Sunday, September 18, 2005

நிலா - பௌர்ணமி

அது என்ன அது... காஸிப்ல பேசப்படற ஹீரோயின்ஸ் எல்லாரும் ஒரு சூட்கேஸ் எடுத்துகிட்டு.. பூனா போற ரயில்ல ஜன்னலோர சீட்டா உக்கார்ந்து, பின் பக்கம் தலை சாய்ஞ்சு... வெத்து பார்வை பாப்பீங்க.. ஆபீஸ் ப்ரண்டோ.. லவ் பண்ணவனோ ஜன்னல் பக்கம் நின்னு, திராபையா “ உன் முடிவை மாத்திக்கவே மாட்டியா நிலான்னு“ டயலாக் பேசனுமா?

உன்னை அப்டி பேச சொன்னமா நாங்க? உனக்கு எப்டி தெரிஞ்சுது நான் பூனா போறேன்னு?

நந்தினியும் ஷிவாவும் போன் பண்ணாங்க

நந்து... என்னடி இது? ஷக்தி... தண்ணி வாங்கிட்டு வர்ரியா? தாகமா இருக்கு

ம்.. என்னை இங்கேர்ந்து போடாங்கற.. சரி.. வாங்கிட்டு வறேன் - அவன் கிளம்பி போனதும்

நந்து... என்னடி இது...? இவனுக்கு ஏன் சொன்ன?

நானும் ஷிவாவும் எவ்ளோ சொல்லியும் நீ நிக்கல, முன்னபின்ன தெரியாம பூனாக்கு நீ போயி.. ? நீ இல்லாம எங்களால இருக்க முடியாது நிலா.. ஐ திங்க் ஷக்தி லவ்ஸ் யு

போதும் .... நிறுத்ரியா....அவன் வர்ரான்?

இந்தா.. வாட்டர் பாட்டில்.. நந்து... நீ எதாவது மேகசின் வாங்கிட்டு வாயேன்.. பூனா வரைக்கும் மேடம் படிச்சுக்கிட்டே போகட்டும் - என்றான்

ம்.. இப்ப நீ.. என்னை இங்கர்ந்து போடீங்கற.. சரியா?

நீ நிலா மாதிரி இல்ல.. ஸ்மார்ட்... சட்னு புரிஞ்சுக்கற- நந்தினி கிளம்பி போனதும்

ம்.. இப்ப சொல்லுங்க மேடம்.. எதுக்கு இப்ப பூனா? ட்ரான்ஸ்பர் எல்லாம்?

ப்ச்..ஷக்தி .. லீவ் மீ அலோன்

இந்த பீட்டரெல்லாம் வேணாம்மா.. கொஞ்சம் தமிழ்லயே பேசலாமா..ட்ரெய்ன் இன்னும் சென்னைலதான் இருக்கு

என்ன தெரியனும் உனக்கு?
நீ ஏன் இன்னும் உன் லவ்வை என்கிட்ட சொல்லலைன்னு தெரியனும்?

யார் உன்னை லவ் பன்றது?
வேறயாரு...? நீங்கதான் மேடம்!

நாங்க சொன்னமா அப்டி?
அதான் இப்ப சொல்லுங்கன்னு சொல்றோம்

ப்ளீஸ் ஷக்தி.. நான் உன்னை லவ் பன்னல... லவ் பன்னவே இல்லை
ப்ராப்ளமே இல்ல.. நான் உன்னை லவ் பன்றேன்.. அது போதும் .. வா .. கிளம்பு.. ஸ்வாமிஜி முன்னடி நம்ம கல்யாணம் நடக்கட்டும்

நான் இப்ப கல்யாணம் செஞ்சுக்கற மூட்ல இல்ல.. பூனா போற மூட்ல இருக்கேன்.

இந்தா உனக்கு பிடிச்ச பாலகுமாரன் - என நாவல்களை கொடுத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள் நந்தினி.

நந்து இவனை கூட்டிண்டு நீ கிளம்பு... ஆட்டோல போய்டு....இப்ப பஸ் இருக்காது

அப்ப நீயும் வா நிலா.. ம்.. கிளம்பு.. பூனா தனியா போய் என்னடி பன்னுவ

அங்க நான் ஒன்னும் தனியா இருக்க மாட்டேன்.. நம்ம ஆபீஸ் ப்ராஞ்ச் இருக்கு.... நீலகண்டன் சாரும் அங்கதான் போயிருக்கார்.. அவாத்து மாமி எனக்கு நல்ல பழக்கம்.. அவங்களோட இருந்துப்பேன்.

அங்க மட்டும் இந்த காஸிப் வராதா...? நீ போறத்துக்கு முன்னாடி பூனாக்கு அது போயிருக்கும்.

இல்ல நந்தினி.. மேடம் ப்ளான் உனக்கு புரியல.. மேடம் அங்க போய் செட்டில் ஆகி ஒரு ரெண்டு மாசம் ஆனதும் வர்மாவோ, ஷர்மாவோ எவனாவது ஒரு மாங்கா மாட்டுவான்.. அவனை லவ் பன்னுவாங்க.. அவனுக்கு மேட்டார் தெரியாதுன்னு அவனை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுன்டு அப்படியே செட்டில் ஆயிடுவாங்க.. மனசில என்னை நினைச்சுக்கிட்டு அவனோட வாழ்வாங்க..!

ஷக்தி.. திஸ் ஈஸ் டூ மச்.. ஓவரா பேசற... நான் அடிச்சா தாங்க மாட்ட...!

இதோடா.. உண்மையை சொன்னா எரியுதோ?

என்ன உண்மை?

உன்னோட ஷிவா மேட்டர் என்கிற உண்மை

எழுந்து போடா..

நாந்தான் அதெல்லாம் மன்னிச்சு.. மறந்து .. பெருந்தன்மையா உனக்கு வாழ்க்கை தர தயாரா இருக்கேனே..! என்னையும் போடாங்கற!? - நந்தினியை பார்த்து ஓரக்கண் சிமிட்டினான், நந்தினி சிரிப்பை மறைக்க ஸ்டிக்கர் பொட்டினை நேர் செய்ய வேண்டி இருந்தது.

என்ன..? மன்னிச்சு....மறந்து.. பெருந்தன்மையா...? என்னமோ நான் ஸ்பாயில் ஆயிட்ட மாதிரி பேசற...? அடி படுவ.. ஆமா சொல்லிட்டேன்..

அப்ப வா.. வந்து என்னை லவ் பன்னு

போதும் ஷக்தி .. நிறுத்ரியா...? தாங்கல....

நிலா.. நீ ரொம்ப அலட்றியோன்னு தோணுது எனக்கு – என்றாள் நந்தினி

நீ சும்மா இரு நந்து.. இங்க பாரு ஷக்தி.. பூனா போற அவசரத்துல சில உண்மைகளை உன்கிட்ட சொல்லித் தொலைக்க வேண்டி இருக்கு.. நீ ஸ்மார்ட்டா இருக்கடா.. கொஞ்சம் அழகாவேற இருக்க.. உன் ஆபீஸ்லயே நாலைஞ்சு உன் பின்னாடி சுத்துதுன்னு கேள்விபட்டேன்.. அதுல ஏதாவது ஒன்னு ட்ரை பன்னேன்...

ரெண்டு ரெடி பன்னிட்டேன்... ஆனா ரெண்டும் சின்ன வீடாத்தான் வருவேன்னுருச்சுங்க...!!!

தேவையா நிலா இது நமக்கு..? கொஞ்சம் சீரியஸா பேசலாமா? நிலா இங்க பாரு.. இப்ப இங்க இருந்து நான் நம்ம ரூமுக்கு போகனும்.. நைட் டைம் பயமா இருக்கு... யாராவது கூட வந்தா நல்லா இருக்கும்னு தோணுது.. இன்னைக்கு தேதிக்கு அப்படி துணையா வர யாரும் எனக்கு இல்ல.. நான் தனியாத்தான் போகனும்.. தனிமை மரணத்துக்கு சமம்.. ஷக்தி உன்னோட வாழ்க்கை முழுசும் கூட வரேங்கறான்.. அவன் மனசை புரிஞ்சுக்க.. பெட்டிய எடுத்துக்கிட்டு பெட்டிய விட்டு இறங்கு...

நந்து நீ சும்மா இரு.. ஷக்த்தி இங்க பாரு.. என்னை புரிஞ்சுக்க.. ஷிவாக்கு ஹெல்ப் பன்ன போய் .. என்னொட பேரு கெட்டுடுச்சு

பேரு தானே கெட்டுடுச்சு..? வேற பேரு வெச்சுக்க.. கண்ணாம்பா ந்னு வச்சுக்க.. உன் முட்ட முட்டை கண்ணுக்கு பொருத்தமா இருக்கும்.

சீரியசாவே ஆக மாட்டியா நீ?

நீ என்னை லவ் பன்றேன்னு சொல்லு.. அப்புறம் பாரு.. நான் எவ்ளோ சீரியஸ் ஆகறேன்னு?

ஷக்தி நான் எதுக்கு உனக்கு?

இது என்ன கேள்வி..? கல்யாணம் செஞ்சு குடித்தனம் நடத்தத்தான்..

அதுக்கு நான் தகுதி இல்லைன்னு எனக்கு தோணுது

மேட்டர் சீரியஸாவதை உணர்ந்து அவ்விடத்தி விட்டு அகல நந்தினி மெல்ல எழுந்தாள்.. பார்வையை விலக்காமலேயே, நிலாவும் ஷக்தியும் ஆளுக்கு ஒரு கையாக பிடித்து இழுத்து அவளை பழைய இடத்திலேயே உட்காரவைத்து விட்டு..

ம்.. சொல்லு

நான் வேண்டாம் ஷக்தி உனக்கு.. முழு அர்ப்பணமா என்னை நான் உனக்கு தர முடியாது

ஏன் முடியாது?

ஏன்.. ஏன்னா ஆபீஸ்ல என்னை பத்தி பல விதமா பேசிட்டாங்க.. என்னால நீ தலை குனியக் கூடாது ஷக்தி

அவங்க பேசறத்துக்கும்.. நான் உன்னை கல்யாணம் பன்றத்துக்கும் என்ன சம்பந்தம்.. உன்னை பத்தி எனக்குத் தெரியும் நிலா..

இப்ப லவ் வேகத்தில பேசற..பின்னாடி ஏதாவது ப்ரச்சனைன்னா சொல்லிகாட்டுவியோன்னு பயமா இருக்கு

கண்டிப்பா சொல்லிக் காட்டுவேன்.. கருணைக்கும் காதலுக்கும் வேறுபாடு காட்ட தெரியாத முண்டம்டீ நீ ந்னு சொல்லி காட்டுவேன்..

இல்ல ஷக்தி.. இது சரி வரும்னு தோணல.. நான் வேண்டான்டா உனக்கு.. நீங்க கிளம்புங்க.. இஞ்சின் மாட்றாங்க

நீ ஷிவாக்கு உதவி செஞ்சது தப்பே இல்லை.. ஆனா.. அதையே ஓவரா அலம்பாம.. சிலுப்பாம.. அமைதியா செஞ்சிருந்தா இந்த பேச்சு இல்லயே..? என்றாள் நந்தினி

உதவி செஞ்ச மாதிரியா பேசினாங்க...? இவங்களை மனுஷங்கன்னு நினைச்சு இவ்ளோ நாள் பழகி இருக்கேனே நான்...!? இந்த சமுதாயத்தோட வாழறதை விட கண் காணாம போலாம் நந்து..

நீ எங்க போனாலும் மனுஷங்க மனுஷங்கதான்.. பாதை முழுதும் முட்கள் இருக்கும், நாம் தான் முன்னெச்சரிக்கையா பார்த்து நடக்கணும்

அந்த முள் என் கண்ணை குத்தினாலும் பரவாயில்லை ஆனா உன்னோட மனசை குத்திட கூடாது ஷக்த்தி.. நீ நல்லாயிருடா.. உனக்கு நல்லவளா அமைவா.. நான் போறேன்

வா ஷக்தி.. இது தேறாது... நாம போலாம்.. ரொம்ப சிலுப்பிக்கறா.. ஏய் போய் சேர்ந்ததும் .. என் செல்லுக்கு ஒரு கால் பன்னு.. டேக் கேர்.. வாடா.. போலாம்.. கோபத்துடன் எழுந்தாள் நந்தினி.

நிலா...இன்னைக்கில்லைன்னாலும்.. நீ ரிடையர் ஆவறத்துக்குள்ள என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட லவ் சொல்லனும்னு நீ நினைச்சா.. என்னோட செல்லுக்கும் ஒரு கால் பன்னு நிலா.. உன்னோட அந்த காலுக்காக சிம் கார்ட் மாத்தாமயே என்னோட செல் எப்பவும் காத்திட்டிருக்கும்.

அந்த கம்பார்ட்மென்ட் விட்டு இறங்கி வேகமாய் நடந்து போனார்கள் நந்தினியும் ஷக்த்தியும்... அவர்கள் திரும்பி பார்ப்பார்கள் என எதிர்பார்த்தாள்.... அவர்களுக்கு டாடா சொல்ல ஜன்னல் வழி கையெல்லாம் நுழைத்து தயாராக இருந்தாள்.. ஆனால் அவர்கள் திரும்பி பார்க்கவே இல்லை.. ஏக்கமாய் இருந்தது. சட்டென அனாதை ஆனதை உணர்ந்தாள்.. நந்தினி சொன்னது உண்மைதான்.. தனிமை மரனம் தான்.

இந்தக் கம்பார்ட்மென்டில் தன்னுடன் பயணிக்கப் போகிறவர்கள் யார் யார் என பார்த்தாள்...அழகாய் முக்காடு இட்ட, எலுமிச்சை நிறத்தில் ஒரு பெண்மனி, பக்கத்தில் அவளது கணவன்... அவளது இரண்டு குழந்தைகள்.. இரண்டு மூன்று பெரியவர்கள், ஒரு இளம் பெண்.

சோகமும் பயமும் இதயத்துள் கனக்க.. சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.. வண்டி கிளம்பியது.. என் சென்னை.. என் ஷக்திவேல்.. என் நந்து.. எல்லோரையும் விட்டு விட்டு போகிறேன்.. நாட்கள் செல்லச் செல்ல என்னை மறந்து விடுவார்கள்.. மறக்கட்டும்.. அதுதான் தேவை.

ஆனாலும் நினைக்க நினைக்க நெஞ்சம் வலிக்க.. கண்கள் கனக்க அழுகை வந்தது.. யாரும் பார்க்கும் முன் துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு தன் பெட்டியைத் திறந்து டைரியை எடுத்தாள் அதில் பொதிந்து வைத்திருந்த இரண்டு போட்டோக்களை எடுத்தாள் அவற்றுள் ஒன்று அவளுக்கும் ஷக்திவேலுக்கும் நடுவில்.. இருவர் தோள்களிலும் ஆதரவாய் கை வைத்தபடி சிரித்துக் கொண்டே ஸ்வாமிஜி நிற்கும் போட்டோ, இரண்டாவது ஷக்தி –ஹைய் ஜம்பில் முதல் பரிசு வாங்கிய கோப்பையுடன். வெகு நேரம் அவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்... கண்ணீரை கட்டுப் படுத்தவோ.. துடைக்கவோ நினைவில்லை அவளுக்கு.

நிலாவயே பார்த்துக் கொண்டிருந்த அந்த வடக்கத்தி பெண்மனி கொஞ்சம் அதிர்ந்து விட்டாள்.. ஒரு தட்டில் இரண்டு பூரியும், சப்ஜியும் வைத்துக் கொண்டு.. தன் கணவனிடம் கண்களாலேயே அனுமதி பெற்று, இவளருகில் அமர்ந்து.. இவளது தோளை மெல்லத் தொட்டாள்.. இதை சாப்பிடு என்பதாய் பார்த்தாள். பெட்டியில் ஏறியதிலிருந்து.. நிலா, ஷக்தி, நந்தினிக்கு இடயே நடந்த உரையாடலை கவனித்து ஓரளவு தான் பார்த்திருந்த சீரியல்களில் வந்த கதைகளுடன் தொடர்புபடுத்தி நிலாவின் இன்றைய நிலையை கணித்து வைத்திருந்தாள்.. அதற்காகவே சப்ஜியை கொஞ்சம் அதிகம் வைத்துத் தந்தாள். தலை நிமிர்ந்து பார்த்த நிலா நெகிழ்ந்து போனாள்.. ஆனால் தற்போதைய நிலைமையில் சப்ஜி தொட்டு தொட்டு பூரியை கடித்து கடித்து சாப்பிடும் மன நிலையில் அவள் இல்லை.. எனவே

மாப் கரோ ஜீ.. முஜே நஹி சாஹியே - என்றாள்

அதற்கு அந்தப் பெண் “ ஏன் வேணாம்னு சொல்றீங்க? அப்றமா வேணா தரட்டா? என்றாள். சரி என தலையாட்டிவிட்டு இடையில் நிறுத்தியிருந்த அழுகையை தொடர வசதியாக முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டாள்..

இழந்துவிட்டேன்.. என் வாழ்க்கையையே இழந்து விட்டேன்.. ஷக்தி ஐ லவ் யூ டா.. நான் எந்த தப்புமே பன்னலடா.. சுமதியை பார்த்ததும் என் அம்மா நினைவு வந்துச்சு.. பைத்தியமான என் எம்மாவை வச்சுக்கிட்டு என் அப்பா எவ்ளோ கஷ்ட்டப்பட்டாருன்னு உனக்கே தெரியும்..கடைசீ நாட்கள்ள நல்ல ட்ரீட்மென்ட் கிடைச்சும்.. கொஞ்சம் டெவெலப்மென்ட் தெரிஞ்சும்.. மோசமான ஹெல்த் கன்டிஷனால என் அம்மா எனக்கு இல்லை.. இப்படி உதவி செஞ்சா என்னோட பேர் கெட்டுப் போகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. நீ எங்க இருந்தாலும் நல்லா இரு ஷக்தி. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பன்னிக்க.. எனக்கு கல்யாணப் பத்திரிக்கை மட்டும் அனுப்பிடாத.. அதை பிரிச்சு படிக்கும் போதே நான் செத்துருவேன்.. நந்து.. என்னை மறந்துடாத நந்து.. ஷக்த்திக்கு கல்யாணம் முடிஞ்சதும் நான் சென்னை திரும்பி வருவேன்.. அப்போ நான் தலை சாய்ச்சு அழ எனக்கு உன் மடி வேணும் நந்து.. கோவிச்சுக்கிட்டு திரும்பி பாக்காமகூட போன இல்ல நீ.. போ.. போ.. நான் வேணாம்தானே உனக்கு - பொங்கி பொங்கி அழுதாள்.. துப்பட்டா நனைந்து.. சூரியும் நனைந்து.. ஆனால் அழுகை அடங்கவில்லை. மீண்டும் அவளின் தோள்கள் மெல்ல தொடப்பட்டன..

எனக்கு வேணாங்க.. பசிக்கல - என சொல்ல நினைத்து தலை நிமிர்ந்தவள்.. அதிர்ச்சியில் உறைந்தாள்

ஏய் ஷக்தி.. நீ போகல? நந்து.. நீயும் போகல !?
எப்டி போவோம்.. ஹீரோயின் அழுதுட்டு இருக்கீங்களே?

வண்டி சென்னயை தாண்டியாச்சு.. என்ன விளையாடறீங்களா...?
பூனாக்கு டிக்கெட் எடுத்துருக்கோம்

என்னது.! பூனாக்கா? அடப்பாவிங்களா...!!
சரி .. கொஞ்சம் தள்ளிக்கறயா நாங்க உக்காரணும்.உட்கார்ந்தார்கள்

மீண்டும் தொடரலாமா...மேடம் ஏன் அழறீங்க? அட என் போட்டோ...! லவ்வு......!? என் மேல? சொல்லித் தொலையேன்.. ஷக்த்தி உன்னை லவ் பண்றேன்டான்னு சொல்லித்தொலையேன் முண்டம்.

ஆயிரம் இருந்தாலும்.. நான் எந்த தப்பும் பன்னலன்னு உனக்கு எப்டி நான் ப்ரூவ் பன்னுவேன்?

உன்னை நிரூபிக்க சொன்னனா நான் இப்ப? எனக்கு எல்லாம் தெரியும் நிலா. நீ மூனுமாசம் லீவ் போட்டுட்டு சுமதியை பார்த்துகிட்டது எல்லாம் நான் அங்க வந்தப்ப நேர்ல பார்த்தேன்.. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு உன் கிட்ட பேசல.. நந்தினி அங்க இருந்தப்ப தான் நான் அங்க வந்தேன்.. பேசறவங்க என்ன வேணா பேசுவாங்க... அதை பெருசா மதிச்சு பூனாக்கெல்லம் டிரான்ஸ்பர் வாங்கிகிட்டு ரயில் மூழ்கற மாதிரி அழுதுகிட்டே கிளம்பற கேணச்சிய நான் பார்த்ததே இல்ல நிலா.

எந்த வித நெருடலும் இல்லாம சர்ப்பணமா என்னை நான் உனக்கு தந்திருக்கனும் ஷக்தி

அதைத்தான் எப்பவோ தந்துட்டியே

என்ன சொல்ற...!?

படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு நம்ம ஆஸ்ரமத்திலேர்ந்து கிளம்பர அன்னைக்கு இதே மாதிரி பிழிய பிழிய அழுதியே .. அன்னைக்கு உன் கண்கள் சொல்லுச்சு “ ஷக்தி ஐ லவ் யூ டா.. நீ இல்லாம நான் இல்ல.. உன்னை விட்டுட்டு போக முடியலடா ந்னு” சொல்லுச்சு. உனக்காகத்தான் ஸ்வாமிஜிய விட்டுட்டு.. விவசாயத்தை விட்டுட்டு.. உன் கிட்டயே இருக்கனும்... தினமும் உன்னை பார்க்கனும்னு சென்னை வந்து ஏதோ ஒரு வேலைல சேர்ந்தேன்.. நீயும் சொல்லுவ சொல்லுவன்னு பார்த்தா.. மேடம் சமூக சேவகி ஆகி.. பட்டப் பேர் வாங்கிகிட்டு.. சென்னையை திட்டிட்டு பூனா கிளம்பரீங்க.. சரி இது ஆவறதில்லைன்னுதான் நானும் நந்தினியும் பூனாக்கு டிக்கெட் எடுத்தோம்.

ஆனந்த கண்ணீர் புறப்பட்டது நிலாவின் கண்களில் இருந்து.. மெல்ல சிரித்தாள்.. நந்தினியும் சிரித்தாள்.. ஷக்த்தியும் மெல்லிய புன்னகை புரிந்தான்.. மூவரின் கண்களிலும் நீர் திரை இட்டது.. நிம்மதியும் அழுகயைத்தான் தருகிறது.. என் நந்தினியும்.. என் ஷக்தியும் பக்கத்திலிருப்பது எவ்வளவு நிம்மதி.. அவளையும் அறியாமல் நந்தினியின் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்தது நிலாவின் கைகள்..

ஒரு நல்ல, திடீர் திருப்பங்கள் நிறைந்த எட்டரை மணி டி.வி சீரியலை பார்த்த த்ருப்த்தியில் முதுகு சாய்த்து ரிலாக்ஸாகினர் அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள்

சரி.. சிரிச்சது போதும்.. பூரீ சாப்ட்றீங்களா?

