ம.. திரு நிச்சயிக்கப்படுகின்றன- அத்யாயம் 3
"அப்பா.. இந்த இடத்தியே முடிச்சுருங்கப்பா.. "– தனது வாழ்க்கையின் அந்திமபயணத்திற்கான முடிவினை.. நெஞ்சம் வலிக்க.. தீனக் குரலில் சொல்லி விட்டாள்.
அவ்வளவுதான்..ஆரம்பித்துவிட்டனர் வேலைகளை..ஜம்பமாய் மூன்று நட்சத்திர ஹோட்டலில் மாலைப் பொழுதில் நிச்சய தார்த்தம்..வண்ண விளக்கொளியில் வாசனை திரவியம் தெளிக்கப்பட்ட ஏ.சி. ஹாலில் நலங்கு வைத்து நிச்சய தார்த்தம் முடிந்தது.
நிச்சயத்திற்கு வந்திருந்த அத்தனை உறவுகளும், நண்பர்களும் மாப்பிள்ளையை பார்த்ததும் விக்கித்து,பேச நா எழாமல் அமர்ந்திருந்தனர். சில பேர் சாப்பிட பிடிக்காமல் பவித்ராவின் அருகில் வந்து,சோகத்தை மறைக்கத் தெரியாமல் “ வரோம்மா..” என்று மட்டும் சொல்லிச் சென்றனர். உண்மையான சொந்தமெது போலியான பந்தமெது என்பதை புரிந்துக் கொண்டாள். எது புரிந்தால் என்ன..புரியாவிட்டால் என்ன.. அவள் வாழ்க்கை அஸ்தமிக்க துவங்கியது. அந்த இருளில் அவள் நிழலாகிப் போனாள்.
“ என்ன கோபாலன் இது...? பையன் ரொம்ப குள்ளம்.. பொன்னு வேற நல்ல ஹைட் வெயிட்டா இருக்கா..கொஞ்சம் நிதானமா பார்த்திருக்கலாமில்ல..? – ஆத்மார்த்தமாய் பழகிய குடும்ப நண்பர் ஆதங்கபட்டு கேட்ட கேள்வியை எதிர் பார்க்கவில்லை அப்பா.. தம்பிதான் அவரை சாப்பிட அழைத்து செல்வதுபோல் விலக்கி கொண்டு சென்றான்.
“என்ணண்ணா இது.. நான் கிளம்பி வற்றத்துக்குள்ள இப்டி அவசரப் பட்டுட்ட..?
பூனாவிலிருந்து வந்த சித்தப்பா நிச்சயம் முடிந்த மறு நாள் கேட்ட கேள்விக்கு
“ பவித்ராவுக்கு பிடிச்சிடுச்சி..அப்புறம் என்ன..? நானும் சரின்னுட்டேன், நாள் நல்லாருக்குன்னு நிச்சயம் வச்சுட்டேன்..”
“ நான் வந்தப்புறம் முடிவு சொல்லியிருக்கலாம்ல..? சரி .. என்ன படிச்சிருக்கான்.. எங்க வேலை செய்யறான்.
"பி.ஏ. முடிச்சுட்டு..ஸ்கூல்ல வாத்யாரா இருக்கான்"
"என்ணண்ணா இது..? நம்ம பவி எம்.ஏ. சரி விடு படிப்பு வந்து என்ன செய்யப் போவுது... பையன் நல்லவனா இருந்தா படிப்பு முக்கியமா?சரி எவ்ளோ வருஷம் சர்வீசு.. என்ன சம்பளம்.. இங்க பக்கத்துல இருக்கற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமா? உனக்கு பக்கத்திலேயே பவி இருந்தா உன்னையும் பார்த்துப்பா"
“மண்ணடியில வடக்கத்திகாரங்க நடத்ற ஸ்கூல்ல வேலை செய்யறான்.. அவங்க பிரான்ச் இங்க இருக்கான்னு தெரியல..சம்பளம் என்னா..ஒரு ரெண்டாயிரம் தர்றாங்களாம்.. சாயந்திரம் வீட்ல டியுஷன் எடுக்கறானாம்"
தரையில் கால் நழுவுவதைப் போல் இருந்தது பவித்ராவுக்கு“ வாத்யாருன்னு சொன்னீங்களேப்பா..? ப்ரைவேட் ஸ்கூல்னு சொல்லவே இல்லயேப்பா? இரண்டாயிரம் தான் சம்பளமா? அதை வச்சு நான் என்ன குடும்பம் நடத்தறது?- அழுதபடியே கேட்டாள் சமையல் அறையில் இருந்து.
