Sunday, August 21, 2005

சிறுகதை - பரிணாம வளர்ச்சி ...!!?

எப்டி ஏறினேன்...!?

யாருக்கு தெரியும்...?

நிக்க முடியுது என்னால...!!?

நானும்தான் நின்னுட்டு இருக்கேன்...?

பேச வேற பேசறோம்...!!?

இந்தக் கூட்டத்துலயும் .. காத்து வருதே அதபாரு.. எதோ போன ஜென்ம புண்யம்தான்..சரி சில்லறையை அனுப்பி டிக்கட் வாங்கு.. செக்கிங் ஏறினா கஷ்ட்டம்.

பக்கத்தில் நின்ற ஒரு சின்ன பெண்ணிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டி“ ரெண்டு ஸ்பென்சர்ஸ்... கொஞ்சம் பாஸ் பண்ணும்மா .. ப்ளீஸ்” என்றாள் பவித்ரா.

அந்த சின்னப் பெண் பவித்ராவின் கண்களைக் கூட சந்திக்கவில்லை, ஜன்னல் வழியாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.. உடல் மொழியாலேயே அளவுக்கு அதிகமாக அலட்சியம் காட்டியது.. இந்த வயதில் இவ்வளவு திமிரா..?அதிர்சியாக இருந்தது.. மிஞ்சிப் போனால் அதற்கு பன்னிரண்டு வயதிற்குள்தான் இருக்கும்.. அவளை விட இவள் நிச்சயம் ஒரு எட்டு அல்லது பத்து வயது பெரியவளாகத்தான் இருப்பாள்.. இவளது வயதிற்கு கூட மதிப்பில்லை.. இவளிடம் பணத்தை வாங்கி தனக்கு பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் தரக் கூடிய சிறிய உதவியைக் கூட செய்ய மனமில்லை.. அப்படி செய்யாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை என்பதையும் திடகாத்திரமாய் நின்று ..முகபாவத்திலேயே உணர்த்தியது.

தலைமுறை இடைவெளி....!!!? எங்கே போகிறது இளைய சமுதாயம்..? இவளது வயதில் தான் எப்படி இருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தாள்.. எழுந்து ஓடிப்போய் பயணச் சீட்டு வாங்கித் தந்தது... குழந்தையுடன் வருபவர்களுக்காக எழுந்து இடம் கொடுத்து.. பயணம் முழுதும் நின்றுக் கொண்டு வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

பாத்தியா சரண்யா...?

விடு... ஜென்ட்ஸ் பக்கம் கொடுத்தனுப்பு.

ஏம்ப்பா.. எந்திரிங்கப்பா... லேடீஸ் சீட் காலி பண்ணுங்கப்பா- குரல் கொடுத்தது இந்த நிறுத்தத்தில் ஏறிய – வட்டக் கொண்டை போட்ட ஒரு பெரியம்மா. .. இவ்வளவு நகைகளை போட்டுக் கொண்டு எந்த தைரியத்தில் இந்த சென்னை மா நகரப் பேருந்தில் ஏறுகிறார்கள்?

அந்த கடைசி நீள இருக்கை முழுதும் அடைத்தார் போல உட்கார்ந்திருந்த ஆண்கள் ஒருவர் கூட அசையவில்லை. அவர்களால் நிற்க முடியும்.. ஊனமேதும் இல்லை.

“ ஐய்ய.. சொல்றமில்ல..? எந்திரிங்க.. உக்காந்துனே இருக்க..? பொம்பளங்க உக்கார எடம் உடுங்கப்பா.."

ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த இருவரும் தூங்குவது போலவும், வாந்தி வருவது போலவும் நடித்தனர்... அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவர்களின் உயிர் தோழர்கள் இருவரும் அவர்களின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக காட்டிக் கொண்டனர். நடுவில் உட்கார்ந்திருந்த இருவரும் யாருடைய கண்களையும் சந்திக்காமல், நக்கல் சிரிப்புடன் மையமாகப் பார்த்தனர்.

"எத்னி தபா சொல்றது...? எந்திரிங்கடா."

