Thursday, August 18, 2005

நிலா - 5


நானும் வரட்டுமா?

வேண்டாம்... பேஷன்ட்டுன்னு சொல்லி உள்ள பிடிச்சு வச்சுருவாங்க

அப்படியெல்லாம் இல்ல.. புது டாக்டர்னு நினைச்சு எல்லாரும் விஷ் பண்ணுவாங்க

நினைப்புத்தான்..... நீ எதுக்கு அங்க?

அவங்களுக்கு அங்க என்ன ட்ரீட்மெண்ட் தராங்கன்னு நான் தெரிஞுக்கணும்

தெரிஞ்சு....? தெரிஞ்சு என்ன பண்ண போற?

இந்த ட்ரீட்மெண்ட் சரியில்லன்னா... வேற ட்ரீட்மெண்ட்டுக்கு மாத்தலாம்னு பாக்கறேன்

இதோடா... இந்தம்மா டாக்டர் ருத்ரனோட சிஷ்யை ... வந்துட்டாங்க... ட்ரீட்மெண்ட்பன்ன

இல்ல சார்... நானும் வரேன் .. ப்ளீஸ்

இங்க பாரு நிலா...பூனா, ரிஷிகேஷ், மதுரா எல்லா இடத்துக்கும் அழைச்சுட்டு போயிட்டு வந்துட்டேன்.. அப்பப்போ ஒரு வாரம் லீவ் போட்டேனே .. எதுக்கு? இவளை அழைச்சுட்டு போய் ஒவ்வொரு வைத்தியமா பார்க்கத்தான்

திருவண்ணாமலை போனீங்களா?

இல்ல

சரி ..நான் இன்னைக்கு கீழ்பாக்கம் வரேன்.. அவங்க என்ன ட்ரீட்மென்ட் தராங்கன்னு பார்த்துட்டு அப்புறம் டிசைட் பண்ணலாம் .. ஓ.கே..?

என்னமோ பண்ணு

கிழ்பாக்கம் மனனல மருத்துவமனை.. கிண்டல் கேலிகளில் தவறமல் இடம் பெறும் அதே கீழ்ப்பாக்கம் மென்டல் ஆஸ்பிடல்... கார் உள்ளே நுழையும் போதே எதோ சொல்ல முடியாத சோகம் நெஞ்சினை தழுவியது.. பின் சீட்டிலிருந்து இரங்கி நின்றதும் தன்னை சுற்றி கவனித்தாள்.. சினிமாவில் பார்த்து பார்த்துப் பழக்கப்பட்ட காட்சிகள் இல்லை..மிக மிக மெல்லிதான நடவடிக்கைகளிலேயே வித்யாசம் தெரிந்து நோயாளிகளை அடையாளம் காண முடிந்தது...வேறு எவற்றில் இல்லையென்றாலும் கண்கள் சொல்லின அவர்களின் மன நிலையை பற்றி. கணவனை அரவணைத்தபடி வரும் மனைவி, மனைவியை கவனத்துடன் அழைத்துவரும் கணவன், வளர்ந்த வாளிப்பான தங்கையை பரிதவிப்புடன் அழைத்துவரும் அண்ணன்.. நோய் குணமாகிவிட்டாலும் இயல்பு நிலைக்கு வராமல் நிலைகுத்திய கண்களுடன் சுவற்றை வெறிக்கும் இளம் பெண்..கூட நிற்பது அவளது கணவனாக இருக்கலாம்..- இவர்களைப் பார்த்த பொழுதில்.. மனித உறவுகள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை உணர்ந்தாள்..மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதும் புரிந்தது.. இதை எல்லாம் மீறி.. அந்த நோயாளிகளை காணும் பொழுதில் இனம் புரியாத சோகத்தை
உணர்ந்தாள்..

ஏன் இப்படி ஆயிடறாங்க? சந்தோஷமா இருக்கலாம்.. அதை விட்டுட்டு மனசிதைவுக்கு ஆளாகி.. கூட இருப்பவங்களுக்கும் கஷ்ட்டத்தை தராங்க..

அப்படி சொல்லாத நிலா.. அவங்க சுய நினைவில இருந்தா கஷ்ட்டம் தருவாங்களா? தன்னிலை இழந்து சூழ் நிலை மறக்கும் போதுதான் அவங்க செய்யறது அவங்களுக்கே தெரியாது.. சரி.. நீ இங்கயே நில்லு நான் போயி பைல் நம்பர் போட்டுட்டு வரேன்

நானும் வரேனே...