“ வாத்யாருன்னு நான் சொன்னேன்.. எந்த ஸ்கூல் வாத்யாருன்னு நீ கேக்கவே இல்ல..? ஏன் நீ சம்பாதிக்கற இல்ல? அது போதாதா..? கல்யாணத்துக்கு அப்புறம் உன் சம்பளத்த எனக்கா தருவ?"
எவ்வளவு சாமர்த்தியமான பதில், வார்த்தைகளை வைத்து விளயாடும் லாவகம். துவண்டு போனாள்.. நிற்க முடியாமல்.. சுவரோடு தேய்ந்து தரையில் உட்கார்ந்தாள்..இறந்து போன தாயை நினைத்து அழுதாள்..அழுது கொண்டே சமைத்தாள்.. பத்து பதினைந்து விருந்தாளிகளுக்கு உணவிட வேண்டுமே.
“ அண்ணா.. இது என்னமோ என் மனசுக்கு சரியா படல.. அவன் படிக்கவும் இல்ல.. நிரந்தரமில்லாத ப்ரைவேட் வேலை.. வீட்டுக்கு கடைகுட்டி.. எட்டாவது பையன்.. சொத்தும் இல்லை.. எத வச்சு நம்ம பவியை நீ அவனுக்கு தரன்னு சொன்ன?’’
“ நீ சும்மா இருடா.. வயசு பொண்ணை வீட்ல வச்சுகிட்டு.. நெருப்ப மடில கட்டிகிட்ட மாதிரி இருக்கு”
“அதுக்காக ... அந்த நெருப்ப என் தலையில வச்சிட்டீங்களாப்பா..?- என கேட்க நினைத்து அழுகையோடு சேர்த்து அந்த கேள்வியையும் விழுங்கினாள்.
“ சரி..எவ்ளோ நகை கேட்டாங்க?“ அவங்க எதுவுமே கேக்கல.. நானா இருவது சவரன் போடறேன்னு சொன்னதும்.. உடனே சரின்னுட்டாங்க.
சரி என்றுதான் சொல்வார்கள்.. நல்ல திடகாத்திரமாக.. கவர்ன்மென்ட் உத்யோகத்தோடு..பிக்கல் பிடுங்கல் இல்லாமல் வீட்டுக்கு ஒரே பெண்ணாக..குள்ளமான தனது மகனை மணக்க ஒருத்தி வரும் போது..வேண்டாம் என்பார்களா?
“ அண்ணி சாவுபடுக்கைல கிடந்தப்போ.. பவிக்கு ஐம்பது சவரன் சேர்த்து வச்சிருக்கேன்.. நல்ல இடமா பாத்துமுடி தம்பின்னு சொல்லுச்சேன்னா..!???
“ அவ சொல்லிட்டு செத்துட்டா..இங்க நான் தானே பாக்கணும் எல்லாம். இருபது போடறேன்னதும் அவங்களே சரின்னுட்டாங்க. நிச்சயம் ஆனதும் அதுங்களுக்கே பேராசை தானே வந்துரும்...போதாத குறைக்கு நீயே சொல்லி குடுத்திறு”
பவித்ராவின் அம்மா அனைத்திலும் சரி சமமாக,எண்ணி எண்ணி சேர்த்து வைத்தாள்..இவளுக்கு ஐம்பது சவரன் என்றால் ..வரப்போகும் மருமகளுக்கும் ஐம்பது. அவற்றோடு அம்மாவின் நகைகளே ஒரு நாற்பது சவரன் இருக்கும். ஆனாலும் பவித்ராவிற்கென சேர்த்து வைத்திருந்ததில் முப்பது சவரனை நிறுத்திக் கொள்ளும் அப்பாவை என்ன கேள்வி கேட்பது? அப்படி கேள்வி கேட்டால் மட்டும் தந்து விடுவாரா?வாழ்கையே முடிந்து விட்டது.. பிறகு நகை எதற்கு..? பணம் எதற்கு.