"இன்னாது....? டா வா? " – நடுவில் உட்கார்ந்திருந்தவன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். ஆனால் அதற்காக எழுந்துக் கொண்டான் இல்லை.

"என் புள்ள வயசுதான் இருக்கும் உங்க எல்லாத்துக்கும்.. எந்திரிங்கப்பா.. லேடீஸ் நிக்க முடியாம கஸ்ட பட்றமில்ல..?"

"உன்ன மாறித்தான் நாங்களும்.. டிக்கட் வாங்கி இருக்கோம்."

" நீ வாங்கு.. இல்ல வாங்காதே.. அத்த பத்தி இன்னா..? இப்ப எடத்த காலி பண்ணு.. இது லேடீஸ் சீட்டு."

ஒவ்வொருவவும் வெவ்வேறு திசைகளைப் பார்த்தார்கள்.

"ஆரம்பிச்சிட்டான் சரண்யா.. பின்னாடி தடவறான்.. வாந்தி வரமாறி இருக்குப்பா"

"இப்டி என் பக்கம் வந்துரு பவி"

எந்தவித மாற்றமும் இல்லை.. அவன் உரசுவதும்.. மேலே விழுவதும் அதிகமாகியது.. சரண்யாவயும் சேர்த்து உரசினான்.. திரும்பி பார்த்தார்கள்.. அவன் ஜன்னல் வழி மும்முரமாகப் பார்ப்பதாய் நடித்தான்.

"சனியன்.. எருமைமாடே தேவலாம் " - சத்தமாக சொல்ல நினைத்து.. மொள்ளமாக சொன்னாள்.

அந்த வட்ட கொண்டையம்மா.. இருக்கைக்காக – சுதந்திரப் போராட்டத்தை விட ஒரு படி அதிகமாக போராடுவது தர்மப்படி நியாயம். இந்த எருமைமாடுகிட்ட இருந்து தப்பிப்பதற்காகவே லேடீஸ் சீட் காலியாக வேண்டும். இதெற்கெல்லாம் காந்திஜீ வரமாட்டார்.. ஆனால் வந்தால் தேவலை.

அந்த கொண்டை அம்மையார் மட்டும் தனியாகப் போராடுவதும்.. தானும் சரண்யாவும் ஏதும் பேசாமல் வருவதும் அன்னியாயம் என மனசாட்சி எடுத்துரைத்தது.

மிக நீண்ட மனப் போராட்டத்துக்குப் பின், ஒட்டு மொத்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு.. அந்த ஆண்களை (!????) பார்த்து “ நீங்க எல்லாரும் லேடீஸா.. இல்ல ஹான்டிகேப்டா..?” என்றாள் பவித்ரா. கொஞ்சமே கொஞ்சூண்டு அசைவு தெரிந்தது அனைவரிடமும். ஆனால் அதற்காக யாரும் எழுந்துவிடவில்லை.. இவளைப் பார்த்துக் கொண்டிருந்த சாதாரணப் பார்வையை நீக்கி.. வெறுப்பான கடித்துக் குதறும் பார்வையாக மாற்றிக் கொண்டார்கள்.

திடீரென ப்ரேக்.. கை வழுக்கி அந்த தடியன்கள் மேலேயே விழப் போனாள் பவித்ரா.

"மயக்கமா...? கலக்கமா..? "– பாடினான் ஒருவன்

"ஆக்ட் உட்ராங்கப்பா..."-இன்னொருவன்.

