இனி என் உலகம் என் கணவர் வீடு.. இவர்களிடம் எதுவும் எதிர் பார்க்கக் கூடாது, வாழ்ந்து காட்டணும் “- என அவள் தீர்மானித்த போதும், உன் வாழ்க்கையை தீர்மானிக்க நீ யார் என்றது விதி.. அவள் எதிர் பார்த்ததை விட அவளின் புக்ககத்தினர் கெட்டவர்களாக, நய வஞ்சகர்களாக, ஈவு இரக்கமற்றவர்களாக இருந்தார்கள். அதை அவள் புரிந்துக் கொள்ளும்முன் காலம் கடந்திருந்தது.

பெண் குழந்தைகளை தன்னந் தனியாக, ஒற்றை குழந்தையாக வளர்க்கவே கூடாது. தனக்கு என்ன வேண்டும், அதை எவ்வாறு கேட்டு பெற வேண்டும் என்பது தெரியாமலும், வெளி உலக மனிதர்கள் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்பதை புரியாமலும் வளரும் பெண் குழந்தைகள் இந்த மோசமான சமுகத்தால் அழிக்கப்படுவது உறுதி.

இரண்டு , முன்று சகோதரிகளுடன் பிறந்து வளரும் பெண் பிள்ளைகள் போட்டியிடும் குணத்துடனும், போராடி வெல்லும் திறமையுடனும் வளர்கிறார்கள். முதல் நிகழ்விலேயே ..” ஓ.. இவர் இப்படி பட்டவரா?” என புரிந்துக் கொண்டு மனிதர்களை எளிதில் கையாளுகிறார்கள். சகோதரிகளின் வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு எதையும் எதிர் கொள்ளும் திறன் கொள்கிறார்கள்.

“ என்னடி இது..? நித்யா பதினாலு .. பதினைஞ்சு வயசு வித்யாசத்தில இருக்கரவர கல்யாணம் பன்னிக்கிட்டா? இப்பவே வயசு வித்யாசம் பளிச்சுன்னு தெரியுது“ – தான் தனது அலுவலக சக ஊழியையின் திருமணத்தில் தனது தோழியுடன் பேசியது பவித்ராவின் நினைவுக்கு வந்தது

“ நித்யாவுக்கு ரெண்டு அக்காங்க.. சின்னவங்களா, ரெண்டு வயசு வித்யாசத்துல இருக்கனும்ணு, ப்ரைவேட் வேலயா இருந்தாலும் பரவா இல்லை, வெளிய தெருவில போனா ஜோடி பொருத்தம் நல்லா இருக்கனும்னு அவங்கப்பா கல்யாணம் செஞ்சு வச்சாராம்.. இப்போ வேலை நிரந்தரமில்லாம.. வேற வேற கம்பெனி மாறினாலும்.. சாப்பாட்டுக்கு கஷ்ட்டமாம்.. அதான் நித்யா பார்த்தா.. அக்கா ரெண்டு பேரும் படற கஷ்ட்டத்துக்கு.. வயசு வித்யாசம் பெரிய ப்ரச்சினையில்ல.. கவெர்ன்மென்ட் வேலை இருக்கா.. சொத்து பத்து இருக்கான்னு பார்த்து இந்த மாப்பிள்ளயே வேனும்னு கல்யாணம் செஞ்சுக்கரா..” – என நீண்ட விளக்கமளித்தாள் பவியின் தோழி.

இது போல் தானே தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.. “எனக்கு அம்மா அப்பா நல்ல இடமாத்தான் பார்ப்பாங்க.. அது அவங்க ப்ராப்ளம் …அம்மா பார்த்து பார்த்து செலெக்ட் பன்னிட்டு இருக்காங்க எனக்காக..” என தான் அன்று நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பது இப்போது புரிந்தது. இப்போது புரிந்து எந்த பயனுமில்லை என்பதும் அவளுக்கு தெரிந்தது.

தனியாக அடக்கி வளர்க்கப்பட்ட பெண் குழந்தைகளே எளிதில் ஏமாற்றப் பட்டு, சுரண்டப்பட்டு, கடவுளாக பார்த்து காக்கவில்லையெனில் மண்ணிலேயே அடக்கம் செய்யப்படும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

பாரதி சொன்னபடி பெண்ணே “ ரௌத்திரம் பழகு”. பொறுமை பெண்களுக்கு அணிகலனே இல்லை.. கை விலங்கினை வளையல் என அணிந்து கொள்ளாதே. உனது சவ ஊர்வலத்திலேனும் அது கழட்டப்படுவது இல்லை.

