Saturday, November 28, 2020

             


யானை

      அப்படி என்ன ஒரு ஈர்ப்பு நமக்கும் அதற்கும் இடையே?? பார்த்ததுமே ஓடி சென்று அதன் தும்பிக்கையை கட்டி பிடித்து .. முத்தம் கொடுக்க வேண்டுமென்ற  ஆசை ஏன்?? அது உருவத்தில் யானை ஆனால் …உள்ளத்தால் குழந்தை.. அதனால்தானோ? 

     “கேரளாவில் பெரிய பணக்காரர்கள் வீட்டிலேயே யானை வளர்ப்பாங்க தெரியுமா ?” – அப்பா சொன்னதை கேட்டு எங்கள்  வீட்டு திண்ணையில் ஒரு குட்டி யானையை கட்டி வைத்து, தொட்டியில் தண்ணீரும், வைக்கோலும் போட்டு வளர்ப்பதாக  கற்பனை செய்யும் போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

         கோவில் திருவிழாவில் அப்பாவின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நிற்க்கும் போது… தொம் என்று தலையில் விழும் அதிர்வுதான் அதன் ஆசீர்வாதம் என புரிந்துக்கொண்டு ஐம்பது காசினை அதன் தும்பிக்கையில் தைரியமாக வைத்திருக்கிறேன்.

      ஆனாலும் அதன் மீதான அன்பும், வாஞ்சையும், அதை கட்டி பிடித்து முத்தமிட வேண்டும் என்ற காதலும் .. நிறைவேறியது… நிறைவேறிய பின்பு…ஒரு பயமும் வந்து உலுக்கியது .. ஆனாலும் யானைகள் நமது பாசத்திற்கு உரியவை தானே.

        சொன்னா கேளுடீ..  ராதா .. அவந்தான் சின்ன பையன்,, நீயும் அவனோட சேர்ந்துகிட்டு  டூ வீலர்ல அவ்ளோ தூரம் போவியா டீ?-  பாட்டியின் கோப முகத்தில் .. என் முகம் சேர்த்து வைத்து கொஞ்சி ஒரு வழியாக பயனப்பட்டோம் நானும் எனது தம்பியும்.. திரு நள்ளாறுக்கு…. திருமண தடை  நீக்கனும் சனி பகவானே என விண்ணப்பித்துக் கொள்வதற்கு….  ஆனால் அங்கே தான் சந்தித்தோம் அவளை..ஆம் .. அங்கயர்கண்ணியை.

அவளின் பின் பக்கம் தான் முதலில் எங்கள் கண்ணில் பட்டது..

டேய் இது பொம்பள யானைதாண்டா..

எப்டி சொல்ற? – என் தம்பி

ஒரு கேர்ல் எப்படி .. வளைஞ்சு நெளிஞ்சி நடப்பாளோ ..அதே மாதிரி வெட்கத்தோட நடந்து போகுது பாரு..

பாகன் அவளது பக்கத்தில் நின்றுக் கொண்டு வசூலுக்கு தயாரானார்..

“யாரும் தேங்கா மூடி…வாழை பழம்.. தராதீங்க…  யானை சாப்பிடாது..” என்றார்

      “எவ்ளவு வேணா தாங்க.. நான் சாப்பிடுவேனே..”  என்பதை போல் நின்றாள் அங்கயற்கண்ணி.. தேங்காய் மூடியை நீட்டிய பக்தரின் கைகளுக்கும் அவளின் தும்பிக்கைக்கும் அரையடி தூரம் தான் இடைவெளி… பாகனின் உடல்மொழியில் அனுமதி கிடைக்கும் என காத்துக் கொண்டே இருந்தாள் அவள்.. ஆனால் பாகன் ஸ்ட்ரிக்டாக இருந்தார்

     நானும் எங்களது அர்ச்சனை பையில் இருந்து எடுத்த சின்ன தேங்காய் மூடியை மீண்டும் பை உள்ளேயே வைத்து விட்டேன்.