சரி.. வா

வரிசயில் நின்று பைல் நம்பெர் பெற்றார்கள்

எதுக்கு இந்த பைல் நம்பர்?

இந்த பைல் நம்பெர் வச்சுத்தான் சுமதியோட கேஸ் பைல் எடுப்பாங்க

எடுத்து..?

எடுத்ததும் என்னை கூப்பிடுவாங்க.. கூப்பிட்டு இப்ப நிலைமையை கேப்பாங்க.. எப்பவும் போலத்தான்னு நான் சொன்னா அதே டேப்ளட்ஸ் தருவாங்க.. இல்ல.. பிகேவியர் மாறுது.. விகரஸா ஆயிடறா.. கன்ட்ரோல் பன்ன முடியல்லன்னு நான் சொன்னா..அப்ப சுமதியை நேர்ல அழைச்சுட்டு வர சொல்லுவாங்க..அவளை அழைச்சுட்டு வந்தா அப்சர்வ் பண்ணிட்டு .. வேற மருந்து மாத்திரை தருவாங்க.. இல்லைன்ன அட்மிட் பண்ண சொல்லுவாங்க

இது தான் நீங்க உங்க வைஃபுக்கு தர ட்ரீட்மெண்ட்டா?

ஆமா.. ஏன் கேக்கற?

கொள்ள கொள்ளயா எவ்ளோ சம்பாதிக்கறீங்க? இப்ப கொஞ்சம் முன்னாடி காருக்கு பெட்ரோலே ஐனூறு ரூபாய்க்கு போட்டீங்க.. ஆனா உங்க வைஃபுக்கு மட்டும் கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல அவுட் பேஷன்ட் க்யூல நின்னு.. கலர் கலரா கவர்ன்மெண்ட் மாத்திரை வாங்கிட்டு போய் அவங்க க்யூர் ஆயிடாம கவனமா பாத்துக்கறீங்க? ஏன் சார் இப்படி? ஏன் இப்படி சிக்கனம் பன்றீங்க?

பேசி முடிச்சுட்டியா..? நான் பேசட்டா?

எதாவது சப்பைகட்டு கட்டுவீங்க.. சொல்லுங்க அதையும் கேட்டுக்கறேன்..

புரியாம பேசற நிலா நீ.. உனக்கு ஒண்ணு தெரியுமா..? இங்க தர ட்ரீட்மெண்ட் போல வெளியில எங்கயும் தரதில்ல. வெளியில கிடைக்காத மாத்திரைங்க இங்கதான் கிடைக்கும்.. வெளியில வைத்தியம் பாக்கிற சைக்கியாட்ரிஸ்ட்.. தனக்கு வேண்டபட்டவங்க.. நிஜமாவே குணமாகனும்னு நினைக்கற பேஷன்ட்டுகளுக்கு ரெகமண்ட் பண்றது இந்த ஆஸ்பிட்டலத்தான்.. வெளியில மாத்திரைங்களை நம்பி வாங்க முடியல.. அத்தனையும் டூப்ளிகேட்.. டெல்லி.. பூனா.. மதுரா எல்லாம் சுத்திட்டு கடைசீல இங்க வந்து சேர்ந்துதான் அவ கொஞ்சம் இம்ப்ரூவ் ஆனா.. இதே ஆஸ்பிட்டல்ல ஆறு மாசம் அட்மிட் ஆகி இருந்தா.. இப்ப நல்ல சேஞ்சஸ் தெரியுது.. பணம் ஒரு ப்ரச்சனையே இல்ல நிலா.. நான் சம்பாதிக்கறது பெரிய விஷயமில்ல.. அவ அப்பா அம்மா சேர்த்து வச்சதே நாலு தலமுறைக்கு காணும்

ஆனாலும் முழுசும் குணமாகலயே..?

அது அந்த ஆண்டவன் கருணைதான்.. அவன் மனசு வச்சாத்தான் நடக்கும்

அந்த நம்பிக்கை இருக்குல்ல..? அப்ப சுமதியையும்.. சாரீ .. உங்க வைஃப்பையும் அழைச்சுகிட்டு கிளம்புங்க..

எங்க..?
திருவண்ணாமலைக்கு

அங்க எதுக்கு..?