வெகுளியாய் வளர்த்து திருமணம் என்ற பெயரில் காட்டு ஓநாய் கூட்டத்தில் தன் ஒரே மகளை அனுப்பும் படித்த தகப்பனைவிட, மூன்று சொட்டு எருக்கம் பாலை கொடுக்கும் ஏழை பாமர தகப்பன் மிக நல்லவன். தனது மகளின் மேல் உண்மையான பாசம் வைத்தவன் அவன். அதனால் தான் மன வலியோ, துரோகத்தின் வலிகளோ தெரியாத பருவத்தில் அக் குழந்தையை அவன் நிம்மதியான மரணத்திற்கு அனுப்பி வைக்கிறான்.

“ தாய் இல்லா பொண்ணு சீர் இல்லாம போகுது.. அவ அம்மா இருந்திருந்தா இதுக்கு சம்மதிப்பாளா? தவமா தவமிருந்து பெத்தாளேடி அவ..!! டாக்டரு.. எஞ்சினீயருன்னுதான் மாப்பிள்ளை பார்ப்பேன்னு சொல்லிட்டு இருந்தாளேடி அவ.. இருபத்திஅஞ்சு வயசு வரைக்கும் காக்க வச்சு, இந்த இடத்திலயா கொடுப்பான் இவ அப்பன் , ஒரு தாய் ஆயிரம் தகப்பனுக்கு சமம்.. ஆனா ஒரு தகப்பன் அரை தாய்க்கு கூட சமமில்லை.. என்னமோ போ..இவ தலை எழுத்து இப்படியா ..? இந்தப் பொண்ணை நினைச்சா கண்ணுல ரத்தம் வருதுடி..”

“ மாமியார்காரிய பாத்தியா .. ஸ்கூல் டீச்சரா இருந்து ரிட்டையர் ஆனவளாம் .. பசங்களை மிரட்டர தோரணையிலேயே இவ அப்பனயும் இவ தம்பியையுமே இப்படி மிரட்டறா.. பவி வாய் செத்தது.. அத என்ன பாடு படுத்தப் போறாளோ..? அவ கொண்டயும், அவ ஹேன்ட் பேக்கும்.. ராத்திரியில எதுக்குடி அவ கூலிங்க் க்ளாஸ் போட்டுக்கறா? –

“ஆறு மாசத்துக்கு முன்னாடி காட்ராக்ட் ஆபரேஷன் நடந்ததாம் “

“பவி கடைசி மருமகளா போறா.. மூத்தது, ரெண்டாவது, மூனாவது மருமகளுங்கள காணவே காணோமேடி !! “

“மாமனாருக்கு அவங்கள பிடிக்காதாம்.. அதனால கல்யாணத்துக்கே கூப்டலயாம்”

“ ஒரே நாத்தனாரு, வயசில பெரியவ, மூனாம் பெறப்புன்னு சொன்னாங்க.. அவளயும் மாப்பிள்ள அழப்பில காணோம்.. நாளைக்கு தாலிகட்டும் போது வெளக்கு யார் புடிப்பாங்க..?

“மாப்பிள்ளைக்கும் அவங்க அக்காக்கும் ஆகவே ஆகாதாம்..கூப்டா கூட வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். மாப்பிள்ளைக்கு நேர் மூத்தவர் இருக்கார் இல்ல..?

“ ஆமா.. பேங்க்ல வேலை செய்யறதா சொன்னாங்க”

“அவருக்கு அந்த வேலய வாங்கி கொடுத்ததே நாத்தனார்தானாம்.. இந்த மாப்பிள்ளயும் கொஞ்சம் மதிச்சு நடந்திருந்தா பெரிய தனியார் கம்பேனில வேலை வாங்கி தற்றதா இருந்தாங்களாம்.. இவர்தான் அக்கான்னாலே சிடு சிடுன்னுவாராம்”

“ இதெல்லாம் உனக்கு யார் சொன்னா?”

“அவங்க வீட்டு வேலைகார பாட்டி தான் சொல்லுச்சு..அவ மருமவ என் வீட்ல தான வேலை செய்யறா”

தாய் வழி பாட்டிகள், அத்தைகள் கல்யாண சத்திரத்தின் மாடியில் நின்று புலம்பியதை அவர்களுக்கு போர்வையும் தலையணையும் கொண்டு சென்ற பவித்ரா கேட்டுக் கொண்டுதான் நடந்தாள்.