      யானை, கடல், வானம் – இவை மூன்றும் பார்க்க பார்க்க திகட்டாதவை.. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. என எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. நான் ஆண் பிள்ளையாக இருந்திருந்தால்.. இன்னேரம் யானை பாகனாகி இருப்பேன்.

“வாடா பாகன் கிட்ட கேக்கலாம்.. அவளுக்கு வேற என்ன வாங்கி தந்தா .. அவர் அலௌவ் பண்ணுவார்ன்னு..”

“தென்னம் ஓலை.. கரும்பு எல்லாம் இங்க எங்க கிடைக்கும் ? “-என்றான் என் தம்பி

“அவரையே கேக்கலாம்”

“சார்..நாங்க என்ன வாங்கி தந்தா ..  நீங்க யானைக்கு  சாப்பிட கொடுப்பீங்க?

 “கேரட், பீட் ரூட், பீன்ஸ்,  நூக்கல்”-- என்றார்

 குருமாவுக்கான காய்ங்க இல்ல இது????-சத்தம் வராமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அவருக்கு பயந்தோ அல்லது அங்கயற்கண்ணிக்கு பயந்தோ பவ்யமாக தலை அசைத்து கிளம்பும் போது ..

“வெள்ளரிக்கா நல்லா சாப்டுவா.. ஆரஞ்சு பழம் .. தர்பூசணி கூட வாங்கியாங்க “ -..என்றார்.

திரு நள்ளாறு .. ஒரு சிறிய பொட்டல் வெளி .. எங்கெங்கு காணிலும் பரோட்டா கடை.. அர்சனை கடை மட்டுமே ஜெராக்ஸ் கடைகளும் உண்டு… தர்பூசனி மட்டும் இல்லை..

“டூ வீலர்ல வந்தது எவ்ளவு வசதியா இருக்கு பார்தியா?”-  என்றான் தம்பி

வெயிலில் எதிரே வந்த வழி போக்கரிடம்

“சார்.. இங்க தர்பூசனி பழம் எங்க கிடைக்கும்??

வழக்கம் போல ஏற இறங்க பார்க்கிற மாதிரி என்னை நன்றாக சைட் அடித்துவிட்டு…

தர்பூசனியா… அதுக்கு காரைக்கால் இல்ல போகனும்..? என்றார்

      காரைக்காலிலிருந்து பாகன் சொன்ன மேற்படி குருமா காய்கறிகளையும், பழ வகைகளையும் தலா ஒரு கிலோ வாங்கி  எங்கள் டூ வீலரில் வைத்து .. வேகமாக ஓட்டி வந்தோம்.

      கோவில் பாதுகாவலர்.. எங்களை தடுத்து நிறுத்தி.. மூட்டையை சோதித்து விட்டு.. எங்களை பார்த்து ..”யானைக்கா?” – என்றார்.. ஆமாம் என்றோம்.. “ உள்ளே போங்கோ “ -என்றார்

ஒரு வாரம் .. வச்சி சாப்டட்டும் டா.. பாவம் வெயில் காலம்” – என்றேன் நான்

என் தம்பி பதிலேதும் சொல்லவில்லை

எங்களை பார்த்ததும்…முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டார் பாகன்.

        எல்லா காய்கறிகளையும் தனி தனி கவரில் போட்டு வைத்திருந்ததை அவர் காலடியில் பரப்பினோம்…அங்கயற் கண்ணியை கிட்டே இருந்து ..ரொம்ப நேரம் பார்க்கலாம் என்ற அந்த ஒரு எண்ணமே .. சந்தோஷமாய் தெரிந்தது எங்கள் முகத்தில்..

      காய்கறிகளை பார்த்த அங்கயற் கண்ணியும் பரபரப்பு அடைந்தாள் என்பதை அவளின் கால்களின் ஆட்டத்தில் கண்டுணர்ந்தோம்.