ஏது பூரி..? ஒரே நேரத்தில் கேட்டனர் நந்தினியும் ஷக்தியும்

நிலாவின் கண்கள் வடக்கத்தி பெண்மனியின் கண்களை இறைஞ்சின.. “ பூரி இல்லைன்னு சொல்லி ப்ரண்ட்ஸ் எதிர்க்க மானத்தை வாங்கிடாதீங்க” என்பதைப்போல பார்த்தாள்.

இவர்களது உரையாடலை மனம் ஒன்றி கண்களில் நீர் வழிய.. ஒண்ணு மண்ணா கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து சீட் பெண்மனி இன்னும் நான்கு பூரிகளை சேர்த்து வைத்து மொத்த சப்ஜியையும் கவிழ்த்து கொட்டி ஆனந்த கண்ணீருடன் தந்தாள்.. டி.வி. சீரியல்களை திட்டக் கூடாது.. அவைகள் தான் மனிதர்களை எவ்வளவு மென்மையாக்குகின்றன?

வெள்ளியை வார்த்து ஊற்றிய பௌர்ணமி நிலவொளியில் மர இலைகள் பளபளக்க.. புன்சிரிப்புடன் வேகமெடுத்தது பூனா நோக்கி செல்லும் அந்த ரயில்.. தென்றல் அவர்களின் கண்ணீரை காயச் செய்தது.

ஷக்தி நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அந்தப் பார்வை ஆயிரம் காவியங்களைச் சொன்னது...எப்பொழுது சொல்லப் போகிறாய் நிலா...? அந்தக் கவிதைத் தருணம் எப்போது? என கேள்விகளையும் கேட்டது.

வடக்கத்திப் பெண், அவளது குடும்பம், மற்ற பயணிகள்..அவர்களது சுற்றமும் நட்பும் சூழ.. தொடர்ந்து கவனிக்க.. நந்தினியும் ஷக்தியும் எதிர் பார்க்காத அந்தத் தருணத்தில், மெல்லிய வெட்கப் புன்னகை இதழ்களில் தவழ.. கால் விரல்கள் தரையில் கோலமிட, கண்களை மெல்ல உயர்த்தி ஷக்தியை பார்த்து .. நிலா அந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னாள்... அவை... ஷக்தி பூரி சாப்டு.

அடிக்க வராதீங்க.. கொஞ்சம் ஓவர் பில்ட் அப் தான்.. காதலெல்லாம்.. பூரி தட்டை கைல வச்சுக்கிட்டு ..ஓட்ற ட்ரெயின்ல.. பத்து பதினஞ்சு பேர் வச்ச கண் வாங்காம பார்த்துட்டிருக்கும் போது.. ஐ லவ் யூ டான்னு சிம்பிளா சொல்ற விஷயமில்லீங்க.

மழையடித்து காய்ந்த.. மலைக்கோயில் கற்படியில், கைப்பிடி சுவர் சாய்ந்து.. அருகருகே நிற்கையில்.. தூரத்து வயல்களை தழுவிவந்த தென்றல் முன் நெற்றி குழல் கலைக்க.. மௌனமாய் கண்கள் கலக்க.. மெல்லிய முல்லை வாசத்தோடு “ ஷக்த்தி ஐ லவ் யூ.. ஐ லவ் யூடா செல்லம் “ என மென்மையாய் சொல்ல வேண்டிய அற்புதமான விஷயம்.

நம் நிலாவும் அவளது ஷக்தியிடம் தன் காதலை சொல்லுவாள்.. இப்போது இல்லை...

மலைக்கோயில் வாசலில்.. கார்த்திகை தீபம் மின்ன.. நேவி ப்ளூ டீ ஷர்ட் போட்ட அழகான ஷக்தியைப் பார்த்து, கண்களில் காதல் மின்ன.. ப்ளாக் சூரியில் துப்பட்டா படபடக்க.. ஓர் இனிய பௌர்ணமி நிலவொளியில் சொல்லுவாள்.

அந்த இனிய தருணத்திற்காக .. கண்களில் கனவுகள் மிதக்க.. இப்பொழுதே ஏங்கத் துவங்கினர் இருவரும்.. ஆனால் இது புரியாமல், இன்னும் பூனா நோக்கியே தள தளவென போய் கொண்டிருந்தது அந்த மக்கு ரயில்.
----------------------------------------------------------------------


ஆகவே பெண்களே.. இச் சிறுகதை வழி நான் சொல்ல வந்தது என்ன வெனில்.. போனால் போகிறது... ஆண்களுக்காக இரக்கப் படுங்கள், உதவுங்கள்.. அல்லது வெறுமனே நட்புடன் பழகுங்கள்.. யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அனைத்திற்கும் ஒரு எல்லைக் கோடுகளை உங்களுக்குள் வரைந்துக் கொள்ளுங்கள்.. அந்தக் கோட்டினை கடக்காமல், சமூகத்தின் பார்வையில் கேள்விக் குறிகளை எழுப்பாத வகையில் நீங்கள் செய்ய நினைத்ததை செய்யுங்கள்.. உங்களது மன நிம்மதியையும், கம்பீரத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.. சரிதானே?

எல்லா நிலாக்களுக்கும் இதுபோல, பூனா வரைக்கும் டிக்கட் எடுத்து பின்னாடியே துரத்தி துரத்தி லவ் பன்னும் ஷக்திவேல்கள் அமைவது கடினம் அல்லவா?

நிலாவின் நிறைவு பௌர்ணமி தானே?





Saturday, September 10, 2005

நிலா - 6

மலையே மகேசன் ஆகி நிற்க.. வலம் வந்து மக்கள் வணங்கும் திருவண்ணாமலை.. கோயிலை கடந்து, நகர எல்லை கடந்து.. கிராமத்தினை நோக்கி செல்லும் நிழல் கவிழ்ந்த சாலயில் அந்த ஆஸ்ரமம்.

நீங்க கார்லயே இருங்க.. நான் ஸ்வாமிஜீ இருக்காரான்னு பார்த்துட்டு வரேன் -

ஆஸ்ரமத்துக்குள் சென்றாள் நிலா. மருதாணிச்செடியின் வாசம் தென்றலோடு கலந்து வந்தது.. மரங்கள் சூழ, நடுவில் அந்த பெரிய குடில்.. வலதுபக்கம் பளிங்கினால் ஆன நவக்ரக சன்னிதானம்..இடது பக்கம் செழுமையான துளசிவனம். இரு பக்கமும் அரண்போல் அடர்த்தியாய் வளர்க்கப்பட்ட வேங்கை மற்றும் ஊஞ்சை மரங்கள். பெரிய கிணறு.. சொட்டு நீர் பாசனமாய் அனைத்து மரம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ந்துக் கொண்டிருந்தது. குளுமையும், தூய்மையும் தெய்வீகமும் ஒருங்கே இணைந்த அவ்விடத்தில் வளர்ந்த பசுக்களும் அவற்றின் சின்னஞ் சிறு கன்றுகளும் நிலா அருகில் சென்றதும் “ வா..வா..வா.. என்னை கொஞ்சம் கொஞ்சிட்டு போ..” என்பதைப் போல அவளை சூழ்ந்துக் கொன்டன

நிச்சயம் எழுபது வயதாவது இருக்கும் அவருக்கு.. அந்தக் கண்கள்.. அவை என்ன அழகு.. என்ன ஒரு கருணை.. அவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஷிவாவிற்கே ஓடிப்போய் அவரது விரல்களை கோர்த்துக் கொண்டு “ நானும் உங்களோடயே இருக்கட்டா “ என கேட்க வேன்டும் போல இருந்தது. மிகுந்த ப்ரயாசை பட்டு அடக்கிக் கொண்டான். அவனையும் அறியாமல் அவரை நோக்கி நடந்தான். ஷிவாவை பார்த்து கைகளை உயர்த்தி வாழ்த்தி அவனது தோள்களை தட்டிக் கொடுத்தார் ஸ்வாமிஜி. காருக்குள் எட்டிப்பார்த்தார். செடெடிவ்ஸ் கொடுக்கப்பட்டு அயர்ந்து தூங்கும் சுமதியை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்

“தூங்கறவங்களை தொந்தரவு செய்யவே கூடாது.. மகா பாபம்.. நிலா இவங்களை ஐந்தாவது குடில்ல தங்கவை.. தூங்கி எழுந்ததும் நம்ம கிணத்து தண்ணியில குளிக்க வச்சு, சுத்தமான ஆடைகளை போட்டு என்கிட்ட அழச்சுட்டு வா.. என்ன ஏதுன்னு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு துளசிவனம் நோக்கி நடந்தார்.

குடில் என்பது உண்மையாகவே நவீனங்கள் ஏதுமில்லாத பழையகால நிஜமான குடில்தான். மூங்கில் மற்றும் மரப்பலகைகள் சுவர்களாகவும் களிமன் தரை சமன் படுத்தப்பட்டு, பசுஞ்சாணமிட்டு மெழுகி இருந்தார்கள்.. மஞ்சள் வேப்பிலை கலந்து அரைத்த தண்ணீர் குடிலுக்குள்ளும், குடிலை சுற்றியும் அடர்த்தியாய் தெளிக்கப் பட்டிருந்தது. மாயிலையும் வேப்பிலையும் மாறி மாறி தொடுக்கப்பட்ட சரம் வாசல் மற்றும் ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டிருந்தது. சாம்பிராணி, மருதாணி விதைகள், நாயுறுவிச்செடியின் வேர் ஆகிய மூன்றும் கலந்து தணலில் இடப்பட்டு அதன் புகை குடிலுக்குள் பரவியப்படி இருந்தது. சமையல் மேடையில் மண் பாத்திரங்களும், விறகு, வரட்டி மற்றும் நிலக்கரி குமுட்டி அடுப்புகள் மெழுகி கோலமிடப்பட்டு தயாராய் இருந்தன.

ஒரு பெரிய ஆல மரத்தின் அடியில் அமைக்கப்பட்ட களிமன் மேடையில் அவர் அமர்ந்திருந்தார்.. குளித்து தூய்மையான ஆடைகள் அணிவிக்கப்பட்டு நிலாவால் கைத்தாங்கலாய் பிடித்துக் கொள்ளப்பட்ட சுமதி எதிரில் அமர்ந்திருந்தாள். அவளது கண்களையே உற்று நோக்கினார். சுமதியின் பார்வை சலனமற்று இருந்தது.அவளது வலது முன்னந்தலையில் முடிக்கற்றைகளை ஒதுக்கி எதையோ தேடி.. இறுதியாக அந்த வெட்டுத் தழும்பை கண்டு பிடித்தார்


இது எப்படி ஏற்பட்டுச்சுன்னு தெரியுமா?

அவர் அவ்வாறு சரியாக அதை கண்டு பிடித்து கேட்டது.. ஷிவாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவளோட சிறு வயசில , ஓடிட்டு இருந்த பம்ப்செட் மோட்டார்ல நீளமான அவ தலை முடி சிக்கி, பெரிய வெட்டு காயமும் கரண்ட் ஷாக்கும் அடிச்சு தூக்கி போட்டுடுச்சுன்னு அவளோட அப்பா சொன்னார்.

ஒரு ஏழு வயசில இருக்குமா?

ஆமா.. சரியா ஏழு வயசுன்னுதான் சொன்னார்

நடவடிக்கைகள் எப்டி இருந்தது?

அமைதியா நிச்சலனமா உட்கார்ந்துகிட்டே இருப்பா.. அதிகமா பேசவே மாட்டா.. கல்யாணம் முடியறவரைக்கும் எனக்கு தெரியாது.. அவளோட அப்பா அம்மா மறைச்சுட்டாங்க.

உங்க மகள் பிறந்ததுக்கு அப்புறம் நடவடிக்கைகள்ள மாறுதல் ஏற்பட்டுச்சா?

அதுக்கப்புறம் தான் நிறைய மாறுதல்கள்.. அப்பப்போ வீட்டை விட்டு போயிடுவா.. ஒருசமயம் நான் ஆபீஸ் கிளம்பிட்ட பிறகு நகை பணம் எல்லாம் எடுத்துகிட்டு கோயில் உள்ள போய் உட்கார்ந்து துணி விரிச்சு பரப்பி எண்ணிக்கிட்டு இருந்ததை பார்த்து தெரிஞ்சவங்க போன் பண்ணாங்க, நாலு பேரா சேர்ந்து போய் எல்லாத்தையும் மூட்டை கட்டி எடுத்துக்கிட்டு, கார்ல ஏத்தி அழைச்சிட்டு வற்றத்துக்குள்ள அமர்க்களமா ஆயிடுச்சு.. அதுக்கு பிறகு தான் கன்ட்ரோலே செய்ய முடியாம ரூமுக்குள்ளயே அடைச்சு வச்சிருந்தோம். நாள் ஆக ஆக தன்னோட மகளையே அடையாளம் தெரியல கையில இருக்கறத தூக்கி அடிக்கறா.

நீண்ட நேரம் கண்மூடி தியானித்து முடித்து.. கண்களை திறந்தார்.. அதில் பொங்கி வந்த கருணையும் கனிவும் அந்த இடத்தியே சாந்தமாக்கின.. ஷிவாவை நோக்கி மென்மையாக பேச ஆரம்பித்தார்.
“இவங்க இங்கயே ஒரு மண்டலம் தங்கி இருக்கனும்.. சில சிகிச்சைகள் செய்து பாக்கறேன்.. அண்ணாமலையான் க்ருபை அவங்களை குணப்படுத்தும்.. இதுவரை சாப்டுட்டு இருந்த மருந்து மாத்திரைகளோட வீரியத்தை முதல்ல இரத்ததில இருந்து நீக்கனும். அதன் பிறகு தான் நான் தரும் மூலிகை மருந்தும் எண்ணைகளும் வேலை செய்யும்.. அதனால கிட்டத்தட்ட மூனு மாசம் இவங்க இங்க தங்க வேண்டி வரும்.. அப்படியும் அவனின் கருணைதான் முக்யம். அது இருந்தாத்தான் குணமாகுவாங்க. எனச் சொல்லி நிறுத்தினார்.

நிலாவும் ஷிவாவும் ஏதும் பேசவில்லை.. நம்பிக்கை இழந்த இருளில் அவரது பேச்சு சூரியனின் புத்தொளியைப் போல் இருந்தது

இவங்க இங்க தங்கி இருக்கற காலம் முழுதும்.. இவங்களோடவே இருக்க ஒரு பெண் தேவை.. மூலிகைகளை அரைச்சு தடவி குளிப்பாட்டி விடனும், உடைகள் மாத்தி விடனும், உடல் முழுக்க எண்ணை தடவி விடனும், நான் தரும் மருந்துகளை நேரம் தவறாமல் தரணும், நான் சொல்லும் பக்குவங்களை சமைச்சு தரனும்.. இது எல்லாத்தையும் விட தினமும் காலையும் மாலையும் அவங்களுக்காக நவக்ரக பூஜை செய்து நவக்ரக சன்னிதானத்தை நாற்பத்திஎட்டு முறை சுத்த வைக்கனும்.. இவங்களோட அம்மா இருந்தா அழைச்சிட்டு வாங்க

இவங்க அம்மா இறந்து அஞ்சு வருஷம் ஆகுது

அப்போ உங்க அம்மாவை அழைச்சுட்டு வாங்க

அவங்களும் இல்லை.. இங்க யாராவது வேலைக்கு ஆள் கிடைச்சா.. எவ்ளோ வேணா கொடுத்துடலாம்.. இல்லைன்ன வீட்ல வேலை செய்ர பெரியம்மா இருக்காங்க.. இப்பவே போன் செஞ்சு வரவழைக்கறேன்.

இல்லை.. அது சரிவராது.. இவங்களோட தங்கறவங்க.. இவங்க பூரணமா குணமாகனும்னு நிஜமாவே மனசுக்குள்ள நினைக்கறவங்களா இருக்கனும்.. ஏன்னா இந்த மூனு மாசமும் அவங்க வைப்ரேஷனும், நல்லெண்ணமும் சேர்ந்துதான் சுமதியை குணமாக்க உதவும்.. அதனால ஒன்னு நெருங்கின சொந்தமா இருக்கனும், இல்லை நல்ல ஆத்மார்த்தமான நட்பா இருக்கனும்.. முக்யமா அவங்க நல்லவங்களா இருக்கனும்.. நல்ல எண்ண அலைகளை வைப்ரேஷன்ல கொடுக்கறவங்களா இருக்கனும்

ஷிவா ஏதும் பேசவில்லை.. என்ன செய்வது – என்பதைப் போல் யோசித்துக் கொண்டிருந்தான்

அப்பா.. நான் தங்கி உதவி செய்யட்டா? எனக் கேட்டாள் நிலா

செய்யலாம்... ஆனா உனக்கு லீவு..? ஆபீஸ்ல ப்ரச்சனை வந்தா என்ன பண்ணுவ?

எனக்கு மெடிக்கல் லீவ் நிறைய இருக்கு.. இங்க நம்ம டாக்டர் அங்கிள் கிட்டயே சர்டிபிகேட் வாங்கி அனுப்பிடறேன்.. ஷாங்ஷன் பண்ணப் போறது இவர்தான்.. நானும் நவக்ரகம் சுத்தி வந்து கொஞ்சம் புண்ணியம் தேடிக்கறேனே.. ப்ளீஸ் .. சரின்னு சொல்லுங்கப்பா

சரி.. விளையாட்டுத்தனமா இல்லாம நிஜமான அக்கறையோட பக்தியோட இருக்கனும் புரியுதா..
ம்.. சரிப்பா

ஷிவாவை தீர்மானிக்கவே விடாமல் நிலாவும் ஸ்வாமிஜியும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

நீங்க கிளம்புங்க.. நாங்க பாத்துக்கறோம்

தயங்கி நின்றான் ஷிவா.. அதை புரிந்துக் கொண்ட நிலா.. உங்களுக்கு என்ன விருப்பமோ அதை தக்ஷணையா வச்சுட்டு போங்க.. ஒரு ரூபாயா இருந்தாலும் வைங்க.. நாங்க பார்த்துக்கறோம் என்றாள்

பத்தாயிரம் . இருபதாயிரம் கேட்டு முன்பணமாகவே வாங்கிக் கொண்ட வைத்தியசாலைகளைத்தான் இதுவரை பார்த்திருக்கிறான் ஷிவா.. அந்த ஆஸ்ரமத்தின் ப்ரம்மான்டத்தையும் அதை நிர்வகிக்க எவ்வளவு சிரமங்கள் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு.. தனது மனைவி குணமாக வேண்டிக்கொண்டு..ஐம்பதாயிரத்திற்கான காசோலையை ஆஸ்ரம அலுவலகத்தில் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
----------------------------------------------

தவம் செய்வதைப் போல தனது கடமைகளைச் செய்தாள் நிலா... தீபாவளி.. பொங்கல் தவிர மற்ற நாட்களில் சூர்யோதயத்தையே பார்க்காதவள்.. இப்போது விடியற் காலை மூன்று மணிக்கு எழுந்து, குளித்து முடித்து, நித்தமும் புது வேப்பிலை மருதாணி பறித்து அரைத்து , அதை சுமதியின் தலை முதல் பாதம் வரை தடவி ஊறவைத்து, மூலிகைகள் கொண்டு காய்ச்சப்பட்ட வென்னீரால் குளிப்பாட்டி, முலிகை கரைசலில் ஊறவைத்து காயவைக்கப்பட்ட தூமையான கதர் ஆடைகளை உடுத்தி செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகன் குடியிருக்கும் வேங்கை மரத்தின் சென்னிற பாலினை திலகமாக இட்டு.. நவக்ரகங்களுக்கான பூஜைகளை முடித்து நாற்பத்தி எட்டு வலம் முடிந்த பின் ஸ்வாமிஜியின் முன் சிகிச்சைக்காக சுமதியை அமரவைத்துவிட்டு.. தங்கள் குடிலை பசுஞ்சாணமிட்டு மெழுகி இருவருக்கான சமையலை ஆரம்பிப்பாள்.. இம்மாதிரியான நித்ய கடமைகளால் குண்டு குண்டு... குண்டுப் பெண்ணே .. என்று இருந்தவள்.. இருக்குமிடம் தெரியாத ஒல்லி நாயகி ஆகிவிட்டாள்.. ஆனாலும் மன நிறைவும், த்யானமும் அவள் முகத்தை பொலிவாக்கின.

நந்து.. ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வாயேன் - செல்லில் கூப்பிட்டாள்

எதுக்கு..?

ப்ளீஸ்.. இன்னும் ரெண்டு நாள்ள எனக்கு மந்த்லி .சுமதியை நீ வந்து பார்த்துக்கனும்

சரி .. இன்னைக்கு ஈவ்னிக்கே வரேன்.. லீவ் கிடைக்கனும்னு வேண்டிக்கோ..!
---------------------------------------------

நிலா, நந்தினி ரெண்டு பேர்ல யாரையாவது பார்க்கணும்

உங்க பேரு.. எங்க இருந்து வரீங்கன்னு கேப்பாங்க

ஷக்திவேல்னு சொல்லுங்க

கொஞ்சம் உக்காருங்க – என சொல்லிவிட்டு ப்யூன் சீனு உள்ளே சென்று விட்டான்.. நந்தினி பர்மிஷனில் சென்றது அவனுக்கு தெரியாது

அபார்ஷந்தான்.. நிச்சயமா அபார்ஷன் தான்..அதான் மூனுமாசம் லீவ் அப்ளை பண்ணியிருக்கா

நிஜமாத்தான் சொல்றியா

வளர்ந்த ஆஸ்ரமத்திலேயே போய் ரெஸ்ட் எடுக்கறாளாம்

ஜன்னல் மூடப்பட்டிருக்கிறது என நினைத்துக் கொண்டு இருவர் பேசிக் கொண்டிருந்தது ஷக்தியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

இங்க.. நம்ம கீழ்பாக்கம் பக்கம் கலைக்க பாத்துருக்காங்க.. முடியாதுன்னு கை விரிச்சிடவே, இதுக்கு மேல தாங்காதுன்னு ஊர் பக்கம் போயிட்டா

ஆஸ்ரமங்கள்ள இதெல்லாம் சகஜமப்பா

போயும் போயும் கல்யாணம் ஆனவன் கிட்ட ஏமாந்துருக்கா பாரு

பணம்.. பணம்தான் எல்லாத்துக்கும் காரணம்

நாமளும் திருவண்ணாமலை கிரிவலம் வந்தோம்னு சொல்லிட்டு.. என்னா ஏதுன்னு தெளிவா பார்த்துட்டு வரலாமா? நிலா பிகரை பாக்காம கண்ணெல்லாம் இருளோன்னு இருக்குடா

திடுக்கிட்டான் ஷக்தி - இது என்ன நிலா, ஆஸ்ரமம், திருவண்ணாமலை ..! என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் .? கூர்ந்து கவனித்தான்.

இதுக்கு மேல அவன் கல்யாணம் செஞ்சுப்பானா?

மடக்கி அனுபவிச்சுட்டான்.. இதுக்கு மேல கல்யாணமாவது...? அவ்ளோதான்.. அப்டியே மறைச்சு வேற எவனயாவது ஏமாத்துவா..

யாருகிட்டயும் சொல்லாத.. நேத்து சீனு அந்த ஆஸ்ரமத்துக்கு அவளோட கையெழுத்து வாங்கனும்னு போயிருக்கான்..இவனை வராண்டாலயே உக்கார வச்சுட்டாங்களாம்.. ஜன்னல் வழியா பார்த்தானாம்.. இளைச்சு துரும்பா இருக்காளாம்

ஐயையோ இளைச்சுட்டாளா? அவ அழகே அவளோட கொழுக் மொழுக் தானேடா.. போச்சு.. எல்லாம் போச்சு

நீ என்னமோ கட்டிக்க போறவன் போல பீல் பண்ற..!?