நீங்க வாங்க சொல்றேன்.. இப்ப போய் மருந்து வாங்கிட்டு வாங்க..

வரிசையில் பொறுமையாக நின்று.. தன் முறை வந்ததும் உள்ளே சென்று டாக்டரிடம் பேசி.. அவர் எழுதிக் கொடுத்த சீட்டினை எடுத்துச்சென்று மற்றொரு வரிசையில் பொறுமையாக நின்று பணம் கட்டி.. மாத்திரைகளை வாங்கி வரும் ஷிவாவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் இனம் புரியாத சோகம் இன்னும் அதிகமாகியது.

.-------------------------------------------------------------------------------------------------------

அன்னைக்கு அவ சாப்டவே இல்ல தெரியுமா?

என்னைக்கு..?

அதான்.. எம்.டி பார்டில.. அவ பாஸ் வைஃப் லட்ச்சணம் தெரிஞ்சதும் தட்டயும் ஸ்பூனையும் கீழ வச்சவதான் தேம்பி தேம்பி அழுதா.. சாப்டாமயே கிளம்பினா

இது என்ன புது கதை? தென்ன மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல ஏன் நெறி கட்டுது?

இப்படில்லாம் அழுதாதனே.. அவ பாஸ் மனசில இடம் பிடிக்க முடியும், மனசில இடம் பிடிச்சு .. அப்புறம் மடியில இடம் பிடிச்சு.. அப்புறம் அரசாட்சியை புடிக்க முடியும்

அதுக்கு அவ அழவே வேண்டாமே..? சின்ன சிரிப்பு.. கடைவாய் புன்னகை போதுமே?

சென்டி “ மென்டலா” டீல் பண்ணி அப்புறம் காமெடிக்கு வருவாளா இருக்கும்

அம்மாவா..? அப்பாவா..? அண்ணனா ..? தம்பியா..? யார் கேக்கப் போறா? அனாதை ஆஸ்ரமத்துல படிச்சுட்டு ஏதோ ப்ளூக்ல இந்த வேலைக்கு வந்துட்டா.. தானா தேடித்தானே புளியங்கொம்பா வளைக்கனும்

ப்ராங்க்கா சொல்லனும்னா.. அவ இருக்கற அழகுக்கு யார் வேணா வளைவாங்க.. இவனுக்கு.. பொண்டாட்டியே மென்டல்.. ரெண்டு பேருமே கஷ்ட்டப் பட வேண்டியதில்லை.. சுபம் போட வேண்டியதுதான் பாக்கி.

பாலகுமாரன் நாவல்களால் புகைந்தது... எம்.டி பார்ட்டியால் பற்றி எறிந்தது. நாவினால் தீ வளர்த்து.. நாகங்களாய் படமெடுத்தனர் நிலாவின் சக பணியாளர்கள்.. சூழ்ந்துவரும் புகைமூட்டமும்.. தீ கொழுந்துகளையும் அறியாமல் திருவண்ணாமலை நோக்கி ஷிவா கார் ஓட்ட, பின் இருக்கையில் தன் தோளில் சாய்ந்து தூங்கும் சுமதியின் தலையில் தலை சாய்த்து தூங்கியபடி பயணித்தாள் நிலா..


தொடரும்…

3 comments:

வீ. எம் said...
This comment has been removed by a blog administrator.
வீ. எம் said...

பத்மபிரியா,

நிலா அழகாக பவனி வருகிறது ! நிலா - 5 சீக்கிரம் வரட்டும்.. !
என் முகமூடி கதை படித்துவிட்டு கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி, அங்கேயே பதில் சொல்லியுள்ளேன்..

இன்னொரு கதை போட்டிருக்கேன் "மாயவரத்தான்" .. படித்துவிட்டு சொல்லவும் !

Karthik Kumar said...

இந்த கதையையும் பாதியில நிறுத்திட்டு, நிலா அவரோட மனைவிய குணபடுத்திட்டு, சிவாவோட சேர்த்து வச்சுட்டு. தூரத்தில போய்கிட்டு இருந்த நிலாவ சிவாவும் அவ்ரோட மனைவியும் பார்த்துகிட்டு இருந்தாங்க அப்படின்னுட்டு. வேறு ரொமான்ஸ் சொல்றேனாக்கும்ன்னு சொல்லி அப்படியே அப்பிடானிங்க அவளவுதான்.

ஆமா சொல்லிபோட்டேன்.