     தர்பூசணி பழத்தினை ஆராய்ந்தவிட்டு .. எதையோ தேடிக் கொண்டிருந்த பாகன்.. கொஞ்ச தூரம் நடந்து சென்று… எங்கள் கண்களை விட்டு  மறைந்து விட்டார்..

      நாங்களும் … அங்கயற்கண்ணியும் மட்டுமே… எங்களை சுற்றி ஐம்பது அடி விட்டத்திற்கு  யாரும் இல்லை… பயம்… ஆனால் அங்கயற்கண்ணி அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.. அவள் கண்களில்   அன்பும் , குதூகலமும் தெரிந்தன எனக்கு.

      அப்பாடா.. பாகன் வந்து விட்டார் ..ஒரு சின்ன கத்தியுடன்.. தர்பூசனி பழமும் கழுவ பட்டிருந்தது.

“சும்மா நிக்கறீங்களே…. கேரட்ட குடுங்க …. “-என்றார் பாகன்

கேரட் பையை எடுத்து அவரிடம் கொடுத்தேன்

“அட.. எங்கிட்ட இல்லீங்க.. யானைக்கு குடுங்க “ -என்றார்

       ரொம்ப சந்தோஷமாய் இருந்தது… ஒவ்வொரு கேரட்டாய் கொடுக்க கொடுக்க ..உடனே உடனே தும்பிக்கையை நீட்டி  நீட்டி  வாங்கிக் கொண்டாள் அவள்..

“இவ்ளோ சீக்கிரம் சாப்பிடராளே டா” – என்றேன் என் தம்பியிடம்

“அதானே” – என்றான் அவன்

கடைசி கேரட் முடிந்தாலும் .. தும்பிக்கையை நீட்டினாள் அவள்.

“கவரை தலகீழ கவுத்து ஆட்டி, தூர தூக்கி போடுங்க.. புரிஞ்சுக்கும் “ என்றார் பாகன்

      அப்படி செய்ததும்.. நீட்டிய தும்பிக்கையை மடக்கிக்கொண்டாள் அவள்.  இதற்க்குப்பின்  அவள் செய்ததுதான் ஹைலைட்டே..

      நான் தந்த பத்து பன்னெண்டு கேரட்டுகளை இதுவரை  தனது வாய்க்குள் ஒதுக்கி வைத்திருந்து .. இப்போது..ஒரே கடி கடித்து சாப்பிட ஆரம்பித்தாள். ஓ… இப்படியெல்லாமும் சாப்பிடுவாங்களோ இவங்க.. என நினைத்துக் கொண்டேன்,

அடுத்து

    “நான் தர்பூஸ் கட் பண்ணி கட் பண்ணி தறேன்,,  நீங்க வாங்கி வாங்கி அதுக்கு குடுங்க”- என்றார் பாகன்

       பெரிய தர்பூசனியை பதினாறு துண்டுகளாக்கி, விதைகளை தள்ளிவிட்டு வேகமாக அவர் ஒவ்வொரு துண்டாக என் தம்பியிடம் கொடுக்க, நான் அவளின் தும்பிக்கை முனை வளைவினை ஆதரவாய் பிடித்து , என் நெற்றி அவள் தும்பிக்கையில் பதிந்து இருக்கும் படி முழங்காலிட்டு ஒவ்வொரு துண்டாக வாங்கி வைத்தேன் … அவள் வாய்க்குள் வைத்து விட்டு.. மீண்டும் தும்பிக்கையை என் கைகளில் வைத்த வண்ணம் இருந்தாள்..

“என் செல்லம்.. இன்னும் ஒரு வாய் வாங்கிக்கோ” – என் சொல்லாமல் நான் தருவதும் .. அவள் உண்பதுமாக …

நேரம் போனதும் தெரியவில்லை… அனைத்து காய் கறிகள் தீர்ந்ததும் தெரியவில்ல.. ஒரு மாய மயக்கதில் இருந்து மீண்டு.. எழுந்து நின்றதைப் போல் இருந்தது எனக்கு.