தாங்க முடியாமல் வேகமாய், கோபமாய் எழுந்து திருவண்ணாமலைக்கு கிளம்பி சென்றான் ஷக்தி.
இரவு பதினோரு மணிக்கு.. ஸ்வாமிஜி வாக்கிங் முடிக்கும் சமயத்தில் அவரைப் பார்த்தான். அவரிடம் என்னவென கேட்பது.. அவரைப் பார்த்ததும் அவனுக்கு அழுகைதான் வந்தது.

"வாடா.. உன்னைத்தான் நினைச்சிட்டே இருந்தேன்.. ஏன் முகம் வாட்டமா இருக்கு..? இங்கயே ராஜா வீட்டு கன்னு குட்டியா ஆஸ்ரம விவசாயத்தோட.. ரிலீஸ் ஆவர புது படம் ஒன்னு விடாம பார்த்துகிட்டு இருந்த.. அவ கவர்ன்மெண்ட் உத்யோகம் கிடைச்சு சென்னை போனா.. அவ பின்னாடியே வேலையத்த வேலயை தேடிகிட்டு நீயும் போயிட்ட.. என்னால முடியலடா.. அவளை டிரான்ஸ்பர் கேக்க சொல்ல போறேன்.. வர்ர தை மாசம் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடப் போறேன். அப்புறம் எங்கயும் போகாம என் பக்கத்தில இருந்துருங்க ரெண்டு பேரும்.. எந்த பற்றுமே இருக்க கூடாதுன்னு நினைக்கறேன்.. உங்க ரெண்டு பேரையும் வளர்த்த பற்று மட்டும் போக மாட்டேங்குது.."

இல்ல... நிலா .. இங்க வந்து

அவ இங்க வந்ததும் .. நீயும் வந்துருவேன்னு தெரியும்.. இங்கதான் ஐஞ்சாவது குடில்ல இருக்கா

குடில்லயா ...!! ஏன்?

அவளோட ஆபிஸரோட மனைவியை மன நிலை சரியில்லாம கொண்டு வந்தா.. நான் தான் அண்ணாமலயான் கிருபை வேண்டி எனக்கு தெரிஞ்ச சிகிச்சையை செஞ்சுன்டு இருக்கேன்.. மொத்த உதவியும் அவதான்.. அந்த பொண்ணுக்கு தாயா, மாமியாரா இருந்து பார்த்துக்கரா.. நான் வளர்த்தவ.. இவ்ளோ பொறுப்பா பூஜையெல்லாம் சமர்த்தா பண்றாளேன்னு சந்தோஷமா இருக்கு.. சரி போய் சமையல் கட்டுல மணி இருப்பான்.. பாலையாவது வாங்கி குடிச்சுட்டு என் ரூமுக்கு வந்து படு.. காலைல நிலாவ பாத்துக்கலாம் என்றார்

அப்பாடா ..என்றிருந்தது ஷக்திக்கு.. அன்றைய இரவு முழுதும் தூங்கவே இல்லை அவன்.. குடிலில் தங்கி சிகிச்சைக்கு உதவுபவர் எவ்வளவு உளத்தூய்மையும், உடல் தூய்மையும் கொண்டவரக இருக்க வேண்டும் என்பது அங்கேயே வளர்ந்த அவனுக்கு மிக நன்கு தெரியும். அவ்வளவு கடினமான கடமையை மிகப் பொறுப்பாகச் செய்கிறாள் என ஸ்வாமிஜீயே சொல்லக் கேட்டு பெருமையும் மன நிறைவும் அடைந்தான் அவன். மூன்று மணிக்கு ஐந்தாம் நம்பர் குடிலில் விளக்கெரிவதை ஜன்னல் வழி பார்த்தான்.

நிலா வெளியில் வந்து வாசல் தெளித்து கோலமிடுவதைப் பார்த்தான்..இளைச்சுதான் போயிருக்கா என நினைத்துக் கொண்டான்.. அட நந்தினி.. இவ எங்க இங்க?

நந்தினியை அழைத்து எதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள் நிலா.. இலைகளை பறித்து அம்மியில் வைத்து அறைத்தாள்.. மூன்றாவதாக ஒரு பெண்ணை உள்ளே இருந்து அழைத்து வந்தனர் இருவரும்.. ஓஹோ.. இதுதான் அவளுடைய பாஸின் மனைவியோ..? இவளுக்கு என்ன அவ்வளவு அக்கறை? முண்டம்.. உன்னைப்பத்தி உன் ஆபீஸ்ல என்ன பேசறாங்கனுன்னு தெரியுமா? தெரிஞ்சா வீச்சரிவாளை எடுத்துகிட்டு வெட்டப் போயிடுவியேடி என நினைத்துக் கொண்டான். விடிந்ததும் .. நந்தினி மட்டும் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள்.. நிலா கண்களில் தட்டுப் படவே இல்லை.. எங்க போனா இவ?

ஹாய் நந்தினி

ஏய் .. ஷக்தி நீ என்ன இந்தப் பக்கம்?

ஸ்வாமிஜிய பார்க்கலாம்னு

ஸ்வாமிஜியையா.. இல்லை அம்பாளையா?

எங்க அவ?

மிஸ் பன்னிட்டியேடா... ரெஸ்ட் பில்டிங் போய்ட்டா.. ஒன் ஹவர் முன்னடிதான் போனா.. இதோட ஐஞ்சு நாள் கழிச்சுதான் தலய காட்டுவா.. அது உனக்கே தெரியும்.. அவ பாஸோட வைப் பைத்தியத்தை குணமாக்கனும்னு மேடம் வெரி சின்சியர்.. அந்த புண்ணியத்தில எனக்கும் பங்கு கொடுக்கறா.. நானும் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு நேத்துதான் வந்தேன்.. நீ எப்ப வந்த?

சரி நந்தினி.. நான் வரேன்... நான் வந்தேன்னு அவ கிட்ட சொல்லாதே?

சரி.. கிளம்பு
-----------------------------------------------

நிலாவின் தளராத தவத்திற்கு இணங்கி அண்ணமலையார் கண் திறந்தார்.. சுமதியின் உடலிலும் நடவடிக்கைகளிலும் முழு முன்னேற்றம் தெரிந்தது..அவளே முன்வந்து நவக்ரக பூஜைகளையும், சமையல் பக்குவங்களையும் தெரிந்து செய்துக் கொண்டாள். தயங்கி தயங்கி.. நிலா என் கொழந்தை நிவேதாவை பார்க்கணும்.. அவர் ஏன் வரவே இல்ல ..? என்றாள்

ஸ்வாமிஜிக்கு மிகவும் த்ருப்தி.. நிலா.. நான் வளர்த்த பொண்ணு நீ.. விளயாட்டுத்தனமா இருக்கியேன்னு நினைச்சேன்.. உன் முயற்சியாலதான் இவங்க தெளிஞ்சுட்டாங்க... என்னை சந்தோஷப்பட வச்சுட்ட... சரி.. அவசரப் பட வேண்டாம்.. இன்னும் நாலு நாள்.. முழு மண்டலமும் முடியட்டும்.. பிறகு உன் ஆபீஸரை கூப்பிட்டு அவரோட இவங்களை அனுப்பி வைக்கலாம்.. என்றார்.

களிம்பு பிடித்து எண்ணெய் பிசுக்கோடு மூலையில் கிடந்த குத்துவிளக்கை தேய்த்து கழுவி பொன்விளக்காக்கி, மஞ்சள் குங்குமமிட்டு, நல்மலர் சூட்டி, நெய்யிட்டு, வாழைத்திரியிட்டு, முத்து போல் அடக்கமாய் தீபமேற்றி அம்பாள் சன்னதியில் நிறுத்தியதை போல சுமதியை நிறுத்தி இருந்தாள் நிலா.. இவ்ளோ அழகா இந்தப் பெண்? என நினைக்கும் படி ஒரு அம்சமும், பதவிசும் சுமதியின் நடவடிக்கைகளில் வந்திருந்தது.

அந்த நாளும் வந்தது...

சென்னையிலிருந்து ஷிவா தன் மகளை அழைத்துக் கொண்டு வந்து இறங்கினான்.. அம்மாவை மன நிலை சரியில்லாத நிலையில் பார்த்திருந்த நிவேதா தயங்கினாள்.. நிலாதான் அவளை அழைத்துவந்து சுமதியிடம் சேர்த்தாள்.. சுமதியை பார்த்து ப்ரம்மித்து நின்றான் ஷிவா.. யாருக்கு நன்றி சொல்வது..? எப்படி நன்றி சொல்வது? என்ன கைம்மாறு செய்வது? என்னோட குடும்பம் நல்லபடியா ஆயிடுச்சு.. அந்த அண்ணாமலையார் தான் உங்க ரெண்டுபேர் ரூபத்தில வந்து காப்பாற்றினார் என சொல்லிக் கொண்டே ஸ்வாமிஜியின் கால்களில் விழுந்தான். புன்னகையுடன் ஷிவாவை தூக்கி நிறுத்தி தோள்களில் தட்டிக் கொடுத்தார் அவர்.

கிளம்பு நிலா.. சென்னைக்கு என்னோடயே கார்ல வந்துரு

இல்ல.. நான் அப்பா கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்..இன்னும் ஒருவாரம் லீவ் பாக்கி இருக்கு

சரி.. கோயிலுக்கு போயிட்டு நான் சென்னை போறேன்.. சீக்கிரம் வரப்பாரு

நிலா..சென்னை வந்ததும் என்னை வந்து பார்ப்பியா.. – என்றாள் சுமதி

நிச்சயமா.. சந்தோஷமா கிளம்புங்க சுமதி.. - என வழி அனுப்பி வைத்தாள் நிலா.

யார் இவள்.. என் தாயா? இல்லை போன ஜென்மத்தில் எனக்கு மகளாக பிறந்து அந்த நன்றிக்கடன் தீர்த்தாளா? இவளுக்கு எப்படி நான் கைம்மாறு செய்யப் போகிறேன்? இவளுக்கு நல்ல கணவன்.. அன்பான கணவன் அமையட்டும்.. நமக்கு தெரிஞ்சவங்கள்ள யாரு இவளுக்கு பொருத்தமா இருப்பான்? சுந்தரை கேட்டுப் பாக்கலாமா? மதி கூட நல்லவந்தான்? ஹரி கூட பொருத்தமா இருப்பான்.. சரி சென்னை வரட்டும்.. நானே நல்லவனா பார்த்து முடிச்சு வைக்கறேன் – என்று எண்ணியபடி காரை ஓட்டினான் ஷிவா..

தொடரும்..

Sunday, August 21, 2005

சிறுகதை - பரிணாம வளர்ச்சி ...!!?

எப்டி ஏறினேன்...!?

யாருக்கு தெரியும்...?

நிக்க முடியுது என்னால...!!?

நானும்தான் நின்னுட்டு இருக்கேன்...?

பேச வேற பேசறோம்...!!?

இந்தக் கூட்டத்துலயும் .. காத்து வருதே அதபாரு.. எதோ போன ஜென்ம புண்யம்தான்..சரி சில்லறையை அனுப்பி டிக்கட் வாங்கு.. செக்கிங் ஏறினா கஷ்ட்டம்.

பக்கத்தில் நின்ற ஒரு சின்ன பெண்ணிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டி“ ரெண்டு ஸ்பென்சர்ஸ்... கொஞ்சம் பாஸ் பண்ணும்மா .. ப்ளீஸ்” என்றாள் பவித்ரா.

அந்த சின்னப் பெண் பவித்ராவின் கண்களைக் கூட சந்திக்கவில்லை, ஜன்னல் வழியாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.. உடல் மொழியாலேயே அளவுக்கு அதிகமாக அலட்சியம் காட்டியது.. இந்த வயதில் இவ்வளவு திமிரா..?அதிர்சியாக இருந்தது.. மிஞ்சிப் போனால் அதற்கு பன்னிரண்டு வயதிற்குள்தான் இருக்கும்.. அவளை விட இவள் நிச்சயம் ஒரு எட்டு அல்லது பத்து வயது பெரியவளாகத்தான் இருப்பாள்.. இவளது வயதிற்கு கூட மதிப்பில்லை.. இவளிடம் பணத்தை வாங்கி தனக்கு பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் தரக் கூடிய சிறிய உதவியைக் கூட செய்ய மனமில்லை.. அப்படி செய்யாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை என்பதையும் திடகாத்திரமாய் நின்று ..முகபாவத்திலேயே உணர்த்தியது.

தலைமுறை இடைவெளி....!!!? எங்கே போகிறது இளைய சமுதாயம்..? இவளது வயதில் தான் எப்படி இருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தாள்.. எழுந்து ஓடிப்போய் பயணச் சீட்டு வாங்கித் தந்தது... குழந்தையுடன் வருபவர்களுக்காக எழுந்து இடம் கொடுத்து.. பயணம் முழுதும் நின்றுக் கொண்டு வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

பாத்தியா சரண்யா...?

விடு... ஜென்ட்ஸ் பக்கம் கொடுத்தனுப்பு.

ஏம்ப்பா.. எந்திரிங்கப்பா... லேடீஸ் சீட் காலி பண்ணுங்கப்பா- குரல் கொடுத்தது இந்த நிறுத்தத்தில் ஏறிய – வட்டக் கொண்டை போட்ட ஒரு பெரியம்மா. .. இவ்வளவு நகைகளை போட்டுக் கொண்டு எந்த தைரியத்தில் இந்த சென்னை மா நகரப் பேருந்தில் ஏறுகிறார்கள்?

அந்த கடைசி நீள இருக்கை முழுதும் அடைத்தார் போல உட்கார்ந்திருந்த ஆண்கள் ஒருவர் கூட அசையவில்லை. அவர்களால் நிற்க முடியும்.. ஊனமேதும் இல்லை.

“ ஐய்ய.. சொல்றமில்ல..? எந்திரிங்க.. உக்காந்துனே இருக்க..? பொம்பளங்க உக்கார எடம் உடுங்கப்பா.."

ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த இருவரும் தூங்குவது போலவும், வாந்தி வருவது போலவும் நடித்தனர்... அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவர்களின் உயிர் தோழர்கள் இருவரும் அவர்களின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக காட்டிக் கொண்டனர். நடுவில் உட்கார்ந்திருந்த இருவரும் யாருடைய கண்களையும் சந்திக்காமல், நக்கல் சிரிப்புடன் மையமாகப் பார்த்தனர்.

"எத்னி தபா சொல்றது...? எந்திரிங்கடா."

"இன்னாது....? டா வா? " – நடுவில் உட்கார்ந்திருந்தவன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். ஆனால் அதற்காக எழுந்துக் கொண்டான் இல்லை.

"என் புள்ள வயசுதான் இருக்கும் உங்க எல்லாத்துக்கும்.. எந்திரிங்கப்பா.. லேடீஸ் நிக்க முடியாம கஸ்ட பட்றமில்ல..?"

"உன்ன மாறித்தான் நாங்களும்.. டிக்கட் வாங்கி இருக்கோம்."

" நீ வாங்கு.. இல்ல வாங்காதே.. அத்த பத்தி இன்னா..? இப்ப எடத்த காலி பண்ணு.. இது லேடீஸ் சீட்டு."

ஒவ்வொருவவும் வெவ்வேறு திசைகளைப் பார்த்தார்கள்.

"ஆரம்பிச்சிட்டான் சரண்யா.. பின்னாடி தடவறான்.. வாந்தி வரமாறி இருக்குப்பா"

"இப்டி என் பக்கம் வந்துரு பவி"

எந்தவித மாற்றமும் இல்லை.. அவன் உரசுவதும்.. மேலே விழுவதும் அதிகமாகியது.. சரண்யாவயும் சேர்த்து உரசினான்.. திரும்பி பார்த்தார்கள்.. அவன் ஜன்னல் வழி மும்முரமாகப் பார்ப்பதாய் நடித்தான்.

"சனியன்.. எருமைமாடே தேவலாம் " - சத்தமாக சொல்ல நினைத்து.. மொள்ளமாக சொன்னாள்.

அந்த வட்ட கொண்டையம்மா.. இருக்கைக்காக – சுதந்திரப் போராட்டத்தை விட ஒரு படி அதிகமாக போராடுவது தர்மப்படி நியாயம். இந்த எருமைமாடுகிட்ட இருந்து தப்பிப்பதற்காகவே லேடீஸ் சீட் காலியாக வேண்டும். இதெற்கெல்லாம் காந்திஜீ வரமாட்டார்.. ஆனால் வந்தால் தேவலை.

அந்த கொண்டை அம்மையார் மட்டும் தனியாகப் போராடுவதும்.. தானும் சரண்யாவும் ஏதும் பேசாமல் வருவதும் அன்னியாயம் என மனசாட்சி எடுத்துரைத்தது.

மிக நீண்ட மனப் போராட்டத்துக்குப் பின், ஒட்டு மொத்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு.. அந்த ஆண்களை (!????) பார்த்து “ நீங்க எல்லாரும் லேடீஸா.. இல்ல ஹான்டிகேப்டா..?” என்றாள் பவித்ரா. கொஞ்சமே கொஞ்சூண்டு அசைவு தெரிந்தது அனைவரிடமும். ஆனால் அதற்காக யாரும் எழுந்துவிடவில்லை.. இவளைப் பார்த்துக் கொண்டிருந்த சாதாரணப் பார்வையை நீக்கி.. வெறுப்பான கடித்துக் குதறும் பார்வையாக மாற்றிக் கொண்டார்கள்.

திடீரென ப்ரேக்.. கை வழுக்கி அந்த தடியன்கள் மேலேயே விழப் போனாள் பவித்ரா.

"மயக்கமா...? கலக்கமா..? "– பாடினான் ஒருவன்

"ஆக்ட் உட்ராங்கப்பா..."-இன்னொருவன்.

சே... என்ன மனுஷங்க இவங்க...? மனிதாபிமானம்.. தார்மீக நியாயங்கள் எங்கே போயின? வீக்கர் செக்ஸ் எக்ஸ்ப்ளாய்டேஷன் அதிகமாகிவிட்டதா..? அறுபது வயதிலும்... நாலைந்து லேடீஸ் சீட் காலியாக இருந்தாலும்..” வேண்டாம்... திடீர்னு லேடீஸ் ஏறிட்டா.. எழுந்துக்கனும்.. அதுக்கு நின்னுகிட்டே வரலாம்..” என்று சொல்லிய அப்பாவும். கர்பிணியும், கைக்குழந்தைகாரியும் ஏறிய போது.. சட்டென எழுந்து தங்கள் இருக்கைகளை அவர்களுக்கு தந்த சித்தப்பாக்களும்... “ லேடீஸ் சீட்டுக்கு ஆளுங்க ஏற்ற வரைக்கும் உக்காருவோம்.. வந்ததும் எந்திரிச்சுருவோம்” என்று பெண்கள் ஏறியதும் எழுந்துக் கொண்ட அண்ணன்களும் நினைவுக்கு வந்தனர்.

“ எங்கப்பா...? அந்த கண்டிக்டரு..? ஐய்ய.. இத்தக் கேளு.. லேடீஸ் சீட் எந்திரிக்க சொல்லு.. உங்க அம்மா.. தங்கச்சின்னா இப்படித்தான் இருப்பீங்களாடா? “ – கொண்டையம்மாத்தான் .. விடாமல் போராடினாள்.

பெண்கள் படிப்பறிவு பெறாமல் இருப்பதே ஓரளவு நல்லதோ..? படித்துவிட்டால்.. தேவை இல்லாமல் நாகரீகம், பண்பாடு, நல்ல பழக்க வழக்கம் எனப் பார்த்துப் பார்த்து, கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளைக் கூட கேட்க இயலாமல் கோழையாக்கிவிடுகிறது அந்தப் படிப்பு.

வட்ட கொண்டையம்மா நிச்சயம் படித்திருக்க மாட்டாள்... அதனால்தான் கேள்விகளை தைரியமாகக் கேட்டு, தனக்கான உரிமைக்காகப் போராடுகிறாள். கண்டக்டர் பேருந்தின் முன்புறமிருந்து நீந்தி கரைசேர்ந்து தனது இருக்கைக்கு பத்திரமாக வந்தார்.. அதில் அமர்ந்திருந்த கர்பிணிப்பெண்ணை தொடர்ந்து அமருமாரு சைகை காட்டிவிட்டு, கொண்டையம்மாவைப் பார்த்து “ இன்னாமா..?” என்றார்.

“ லேடீஸ் சீட்டு... காலி பண்ணி உடு”

“எல்லாம் எந்திரிங்கப்பா.. லேடீஸ் சீட் காலி பண்ணி உடுங்கப்பா”

கடமை முடிந்ததென.. எச்சில் தொட்டு டிக்கட் கிழித்தார்.

கண்டக்டரின் இந்த கடுமையான ஆணையைக் கேட்டு பயந்து அலறி, அடித்து பிடித்து.. தட்டு தடுமாறி.. வேகமாய் எழுந்து நின்று- அவர்களில் யாரும் அந்தப் பெண்கள் இருக்கையை காலி செய்துவிடவில்லை. .. பதிலாக.. கூடுதல் நக்கல் புன்னகையுடன்.. கொண்டையம்மா.. பவித்ரா.. மற்றும் சரண்யா, இன்ன பிற நிற்கும் பெண்களைப் பார்த்து ரசித்து சிரித்தனர்.

கடவுள் என ஒருவர் இருக்கிறார்..அவர் அவ்வப்போது மனித உருவிலும் வருவார் என நமது இந்திய தாய் திரு நாட்டின் முன்னோர் சொல்லி வைத்தது - சத்தியமான தீர்க தரிசனம்.

வீறு கொண்டு எழுந்தார் ஒருவர்.. அவரது தோற்றம் முதலில் கருத்தை நிறைத்தது.. ஒன்று அவர் மப்டி போலீஸாக இருக்க வேண்டும்.. அல்லாது எக்ஸ் மில்ட்ரியாக இருக்க வேண்டும். அகன்ற தோள்களும்.. திடகாத்திரமான கை கால்களும் பேசாமல் பேசின.

"டேய்.. இப்ப எந்திரிக்க போறீங்களா..? இல்லயா..? அப்போ முச்சூடும் பாத்துட்டிருக்கேன்.. சத்தாய்க்ரீங்களா..? எந்திரிங்கடா..” - என்றார். எருமை மாடுகள் கொஞ்சம் அசைந்தன.. அப்படியும்.. எண்ணி மூன்று பேர் மட்டுமே எழுந்தனர்.

முதலாவதாக இந்த ஆவேசப் போராட்டத்தில் வீரமுடன் தலைமை தாங்கிய தானைத் தலைவி..தருமமிகு சென்னைத் தலைமகள்... தன்னிகரற்ற வட்ட கொண்டையம்மா,

அடுத்ததாக - திடீர் மரணத்துக்கும் துணிந்து .. லேடீஸா ..? என்று நறுக்கென தீனக் குரலில் கேள்வி கேட்ட துணைத்தலைவி பவித்ரா..

மற்றும் வெறுமனே நின்று கொண்டிருந்த சரண்யா ஆகிய மூவருக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனவே.. மக்கா...

