Saturday, July 30, 2005

நிலா - 2

"சார்.. நான் நிலா பேசறேன்"

"சொல்லுங்க"

"வந்து... வண்டில வரும் போது .. சின்ன ஆக்சிடென்ட்.. ஆட்டோகாரன் மேல இடிச்சுட்டேன்...கால்ல பிராக்ச்சரா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு..!"

"யாருக்கு... ஆட்டோகாரருக்கா?"

"இல்ல.. எனக்கு"

"ஸோ.. லீவு வேணும்.. அதானே..?"

"அதேதான்"

" நோ ஓ ஓ ஓ....

"என் லீவ் சார் அது.. அதை நான் தான் எடுக்கனும்"

"பட்... அதை நான் தான் சாங்ஷன் பண்ணணும்"

"சார்... ப்ளீஸ்"

"லீவ் சொல்ற நேரமா இது...? மதியம் மணி ரெண்டாகுது..திஸ் ஈஸ் நாட் பேர் நிலா"

"சார்...ப்ளீஸ்.. இந்த ஒரு முறை சாங்ஷன் பண்ணிடுங்க..சந்த்ரமுகியும்...மும்பையும் பார்த்துடுவேன்"

"திஸ் ஈஸ் டூ மச்.. நாளைக்கு காலைல ஆபீஸ் வர.. வந்து வேலை செய்ற.."

"அப்புறம் உங்க இஷ்ட்டம்.. "- என்று சொல்லி போனை வைத்தாள் நிலா

ஆனால் மறுனாள்.. அவள் அலுவலகம் போகவில்லை. கால்கள் வீங்கி, காய்ச்சலோடு நினைவிழக்கும் நிலையில் இருந்தவளை.. நந்தினிதான் க்ளினிக் அழைத்துச் சென்று அனைத்து பரிசோதனைகளயும் முடித்து.. மருந்துமாத்திரைகளை வாங்கி.. அறைக்கு அழைத்து வந்து ..படுக்க வைத்துவிட்டு..சுடுதண்ணி.. அரிசி கஞ்சி எல்லாம் செய்துக் கொண்டிருந்தாள்

"வெளுத்து கட்ற..!? என்ன மெனு..? சுடுதண்ணி, அரிசி கஞ்சி, ஆவின் பாலா? -படுக்கையில் சாய்ந்தபடி கேட்டுக் கொன்டிருந்தாள் நிலா

அவளை கண்டு கொள்ளாமல்....

" நிஜமாத்தான்... நீ வந்து பாரு சீனு.. காய்ச்சல் 102 இருக்கு... ஆனா தூங்காம, என்னை நக்கலடிசிட்டு இருக்கா" -– என்று பேசி போனை வைத்தாள் நந்தினி.

சைக்கிளில் வந்து இறங்கிய சீனு.. பயந்துதான் போனான்.

"அட இன்னாமா இது..!? இந்த மாறி கால் ஒடிஞ்சிடிச்சின்னு லீவு கேக்றத உட்டுட்டு.. சந்த்ரமுகி பாக்கணும்.. மும்பை எக்ஸ்ப்ரஸ் பாக்கணும்னு லீவு கேட்டா எந்த மேனேஜருக்குத்தான் கோவம் வராது.. மெமோ ரெடி பண்ணிட்ட்டாரு.. !!! நாந்தான் மனசு கேக்காம ஒரு போன் பண்ணி வெவரம் சொல்லலாம்னு எதேச்சையா பண்ணா.. இங்க இப்டி இருக்கு.. சரி நான் எதானும் உதவி பண்ணனுமா?" - என்றான்.

"புது படம் சீ டீ மட்டும் வாங்கித்தா சீனு.. போர் அடிக்குது " - என்றாள் நிலா.

வேகமாய் சைக்கிளில் போனான் சீனு.. அடுத்த அரை மணி நேரத்தில்.. வாசலில் ஸ்ப்ளென்டெர் சப்தம்.

" ஏய் .. நந்து.. எங்க பாஸ் ஸ்ப்ளென்டெர் மாதிரி இருக்கு..!? போய் பாரு ..- என்றாள் நிலா

அதற்குள் அறைக்குள் வந்து விட்டனர் திருவாளர் பாஸ் ம் அவரது ப்யூன் சீனுவும்.

"எதுக்குமே சீரியஸ் ஆகமாட்டியா நிலா நீ? "- கொஞ்சம் சத்தம் அதிகமாகத்தான் வந்தது ஷிவாவிடம் இருந்து

சார்.. முதல்ல உக்காருங்க... சூடா சுடு தண்ணி சாப்ட்றீங்களா ..?- என்றாள்

" நேத்தே என்கிட்ட ஏன் சொல்லல..?

" போன்ல சொன்னேனே சார்..!

"ஏதோ...காமெடி மாதிரி சொல்லிட்டிருந்த"..?

"ரெண்டு தடவை ப்ளீஸ்.. ப்ளீஸ்னு கெஞ்சினேனே சார்..! அந்த சென்டிமென்ட் போதாதா...?

"சரீ.. சரீ.. டாக்டர் என்ன சொன்னார்..? ப்ராக்சராமா?"

"ஒன்னும் இல்ல...மஸ்ஸில்ஸ் இஞ்சுரிதான்..ரெண்டு நாள் முழு ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லி இருக்கார்"- என்றாள் நந்தினி.

"சார்... நீங்க செகன்ட் மெமோ ரெடி பண்ணிடுங்க -" என்றாள் நிலா.

"ஏன்..? எதுக்கு...?

" நீங்க என் பாஸ்... நீங்க நிக்கும் போது நான் பெட்ல ஸ்டைலா சாஞ்சுகிட்டே லீவ் கேக்கறேன்... ஒரு மட்டு மரியாதை வேண்டாமா? திஸ் இஸ் நாட் பேர்.. நீங்க ரெடி பண்ணிடுங்க.. நான் லீவு முடிஞ்சி வந்து வாங்கிக்கறேன்" - என்றாள் நிலா.

" மரியாதை மனசில இருந்தா போதும்.. சீனு வா என் கூட "- என்றபடி வெளியில் நடந்தார் ஷிவா.

அடுத்த அரை மணியில் ஒரு காம்ப்ளான், கொஞ்சம் பழங்கள், ரெண்டு பாலகுமாரன் நாவல்கள், இரண்டு புது பட சீ.டீ க்கள் ஆகியவற்றை வாங்கி சீனுவிடம் கொடுத்தனுப்பிவிட்டு அலுவலகம் சென்றதாக கேள்வி.

"என்னடி இது..! இவ்ளோ கைண்டா உங்க பாஸ்? அன்னிக்கு...அப்டி திட்டுன..? என்றாள் நந்தினி.

நிலாவுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.. என்ன இது... நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோமா..? இல்ல நேத்து போன்ல கத்தினது மனசை உறுத்தி செய்ற ப்ராயசித்தமா..? - அவளை மேலே சிந்திக்க விடாமல்..” என்னை எடுத்துப் படியேன் நிலா’’ என்று பாலகுமாரன் நாவல்கள் அவளது கருத்தைக் கவர்ந்தன.

ஆமா எனக்கு பாலகுமாரன் நாவல்ஸ் பிடிக்கும்னு எப்டி தெரியும் உங்களுக்கு..? வியந்தாள்... இவ்ளோ சென்ட்டியா நீங்க..? என்றும் கேட்டுக் கொண்டாள்.

உங்கள் அழகிய கருவிழி கதா நாயகி ஒரு துள்ளளோடு, நெஞ்சம் நெகிழ, நினைவுகள் தித்திக்க.. இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க..

"இது சரியில்லயே ...ஷிவா கொஞ்சம் ஓவரோ..! ரூட் மாறுதோ.." - என்று நினைத்தனர் நந்தினியும்.. சீனுவும்...

தொடர்ந்தால்தானே தொடர்கதை எனவே அனைத்தும் ...

- தொடரும்

Saturday, July 23, 2005

நிலா

“ நாங்க எல்லாரும் கரெக்ட்டா 7 மணிக்கு லைட் அவுஸ் வாசல்ல நிப்போம்.. வேன் ரெடியா இருக்குமா..? என்னால எல்லாம் ரொம்ப நேரம் வெய்யில்ல நிக்க முடியாது.. யு சீ .. மை ஸ்கின்... ஏ சி வேன் தானே அரேஞ்ச் பன்றீங்க”” – என்றாள் வெண்ணிலா அலைஸ் நிலா.

ரொம்ப ஓவர்.. கொஞ்சம் அடக்கி வாசி – என்றான் சுரேஷ்.

சரி.. புது மேனேஜருக்கு சொன்னீங்களா? இல்லயா? டேபிளோட டேபிளா தவழ்ந்துட்டு இருந்தாரே இப்ப எப்படி இருக்கார் ? என்றாள் மீனா.

இப்பத்தான் தலயை நிமிர்த்தி வாட்ச் மேனை பார்த்து பேச பழக இருக்காரு – என்றாள் நந்தினி.

ஏய்... அத யாரு லிஸ்ட்ல சேர்த்தது? அதை டூர் கூட்டிட்டு போறோம்னு அதுகிட்ட சொல்டீங்களா..!? போச்சுடா... ஒரு நாளாவது நிம்மதியா இருக்கலாம்ப்பா... அது கருத்து கந்தசாமியாச்சே...!!.. நாளைக்கு டூர்.. டூர் தான்.. அறிஞ்சவ.. தெறிஞ்சவ..பெரியவளா ஒருத்தி இருக்கேனே.. என்கிட்ட கேக்கனும்னு தோனுச்சா உங்களுக்கு? அந்த சின்சியர் சிகாமனி வரலன்னாத்தான் எனக்கு நிம்மதி “ – என்றாள் நிலா.

Hello.. உன்னோட பாஸ் அவர்.. அது நினைவு இருக்கட்டும் - என்றாள் மது.

பாஸ்னா ஆபீஸ்ல மட்டும்தான்.. டூர்லெல்லாம் நிலா தான் பாஸ் .. ஓ கே. லவ் ஜோடீஸ் எல்லாரும் கவனமா கேளுங்க... ஓரம் கட்டி ஒதுங்கறதானா தனியா இன்னோரு நாள் போய்க்கோங்க.. நாளைக்கு எல்லாரும் வெறும் கலீக்ஸ் மட்டும்தான் .. நாட் லவ்வர்ஸ். நாட் ஜொள்ளர்ஸ்.. ஓ கே – என்றாள் நிலா.

"நீயும் லவ் பன்னிப்பாரு .. அப்ப தெரியும்... நாங்கள்ளாம் உன் கண்ணுக்கே தெரியமாட்டோம்"

கரெக்ட்.. நீங்க சொல்றது ரொம்ப சரி – என்றாள் நிலா.

நிலாவா...? நிலாவா இப்படி ..?மறு பேச்சு பேசாமல் ஆமோதிப்பது?
என்னச்சு நிலா உனக்கு.. உடம்பு சரியில்லயா..? எதிர்த்தே பேசல?- என்றான் ஜோஸ்.

எப்டி தெரிவீங்க..? காதலுக்குத்தான் கண்ணில்லயே ?- என்றாள். பின்பு அங்கிருந்த மாடிப்படிக்கட்டில் இரண்டு படிகள் ஏறி நின்று "அப்புறம்.. கேர்ள்ஸ்.. இங்க கவனிங்க எல்லாரும்.. நாளைக்கு நாம எல்லோரும் லைட் கலர் ப்ரின்டட் சில்க் சாரிலதான் வரோம்.. ஜிமிக்கி அன்ட் ஜாஸ்மின் மஸ்ட்."

"கடவுளே... கொடுமைடா... இதுங்க சாரி கட்டிகிட்டு வந்து.. தடுக்கி தடுக்கி விழுந்து.. நாம அத பார்த்து.. நிலா நாளைக்கு நாம போப்போறது இன்ப சுற்றுலா.. அதை துன்ப சிற்றுலாவாக்கிடாத – என்றான் சுரேஷ்.

"சுரேஷ்... ப்ளீஸ்.. தென்... பாய்ஸ் நீங்கல்லாம் ஜீன்ஸ் அன்ட் ப்ரீக் டீ ஷர்ட்தான் போட்டுட்டு வரனும்.. முக்யமா .. வருஷத்துல ஒரு நாளாவது குளிங்க.. அந்த பொன்னாள் நாளைக்கா இருக்கட்டும்.. ஏன்னா 3 கோயிலுக்குப் போகப் போறோம் - என்றாள் நிலா.

போதும் நிலா... Head மாஸ்டர் போல நடந்துக்காதே – என்றான் ஜோஸ்.

"அப்ப... கருத்து கந்தசாமி...? என்றாள் நந்தினி.

அது மஞ்சள் அன்ட் மஞ்சள் சபாரில வரும் பாரு... நிச்சயதார்த்ததுக்கு போறா மாதிரி – என்றாள் நிலா.

"போதும் நிலா.. இதெல்லாம் அப்டியே உன் பாஸ் காதுக்கு போகப் போவுது"

மொத்தம் இருபது பேர்.. பன்னிரண்டு ஆண்கள், எட்டுப் பெண்கள்.. இளம் காலையில் குளிர் காற்று முகத்தில் பட வேகமான பயணம்... வழியில் இருக்கும் மூன்று கோயில்களையும் .. இறுதியாக மகாபலிபுரத்தை பௌர்ணமி உதயத்தில் பார்த்துவிட்டு திரும்புவதாக திட்டம்.

எட்டு மணிக்கெல்லாம் முதல் கோவில். என்ன ஆச்சர்யம்... முதல் படிக்கட்டு வரை தளும்ப தளும்ப தண்ணீர். சிலுசிலுவென காற்றில் சிணுங்கும் சிற்றலைகள் காற்றோடு செல்லம் கொஞ்சின. "இவ்ளோ தண்ணீர் தளும்பும் குளம் தமிழ் நாட்டில் இருக்குதா ?"என்ற கேள்வியோடு சில்லென்று கால்களை நனைத்து, கைகளால் அளாவி விளையாடி அந்தக் குளக்கரையிலேயே நின்றுக் கொண்டிருந்தனர் நிலா குழுவினர். காணாததை கண்டதுப்போல குளத்தை இவர்கள் வேடிக்கைப் பார்க்க இவர்களை உள்ளூர்க்காரர்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

ஆனால் ஒரே ஒருவர் மட்டும்... கோவில் குளத்து நீரில் கால்களை நனைக்காமல், கைகளால் அள்ளி தலையில் தெளித்துக் கொள்வதும், எதோ முணுமுணுத்துக் கொண்டே கால்களை நனைத்துக் கழுவுவதுமாய் இருந்தார். அவர் வேறு யாரும் அல்ல நிலாவின் பாஸ்தான்.

“ நிலா உன் பாஸை பாரேன்... ஸ்லோகம்லாம் சொல்றாரு...தீர்த்த யாத்ரைக்கு வந்த எபெக்ட் தராரு...!?

"அவங்க அம்மாவோ மிஸஸோ சொல்லி தந்திருப்பாங்க.. அதை பாலோ பன்றாரா இருக்கும்.. எங்க பாட்டி கூட சொல்லுவாங்க.. கோயில் குளத்தில இறங்கும் போது கோயில் தீர்த்தத்தை அவ மரியாதை பன்ற மாதிரி காலை முதல்ல நனைக்க கூடாது, கையால தண்ணியை எடுத்து தெளிச்சிக்கிட்டு அப்புறம் இறங்கி குளிக்கனுன்ம்னு..."

என்ன... பாஸ் மேல திடீர் கரிசனம்.. விட்டு தரவே மாட்டேங்கற...?