சே... என்ன மனுஷங்க இவங்க...? மனிதாபிமானம்.. தார்மீக நியாயங்கள் எங்கே போயின? வீக்கர் செக்ஸ் எக்ஸ்ப்ளாய்டேஷன் அதிகமாகிவிட்டதா..? அறுபது வயதிலும்... நாலைந்து லேடீஸ் சீட் காலியாக இருந்தாலும்..” வேண்டாம்... திடீர்னு லேடீஸ் ஏறிட்டா.. எழுந்துக்கனும்.. அதுக்கு நின்னுகிட்டே வரலாம்..” என்று சொல்லிய அப்பாவும். கர்பிணியும், கைக்குழந்தைகாரியும் ஏறிய போது.. சட்டென எழுந்து தங்கள் இருக்கைகளை அவர்களுக்கு தந்த சித்தப்பாக்களும்... “ லேடீஸ் சீட்டுக்கு ஆளுங்க ஏற்ற வரைக்கும் உக்காருவோம்.. வந்ததும் எந்திரிச்சுருவோம்” என்று பெண்கள் ஏறியதும் எழுந்துக் கொண்ட அண்ணன்களும் நினைவுக்கு வந்தனர்.

“ எங்கப்பா...? அந்த கண்டிக்டரு..? ஐய்ய.. இத்தக் கேளு.. லேடீஸ் சீட் எந்திரிக்க சொல்லு.. உங்க அம்மா.. தங்கச்சின்னா இப்படித்தான் இருப்பீங்களாடா? “ – கொண்டையம்மாத்தான் .. விடாமல் போராடினாள்.

பெண்கள் படிப்பறிவு பெறாமல் இருப்பதே ஓரளவு நல்லதோ..? படித்துவிட்டால்.. தேவை இல்லாமல் நாகரீகம், பண்பாடு, நல்ல பழக்க வழக்கம் எனப் பார்த்துப் பார்த்து, கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளைக் கூட கேட்க இயலாமல் கோழையாக்கிவிடுகிறது அந்தப் படிப்பு.

வட்ட கொண்டையம்மா நிச்சயம் படித்திருக்க மாட்டாள்... அதனால்தான் கேள்விகளை தைரியமாகக் கேட்டு, தனக்கான உரிமைக்காகப் போராடுகிறாள். கண்டக்டர் பேருந்தின் முன்புறமிருந்து நீந்தி கரைசேர்ந்து தனது இருக்கைக்கு பத்திரமாக வந்தார்.. அதில் அமர்ந்திருந்த கர்பிணிப்பெண்ணை தொடர்ந்து அமருமாரு சைகை காட்டிவிட்டு, கொண்டையம்மாவைப் பார்த்து “ இன்னாமா..?” என்றார்.

“ லேடீஸ் சீட்டு... காலி பண்ணி உடு”

“எல்லாம் எந்திரிங்கப்பா.. லேடீஸ் சீட் காலி பண்ணி உடுங்கப்பா”

கடமை முடிந்ததென.. எச்சில் தொட்டு டிக்கட் கிழித்தார்.

கண்டக்டரின் இந்த கடுமையான ஆணையைக் கேட்டு பயந்து அலறி, அடித்து பிடித்து.. தட்டு தடுமாறி.. வேகமாய் எழுந்து நின்று- அவர்களில் யாரும் அந்தப் பெண்கள் இருக்கையை காலி செய்துவிடவில்லை. .. பதிலாக.. கூடுதல் நக்கல் புன்னகையுடன்.. கொண்டையம்மா.. பவித்ரா.. மற்றும் சரண்யா, இன்ன பிற நிற்கும் பெண்களைப் பார்த்து ரசித்து சிரித்தனர்.

கடவுள் என ஒருவர் இருக்கிறார்..அவர் அவ்வப்போது மனித உருவிலும் வருவார் என நமது இந்திய தாய் திரு நாட்டின் முன்னோர் சொல்லி வைத்தது - சத்தியமான தீர்க தரிசனம்.

வீறு கொண்டு எழுந்தார் ஒருவர்.. அவரது தோற்றம் முதலில் கருத்தை நிறைத்தது.. ஒன்று அவர் மப்டி போலீஸாக இருக்க வேண்டும்.. அல்லாது எக்ஸ் மில்ட்ரியாக இருக்க வேண்டும். அகன்ற தோள்களும்.. திடகாத்திரமான கை கால்களும் பேசாமல் பேசின.