படிப்பறிவு -தேவையில்லாத மனத் தடங்கல்களைத் தருகிறது.. போராடும் குணத்தை குறைத்து பெண்களை கோழையாக்குகிறது.. ஆனால் படிப்பறிவில்லாத, போன தலைமுறை பெண்.. எப்படி விடாமல் போராடி.. தனது உரிமயை பெறுகிறாள் என்பதே இச்சிறுகதையின் (!!!!???) வாயிலாக நான் சொல்ல வரும் நீதி என நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து... முதல் பரிசையும் இரண்டாவது பரிசையும் ஒரு சேர வழங்க கிளம்பினா.. சாரீ மாக்கான்ஸ்.. மன்னிச்சுடுங்க.. நீங்க இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவே இல்ல.. இன்னும் மேஜர் சுந்தர்ராஜனாவே வாழ்ந்துட்டு இருக்கீங்க..போன தலை முறை ஆளாவே இருக்கீங்களேய்யா...அப்பிராணிகளா....! உங்களை என்னத்தை சொல்ல?

இக்கால இளைய தலைமுறை பழக்க வழக்கங்களுக்கும், வளர்ச்சியடைந்து விட்ட கலாசார (!!!!), பண்பாட்டு (!?) மறுமலர்ச்சி மாறுதல்களுக்கும் நீங்கள் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்பதை நான் சொல்லித்தான் ஆகணும். அப்டேட் ஆகணும்னா.. மேற்கொண்டு படியுங்க....அப்ப புரியும்...

வட்ட கொண்டையம்மா வெற்றிப் பெருமிதத்துடன் ஜன்னலோரமாய் அமர்ந்தாள்... ஆட்சேபிக்க முடியாத தேர்வு.. போராட்டத் தலைவி வேணுங்றத எடுத்துக்கிட்டு மிச்ச மீதியை .. மத்தவங்களுக்கு தரலாம்.. தப்பில்லை... அடுத்ததாக.. எங்கிருந்தோ திடீரென நீந்தி வந்திருந்த மற்றொரு குண்டம்மா உட்கார்ந்து விட்டாள்...அதை பார்த்து அதிர்ந்த பவித்ரா.. மீதமிருந்த கொஞ்சமே கொஞ்சுண்டு இடத்தில் உட்காரலாமா.. உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவன் எது வேணும்னாலும் செய்வானே.. அதுக்கு பேசாம சரண்யாவுக்கு ஆறுதலா நின்னுட்டே வரலாமா என பலவிதமாக யோசித்து, சிறிதே அசையும் போது..

“ அட இரும்மா.. சுரேசு... சுரேசு.. இங்க உக்காரு.. பக்கத்துல ஆம்பளைங்கதான் உக்காந்திருக்காங்க “ என்று பாசத்துடன் அழைத்தாள் வட்ட கொண்டையம்மா.

அந்த சுரேசு எனப்பட்டவன் வேறு யாருமில்லை... தானை தலைவியாக இல்லாவிடாலும்.. ஓரளவு துணைத் தலைவியாக போராடிய பவித்ராவையும், பவித்ராவுக்கு பக்க பலமாக, தளரா உறு துணையாக... வெறுமனே நின்ற சரண்யாவையும் பின்பக்கம் உரசிக் கொண்டிருந்த அதே எருமைமாடுதான்.

உட்கார்ந்திருந்த எருமைகள் எழுந்து நின்றன. உரசிக் கொண்டிருந்த எருமை உட்கார்ந்துக் கொண்டது.

எங்கே செல்லும் இந்தப் பாதை.... யாரோ.. யாரோ.. அறிவாரோ..?

சுபம்.

Thursday, August 18, 2005

நிலா - 5


நானும் வரட்டுமா?

வேண்டாம்... பேஷன்ட்டுன்னு சொல்லி உள்ள பிடிச்சு வச்சுருவாங்க

அப்படியெல்லாம் இல்ல.. புது டாக்டர்னு நினைச்சு எல்லாரும் விஷ் பண்ணுவாங்க

நினைப்புத்தான்..... நீ எதுக்கு அங்க?

அவங்களுக்கு அங்க என்ன ட்ரீட்மெண்ட் தராங்கன்னு நான் தெரிஞுக்கணும்

தெரிஞ்சு....? தெரிஞ்சு என்ன பண்ண போற?

இந்த ட்ரீட்மெண்ட் சரியில்லன்னா... வேற ட்ரீட்மெண்ட்டுக்கு மாத்தலாம்னு பாக்கறேன்

இதோடா... இந்தம்மா டாக்டர் ருத்ரனோட சிஷ்யை ... வந்துட்டாங்க... ட்ரீட்மெண்ட்பன்ன

இல்ல சார்... நானும் வரேன் .. ப்ளீஸ்

இங்க பாரு நிலா...பூனா, ரிஷிகேஷ், மதுரா எல்லா இடத்துக்கும் அழைச்சுட்டு போயிட்டு வந்துட்டேன்.. அப்பப்போ ஒரு வாரம் லீவ் போட்டேனே .. எதுக்கு? இவளை அழைச்சுட்டு போய் ஒவ்வொரு வைத்தியமா பார்க்கத்தான்

திருவண்ணாமலை போனீங்களா?

இல்ல

சரி ..நான் இன்னைக்கு கீழ்பாக்கம் வரேன்.. அவங்க என்ன ட்ரீட்மென்ட் தராங்கன்னு பார்த்துட்டு அப்புறம் டிசைட் பண்ணலாம் .. ஓ.கே..?

என்னமோ பண்ணு

கிழ்பாக்கம் மனனல மருத்துவமனை.. கிண்டல் கேலிகளில் தவறமல் இடம் பெறும் அதே கீழ்ப்பாக்கம் மென்டல் ஆஸ்பிடல்... கார் உள்ளே நுழையும் போதே எதோ சொல்ல முடியாத சோகம் நெஞ்சினை தழுவியது.. பின் சீட்டிலிருந்து இரங்கி நின்றதும் தன்னை சுற்றி கவனித்தாள்.. சினிமாவில் பார்த்து பார்த்துப் பழக்கப்பட்ட காட்சிகள் இல்லை..மிக மிக மெல்லிதான நடவடிக்கைகளிலேயே வித்யாசம் தெரிந்து நோயாளிகளை அடையாளம் காண முடிந்தது...வேறு எவற்றில் இல்லையென்றாலும் கண்கள் சொல்லின அவர்களின் மன நிலையை பற்றி. கணவனை அரவணைத்தபடி வரும் மனைவி, மனைவியை கவனத்துடன் அழைத்துவரும் கணவன், வளர்ந்த வாளிப்பான தங்கையை பரிதவிப்புடன் அழைத்துவரும் அண்ணன்.. நோய் குணமாகிவிட்டாலும் இயல்பு நிலைக்கு வராமல் நிலைகுத்திய கண்களுடன் சுவற்றை வெறிக்கும் இளம் பெண்..கூட நிற்பது அவளது கணவனாக இருக்கலாம்..- இவர்களைப் பார்த்த பொழுதில்.. மனித உறவுகள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை உணர்ந்தாள்..மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதும் புரிந்தது.. இதை எல்லாம் மீறி.. அந்த நோயாளிகளை காணும் பொழுதில் இனம் புரியாத சோகத்தை
உணர்ந்தாள்..

ஏன் இப்படி ஆயிடறாங்க? சந்தோஷமா இருக்கலாம்.. அதை விட்டுட்டு மனசிதைவுக்கு ஆளாகி.. கூட இருப்பவங்களுக்கும் கஷ்ட்டத்தை தராங்க..

அப்படி சொல்லாத நிலா.. அவங்க சுய நினைவில இருந்தா கஷ்ட்டம் தருவாங்களா? தன்னிலை இழந்து சூழ் நிலை மறக்கும் போதுதான் அவங்க செய்யறது அவங்களுக்கே தெரியாது.. சரி.. நீ இங்கயே நில்லு நான் போயி பைல் நம்பர் போட்டுட்டு வரேன்

நானும் வரேனே...

சரி.. வா

வரிசயில் நின்று பைல் நம்பெர் பெற்றார்கள்

எதுக்கு இந்த பைல் நம்பர்?

இந்த பைல் நம்பெர் வச்சுத்தான் சுமதியோட கேஸ் பைல் எடுப்பாங்க

எடுத்து..?

எடுத்ததும் என்னை கூப்பிடுவாங்க.. கூப்பிட்டு இப்ப நிலைமையை கேப்பாங்க.. எப்பவும் போலத்தான்னு நான் சொன்னா அதே டேப்ளட்ஸ் தருவாங்க.. இல்ல.. பிகேவியர் மாறுது.. விகரஸா ஆயிடறா.. கன்ட்ரோல் பன்ன முடியல்லன்னு நான் சொன்னா..அப்ப சுமதியை நேர்ல அழைச்சுட்டு வர சொல்லுவாங்க..அவளை அழைச்சுட்டு வந்தா அப்சர்வ் பண்ணிட்டு .. வேற மருந்து மாத்திரை தருவாங்க.. இல்லைன்ன அட்மிட் பண்ண சொல்லுவாங்க

இது தான் நீங்க உங்க வைஃபுக்கு தர ட்ரீட்மெண்ட்டா?

ஆமா.. ஏன் கேக்கற?

கொள்ள கொள்ளயா எவ்ளோ சம்பாதிக்கறீங்க? இப்ப கொஞ்சம் முன்னாடி காருக்கு பெட்ரோலே ஐனூறு ரூபாய்க்கு போட்டீங்க.. ஆனா உங்க வைஃபுக்கு மட்டும் கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல அவுட் பேஷன்ட் க்யூல நின்னு.. கலர் கலரா கவர்ன்மெண்ட் மாத்திரை வாங்கிட்டு போய் அவங்க க்யூர் ஆயிடாம கவனமா பாத்துக்கறீங்க? ஏன் சார் இப்படி? ஏன் இப்படி சிக்கனம் பன்றீங்க?

பேசி முடிச்சுட்டியா..? நான் பேசட்டா?

எதாவது சப்பைகட்டு கட்டுவீங்க.. சொல்லுங்க அதையும் கேட்டுக்கறேன்..

புரியாம பேசற நிலா நீ.. உனக்கு ஒண்ணு தெரியுமா..? இங்க தர ட்ரீட்மெண்ட் போல வெளியில எங்கயும் தரதில்ல. வெளியில கிடைக்காத மாத்திரைங்க இங்கதான் கிடைக்கும்.. வெளியில வைத்தியம் பாக்கிற சைக்கியாட்ரிஸ்ட்.. தனக்கு வேண்டபட்டவங்க.. நிஜமாவே குணமாகனும்னு நினைக்கற பேஷன்ட்டுகளுக்கு ரெகமண்ட் பண்றது இந்த ஆஸ்பிட்டலத்தான்.. வெளியில மாத்திரைங்களை நம்பி வாங்க முடியல.. அத்தனையும் டூப்ளிகேட்.. டெல்லி.. பூனா.. மதுரா எல்லாம் சுத்திட்டு கடைசீல இங்க வந்து சேர்ந்துதான் அவ கொஞ்சம் இம்ப்ரூவ் ஆனா.. இதே ஆஸ்பிட்டல்ல ஆறு மாசம் அட்மிட் ஆகி இருந்தா.. இப்ப நல்ல சேஞ்சஸ் தெரியுது.. பணம் ஒரு ப்ரச்சனையே இல்ல நிலா.. நான் சம்பாதிக்கறது பெரிய விஷயமில்ல.. அவ அப்பா அம்மா சேர்த்து வச்சதே நாலு தலமுறைக்கு காணும்

ஆனாலும் முழுசும் குணமாகலயே..?

அது அந்த ஆண்டவன் கருணைதான்.. அவன் மனசு வச்சாத்தான் நடக்கும்

அந்த நம்பிக்கை இருக்குல்ல..? அப்ப சுமதியையும்.. சாரீ .. உங்க வைஃப்பையும் அழைச்சுகிட்டு கிளம்புங்க..

எங்க..?
திருவண்ணாமலைக்கு

அங்க எதுக்கு..?

நீங்க வாங்க சொல்றேன்.. இப்ப போய் மருந்து வாங்கிட்டு வாங்க..

வரிசையில் பொறுமையாக நின்று.. தன் முறை வந்ததும் உள்ளே சென்று டாக்டரிடம் பேசி.. அவர் எழுதிக் கொடுத்த சீட்டினை எடுத்துச்சென்று மற்றொரு வரிசையில் பொறுமையாக நின்று பணம் கட்டி.. மாத்திரைகளை வாங்கி வரும் ஷிவாவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் இனம் புரியாத சோகம் இன்னும் அதிகமாகியது.

.-------------------------------------------------------------------------------------------------------

அன்னைக்கு அவ சாப்டவே இல்ல தெரியுமா?

என்னைக்கு..?

அதான்.. எம்.டி பார்டில.. அவ பாஸ் வைஃப் லட்ச்சணம் தெரிஞ்சதும் தட்டயும் ஸ்பூனையும் கீழ வச்சவதான் தேம்பி தேம்பி அழுதா.. சாப்டாமயே கிளம்பினா

இது என்ன புது கதை? தென்ன மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல ஏன் நெறி கட்டுது?

இப்படில்லாம் அழுதாதனே.. அவ பாஸ் மனசில இடம் பிடிக்க முடியும், மனசில இடம் பிடிச்சு .. அப்புறம் மடியில இடம் பிடிச்சு.. அப்புறம் அரசாட்சியை புடிக்க முடியும்

அதுக்கு அவ அழவே வேண்டாமே..? சின்ன சிரிப்பு.. கடைவாய் புன்னகை போதுமே?

சென்டி “ மென்டலா” டீல் பண்ணி அப்புறம் காமெடிக்கு வருவாளா இருக்கும்

அம்மாவா..? அப்பாவா..? அண்ணனா ..? தம்பியா..? யார் கேக்கப் போறா? அனாதை ஆஸ்ரமத்துல படிச்சுட்டு ஏதோ ப்ளூக்ல இந்த வேலைக்கு வந்துட்டா.. தானா தேடித்தானே புளியங்கொம்பா வளைக்கனும்

ப்ராங்க்கா சொல்லனும்னா.. அவ இருக்கற அழகுக்கு யார் வேணா வளைவாங்க.. இவனுக்கு.. பொண்டாட்டியே மென்டல்.. ரெண்டு பேருமே கஷ்ட்டப் பட வேண்டியதில்லை.. சுபம் போட வேண்டியதுதான் பாக்கி.

பாலகுமாரன் நாவல்களால் புகைந்தது... எம்.டி பார்ட்டியால் பற்றி எறிந்தது. நாவினால் தீ வளர்த்து.. நாகங்களாய் படமெடுத்தனர் நிலாவின் சக பணியாளர்கள்.. சூழ்ந்துவரும் புகைமூட்டமும்.. தீ கொழுந்துகளையும் அறியாமல் திருவண்ணாமலை நோக்கி ஷிவா கார் ஓட்ட, பின் இருக்கையில் தன் தோளில் சாய்ந்து தூங்கும் சுமதியின் தலையில் தலை சாய்த்து தூங்கியபடி பயணித்தாள் நிலா..


தொடரும்…

Friday, August 05, 2005

நிலா - 4

அடுத்தடுத்த மாதங்களில் சுனாமி பயம் அதிகமாகத்தான் இருந்தது.

அந்த வீட்டை காலி பன்னிட்டு சிட்டிக்கு உள்ள வீடு பாருன்னா பாக்க மாட்டீங்களோ..?

இல்ல சார் நந்தினி.....

என்ன நந்தினி.. எவ்ளோ ரிஸ்க் அந்த வீடு... வெரி நியர் டு பீச்..

போகனும்னு இருந்தா போய்த்தானே ஆகனும் ..?

நூத்துக் கிழவி மாதிரி பேசு

நள்ளிரவில் மாண்புமிகு பாஸ் போன் பேசி நிலைமையை ஆற தீர விசாரிப்பதும், மேதகு மேடம் பயம் ஏதும் இல்லை என பதிலிறுப்பதும், போர்வையை விலக்கி பார்க்கும் நந்தினி தலையில் அடித்துக் கொண்டு திரும்பிப் படுப்பதும் – அன்றாட வாழ்க்கையின் அத்யாவசிய நிகழ்ச்சிகளாகிவிட்டன.

சுனாமி வருதோ இல்லையோ.. போன்கால் வருது - நந்தினி

மேடம் யாரு...!? பின்னாடி ஒரு காலத்துல நம்ம ஆபீஸ்க்கு நானே எம்.டி.. ஆகலாம்.. அதை புரிஞ்சு .. இப்பவே மரியாதையா நடந்துக்கறாரா இருக்கும் - நிலா

நினைப்புதான் பொழப்ப கெடுக்கும் எப்பவும்-– நந்தினி.

உண்மையிலேயே இரண்டாம் முறை காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு, இரவு எட்டு மணிக்கு மீன்டும் நந்தினியின் அத்தைவீட்டுக்கு பயணப்படும் வேளையில்.. ஷிவாவின் கால் வரும் என எதிபார்த்து.. எதிர்பார்த்து ஏமாந்தன நிலாவின் அழகிய காதுகள்.. என்னாச்சு..? என்ற அவளின் கேள்விக்கு விடை ... ஷிவா மீன்டும் ஒரு வாரம் லீவ் என்ற செய்தி.

அடுத்தவாரம்....

நந்தினி சுட்டிக் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நிலா.. அதிர்ந்து.. செயலிழந்து.. விக்கித்துப் போய் நின்றாள்....

" வழக்கமா கூட்டிண்டு வரமாட்டான்... எம்.டி. ரொம்ப கேட்டுண்டாரேன்னு அழைச்சுன்டு வந்தான்.. இப்போ ரொம்பவே டிஸ்டிங்விஷ்டா தெரியற்து..யார் செஞ்ச பாவமோ.. இவனுக்குன்னு இப்படி வாய்ச்சுடுத்து... நான் பார்த்து வளர்ந்தவன்.. கல்யாணம் பண்ணின்ட நாள்ளேற்ந்து பட்டுன்டு இருக்கான்..." - கண்களில் நீர் மின்ன கேஷியர் சேஷாசலம் சக ஊழியர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஆறு வயது மகளிடம் இருந்த ஒரு ஐஸ் க்ரீமுக்காக அவளது பின்னலைப் பிடித்து இழுத்து அந்தக் குழந்தை கதறக் கதற அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கி.. இடது கையில் ஐஸ்க்ரீமும்.. வலது கையில் ஸ்வீட்டுமாக நின்ற அந்தப் பெண்தான் தனது பாஸின் மனைவி என்பதை தாங்கிக் கொள்ளவே இயலவில்லை நிலாவால்.

சிலர் உதடு பிரியாமல் சிரிக்க, சிலர் ஏளனப் புன்னகை புரிய, சிலர் எதுவும் தோன்றாமல் பார்க்க.. சிலர் எப்படி உதவுவது என தெரியாமல் அருகில் செல்ல

-ஒரு நாடகம் நடப்பதைப் போல.. புது ஐஸ்க்ரீம் கிண்ணத்துடன் மனைவியை அணுகி.. அவளது கவனத்தை கவர்ந்து, அந்த ஐஸ்க்ரீமை அவளிடம் கொடுக்கும் போதே மகளை தன் பக்கம் அழைத்து காருக்கு அனுப்பி விட்டு.. மனைவியை அரவணைத்து நடந்துக் கொண்டே திரும்பிப் பார்த்து கண்களால் விடை பெரும் தனது பாஸைப் பார்க்கப் பார்க்க நெஞ்சம் வலிக்க அழுகை வந்தது நிலாவுக்கு.

" கல்யாணத்துக்கு முன்னாடியே மென்ட்டல் தான்.. பையன் நல்லாருக்கானேன்னு அவளோட அப்பா.. அம்மா மறச்சுட்டா.. நிறய சொத்து இருக்கேன்னு இவனோட அப்பா அம்மா தெகச்சுட்டா.. இவன் மாட்டிண்டான்.. ஆனா ஒன்னு.. தங்கமா பார்த்துப்பான்.. இவ்ளோ பன்றாளே.. ஒரு முகம் சுழிக்கறது.. திட்றது .. எதுவும் இல்ல.. கண்ணுல வச்சு தாங்கறான் ....ம்.. புருஷன் அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்... ஒரே புள்ளைக்கு.. இப்டி ஆயிடுத்தேன்னு.. கவல பட்டு கவல பட்டே அப்பா அம்மா ரெண்டு பேரும் போய் சேர்ந்துட்டா. சாகற வரைக்கும் .. “ டைவர்ஸ் பண்ணிடு.. ரொம்ப ஈஸியா டைவர்ஸ் கிடைச்சுடும்.. இல்ல.. வேண்டான்னா.. இவ பாட்டுக்கு இவ இருந்துட்டுப் போகட்டும்.. வேற நல்ல பொண்ணா பார்த்து பண்ணிக்கோடான்னு” தலபாட அடிச்சுக்கிட்டாங்க.. “ அவ என்ன தப்பு பண்ணா? அவளை டைவர்ஸ் பண்ண.. தப்பு பண்ணினது நாம மூணு பேர்.. அதனால நாமதான் தண்டனை அனுபவிக்கனும்னு சொல்லிட்டு ஒரே நிலையா நின்னுட்டன்... நானும் சொல்லிப் பார்த்தேன்.. எனக்கு தெரிஞ்சவாளோட பொண்ணை முடிச்சுடலாம்னு பேசி முடிச்சுட்டேன்.. "வாண்டாம் மாமா.. என்ன பாவம் செஞ்சேனோ.. இப்படி விழுந்துட்டேன் இன்னோரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்க வெண்டாம்" னு சொல்லிட்டான்.."

- கேஷியர் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்கக் கேட்க.... சூழ் நிலை மறந்து அழுதுவிடுவோமோ என பயந்தாள்... சாப்பிடப் பிடிக்காமல் கையிலிருந்த பீங்கான் தட்டையும்.. ஸ்பூனயும் மேசைமேல் வைத்தாள்... நந்தினி பார்த்து விடப் போகிறாளே என சர்வ ஜாக்ரதையாக திரும்பி கண்களை துடைத்துக் கொண்டு.. நந்தினியைப் பார்த்து “ போலாமா “ என்றாள்... இந்த ஒரு வார்த்தை பேசுவதற்க்குள் தொண்டயும் நெஞ்சமும் வலித்தது நிலாவுக்கு.

முழு ப்ளேட்டையும் முழுங்கிவிட்டு.. ஐஸ்க்ரீம், ஸ்வீட் இரண்டயும் இரண்டு முறை வாங்கி சாப்பிட்டு விட்டு.. பீடா.. ஸ்வீட் சோம்பு, ப்ரூட் சாலட்.. இன்னும்.. மற்றும்.. பிற அனைத்து வகையான, பறிமாறப்பட்ட அத்தனை பொருட்களையும் வாங்கி ஆற அமர நிறுத்தி நிதானமாக சாப்பிட்டுவிட்டு.. மினரல் வாட்டரை போதுமான அளவுக்கு குடித்துவிட்டு.. பின்பு நிலா நிற்குமிடம் வந்து “ போலாம்” என்றாள் நந்தினி.

என்னால வண்டி ஓட்ட முடியாது நந்து.. நீ ஓட்டு

சரீ.. வெறும் வயத்தோட வற்றியே.. எதாச்சும் வேண்டுதலா..

ப்ச்.. பேசாம ஓட்டு

ஏன் அழற?

யார் அழறா?