Hello... நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டனும் புரிஞ்சுதா ? அதை விடு.. இந்த இடம்.. இந்த கோவில்.. கல் படிக்கட்டு.. சில்லுன்னு குளம்.. இதெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு.. அமைதியா.. நிம்மதியா இந்த குளக்கரைல உக்கார்ந்திருந்தாலே போதும்..எவ்ளோ இருந்தாலும் நகரம் நரகம் தான் –என்றாள் நிலா

ரெண்டு நாள் தான் ... அப்புறம் போரடிச்சுடும் நிலா என்றார் அவளது பாஸ்.

வானத்தைப் பார்த்தாள், பின்பக்கம் திரும்பி பார்த்தாள், நந்தினியை விலக்கி அவளின் பின்னால் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தாள்... குரல் வந்த திசையை மட்டும் சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் நிலா.

என்ன தேடற நிலா?

இல்ல.. என்னோட பாஸ் ஒருத்தர் எங்க கூட வந்தார் அவரைக் காணோம்.. ஆனா அவர் குரல் மாதிரித்தான் இருந்தது இப்ப..

Hello.. நாந்தான் பேசினேன் இப்ப என்றார்

நெவெர் ... அவர் பேச ஆரம்பிச்சா ஒரே ஒரு ஸென்டென்ஸோட நிறுத்தி பழக்கமே இல்ல.. அதுவும் எண்ணி ஐஞ்சு வார்தைகள் போட்டு ஒரே ஒரு சென்டென்ஸ் பேசி நிறுத்தறது கண்டிப்பா அவர் இல்ல..எங்க தொலைஞ்சாரோ.. அவரோட காவிய கருத்துக்களை கேக்காம இந்த சுற்றுலா வெற்றுலாவா ஆய்டும் - என்றாள்.

உனக்கு வாய் அதிகம்னு நான் ஜாய்ன் பண்ணும் போதே சொன்னாங்க.. ஆனா இவ்ளோ வாயாடியா இருப்பன்னு நான் கற்பனை கூட பண்ணல என்றார்.

ஆங்.. இப்ப.. இப்ப பேசினது எங்க பாஸ்தான்.. திரும்ப கிடைச்சிட்டீங்க - என்றாள்

எல்லோரும் கோவிலுக்குள் நுழைந்து எதோ போனால் போகட்டுமென கடவுளை வணங்கி வரும் போது, அவர்களது பாஸ் எனப்பட்டவர் கோவிலின் முதல் படிக்கட்டில் துவங்கி, ஒவ்வொரு சன்னிதியிலும் நின்று தொட்டு தியானித்து, சேவித்து, கண்மூடி, விழுந்து, எழுந்து, ஸ்லோகம் சொல்லி வணங்கி வருவதற்குள் வெறுத்துத்தான் போய் விட்டனர் மற்ற அனைவரும் .

“ இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இதை கழட்டி விட்டுடலாம்னு... நீங்க தான் கேக்கல... என்னொட பாஸ் அது.. முழுசா ஒரு மாசம் அது கிட்ட வேலை செஞ்சிருக்கேன்.. அது எந்த அளவுக்கு ராவல் பார்ட்டின்னு எனக்குத்தான் தெரியும்.. சரியான கருத்து கண்ணாயிரம்பா அது.. இப்ப பாரு... இங்கயே உக்காந்து அபிராமி அந்தாதி பாடப் போகுது.. கடவுளே அதுக்கு ஸ்லோகம்லாம் மறந்துடனும், உன் கிட்ட சொல்றத்துக்கு ஒரு ஸ்லோகம் கூட நியாபகமே வரவே கூடாது “” – என்று சத்தமாக வேண்டிக் கொண்டாள் நிலா.

மேற்படி கலாய்ச்சலுக்கு ஆளான அந்த பாஸ் ஐம்பது வயதை கடந்த, தலை நரைத்த, கண்ணாடிப் போட்ட வள் வள் வள்ளல் என நீங்கள் நினைத்திருந்தால் .. சாரீ நீங்கள் இந்தக் கதையை படிப்பதை இத்துடன் நிறுத்திக் கொண்டு.... இதற்கு பதிலாக கம்ப இராமாயணமோ, பதிற்றுப் பத்தோ, குற்றால குறவஞ்சியோ படிக்கலாம்...தப்பில்லை.

இருபத்தி மூன்று வயதான நிலாவின் புதூ பாஸாக வந்த அவருக்கு மிஞ்சிப் போனால் ஒரு முப்பது.. அல்லது முப்பத்தி இரண்டு இருக்கும். திருச்சியிலிருந்து மனைவி, மகளுடன் போன மாதம்தான் சென்னை வந்து செட்டில் ஆனார்.வந்த புதிதில் குனிந்த தலை நிமிரா குணக்குன்றாக இருந்தவர்.. இப்போதுதான் ப்யூன் சீனுவை தலை நிமிர்ந்து பார்த்து பேசி பழக ஆரம்பித்திருக்கிறார்.. மற்றவர்களுடன் சகஜமாகப் பழக இன்னும் ஒரு மாமாங்கம் ஆகும். அதுக்கும் அடுத்தாப்ல..முக்யமா பொண்ணுங்க.. சைட் அது இதுன்னு ஆரம்பிக்க அடுத்த ஜென்மம் ஆகலாம்.. இல்ல அதையும் தாண்டி போகலாம்.

விழுந்து புரண்டு வேண்டிக் கொண்டு வந்தவரை நிறுத்தி

"சார்.. நீங்க ஆன்மீக பற்றோடு இருங்க.. வேண்டாங்கல... அதுக்காக அங்கப் ப்ரதட்சனமெல்லாம் இப்டி ஆபீஸ் டூர் வரும் போதே முடிச்சுக்கறது .. அவ்ளோ நல்லால்ல ஸார்" – சொல்லியே விட்டாள் நிலா.

ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

அடுத்த கோவில்களிலும் அவரது நடவடிக்கைகளை கவனித்த போதுதான் வெளி தெரியாத சோகம் அவரது கண்களில் நிலைப்பதை கவனித்தாள் நிலா.

என்ன சோகமோ? என்ன குறையோ...? நாம வேற ரொம்ப காலாய்க்கறோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

மாமல்லபுரத்தை நோக்கி வேன் பறந்தது...

சார் நீங்க ஒரு பாட்டு பாடுங்க - என்றான் ஜோஸ்

வேன்டாம்பா... எனக்கு அவ்ளோ பாட வராது - என்றார் பாஸ்.

பாஸ்... பாஸ்னா அவ்வளவு அன்யோன்யமா இல்லை.. ஸோ .. இனி அவரோட பேராலயே அவர் அழைக்கப்படுவார்.. அதாவது சிவக்குமார் அலைஸ் ஷிவா.

"கச்சேரியா கேக்கறோம்.. சும்மா எதாவது சினி சாங் பாடுங்க சார்.

" ஸார்.. நீங்க..பாடுங்க.. வேண்டாங்கல.. ஆனா.. தயவு செஞ்சு.... ஆதிபராசக்தி.. அகிலாண்டனாயகி அம்மன் பாட்டெல்லாம் பாடிடாதீங்க சார் - என்றாள் நிலா.

சிறிது மௌனத்திற்குப் பின்அவரது hummingலேயே கண்டு பிடித்துவிட்டார்கள்.. அது மௌனராகம் – நிலாவே வா என்று. அருமையாகப் பாடினார். ரேவதியும் மோகனும் நினைவில் நிழலாடினார்கள்.பாட்டு முடிந்த பின்னும் நீண்ட மௌனம். அந்த மௌனத்தை கலைக்க யாரும் விரும்பவில்லை. வேகமாய் ஓடிய வேனின் ஓசை மட்டுமே எஞ்சியது.

"என்னாச்சு... ?உயிரோடத்தான் இருக்கீங்களா எல்லாரும்.. ?இதுக்குத்தான் நான் பாடமாட்டேன்னு சொன்னேன்... – என்றார் சிவா.

எக்சலன்ட் சார்.. சூப்பர்ப்- ஜோஸ் தான் மௌனத்தை உடைத்தான். நிலாவுக்குப் பேசுவதற்கு எதுமில்லை ...அவளே ஒரு பாடல் நாயகி...M.D யே ரவுன்ட்ஸ் வந்தாலும்.. முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தமாட்டாள்..அவளுக்கு வந்திருக்கும் புது பாஸ் இவ்வளவு அருமையாக பாடுபவர் என்றால்..!?.. அவள் ஆனந்த அதிர்சியில் நிற்காமல் என்ன செய்வாள்?.

ஸோ.. நிலாவை பேசாம செய்யனும்னா ஒரு பாட்டு பாடினா போதும்.. Am I right? – என்றார் சிவா.

மகாபலிபுரம்.... எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத மகாபலிபுரம்.. பௌர்ணமி நிலவொளியில் குளித்த கல் கோபுரங்கள்.. வெண்பட்டுப் போன்ற கடல் அலைகள்...காற்றின் குளுமையில் மெய்மறந்து நிற்கையில்

"ம்...ம்.. நேரமாச்சு.. கிளம்புங்க.. நிலா நீ ரொம்ப நேரமா தண்ணில நிக்ற... போதும் வா" - என்றார் சிவா.

"இங்கேயும் தாந்தான் பாஸ்ங்றதை நிரூபிக்கிறார்" - என்றாள் நந்தினி.

சென்னை திரும்பும் போதும் அழகிய பாடல்களால் அந்தப் பயணம் உயிரூட்டப்பட்டது. "நாளைக்கு ஒழுங்கா ஆபீஸ் வந்து சேரு.."என்ற சிவாவின் அதட்டலோடு நிலாவை அவளது அறை வாசலில் இறக்கிவிட்டு சென்றது அந்த வேன்.

தன்னுடய அறையில்.. குளிக்கும் போதும்.. உறக்கம் வரும் வரையும் அந்தப் பாடல்களையே நினைத்துக் கொண்டிருந்தாள் நிலா..

நினைவுகளுக்கு எதேனும் எல்லை உண்டா என்ன..? பாடல்களோடு சேர்த்து.. அப்பாடல்களை பாடிய சிவாவையும்... அவரது அழகிய முகமும்...அந்த முகத்தில் மின்னும் அழகிய கண்களும்.. நேவி ப்ளூ டீ ஷர்ட்டும்.. அதை அணிந்திருந்த அகன்ற தோள்களும்... நினைவுக்கு வந்தன நிலாவுக்கு.

நினைவுகளை நிறுத்தும் வழி தெரியாமல் வியந்தாள்.. வேறு விஷயங்களில் சிந்தனையை செலுத்தினாலும் மீண்டு வராத மனதை என்னதான் செய்வது?

மகாப் பெரிய முனிவர்களும், ஞானிகளும் மேரு மலையில் டென்ட் போட்டு உக்காந்து ட்ரை.. ட்ரை.. ட்ரை செய்த சிந்தனை அற்ற மோன நிலையை ...இருபத்தி மூன்று வயதில், ஆடி.. பாடி டூர் போய்விட்டு வந்த பௌர்ணமி முன்னிரவில் அடைய வேண்டும் என உங்கள் திராபை கதா நாயகி நிலா நினைத்தால்..." இது ஆவறதில்ல.." என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது...?
-------------------------------------------------
தொடரும்

Saturday, July 16, 2005

நினைவுப் பெட்டகம் - 5

கோயிலுக்கு போயிட்டு வரேன்... பத்ரமா இருந்துப்பியா? இல்ல... நான் போகாம நின்னுடட்டுமா..? நீ தேறி எழுந்தா.. மாவெளக்குப் போடறேன்னு வேண்டிக்கிட்டேன்.. ஒரு வாரம் கழிச்சு எழுந்து உக்காந்திருக்க.. வெள்ளிக்கிழமை அதுவுமா இன்னைக்கே போட்டுட்டா நல்லது " - என்றாள் அம்மா

ஒரு வாரமா...? ஆமாம்.. அவன் மெசேஜ் படித்து அழுதது போன வெள்ளிக்கிழமை தான் என நினைவு வந்தது. நான் இருந்துப்பேன் மா.. நீ போய்ட்டு.. நிதானமா வா - என்றாள்

வாழ்க்கையின் வண்ணங்களையும், சுவைகளையும் சுருட்டி வான்வெளியில் எறிந்துவிட்டு வெறுமையாய் உயிர் மட்டும் சுமந்திரு என கட்டளையிட்டுவிட்டு நின்றுவிட்டான் அவன். சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை பளாரென முதுகில் அறைந்ததைப் போல விக்கித்து நின்றுவிட்டாள் இவள். நான்கு நாட்கள் உடல் கருக்கும், உள்ளம் உருக்கும் காய்ச்சல்.. சுருண்டு போனாள் அவள்.

அம்மா நெய் கிண்ணம், வெல்லம் அரிசிமாவுமாக கிளம்பிவிட்டாள்.. போகும் போது.. அருகில் வந்து நெற்றியை தொட்டு.. “ சுத்தமா ஜுரம் போயிட்துடீ.. மத்யானம் பருப்பு ரசம் போட்டு சாதம் கரைக்கரேன் குடிச்சுடு” என்று சந்தோஷமாகச் சென்றாள்.

அம்மா கிளம்பியதும்.... மெல்ல நடந்து சென்று தனது செல்லை எடுத்துவந்தாள்... அணைந்து போய் வெறுமையாய் இருந்தது.. அதற்கும் உயிரூட்ட வேண்டும். அப்போதெல்லாம் ப்ளக் பாயிண்ட்காக வெட்டு, குத்து கொலை பழி நடத்தி, தம்பியை சண்டையில் வென்று.. எவ்வளவு ஆர்ப்பரிப்போடும், துள்ளலோடும் சார்ஜ் போட்டிருக்கிறாள்..பொட்டு வைத்துக்கொள்ள மறந்திருக்கிறாள், காசு எடுத்துக் கொள்ள மறந்திருக்கிறாள்.. வாட்ச் கட்டிக் கொள்ள மறந்திருக்கிறாள்.. ஆனால் செல் எடுத்துக் கொள்ள மறந்ததே இல்லை.. அவளது ஒவ்வொரு செல்லிலும், சொல்லிலும், செயலிலும் நீக்கமற நிறைந்ததல்லவா இந்த செல்.

செல்லுக்கு மின்சாரத்தையும்.. தன் மனதிற்கு அவனது நினைவுகளையும் கொடுத்தாள்.. உயிரற்ற அந்த செல் மின்சாரம் தேக்கி உயிர் பெற்றது.. ஆணால் அவள் மனமோ அவனது நினைவினைத் தேக்கி உயிர் துடிப்பை இழந்தது.

அவன் என்னை டாமினேட் பண்ண எப்டி விட்டேன்...!? அவன் மேல நான் வச்சது நட்பா?, அன்பா? காதலா? இனக்கவர்ச்சியா?

நட்புன்னா.... அவன் போய்டுன்னு சொன்ன போது.. “ என் ப்ரண்ட்ஷிப்பை காப்பாத்திக்க உனக்கு தெரியலைன்னு சொல்லிட்டு கூலா போயிருப்பேனே?

அன்புன்னா.... அவன் போய்டுன்னு போது.. தேங்க்ஸ் பார் யுவர் மெசேஜஸ்ன்னு சொல்லிட்டு நிம்மதியா இருப்ப்பேனே...?

காதல்னா... இது காதலா? ஒருத்தனை பார்க்கவே பார்க்காம... அவன் அனுப்பும் மெசேஜை மட்டுமே வச்சு அவனை காதலிக்க முடியுமா? வெளியில சொன்னா சிரிப்பாங்க..ஆனா.. அவன் தீர்மானமா பவித்ரா பைத்தியமா இருக்கேன், ஐ லவ் யு, நீயும் என்னை லவ் பண்ணுன்னு திடகாத்திரமா நின்னானே... என்னை நேர்ல கூட பாத்தது இல்ல..! தீவிரமா இருந்தானே அது எப்டி?.. அப்படியே காதலா இருந்தா... அவன் போய்டுன்னு சொன்ன போது இதுபோல அமைதியா அதிர்ந்து போய் நின்னுடுவேனா? நான் உன்னை காதலிக்கிறேன்.. நான் ஏன் போகணும்..? நான் போகமாட்டேன்னு அவனை சந்திச்சிருப்பேனோ?