"டேய்.. இப்ப எந்திரிக்க போறீங்களா..? இல்லயா..? அப்போ முச்சூடும் பாத்துட்டிருக்கேன்.. சத்தாய்க்ரீங்களா..? எந்திரிங்கடா..” - என்றார். எருமை மாடுகள் கொஞ்சம் அசைந்தன.. அப்படியும்.. எண்ணி மூன்று பேர் மட்டுமே எழுந்தனர்.

முதலாவதாக இந்த ஆவேசப் போராட்டத்தில் வீரமுடன் தலைமை தாங்கிய தானைத் தலைவி..தருமமிகு சென்னைத் தலைமகள்... தன்னிகரற்ற வட்ட கொண்டையம்மா,

அடுத்ததாக - திடீர் மரணத்துக்கும் துணிந்து .. லேடீஸா ..? என்று நறுக்கென தீனக் குரலில் கேள்வி கேட்ட துணைத்தலைவி பவித்ரா..

மற்றும் வெறுமனே நின்று கொண்டிருந்த சரண்யா ஆகிய மூவருக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனவே.. மக்கா...

படிப்பறிவு -தேவையில்லாத மனத் தடங்கல்களைத் தருகிறது.. போராடும் குணத்தை குறைத்து பெண்களை கோழையாக்குகிறது.. ஆனால் படிப்பறிவில்லாத, போன தலைமுறை பெண்.. எப்படி விடாமல் போராடி.. தனது உரிமயை பெறுகிறாள் என்பதே இச்சிறுகதையின் (!!!!???) வாயிலாக நான் சொல்ல வரும் நீதி என நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து... முதல் பரிசையும் இரண்டாவது பரிசையும் ஒரு சேர வழங்க கிளம்பினா.. சாரீ மாக்கான்ஸ்.. மன்னிச்சுடுங்க.. நீங்க இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவே இல்ல.. இன்னும் மேஜர் சுந்தர்ராஜனாவே வாழ்ந்துட்டு இருக்கீங்க..போன தலை முறை ஆளாவே இருக்கீங்களேய்யா...அப்பிராணிகளா....! உங்களை என்னத்தை சொல்ல?

இக்கால இளைய தலைமுறை பழக்க வழக்கங்களுக்கும், வளர்ச்சியடைந்து விட்ட கலாசார (!!!!), பண்பாட்டு (!?) மறுமலர்ச்சி மாறுதல்களுக்கும் நீங்கள் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்பதை நான் சொல்லித்தான் ஆகணும். அப்டேட் ஆகணும்னா.. மேற்கொண்டு படியுங்க....அப்ப புரியும்...

வட்ட கொண்டையம்மா வெற்றிப் பெருமிதத்துடன் ஜன்னலோரமாய் அமர்ந்தாள்... ஆட்சேபிக்க முடியாத தேர்வு.. போராட்டத் தலைவி வேணுங்றத எடுத்துக்கிட்டு மிச்ச மீதியை .. மத்தவங்களுக்கு தரலாம்.. தப்பில்லை... அடுத்ததாக.. எங்கிருந்தோ திடீரென நீந்தி வந்திருந்த மற்றொரு குண்டம்மா உட்கார்ந்து விட்டாள்...அதை பார்த்து அதிர்ந்த பவித்ரா.. மீதமிருந்த கொஞ்சமே கொஞ்சுண்டு இடத்தில் உட்காரலாமா.. உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவன் எது வேணும்னாலும் செய்வானே.. அதுக்கு பேசாம சரண்யாவுக்கு ஆறுதலா நின்னுட்டே வரலாமா என பலவிதமாக யோசித்து, சிறிதே அசையும் போது..

“ அட இரும்மா.. சுரேசு... சுரேசு.. இங்க உக்காரு.. பக்கத்துல ஆம்பளைங்கதான் உக்காந்திருக்காங்க “ என்று பாசத்துடன் அழைத்தாள் வட்ட கொண்டையம்மா.

அந்த சுரேசு எனப்பட்டவன் வேறு யாருமில்லை... தானை தலைவியாக இல்லாவிடாலும்.. ஓரளவு துணைத் தலைவியாக போராடிய பவித்ராவையும், பவித்ராவுக்கு பக்க பலமாக, தளரா உறு துணையாக... வெறுமனே நின்ற சரண்யாவையும் பின்பக்கம் உரசிக் கொண்டிருந்த அதே எருமைமாடுதான்.