“அதை விடு அண்ணா.. பையன் குள்ளமா இருக்கானே.. என்ன ஏதுன்னு விசாரிச்சியா? அவன் அண்ணங்க எல்லாம் நார்மலாத்தானே இருக்காங்க.. அப்பா அம்மா கூட நார்மல் ஹைட்டா இருக்காங்க... இவன் மட்டும் ஏன் குள்ளம்? கண்ணாடி அதிக பவர் இருக்கும் போல தெரியுதே?
“கடைசீ.. ஈவிடை பொறப்பு.. சத்து குறைச்சல்.. வேற ஒன்னும் இல்லடா..”
“இல்ல.. அவங்க குடும்பத்துல வேறயாராவது இப்படி குள்ளமா இருந்தா.. பரம்பரை பரம்பரையா ஏதாவது ஒரு புள்ளைக்கு அந்த வாகு வரும்னு சொல்வாங்களே.. அதை விசாரிச்சியா?
ஐயோ.. கடவுளே...இந்த திசையில் நான் சிந்திக்கவே இல்லையே? நாங்களிருவரும் வெளியே போனால் அனைவரும் கேலி பேசுவார்களே.. தன்னை இளக்காரமாகப் பார்ப்பார்களே என்று மட்டும்தான் இது வரை நினைத்து பயந்திருந்தாள்.. இப்போது.. பரம்பரை பரம்பரையாக அப்படி ஜீன் வருமா? என் குழந்தைகள் குள்ளமாக பிறப்பார்களா? ஐயோ.. நான் என்ன செய்வது? என் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது.. யாருடைய கேலிக்கும் ஆளாகக் கூடாது.
“அப்பா என்னப்பா இது... இந்த ஆங்கிள்ள நீங்க யோசிக்கவே இல்லயாப்பா..? நாந்தான் சின்னவ.. எனக்கு எதுவுமே தோணல?“
"இன்னும் பத்தாம் பசலியாவே பேசிட்டு.. இப்போ எவ்ளவோ மருந்து மாத்ரைங்க வந்துருச்சு “ – என்றான் தம்பி.
“எத்தனை பொருத்தம் இருக்கு ஜாதகத்துல..?“
"ஜாதகம் இல்லன்னுட்டாங்க, நான் மெனகெட்டு மனசு தாங்காம பேர் ராசி மட்டும் பார்த்தேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு..மனசு நல்லார்ந்தா எல்லாம் நல்லா இருக்கப் போவுது”
அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாய் தள்ளிவிட்டு எழுந்த சித்தப்பா,
“சரி .. நான் கிளம்பறேன் அண்ணே.. பவி..சித்தி கிட்ட சொல்லி பெட்டி படுக்க எடுத்துட்டு வர சொல்லு” என்றார்.
"சாப்டுட்டு போங்க சித்தப்பா..ப்ளீஸ்"
சித்தப்பா மெல்ல அருகில் வந்தார்..இரண்டு கைகளால் பவித்ராவின் நெற்றியை அழுத்தி பிடித்தார்.. “ நல்லா இருப்பம்மா நீயி.." என்றார்.
சாப்பிடாமல் அப்பொழுதே புறப்பட்டு சென்ற சித்தியும் சித்தப்பாவும் இவளது கல்யாணத்திற்கு வரவே இல்லை.
இவளை பத்து வயது வரை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்த அந்த சித்தப்பா தன் கூடவே இருந்தால் ஆறுதலாயிருக்கும் என நினைத்தாள் பவித்ரா. முதன் முதலில் ஸ்கூல் வாசலில் இவளை விட்டுவிட்டு வெகு நேரம் கேட் அருகில் நின்றிருந்த சித்தப்பாவின் தோற்றம் நினைவுக்கு வந்தது. அவரின் கை விரல்களை பற்றிக் கொண்டு வயலுக்கு நடந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. வளரவே வளராமல் ஸ்கூல் பிள்ளையாகவே இருந்து விட்டால் எவ்வளவு நிம்மதி, எவ்வளவு சந்தோஷம்.
தொடரும்...