இனக்கவர்ச்சியா.. இதுவும் கிட்ட தட்ட காதலுக்கு முந்தைய ஸ்டேஜ்

அப்ப என்னதான் இது? அவன் சொல்றமதிரி டைம் பாஸ்காக பழகி இருப்பேனோ? அப்டி பழகி இருந்தா இப்டி பீவர்ல விழுந்திருப்பேனா? ஆபீஸ்லயும் டைம் பாஸ்க்காக அரட்டை அடிசிருக்கேனே..? அதுல சில பேர் முறைச்சிக்கிட்டு முகம் திருப்பிக்கிட்டு போனா இப்டியா ஜுரம் வந்துச்சு?

என்ன எழவு மண்ணுக்கு அவன் எனக்கு ராங் கால் செஞ்சான்..? அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்கு.. இன்னும் நான் மீளல..உன்னை எப்டிடா மறக்றது சுஜீ?

செல்லின் மெசேஜ் இன்பாக்ஸ் சென்றாள்.. ஒவ்வொரு மெசேஜாக படிக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. முதல் மெசேஜ் .. Hi என்ன பண்ற? – அதை படிக்கும் போது அப்போதுதான் புதிதாக படிப்பதைப்போலத் தோன்றியது அவளுக்கு.. உடலெங்கும் பரவசமாகியது.. மிகச் சாதாரண வார்த்தைகள்தான் அவை... ஆனால் என்னை நினைத்து.. என் பதிலை எதிர்பார்த்து அவன் அனுப்பிய அந்த வார்தைகளால் என் உயிர் வாழ்தல் அர்த்தமுள்ளதாகிறது.. நான் வேண்டும் என அவன் விரும்புகிறான் என்பதே சந்தோஷம் தருகிறது... இதைத்தான்... இந்த உணர்வைத்தான் அவன் அன்றைக்கு சொன்னானோ?.. அவனை ரொம்பத்தான் படுத்திட்டேனோ..? லூஸ் மாதிரி மெசேஜ் அனுப்பி அவன் உயிரை எடுத்தேனோ? அவன் என்னை போய்டுன்னு சொன்னது தப்பே இல்லை.. ஆனா நான் எங்கடா போவேன்? என்று நினைத்துக் கொண்டாள்.

சுஜீ... எனக்கு எல்லாமே புரிஞ்சுதுடா.. நானும் விரும்பாமலில்லை... ஆனாலும்.. இன்னைக்கிருந்தாலும் நான் அப்படியேத்தான் நடந்துக்குவேன்.. எல்லாம் என் அப்பாக்காக...அது.. அது..முடிஞ்சு போச்சு எல்லாம்... அது என் தலைஎழுத்து... என்னோட போகட்டும்.. நீயாவது நிம்மதியா இரு.. நல்ல வேளை நீயாவே என்னை போய்டுன்னு சொல்லிட்ட – தனக்குள் பேசிக் கொண்டாள். இதயம் கனத்து கண்கள் நிரம்பின.

ஒவ்வொரு மெசேஜாகப் படித்துக் கொண்டே வந்தாள்.. தான் அனுப்பிய பதில்களை அவுட்பாக்ஸ் சென்று படித்தாள்... வாழ்க்கையில் மிக மிக மிக முக்யமானதை.. உன்னதமானதை இழந்துவிட்டோம் என உள்ளுணர்வு சொல்லச் சொல்ல .. தங்க இயலாமல் அழுதாள்.. நெஞ்சம் வலிக்க.. நெற்றி சுருங்கி.. கண்கள் சூடாகி மீண்டும் காய்ச்சல் ஆரம்பமாகியது

போறத்துக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ

புரியல


போய்டு... ஆனா போறத்துக்கு முன்னாடி ப்யெ சொல்லிட்டு போய்டுன்னு சொன்னேன்

அந்த வார்த்தைகள் அன்று பாய்ச்சிய அதே மின்சாரத்தை இன்றும் அவளுள் செலுத்தின.. அழுவதனால் தலைவலியும் காய்ச்சலும் அதிகரிக்க.. அந்த மூன்று மெசேஜ்களை மட்டும் தனது செல்லின் நினைவுப் பெட்டகத்தில் பதிந்துவிட்டு.. ஜுரத்தில் மூழ்கத் துவங்கினாள்.

“ என்னடீ இது.. அழுதியா என்ன? பேச்சு வார்த்தை நடத்துன நாள்ளேர்ந்து நீ பொண்ணாவே இல்ல.. நான் போகும் போது நல்லா எழுந்து உக்காந்தியேடி.. இப்ப 104 இருக்கும் போல இருக்கே..? என்னடி ஆச்சு உனக்கு? எனக்கென்னமோ இது அச்சான்யமா படுது.. அங்க கோயில்ல மாவெளக்கும் சரியாவே எரியல... டேய் ஆகாஷ்.. நாலு நாலணா எடுதிட்டு வா..” அம்மா.. தாயே இது பொழச்சு எழுந்தா எல்லாரும் உன் சன்னதிக்கு வரோம்.. என் புள்ளய முழுசா எழுப்பிக் குடுத்துடு... கால்காசு போடறேன்..” என்று சொல்லியபடியே அம்மா பூஜை அறைக்குள் செல்வது மங்கலாகத் தெரிந்தது.

மீண்டும் மூன்று நாட்கள் காய்ச்சல்.. கண்விழித்த போது பக்கத்தில் அப்பா.. நெற்றி வருடி.. புருவம் நீவி..” என்னாச்சுடா உனக்கு..? எதானாலும் அப்பாக்கிட்ட சொல்லு... அம்மா கத்துவா.. அவ கிட்ட சொல்ல வேண்டாம்.. அப்பாகிட்ட சொல்லுடா..” என்றார்

ஒன்னும் இல்லப்பா.. ஒன்னும் இல்ல.. நீங்க feel பண்ணாதீங்க.. டாக்டர் உங்களை feel பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்..

நான் feel பண்ணலயே.. உனக்கு பீவர்ன்றதுதான் எனக்கு கஷ்ட்டமா இருக்கு..

இதோ.. நான் எழுந்துட்டேன் பா... கஞ்சி தாங்கோப்பா .. பசிக்குது.. அப்பாவின் தோள்களில் சாய்ந்துக் கொண்டே, கஞ்சியை குடித்தாள் வாந்தியை அடக்கிக் கொண்டு.

அவனது Hi இல்லாமல் அவளது காலைகள் விடியத்தான் செய்தன.. Time is the great healer.. அல்லவா? ஆற்றியது காலம்... ஆறத்துவங்கியது மனம்.. ஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..!
--------------------------------------------------------------
இரண்டு மாதங்கள் முடிந்த ஒரு திங்கள் நன்னாளில் காலை அலுவலகத்தில் இருக்கும் போது .. எஸ்.எம்.எஸ். டோன்... நம்பளோடது இல்ல என்று நினைத்தவள்.. இருந்தாலும் எடுத்துப்பார்த்தாள்... அதிர்ந்தாள் “ Hi பவித்ரா” – அவன்.. அவன்.. அவன்..அவனேத்தான் அனுப்பியிருந்தான்.. கடலலைகள் ஆர்ப்பரித்து காலை வந்து மோதியதைப் போல் இருந்தது.. தடுமாறினாள்..

வேண்டாம் சுஜீத்.. வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. நானே இப்பத்தான் கரை ஒதுங்கி ..ஒரு ஓரமா இருக்கேன்.. திரும்பவும் சுனாமியா? நான் தாங்க மாட்டேன்.. என்னை போய்டுன்னு சொன்னல்ல நீ? என்னை போய்டுன்னு சொல்லிட்டு திரும்பவும் எதுக்கு Hi அனுப்பற? விளையாட்டு பொம்மயா நான் உனக்கு?

வெட்க்கம், மானம், ரோஷம் என்பவைகள் தனக்கும் இருக்கின்றன என்பது தற்போது முக்கியமாகவே படவில்லை அவளுக்கு.. பதிலுக்கு Hi டா? எப்டி இருக்க? என்று மெசேஜ் அனுப்பு என்று குதித்த மனதை அடக்க பகீரத ப்ரயத்னம் தேவையாக இருந்தது அவளுக்கு. எப்படியோ.. பதிலே அனுப்பவில்லை அவள்.

அன்று முழுவதும்...
ப்ளீஸ் பவி.. என்மேல கோவமா?
ஒரே ஒரு முறை என்னோட பேசு.. நான் சொல்றதை கேளு..
இன்னும் கோவம் போகலயா?
நான் போன் பண்ணட்டா?
நாலைந்து முறை call செய்தான்

கட்டுப்படுத்திக் கொண்டாள்...தாங்க முடியாத கட்டத்தில் செல்லினை off செய்துவிட்டாள்.. அப்படி செய்து விட்டு.. அங்கு அவன் துடிப்பானே என இங்கு இவள் துவண்டாள்.

ஆறியதாக நினைத்த மனக்காயத்திலிருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.. அது அவளது கண்களின் வழி வெளி வரும் போது நிறம் இழந்து கண்ணீர் எனப் பெயரிடப் பட்டது.

அவளது மனக் கண்முன்.. சுஜீத் அறிமுகமாவதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் திரை விரிந்தன....

பக்கத்துல வந்து உக்காரு.... இன்னும் தள்ளி வா...

“இல்ல இது போதும் ”- கொண்டு சென்ற அர்சனை பையை இருவருக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள்

டாடா சுமோ பயங்கர வேகமெடுத்தது.. அந்த வேகத்தில் ஓட்டிக்கொண்டே அவள் வைத்த அர்ச்சனைப் பையை எடுத்து காலடியில் கடாசினார் திருவாளர். நட்ராஜ் அவர்கள்.
ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்த ப்ரஸாத பையையா... கால் கீழயா..? அதிர்ந்துதான் போனாள்

"அர்ச்சனை பை... அது உங்க கால் கிட்ட..."- என்றாள்
பதில் ஏதும் பேசாமல் ஸ்டியரிங்கை ஒரு கையால் பற்றிக் கொண்டு இடது கையால் அவளை தன் மேல் சாயும் படி இழுக்க முயன்றான் அவன்.. இதெல்லாம் அவள் எதிர்பாராதது... நல்ல வேளை சுதாரித்துக் கொண்டு.. தடுமாறி விழுந்து எழுந்து மீண்டும் ஜன்னலோரம் ஒடுங்கிக்கொன்டாள்

நட்ராஜ் ... என்னதிது... வண்டியை நிறுத்துங்கோ .. நான் சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வறேன்...
ரொம்ப சிலுப்பிக்கிற...! இன்னும் எவ்ளோ கடன் இருக்கு உங்கப்பாக்கு.. சொல்லச்சொல்லு.. ஒரே பேமென்ட்ல தீர்த்துடலாம்.. கையோட நிச்சயம் வெச்சு.. தேதி குறிச்சிடலாம் – என்றான். இந்த இரு வாக்கியங்கள் பேசுவதற்குள் சிகரெட், பான்பராக் மற்றும் சாராயத்தின் வாசனையை அவள் முகத்தின் மேல் துப்பினான்....
இதெல்லாம் சகிச்சுக்கனும்...ஏன்னா.. அப்பாவை காப்பாத்தி கொடுத்தவன் இவன்...

அப்பாவிற்கு முதல் அட்டாக் வந்த அந்த நாள்... வாழ்வின் அஸ்த்திவாரத்தை உலுக்கிய நாள்... மூவரும் பதறி துடித்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். அம்மா இதுதான் சமயம் என்பதைப் போல.. பதினைந்து வருடங்களாக துளியும் தொடர்பில்லாமல் சண்டையிட்டு பிரிந்திருந்த அவளது அண்ணனின் கால்களில் சென்று விழுந்தாள்.. அழுதாள்.. சொந்த ஊரில் பண்ணையார் ரேஞ்சில் உலா வரும் அவரும் அவரது சீமந்த புத்திரன் இந்த தடிராமன் நட்ராஜும் சேர்ந்து சில பல ஆயிரங்கள் செலவு செய்து அப்பாவை காப்பாற்றினர்.. அம்மா நெகிழ்ந்து நெக்குருகிப் போனாள்.. அண்ணன் குடும்பத்துடன் இழையோ இழையென இழைந்தாள்.. ஆனாலும் அவரது அண்ணன் மறக்காமல் “ மொத்தம் ஒன்னரை லட்சம் செலவாச்சு... நீ அதெல்லாம் திருப்பித் தர வேண்டாம்... பவித்ராவை மட்டும் நட்ராஜுக்கு கொடுத்துரு.. அவன் ஊர் மேயாம இருக்கனும்னா இவதான் லாயக்கு... நம்ம கும்பல்ல இவ்ளோ படிச்சுட்டு கவர்மெண்ட் உத்யோகம் எவ பாக்கறா? என்ன நான் சொல்றது..? என்றார்.

ஊர் மேயறவனை திருத்தும் உன்னத சமூக சேவகியா நான்... கடவுளே இவனா? இவனா எனக்கு? கால்களின் கீழ் பூமி நழுவுவதை போல் தோன்றியது.. அப்பாக்கு வந்த அட்டாக் எனக்கு வந்திருக்கலாம்.. தனியிடம் தேடிச்சென்று அழுதாள்...மனமொடிந்து போனாள்..

அப்பா அட்டாகிலிருந்து சுதாரித்து.. அன்றாட வாழ்க்கையில் கலந்து.. நார்மலான கொஞ்சனாளில்... அம்மா விவரத்தை சொன்னாள்... அதை கேட்டு அதிகமாக அதிர்ந்தார்..

"பைத்தியமாடி உனக்கு..!? அவன் முரடன்.. எல்லா கெட்ட பழக்கமும் ஒன்னு விடாம இருக்கு.. இப்பவே ரெண்டு மூணு தொடுப்பு இருக்றதா பேசிக்கறாங்க.. என்னை கேக்காம எப்டி நீ உங்கண்ணனை பேச விட்ட?
அம்மா மௌனம் அனுஷ்டித்தாள்.. அவள் மௌனிக்கிறாள் என்றால் அவளது தீர்மானத்தில் உறுதியாய் இருக்கிறாள் என அர்த்தம்..

அப்போ ஒன்னரை லட்சத்தை அவங்க முகத்துல தூக்கி எறிஞ்சுட்டு.. உங்க சம்பந்தமே வேண்டாம்னு சொல்லிடுங்கோ..

"பணத்துக்கும் பவித்ராவோட வாழ்க்கைக்கும் முடிச்சு போடாதே.. இந்த ப்ளாட்டை வித்துட்டு... வாடகைக்குப் போவோம் உங்கண்ணனுக்கு கொடுத்தது போக மீதி பணத்தை பேங்க்ல போட்டுட்டு நிம்மதியா இருப்போம்...

வீட்ட வித்துட்டு மீதி பணத்தை பேங்க்ல போட்டுட்டு உக்காந்துட்டா.. எல்லாம் ஆயிடுமா..? வெளியிடம் பார்த்தா.. இதுக்கு மேல வரதட்சணை செய்யனும்.. எங்கண்ணன் அதுபோல ஏதாவது கேட்டாரா..? அவரே ஒன்னரை லட்சம் செலவு செஞ்சு உங்களை காப்பாத்தி உக்கார வச்சிருக்காரு.. நன்றிங்கறது ரத்தத்துல வரணும் - என்றாள் அம்மா

என் ரிடயர்மென்ட் பணம் வந்ததும்.. அத வச்சு அவளுக்கு ஜாம் ஜாம்னு பன்னுவேன்..