உட்கார்ந்திருந்த எருமைகள் எழுந்து நின்றன. உரசிக் கொண்டிருந்த எருமை உட்கார்ந்துக் கொண்டது.

எங்கே செல்லும் இந்தப் பாதை.... யாரோ.. யாரோ.. அறிவாரோ..?

சுபம்.

26 comments:

குழலி / Kuzhali said...

தினம் தினம் சென்னை பேருந்தில் நடந்து கொண்டிருக்கும் அவல காட்சிகளை கண்முன் நிறுத்தியது,

சொல்வதற்கு கடினமான விடயம் தான்
உழைப்பு வேலையெல்லாம் பார்க்கிறதில் பெரும்பாலானோர் நடுத்தரவயதினர், அதற்காக இளைஞர்கள் இல்லையென கூறவில்லை, பள்ளிக்கூட பசங்களிலிருந்து எல்லா வயதிலும் உண்டு. சில பெரிசுகளோடும்,சிறிசுகளோடும் வீட்டு பெண்கள் கூட வரும்போது அந்த பெரிசுகளும் சிறிசுகளும் முற்போக்கு வாதிகள் தான்

இதற்கெல்லாம் கையோடு ஆந்த்ராக்ஸ் ஊசியெடுத்துக்கொண்டு போனால் தான் சரியாகும்.

குழலி / Kuzhali said...

சொல்ல மறந்திவிட்டேனே கதையும் நடையும் மிக அருமை

பத்ம ப்ரியா said...

Hi kuzhali,
Thanks....Thanks a lot for ur comments.They r encouraging me.And i had read ur story.That is very nice.

Sud Gopal said...

காட்சிகளை விஷூவலாய்க் கண் முன்னே நிறுத்தும் அட்டகாசமான நடை.

"ஆந்த்ராக்ஸ் ஊசியெடுத்துக்கொண்டு"
:-)

பரிசுக்கு வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அட இது சிறுகதையா இல்லை நிஜ சம்மபவமா..?

வித்தியாசமான நடை இது பாராட்டுக்கள்..

//>>பெண்கள் படிப்பறிவு பெறாமல் >>இருப்பதே ஓரளவு நல்லதோ..? >>படித்துவிட்டால்.. தேவை >>இல்லாமல் நாகரீகம், பண்பாடு, >>நல்ல பழக்க வழக்கம் எனப் >>பார்த்துப் பார்த்து, கேட்க வேண்டிய >>நியாயமான கேள்விகளைக் கூட >>கேட்க இயலாமல் >>கோழையாக்கிவிடுகிறது அந்தப் >>படிப்பு.//
படித்துவிட்டாலே இப்படித்தான் திமிர் வந்துவிடும் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் ஒன்று தெரியுமா படிப்புதான் பெண்களுக்கு உண்மையான வரதட்சணை சாரி வாழ்க்கைதட்சணை

//>>எந்தவித மாற்றமும் இல்லை.. >>அவன் உரசுவதும்.. மேலே >>விழுவதும் அதிகமாகியது.. >>சரண்யாவயும் சேர்த்து உரசினான்.. >>திரும்பி பார்த்தார்கள்.. அவன் >>ஜன்னல் வழி மும்முரமாகப் >>பார்ப்பதாய் நடித்தான்.//

ஊசிகள் இடம்கொடுப்பதால்தானே நூல் நுழையமுடிகிறது

அந்தக்கூட்டத்தில் நாகரீகம் பார்க்காமல் செருப்படி கொடுத்திட வேண்டும் அவன் எவ்வளவு வயதாக இருந்தாலும்; சரி...

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

பத்ம ப்ரியா said...

Hi sudarsan Gopal & Nilavu Nanban..my heartiest thanks for your comments. It is encouraging me.
M. Padmapriya

முகமூடி said...