“அவர்களின் அனுபவ அறிவு என்னைவிட பல விஷயங்களை அவர்களுக்கு புரிய வைத்திருக்கிறது. கல்யாணம் என்பது இவ்வளவு கடினமான விஷயமா?”… பவித்ராவுக்கு எதிர் காலத்தை நினைத்தால் பயமாக இருந்தது.

சிறு வயதில் பக்கத்து வீட்டு பெண்ணோடு கோயில் குளத்தில் விளையாடிய தருணத்தில் சர்ரென்று தண்ணீரில் முழ்கும் போது ஏற்பட்ட ஒரு நொடி உயிர் பயம் இப்போது வந்தது. தனது அலுவலகத்தில் நடந்த சில கல்யாணங்களையும், அந்த பெண்களின் இனிய முகங்களயும் பார்த்த போது கல்யாணத்தின் மீது வந்த நம்பிக்கை இப்போது கடைசி நிமிட மெழுகுவர்த்தியாய் கரைந்தது.

நாளை காலை கல்யாணம் முடிந்துவிடும்.. கடவுளே.. ஏதாவது நடந்து இந்த திருமணம் நின்று விடக் கூடாதா?..
என்னை காப்பாற்று முருகா…

அவளது வேண்டுதலை கேட்க கடவுள் அங்கு இருந்தார் …ஆனால் விதி என்ற அரக்கன்

“ ஷ்.. இது என்னுடைய விளையாட்டு.. நான் தான் சோழியை உருட்டுவேன்” ..- எனக் கூறி பவியின் வாழ்க்கையை புரட்டிப் போட்டான்..

அவள் அதல பாதாளத்தில் உருண்டு உருண்டு சென்று கொண்டே இருந்தாள்.
தொடரும்….

Wednesday, January 05, 2011

மீண்டும் வருகின்றேன்

இலக்கிய வானில் எழுத்துச் சிறகசைத்துப் பறக்க மீண்டும் வந்திருக்கின்றேன்.

2006
ஆம் வருடம் மே மாதம் 23 ம் தேதி ' மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப் படுகின்றன - அத்யாயம் 3' என்ற கதையினை(!!!!??) பதிந்திருந்தேன், இதோ இன்று 5.1.2011 அன்று மீண்டும் வந்திருக்கின்றேன்.

அன்றிலிருந்து இன்றுடன் சரியாக 4 வருடம் 7 மாதம் 12 நாட்களை சுவாசமின்றி வாழந்திருக்கின்றேன் என்றே நினைக்கின்றேன்.

(
இலக்கியம் இவங்களுக்கு உயிர் மூச்சாம் ....அதை சிம்பாலிக்கா
சொல்றாங்களாம் ... கணக்கு விவரமெல்லாஞ் சரியாத்தான் இருக்கு அம்மணி ஆனா உங்க பிளாக்கை படிச்ச அனைவரும் 108 ஆம்புலன்ஸ்ல உயிருக்கு போராடிட்டிருக்கறது தெரியாம எழுதிட்டிருக்கீங்களேம்மா.... என்று நீங்கள் கத்திக் கமறுவது குத்தி குமுறுவது எல்லாம் எனக்கு மனக்கண்ணில் தோன்றுகிறது. இதையெல்லாம் கண்டுகிட்டா என் வலைப் பூ எப்படீங்க கொலைப் பூ ஆகும்? !)

சக வலைப் பதிவ‌ர்கள் வெகு தொலைவில் பயணிக்கும் போது இந்த சின்னஞ் சிறு சிறகுகள் பறக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என தெரிகிறது.

( ‌
தெரியுதில்ல.. லேட்டா வந்துட்டோமுன்னு புரியுதில்லே ? லேட்டஸ்ட்டா என்ன எழுதி எங்க உயிரை வாங்க இருக்க? என நீங்கள் மிக மிக மிக மிக மிக ஆர்வமாக கேட்பது என் மனக்காதில் ஒலிக்கிறது.. (மனக் காதில் ஒலிக்கிறதா !? இன்னாமா இது !? என்று நீங்கள் கேட்டால் ... மனக்கண்கள் இருக்கும் போது மனக்காதுகள் இருக்காதா? .. கேள்வி கேக்கறத்துக்கு முன்னாடி யோசிக்கனுங்க)

எனவே மக்களே ..விரைவில் எதிர்பாருங்கள் ....அத்யாயம்-4

( 2012
ல் தான் (திரைப் படம்) உலகம் அழியறதா காண்பிச்சாங்க ..இங்க ... இப்பவே கண்ண கட்டுதே......! )