இப்பவே அவளுக்கு 21.. ஊறுக்கா போட்டுட்டு உக்கரவச்சுக்கோங்கோ.. இப்பவே அவ சம்பாத்தியத்துக்காகத்தான் அவளுக்கு இடமே நாம பார்க்க ஆரம்பிக்கலைன்னு உங்க மனுஷங்களே சொல்ராங்க...

அப்பா கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாய் இருந்தார்... முகம் கழுத்து என வியர்வை வழிந்தது..
"எனக்கு உடம்புக்கு வந்து என் கொழந்தை வாழ்க்கை பாதிச்சுடுச்சே... பாதிச்சுடுச்சே" என்று புலம்பியவர் தான்... நெஞ்சை கையில் பிடித்துக் கொண்டு சாய்ந்தார்... இரண்டாவது அட்டாக்.
மீண்டும் அவர்கள் தான்... நல்லவர்களோ..கெட்டவர்களோ.. பலன் எதிர்பார்த்து செய்தார்களோ .. இல்லையோ.. அவர்களால்தான் அப்பா பிழைத்து எழுந்து வந்தார்.. ஆனால் இந்த முறை ஒரு லட்சம் செலவு செய்ததாக சொல்லிக் கொண்டார்கள்.. கணக்கு கேட்கும் நிலைமையில் இவர்கள் இல்லை..

இங்க பாருங்கம்மா.. சந்தோஷமோ.. துக்கமோ.. எதையும் வேகமா அவர்கிட்ட சொல்லிடாதீங்க.. குழந்தையைப் போல பார்த்துக்கணும்.. அப்படிப் பார்த்துக்கிட்டா.. தாராளமா.. சந்தோஷமா இன்னும் நிறைய காலம் உங்களோட இருப்பார் அவர்..- டிச்சார்ஜ் ஆகும் போது டாக்டர் சொல்லிய அட்வைஸ். நிறைய காலம் உங்களோட இருப்பார் என்ற வார்த்தைக்கு டாக்டர் தந்த அழுத்தத்தில் அவள் அப்பாவின் உடல் நிலையை உணர்ந்துக் கொண்டாள்.

அப்பாவின் உடல் நிலை.., அம்மாவின் ஆக்ரோஷம், மாமாவின் சாணக்யம், நட்ராஜின் அராஜகம்.. இவை அத்தனையும் எதிர் கொண்டு.. சுஜீத்தை கரம் பற்ற .. அவள் நாவல் கதா நாயகியோ... திரைப்பட புரட்சிப் பெண்ணோ இல்லை. சாதாரண வேளாளத்தி... எதோ படித்துவிட்டதால்.. அரசாங்க உத்யோகம் கிடைத்துவிட்டதால்.. கிண்டலும் கலாய்ப்புமாக.. ஆர்ப்பரிக்கும் துணிச்சலோடு இருப்பதாக பந்தா பண்ணும் பயந்தாங்கொள்ளி." காதல் வந்தா உடனே சொல்லிடனுமா? சொல்லமயேத்தான் சாகனும்.. உனக்கு விதிச்சது அவ்ளவுதான்னு தேத்திக்கனும்." என தனக்குத் தானே பேசி.. ஒரு நாள்ள எப்பெப்போ நேரம் கிடைக்குதோ அப்பப்பல்லாம் தனியாகப் போய் அழும் லூசு அவள்.அவளிடம் போய் "ஐ லவ் யூ பவி... மேடம்.. நகர்வலம் வந்து காட்சி கொடுத்திட்டாலும்னு " குத்தலாகப் பேசினால் அவள் என்ன செய்வாள்.. மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு ஜுரத்தில் படுப்பதைத்தவிர.

------------------------------------------------

அக்கா உனக்கு போன்... (ஜுரம் வந்ததிலிருந்து அக்கா ஆகிவிட்டாள்.. வாடி போடி எல்லாம் மறைந்து அன்புள்ள அக்கா என்றழைக்கப்பட்டாள் ஆகாஷால்) அவசரமாக குளித்து வெளியில் வந்து செல்லை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டபடியே..
hello யாரு என்றாள்

நான் சுஜீத் பேசறேன் பவி..

அவனது குரல்.... அவளது உள்ளத்தை நிறைத்த அவனது குரல்.. அந்த குரலுக்கு அவ்வளவு ஈர்ப்பா..? அவனது குரல் அவளது உயிருக்குள் பரவி உறைந்தே போனாள்.. call ஐ கட் பண்ணுவது எப்படி என்று கூட மறந்து போனது அவளுக்கு...

பேச மாட்டியா என்னோட? ப்ளீஸ் லைனை கட் பன்னாதே.. கட் பன்னின.. அவ்ளவுதான்..

என்ன மிறட்ரியா.. கட் பன்னா என்ன பன்னுவ?

சிம்பிள்.. இன்னொரு கால் பன்னுவேன்..உன் குரல் கேப்பேனான்னு இருந்தேன் பவி.. உன்னோட நிறய பேசனும்

சொல்லு - என்றாள்

உன்னைவிட்டுட்டு என்னால இருக்க முடியாது

வேற ஏதாவது பேசு சுஜீத்

இன்னும் ஏன் பிடிவாதம் பிடிக்கற பவி.. நீ என்னை விரும்பறயோ இல்லையோ.. நான் உன்னை விரும்பறேன் பவி.. நீ இல்லாம நான் இல்ல.. எனக்கு நீ வேணும் பவி..

அப்பொ அன்னைக்கி ஏன் போறத்துக்கு முன்னாடி bye சொல்லிட்டு போய்டுன்னு சொன்ன?

வலுக்கட்டாயமாத்தான் அப்டி சொன்னேன்.. மரைன் கோர்ஸ் கடைசீ நள்ள சீட் கிடைச்சுடுச்சு... மறு நாள் கொச்சின் போய் ஜாய்ன் பண்ணணும்.... அந்த கோர்ஸ் காம்பஸ்ல செல் நாட் அலௌட்... உன்னை விட்டுட்டு எப்டி போறது? உன்னை மறக்கனும்னா உன்னோட சண்டை போட்டாத்தான் முடியும்.. அதான் அன்னைக்கு அப்டி சொன்னேன்... உனக்கு அப்டி எஸ்.எம்.எஸ். அனுப்பிட்டு.. நான் தனியா போய் அழுதேன் பவி.. நாலு பேக்கெட் சிகரெட் பிடிச்சேன்..

நாலு பேக்கெட்டா...! அடுக்குமாடா இது?

அதை விடு.. உன்னை நான் பார்த்தேன் பவி.. நீ அழகு பவி.. ரொம்ப அழகா இருக்க

அடப்பாவி.. போய் சொல்லாத.. எப்ப பார்த்த..!? எங்க பார்த்த!?

ஜூலை 7.. ஸ்பென்சர்ஸ்ல hand bag வாங்கிட்டு இருந்த...

அட ஆமாம்.. ஆனா நான் தான்னு எப்டிடா கண்டு பிடிச்ச..!?

.. வேற எப்டி..? எஸ்.எம்.எஸ் வழியாத்தான்... அன்னைக்கு நான் அக்காவுக்கு பர்த்டே ப்ரசண்ட் வாங்க வந்தேன்... நீ ப்ளாக் சூரி போட்டிருந்த.. குனிஞ்ச தலை நிமிராம எஸ்.எம்.எஸ் பண்ணிட்டிருந்த.. சூரிதாரை விட.. நீ மெசேஜ் பண்ணின அழகுதான் எனக்கு அது நீயா இருக்குமோன்னு லின்க் பண்ண தோணுச்சு.. பிளாக் சூரி போட்டவங்கல்லாம் பவித்ரா ஆக முடியுமா என்ன..?

ம்.. அவளுக்கு நினைவு வந்தது

என்ன பன்ற? – எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தான்

ஷாப்பிங்.... ஸ்பென்ஸர்ஸ்ல – பதில் அனுப்பினாள்

தனியாவா போன?

இல்லலல்ல.. ரம்யா கூட இருக்கா

ஒகோ... சரி.. என்ன கலர் ட்ரஸ் போட்டிருக்க?

ட்ரஸ் கலர்லாம் உனக்கெதுக்கு?

இன்னைக்கு ப்ளாக் கலர் போட்டவங்களுக்கெல்லாம்.. வாழ்க்கையில் இனிய திருப்பம்னு இந்த புக்ல போட்டிருக்கு.. நான் ப்ளாக் அண்ட் ப்ளாக்.. எனக்கு எப்பவுமே அதிர்ஷ்ட்டம் தான்.. மேடம்க்குதான் அதிர்ஷ்ட்டம் இருக்கோ என்னவோ – என பதில் வந்தது

Hello... நான் இன்னைக்கு புல் ப்ளாக் சூரி.. பிளாக் colour clip, பிளாக் cheppals... பிளாக் பொட்டு.. பிளாக் hand bag .. தெரிஞ்சுக்கோ.. உன்னைவிட நான் அதிர்ஷ்ட்டசாலி.. ஒகே..

அப்ப சரி.. பிளாக் டீ வாங்கி குடிங்க நீயும் உன் ப்ரண்டும்

நினைவலைகள் முடிந்தது

அடப்பாவி.. அவ்ளோ நெருக்கமா பார்த்திருக்க.. என்னொட பேசத் தோணலயா உனக்கு..?

நீயே வந்து என்கிட்ட பேசும்போது எனக்கு எதுவுமே தோணல பவி....

என்னது... நான் வந்து உன்கிட்ட பேசினேனா? எப்போ?

இந்த bag நீங்க செலக்ட் பண்ணிட்டீங்களா? வேணாம்னா நான் எடுத்துக்கவா? ரொம்ப நல்லாருக்குன்னு பேசினியே நினைவிருக்கா?

அட.. ஆமாம்.. அப்படித்தான் பேசி இந்த bag வாங்கினோம்.. அய்யோ சுஜீத்.. உன்னை நான் பார்த்திருக்கேனா? மெல்ல மெல்ல அவன் உருவம் மனக் கண்ணில் தோன்றியது.. அவனது உயரம் முதலில் மனதில் பதிந்தது நினைவுக்கு வந்தது.. எவ்ளோ உயரம் இவன் என தான் நினைத்ததும் நினைவுக்கு வந்தது.. அப்புறம்.. அவன் முகம்.. அழகா இருக்கான் பையன் என தான் மார்க் போட்டதும் நினைவுக்கு வந்தது.. அவனது அகன்ற தோள்களும் பிளாக் டீ ஷர்ட்டும்.. நினைவுக்கு வந்தன.. இவனும் இன்னைக்கு புல் பிளாக் கலர் டிரஸ் போட்டிருக்கான்.. இவனுக்கும் அதிர்ஷ்ட்ட நாள் போலிருக்கு என்று நினைத்ததும் நினைவுக்கு வந்தது.

ஒரு நிமிஷம் இரு சுஜி நீ தொட்டு தந்த bag அங்க இருக்கு .. இரு அதை எடுத்துட்டு வரேன்..- என்று ஓடினாள்

அவளது கூந்தலிலிருந்து சில்லென்ற நீர் துளிகள் தரையில் சிதறின ஆனால்.. அவளது கண்களிலிருந்துசூடான கண்ணீர் துளிகள் தரையில் சிதறின..

அழறியா பவி.. என்னைக்கோ நான் தொட்டு தந்த bagனு அதை இப்ப எடுத்துட்டு வற ஓடினியே.. இதுக்கு பேரு லவ்வுன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்வாங்க..?

பதில் பேசவில்லை அவள்.. பேச நினைத்தாலும் காதலாலும், கண்ணீராலும் நெஞ்சம் அடைத்தது அவளுக்கு...

பவி.. லைன்ல இருக்கியா.. வச்சுடாதே பவி.. இந்த போன்காலுக்காக நான் ஏங்காத நாள் இல்லை பவி.. நடுவில மெசேஜ் அனுப்பினேன் பதில் இல்லை.. கால் பண்ணா செல் off பண்ணிட்ட.. நான் எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? போன்னு சொன்னா உடனே போயிடனுமா?

அடப்பாவி ...போறத்துக்கு முன்னாடி bye சொல்லிட்டுப் போன்னும் சொல்லுவ..
திரும்பி வந்து..” போன்னு சொன்னா உடனே போயிடனுமான்னும் கேப்பியா?

சண்டைல இதெல்லாம் சகஜம் பவி..-என்றான்

கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டியா சுஜித்..?

ஆச்சு.. இன்னும் மூணு மாசம்.. முடிச்சுட்டா.. நேவில வேல கிடைச்சுடும் நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு எனக்கு சமைச்சு போட்டா போதும்

வேண்டாம் சுஜீத்.. வேண்டாம் .. நாம் பேசறதை இதோட நிறுத்திடுவோம்.

ஏன்.. ஏன் பவி என்னை வேண்டாங்கற.. நான் அழகா இல்லயா?

என்னைவிட நீதான் அழகாயிருக்க.. நான் உனக்கு சூட் ஆவேனோ இல்லயோ!

சூட் ஆகறதா? என் மனசு முழுக்க நீதான் இருக்க... சரி .. நாம எப்ப மீட் பண்லாம் பவி.. லீவ்ல வந்திருக்கேண்டா.. உன்னை பாக்கணும்போல இருக்குப்பா.. ப்ளீஸ்.

இதற்கு மேலும் அவளால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ன?

அத்தனையும் சொன்னாள்.. அப்பாவிற்கு வந்த முதல் அட்டாகிலிருந்து.. போனவாரம் அவளுக்கு காய்ச்சல் வாரம் ஆனது வரை சொன்னாள்.. அப்பாவுக்காக.. அப்பாவுக்காக மட்டுமே தனது வாழ்க்கையில் எதையும்.. அவன் உட்பட எதையும் இழக்க தயாராயிருப்பதை சொன்னாள்.

அவ்வளவையும் அமைதியாக உன்னிப்பாக கேட்டுக் கொண்டான்...

இவ்ளோதானா ப்ரச்சனை..? இதுக்கா ரேவதி ஸ்டைல்ல மூக்கை சிந்தி துடைச்ச? என்றான்

என்னது இவ்ளோதானான்னு கேக்கற? எவ்ளோ ப்ரச்சனை இருக்கு.. அப்பா எதோ நடமாடிட்டு இருக்காரு. இப்ப போய் அப்பா.. நான் சுஜீத்தை லவ் பன்றேன்.. அவனையே கல்யாணம் செஞ்சு வைங்கன்னு நான் போய் கேக்க முடியுமா? அம்மாவை எப்டி சமாளிக்கறது? அந்த நட்ராஜ்.. எங்க மாமா.. இவங்களை சமாளிக்க முடியுமா? எல்லாத்தையும் விட அப்பாவை பத்ரமா பாத்துக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு..

நீ சொல்றதும் வாஸ்தவம் தான் பவி.. சரி எதுக்கு.. உனக்கும் ரிஸ்க்கு..? எனக்கும் ரிஸ்க்கு? அப்ப என்னை மறந்துரு? என்று போனை வைத்துவிட்டான்.

விக்கித்து சிலையாய் நின்றாள்... அழுதாள்.. தேம்பித் தேம்பி அழுதாள்.. லவ் யூ பவின்னு சொன்னியேடா..? நீயிலாம நான் இல்லைன்னு சொன்னியேடா? ஏண்டா.. ஏன்டா இப்டி படுத்தற.. இந்த ஆம்பளைங்க எல்லாரையும் நிக்க வச்சு சுடணும்.. அழுதபடியே திட்டி தீர்த்தாள்.
----------------------------------------------------------------------------------

அம்மா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்மா.. அதான் நிச்சயம் ஆயிடுச்சு இல்ல.. ஒரே ஒரு தடவை ..கோயிலுக்குத்தானேமா போறோம்னு சொல்றோம்.. ப்ளீஸ்மா..