அருமை (மேலும் கருத்துக்கள் முடிவுக்கு அப்புறம்).. பரிசுக்கு வாழ்த்துக்கள் சிறகுகள்.

Ramya Nageswaran said...

Very nicely written, Padmapriya. You have captured all the aspects, including the subtle ones, in a nice manner.

All the best.

அருள் குமார் said...

தன் பேச்சை கேட்க்க வரும் தொண்டர்களையே திட்டும் பெரியார் அவர்களைப்போல், உங்கள் கதையை படிக்கும் வாசகர்களையே திட்டும் தைரியம் உங்களுக்கு மட்டுமே பத்மப்ரியா. எனினும், கதை அருமை. மாலன் அவர்கள் இக்கதையை தேர்வு செய்ய பரிந்துரைக்கிறேன்!

பத்ம ப்ரியா said...

ஹாய் முகமூடி, ஹாய் ரம்யா, ஹாய் அருள்...

நன்றி.. நன்றி.. நன்றி.. உங்கள் கருத்துக்களும், பாராட்டுக்களும் என்னை மகிழ்விக்கின்றன.

அருள்..

எனது கதையை படிக்கும் வாசகர்களை நான் தானே நல்வழி படுத்தனும்? அந்த தார்மீகக் கடமையை நான் மீற முடியுமா,, அதனால தான்.. சில சமயம் கண்டிச்சு வளர்க்க வேண்டியதா போயிடுது..

மீண்டும் நன்றி கூறி விடை பெறுவது - ப்ரியா..

பரணீ said...

எப்பவும் போல இதுவும் நல்ல நடையில் அமைந்த கதை.
பரிசு பெற வாழ்த்துக்கள்.

NambikkaiRAMA said...

இப்போதுதான் இக்கதையை படிச்சேன். திரைக்காட்சி போன்று அருமையாக வடித்துள்ளீர். நானும் எனது பழைய பதிவில் பஸ் பயண அனுபவங்களை பகிர்ந்துள்ளேன். நேரம் கிடைப்பின் சென்று பாருங்கள். என் வலைப்பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி.

ஜெகதீஸ்வரன் said...

நீங்க சொன்ன அந்த மாதிரி ஆட்களுக்கு பரிணாம வளர்ச்சியில் உரசுவதற்கு இன்னும் இரண்டு கைகள் முளைக்குமே தவிர திருந்த மாட்டார்கள் :-(

அருமையான பதிவு !!!

வீ. எம் said...

உங்கள் சிறுகதைகள் அனைத்தும் படித்து மகிழ்ந்து வருவதாலும், ஏற்கனவே சொல்லியதுபோல் உங்களின் தேடல் உள்ளிட்ட கதைகள் தான் எனக்குள் கதை எழுதும் ஆர்வத்தை அதிகமாக்கியது என்ற காரணத்தாலும்

உங்களுக்கு "சிறுகதை செல்வி" சிறகுகள் பத்மபிரியா என்ற பட்டத்தை வழங்குகிறேன்!! :)

வீ எம்

பத்ம ப்ரியா said...

ஹாய் பரணீ, ஹாய் பாசிடிவ் ராமா, ஹாய் ஜெகதீஸ்வரன் & ஹாய் வீ. எம்...

நன்றி.. நன்றி

உங்களது விமர்சனங்கள் மகிழ்ச்சியளிக்கின்றன..

( நல்ல நோக்கத்திற்காகத்தான் கதைன்னு ஒன்னு எழுதினேன்.. ஆனா அது எதிர்மறையான விளைவுகளை எற்படுத்தும்னு தெரிஞ்சிருந்தா.. அதை எழுதி இருக்க மாட்டேன்....புரியலயா..? என்னோட தேடல் கதைதான் வீ.எம் அவர்கள் சிறு கதை(!?) எழுத தூண்டியதுன்னு தெரிஞ்சதும் எற்பட்ட அதிர்சியில வந்த வாக்கியங்கள் அவை..)

பத்ம ப்ரியா said...

ஹாய் பாசிடிவ் ராமா,

சென்னை நகர பஸ் பயண அனுபவம் என்ற ஒரே விஷயத்தைதான் ...