“ரொம்ப தைரியம் உனக்கு.. தும்பிக்கை மேலேயே உன் நெத்தி இருந்துது தெரியுமா ? -- என்றான் என் தம்பி..  அவன் தர்பூஸ் துண்டுகளை வாங்கி தரும் இன்டெர் மீடியேட்டராக மட்டுமே செயல் பட்டான் என்பது நினைவுக்குவந்தது,

       அப்பாடா .. யானைக்கு நான் பழம் வாங்கி தந்தேன்…. ஹான்.. ஆசீர்வாதம் வாங்கிக்கவே இல்லயே…

           “வாடா.. தலை குனிஞ்சு நில்லு.. ஆஸீர்வாதம் பண்ணுவா.. என் கிட்டக்க வந்து நில்லு”- -என சொல்லி நானும் எனது தம்பியும் குனிந்த தலை நிமிராமல் நின்றோம்… மூனு நிமிஷம் ஆச்சே தவிர ..  ஆசீர்வாதம் விழக்காணோம்.. நிமிர்ந்து பார்த்தால்… அவள் பாட்டுக்கு .. பாகன் போட்டிருந்த ஓலைகளில் ஒன்றை தும்பிக்கையால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தாள்.

     கொஞ்சம் கோபம், கொஞ்சம் ஏமாற்றம்.. கொஞ்சம் அவமானத்துடன் ..பாகனை பார்த்தோம்..

        எங்களை புரிந்துக்கொண்ட பாகன்… “அங்கி.. ஆசீர்வாதம் பண்ணு என்றார்..”-- அதற்கு அப்புறம் தான் .. ஏதோ சுமாராக..ரெண்டு பேருக்கும் சேர்தார்போல ஒரு ஆஸீர்வாதம்.. தொம் என்று வைத்துவிட்டு.. அவள் சாப்பாட்டை தொடர்ந்தாள்.

     ஒரு வாரம் வச்சு சாப்பிடுவா என்று நினைத்ததை கால் மணியில் காலி பண்ணினா..

     நிறைய ஆஸிர்வாதம் பண்ணுவான்னு நினைச்சா…ரேஷன் கடையில அளக்கிற மாதிரி.. அளந்து ஆசீர்வாதம் செஞ்சா…

     

  இதையெல்லாம் பாட்டி கிட்ட சொல்லியே ஆகனும்…. விரைந்து வீடு வந்து சேர்ந்தோம். அனைத்தயும் சொன்னோம். ஏல்லாவற்றையும் கேட்டுவிட்டு--

“பார்த்தியாடா .. உன் பிள்ளைங்களை… ஆனை கிட்டக்க போய் .. அதுக்கு சாப்பாடு

ஊட்டிட்டு வந்திருக்குதுங்க “– என்றாள் பாட்டி. அப்பாவிடமிருந்து பதிலேதும் இல்லை.

ஒரு சின்ன புன்னகை மட்டுமே.  அம்மாவிடமிருந்தும் பதில் வராது.. ஏனெனில் அவளது புகைப்படம்  பூஜையறையில்  மாட்டப்பட்டு வெகு நாளாகிறது.

           காலங்கள் உருண்டன…. கல்யாணமும் ஆகவில்லை.  அதே ஜோசியர்.. அதே ஓலைக் கட்டுகள்…” இன்னோர் தரம் ..நள்ளாறு போய்ட்டு .. தீர்த்தமாடிட்டு .. தர்பாரன்யேஷ்வரரை சேவிசுட்டு வாங்கோ.. சுபிக்ஷமா இருப்பேள் டா.. கல்யாணம் உடனே குதிர்ந்துடும் “- என்றார். அங்கயற்கண்ணி தான் நினைவுக்கு வந்தாள். மனம் துள்ளி குதித்தது,

       சொன்னா கேளுடீ..  ராதா .. அவந்தான் சின்ன பையன்,, நீயும் அவனோட சேர்ந்துகிட்டு  டூ வீலர்ல அவ்ளோ தூரம் போவியா டீ?- என கேட்க பாட்டி இல்லை.  இறந்து விட்டாள்..... கொஞ்சமும் எங்கள் மீது அக்கறை இல்லாமல்.