“ நிச்சயம் ஆனாத்தான் இன்னும் ஜாக்ரதையா இருக்கணும்னு சொல்வாங்க.. ஒருத்தர் கண்ணுபோல இருக்காது.. எனக்கு தெரியாது.. உங்கப்பா அனுப்பினா போங்க “ என்றாள் அம்மா

Hi அத்தை.. இந்தாங்க சின்ன மிக்சி ஜார்.. அம்மா சொன்னாங்க .. அன்னைக்கு விருந்து நடக்கும் போது இது இல்லாம கஷ்ட்டப்பட்டீங்கன்னு – என்று கொடுத்தான். அம்மாவுக்கு பாதத்திலிருந்து முழங்கால் முட்டி வரை காணாமல் போய்விட்டது.. நெக்குருகி நெகிழ்ந்து போய் விட்டாளாம்.

கிளம்பு... சீக்கிரம்.. என்று சைகையால் இவளிடம் சொல்லிவிட்டு.. அப்பா பக்கத்தில் போயி பவ்யமாய் அமர்ந்து அவருக்கென வாங்கி வந்த புத்தகங்களை தந்தான்..

ஆகாஷ்க்கென வாங்கி வந்தது வேற என்னவாக இருக்க முடியும்.. அதேதான்.. கிரிக்கெட் பேட்டும், ஷட்டில் காக்கும்தான்.

சரிப்பா .. போயிட்டு சீக்கிரம் வந்துடனும்.. கல்யானத்துக்கு முன்னாடி இப்படி அனுப்பறது தப்பு.. இவ காய்ச்சல்ல விழுந்து எழுந்து பொழைப்பாளான்னு இருந்தது.. கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போறீங்க.. பொய் சொல்லக் கூடாது “ – வாசல் வரை வந்து வழி அனுப்பினார் அப்பா. தெம்புதான்.. மகாதேவ முதலியாருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.. என் செல்லம்ப்பா நீங்க என மனதுக்குள் கொஞ்சினாள்.

சென்னையில் காதலிப்பவர்கள்.. அல்லது காதலிக்க விண்ணப்பிக்கும் பசங்க அனைவரும்.. தங்கள் காதல் வளர்ந்து.. அந்தக் காதலே கல்யாணத்திலும் தொடரனும்னு – அபத்தமா, முன்ன பின்ன யோசிக்காம, தெரியாத்தனமா, அவசரப்பட்டு வேன்டிக்கும் போது இப்டித்தான் வேன்டிக்குவாங்க ...” அப்பா பழனி ஆண்டவா.. எங்க காதலை காப்பாத்து... எங்க காதல் .. சக்ஸஸ் (!?) ஆயிடுச்சுன்னா... இந்த E.C.R ரோட்ல.. டூ வீலர்ல இறுக்க கட்டி புடிச்சிகிட்டு வேகமா அம்பது தடவை போயிட்டு வரோம்... நிச்சயம் ஆயிடுச்சுன்னா அவ துப்பட்டாவால அவ தலை முழுக்க மூடி.. அதுமேல என் Helmetடை மாட்டி.. மூஞ்சி முகறை தெரியாதபடிக்கு அவளை தள்ளிக்கிட்டு இதே E.C.R ல ஒரு நாளைக்கு நாலுதடவை வரேன்.. அதுக்கு நீதான் கருணை காட்டனும்னு வேண்டிக்குவாங்க.

சென்னை பொண்ணுங்க எப்டின்னா..- “அம்மா முண்டகக் கண்ணி தாயே.. அவன் என்னை லவ் பண்ணி.. .. அதுக்கப்றமும் என்னையே கல்யாணம் பன்னிக்கனும்னு லூஸ்தனமா முடிவெடுத்ததும்.. எவ்ளோ டைட்டா போடமுடியுமோ அவ்ளோ டைட்டா ஜீன்ஸ் ஷர்ட் , ஜீன்ஸ் பேண்ட்.. போட்டுகிட்டு.. அவனை டூ வீலரே ஓட்டவிடாம, நெறிக்றாப்ல அவன் கழுத்தை கட்டிகிட்டு, அவன் மேல சாஞ்சுகிட்டு இதே E.C.R ல sunday.. sunday ride வரோம்மா.. அதுக்கு நீதான் அருள் புரியனும் தாயேன்னு” – வேண்டிக்குவாங்க.
சுஜீ அண்ட் கோவும் சென்னை சிடிசன்கள் தானே.. ?விதிவிலக்காக முடியுமா..? வான்புகழ் E.C.R ரோடில் அறுபதில் விரைந்தது சுஜியின் Hero.

மெதுவா போ சுஜீத்.. பயமா இருக்கு

எந்தெந்த வண்டியை எவ்ளோ வேகம் ஓட்டணும்னு எனக்கு தெரியும் பவி.. சரி நாம போகப்போர கோயில் சாமி என்ன சாமின்னு சொல்லு பார்ப்போம்

நித்யகல்யாணப் பெருமாள்... அதுகென்ன இப்போ?

அதுக்கென்னவா.. தினம் ஒரு கல்யாணம் பண்ணிக்குவாராம்..

உன்கிட்ட வந்து சொன்னாரா.. இது இது .. இப்டி இப்டின்னு..?

எது எது எப்டி எப்டி..? என்கிட்ட் எதுவும் சொல்லலையே... சரி அவர் கதை நமக்கெதுக்கு.. ? நம்ம கதைக்கு வா.. எனக்கும் இடுப்புன்னு ஒன்னு இருக்கு பவி

ஆமா இருக்கு

உனக்கும் கை ந்னு ஒன்னு இருக்கு பவி

இதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல சுஜித்

நான் இவ்ளோ ஸ்பீடா ஓட்ரதே என் இடுப்பை உன் வளைகரங்கள் வளைக்குமான்னுதான்..!

அம்மா சொல்லி அனுப்பினாங்க.. தொட்டு கிட்டு பேசிக்க கூடாது.. தனியா மறைவா கூப்ட்டா போகக் கூடாதுன்னு

வேகமாய் போய்க் கொண்டிருந்த வண்டி ப்ளாட்பார்ம் பக்கத்தில் ஓரம் கட்டப்பட்டது.. கொஞ்சம் பயந்துதான் போனாள் அவள்.. ரோஸ் நிற டைல்ஸ் பதித்த ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்...

ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும் இப்போ.. - என்றான்

என்ன ரெண்டுல ஒன்னு..?

என் இடுப்பை பிடிச்சுகிட்டு வறியா..? இல்லை Hero ஓட்றியா?

நான் ஏற்க்கெனவே Heroவத்தானே ஓட்டிட்டு இருக்கேன்?

நான் சொல்றது வண்டிய..- என்றான்

இந்த வண்டியா.. எனக்கு கியர் போடத் தெரியாதே - என்றாள்

இதோடா.. கியர் போடத் தெரிஞ்சா... ஓட்டி ஓரங்கட்டிடுவீங்களோ..? குள்ள கத்ரிக்கா.. மவளே.. மரியாதையா இடுப்பை பிடிச்சுகிட்டு வா.. அவனவன் என்னை வேற மாதிரி பாக்கறான்.

வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுத்தது

அமைதியா அந்த இளம் காலை பயணத்தை ரசித்தனர்.. நிறைய பேசனும் என்று நினைத்தாலும் தற்போது ஏதும் நினைவிற்கு வரவில்லை..

சுய நினைவுக்கு வந்தவளாக... நான் ஜோக் சொல்லட்டா சுஜீ? என்றாள்

மீண்டும் வண்டி வேக வேகமாய் ஓரங்கட்டப்பட்டது.. அவளும் ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்..எதுக்கு நிறுத்திட்ட? - என்றாள்

நிச்சயதார்த்தம் ஆனவங்களுக்கு டைவர்ஸ் குடுப்பாங்களா பவி - என்றான்

எதுக்கு கேக்கற?

தடால்ன்னு தூக்கிப் போட்டாப்ல நீ ஜோக் சொல்றேன்னுட்டியா.. ரெண்டு திராபைங்களை ஒரே சமயத்துல என்னால சகிச்சுக்க முடியாது.. அதனாலத்தான் – என்றான்..

போ ..டா.. – என்று சிணுங்கினாள்

மீண்டும் வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுத்தது

ஆரம்பத்திலேயே நீ என்கிட்ட பொய் சொல்லியிருக்க பவி

என்ன சொன்னேன்?

உன் பேரு பவித்ரான்னு பொய் சொல்லியிருக்க

ஆமா சொன்னேன்..

அது தப்பு இல்லயா?

Hello... அப்ப நீ என் ப்ரண்ட் கூட கிடயாது.. ஜஸ்ட் எஸ். எம்.எஸ். ப்ரன்ட்தான்.. அப்போபோயி உனக்கு சத்யப்ரமாண பத்ரமா எழுதி தர முடியும்..? - என்றாள்

ஆமாம்.. அதுவும் வாஸ்த்தவம்தான்..-என்றான்

மீண்டும் வண்டி வேக வேகமாக ஓரங்கட்டப்பட்டது.. அவள் இறங்கி நின்றாள்..

இப்ப சொல்லலாமில்ல..? என்றான்

உனக்கு தெரியுமில்ல-என்றா

திரும்ப சொல்லலாமில்ல..? - என்றான்

ஐய்யோ.. ஆள விடு - என்றாள்

இந்தப் பேர் இல்லயே.. ஜாதகத்துல வேற போட்டிருந்ததே..?

சரீ.. சரீ.. சொல்றேன்.. தமிழ்ல சொல்லட்டா, சமஸ்கிருதத்ல சொல்லட்டா..?

எந்த லேங்வேஜா இருந்தாலும் ஒரே பேர் தானே?

இல்லை.. தமிழாக்கம் பண்ணா என் பேரு வேற - என்றாள்

அப்ப தமிழ்லயே சொல்லு - என்றான்

என்னோட பேரு வெண்மை

ஸ்வேதான்னா வெண்மையானவள்ன்னு அர்த்தம்.மொத்தம் எனக்கு மூணு பேரு
அப்டியா இதெல்லாம் சொல்றதில்லயா?.. என்றான்

என்னென்ன பேரு?

ஜாதகபேரு சரஸ்வதி, வீட்ல கூப்ட்றது பவித்ரா...ஸ்கூல் ரெகார்ட்ஸ்ல ஸ்வேதா – ஸோ கால் மீ வெண்மை.. ஒகே

அம்மா வெள்ளையம்மா.. நாங்க உங்களை கருவண்டுன்னு கூப்பிடுவோம்

ஏன் கருவண்டு..? என் கண்கள் கருவண்டு போல மின்னுகிறதா..?

இல்லை நீ என்னைவிட கருப்பு இல்லயா ?அதான்..

போ.. டா.. மீன்டும் சிணுங்கினாள்

சீ.. பைத்தியம்.. பொன் வண்டுபோல துரு துருன்னு இருக்க இல்லயா அதனால சொன்னேன்.

அப்ப.. ஸ்மார்ட்டுன்னு சொல்ற..?

அதெல்லாம் ஒன்னுமில்ல ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே நம்பிட்றதா - என்றான்

சரி.. சரி.. ரொம்ப ஆச படற.. கூப்டுக்கோ....பர்மிஷன் கிராண்ட்டட்

இந்த பர்மிஷன் மட்டும் தானா பவி...

வண்டி எடுக்கறியா.. கோயிலுக்கு போய்ட்டிருக்கோம்..

சரீ.. அப்ப சுஜீத்ங்க்ற என் பேரை தமிழாக்கம் செஞ்சு சொல்லுங்க புலவி - என்றான்

ம்... சமஸ்க்ருதத்தில் சு – என்றால் நல்ல, மங்களமான, மிகச் சிறந்த- அப்டீன்னு அர்த்தம் ஜீத் என்றால் – வெற்றி என்று அர்த்தம்.. ஸோ உன்னொட பேரு தமிழ்ல
நல்வெற்றின்னு அர்த்தம்- என்றாள்

ஐயையோ.. வெள்ளையம்மா.. என் பேரு நல்லாவேயில்ல வெள்ளையம்மா..- என்றான்

போதும்.. தாங்கல .. கிளம்பலாம்

வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுதது

இளம் வெய்யில், இளங் காற்று.. இயற்கையே அழகுதான்...

இன்னும் நீ சொல்லலை என்றான்

என்ன சொல்லலை?

வண்டி மீண்டும் ஓரம் கட்டப்பட்டது, மீண்டும் ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்

என்ன சொல்லலை

ஐ லவ் யு சுஜீத்ன்னு இன்னும் முழுசா என் கண்ணை பார்த்து சொல்லலை.. சொல்லு இப்ப சொல்லு

இங்கயா..? இந்த ப்ளாட்பார்ம்லயா..!...?

hello... இது ப்ளாட்பார்மா?.. பாரின்காரனுக்கு காண்ட்ராக்ட் விட்டு கண்ணாடி போல மெயின்டெய்ன் பண்றான்.. இந்த ரோட்டோட அழகுக்கே அவவன் வண்டி எடுதிட்டு வரான்.. எவ்ளோ அழகா இருக்கு பாரு .. தூரத்துல தெரியற கடல்.. அடர்த்தியான மரங்கள்.. சூடே இல்லாத சூரியன்..ம்..சொல்லு

அதெல்லாம் இங்க சொல்ல முடியாது.. கோயில்ல வெச்சு சொல்றேன் என்றாள்.

அதுவும் சரிதான்.. நான் இயற்கை சாட்சியா சொல்லுன்னு சொல்றேன்.. நீ தெய்வம் சாட்சியா சொல்றேன்னு சொல்ற... சரி வா..

ஓரம் கட்டி.. ஓரம் கட்டி, அரட்டை அடித்து அரட்டை அடித்து நிறுத்தி நிதானமாகப் போனாலும் காலை 9 மணிக்குள் கோயிலில் இருந்தனர்

நீ கொடுத்து வச்சவன்பா.. தினம் ஒரு கல்யானம்.. தினம் ஒரு பொண்டாட்டி.. நான் பாரு ஒரே ஒரு பொண்டாட்டி.. அதுவும் இன்னும் கல்யானம் கூட ஆகலை.. – என்றான் சுவாமி சன்னதி நோக்கி.

என்ன சுஜீத் இது.. எங்க என்ன விளையாடறதுன்னு இல்லயா.. ஒழுங்கா வேண்டிக்கோ என்றாள்.
ப்ரகாரம் சுற்றி வரும் போது கொஞ்சம் இருட்டாக இருந்த இடத்தில் “ இங்க கொஞ்சம் நில்லு சுஜித், அப்புறம் கொஞ்சம் குனி“ என்றாள்

பவீ... வேண்டாம்.. என்ன இது? அவசரப்படாதே..அம்மா என்ன சொல்லி அனுப்பினாங்க..? கொஞ்சம் பொறுமையா இரு.. கல்யாணம் ஆகட்டும்.. என்றான்.. உதடுகளை கர்சீப்பால் துடைத்து பள பளப்பாக்கிக் கொண்டான்

அடச்சே.. சும்மா இரு சுஜித்.. என்று சொல்லிய படி அவன் கால்களில் விழுந்து வணங்கினாள்.. அவன் காதருகில் ஐ லவ் யு சுஜித்.. ஐ லவ் யு டா செல்லம் என்றாள்.

வணங்கி எழுந்தவளை முன் நுதல் குழல் ஒதுக்கி நெற்றியில் முத்தம் + குங்குமம் இட்டான்.

இன்னைக்குத்தான் இதெல்லாம்.. கல்யாணம் ஆகட்டுமே.. நூறு ரூபா நோட்டை கீழே போட்டா கூட குனிஞ்சு எடுத்து தர மாட்டீங்க - என்றான்.

குனிஞ்சு எடுப்போம்.. ஆனா தர மாட்டோம் என்றாள்.