நான் சிறுகதை(!..?) வடிவிலும்
நீங்கள் பயணக் கட்டுரை(!..?) வடிவிலும் வடித்துள்ளோம்.. ஆனால் நிகழ்வுகளின் தாக்கம் இரண்டிலும் ஒரே மாதிரி வெளிபட்டிருப்பதுதான்... அறிவு ஜீவிகள் (!!!!!???) ஒரே மாதிரி சிந்திக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது.. அல்லவா?

" சிறுகதை செல்வி " சிறகுகள் பத்ம ப்ரியா - என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்த திரு வீ.எம் அவர்களுக்கும் என் நன்றியை வழங்கி விடைபெறும்..

- "சிறுகதை செல்வி "சிறகுகள் பத்ம ப்ரியா .

வீ. எம் said...

///நல்ல நோக்கத்திற்காகத்தான் கதைன்னு ஒன்னு எழுதினேன்.. ஆனா அது எதிர்மறையான விளைவுகளை எற்படுத்தும்னு தெரிஞ்சிருந்தா.. அதை எழுதி இருக்க மாட்டேன்....புரியலயா..? என்னோட தேடல் கதைதான் வீ.எம் அவர்கள் சிறு கதை(!?) எழுத தூண்டியதுன்னு தெரிஞ்சதும் எற்பட்ட அதிர்சியில வந்த வாக்கியங்கள் அவை //


???????????????????????????????????

Ramesh said...

நல்ல கதை மற்றும் நடை. நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.

ஒரு நேர்முகத்தேர்வுக்கு சென்று கொண்டிருக்கும்போது இந்த கதையில் வருவது போல ஒரு வட்டக்கொண்டையம்மா வந்து எழுப்பி விட்டு என் பருத்திச் சட்டை கூட்ட நெரிசலில் சின்னாபின்னமானது நினைவுக்கு வருகிறது. இத்தனைக்கும் அந்தம்மா 5 நிமிடத்தில் இறங்கிவிட்டார். சரி, அவரவர் பிரச்சினை அவரவருக்கு.

>>அந்தக்கூட்டத்தில் நாகரீகம் >>பார்க்காமல் செருப்படி கொடுத்திட >>வேண்டும் அவன் எவ்வளவு >>வயதாக இருந்தாலும்; சரி...

ரசிகவ், நீங்க சொல்ற மாதிரி அடிக்கக்கூடிய தைரியம் எத்தனை பேருக்கு வரும். சில எருமைகளுக்கு ரோஷம் வேறு வரும் அதனால் சில நேரங்களில் பின் விளைவுகளும் ஏற்படும். அதை சமாளிக்க எத்தனை பேரால் முடியும்.

மக்கள்தொகைப்பெருக்கமும் சுயநலமும்தான் இம்மாதிரியான வக்கிர உரசல்களுக்கும், சில அசிங்கமான செய்கைகளுக்கும் காரணம். தொலைநோக்கில் பார்த்தால் பள்ளியளவில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது சிறந்தது. பள்ளிக்கே போகத எருமைகளை என்ன செய்வது? சாட்டை கொண்டு விளாச வேண்டியதுதான் அதாவது கடுமையான சட்டங்கள்.

ரவுத்திரம் பழகுவது குறைந்தபட்ச செயல்திட்டம். எதிர்ப்பைக் தெரிவிக்குமளவிற்காவது தைரியம் வேண்டும். இளிச்சவாய் எருமையாக இருந்தால் அடிக்கவும் செய்யலாம்.

பத்ம ப்ரியா said...

ஹாய் ரமேஷ்..

தங்களது கருத்துப் பதிவிற்கு நன்றி.. ஆம்.. நீங்கள் சொல்வதைப்போல்... பேருந்தில் தவறாக நடப்பவர்களில் சிலர் சண்டையும் போடுவார்கள்.. நமது நிறுத்தத்தில் நம்முடனே இறங்கி, நம் பின்னாடி மிரட்டிய படியே நடந்து வருவார்கள்.. ஒன்று தள்ளி நிற்க வேண்டும், முடியாத பட்சத்தில் இறங்கி நடந்து போய்விடுவது நல்லது..