      இம்முறை பாட்டி சொன்ன கோயிலுக்கு போய்.. பாட்டி வேண்டிக் கொண்ட நேர்த்தி கடனை செலுத்தி விட்டு.. அதன் பிறகு நள்ளாறு செல்வது என பயணத்திட்டம். எங்கள் ஊரிலிருந்தே குருமா காய்கள், தர்பூஸ், ஆரஞ்சு மற்றும் வெள்ளரி காய்களும் எங்களுடன் பயணப் பட்டன அங்கயற்கண்ணிக்காக,

       கோவில் தரிசனம்.. நேர்த்தி கடன்.. அனைத்தையும் விட .. அலைச்சலில் கால் வலிக்க வலிக்க.. கோயில் ப்ரசாத புளியோதரையை வாங்கி.. நிம்மதியாக ..விசாலமான இடத்தில் .. தூணில் சாய்ந்துக் கொண்டு சாப்பிடுவதுதான் மிக முக்கியம்.

        மேற் சொன்ன படியே… வழக்கத்தை விட.. அதிக காலியான இடத்தில் உட்கார போகும்பொது…. அம்மா..இங்க உக்காராதமா… அங்க போய் உக்காரு” என்றார் ஒரு மூதாட்டி. 

ஏன் பாட்டி  இப்படி சொல்றீங்க ?- என்றேன். 

        ரெண்டு மாசம் முன்னாடி.. இந்த இடத்துல தான்.. இந்த கோவில் யாணை ..பாகனை தூக்கி போட்டு ..மிதிச்சு கொன்னுடுச்சு மா.. அவரு உசிர் விட்ட இடம்மா”- என்றார் பாட்டி.

        அமானுஷ்யம் என் தோளை தொட்டது போல் உடல் சில்லென்றாகியது. யானையை பற்றிய பயம் வந்தது.  அதன் சக்தி, வலிமைக்கு நாம் எம்மாத்திரம்?  பாரதியாரை தூக்கி வீசியதும் அவர் பழக்கப் பட்ட யானை தானே? அங்கயற்கண்ணி என்ன செய்வாளோ???.

      எவ்வளாவு தைரியமாக முட்டி போட்டுக் கொண்டு.. தும்பிகையில் நெற்றி பதித்து..பழங்களை ஊட்டினோம்… எதாவது ஆகியிருந்தால் .. அப்பா என்ன செய்வார்?

        ஆனாலும் வாங்கிய குருமா காய்கள் வீணாகக் கூடாது.. எனக்கு திருமணமும் ஆக வேண்டும்… எனவே விடாமல் திரு நள்ளாருக்கு பயணப் படுவது என முடிவெடுத்தேன்.

     ஆனால் வாங்கிய குருமா காய்கள், பழங்கள் எல்லாம் வீண் தான் ஆகின… வண்டி சூடு மற்றும் இறுக கட்டிய பிளாஸ்டிக் கவர்களினால்.. காய்களுக்கு பதிலாக.. அவற்றின் ஜூஸ் மட்டுமே இருந்தது..

      மீண்டும் காரைக்கால் சென்று.. புதிதாக அனைத்தயும் வாங்கினோம்.. கிர்ணி பழமும் எங்களுடன் சேர்ந்து அங்கயற்கண்ணியை பார்க்க வந்தது.. அவள் தான் தன்னை தின்னப் போகிறாள் என்று தெரியாமல்.