ஊரெல்லாம் சுற்றிவிட்டு.. அம்மாவும் அப்பாவும் திரும்ப திரும்ப செல்லில் கூப்பிட.. சென்னை நோக்கி விரைந்தது அவனது கேரொ. நீண்ட நெடிய மனப் போராட்டத்துக்குப் பின் வாழ்க்கை பயணத்தை இனிதே துவங்கிய அலுப்பில் அவன் தோளில் சாய்ந்து மௌனமாக கண்மூடியிருந்தாள் பவித்ரா.. அவளுக்கு மனதில் இடம் கொடுத்து.. அவள் தலை சாய்க்க தன் தோள்களைக் கொடுத்து, அமைதியாய் இடக்கையால் கிராப்பை கோதியபடி கேரோவை ஓட்டினான் சுஜீத்.

மெல்லிய புன்னகை அவர்கள் அறியாமல் அவர்களின் இதழ்களில் தவழ்ந்தது..

இதுதான் காதலென்பதா..? இதயம் பொங்கிவிட்டதா..?

--------------------------------------------------------------------------------------------------


Hello.... கதாசிரியை..! என்னதிது...ம்... நடுவில ஒரு அத்யாயம் எழுதவே இல்லயா? வசதியா.. ரொமான்ஸ் ஸீன் மட்டும் அலுக்காம ஆறு பக்கம் எழுதியிருக்கீங்க..? அதெப்படி.. பவித்ராவோட ப்ரச்சனைகள் திடீர்ன்னு தீர்ந்து போச்சு.. அவங்க அப்பாவுக்காகப் பட்ட கடனை எப்டி அடைச்சாங்க? இவளோட லவ் எப்டி வீட்டுக்கு தெரிஞ்சது..? தெரிஞ்சதும் எப்டி சம்மதிச்சாங்க..? இதுக்கு அந்த நட்ராஜ் வில்லத்தனம் ஏதும் பன்னலயா?சுஜீத் வீட்ல எப்டி இதுக்கு சம்மதிச்சாங்க..? இந்த மாதிரி இனிய சுபம் எல்லாம் கதையிலத்தான் நடக்கும்.. இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஒவெர்.. தெரியுமா..

கமெண்ட் போட்ட நாங்க எட்டு பேரும் “ சஸ்பென்ஸ் தாங்கலை... சீக்கிரம்.. சீக்கிரம்.. ஒரு நாள் லீவ் போட்டுட்டாவது கதையை எழுதுங்கன்னு” மன்றாடி கேட்டுகிட்டது வாஸ்த்தவம் தான்.. அதுக்காக நடுவில ஒரு அத்யாயமே எழுதாம.. கதையோட நாட் பிரிக்காம.. இப்டி கடைசி ஸீன் மட்டும் எழுதறது .. அவ்ளோ நல்லால்ல ... நிஜமாவே ரொம்ப ஒவர்ன்னு சொல்றீங்களா..?

மேற்படி கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனும்னு ஆரம்பிச்சா இதே கதையை இன்னொரு அத்யாயம் நீட்டுவேன்... பதில் வேண்டான்னா.. வேற ஒரு புத்தம் புதிய லவ் ஸ்டோரி இருக்கு கைவசம்... அத ஆரம்பிப்பேன்... எது வசதி..?

கொஞ்சம் சென்ட்டி கலந்து நினைவுப் பெட்டகத்தின் நடு அத்யாயம் எழுதட்டா.. ?

இல்ல..ரொமான்ட்டிக்கா...புத்தம் புதிய லவ் ஸ்டோரி எழுதட்டா..?

தீர்மானம் செஞ்சு comment & command pls.

Monday, July 11, 2005

நினைவுப்பெட்டகம் - 4


எஸ்.எம்.எஸ். டோன் கேட்டு தலை நிமிர்ந்தாள்.... மெசேஜா? இப்பவா? எடுத்துப் பார்த்தாள்


அழறியா பவி - அவன் தான்
ந்தோஷமாக இருந்தது அவளுக்கு.. அழுகை இன்னும் அதிகமாகியது

ஆமா அழறேன்... நீ எப்டிடா மெசேஜ் பண்ற? – பதில் அனுப்பினாள் அழுதுக்கொண்டே

லெப்ட் handல – பதில் வந்தது.. கொஞ்சம் தாமதமாக

சரி.. நான் ஜோக் அனுப்பட்டா? – வலி தெரியாது உனக்கு

அனுப்பு

நல்லதாக ஒரு ஜோக் நினைவில் நிறுத்தி நிதானமாக டைப் செய்து அனுப்பினாள்

ஜோக் அனுப்பு பவீ.... - பதில் வந்தது

சரியா போகலையோ...மீண்டும் ஒரு முறை அனுப்பினாள்

ஏதோ ஜோக் அனுப்றன்ன? எங்க..? – என பதில் வந்தது

அடப்பாவி.. இப்ப அனுப்னது ஜோக்டா...!?

அப்டியா...? சொல்றதில்லயா இதெல்லாம்..? - என்றான்

இன்னொரு நல்ல ஜோக் அனுப்புவோம் என்று மிக நீளமாக சத்தார்ஜி ஜோக் ஒன்றை அனுப்பினாள்

பிளாங்க் ஸ்க்ரீன் - வந்தது பதிலாக

என்னாச்சு...? ஒரு வேளை நாம அனுப்புற ஜோக் திராபைன்னு சிம்பாலிக்கா சொல்றானா? இல்லை கை வலிக்குதுன்னு ப்ளாங்க் மெசேஜ் அனுப்றானா?

இன்னோரு ஜோக் அனுப்ட்டா? - என்றாள்

இன்னிக்கு இது போதும் பவி - என்றான்

ஏற்கெனவே கைல கால்ல அடிபட்டு படுத்திட்ருக்கேன் பவி.. ப்ளீஸ்...-– என்றும் அனுப்பினான்...

மவனே..... இரு உன்னை என்ன பண்றேன் பாரு... வேண்டுமென்றே திராபையான இன்னோரு ஜோக் அனுப்பினாள்.

நம்ம ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணிக்கலாங்க்ற முடிவோடத்தான் இருக்கியா - என்றான்

இதுக்கு மேல தாங்க மாட்டான் என நிறுத்திவிட்டாள்

நர்ஸை சைட் அடிக்காம.. வேளாவேளைக்கு மருந்து சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடு... நான் ஈவ்னிங் ஆபீஸ் விட்டு கிளம்பும் போது போன் பண்றேன் என மெசேஜ் அனுப்பினாள்

வேண்டாம்... போன் பண்ணாத

ஏண்டா?

வேணாம் பவி...உன் குரலை எப்ப கேக்கணும்ணு எனக்கு தோணுதோ அப்ப நானே போன் பண்றேன்.. காலைல நீ பேசினதே போதும்... அதையே நினைச்சுட்டு இருப்பேன்.. அந்த நினைவை நீயே கலைக்காதே - என்றான்

உன்னைப் பற்றிய என்
உன்னதக் கனவுகளை
உடைக்கும் உரிமை - என்
உயிரே ....
உனக்குக் கூட இல்லை – (எப்டி ஐயாவோட கவிதை !!) என அனுப்பினான்

நல்லாருக்கு.. கிரேட்.. எப்டிடா இப்டி இன்ஸ்டன்ட்டா கவித எழுதற... நான் உன்னோட fan ஆய்ட்டேன்... ஆனா போன் பன்னட்டான்னா வேணாங்கற.... பைத்தியமாடா நீ-– என பதில் அனுப்பினாள்

ஆமா.. பவித்ரா பைத்தியம் - என்றான் அவன்

பல மாதங்கள் வெயில் மழை காற்று பூகம்பம் சுனாமி அக்கம் பக்கம் ஆபீஸ் என எதுவும் நினைவில் நிற்கவில்லை.. வெத்து மெசேஜ்கள் அந்த நாட்களுக்கு வானவில்லின் வண்ணத்தை அளித்தன.. ஆனால்..

அன்று தேவையில்லாமல் சண்டை நடந்தது... காலையில் Hi அனுப்பியதோடு சரி அதன் பிறகு மெசேஜே இல்லை.. அவள் இரண்டு முறை Hi அனுப்பினாள்.. பதில் இல்லை.. தாங்க முடியாமல் மதியம்...

ஏண்டா காலைலேர்ந்து மெசேஜ் அனுப்பல?

ப்ரெண்டோட வெளிய போனேன்

எங்க?

எங்கயோ .. உனக்கென்ன

ஏன் கோவமா இருக்க?

இல்லியே

நான் இன்னிக்கி ஆபீஸ்ல திட்டு வாங்கினேன்

வாங்கு

என்னாச்சு உனக்கு?

என்ன ஆகணும்?

சரி.. எங்க இருக்கற?

எங்க இருந்தா உனக்கென்ன?

ப்ளீஸ் சுஜீத்... என்னை பிடிக்கலயா...என்னை அவாய்ட் பண்றியா?

பிடிச்சா என்ன? பிடிக்கலன்னா என்ன? நாம சாகற வரைக்கும் மெசேஜ்தான்

என்னை என்ன பண்ண சொல்ற?

என் பிரண்டும் அவன் லவ்வரும் காலைலேர்ந்து பேசறாங்க... பேசறாங்க.. பேசறாங்க.. இன்னும் பேசறாங்க. 5 நிமிஷம் உக்காருடா இதோ வறேன்னு மாயஜால் சிமென்ட் பெஞ்ச்சுல உக்கார வைச்சுட்டு பக்கத்து பெஞ்சுக்கு போனவன்.. இன்னும் என்னை திரும்பி பார்க்கல.. நான் தனியா தேவுடு காத்துட்டு இருக்கேன்.

அவங்க லவ்வர்ஸ்.. அப்டித்தான் பேசுவாங்க.. நீ ஏன் அவங்க கூட போன? நீ எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டியது தானே..?

அனுப்பி...!? அனுப்பிட்டாலும்...! மகாராணி அப்டியே நகர் வலம் வந்து எனக்கு தரிசனம் கொடுத்றுவீங்க... போவியா பேசாம..

அதற்கு அவள் அந்த பதிலை அனுப்பியிருக்கக் கூடாது... அவர்களது பிரிவுக்கு அதுதான் வித்து என அறியாமல் அனுப்பினாள்

நான் எதுக்கு உன்னை வந்து பாக்கணும்... பார்த்து என்ன ஆகப் போகுது? பார்க்கவே வேண்டாம்...

சாகற வரைக்கும் இப்டியே எஸ்.எம்.எஸ் அனுப்பப் போறியா?

அனுப்பினா என்ன?

ஆமாமா.. ஆக்ஸிடென்ட் ஆகி ஆஸ்பிடல்ல படுத்திருக்கும் போது கூட மேடம் மெசேஜ் தான் அனுப்னீங்க..! அதுவே பெருங் கருணை...! போனாப் போகுதுன்னு போன் பன்னி பேசறேன்னு சொன்னீங்க..உன்னை வந்து பார்க்கட்டா சுஜீத்ன்னு ஒரு வார்த்த.. ஒரே ஒரு வார்த்த வந்துச்சா உன் வயிலேர்ந்து? கல்லுளி மங்கி மாதிரி இருந்த..

நீங்க ஆம்பிளை.. எங்க வேனா போவீங்க.. எப்ப வேணா வருவீங்க..பொம்பளை கஷ்ட்டம் தெரிஞ்சு பேசு சுஜீத்..

என்ன பெரீய கஷ்ட்டம்..? இவ்ளோ கெஞ்சுரானே... நாம மீட் பண்ணுவோம் சுஜீத்னு ஒப்புக்காவது சொல்றியா நீ..வேற ஒன்னுமில்ல... உன் டைம் பாஸ்க்கு நான் வேணும் உனக்கு...

சுஜீத் மைன்ட் யுவர் வெர்ட்ஸ்

மனுஷன சாகடிக்றத்துக்காகவே பொறந்திருக்கீங்கடி நீங்கள்ளாம்............

சுஜீத்.. நான் உன்னை விட பெரியவ.. அதை நியாபகம் வச்சுட்டு பேசு..

அவன் பதில் அனுப்ப வில்லை

அவளும் அனுப்பவில்லை... (அவள் அனுப்பத் தயாராகத்தான் இருந்தாள்.. ஆனால் அவன் அனுப்பினால்தானே அவள் பதில் அனுப்ப முடியும்)

கண்களில் கண்ணீர் எழுத்துக்களை மறைத்தது... யாரும் கவனிக்காதபடி துடைத்துக் கொண்டு.. முகத்தை இயல்பாக வைத்துக் கொள்வது மிகக் கடினமாக இருந்தது.. வேலைகளில் தவறு நேர்ந்தது.. கை கால்கள் படபடத்தன..... ஏண்டா.. ஏன்டா என்னை இப்டி சாகடிக்கற? நீ ஏன் ராங் கால் பண்ண எனக்கு? அவச்த்தைடா இது.. சே..

மறு நாள் காலை Hi கூட அனுப்பவில்லை அவன். சோர்வாகத்தான் அலுவலகம் வந்தாள். வேறு யாருக்கோ வந்த மெசேஜ் டோன் கேட்டு ஓடிப்போய் டேபிள் ட்ராவில் இருக்கும் தனது செல்லை எடுத்துப் பார்த்துப் பார்த்து எமாந்தாள். பைத்தியம் என்பது இதுதானோ..

எத்தனை முறை அவனாக Hi அனுப்பி இருக்கிறான்? இன்னைக்கு நாம அனுப்புவோம்.. ப்ரென்ட்ஷிப்ல தேவையில்லாம எதுக்கு மானம் ரோஷம்..?

Hi டா என அனுப்பினாள்

என்ன

இன்னும் கோவமா இருக்கியா?

கோவமாத்தான் இருக்கேன்னா என்ன பண்ணப் போற?

ஒன்னும் இல்லை

இதுக்கு நீ Hi சொல்லாமலேயே இருந்திருக்கலாம்...

நீ இப்டில்லாம் பண்ணா நான் உன்னை விட்டு போய்டுவேன்

போ.. ஆனா போறத்துக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ

புரியல

போய்டு... ஆனா போறத்துக்கு முன்னாடி Bye சொல்லிட்டு ஒரேயடியா போய்டுன்னு சொன்னேன்

மெசேஜை படித்து..புரிந்து... உள் வாங்கிக் கொள்ள கொஞ்சம் நேரம் ஆகியது அவளுக்கு. புரிந்ததும் அந்த அதிர்ச்சியால் அசையாமல் நின்று விட்டாள்.

என்னையா.. என்னையா போன்னு சொன்ன சுஜீத்..? நீயா நீயா இப்டி மெசேஜ் அனுப்பின..? எப்டிடா அனுப்ப முடிஞ்சது உன்னால?

போன்னு சொல்ற அளவுக்கு நான் என்னடா தப்பு பன்னேன்..? “ நீ இந்த தப்பு பண்ண பவித்ரா.. அதனால நீ போய்டுன்னு “ சொல்லி இருந்தா நான் பேசாம போயிருப்பேனே..!ஆனா நான் எந்த தப்புமே பண்ணலயே சுஜீத் ... என்னை ஏன் போகச் சொன்ன..?
அழுதாள்... கேவிக்.. கேவி அழுதாள்.. அலுவலக டாய்லெட்டில் நின்று கட்டுப்படுத்த இயலாமல் அழுதாள்.. நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் நாங்க வரணுமா..?வரலன்னா... மசியலன்னா.. படியலன்னா.. போன்னு சொல்லிடுவீங்க.. நாங்க போயிடனும்..ப்ளாஸ்டிக் பொம்மையா நாங்க உங்களுக்கு... ?னான் போய்ட்றேன்டா.. உன்னை விட்டு முழுசா போயிட்றேன்... இனிமே இந்த பவி உனக்கு மெசேஜ் அனுப்ப மாட்டா... அனுப்பவே மாட்டா...போய்டுன்னு சொன்ன இல்ல என்னை?

அவனுக்கு வற்ற 18 பர்த்டேவாச்சே.. விஷ்ஷஸ் அனுப்ப கூடாதோ..? அனுப்பினா வெட்க்கம் கெட்டவளாய்டுவேன்.. சரி.. இன்னைக்கே உனக்கு என்னோட மானசீக பர்த்டே விஷ்ஷஸ் டா.. BYE டா.. என்னொட கடைசி bye சுஜீத்..எங்க இருந்தாலும் நல்லா இரு... -மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

பிரிவென்னும் பாலைவனத்தில் எதிரெதிர் திசை நோக்கி .. கண்ணீர் வற்ற.. கால்கள் துவள நடந்து.. இறுதியில் பிரிந்தே விட்டார்கள்.. ஆனாலும்..
---------------------------------------------------------------------
தொடரும்......

Saturday, July 09, 2005

நினைவுப் பெட்டகம் - 3

நான் 5.11, நீ எவ்ளோ உயரம்? – s.m.s வந்தது

நார்மல் இன்டியன் கேர்ள் உயரம்

3.2 வா ?

இல்ல 2.3

சொல்லு பவி... எவ்ளோ உயரம் நீ ?

நான் எவ்ளோ உயரம் இருந்தா உனக்கென்ன?

சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான் ..ப்ளீஸ்..

5.2

அய்யோ.. குள்ள கத்திரிக்கா

போடா...

சரி.. சரீ .. அழாதே.. நீ பார்க்க எப்டி இருப்ப பவி..? உன்னை பார்க்கணும் போல இருக்கே..

இப்டில்லாம் பண்ணா நான் மெசேஜே அனுப்பமாட்டேன்... நீ என்ன சொன்ன? ஐ வாண்ட் டு பீ யுவர் ப்ரண்ட்.. ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப் தான்னு சொன்ன?

ப்ரண்ட்ஷிப்ல பார்த்துக்கலாம் பவி.. தப்பில்ல

நோ....

சரி விடு... நீ பார்க்க எப்டி இருப்ப அதை சொல்லு

ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப.. அழகா இருப்பேன் சுஜீத்

ஆகா ஆரம்பிச்சிட்டாய்யா... ஆரம்பிச்சிட்டா

உண்மயை உடனடியா இந்த உலகம் ஏத்துக்காதே

போதும் சொல்லு... நீ எப்டி இருப்ப.. நான் உன்னை ஜோதிகா மாதிரி இமாஜின் பன்னியிருக்கேன்

போதும்.. இதுக்கெல்லாம் விழுந்துறமாட்டா இந்த வீச்சரிவா வீரலட்சுமி

அப்ப வேற எதுக்கெல்லாம் விழுவா?

நான் போறேன்

சரி.. சரீ.. நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல

கொஞ்சம் ரயில் ராதிகா.. கொஞ்சம் இதயம் நல்லெண்ணை சித்ரா கலந்த கலவை நான்

ஐயோ அவங்க ரெண்டு பேருமே நல்ல அழகு.. எனக்கு ரொம்ப பிடிக்குமே.. அவங்க fan நான்

பொய்தானே சொல்ற...?

எப்டி கண்டு பிடிச்ச? ஸ்மார்ட் பவி நீ...

போடா...

சமைக்கும் போதும், சாப்பிடும் போதும், ஸ்டாப்பிங்கில் நிற்கும் போதும், பஸ் விட்டு இறங்கி நடக்கும் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், வேலை செய்யாத போதும், டீவீ பார்க்கும் போதும், பார்க்காத போதும்.... என எல்லா நேரமும் மெசேஜ், மெசேஜ், மெசேஜ் தான்.. மெசேஜ் அனுப்பிக் கொண்டே ஸ்டாப்பிங் தான்டியும் நடந்து போயிருக்கிறாள்.. மீண்டும் மெசேஜ் அனுப்பிய படியே திரும்பி வந்திருக்கிறாள்.

நடந்துக் கொண்டே இவள் மெசேஜ் அனுப்புவதைப் பார்த்த அவளது தெருக்காரர்கள் இருவரின் டயலாக்

""அந்தக் காலத்துல... நடந்துண்டே படிப்பா.. நான் பாத்துருக்கேன்.. எதுத்தாப்ல வர லாரி கூட கண்ணுக்கு தெரியாது.. லாரிகாராளா பார்த்து ஆயுசு கொடுத்தா உண்டு... அப்பவே கலி முத்திட்த்துன்னா.. இதப் பார்த்தா என்ன சொல்வாளோ?"" - மாமா நம்பர் - 1

"" தானுன்டு.. தன் செல்லுன்டுன்னு போறா.. சைட்.. கியிட் அடிக்றதெல்லாம் அவாய்ட் ஆறதோன்ன்னோ.. அதப் பாருங்கோ""- மாமா நம்பர் - 2

""போற போக்குல நம்மள ஒரு பார்வையாவது பார்த்துண்டு போவா கொழந்த.. இப்ப அதுவும் இல்ல.. குனிஞ்ச தலை நிமிர்ரதில்ல.. என்னமோ போங்கோ ""- மாமா நம்பர் - 1.


அவள் உலகம் தனி என்றானது.. உப்பு பெறாத விஷயங்கள் கூட உன்னதமாயின. உதாரணமாக...

இன்னைக்கு புதூ டிரஸ் வாங்கினேனே..! – s.m.s அனுப்பினாள்

என்ன வாங்கின?

முழூ பிளாக் கலர் சூரீ

ஆகா.. எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்.. என்னோட எல்லா டிரஸ்லயும் பிளாக் இல்லாம இருக்காது

தோய்க்கலன்னா அப்டித்தான் பிளாக்கா இருக்கும்...

யாரு தோய்க்கல..? அய்யா சுத்தத்தின் சின்னம்..

சரீ.. கருப்பு உனக்கு பிடிச்ச கலர்ன்னா.. நீயும் கருப்பா?

இன்னாது கருப்பா.. அய்யா அஜீத் கலர் .. தெரிஞ்சுக்கோ

அத நாங்க சொல்லணும்.. அத நீ தெரிஞ்சுக்கோ

அதுக்குத்தான் .. வா.. வந்து பாருன்னு சொல்றேன்.. நாம எப்ப மீட் பண்லாம் பவி?

என்னது மீட்டிங்கா? என்னோட எஸ்.எம்.எஸ் தொடரணுமா.. இல்லை இதோட கட் ஆகணுமா?

அப்புறம் உன் இஷ்ட்டம்.. ஒரு Heroவ மிஸ் பண்ணப் போற....

போதும்.. நிறுத்ரியா

ஒரு நாளைக்கு முப்பது மெசேஜாவது அனுப்பிக்கறோம்.. அதுக்கு காலைல ஒரு கால், மதியம் ஒரு கால், ஈவ்னிங் ஒரு கால் பண்ணி பேசலாம் நாம - அனுப்பினாள்

வேண்டவே.... வேண்டாம் பவி

ஏண்டா?

பேசினா... பேசற அந்த அஞ்சு நிமிஷம் வரைக்கும்தான் சந்தோஷம் இருக்கும் ..பேசி முடிச்சு லைன் கட் ஆனப்புறம் ரொம்ப வெறுமையா இருக்கும்.. அந்த வெறுமையை தாங்க முடியாது பவி..வேஸ்ட்டா உக்காந்துட்டு இருக்கற மாதிரி தெரியும் பவி..

இதெல்லாம் ரொம்ப ஓவர் சுஜீத்

இல்ல பவி.. நாள் முழுக்க நீ என்னை நினைக்கனும்.. நான் உன்னையே நினைக்கனும்.. அதுக்குத்தான் எஸ்.எம்.எஸ்.

இதுவும் ஓவர்தான்.

ஒவ்வொரு முறை உன்கிட்ட இருந்து மெசேஜ் வரும் போதெல்லாம்.. அப்பத்தான் புதுசா.. முதன் முதலா உன் மெசேஜை படிக்கறமாதிரி இருக்கு.. இதெல்லாம் உனக்குப் புரியாதா.. இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா?

ரெண்டாவதா சொன்னியே அது – அவசரப்பட்டு அனுப்பி விட்டாள்.
அனுப்பியபின் வருந்தினாள்.

ஏன்.. ஏன்.. ஏன் பவி நடிக்கற..?

சரீ.. மரைன் கோர்ஸ் அப்ளை பண்ண நாளைக்கு லாஸ்ட் டேட்.. எல்லாம் ரெடி பண்ணிட்டியா?

அத விடு... அக்கா ரெடி பண்ணிட்டா.. நீ சொல்லு ஏன் ஏன் நடிக்கற?

போர் அடிக்காத சுஜீத்.. வேற எதாவது பேசு

இதை விட வேற என்ன பேசணும் உனக்கு?

பதில் அனுப்பவில்லை இவள்.

மறுனாள் காலையில் இவளே Hi அனுப்பினாள்

பதில் இல்லை

என்ன கோவமா?

அதற்கும் பதில் இல்லை

ப்ளீஸ் சுஜீத்

ஏழெட்டு மெசேஜ்களுக்கும் பதில் இல்லை.... என்ன ஆச்சு இவனுக்கு..?

எந்த வேலையும் செய்யப் பிடிக்காமல் வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.. அந்த நேரம் பார்த்து அவள் அலுவலகத்தின் கருத்து கந்தசாமி அவளருகில் வந்து " நீங்க செல்லு வச்சுக்கங்க.. வேணாங்கல... ஆனா அதுக்காக அதையே பார்த்துக்கிட்டு இருக்கனுமா? சாப்டறதுக்காகவாவது கையயும், கண்ணயும் அதில இருந்து எடுங்கம்மா" என்றார்

(ஒரு அலுவலகம்னா.. அதுல ஒரு கருத்து கந்தசாமி கண்டிப்பா இருக்கும்.. இது உலக நியதி)

மதியம் சாப்பிடப் பிடிக்காமல்.. மிகவும் யோசித்து.. யோசித்து.. போன் பேசுவது என்ற முடிவுக்கு வந்தாள்.

அவன் தான் எடுத்தான்

"" என்னடா ஆச்சு..? ஏன் ரிப்ளை பண்ணல? என்மேல கோவமா? என்னை விட்டு பிரியறதுன்னாலும்... போறத்துக்கு முன்னாடி Bye சொல்லிட்டுப் போ. நீங்கள்ளாம்.. இவ்ளோதான்டா.. ப்ரண்ட்ஷிப்போட அருமையே தெரியாது.. என்னை சொல்லனும்.. நாந்தான் மடச்சி...""

போதுமா.. இன்னும் பேசறியா? நான் கொஞ்சம் பேசட்டா?

ம்.. சொல்லு...

காலைல பைக்ல போகும் போது ஒரு சின்ன ஆக்சிடென்ட்

அடப்பாவி.. எங்க?

போரூர்ல

அடச்சே.. எங்க அடிபட்டுதுன்னு கேட்டேன்

எங்கன்னு சொல்லு பாப்போம்.. ?உனக்கு மெசேஜ் அனுப்ப முடியாதபடிக்கு அடிபடனும்னா எங்க அடிபடனும்னு சொல்லு பாப்போம்.. ?

நிச்சயமா ப்ரெய்ன்ல இல்ல... ஏன்னா உனக்கு ப்ரெய்னே இல்ல.. அது நீ அனுப்ற மெசேஜ்லயே தெரியும்.. எங்க அடிபட்டுது சொல்லுடா.. எனக்கு அழுகயா வருது ...

நீங்கதான் வீச்சரிவா வீரலட்சுமியாச்சே?

சொல்லு சுஜீ... ப்ளீஸ்...

வேற எங்க...? விரல்லதான்.. வலது கை விரல்ல அடி பட்ருச்சு..ஒன்னும் இல்ல கொஞ்சம் ஓவரா ப்ளட் போயிருச்சு... பாண்டேஜ் போட்ருக்காங்க.. ஆங்.. ஒன்னு சொல்ல மறந்துட்டேனே

என்ன..?

பேண்டேஜ் போட்டுவிட்ட நர்ஸ் அழகா இருந்தா....

உன்னை...? உனக்கு அடி பட்டது கரெக்ட்தான்..

சரி.. உடனே .. மௌன்ட் ரோட் டிராபிக் நடுவுல ஓ ஓ ஓ ஓடி வந்து.. என்னை பார்க்கணும் போல தோணுமே... என்ன நான் சொல்றது?

அப்படித்தான் தோன்றியது அவளுக்கு.. ஆனால் வேறு எதுவும் பேசாமல் அழுகையோடு...
Bye டா.. அப்புறம் பேசறேன் என்றாள்.

ரெஸ்ட் ரூம் டேபிளில் தலை கவிழ்ந்து அழுதாள்...
-------------------------------------------------------------------------
தொடரும்....



Tuesday, July 05, 2005

நினைவுப் பெட்டகம் - 2


என்ன பண்ற? – அண்ணலும் தொடர்ந்தான்

சமையல் - அவளும் தொடர்ந்தாள்

என்ன மெனு?

தங்கபஸ்பம் சாம்பார், முத்து மணி பொரியல்

இதோடா ... எங்க வீட்லயும் அதேதான், கொஞ்சம் மெச்சூர்டா பேசுவோமா?

பேசுவோமே

ஜோக் அனுப்பட்டா?

இது கரெக்ட்.. அனுப்பு

A ஜோக்தான் எனக்கு தெரியும்

உன் சங்காத்தமே வேணாம். Bye... டா

தெரிஞ்சத தெரியும்னுதானே சொல்லனும் .. உனக்கு வேண்டாம்னா நான் சொல்லல

இங்க பார் சுஜீ.. இதை நினைவு வச்சுக்க.. என்னோட செல் எங்க வீட்டு கூடத்துல நடு டேபிள்ல இருக்கும்.. ஆகாஷ் எடுப்பான், அம்மா, அப்பா எல்லாரும் அட்டென்ட் பண்ணுவாங்க... உன் பேரு சுஜிதா.. ஓ கே.. இதை நியாபகம் வச்சுகிட்டு மெசேஜ் அனுப்றதானா மேற்கொண்டு பேசலாம்... இல்லன்னா வேண்டாம்.... ஐ ஆம் சீரியஸ் அபவ்ட் திஸ்.. ஓ கே?

சரி பவி.. நீ சொன்னா சரி பவி- என்றான்

ஒரு தார்மீக நியதிக்கு உட்பட்டு குறுந்தகவல்கள் பறிமாறப்பட்டன. அத்தனையும் வெத்து . வேஸ்ட் மெசேஜ்கள். ஆனாலும் அதனை எதிர்பார்த்தும். பதில் பறிமாரியும் இரு இதயங்கள் காத்திருந்தன.. ஒரு அரை மணி நேரத்திற்கு மெசேஜ் வரவில்லை என்றால்.. நகம் கடித்து, முகம் வியர்க்கும் அவஸ்தையை அனு அனுவாய் அனுபவித்தாள் பவித்ரா.

ஏண்டா இன்னைக்கு வேக் அப் மெசேஜ் அனுப்பல?

(வேக் அப் மெசேஜ் என்பது.. அழகான காதல் கவிதை அல்லது கமா, புள்ளி, கோலன், பிரகெட் இவைகளால் வரையப்பட்ட நாய் குட்டி, பூனை குட்டி ஓவியமோடு இணைந்த குட்மார்னிங் ஆகும். பல நாட்கள் ... எப்டி டா இப்டி கவித எழுதற? கடவுள் தான் எனக்கு இப்டி ஒரு எஸ்.எம். எஸ் ப்ரண்ட் கொடுதிருக்கார்.. கிரேட் டா நீ – என அனுப்பி இருக்கிறாள். அது.. அது.. அதுதான் சுஜீத் – என்று பதில் வரும். அவ்வாறான மெசேஜ்கள் அவளது செல்லின் டெம்ப்ளேட் நினைவகத்தில் சேமிக்கப்பட்டு .. அவ்வப்போது எடுத்து பார்த்துக் கொள்ளப்படும்.

ஏண்டா இன்னைக்கு வேக் அப் மெசேஜ் அனுப்ல? – மீண்டும் அனுப்பினாள்.

அதான் பவி.. நானும் காலைல இருந்து காத்திட்டு இருக்கேன்.. என் ப்ரண்ட் இன்னும் அனுப்ல.. அதான் – என்று பதில் அனுப்பினான்

அடப்பாவீ ... ஓசி வாங்கி அனுப்னியா?

ஆமா

பாராட்டும் போது .. அது .. அது.. அதுதான் சுஜீத்னு சொன்ன ?

மடையன் தான் உக்காந்து கவிதை எல்லாம் எழுதிட்டிருப்பான்.. ரெடிமேடா கிடைக்குது... அதை வாங்கி அனுப்பிட்டிருந்தேன்... என்ன .. இன்னைக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு - என பதில் வந்தது

என்னோட பேசாத

நான் எங்க பேசினேன்.. எஸ். எம். எஸ். தான அனுப்பினேன்

ஆமா ... இப்ப ப்ரீ.. அதனால அனுப்பற.. வர்ற ஒன்னாந்தேதிலேர்ந்து ஒரு மெசேஜ்க்கு ஒரு ரூபா.. அப்ப அனுப்புவியா?

ஏன்.. நீ அனுப்பமாட்டியா?

மாட்டவே மாட்டேன்... தண்ட செலவு யாராவது பண்ணுவாங்களா?

ஆனால்.. தண்ட செலவு செய்தார்கள். வழக்கமாய் ஆகும் கட்டணத்தை விட இருமடங்கு ஆகியது.

அப்பா கிட்ட செல்லம் கொஞ்சி கொஞ்சம் பணம், தம்பியிடம் கைமாத்தா மூனு வட்டிக்கு கொஞ்சம் பணம்.. அம்மா தரும் பாக்கெட் மணியில் சேமித்தது என ஈடுகட்டினாள்.

காலையில் மெசேஜ் வர லேட் ஆனால் “ என்ன உங்களுக்குள்ள சண்டையா? மெசேஜே காணோம் “ என நக்கலடித்தான் தம்பி.

சமயத்தில் இவள் இல்லாத போது – அவனது கேள்விகளுக்கு – ஆமா, இல்ல, தெரியுமே, ஓகோ.. அப்டியா? – என்ற ஆயத்த விடைகளை அனுப்பி இவள் இல்லாத குறையே தெரியாதவாறு பார்த்துக் கொண்டான் தம்பி.

ஆனால் இரண்டு நாட்களுக்குள்ளாகவே... இந்த மெசேஜ்லருந்துதான் நீ பதில் அனுப்பற.. போன மெசேஜ்க்கு உன் தம்பி அனுப்பினான் பதில்... இதெல்லாம் நியாய தர்மம் இல்ல பவி.. ஆமா.. சொல்லிட்டேன் – என மெசேஜ் வந்தது.

தூக்கி வாரிப் போட்டது இவளுக்கு. எப்டிடா கண்டு பிடிச்ச?

உன் விரல்களின் இனிய வாசம் சுமந்த வார்த்தைகளை
என் விழிகள் பகுத்தறியும் பவி – என்றான்.

நல்லா இருக்கு.. யார் எழுதி கொடுத்தாங்க ? - என்றாள்

யாரும் இல்ல.. தி கிரேட் பொயட் சுஜீத் அவர்களே எழுதியது – என்றான்

இதுபோன்ற மதிப்பிடற்கரிய தகவல்களை அனுப்பி, அனுப்பி, அனுப்பி..... அவளது கட்டை விரல், குட்டை விரல் ஆனது. கண்ணை மூடிக்கொண்டு மெசேஜ் அனுப்பும் அளவுக்குப் பாண்டித்யம் பெற்று திகழ்ந்தாள். பாண்டிய மன்னன் இருந்தால் “ யாரங்கே..?” ந்னு கைதட்டி.. ஒரு சூப்பர் பிகரை கூப்பிட்டு.. கொஞ்சம் ஜொள்ளோடு அவளைப் பார்த்து “ இந்தப் பொற்கிழியை அந்தப் பவித்ராவுக்குக் கொடு “ என்று ஆணையிட்டிருப்பார். ஓவர் மேக்கப்புடன் வரும் அந்தப் பணிப்பெண்னும் பித்தாளை தாம்பாளத்தில் வைத்து அதை கொடுத்திருப்பாள்.

ஒரு சமையல் பன்றியா? ஒரு கோலம் போட்றியா, இல்ல .. பொண்ணா லட்சணமா உக்காந்து ஒரு டீ. வீ. சீரியலாவது பார்த்து அழறியா... எதுவும் கிடயாது.. எப்ப பாரு மெசேஜ்.. மெசேஜ்.. மெசேஜ்.. உஙப்பாவை சொல்லனும்.. செல்லு வாங்கி கொடுத்து.. தண்ட செலவுக்கு பணமும் தராரே அவரை சொல்லனும்...- புலம்புவாள் அம்மா. ஆனாள் சமயத்தில் பின் பக்க தோட்டத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது... “ இந்தா.. உனக்கு மெசேஜ் வந்திருக்கு “ – என செல்லை கொண்டுவந்து கிணற்று மேடையிலும் வைப்பாள் அம்மா.
அய்யோ அம்மா... என் செல்லம்..
--------------------------------------------------
பயப்படாதீங்க... அம்மா வந்தாலும்....தொடரத்தான் செய்யும்..
எனவே தொடரும்...,

Saturday, July 02, 2005

நினைவுப் பெட்டகம்


அலோ.. நான் சுஜீத் பேசறேன்...இந்த நம்பர்தான் அப்பாவோட புது செல் நம்பர் .... நோட் பண்ணிக்க
அலோ.. உங்களுக்கு எந்த நம்பர் வேணும்?
முண்டம்...அப்பாவோடா புது செல் நம்பர்டீ இது... பர்ஸ்ட் கால் உனக்குத்தான்... உன் செல் மெமரில ஸ்டோர் பண்ணிக்கடீன்னா...

என்னது டீ யா...? அலோ... மிஸ்டர் முண்டம்..ராங் நம்பர்ல பேசிட்டு இருக்கீங்க .. வைங்க போனை.

அன்னியாயத்துக்கு ராங் நம்பர் வருது இந்த செல்லுல.... திட்டிக் கொன்டே வண்டியை ஸ்டார்ட் செய்தாள். பெட்ரோல் போட்டது போக மீதி சில்லறை வாங்க மறந்து போனாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில், முக்கியமான சாலை திருப்பத்தில் சென்று கொண்டிருக்கையில் மீண்டும் செல் ஒலித்தது.. புது நம்பர்

அலோ... என்றாள்

அலோ... நான் முண்டம் பேசறேன்... சாரீங்க... என்னொட தங்கை நம்பர் ட்ரை பண்ணி உங்க நம்பர் கிடைச்சதால நான் உங்களை முண்டம்னு சொல்லிட்டேன்... அதுக்கு சாரீ சொல்லத்தான் இப்ப திருப்பி போன் பண்ணேன்.. சாரீங்க

இட்ஸ் ஆல் ரைட்... பரவாயில்ல.. நானும் உங்களை முண்டம்னு சொல்லிட்டேன் .. நானும் சாரீ..- என்றாள்

உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாருக்கு - ஏன்றான்

(ரொம்ப தைரியம் தான்.. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்)

நாங்க கேட்டமா உங்களை? எங்க வாய்ஸ் எப்டீன்னு... கொஞ்சம் விட்டா போதுமே

சொல்லனும்னு தோணுச்சு சொன்னேன்...வேணாம்னா விடுங்க..எதோ ரொம்ப நாளா பேசி பழகினமாதிரி இல்ல?

இல்லயே...!

சரி கோவமா இருக்கீங்க... ஒரே ஒரு விஷயம் மட்டும் கேட்டுக்கறேன்... ரொம்ப இம்பார்ட்டன்ட்

என்ன?

உங்க பேரு என்னன்னு சொன்னீங்கன்னா... நல்லாருக்கும்

ம்... என் பேரா? பண்டரிபாய்... வீட்ல குலேபகாவலின்னு கூப்டுவாங்க

என்று சொல்லி லைனை கட் செய்தாள். வண்டி ஓட்டும் போதும் சிரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை அவளால். அவளது தெரு ஆஸ்தான நடமாடும் இஸ்திரி நிலைய இயக்குனர் அவள் தன்னைப் பார்த்துத்தான் சிரிப்பதாக நினைத்து அவரும் சிரித்தார்.

மறு நாள் காலை ஐந்தரை மணிக்கு எஸ். எம்.எஸ்.- குலேபகா.. குட் மார்னிங்.. என்ன பண்ற?

( அடப்பாவி...? இவனா..? நள்ளிரவு ஐந்தரை மணிக்கு குட்மார்னிங்கா..? அம்மாவே இன்னும் எழுந்துக்கல...வாசல் தெளிக்கிறவ வரல... அவ்ளோ ஏன் பால் பாக்கெட் கூட இன்னும் வரல... நடு ராத்ரில இவனுக்கு என்ன எஸ்.எம்.எஸ்?

தூங்கிட்டிருக்கேன் - பதில் எஸ்.எம்.எஸ். அனுப்பினாள்

தூங்கும் போதும் நீ பண்ற எஸ்.எம்.எஸ். அழகா இருக்கு-பதில் வந்தது

போதும் .... தாங்கலை... நான் தூங்கணும் - பதில் அனுப்பினாள்

சோம்பேறி

நீதான் அது

ஸ்கூல் போறியா? காலேஜ் போறியா?

ரெண்டும் இல்ல

டுடோரியல்ஸ் போறியா?

இயோ.. இன்னைக்கு சன்டே.. நான் எங்கயும் போகல

நாளைக்கு போவியா டுடோரியல்ஸ்?

முண்டம்...உனக்கு என்ன வேணும் இப்ப?

உன்னோட பேர் வேணும் இப்ப

சொன்னா எஸ்.எம்.எஸ் அனுப்ப மாட்டியே?

மாட்டேன்

அப்ப என் பேரு பவித்ரா.. ஓகே யா? (புனைபெயர் தான்..)

தேங்க்ஸ் பவித்ரா

ஒழி

அப்பாடா ஒழிஞ்சான் - புரண்டு படுத்து தூங்கி, அம்மா ராட்சசியின் அதட்டலில் ஒரு எட்டு மனிக்கா கண்விழித்து. ஆற அமர செல்ல் எடுக்கையில் காத்திருந்தது ஒரு மெசேஜ்

படிமங்களாய் உன் நினைவு
பவழங்களோ உன் உதடு
பரிவோடு நீ அனுப்பு
பதில் மெசேஜ் உடன் எனக்கு -
படித்து ரசித்துவிட்டு பதில் அனுப்பினாள் "என்னது இது..? கவித...?

எஸ்.. சரீ என்ன பண்ற? – உடனடியாக பதில் வந்தது

ஆறரை மணிக்கு அவன் அனுப்பிய மெசேஜுக்கு இவள் எட்டரை மணிக்கு பதில் அனுப்பினாலும்.. உடனடியாக பதில் அனுப்பினான். செல்லும் கையுமாத்தான் இருப்பானோ?

மகாத்மா காந்தியோட பேசிட்டு இருக்கேன் - பதில் அனுப்பினாள்

ஓகோ... கோட்சே நல்லாருக்காரான்னு கேட்டு சொல்லு – பதில் வந்தது

அலோ... நீ யாரு..? எதுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பற?

நம்ம பேக்கேஜ்ல எஸ்.எம்.எஸ் ப்ரீ இல்லயா? அதான் சும்மா சும்மா மெசேஜ் அனுப்பறேன்.

(எதுக்கு பதிலுக்கு பதில் அனுப்பனும்? பதில் அனுப்பாம இருக்கறதுதான் நல்லது என்று விட்டு விட்டாள். ஆனால் .. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அவளுக்கு வந்த மெசேஜெஸ் பதினைந்து)

ப்ளீஸ்.. பவி.. ( அடப்பாவி.. அதுக்குள்ள பேரை சுருக்கிட்டான்?) நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.. நம்பு.. மெசேஜ்ல என்ன பண்ண முடியும்? என்னமோ தெரியல..ஐ வாண்ட் டு பீ யுவர் ப்ரண்ட்...ப்ளீஸ்.. ஜஸ்ட் ப்ரண்ட் ஷிப்.. பவி.. ப்ளீஸ்...- பதினைந்தும் இதே போலத்தான்.

வொய்.. யு வாண்ட் டு பீ மை ப்ரண்ட்? நோ.. ஐ டோண்ட் நீட் தட்...- பதில் அனுப்பினாள்

ப்ரண்ட் ஆயிட்ட.. ப்ரண்ட் இல்லன்னா இப்டி பதில் அனுப்புவியா? - பதில் வந்தது

ஐயோ....

என் பேரு ஐயோ இல்ல.. சுஜீத்.. சரி.. என்னோட வீடு ஆழ்வார் திரு நகர்ல.. உன்னோட வீடு எங்க?

(போட்டு வாங்கறயா கண்ணா..? இரு.. எல்லாமே சொல்றேன் தப்பு தப்பா)

என்னோட வீடு வண்ணாரப்பேட்டைல - பதில் அனுப்பினாள் அடையாரிலிருந்து

எனக்கு ஒரு அக்கா, அப்பா ரெமில வொர்க் பண்றார். அம்மா அவுஸ் வொய்ப். இஷ்டமிருந்தா உன்னோட டீடெய்ல்ஸ் தா... பிடிக்கலன்னா விட்று

எனக்கு ஒரு தம்பி.. ( அப்பா போலீஸ்னு சொல்லி வைப்போம்.. அப்பத்தான் பயம் இருக்கும்). அப்பா போலீஸ், அம்மா வீட்லதான் இருக்காங்க - பதில் அனுப்பினாள்

(கடவுளே.. அப்பா வேலையப்பத்தி அவன் ரொம்ப கேக்கக் கூடாது.. போலீசை பத்தி எதுவுமே தெரியாம எப்டி சமாளிக்கறது)

ஓகோ.. என்னோட ஏஜ் 20... உன்னோட ஏஜ்?

கேர்ல்ஸ் கிட்ட ஏஜ் கேக்கக் கூடாது

வாஸ்தவம்தான்... ஆனா.. ராட்சசிகிட்ட கேக்கலாம்.. சொல்லு

(எவ்ளோ தைரியம்? எவ்ளோ தீர்மானமா பேசறான்? அதிகமாகவே சொல்லி.. அக்கா சென்டிமென்ட் ஆக்கிடலாம்.. அதான் கரெக்ட்)

என்னோட ஏஜ் 22.. நான் உனக்கு அக்கா

என்னது..? 22 ஆ ஆ ஆ ஆஆ...!

ஏன் ஷாக் ஆயிட்டியா? அதுக்குதான் அப்பவே சொன்னேன் இந்த ப்ரண்ட்ஷிப்பெல்லாம் வேண்டாம்னு.. நீதான் கேக்கல - சந்தோஷமாக மெசேஜ் அனுப்பினாள்

இல்ல... 40 இருக்கும்னு நினைச்சேன்

கொழுப்புதாண்டா உனக்கு

என்னாது..? டா வா?

ஆமா.. டா தான் டா

சரி விடு... எஸ்.எம்.எஸ்ல இதெல்லாம் சகஜம் பவி

(அடப்பாவி விடாகண்டனா இருக்கான்..!)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுபோய் தொடராமல் இருக்குமா..? – தொடரும்
. ..