நன்றி ரமேஷ்

வீ. எம் said...

சிறுகதை செல்வி,
பரிணாம வளர்ச்சியோடு வளர்ச்சியின்றி இருக்கிறதே உங்கள் வலைப்பூ! ஏன்ன காரணம்?

பத்ம ப்ரியா said...

பட்டம் வழங்கிய பெருந்தகையீர்...
(அதாவது திரு. வீ. எம் அவர்களே என்று அர்த்தம்)

தார்மீகக் கடமைகளும், சமுதாயப் பொறுப்புகளும் மிக்க ஒரு நாவலாசிரியைக்கு நேரமின்மை ப்ரச்சனை என்பது இச் சமுதாயம் உணர்ந்த உண்மைகளுள் ஒன்று.. மேலும் நிலாவை திடுக்கிடும் திருப்பங்களுடன் எழுதி கொண்டிருப்பதால்..காலதாமதமாகிறது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

(டைம் இல்ல.. நிலாவ நிறைய டர்னிங் பாய்ன்ட்ஸ் வச்சு எழுதிட்டிருக்கேன்னு சொல்லவந்தேன் வீ.எம்.

வீ. எம் said...

தகவலுக்கு நன்றி சி.செ (உங்களுக்கு புரியும்)!

தார்மீக கடமை, சமுதாய பொறுப்புக்கிடையில் , நேரமில்லாத போதும் சில மணித்துளிகள் எடுத்து பதில் கொடுத்தமைக்கு நன்றி :)

நிலாவை தொடர முடியாவண்ணம், எங்கே அமாவாசை தடுத்துவிட்டதோ என நினைத்தேன்.. :)
சீக்கிரம் திரும்பி வாருங்கள்.. (திருப்பங்களுடன் வாருங்கள்)..


என்னோட தேடல் கதைதான் வீ.எம் அவர்கள் சிறு கதை(!?) எழுத தூண்டியதுன்னு தெரிஞ்சதும் எற்பட்ட அதிர்சியில வந்த வாக்கியங்கள் அவை //
வீ எம்: >> ???????????????????????????????????


இதற்கு பதில் சொல்லவில்லையே!! , நேரமின்மை காரணமா??

வீ. எம் said...

சி செ சி ப,
ஏன் உங்க கடைசி கமென்ட் எடுத்துட்டீங்க??

பத்ம ப்ரியா said...

பெருந்தகையீர் (வீ. எம் தான்)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்-
அப்டீன்னு அன்னிக்கே சுப்ரமணி சொலிட்டாரு.. அப்டி சொல்லிட்டு போனதும் இப்ப வாஸ்தவமாயிடுச்சு... ஆனா

நல்லதொரு பட்டம் வழங்கிய
நன்னெறியாளரை (வீ. எம் தான்!!!!!!???)
நன்றி மறந்து நக்கலடிப்பது
நன்றன்று என மனசாட்சி
நவின்றதால் அந்த 24வது கருத்து பதிவை
நானே நீக்கிவிட்டேன்
(5 ந, 1 நா, 1 நீ - எதுகை மோனை)

இப்படிக்கு நன்றி மறவா
சி.செ.சி. ப

N Suresh said...

Hi Priya,

Many thanks for your kind email sent to my blog. Look forward to see your comments.

Hope you have purchased my book " En iniya kavidhaigale.. ".

For your Information, my other four books are under printing.

Very happy to share with you that the first book sale is extremely good which forced me write more and more. I sincerely feel the reason for this success is that my readers are not highly qualified as it is not meant for those who are highly literate. Those who can read tamil can understand my commmunication/FEELINGS and that drives them to be comfirtable with my writings.

Wish you all the best.

I read most of your postings in your blog. I reserve my comments and wish yo all the best.

Sincerely yours
N Suresh

சூர்யன் பக்கம் said...

Hi,

Ithu Oru Sappa Kathai.