நீதான்... இப்ப எதுக்கு அழறன்னு எனக்கு தெரிஞ்சாகனும்.. ?

நான் ஒன்னும் அழல..

முண்டம்.. அது அவரோட தலை எழுத்து.. அதுக்கு நீ சாப்பிடாம அழுதா அவங்க வைஃப் .. நார்மலாகி.. ஜீனியஸ் ஆயிடுவாங்களா..? நீ இப்டி அழறதும் அப் நார்மல் தான் நிலா.

நான் அழல..

உன் முகம், கண்ணு, குரல் எல்லாமே அழுது... ஐஞ்சு வருஷமா உன்னொடயே இருக்கேன் .. என்கிட்டயே..அழலன்னு சாதிக்கற..?

ரூமிற்கு வந்ததும்..கதா நாயகி படுக்கையில் விழுந்து தலயணையில் முகம் புதைத்துக் கொள்ள.. நந்தினி பால் சுட வைத்து காம்ப்ளான் கலந்தாள்..பிஸ்கெட்டையும் எடுத்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து

“ எழுந்திரி.. இந்த பிஸ்கெட் சாப்டு நிலா.. நடு ராத்ரில.. பசிக்குதுன்னு சொல்லத்தெரியாம வயத்த வலிக்குதுன்னு தூங்க மாட்ட”

வேண்டாம் நந்து

ஏய் .. ச்சீ..... சாப்டு

அவள் மடியில் முகம் புதைத்து.. கேவிக் கேவி அழுதாள்.. நிறுத்த நினைத்தாலும் நிறுத்த இயலவில்லை நிலாவால்...

எதுக்கு அழற இப்போ..?

தெரியல

நீ அழறதால எந்த யுஸும் இல்ல

தெரியும்

அப்புறம் ஏன் அழ்ற?

அழுக வருது அழறேன்

அப்ப அழு

நந்து.. போகாதே.. உன் மடி வேணும் எனக்கு

என்னடி நீ.. உன் உடம்புதான் பாழாப் போகும்

நந்து.. நந்து.. நான் போன் பண்ணி பேசட்டா?

யாரோட?

ஷிவாவோட

எந்த ஷிவா?

ப்ச்.. என்னோட பாஸோட

இது எங்கப் போயி முடியப் போகுதோ...? ம்.. எதோ செய்.

முதன் முறையாக நள்ளிரவில்.. நிலாவின் செல்லிலிருந்து ஷிவாவின் செல்லுக்கு சென்றது ஓர் உயிர்ப்பு

என்ன நிலா..?

ஒன்னும் இல்ல

இதை சொல்லத்தான் போன் பண்ணியா? குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு..? கோல்டா..?

இல்லல்ல...

தென்.. எதுக்கு போன் பன்ன?

ஆர் யூ சேஃப்

தலையிலடித்துக் கொண்டாள் நந்தினி..."பைத்தியம்... அபத்தமா உளற்ற.. "என்று சொல்லிக்கொண்டே செல்லை வாங்கி “ சார் .. தப்பா எடுத்துக்காதீங்க.. ஈவ்னிங் பார்ட்டில.. நீங்க திடீர்னு கிளம்பி போனதை விசாரிக்கறாளாம்.. ஓ.கே பய்.” என்று சொல்லி காலை கட் செய்தாள் நந்தினி....

ஆரம்பிச்சிட்டாங்கையா... ஆரம்பிசிட்டாய்ங்க...தொடராம ...இருப்பாய்ங்களா..?

தொடரும்

Wednesday, August 03, 2005

நிலா - 3

வழக்கமான அலட்டலோடு ஸ்டைலாக நடக்கலாம் என்று நினைத்தாலும் கால்கள் விந்தி விந்தித்தான் நடக்க முடிந்தது

குட் மார்னிங் சர்

வெரி குட் மார்னிங்... இப்ப எப்டி இருக்கு

நத்திங்.... ஆனா வண்டி ஓட்ட முடியாம கஷ்ட்டமா இருக்கு

அடுத்தவாரம் ஓட்டிக்கலாம்... போய் சீட்ல உட்காரு... அப்பாடா .. இனிமே சீட் சீட்டா நின்னு வம்படிக்காம, உக்காந்து ஒழுங்கா வேலை செய்வ

(உன் கண்ணே பட்டிருக்கும் கருத்து.. உன் கண்ணே பட்டிருக்கும்.. உன்னை என்ன பண்ணா தகும்) - என்று நினைத்தாள்.. பின்பு சத்தமாக

நீங்களும் என்னையே வாட்ச் பண்ணாம ஒழுங்கா வேலை செய்வீங்க - என்றாள்

முறைத்தது கந்தசாமி.

அவளும் முறைத்தாள், எனக்கென்ன பயமா என்பதைப் போல ( ஆனாலும் உள்ளூர பயம் தான்.. வாபஸ் வாங்கின மெமோவை திருப்பி குடுத்துறுமோ? கொஞ்சம் அடக்கி வாசியேன் நிலா.. உனக்கு வாய் ஜாஸ்தி தான்)

தாகமாய் இருந்தது.. சீனு என்ன ஆனான்.. டிஸ்பென்சர் நோக்கி நடந்தாள்

என்ன... எங்க போற?

வந்து... தண்ணீ வேணும்

சீனு எங்க.. சரி நீ போ.

தண்ணி குடிக்க கூட போகக் கூடாதுன்னா.. உனக்கு கொத்தடிமையா நாங்க..? மவனே வா.. தப்பு தப்பா பில் பாஸ் பண்ணி உன்னை மாட்டவைக்கறேன்.. நினைத்துக் கொண்டே நான்கு நாள் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

ஐ.. இங்கயே கூலர் வந்து நிக்குது.. எப்ப வச்சாங்க..? என்றாள் நந்தினி

அட.. ஆமா.. எப்ப? எனக்கு தெரியாதே..!

மேடம்க்கு கால்ல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.. அவங்க நார்மலா துள்ளி குதிக்க ஒரு மாசம் ஆகும்.. அவங்க கஷ்ட்டப்படக் கூடாது இல்லயா..? அதுக்குத்தான்..

லூசா நீயி... இதெல்லாம் மேனேஜ்மென்ட் டாக்டிஸ்.. உனக்கு வேணுங்கற வசதிய சீட்லயே தறேன்.. சீட்டோட சீட்டா தேஞ்சு ஒழைச்சு ஓடாப் போயிடுங்கறது தான் அதோட கான்சப்ட்.. இது புரியாம... பேசாம சாப்டு நந்து..

மறு நாள்..அப்பாடா கருத்து கந்தசாமி ஒருவாரம் லீவ்.. அந்த ஒரு வாரம் அம்சமாகப் போனது

ஆனால் அடுத்தவாரம்.. சோக வாரம்..கருத்துவின் முகம் சோகமாய் இருந்தது போலப் பட்டது..” என்னாச்சு..!?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்
--------------------------------------------
அழகிருக்குமிடம் ஆபத்தும் இருக்குமல்லவா?

“இந்த பால்கனியில நின்னுன்டு பார்த்தா சூர்யோதயமும் சந்ரோதயமும் சூப்பரா தெரியும்.. சிலு சிலுன்னு காத்து, உங்களுக்கு முன்னாடி இருந்தவோ இந்த பால்கனியில உக்காந்து படிச்சு இப்போ ஸ்டேட்ஸ்ல இருக்கா”- பேயிங் கெஸ்ட் ஆஸ்ட்டல் நடத்தும் மாமி செய்த விளம்பரம்..துளியும் தப்பில்லை, இடது பக்கம் நித்யமல்லி படர்ந்து மலர, வலது பக்கம் தென்னக்கீற்றின் இடைவெளியில் தெரியும் சந்திரன் அழகுதான்... முக்யமாக.. இயற்கையை ரசிக்கும் இவர்களை ரசிக்க எதிர்த்தாப்ல மாடி வீட்டு மாமாவோ, ரோட் சைட் ரோமியோவோ, மெயின் ரோட் மெக்கானிக்கோ இல்லாதது இன்னும் அம்சம்..

ஆனால் அந்த அம்சமெல்லாம் டிசம்பர் 26 சுனாமியில் அடித்துக் கொண்டு போனது..

காலை... பால்கனியில் நந்தினியோடு காபி சாப்பிட்டபடி வேடிக்கை பார்க்கையில்தண்ணி வருது.. தண்ணி வருது – என அழுதபடியே குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி மெயின் ரோட்டை நோக்கி நடந்த கும்பல் .. “ஏதோ விபரீதம் “ என்பதை மட்டும் புரியவைத்தது.

நந்தினி டிவி ஆன் செய்ய.. அழைக்கும் தனது செல்லை எடுத்தாள் நிலா

" நிலா முக்யமான சர்டிபிகேட்ஸ், கிரெடிட் கார்ட், ஜுவல்ஸ், கொஞ்சம் டிரஸ்ஸஸ் எடுத்துக்கிட்டு உடனே கிளம்பு.. நேரா இங்க சி.ஐ.டி நகர் வந்துரு.. இல்லன்னா வெஸ்ட் சைட் யாராவது ரிலேட்டிவ்ஸ் இருந்தா அங்க போய்டு... கடல் தண்ணி உள்ள வந்துட்டு இருக்கு "– இதை சொன்னது யாராக இருக்கும்.. ?வேற யாரு..? நம்ம கதையின் நாயகர் சிவக்குமார் தான்.

நந்தினியிடம் விஷயம் சொல்லி முடிப்பதற்க்குள் அவள் இவளுக்கும் சேர்த்து அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டாள்...
“உங்க பாஸ் வீட்டுக்கெல்லாம் போகவேண்டாம், என்னோட அத்தை வீடு அண்ணா நகர்ல இருக்கு... அங்க போயிடலாம்” என அவளே தீர்மானித்து, அவளே ஆட்டோ பேசி, அவளே இவளை அழைத்தும் சென்று விட்டாள்... " சி.ஐ.டி நகர் போய்த்தான் பார்த்தா என்ன..? அண்ணா நகரை விட இது கிட்டத்தானே..” – என்று நினைத்துக்கொண்டாள் நிலா...

" கிளம்பிட்டியா... எங்க இருக்க..? நான் வேணா கார் எடுத்துண்டு வரட்டா? ஆர் யூ சேஃப்..? கேஷ் இருக்கா கையில..? – அரை மணிக்கொருமுறை ஷிவாவிடம் இருந்து வந்த கால்கள் அவளை என்னவோ செய்தது.. சந்தோஷமாக இருந்தது..சிரித்துக்கொண்டே இருந்தாள்.. இந்த வகையான அக்கறை புதியது.... நந்தினி இதைவிட அக்கறை காட்டுகிறாள்... அவளுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்வதில்லை இவள்.. ஆனால் இதற்கு..? உடனே ஓடிப்போய் “ நீங்க எப்டி இருக்கீங்க..? நந்தினிதான் அண்ணா நகர் அழைச்சிட்டு போய்ட்டா” என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது நிலாவுக்கு.

மறு நாள்.. விடிந்ததும் வேகமாய் அலுவலகம் வந்து “ தேங்க்ஸ் சர்.. தேங்க்ஸ் பார் யுவர் கர்டஸி “ என சொல்ல நினைத்த நிலாவுக்கு.. அவளது பாஸ் மீண்டும் ஒரு வாரம் விடுமுறை என்ற செய்தி மிதமான அதிர்ச்சி மற்றும் லேசான ஏமாற்றம் ....மட்டும் அளித்திருந்தால்.. இந்தக் கதை கந்தலாகியிருக்கும்..

ஆனால் அவ்வாறில்லாமல்..

கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் கோபம் ஆகியவற்றை வரவழைத்ததால்.. இந்தக் கதை காவியமாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் தென்படுகின்றன.. எனவே டோன்ட் மிஸ் இட்.. ஓகே..

தொடரவேண்டியவைகள்......தொடரும்........

Saturday, July 30, 2005

நிலா - 2

"சார்.. நான் நிலா பேசறேன்"

"சொல்லுங்க"

"வந்து... வண்டில வரும் போது .. சின்ன ஆக்சிடென்ட்.. ஆட்டோகாரன் மேல இடிச்சுட்டேன்...கால்ல பிராக்ச்சரா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு..!"

"யாருக்கு... ஆட்டோகாரருக்கா?"

"இல்ல.. எனக்கு"

"ஸோ.. லீவு வேணும்.. அதானே..?"

"அதேதான்"

" நோ ஓ ஓ ஓ....

"என் லீவ் சார் அது.. அதை நான் தான் எடுக்கனும்"

"பட்... அதை நான் தான் சாங்ஷன் பண்ணணும்"

"சார்... ப்ளீஸ்"

"லீவ் சொல்ற நேரமா இது...? மதியம் மணி ரெண்டாகுது..திஸ் ஈஸ் நாட் பேர் நிலா"

"சார்...ப்ளீஸ்.. இந்த ஒரு முறை சாங்ஷன் பண்ணிடுங்க..சந்த்ரமுகியும்...மும்பையும் பார்த்துடுவேன்"

"திஸ் ஈஸ் டூ மச்.. நாளைக்கு காலைல ஆபீஸ் வர.. வந்து வேலை செய்ற.."

"அப்புறம் உங்க இஷ்ட்டம்.. "- என்று சொல்லி போனை வைத்தாள் நிலா

ஆனால் மறுனாள்.. அவள் அலுவலகம் போகவில்லை. கால்கள் வீங்கி, காய்ச்சலோடு நினைவிழக்கும் நிலையில் இருந்தவளை.. நந்தினிதான் க்ளினிக் அழைத்துச் சென்று அனைத்து பரிசோதனைகளயும் முடித்து.. மருந்துமாத்திரைகளை வாங்கி.. அறைக்கு அழைத்து வந்து ..படுக்க வைத்துவிட்டு..சுடுதண்ணி.. அரிசி கஞ்சி எல்லாம் செய்துக் கொண்டிருந்தாள்

"வெளுத்து கட்ற..!? என்ன மெனு..? சுடுதண்ணி, அரிசி கஞ்சி, ஆவின் பாலா? -படுக்கையில் சாய்ந்தபடி கேட்டுக் கொன்டிருந்தாள் நிலா

அவளை கண்டு கொள்ளாமல்....

" நிஜமாத்தான்... நீ வந்து பாரு சீனு.. காய்ச்சல் 102 இருக்கு... ஆனா தூங்காம, என்னை நக்கலடிசிட்டு இருக்கா" -– என்று பேசி போனை வைத்தாள் நந்தினி.

சைக்கிளில் வந்து இறங்கிய சீனு.. பயந்துதான் போனான்.

"அட இன்னாமா இது..!? இந்த மாறி கால் ஒடிஞ்சிடிச்சின்னு லீவு கேக்றத உட்டுட்டு.. சந்த்ரமுகி பாக்கணும்.. மும்பை எக்ஸ்ப்ரஸ் பாக்கணும்னு லீவு கேட்டா எந்த மேனேஜருக்குத்தான் கோவம் வராது.. மெமோ ரெடி பண்ணிட்ட்டாரு.. !!! நாந்தான் மனசு கேக்காம ஒரு போன் பண்ணி வெவரம் சொல்லலாம்னு எதேச்சையா பண்ணா.. இங்க இப்டி இருக்கு.. சரி நான் எதானும் உதவி பண்ணனுமா?" - என்றான்.

"புது படம் சீ டீ மட்டும் வாங்கித்தா சீனு.. போர் அடிக்குது " - என்றாள் நிலா.

வேகமாய் சைக்கிளில் போனான் சீனு.. அடுத்த அரை மணி நேரத்தில்.. வாசலில் ஸ்ப்ளென்டெர் சப்தம்.

" ஏய் .. நந்து.. எங்க பாஸ் ஸ்ப்ளென்டெர் மாதிரி இருக்கு..!? போய் பாரு ..- என்றாள் நிலா

அதற்குள் அறைக்குள் வந்து விட்டனர் திருவாளர் பாஸ் ம் அவரது ப்யூன் சீனுவும்.

"எதுக்குமே சீரியஸ் ஆகமாட்டியா நிலா நீ? "- கொஞ்சம் சத்தம் அதிகமாகத்தான் வந்தது ஷிவாவிடம் இருந்து

சார்.. முதல்ல உக்காருங்க... சூடா சுடு தண்ணி சாப்ட்றீங்களா ..?- என்றாள்

" நேத்தே என்கிட்ட ஏன் சொல்லல..?

" போன்ல சொன்னேனே சார்..!

"ஏதோ...காமெடி மாதிரி சொல்லிட்டிருந்த"..?

"ரெண்டு தடவை ப்ளீஸ்.. ப்ளீஸ்னு கெஞ்சினேனே சார்..! அந்த சென்டிமென்ட் போதாதா...?

"சரீ.. சரீ.. டாக்டர் என்ன சொன்னார்..? ப்ராக்சராமா?"

"ஒன்னும் இல்ல...மஸ்ஸில்ஸ் இஞ்சுரிதான்..ரெண்டு நாள் முழு ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லி இருக்கார்"- என்றாள் நந்தினி.

"சார்... நீங்க செகன்ட் மெமோ ரெடி பண்ணிடுங்க -" என்றாள் நிலா.

"ஏன்..? எதுக்கு...?

" நீங்க என் பாஸ்... நீங்க நிக்கும் போது நான் பெட்ல ஸ்டைலா சாஞ்சுகிட்டே லீவ் கேக்கறேன்... ஒரு மட்டு மரியாதை வேண்டாமா? திஸ் இஸ் நாட் பேர்.. நீங்க ரெடி பண்ணிடுங்க.. நான் லீவு முடிஞ்சி வந்து வாங்கிக்கறேன்" - என்றாள் நிலா.

" மரியாதை மனசில இருந்தா போதும்.. சீனு வா என் கூட "- என்றபடி வெளியில் நடந்தார் ஷிவா.

அடுத்த அரை மணியில் ஒரு காம்ப்ளான், கொஞ்சம் பழங்கள், ரெண்டு பாலகுமாரன் நாவல்கள், இரண்டு புது பட சீ.டீ க்கள் ஆகியவற்றை வாங்கி சீனுவிடம் கொடுத்தனுப்பிவிட்டு அலுவலகம் சென்றதாக கேள்வி.

"என்னடி இது..! இவ்ளோ கைண்டா உங்க பாஸ்? அன்னிக்கு...அப்டி திட்டுன..? என்றாள் நந்தினி.

நிலாவுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.. என்ன இது... நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோமா..? இல்ல நேத்து போன்ல கத்தினது மனசை உறுத்தி செய்ற ப்ராயசித்தமா..? - அவளை மேலே சிந்திக்க விடாமல்..” என்னை எடுத்துப் படியேன் நிலா’’ என்று பாலகுமாரன் நாவல்கள் அவளது கருத்தைக் கவர்ந்தன.

ஆமா எனக்கு பாலகுமாரன் நாவல்ஸ் பிடிக்கும்னு எப்டி தெரியும் உங்களுக்கு..? வியந்தாள்... இவ்ளோ சென்ட்டியா நீங்க..? என்றும் கேட்டுக் கொண்டாள்.

உங்கள் அழகிய கருவிழி கதா நாயகி ஒரு துள்ளளோடு, நெஞ்சம் நெகிழ, நினைவுகள் தித்திக்க.. இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க..

"இது சரியில்லயே ...ஷிவா கொஞ்சம் ஓவரோ..! ரூட் மாறுதோ.." - என்று நினைத்தனர் நந்தினியும்.. சீனுவும்...

தொடர்ந்தால்தானே தொடர்கதை எனவே அனைத்தும் ...

- தொடரும்

Saturday, July 23, 2005

நிலா

“ நாங்க எல்லாரும் கரெக்ட்டா 7 மணிக்கு லைட் அவுஸ் வாசல்ல நிப்போம்.. வேன் ரெடியா இருக்குமா..? என்னால எல்லாம் ரொம்ப நேரம் வெய்யில்ல நிக்க முடியாது.. யு சீ .. மை ஸ்கின்... ஏ சி வேன் தானே அரேஞ்ச் பன்றீங்க”” – என்றாள் வெண்ணிலா அலைஸ் நிலா.

ரொம்ப ஓவர்.. கொஞ்சம் அடக்கி வாசி – என்றான் சுரேஷ்.

சரி.. புது மேனேஜருக்கு சொன்னீங்களா? இல்லயா? டேபிளோட டேபிளா தவழ்ந்துட்டு இருந்தாரே இப்ப எப்படி இருக்கார் ? என்றாள் மீனா.

இப்பத்தான் தலயை நிமிர்த்தி வாட்ச் மேனை பார்த்து பேச பழக இருக்காரு – என்றாள் நந்தினி.

ஏய்... அத யாரு லிஸ்ட்ல சேர்த்தது? அதை டூர் கூட்டிட்டு போறோம்னு அதுகிட்ட சொல்டீங்களா..!? போச்சுடா... ஒரு நாளாவது நிம்மதியா இருக்கலாம்ப்பா... அது கருத்து கந்தசாமியாச்சே...!!.. நாளைக்கு டூர்.. டூர் தான்.. அறிஞ்சவ.. தெறிஞ்சவ..பெரியவளா ஒருத்தி இருக்கேனே.. என்கிட்ட கேக்கனும்னு தோனுச்சா உங்களுக்கு? அந்த சின்சியர் சிகாமனி வரலன்னாத்தான் எனக்கு நிம்மதி “ – என்றாள் நிலா.

Hello.. உன்னோட பாஸ் அவர்.. அது நினைவு இருக்கட்டும் - என்றாள் மது.

பாஸ்னா ஆபீஸ்ல மட்டும்தான்.. டூர்லெல்லாம் நிலா தான் பாஸ் .. ஓ கே. லவ் ஜோடீஸ் எல்லாரும் கவனமா கேளுங்க... ஓரம் கட்டி ஒதுங்கறதானா தனியா இன்னோரு நாள் போய்க்கோங்க.. நாளைக்கு எல்லாரும் வெறும் கலீக்ஸ் மட்டும்தான் .. நாட் லவ்வர்ஸ். நாட் ஜொள்ளர்ஸ்.. ஓ கே – என்றாள் நிலா.

"நீயும் லவ் பன்னிப்பாரு .. அப்ப தெரியும்... நாங்கள்ளாம் உன் கண்ணுக்கே தெரியமாட்டோம்"

கரெக்ட்.. நீங்க சொல்றது ரொம்ப சரி – என்றாள் நிலா.

நிலாவா...? நிலாவா இப்படி ..?மறு பேச்சு பேசாமல் ஆமோதிப்பது?
என்னச்சு நிலா உனக்கு.. உடம்பு சரியில்லயா..? எதிர்த்தே பேசல?- என்றான் ஜோஸ்.

எப்டி தெரிவீங்க..? காதலுக்குத்தான் கண்ணில்லயே ?- என்றாள். பின்பு அங்கிருந்த மாடிப்படிக்கட்டில் இரண்டு படிகள் ஏறி நின்று "அப்புறம்.. கேர்ள்ஸ்.. இங்க கவனிங்க எல்லாரும்.. நாளைக்கு நாம எல்லோரும் லைட் கலர் ப்ரின்டட் சில்க் சாரிலதான் வரோம்.. ஜிமிக்கி அன்ட் ஜாஸ்மின் மஸ்ட்."

"கடவுளே... கொடுமைடா... இதுங்க சாரி கட்டிகிட்டு வந்து.. தடுக்கி தடுக்கி விழுந்து.. நாம அத பார்த்து.. நிலா நாளைக்கு நாம போப்போறது இன்ப சுற்றுலா.. அதை துன்ப சிற்றுலாவாக்கிடாத – என்றான் சுரேஷ்.

"சுரேஷ்... ப்ளீஸ்.. தென்... பாய்ஸ் நீங்கல்லாம் ஜீன்ஸ் அன்ட் ப்ரீக் டீ ஷர்ட்தான் போட்டுட்டு வரனும்.. முக்யமா .. வருஷத்துல ஒரு நாளாவது குளிங்க.. அந்த பொன்னாள் நாளைக்கா இருக்கட்டும்.. ஏன்னா 3 கோயிலுக்குப் போகப் போறோம் - என்றாள் நிலா.

போதும் நிலா... Head மாஸ்டர் போல நடந்துக்காதே – என்றான் ஜோஸ்.

"அப்ப... கருத்து கந்தசாமி...? என்றாள் நந்தினி.

அது மஞ்சள் அன்ட் மஞ்சள் சபாரில வரும் பாரு... நிச்சயதார்த்ததுக்கு போறா மாதிரி – என்றாள் நிலா.

"போதும் நிலா.. இதெல்லாம் அப்டியே உன் பாஸ் காதுக்கு போகப் போவுது"

மொத்தம் இருபது பேர்.. பன்னிரண்டு ஆண்கள், எட்டுப் பெண்கள்.. இளம் காலையில் குளிர் காற்று முகத்தில் பட வேகமான பயணம்... வழியில் இருக்கும் மூன்று கோயில்களையும் .. இறுதியாக மகாபலிபுரத்தை பௌர்ணமி உதயத்தில் பார்த்துவிட்டு திரும்புவதாக திட்டம்.

எட்டு மணிக்கெல்லாம் முதல் கோவில். என்ன ஆச்சர்யம்... முதல் படிக்கட்டு வரை தளும்ப தளும்ப தண்ணீர். சிலுசிலுவென காற்றில் சிணுங்கும் சிற்றலைகள் காற்றோடு செல்லம் கொஞ்சின. "இவ்ளோ தண்ணீர் தளும்பும் குளம் தமிழ் நாட்டில் இருக்குதா ?"என்ற கேள்வியோடு சில்லென்று கால்களை நனைத்து, கைகளால் அளாவி விளையாடி அந்தக் குளக்கரையிலேயே நின்றுக் கொண்டிருந்தனர் நிலா குழுவினர். காணாததை கண்டதுப்போல குளத்தை இவர்கள் வேடிக்கைப் பார்க்க இவர்களை உள்ளூர்க்காரர்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

ஆனால் ஒரே ஒருவர் மட்டும்... கோவில் குளத்து நீரில் கால்களை நனைக்காமல், கைகளால் அள்ளி தலையில் தெளித்துக் கொள்வதும், எதோ முணுமுணுத்துக் கொண்டே கால்களை நனைத்துக் கழுவுவதுமாய் இருந்தார். அவர் வேறு யாரும் அல்ல நிலாவின் பாஸ்தான்.

“ நிலா உன் பாஸை பாரேன்... ஸ்லோகம்லாம் சொல்றாரு...தீர்த்த யாத்ரைக்கு வந்த எபெக்ட் தராரு...!?

"அவங்க அம்மாவோ மிஸஸோ சொல்லி தந்திருப்பாங்க.. அதை பாலோ பன்றாரா இருக்கும்.. எங்க பாட்டி கூட சொல்லுவாங்க.. கோயில் குளத்தில இறங்கும் போது கோயில் தீர்த்தத்தை அவ மரியாதை பன்ற மாதிரி காலை முதல்ல நனைக்க கூடாது, கையால தண்ணியை எடுத்து தெளிச்சிக்கிட்டு அப்புறம் இறங்கி குளிக்கனுன்ம்னு..."

என்ன... பாஸ் மேல திடீர் கரிசனம்.. விட்டு தரவே மாட்டேங்கற...?

Hello... நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டனும் புரிஞ்சுதா ? அதை விடு.. இந்த இடம்.. இந்த கோவில்.. கல் படிக்கட்டு.. சில்லுன்னு குளம்.. இதெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு.. அமைதியா.. நிம்மதியா இந்த குளக்கரைல உக்கார்ந்திருந்தாலே போதும்..எவ்ளோ இருந்தாலும் நகரம் நரகம் தான் –என்றாள் நிலா

ரெண்டு நாள் தான் ... அப்புறம் போரடிச்சுடும் நிலா என்றார் அவளது பாஸ்.

வானத்தைப் பார்த்தாள், பின்பக்கம் திரும்பி பார்த்தாள், நந்தினியை விலக்கி அவளின் பின்னால் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தாள்... குரல் வந்த திசையை மட்டும் சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் நிலா.

என்ன தேடற நிலா?

இல்ல.. என்னோட பாஸ் ஒருத்தர் எங்க கூட வந்தார் அவரைக் காணோம்.. ஆனா அவர் குரல் மாதிரித்தான் இருந்தது இப்ப..

Hello.. நாந்தான் பேசினேன் இப்ப என்றார்

நெவெர் ... அவர் பேச ஆரம்பிச்சா ஒரே ஒரு ஸென்டென்ஸோட நிறுத்தி பழக்கமே இல்ல.. அதுவும் எண்ணி ஐஞ்சு வார்தைகள் போட்டு ஒரே ஒரு சென்டென்ஸ் பேசி நிறுத்தறது கண்டிப்பா அவர் இல்ல..எங்க தொலைஞ்சாரோ.. அவரோட காவிய கருத்துக்களை கேக்காம இந்த சுற்றுலா வெற்றுலாவா ஆய்டும் - என்றாள்.

உனக்கு வாய் அதிகம்னு நான் ஜாய்ன் பண்ணும் போதே சொன்னாங்க.. ஆனா இவ்ளோ வாயாடியா இருப்பன்னு நான் கற்பனை கூட பண்ணல என்றார்.

ஆங்.. இப்ப.. இப்ப பேசினது எங்க பாஸ்தான்.. திரும்ப கிடைச்சிட்டீங்க - என்றாள்

எல்லோரும் கோவிலுக்குள் நுழைந்து எதோ போனால் போகட்டுமென கடவுளை வணங்கி வரும் போது, அவர்களது பாஸ் எனப்பட்டவர் கோவிலின் முதல் படிக்கட்டில் துவங்கி, ஒவ்வொரு சன்னிதியிலும் நின்று தொட்டு தியானித்து, சேவித்து, கண்மூடி, விழுந்து, எழுந்து, ஸ்லோகம் சொல்லி வணங்கி வருவதற்குள் வெறுத்துத்தான் போய் விட்டனர் மற்ற அனைவரும் .

“ இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இதை கழட்டி விட்டுடலாம்னு... நீங்க தான் கேக்கல... என்னொட பாஸ் அது.. முழுசா ஒரு மாசம் அது கிட்ட வேலை செஞ்சிருக்கேன்.. அது எந்த அளவுக்கு ராவல் பார்ட்டின்னு எனக்குத்தான் தெரியும்.. சரியான கருத்து கண்ணாயிரம்பா அது.. இப்ப பாரு... இங்கயே உக்காந்து அபிராமி அந்தாதி பாடப் போகுது.. கடவுளே அதுக்கு ஸ்லோகம்லாம் மறந்துடனும், உன் கிட்ட சொல்றத்துக்கு ஒரு ஸ்லோகம் கூட நியாபகமே வரவே கூடாது “” – என்று சத்தமாக வேண்டிக் கொண்டாள் நிலா.

மேற்படி கலாய்ச்சலுக்கு ஆளான அந்த பாஸ் ஐம்பது வயதை கடந்த, தலை நரைத்த, கண்ணாடிப் போட்ட வள் வள் வள்ளல் என நீங்கள் நினைத்திருந்தால் .. சாரீ நீங்கள் இந்தக் கதையை படிப்பதை இத்துடன் நிறுத்திக் கொண்டு.... இதற்கு பதிலாக கம்ப இராமாயணமோ, பதிற்றுப் பத்தோ, குற்றால குறவஞ்சியோ படிக்கலாம்...தப்பில்லை.

இருபத்தி மூன்று வயதான நிலாவின் புதூ பாஸாக வந்த அவருக்கு மிஞ்சிப் போனால் ஒரு முப்பது.. அல்லது முப்பத்தி இரண்டு இருக்கும். திருச்சியிலிருந்து மனைவி, மகளுடன் போன மாதம்தான் சென்னை வந்து செட்டில் ஆனார்.வந்த புதிதில் குனிந்த தலை நிமிரா குணக்குன்றாக இருந்தவர்.. இப்போதுதான் ப்யூன் சீனுவை தலை நிமிர்ந்து பார்த்து பேசி பழக ஆரம்பித்திருக்கிறார்.. மற்றவர்களுடன் சகஜமாகப் பழக இன்னும் ஒரு மாமாங்கம் ஆகும். அதுக்கும் அடுத்தாப்ல..முக்யமா பொண்ணுங்க.. சைட் அது இதுன்னு ஆரம்பிக்க அடுத்த ஜென்மம் ஆகலாம்.. இல்ல அதையும் தாண்டி போகலாம்.

விழுந்து புரண்டு வேண்டிக் கொண்டு வந்தவரை நிறுத்தி

"சார்.. நீங்க ஆன்மீக பற்றோடு இருங்க.. வேண்டாங்கல... அதுக்காக அங்கப் ப்ரதட்சனமெல்லாம் இப்டி ஆபீஸ் டூர் வரும் போதே முடிச்சுக்கறது .. அவ்ளோ நல்லால்ல ஸார்" – சொல்லியே விட்டாள் நிலா.

ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

அடுத்த கோவில்களிலும் அவரது நடவடிக்கைகளை கவனித்த போதுதான் வெளி தெரியாத சோகம் அவரது கண்களில் நிலைப்பதை கவனித்தாள் நிலா.

என்ன சோகமோ? என்ன குறையோ...? நாம வேற ரொம்ப காலாய்க்கறோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

மாமல்லபுரத்தை நோக்கி வேன் பறந்தது...

சார் நீங்க ஒரு பாட்டு பாடுங்க - என்றான் ஜோஸ்

வேன்டாம்பா... எனக்கு அவ்ளோ பாட வராது - என்றார் பாஸ்.

பாஸ்... பாஸ்னா அவ்வளவு அன்யோன்யமா இல்லை.. ஸோ .. இனி அவரோட பேராலயே அவர் அழைக்கப்படுவார்.. அதாவது சிவக்குமார் அலைஸ் ஷிவா.

"கச்சேரியா கேக்கறோம்.. சும்மா எதாவது சினி சாங் பாடுங்க சார்.

" ஸார்.. நீங்க..பாடுங்க.. வேண்டாங்கல.. ஆனா.. தயவு செஞ்சு.... ஆதிபராசக்தி.. அகிலாண்டனாயகி அம்மன் பாட்டெல்லாம் பாடிடாதீங்க சார் - என்றாள் நிலா.

சிறிது மௌனத்திற்குப் பின்அவரது hummingலேயே கண்டு பிடித்துவிட்டார்கள்.. அது மௌனராகம் – நிலாவே வா என்று. அருமையாகப் பாடினார். ரேவதியும் மோகனும் நினைவில் நிழலாடினார்கள்.பாட்டு முடிந்த பின்னும் நீண்ட மௌனம். அந்த மௌனத்தை கலைக்க யாரும் விரும்பவில்லை. வேகமாய் ஓடிய வேனின் ஓசை மட்டுமே எஞ்சியது.

"என்னாச்சு... ?உயிரோடத்தான் இருக்கீங்களா எல்லாரும்.. ?இதுக்குத்தான் நான் பாடமாட்டேன்னு சொன்னேன்... – என்றார் சிவா.

எக்சலன்ட் சார்.. சூப்பர்ப்- ஜோஸ் தான் மௌனத்தை உடைத்தான். நிலாவுக்குப் பேசுவதற்கு எதுமில்லை ...அவளே ஒரு பாடல் நாயகி...M.D யே ரவுன்ட்ஸ் வந்தாலும்.. முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தமாட்டாள்..அவளுக்கு வந்திருக்கும் புது பாஸ் இவ்வளவு அருமையாக பாடுபவர் என்றால்..!?.. அவள் ஆனந்த அதிர்சியில் நிற்காமல் என்ன செய்வாள்?.

ஸோ.. நிலாவை பேசாம செய்யனும்னா ஒரு பாட்டு பாடினா போதும்.. Am I right? – என்றார் சிவா.

மகாபலிபுரம்.... எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத மகாபலிபுரம்.. பௌர்ணமி நிலவொளியில் குளித்த கல் கோபுரங்கள்.. வெண்பட்டுப் போன்ற கடல் அலைகள்...காற்றின் குளுமையில் மெய்மறந்து நிற்கையில்

"ம்...ம்.. நேரமாச்சு.. கிளம்புங்க.. நிலா நீ ரொம்ப நேரமா தண்ணில நிக்ற... போதும் வா" - என்றார் சிவா.

"இங்கேயும் தாந்தான் பாஸ்ங்றதை நிரூபிக்கிறார்" - என்றாள் நந்தினி.

சென்னை திரும்பும் போதும் அழகிய பாடல்களால் அந்தப் பயணம் உயிரூட்டப்பட்டது. "நாளைக்கு ஒழுங்கா ஆபீஸ் வந்து சேரு.."என்ற சிவாவின் அதட்டலோடு நிலாவை அவளது அறை வாசலில் இறக்கிவிட்டு சென்றது அந்த வேன்.

தன்னுடய அறையில்.. குளிக்கும் போதும்.. உறக்கம் வரும் வரையும் அந்தப் பாடல்களையே நினைத்துக் கொண்டிருந்தாள் நிலா..

நினைவுகளுக்கு எதேனும் எல்லை உண்டா என்ன..? பாடல்களோடு சேர்த்து.. அப்பாடல்களை பாடிய சிவாவையும்... அவரது அழகிய முகமும்...அந்த முகத்தில் மின்னும் அழகிய கண்களும்.. நேவி ப்ளூ டீ ஷர்ட்டும்.. அதை அணிந்திருந்த அகன்ற தோள்களும்... நினைவுக்கு வந்தன நிலாவுக்கு.

நினைவுகளை நிறுத்தும் வழி தெரியாமல் வியந்தாள்.. வேறு விஷயங்களில் சிந்தனையை செலுத்தினாலும் மீண்டு வராத மனதை என்னதான் செய்வது?

மகாப் பெரிய முனிவர்களும், ஞானிகளும் மேரு மலையில் டென்ட் போட்டு உக்காந்து ட்ரை.. ட்ரை.. ட்ரை செய்த சிந்தனை அற்ற மோன நிலையை ...இருபத்தி மூன்று வயதில், ஆடி.. பாடி டூர் போய்விட்டு வந்த பௌர்ணமி முன்னிரவில் அடைய வேண்டும் என உங்கள் திராபை கதா நாயகி நிலா நினைத்தால்..." இது ஆவறதில்ல.." என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது...?
-------------------------------------------------
தொடரும்

Saturday, July 16, 2005

நினைவுப் பெட்டகம் - 5

கோயிலுக்கு போயிட்டு வரேன்... பத்ரமா இருந்துப்பியா? இல்ல... நான் போகாம நின்னுடட்டுமா..? நீ தேறி எழுந்தா.. மாவெளக்குப் போடறேன்னு வேண்டிக்கிட்டேன்.. ஒரு வாரம் கழிச்சு எழுந்து உக்காந்திருக்க.. வெள்ளிக்கிழமை அதுவுமா இன்னைக்கே போட்டுட்டா நல்லது " - என்றாள் அம்மா

ஒரு வாரமா...? ஆமாம்.. அவன் மெசேஜ் படித்து அழுதது போன வெள்ளிக்கிழமை தான் என நினைவு வந்தது. நான் இருந்துப்பேன் மா.. நீ போய்ட்டு.. நிதானமா வா - என்றாள்

வாழ்க்கையின் வண்ணங்களையும், சுவைகளையும் சுருட்டி வான்வெளியில் எறிந்துவிட்டு வெறுமையாய் உயிர் மட்டும் சுமந்திரு என கட்டளையிட்டுவிட்டு நின்றுவிட்டான் அவன். சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை பளாரென முதுகில் அறைந்ததைப் போல விக்கித்து நின்றுவிட்டாள் இவள். நான்கு நாட்கள் உடல் கருக்கும், உள்ளம் உருக்கும் காய்ச்சல்.. சுருண்டு போனாள் அவள்.

அம்மா நெய் கிண்ணம், வெல்லம் அரிசிமாவுமாக கிளம்பிவிட்டாள்.. போகும் போது.. அருகில் வந்து நெற்றியை தொட்டு.. “ சுத்தமா ஜுரம் போயிட்துடீ.. மத்யானம் பருப்பு ரசம் போட்டு சாதம் கரைக்கரேன் குடிச்சுடு” என்று சந்தோஷமாகச் சென்றாள்.

அம்மா கிளம்பியதும்.... மெல்ல நடந்து சென்று தனது செல்லை எடுத்துவந்தாள்... அணைந்து போய் வெறுமையாய் இருந்தது.. அதற்கும் உயிரூட்ட வேண்டும். அப்போதெல்லாம் ப்ளக் பாயிண்ட்காக வெட்டு, குத்து கொலை பழி நடத்தி, தம்பியை சண்டையில் வென்று.. எவ்வளவு ஆர்ப்பரிப்போடும், துள்ளலோடும் சார்ஜ் போட்டிருக்கிறாள்..பொட்டு வைத்துக்கொள்ள மறந்திருக்கிறாள், காசு எடுத்துக் கொள்ள மறந்திருக்கிறாள்.. வாட்ச் கட்டிக் கொள்ள மறந்திருக்கிறாள்.. ஆனால் செல் எடுத்துக் கொள்ள மறந்ததே இல்லை.. அவளது ஒவ்வொரு செல்லிலும், சொல்லிலும், செயலிலும் நீக்கமற நிறைந்ததல்லவா இந்த செல்.

செல்லுக்கு மின்சாரத்தையும்.. தன் மனதிற்கு அவனது நினைவுகளையும் கொடுத்தாள்.. உயிரற்ற அந்த செல் மின்சாரம் தேக்கி உயிர் பெற்றது.. ஆணால் அவள் மனமோ அவனது நினைவினைத் தேக்கி உயிர் துடிப்பை இழந்தது.

அவன் என்னை டாமினேட் பண்ண எப்டி விட்டேன்...!? அவன் மேல நான் வச்சது நட்பா?, அன்பா? காதலா? இனக்கவர்ச்சியா?

நட்புன்னா.... அவன் போய்டுன்னு சொன்ன போது.. “ என் ப்ரண்ட்ஷிப்பை காப்பாத்திக்க உனக்கு தெரியலைன்னு சொல்லிட்டு கூலா போயிருப்பேனே?

அன்புன்னா.... அவன் போய்டுன்னு போது.. தேங்க்ஸ் பார் யுவர் மெசேஜஸ்ன்னு சொல்லிட்டு நிம்மதியா இருப்ப்பேனே...?

காதல்னா... இது காதலா? ஒருத்தனை பார்க்கவே பார்க்காம... அவன் அனுப்பும் மெசேஜை மட்டுமே வச்சு அவனை காதலிக்க முடியுமா? வெளியில சொன்னா சிரிப்பாங்க..ஆனா.. அவன் தீர்மானமா பவித்ரா பைத்தியமா இருக்கேன், ஐ லவ் யு, நீயும் என்னை லவ் பண்ணுன்னு திடகாத்திரமா நின்னானே... என்னை நேர்ல கூட பாத்தது இல்ல..! தீவிரமா இருந்தானே அது எப்டி?.. அப்படியே காதலா இருந்தா... அவன் போய்டுன்னு சொன்ன போது இதுபோல அமைதியா அதிர்ந்து போய் நின்னுடுவேனா? நான் உன்னை காதலிக்கிறேன்.. நான் ஏன் போகணும்..? நான் போகமாட்டேன்னு அவனை சந்திச்சிருப்பேனோ?

இனக்கவர்ச்சியா.. இதுவும் கிட்ட தட்ட காதலுக்கு முந்தைய ஸ்டேஜ்

அப்ப என்னதான் இது? அவன் சொல்றமதிரி டைம் பாஸ்காக பழகி இருப்பேனோ? அப்டி பழகி இருந்தா இப்டி பீவர்ல விழுந்திருப்பேனா? ஆபீஸ்லயும் டைம் பாஸ்க்காக அரட்டை அடிசிருக்கேனே..? அதுல சில பேர் முறைச்சிக்கிட்டு முகம் திருப்பிக்கிட்டு போனா இப்டியா ஜுரம் வந்துச்சு?

என்ன எழவு மண்ணுக்கு அவன் எனக்கு ராங் கால் செஞ்சான்..? அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்கு.. இன்னும் நான் மீளல..உன்னை எப்டிடா மறக்றது சுஜீ?

செல்லின் மெசேஜ் இன்பாக்ஸ் சென்றாள்.. ஒவ்வொரு மெசேஜாக படிக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. முதல் மெசேஜ் .. Hi என்ன பண்ற? – அதை படிக்கும் போது அப்போதுதான் புதிதாக படிப்பதைப்போலத் தோன்றியது அவளுக்கு.. உடலெங்கும் பரவசமாகியது.. மிகச் சாதாரண வார்த்தைகள்தான் அவை... ஆனால் என்னை நினைத்து.. என் பதிலை எதிர்பார்த்து அவன் அனுப்பிய அந்த வார்தைகளால் என் உயிர் வாழ்தல் அர்த்தமுள்ளதாகிறது.. நான் வேண்டும் என அவன் விரும்புகிறான் என்பதே சந்தோஷம் தருகிறது... இதைத்தான்... இந்த உணர்வைத்தான் அவன் அன்றைக்கு சொன்னானோ?.. அவனை ரொம்பத்தான் படுத்திட்டேனோ..? லூஸ் மாதிரி மெசேஜ் அனுப்பி அவன் உயிரை எடுத்தேனோ? அவன் என்னை போய்டுன்னு சொன்னது தப்பே இல்லை.. ஆனா நான் எங்கடா போவேன்? என்று நினைத்துக் கொண்டாள்.

சுஜீ... எனக்கு எல்லாமே புரிஞ்சுதுடா.. நானும் விரும்பாமலில்லை... ஆனாலும்.. இன்னைக்கிருந்தாலும் நான் அப்படியேத்தான் நடந்துக்குவேன்.. எல்லாம் என் அப்பாக்காக...அது.. அது..முடிஞ்சு போச்சு எல்லாம்... அது என் தலைஎழுத்து... என்னோட போகட்டும்.. நீயாவது நிம்மதியா இரு.. நல்ல வேளை நீயாவே என்னை போய்டுன்னு சொல்லிட்ட – தனக்குள் பேசிக் கொண்டாள். இதயம் கனத்து கண்கள் நிரம்பின.

ஒவ்வொரு மெசேஜாகப் படித்துக் கொண்டே வந்தாள்.. தான் அனுப்பிய பதில்களை அவுட்பாக்ஸ் சென்று படித்தாள்... வாழ்க்கையில் மிக மிக மிக முக்யமானதை.. உன்னதமானதை இழந்துவிட்டோம் என உள்ளுணர்வு சொல்லச் சொல்ல .. தங்க இயலாமல் அழுதாள்.. நெஞ்சம் வலிக்க.. நெற்றி சுருங்கி.. கண்கள் சூடாகி மீண்டும் காய்ச்சல் ஆரம்பமாகியது

போறத்துக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ

புரியல


போய்டு... ஆனா போறத்துக்கு முன்னாடி ப்யெ சொல்லிட்டு போய்டுன்னு சொன்னேன்

அந்த வார்த்தைகள் அன்று பாய்ச்சிய அதே மின்சாரத்தை இன்றும் அவளுள் செலுத்தின.. அழுவதனால் தலைவலியும் காய்ச்சலும் அதிகரிக்க.. அந்த மூன்று மெசேஜ்களை மட்டும் தனது செல்லின் நினைவுப் பெட்டகத்தில் பதிந்துவிட்டு.. ஜுரத்தில் மூழ்கத் துவங்கினாள்.

“ என்னடீ இது.. அழுதியா என்ன? பேச்சு வார்த்தை நடத்துன நாள்ளேர்ந்து நீ பொண்ணாவே இல்ல.. நான் போகும் போது நல்லா எழுந்து உக்காந்தியேடி.. இப்ப 104 இருக்கும் போல இருக்கே..? என்னடி ஆச்சு உனக்கு? எனக்கென்னமோ இது அச்சான்யமா படுது.. அங்க கோயில்ல மாவெளக்கும் சரியாவே எரியல... டேய் ஆகாஷ்.. நாலு நாலணா எடுதிட்டு வா..” அம்மா.. தாயே இது பொழச்சு எழுந்தா எல்லாரும் உன் சன்னதிக்கு வரோம்.. என் புள்ளய முழுசா எழுப்பிக் குடுத்துடு... கால்காசு போடறேன்..” என்று சொல்லியபடியே அம்மா பூஜை அறைக்குள் செல்வது மங்கலாகத் தெரிந்தது.

மீண்டும் மூன்று நாட்கள் காய்ச்சல்.. கண்விழித்த போது பக்கத்தில் அப்பா.. நெற்றி வருடி.. புருவம் நீவி..” என்னாச்சுடா உனக்கு..? எதானாலும் அப்பாக்கிட்ட சொல்லு... அம்மா கத்துவா.. அவ கிட்ட சொல்ல வேண்டாம்.. அப்பாகிட்ட சொல்லுடா..” என்றார்

ஒன்னும் இல்லப்பா.. ஒன்னும் இல்ல.. நீங்க feel பண்ணாதீங்க.. டாக்டர் உங்களை feel பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்..

நான் feel பண்ணலயே.. உனக்கு பீவர்ன்றதுதான் எனக்கு கஷ்ட்டமா இருக்கு..

இதோ.. நான் எழுந்துட்டேன் பா... கஞ்சி தாங்கோப்பா .. பசிக்குது.. அப்பாவின் தோள்களில் சாய்ந்துக் கொண்டே, கஞ்சியை குடித்தாள் வாந்தியை அடக்கிக் கொண்டு.

அவனது Hi இல்லாமல் அவளது காலைகள் விடியத்தான் செய்தன.. Time is the great healer.. அல்லவா? ஆற்றியது காலம்... ஆறத்துவங்கியது மனம்.. ஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..!
--------------------------------------------------------------
இரண்டு மாதங்கள் முடிந்த ஒரு திங்கள் நன்னாளில் காலை அலுவலகத்தில் இருக்கும் போது .. எஸ்.எம்.எஸ். டோன்... நம்பளோடது இல்ல என்று நினைத்தவள்.. இருந்தாலும் எடுத்துப்பார்த்தாள்... அதிர்ந்தாள் “ Hi பவித்ரா” – அவன்.. அவன்.. அவன்..அவனேத்தான் அனுப்பியிருந்தான்.. கடலலைகள் ஆர்ப்பரித்து காலை வந்து மோதியதைப் போல் இருந்தது.. தடுமாறினாள்..

வேண்டாம் சுஜீத்.. வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. நானே இப்பத்தான் கரை ஒதுங்கி ..ஒரு ஓரமா இருக்கேன்.. திரும்பவும் சுனாமியா? நான் தாங்க மாட்டேன்.. என்னை போய்டுன்னு சொன்னல்ல நீ? என்னை போய்டுன்னு சொல்லிட்டு திரும்பவும் எதுக்கு Hi அனுப்பற? விளையாட்டு பொம்மயா நான் உனக்கு?

வெட்க்கம், மானம், ரோஷம் என்பவைகள் தனக்கும் இருக்கின்றன என்பது தற்போது முக்கியமாகவே படவில்லை அவளுக்கு.. பதிலுக்கு Hi டா? எப்டி இருக்க? என்று மெசேஜ் அனுப்பு என்று குதித்த மனதை அடக்க பகீரத ப்ரயத்னம் தேவையாக இருந்தது அவளுக்கு. எப்படியோ.. பதிலே அனுப்பவில்லை அவள்.

அன்று முழுவதும்...
ப்ளீஸ் பவி.. என்மேல கோவமா?
ஒரே ஒரு முறை என்னோட பேசு.. நான் சொல்றதை கேளு..
இன்னும் கோவம் போகலயா?
நான் போன் பண்ணட்டா?
நாலைந்து முறை call செய்தான்

கட்டுப்படுத்திக் கொண்டாள்...தாங்க முடியாத கட்டத்தில் செல்லினை off செய்துவிட்டாள்.. அப்படி செய்து விட்டு.. அங்கு அவன் துடிப்பானே என இங்கு இவள் துவண்டாள்.

ஆறியதாக நினைத்த மனக்காயத்திலிருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.. அது அவளது கண்களின் வழி வெளி வரும் போது நிறம் இழந்து கண்ணீர் எனப் பெயரிடப் பட்டது.

அவளது மனக் கண்முன்.. சுஜீத் அறிமுகமாவதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் திரை விரிந்தன....

பக்கத்துல வந்து உக்காரு.... இன்னும் தள்ளி வா...

“இல்ல இது போதும் ”- கொண்டு சென்ற அர்சனை பையை இருவருக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள்

டாடா சுமோ பயங்கர வேகமெடுத்தது.. அந்த வேகத்தில் ஓட்டிக்கொண்டே அவள் வைத்த அர்ச்சனைப் பையை எடுத்து காலடியில் கடாசினார் திருவாளர். நட்ராஜ் அவர்கள்.
ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்த ப்ரஸாத பையையா... கால் கீழயா..? அதிர்ந்துதான் போனாள்

"அர்ச்சனை பை... அது உங்க கால் கிட்ட..."- என்றாள்
பதில் ஏதும் பேசாமல் ஸ்டியரிங்கை ஒரு கையால் பற்றிக் கொண்டு இடது கையால் அவளை தன் மேல் சாயும் படி இழுக்க முயன்றான் அவன்.. இதெல்லாம் அவள் எதிர்பாராதது... நல்ல வேளை சுதாரித்துக் கொண்டு.. தடுமாறி விழுந்து எழுந்து மீண்டும் ஜன்னலோரம் ஒடுங்கிக்கொன்டாள்

நட்ராஜ் ... என்னதிது... வண்டியை நிறுத்துங்கோ .. நான் சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வறேன்...
ரொம்ப சிலுப்பிக்கிற...! இன்னும் எவ்ளோ கடன் இருக்கு உங்கப்பாக்கு.. சொல்லச்சொல்லு.. ஒரே பேமென்ட்ல தீர்த்துடலாம்.. கையோட நிச்சயம் வெச்சு.. தேதி குறிச்சிடலாம் – என்றான். இந்த இரு வாக்கியங்கள் பேசுவதற்குள் சிகரெட், பான்பராக் மற்றும் சாராயத்தின் வாசனையை அவள் முகத்தின் மேல் துப்பினான்....
இதெல்லாம் சகிச்சுக்கனும்...ஏன்னா.. அப்பாவை காப்பாத்தி கொடுத்தவன் இவன்...

அப்பாவிற்கு முதல் அட்டாக் வந்த அந்த நாள்... வாழ்வின் அஸ்த்திவாரத்தை உலுக்கிய நாள்... மூவரும் பதறி துடித்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். அம்மா இதுதான் சமயம் என்பதைப் போல.. பதினைந்து வருடங்களாக துளியும் தொடர்பில்லாமல் சண்டையிட்டு பிரிந்திருந்த அவளது அண்ணனின் கால்களில் சென்று விழுந்தாள்.. அழுதாள்.. சொந்த ஊரில் பண்ணையார் ரேஞ்சில் உலா வரும் அவரும் அவரது சீமந்த புத்திரன் இந்த தடிராமன் நட்ராஜும் சேர்ந்து சில பல ஆயிரங்கள் செலவு செய்து அப்பாவை காப்பாற்றினர்.. அம்மா நெகிழ்ந்து நெக்குருகிப் போனாள்.. அண்ணன் குடும்பத்துடன் இழையோ இழையென இழைந்தாள்.. ஆனாலும் அவரது அண்ணன் மறக்காமல் “ மொத்தம் ஒன்னரை லட்சம் செலவாச்சு... நீ அதெல்லாம் திருப்பித் தர வேண்டாம்... பவித்ராவை மட்டும் நட்ராஜுக்கு கொடுத்துரு.. அவன் ஊர் மேயாம இருக்கனும்னா இவதான் லாயக்கு... நம்ம கும்பல்ல இவ்ளோ படிச்சுட்டு கவர்மெண்ட் உத்யோகம் எவ பாக்கறா? என்ன நான் சொல்றது..? என்றார்.

ஊர் மேயறவனை திருத்தும் உன்னத சமூக சேவகியா நான்... கடவுளே இவனா? இவனா எனக்கு? கால்களின் கீழ் பூமி நழுவுவதை போல் தோன்றியது.. அப்பாக்கு வந்த அட்டாக் எனக்கு வந்திருக்கலாம்.. தனியிடம் தேடிச்சென்று அழுதாள்...மனமொடிந்து போனாள்..

அப்பா அட்டாகிலிருந்து சுதாரித்து.. அன்றாட வாழ்க்கையில் கலந்து.. நார்மலான கொஞ்சனாளில்... அம்மா விவரத்தை சொன்னாள்... அதை கேட்டு அதிகமாக அதிர்ந்தார்..

"பைத்தியமாடி உனக்கு..!? அவன் முரடன்.. எல்லா கெட்ட பழக்கமும் ஒன்னு விடாம இருக்கு.. இப்பவே ரெண்டு மூணு தொடுப்பு இருக்றதா பேசிக்கறாங்க.. என்னை கேக்காம எப்டி நீ உங்கண்ணனை பேச விட்ட?
அம்மா மௌனம் அனுஷ்டித்தாள்.. அவள் மௌனிக்கிறாள் என்றால் அவளது தீர்மானத்தில் உறுதியாய் இருக்கிறாள் என அர்த்தம்..

அப்போ ஒன்னரை லட்சத்தை அவங்க முகத்துல தூக்கி எறிஞ்சுட்டு.. உங்க சம்பந்தமே வேண்டாம்னு சொல்லிடுங்கோ..

"பணத்துக்கும் பவித்ராவோட வாழ்க்கைக்கும் முடிச்சு போடாதே.. இந்த ப்ளாட்டை வித்துட்டு... வாடகைக்குப் போவோம் உங்கண்ணனுக்கு கொடுத்தது போக மீதி பணத்தை பேங்க்ல போட்டுட்டு நிம்மதியா இருப்போம்...

வீட்ட வித்துட்டு மீதி பணத்தை பேங்க்ல போட்டுட்டு உக்காந்துட்டா.. எல்லாம் ஆயிடுமா..? வெளியிடம் பார்த்தா.. இதுக்கு மேல வரதட்சணை செய்யனும்.. எங்கண்ணன் அதுபோல ஏதாவது கேட்டாரா..? அவரே ஒன்னரை லட்சம் செலவு செஞ்சு உங்களை காப்பாத்தி உக்கார வச்சிருக்காரு.. நன்றிங்கறது ரத்தத்துல வரணும் - என்றாள் அம்மா

என் ரிடயர்மென்ட் பணம் வந்ததும்.. அத வச்சு அவளுக்கு ஜாம் ஜாம்னு பன்னுவேன்..

இப்பவே அவளுக்கு 21.. ஊறுக்கா போட்டுட்டு உக்கரவச்சுக்கோங்கோ.. இப்பவே அவ சம்பாத்தியத்துக்காகத்தான் அவளுக்கு இடமே நாம பார்க்க ஆரம்பிக்கலைன்னு உங்க மனுஷங்களே சொல்ராங்க...

அப்பா கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாய் இருந்தார்... முகம் கழுத்து என வியர்வை வழிந்தது..
"எனக்கு உடம்புக்கு வந்து என் கொழந்தை வாழ்க்கை பாதிச்சுடுச்சே... பாதிச்சுடுச்சே" என்று புலம்பியவர் தான்... நெஞ்சை கையில் பிடித்துக் கொண்டு சாய்ந்தார்... இரண்டாவது அட்டாக்.
மீண்டும் அவர்கள் தான்... நல்லவர்களோ..கெட்டவர்களோ.. பலன் எதிர்பார்த்து செய்தார்களோ .. இல்லையோ.. அவர்களால்தான் அப்பா பிழைத்து எழுந்து வந்தார்.. ஆனால் இந்த முறை ஒரு லட்சம் செலவு செய்ததாக சொல்லிக் கொண்டார்கள்.. கணக்கு கேட்கும் நிலைமையில் இவர்கள் இல்லை..

இங்க பாருங்கம்மா.. சந்தோஷமோ.. துக்கமோ.. எதையும் வேகமா அவர்கிட்ட சொல்லிடாதீங்க.. குழந்தையைப் போல பார்த்துக்கணும்.. அப்படிப் பார்த்துக்கிட்டா.. தாராளமா.. சந்தோஷமா இன்னும் நிறைய காலம் உங்களோட இருப்பார் அவர்..- டிச்சார்ஜ் ஆகும் போது டாக்டர் சொல்லிய அட்வைஸ். நிறைய காலம் உங்களோட இருப்பார் என்ற வார்த்தைக்கு டாக்டர் தந்த அழுத்தத்தில் அவள் அப்பாவின் உடல் நிலையை உணர்ந்துக் கொண்டாள்.

அப்பாவின் உடல் நிலை.., அம்மாவின் ஆக்ரோஷம், மாமாவின் சாணக்யம், நட்ராஜின் அராஜகம்.. இவை அத்தனையும் எதிர் கொண்டு.. சுஜீத்தை கரம் பற்ற .. அவள் நாவல் கதா நாயகியோ... திரைப்பட புரட்சிப் பெண்ணோ இல்லை. சாதாரண வேளாளத்தி... எதோ படித்துவிட்டதால்.. அரசாங்க உத்யோகம் கிடைத்துவிட்டதால்.. கிண்டலும் கலாய்ப்புமாக.. ஆர்ப்பரிக்கும் துணிச்சலோடு இருப்பதாக பந்தா பண்ணும் பயந்தாங்கொள்ளி." காதல் வந்தா உடனே சொல்லிடனுமா? சொல்லமயேத்தான் சாகனும்.. உனக்கு விதிச்சது அவ்ளவுதான்னு தேத்திக்கனும்." என தனக்குத் தானே பேசி.. ஒரு நாள்ள எப்பெப்போ நேரம் கிடைக்குதோ அப்பப்பல்லாம் தனியாகப் போய் அழும் லூசு அவள்.அவளிடம் போய் "ஐ லவ் யூ பவி... மேடம்.. நகர்வலம் வந்து காட்சி கொடுத்திட்டாலும்னு " குத்தலாகப் பேசினால் அவள் என்ன செய்வாள்.. மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு ஜுரத்தில் படுப்பதைத்தவிர.

------------------------------------------------

அக்கா உனக்கு போன்... (ஜுரம் வந்ததிலிருந்து அக்கா ஆகிவிட்டாள்.. வாடி போடி எல்லாம் மறைந்து அன்புள்ள அக்கா என்றழைக்கப்பட்டாள் ஆகாஷால்) அவசரமாக குளித்து வெளியில் வந்து செல்லை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டபடியே..
hello யாரு என்றாள்

நான் சுஜீத் பேசறேன் பவி..

அவனது குரல்.... அவளது உள்ளத்தை நிறைத்த அவனது குரல்.. அந்த குரலுக்கு அவ்வளவு ஈர்ப்பா..? அவனது குரல் அவளது உயிருக்குள் பரவி உறைந்தே போனாள்.. call ஐ கட் பண்ணுவது எப்படி என்று கூட மறந்து போனது அவளுக்கு...

பேச மாட்டியா என்னோட? ப்ளீஸ் லைனை கட் பன்னாதே.. கட் பன்னின.. அவ்ளவுதான்..

என்ன மிறட்ரியா.. கட் பன்னா என்ன பன்னுவ?

சிம்பிள்.. இன்னொரு கால் பன்னுவேன்..உன் குரல் கேப்பேனான்னு இருந்தேன் பவி.. உன்னோட நிறய பேசனும்

சொல்லு - என்றாள்

உன்னைவிட்டுட்டு என்னால இருக்க முடியாது

வேற ஏதாவது பேசு சுஜீத்

இன்னும் ஏன் பிடிவாதம் பிடிக்கற பவி.. நீ என்னை விரும்பறயோ இல்லையோ.. நான் உன்னை விரும்பறேன் பவி.. நீ இல்லாம நான் இல்ல.. எனக்கு நீ வேணும் பவி..

அப்பொ அன்னைக்கி ஏன் போறத்துக்கு முன்னாடி bye சொல்லிட்டு போய்டுன்னு சொன்ன?

வலுக்கட்டாயமாத்தான் அப்டி சொன்னேன்.. மரைன் கோர்ஸ் கடைசீ நள்ள சீட் கிடைச்சுடுச்சு... மறு நாள் கொச்சின் போய் ஜாய்ன் பண்ணணும்.... அந்த கோர்ஸ் காம்பஸ்ல செல் நாட் அலௌட்... உன்னை விட்டுட்டு எப்டி போறது? உன்னை மறக்கனும்னா உன்னோட சண்டை போட்டாத்தான் முடியும்.. அதான் அன்னைக்கு அப்டி சொன்னேன்... உனக்கு அப்டி எஸ்.எம்.எஸ். அனுப்பிட்டு.. நான் தனியா போய் அழுதேன் பவி.. நாலு பேக்கெட் சிகரெட் பிடிச்சேன்..

நாலு பேக்கெட்டா...! அடுக்குமாடா இது?

அதை விடு.. உன்னை நான் பார்த்தேன் பவி.. நீ அழகு பவி.. ரொம்ப அழகா இருக்க

அடப்பாவி.. போய் சொல்லாத.. எப்ப பார்த்த..!? எங்க பார்த்த!?

ஜூலை 7.. ஸ்பென்சர்ஸ்ல hand bag வாங்கிட்டு இருந்த...

அட ஆமாம்.. ஆனா நான் தான்னு எப்டிடா கண்டு பிடிச்ச..!?

.. வேற எப்டி..? எஸ்.எம்.எஸ் வழியாத்தான்... அன்னைக்கு நான் அக்காவுக்கு பர்த்டே ப்ரசண்ட் வாங்க வந்தேன்... நீ ப்ளாக் சூரி போட்டிருந்த.. குனிஞ்ச தலை நிமிராம எஸ்.எம்.எஸ் பண்ணிட்டிருந்த.. சூரிதாரை விட.. நீ மெசேஜ் பண்ணின அழகுதான் எனக்கு அது நீயா இருக்குமோன்னு லின்க் பண்ண தோணுச்சு.. பிளாக் சூரி போட்டவங்கல்லாம் பவித்ரா ஆக முடியுமா என்ன..?

ம்.. அவளுக்கு நினைவு வந்தது

என்ன பன்ற? – எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தான்

ஷாப்பிங்.... ஸ்பென்ஸர்ஸ்ல – பதில் அனுப்பினாள்

தனியாவா போன?

இல்லலல்ல.. ரம்யா கூட இருக்கா

ஒகோ... சரி.. என்ன கலர் ட்ரஸ் போட்டிருக்க?

ட்ரஸ் கலர்லாம் உனக்கெதுக்கு?

இன்னைக்கு ப்ளாக் கலர் போட்டவங்களுக்கெல்லாம்.. வாழ்க்கையில் இனிய திருப்பம்னு இந்த புக்ல போட்டிருக்கு.. நான் ப்ளாக் அண்ட் ப்ளாக்.. எனக்கு எப்பவுமே அதிர்ஷ்ட்டம் தான்.. மேடம்க்குதான் அதிர்ஷ்ட்டம் இருக்கோ என்னவோ – என பதில் வந்தது

Hello... நான் இன்னைக்கு புல் ப்ளாக் சூரி.. பிளாக் colour clip, பிளாக் cheppals... பிளாக் பொட்டு.. பிளாக் hand bag .. தெரிஞ்சுக்கோ.. உன்னைவிட நான் அதிர்ஷ்ட்டசாலி.. ஒகே..

அப்ப சரி.. பிளாக் டீ வாங்கி குடிங்க நீயும் உன் ப்ரண்டும்

நினைவலைகள் முடிந்தது

அடப்பாவி.. அவ்ளோ நெருக்கமா பார்த்திருக்க.. என்னொட பேசத் தோணலயா உனக்கு..?

நீயே வந்து என்கிட்ட பேசும்போது எனக்கு எதுவுமே தோணல பவி....

என்னது... நான் வந்து உன்கிட்ட பேசினேனா? எப்போ?

இந்த bag நீங்க செலக்ட் பண்ணிட்டீங்களா? வேணாம்னா நான் எடுத்துக்கவா? ரொம்ப நல்லாருக்குன்னு பேசினியே நினைவிருக்கா?

அட.. ஆமாம்.. அப்படித்தான் பேசி இந்த bag வாங்கினோம்.. அய்யோ சுஜீத்.. உன்னை நான் பார்த்திருக்கேனா? மெல்ல மெல்ல அவன் உருவம் மனக் கண்ணில் தோன்றியது.. அவனது உயரம் முதலில் மனதில் பதிந்தது நினைவுக்கு வந்தது.. எவ்ளோ உயரம் இவன் என தான் நினைத்ததும் நினைவுக்கு வந்தது.. அப்புறம்.. அவன் முகம்.. அழகா இருக்கான் பையன் என தான் மார்க் போட்டதும் நினைவுக்கு வந்தது.. அவனது அகன்ற தோள்களும் பிளாக் டீ ஷர்ட்டும்.. நினைவுக்கு வந்தன.. இவனும் இன்னைக்கு புல் பிளாக் கலர் டிரஸ் போட்டிருக்கான்.. இவனுக்கும் அதிர்ஷ்ட்ட நாள் போலிருக்கு என்று நினைத்ததும் நினைவுக்கு வந்தது.

ஒரு நிமிஷம் இரு சுஜி நீ தொட்டு தந்த bag அங்க இருக்கு .. இரு அதை எடுத்துட்டு வரேன்..- என்று ஓடினாள்

அவளது கூந்தலிலிருந்து சில்லென்ற நீர் துளிகள் தரையில் சிதறின ஆனால்.. அவளது கண்களிலிருந்துசூடான கண்ணீர் துளிகள் தரையில் சிதறின..

அழறியா பவி.. என்னைக்கோ நான் தொட்டு தந்த bagனு அதை இப்ப எடுத்துட்டு வற ஓடினியே.. இதுக்கு பேரு லவ்வுன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்வாங்க..?

பதில் பேசவில்லை அவள்.. பேச நினைத்தாலும் காதலாலும், கண்ணீராலும் நெஞ்சம் அடைத்தது அவளுக்கு...

பவி.. லைன்ல இருக்கியா.. வச்சுடாதே பவி.. இந்த போன்காலுக்காக நான் ஏங்காத நாள் இல்லை பவி.. நடுவில மெசேஜ் அனுப்பினேன் பதில் இல்லை.. கால் பண்ணா செல் off பண்ணிட்ட.. நான் எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? போன்னு சொன்னா உடனே போயிடனுமா?

அடப்பாவி ...போறத்துக்கு முன்னாடி bye சொல்லிட்டுப் போன்னும் சொல்லுவ..
திரும்பி வந்து..” போன்னு சொன்னா உடனே போயிடனுமான்னும் கேப்பியா?

சண்டைல இதெல்லாம் சகஜம் பவி..-என்றான்

கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டியா சுஜித்..?

ஆச்சு.. இன்னும் மூணு மாசம்.. முடிச்சுட்டா.. நேவில வேல கிடைச்சுடும் நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு எனக்கு சமைச்சு போட்டா போதும்

வேண்டாம் சுஜீத்.. வேண்டாம் .. நாம் பேசறதை இதோட நிறுத்திடுவோம்.

ஏன்.. ஏன் பவி என்னை வேண்டாங்கற.. நான் அழகா இல்லயா?

என்னைவிட நீதான் அழகாயிருக்க.. நான் உனக்கு சூட் ஆவேனோ இல்லயோ!

சூட் ஆகறதா? என் மனசு முழுக்க நீதான் இருக்க... சரி .. நாம எப்ப மீட் பண்லாம் பவி.. லீவ்ல வந்திருக்கேண்டா.. உன்னை பாக்கணும்போல இருக்குப்பா.. ப்ளீஸ்.

இதற்கு மேலும் அவளால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ன?

அத்தனையும் சொன்னாள்.. அப்பாவிற்கு வந்த முதல் அட்டாகிலிருந்து.. போனவாரம் அவளுக்கு காய்ச்சல் வாரம் ஆனது வரை சொன்னாள்.. அப்பாவுக்காக.. அப்பாவுக்காக மட்டுமே தனது வாழ்க்கையில் எதையும்.. அவன் உட்பட எதையும் இழக்க தயாராயிருப்பதை சொன்னாள்.

அவ்வளவையும் அமைதியாக உன்னிப்பாக கேட்டுக் கொண்டான்...

இவ்ளோதானா ப்ரச்சனை..? இதுக்கா ரேவதி ஸ்டைல்ல மூக்கை சிந்தி துடைச்ச? என்றான்

என்னது இவ்ளோதானான்னு கேக்கற? எவ்ளோ ப்ரச்சனை இருக்கு.. அப்பா எதோ நடமாடிட்டு இருக்காரு. இப்ப போய் அப்பா.. நான் சுஜீத்தை லவ் பன்றேன்.. அவனையே கல்யாணம் செஞ்சு வைங்கன்னு நான் போய் கேக்க முடியுமா? அம்மாவை எப்டி சமாளிக்கறது? அந்த நட்ராஜ்.. எங்க மாமா.. இவங்களை சமாளிக்க முடியுமா? எல்லாத்தையும் விட அப்பாவை பத்ரமா பாத்துக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு..

நீ சொல்றதும் வாஸ்தவம் தான் பவி.. சரி எதுக்கு.. உனக்கும் ரிஸ்க்கு..? எனக்கும் ரிஸ்க்கு? அப்ப என்னை மறந்துரு? என்று போனை வைத்துவிட்டான்.

விக்கித்து சிலையாய் நின்றாள்... அழுதாள்.. தேம்பித் தேம்பி அழுதாள்.. லவ் யூ பவின்னு சொன்னியேடா..? நீயிலாம நான் இல்லைன்னு சொன்னியேடா? ஏண்டா.. ஏன்டா இப்டி படுத்தற.. இந்த ஆம்பளைங்க எல்லாரையும் நிக்க வச்சு சுடணும்.. அழுதபடியே திட்டி தீர்த்தாள்.
----------------------------------------------------------------------------------

அம்மா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்மா.. அதான் நிச்சயம் ஆயிடுச்சு இல்ல.. ஒரே ஒரு தடவை ..கோயிலுக்குத்தானேமா போறோம்னு சொல்றோம்.. ப்ளீஸ்மா..

“ நிச்சயம் ஆனாத்தான் இன்னும் ஜாக்ரதையா இருக்கணும்னு சொல்வாங்க.. ஒருத்தர் கண்ணுபோல இருக்காது.. எனக்கு தெரியாது.. உங்கப்பா அனுப்பினா போங்க “ என்றாள் அம்மா

Hi அத்தை.. இந்தாங்க சின்ன மிக்சி ஜார்.. அம்மா சொன்னாங்க .. அன்னைக்கு விருந்து நடக்கும் போது இது இல்லாம கஷ்ட்டப்பட்டீங்கன்னு – என்று கொடுத்தான். அம்மாவுக்கு பாதத்திலிருந்து முழங்கால் முட்டி வரை காணாமல் போய்விட்டது.. நெக்குருகி நெகிழ்ந்து போய் விட்டாளாம்.

கிளம்பு... சீக்கிரம்.. என்று சைகையால் இவளிடம் சொல்லிவிட்டு.. அப்பா பக்கத்தில் போயி பவ்யமாய் அமர்ந்து அவருக்கென வாங்கி வந்த புத்தகங்களை தந்தான்..

ஆகாஷ்க்கென வாங்கி வந்தது வேற என்னவாக இருக்க முடியும்.. அதேதான்.. கிரிக்கெட் பேட்டும், ஷட்டில் காக்கும்தான்.

சரிப்பா .. போயிட்டு சீக்கிரம் வந்துடனும்.. கல்யானத்துக்கு முன்னாடி இப்படி அனுப்பறது தப்பு.. இவ காய்ச்சல்ல விழுந்து எழுந்து பொழைப்பாளான்னு இருந்தது.. கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போறீங்க.. பொய் சொல்லக் கூடாது “ – வாசல் வரை வந்து வழி அனுப்பினார் அப்பா. தெம்புதான்.. மகாதேவ முதலியாருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.. என் செல்லம்ப்பா நீங்க என மனதுக்குள் கொஞ்சினாள்.

சென்னையில் காதலிப்பவர்கள்.. அல்லது காதலிக்க விண்ணப்பிக்கும் பசங்க அனைவரும்.. தங்கள் காதல் வளர்ந்து.. அந்தக் காதலே கல்யாணத்திலும் தொடரனும்னு – அபத்தமா, முன்ன பின்ன யோசிக்காம, தெரியாத்தனமா, அவசரப்பட்டு வேன்டிக்கும் போது இப்டித்தான் வேன்டிக்குவாங்க ...” அப்பா பழனி ஆண்டவா.. எங்க காதலை காப்பாத்து... எங்க காதல் .. சக்ஸஸ் (!?) ஆயிடுச்சுன்னா... இந்த E.C.R ரோட்ல.. டூ வீலர்ல இறுக்க கட்டி புடிச்சிகிட்டு வேகமா அம்பது தடவை போயிட்டு வரோம்... நிச்சயம் ஆயிடுச்சுன்னா அவ துப்பட்டாவால அவ தலை முழுக்க மூடி.. அதுமேல என் Helmetடை மாட்டி.. மூஞ்சி முகறை தெரியாதபடிக்கு அவளை தள்ளிக்கிட்டு இதே E.C.R ல ஒரு நாளைக்கு நாலுதடவை வரேன்.. அதுக்கு நீதான் கருணை காட்டனும்னு வேண்டிக்குவாங்க.

சென்னை பொண்ணுங்க எப்டின்னா..- “அம்மா முண்டகக் கண்ணி தாயே.. அவன் என்னை லவ் பண்ணி.. .. அதுக்கப்றமும் என்னையே கல்யாணம் பன்னிக்கனும்னு லூஸ்தனமா முடிவெடுத்ததும்.. எவ்ளோ டைட்டா போடமுடியுமோ அவ்ளோ டைட்டா ஜீன்ஸ் ஷர்ட் , ஜீன்ஸ் பேண்ட்.. போட்டுகிட்டு.. அவனை டூ வீலரே ஓட்டவிடாம, நெறிக்றாப்ல அவன் கழுத்தை கட்டிகிட்டு, அவன் மேல சாஞ்சுகிட்டு இதே E.C.R ல sunday.. sunday ride வரோம்மா.. அதுக்கு நீதான் அருள் புரியனும் தாயேன்னு” – வேண்டிக்குவாங்க.
சுஜீ அண்ட் கோவும் சென்னை சிடிசன்கள் தானே.. ?விதிவிலக்காக முடியுமா..? வான்புகழ் E.C.R ரோடில் அறுபதில் விரைந்தது சுஜியின் Hero.

மெதுவா போ சுஜீத்.. பயமா இருக்கு

எந்தெந்த வண்டியை எவ்ளோ வேகம் ஓட்டணும்னு எனக்கு தெரியும் பவி.. சரி நாம போகப்போர கோயில் சாமி என்ன சாமின்னு சொல்லு பார்ப்போம்

நித்யகல்யாணப் பெருமாள்... அதுகென்ன இப்போ?

அதுக்கென்னவா.. தினம் ஒரு கல்யாணம் பண்ணிக்குவாராம்..

உன்கிட்ட வந்து சொன்னாரா.. இது இது .. இப்டி இப்டின்னு..?

எது எது எப்டி எப்டி..? என்கிட்ட் எதுவும் சொல்லலையே... சரி அவர் கதை நமக்கெதுக்கு.. ? நம்ம கதைக்கு வா.. எனக்கும் இடுப்புன்னு ஒன்னு இருக்கு பவி

ஆமா இருக்கு

உனக்கும் கை ந்னு ஒன்னு இருக்கு பவி

இதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல சுஜித்

நான் இவ்ளோ ஸ்பீடா ஓட்ரதே என் இடுப்பை உன் வளைகரங்கள் வளைக்குமான்னுதான்..!

அம்மா சொல்லி அனுப்பினாங்க.. தொட்டு கிட்டு பேசிக்க கூடாது.. தனியா மறைவா கூப்ட்டா போகக் கூடாதுன்னு

வேகமாய் போய்க் கொண்டிருந்த வண்டி ப்ளாட்பார்ம் பக்கத்தில் ஓரம் கட்டப்பட்டது.. கொஞ்சம் பயந்துதான் போனாள் அவள்.. ரோஸ் நிற டைல்ஸ் பதித்த ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்...

ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும் இப்போ.. - என்றான்

என்ன ரெண்டுல ஒன்னு..?

என் இடுப்பை பிடிச்சுகிட்டு வறியா..? இல்லை Hero ஓட்றியா?

நான் ஏற்க்கெனவே Heroவத்தானே ஓட்டிட்டு இருக்கேன்?

நான் சொல்றது வண்டிய..- என்றான்

இந்த வண்டியா.. எனக்கு கியர் போடத் தெரியாதே - என்றாள்

இதோடா.. கியர் போடத் தெரிஞ்சா... ஓட்டி ஓரங்கட்டிடுவீங்களோ..? குள்ள கத்ரிக்கா.. மவளே.. மரியாதையா இடுப்பை பிடிச்சுகிட்டு வா.. அவனவன் என்னை வேற மாதிரி பாக்கறான்.

வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுத்தது

அமைதியா அந்த இளம் காலை பயணத்தை ரசித்தனர்.. நிறைய பேசனும் என்று நினைத்தாலும் தற்போது ஏதும் நினைவிற்கு வரவில்லை..

சுய நினைவுக்கு வந்தவளாக... நான் ஜோக் சொல்லட்டா சுஜீ? என்றாள்

மீண்டும் வண்டி வேக வேகமாய் ஓரங்கட்டப்பட்டது.. அவளும் ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்..எதுக்கு நிறுத்திட்ட? - என்றாள்

நிச்சயதார்த்தம் ஆனவங்களுக்கு டைவர்ஸ் குடுப்பாங்களா பவி - என்றான்

எதுக்கு கேக்கற?

தடால்ன்னு தூக்கிப் போட்டாப்ல நீ ஜோக் சொல்றேன்னுட்டியா.. ரெண்டு திராபைங்களை ஒரே சமயத்துல என்னால சகிச்சுக்க முடியாது.. அதனாலத்தான் – என்றான்..

போ ..டா.. – என்று சிணுங்கினாள்

மீண்டும் வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுத்தது

ஆரம்பத்திலேயே நீ என்கிட்ட பொய் சொல்லியிருக்க பவி

என்ன சொன்னேன்?

உன் பேரு பவித்ரான்னு பொய் சொல்லியிருக்க

ஆமா சொன்னேன்..

அது தப்பு இல்லயா?

Hello... அப்ப நீ என் ப்ரண்ட் கூட கிடயாது.. ஜஸ்ட் எஸ். எம்.எஸ். ப்ரன்ட்தான்.. அப்போபோயி உனக்கு சத்யப்ரமாண பத்ரமா எழுதி தர முடியும்..? - என்றாள்

ஆமாம்.. அதுவும் வாஸ்த்தவம்தான்..-என்றான்

மீண்டும் வண்டி வேக வேகமாக ஓரங்கட்டப்பட்டது.. அவள் இறங்கி நின்றாள்..

இப்ப சொல்லலாமில்ல..? என்றான்

உனக்கு தெரியுமில்ல-என்றா

திரும்ப சொல்லலாமில்ல..? - என்றான்

ஐய்யோ.. ஆள விடு - என்றாள்

இந்தப் பேர் இல்லயே.. ஜாதகத்துல வேற போட்டிருந்ததே..?

சரீ.. சரீ.. சொல்றேன்.. தமிழ்ல சொல்லட்டா, சமஸ்கிருதத்ல சொல்லட்டா..?

எந்த லேங்வேஜா இருந்தாலும் ஒரே பேர் தானே?

இல்லை.. தமிழாக்கம் பண்ணா என் பேரு வேற - என்றாள்

அப்ப தமிழ்லயே சொல்லு - என்றான்

என்னோட பேரு வெண்மை

ஸ்வேதான்னா வெண்மையானவள்ன்னு அர்த்தம்.மொத்தம் எனக்கு மூணு பேரு
அப்டியா இதெல்லாம் சொல்றதில்லயா?.. என்றான்

என்னென்ன பேரு?

ஜாதகபேரு சரஸ்வதி, வீட்ல கூப்ட்றது பவித்ரா...ஸ்கூல் ரெகார்ட்ஸ்ல ஸ்வேதா – ஸோ கால் மீ வெண்மை.. ஒகே

அம்மா வெள்ளையம்மா.. நாங்க உங்களை கருவண்டுன்னு கூப்பிடுவோம்

ஏன் கருவண்டு..? என் கண்கள் கருவண்டு போல மின்னுகிறதா..?

இல்லை நீ என்னைவிட கருப்பு இல்லயா ?அதான்..

போ.. டா.. மீன்டும் சிணுங்கினாள்

சீ.. பைத்தியம்.. பொன் வண்டுபோல துரு துருன்னு இருக்க இல்லயா அதனால சொன்னேன்.

அப்ப.. ஸ்மார்ட்டுன்னு சொல்ற..?

அதெல்லாம் ஒன்னுமில்ல ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே நம்பிட்றதா - என்றான்

சரி.. சரி.. ரொம்ப ஆச படற.. கூப்டுக்கோ....பர்மிஷன் கிராண்ட்டட்

இந்த பர்மிஷன் மட்டும் தானா பவி...

வண்டி எடுக்கறியா.. கோயிலுக்கு போய்ட்டிருக்கோம்..

சரீ.. அப்ப சுஜீத்ங்க்ற என் பேரை தமிழாக்கம் செஞ்சு சொல்லுங்க புலவி - என்றான்

ம்... சமஸ்க்ருதத்தில் சு – என்றால் நல்ல, மங்களமான, மிகச் சிறந்த- அப்டீன்னு அர்த்தம் ஜீத் என்றால் – வெற்றி என்று அர்த்தம்.. ஸோ உன்னொட பேரு தமிழ்ல
நல்வெற்றின்னு அர்த்தம்- என்றாள்

ஐயையோ.. வெள்ளையம்மா.. என் பேரு நல்லாவேயில்ல வெள்ளையம்மா..- என்றான்

போதும்.. தாங்கல .. கிளம்பலாம்

வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுதது

இளம் வெய்யில், இளங் காற்று.. இயற்கையே அழகுதான்...

இன்னும் நீ சொல்லலை என்றான்

என்ன சொல்லலை?

வண்டி மீண்டும் ஓரம் கட்டப்பட்டது, மீண்டும் ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்

என்ன சொல்லலை

ஐ லவ் யு சுஜீத்ன்னு இன்னும் முழுசா என் கண்ணை பார்த்து சொல்லலை.. சொல்லு இப்ப சொல்லு

இங்கயா..? இந்த ப்ளாட்பார்ம்லயா..!...?

hello... இது ப்ளாட்பார்மா?.. பாரின்காரனுக்கு காண்ட்ராக்ட் விட்டு கண்ணாடி போல மெயின்டெய்ன் பண்றான்.. இந்த ரோட்டோட அழகுக்கே அவவன் வண்டி எடுதிட்டு வரான்.. எவ்ளோ அழகா இருக்கு பாரு .. தூரத்துல தெரியற கடல்.. அடர்த்தியான மரங்கள்.. சூடே இல்லாத சூரியன்..ம்..சொல்லு

அதெல்லாம் இங்க சொல்ல முடியாது.. கோயில்ல வெச்சு சொல்றேன் என்றாள்.

அதுவும் சரிதான்.. நான் இயற்கை சாட்சியா சொல்லுன்னு சொல்றேன்.. நீ தெய்வம் சாட்சியா சொல்றேன்னு சொல்ற... சரி வா..

ஓரம் கட்டி.. ஓரம் கட்டி, அரட்டை அடித்து அரட்டை அடித்து நிறுத்தி நிதானமாகப் போனாலும் காலை 9 மணிக்குள் கோயிலில் இருந்தனர்

நீ கொடுத்து வச்சவன்பா.. தினம் ஒரு கல்யானம்.. தினம் ஒரு பொண்டாட்டி.. நான் பாரு ஒரே ஒரு பொண்டாட்டி.. அதுவும் இன்னும் கல்யானம் கூட ஆகலை.. – என்றான் சுவாமி சன்னதி நோக்கி.

என்ன சுஜீத் இது.. எங்க என்ன விளையாடறதுன்னு இல்லயா.. ஒழுங்கா வேண்டிக்கோ என்றாள்.
ப்ரகாரம் சுற்றி வரும் போது கொஞ்சம் இருட்டாக இருந்த இடத்தில் “ இங்க கொஞ்சம் நில்லு சுஜித், அப்புறம் கொஞ்சம் குனி“ என்றாள்

பவீ... வேண்டாம்.. என்ன இது? அவசரப்படாதே..அம்மா என்ன சொல்லி அனுப்பினாங்க..? கொஞ்சம் பொறுமையா இரு.. கல்யாணம் ஆகட்டும்.. என்றான்.. உதடுகளை கர்சீப்பால் துடைத்து பள பளப்பாக்கிக் கொண்டான்

அடச்சே.. சும்மா இரு சுஜித்.. என்று சொல்லிய படி அவன் கால்களில் விழுந்து வணங்கினாள்.. அவன் காதருகில் ஐ லவ் யு சுஜித்.. ஐ லவ் யு டா செல்லம் என்றாள்.

வணங்கி எழுந்தவளை முன் நுதல் குழல் ஒதுக்கி நெற்றியில் முத்தம் + குங்குமம் இட்டான்.

இன்னைக்குத்தான் இதெல்லாம்.. கல்யாணம் ஆகட்டுமே.. நூறு ரூபா நோட்டை கீழே போட்டா கூட குனிஞ்சு எடுத்து தர மாட்டீங்க - என்றான்.

குனிஞ்சு எடுப்போம்.. ஆனா தர மாட்டோம் என்றாள்.

ஊரெல்லாம் சுற்றிவிட்டு.. அம்மாவும் அப்பாவும் திரும்ப திரும்ப செல்லில் கூப்பிட.. சென்னை நோக்கி விரைந்தது அவனது கேரொ. நீண்ட நெடிய மனப் போராட்டத்துக்குப் பின் வாழ்க்கை பயணத்தை இனிதே துவங்கிய அலுப்பில் அவன் தோளில் சாய்ந்து மௌனமாக கண்மூடியிருந்தாள் பவித்ரா.. அவளுக்கு மனதில் இடம் கொடுத்து.. அவள் தலை சாய்க்க தன் தோள்களைக் கொடுத்து, அமைதியாய் இடக்கையால் கிராப்பை கோதியபடி கேரோவை ஓட்டினான் சுஜீத்.

மெல்லிய புன்னகை அவர்கள் அறியாமல் அவர்களின் இதழ்களில் தவழ்ந்தது..

இதுதான் காதலென்பதா..? இதயம் பொங்கிவிட்டதா..?

--------------------------------------------------------------------------------------------------


Hello.... கதாசிரியை..! என்னதிது...ம்... நடுவில ஒரு அத்யாயம் எழுதவே இல்லயா? வசதியா.. ரொமான்ஸ் ஸீன் மட்டும் அலுக்காம ஆறு பக்கம் எழுதியிருக்கீங்க..? அதெப்படி.. பவித்ராவோட ப்ரச்சனைகள் திடீர்ன்னு தீர்ந்து போச்சு.. அவங்க அப்பாவுக்காகப் பட்ட கடனை எப்டி அடைச்சாங்க? இவளோட லவ் எப்டி வீட்டுக்கு தெரிஞ்சது..? தெரிஞ்சதும் எப்டி சம்மதிச்சாங்க..? இதுக்கு அந்த நட்ராஜ் வில்லத்தனம் ஏதும் பன்னலயா?சுஜீத் வீட்ல எப்டி இதுக்கு சம்மதிச்சாங்க..? இந்த மாதிரி இனிய சுபம் எல்லாம் கதையிலத்தான் நடக்கும்.. இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஒவெர்.. தெரியுமா..

கமெண்ட் போட்ட நாங்க எட்டு பேரும் “ சஸ்பென்ஸ் தாங்கலை... சீக்கிரம்.. சீக்கிரம்.. ஒரு நாள் லீவ் போட்டுட்டாவது கதையை எழுதுங்கன்னு” மன்றாடி கேட்டுகிட்டது வாஸ்த்தவம் தான்.. அதுக்காக நடுவில ஒரு அத்யாயமே எழுதாம.. கதையோட நாட் பிரிக்காம.. இப்டி கடைசி ஸீன் மட்டும் எழுதறது .. அவ்ளோ நல்லால்ல ... நிஜமாவே ரொம்ப ஒவர்ன்னு சொல்றீங்களா..?

மேற்படி கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனும்னு ஆரம்பிச்சா இதே கதையை இன்னொரு அத்யாயம் நீட்டுவேன்... பதில் வேண்டான்னா.. வேற ஒரு புத்தம் புதிய லவ் ஸ்டோரி இருக்கு கைவசம்... அத ஆரம்பிப்பேன்... எது வசதி..?

கொஞ்சம் சென்ட்டி கலந்து நினைவுப் பெட்டகத்தின் நடு அத்யாயம் எழுதட்டா.. ?

இல்ல..ரொமான்ட்டிக்கா...புத்தம் புதிய லவ் ஸ்டோரி எழுதட்டா..?

தீர்மானம் செஞ்சு comment & command pls.