       இவ்வளவு வாங்கும் போதும்..அங்கயற்கண்ணியை பற்றிய பயம் அவள் சைஸ் க்கு வளர்ந்து கொண்டே போனது எனக்குள்.. என்னை தள்ள மாட்டாள்..என்னா நான் அவளுக்கு  சாப்பிட தருகிறேன்… தம்பியை ஏதாவது செஞ்சிட்டா?.. ஒரு பாகன் என்னத்தை கன்ட்ரோல் பண்ண முடியும்? முழங்காலிட்டு ஊட்டி விடுகிற நான் எழுந்து எந்த திசையில் ஓட முடியும்?... இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. கோயில் வாசல் வந்து விட்டோம்.

      “யானை இப்போ இருக்க வேண்டாஆஆஆஆஆஆம் “ என வேண்டிக்கொள்ளும் அளவுக்கு நான் பயந்து போனேன். தம்பியிடம் “ நீ எட்டி நில்லு…இல்லன்னா கோயிலுக்குள்ளார போயிடு.. “-என்றேன்

“ஏன்” –என்றான் அவன்,

பதிலேதும் இல்லை என்னிடம்,

பேசாம வா- என்றான்.  பெரீய வாசற் படியை அகலமாக கால் வைத்து தாண்டினேன்..

       என் கண்கள் அவளை தேடின.. அதற்க்குள் அவளது சிறிய கண்கள் என்னை கண்டு கொண்டதை  நான் உணர்ந்தேன்..  நூறு அடிகளுக்கு முன்னாலிருந்தே என்னை அவள் உணர்ந்து கொள்கிறாள்… கண்களில் வழியும் குதூகலமும், அவள் கன்னக் கதுப்பில் மிளிரும் சிரிப்பும் எனக்கு மட்டும் தான் புரிகிறதா?…இவள் இங்கே இருக்க வேண்டாம் என கொஞ்சம் முன்பு வேண்டினேனே என குற்ற உணர்வாக இருந்தது.

அவளை கடந்துதான் சன்னதிக்குள் போக வேண்டும்..

ஈசனை பார்த்துவிட்டு ..உன்னிடம் வருகிறேன் .. என்கிறேன் நான் மனதுள்..

என்னை நோக்கி மெதுவாக தலைஅசைக்கிறாள் அவள்… இது எங்களுக்குள் நடந்த பரிபாஷை.. சொன்னால் புரியாது.. உணர்ந்தால்  அறியலாம்..

         இறைவனை வேண்டி தரிசித்துவிட்டு .. அவளிடம் வந்து தைரியமாக நின்றேன்.. உடல் மொழியால் வரவேற்றாள்… பாகன் சிறிது நேரம்  யோசித்து எங்களை  அடையாளாம் கண்டு வரவேற்றார்.

      முழங்காலிட்டு .. அவள் தும்பிக்கையை அணைத்து… பாகன் வெட்டி வெட்டி தர நாங்கள் வாங்கி வாங்கி தந்தோம்.. அவள் எடுத்து எடுத்து உண்டாள்..

கொஞ்சமே கொஞ்ச நேரம் அவள் தும்பிக்கையில் முகம் புதைத்து இருந்தேன்..

எங்கோ நான் படித்தது .. எனக்கு நினைவில் நிழலாடியது ….

      ஓரறிவு ஜீவராசியாக துவங்கி, பயனப்படும் ஜீவாத்மா, இறுதியாக ஐந்தறிவுடன் பிறக்கும் பிறப்பு தான்…..யானை..

      இந்த யானைக்கு, அதன் வாழ்வின் பரிசாக  ஈசன் அளிக்கும் உயர் பதவிதான் ஆறரிவுள்ள மானிடப்பிறவி 

இறைவா…. இன்றில்லை என்றாலும்… என்றேனும் ஓர் பிறப்பில் நான் அவளுக்கு மகளாவேன்..அல்லது அவள் எனக்கு மகளாவாள்.

(கேரளாவில்  வாயில் வெடி வெடித்து இறந்த பெண் யானைக்கும் அதன் சிசுவுக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன்)

----------------------------------------------------------------------------------

No comments: