Saturday, July 16, 2005

நினைவுப் பெட்டகம் - 5

கோயிலுக்கு போயிட்டு வரேன்... பத்ரமா இருந்துப்பியா? இல்ல... நான் போகாம நின்னுடட்டுமா..? நீ தேறி எழுந்தா.. மாவெளக்குப் போடறேன்னு வேண்டிக்கிட்டேன்.. ஒரு வாரம் கழிச்சு எழுந்து உக்காந்திருக்க.. வெள்ளிக்கிழமை அதுவுமா இன்னைக்கே போட்டுட்டா நல்லது " - என்றாள் அம்மா

ஒரு வாரமா...? ஆமாம்.. அவன் மெசேஜ் படித்து அழுதது போன வெள்ளிக்கிழமை தான் என நினைவு வந்தது. நான் இருந்துப்பேன் மா.. நீ போய்ட்டு.. நிதானமா வா - என்றாள்

வாழ்க்கையின் வண்ணங்களையும், சுவைகளையும் சுருட்டி வான்வெளியில் எறிந்துவிட்டு வெறுமையாய் உயிர் மட்டும் சுமந்திரு என கட்டளையிட்டுவிட்டு நின்றுவிட்டான் அவன். சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை பளாரென முதுகில் அறைந்ததைப் போல விக்கித்து நின்றுவிட்டாள் இவள். நான்கு நாட்கள் உடல் கருக்கும், உள்ளம் உருக்கும் காய்ச்சல்.. சுருண்டு போனாள் அவள்.

அம்மா நெய் கிண்ணம், வெல்லம் அரிசிமாவுமாக கிளம்பிவிட்டாள்.. போகும் போது.. அருகில் வந்து நெற்றியை தொட்டு.. “ சுத்தமா ஜுரம் போயிட்துடீ.. மத்யானம் பருப்பு ரசம் போட்டு சாதம் கரைக்கரேன் குடிச்சுடு” என்று சந்தோஷமாகச் சென்றாள்.

அம்மா கிளம்பியதும்.... மெல்ல நடந்து சென்று தனது செல்லை எடுத்துவந்தாள்... அணைந்து போய் வெறுமையாய் இருந்தது.. அதற்கும் உயிரூட்ட வேண்டும். அப்போதெல்லாம் ப்ளக் பாயிண்ட்காக வெட்டு, குத்து கொலை பழி நடத்தி, தம்பியை சண்டையில் வென்று.. எவ்வளவு ஆர்ப்பரிப்போடும், துள்ளலோடும் சார்ஜ் போட்டிருக்கிறாள்..பொட்டு வைத்துக்கொள்ள மறந்திருக்கிறாள், காசு எடுத்துக் கொள்ள மறந்திருக்கிறாள்.. வாட்ச் கட்டிக் கொள்ள மறந்திருக்கிறாள்.. ஆனால் செல் எடுத்துக் கொள்ள மறந்ததே இல்லை.. அவளது ஒவ்வொரு செல்லிலும், சொல்லிலும், செயலிலும் நீக்கமற நிறைந்ததல்லவா இந்த செல்.

செல்லுக்கு மின்சாரத்தையும்.. தன் மனதிற்கு அவனது நினைவுகளையும் கொடுத்தாள்.. உயிரற்ற அந்த செல் மின்சாரம் தேக்கி உயிர் பெற்றது.. ஆணால் அவள் மனமோ அவனது நினைவினைத் தேக்கி உயிர் துடிப்பை இழந்தது.

அவன் என்னை டாமினேட் பண்ண எப்டி விட்டேன்...!? அவன் மேல நான் வச்சது நட்பா?, அன்பா? காதலா? இனக்கவர்ச்சியா?

நட்புன்னா.... அவன் போய்டுன்னு சொன்ன போது.. “ என் ப்ரண்ட்ஷிப்பை காப்பாத்திக்க உனக்கு தெரியலைன்னு சொல்லிட்டு கூலா போயிருப்பேனே?

அன்புன்னா.... அவன் போய்டுன்னு போது.. தேங்க்ஸ் பார் யுவர் மெசேஜஸ்ன்னு சொல்லிட்டு நிம்மதியா இருப்ப்பேனே...?

காதல்னா... இது காதலா? ஒருத்தனை பார்க்கவே பார்க்காம... அவன் அனுப்பும் மெசேஜை மட்டுமே வச்சு அவனை காதலிக்க முடியுமா? வெளியில சொன்னா சிரிப்பாங்க..ஆனா.. அவன் தீர்மானமா பவித்ரா பைத்தியமா இருக்கேன், ஐ லவ் யு, நீயும் என்னை லவ் பண்ணுன்னு திடகாத்திரமா நின்னானே... என்னை நேர்ல கூட பாத்தது இல்ல..! தீவிரமா இருந்தானே அது எப்டி?.. அப்படியே காதலா இருந்தா... அவன் போய்டுன்னு சொன்ன போது இதுபோல அமைதியா அதிர்ந்து போய் நின்னுடுவேனா? நான் உன்னை காதலிக்கிறேன்.. நான் ஏன் போகணும்..? நான் போகமாட்டேன்னு அவனை சந்திச்சிருப்பேனோ?

இனக்கவர்ச்சியா.. இதுவும் கிட்ட தட்ட காதலுக்கு முந்தைய ஸ்டேஜ்

அப்ப என்னதான் இது? அவன் சொல்றமதிரி டைம் பாஸ்காக பழகி இருப்பேனோ? அப்டி பழகி இருந்தா இப்டி பீவர்ல விழுந்திருப்பேனா? ஆபீஸ்லயும் டைம் பாஸ்க்காக அரட்டை அடிசிருக்கேனே..? அதுல சில பேர் முறைச்சிக்கிட்டு முகம் திருப்பிக்கிட்டு போனா இப்டியா ஜுரம் வந்துச்சு?

என்ன எழவு மண்ணுக்கு அவன் எனக்கு ராங் கால் செஞ்சான்..? அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்கு.. இன்னும் நான் மீளல..உன்னை எப்டிடா மறக்றது சுஜீ?

செல்லின் மெசேஜ் இன்பாக்ஸ் சென்றாள்.. ஒவ்வொரு மெசேஜாக படிக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. முதல் மெசேஜ் .. Hi என்ன பண்ற? – அதை படிக்கும் போது அப்போதுதான் புதிதாக படிப்பதைப்போலத் தோன்றியது அவளுக்கு.. உடலெங்கும் பரவசமாகியது.. மிகச் சாதாரண வார்த்தைகள்தான் அவை... ஆனால் என்னை நினைத்து.. என் பதிலை எதிர்பார்த்து அவன் அனுப்பிய அந்த வார்தைகளால் என் உயிர் வாழ்தல் அர்த்தமுள்ளதாகிறது.. நான் வேண்டும் என அவன் விரும்புகிறான் என்பதே சந்தோஷம் தருகிறது... இதைத்தான்... இந்த உணர்வைத்தான் அவன் அன்றைக்கு சொன்னானோ?.. அவனை ரொம்பத்தான் படுத்திட்டேனோ..? லூஸ் மாதிரி மெசேஜ் அனுப்பி அவன் உயிரை எடுத்தேனோ? அவன் என்னை போய்டுன்னு சொன்னது தப்பே இல்லை.. ஆனா நான் எங்கடா போவேன்? என்று நினைத்துக் கொண்டாள்.

சுஜீ... எனக்கு எல்லாமே புரிஞ்சுதுடா.. நானும் விரும்பாமலில்லை... ஆனாலும்.. இன்னைக்கிருந்தாலும் நான் அப்படியேத்தான் நடந்துக்குவேன்.. எல்லாம் என் அப்பாக்காக...அது.. அது..முடிஞ்சு போச்சு எல்லாம்... அது என் தலைஎழுத்து... என்னோட போகட்டும்.. நீயாவது நிம்மதியா இரு.. நல்ல வேளை நீயாவே என்னை போய்டுன்னு சொல்லிட்ட – தனக்குள் பேசிக் கொண்டாள். இதயம் கனத்து கண்கள் நிரம்பின.

ஒவ்வொரு மெசேஜாகப் படித்துக் கொண்டே வந்தாள்.. தான் அனுப்பிய பதில்களை அவுட்பாக்ஸ் சென்று படித்தாள்... வாழ்க்கையில் மிக மிக மிக முக்யமானதை.. உன்னதமானதை இழந்துவிட்டோம் என உள்ளுணர்வு சொல்லச் சொல்ல .. தங்க இயலாமல் அழுதாள்.. நெஞ்சம் வலிக்க.. நெற்றி சுருங்கி.. கண்கள் சூடாகி மீண்டும் காய்ச்சல் ஆரம்பமாகியது

போறத்துக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ

புரியல


போய்டு... ஆனா போறத்துக்கு முன்னாடி ப்யெ சொல்லிட்டு போய்டுன்னு சொன்னேன்

அந்த வார்த்தைகள் அன்று பாய்ச்சிய அதே மின்சாரத்தை இன்றும் அவளுள் செலுத்தின.. அழுவதனால் தலைவலியும் காய்ச்சலும் அதிகரிக்க.. அந்த மூன்று மெசேஜ்களை மட்டும் தனது செல்லின் நினைவுப் பெட்டகத்தில் பதிந்துவிட்டு.. ஜுரத்தில் மூழ்கத் துவங்கினாள்.

“ என்னடீ இது.. அழுதியா என்ன? பேச்சு வார்த்தை நடத்துன நாள்ளேர்ந்து நீ பொண்ணாவே இல்ல.. நான் போகும் போது நல்லா எழுந்து உக்காந்தியேடி.. இப்ப 104 இருக்கும் போல இருக்கே..? என்னடி ஆச்சு உனக்கு? எனக்கென்னமோ இது அச்சான்யமா படுது.. அங்க கோயில்ல மாவெளக்கும் சரியாவே எரியல... டேய் ஆகாஷ்.. நாலு நாலணா எடுதிட்டு வா..” அம்மா.. தாயே இது பொழச்சு எழுந்தா எல்லாரும் உன் சன்னதிக்கு வரோம்.. என் புள்ளய முழுசா எழுப்பிக் குடுத்துடு... கால்காசு போடறேன்..” என்று சொல்லியபடியே அம்மா பூஜை அறைக்குள் செல்வது மங்கலாகத் தெரிந்தது.

மீண்டும் மூன்று நாட்கள் காய்ச்சல்.. கண்விழித்த போது பக்கத்தில் அப்பா.. நெற்றி வருடி.. புருவம் நீவி..” என்னாச்சுடா உனக்கு..? எதானாலும் அப்பாக்கிட்ட சொல்லு... அம்மா கத்துவா.. அவ கிட்ட சொல்ல வேண்டாம்.. அப்பாகிட்ட சொல்லுடா..” என்றார்

ஒன்னும் இல்லப்பா.. ஒன்னும் இல்ல.. நீங்க feel பண்ணாதீங்க.. டாக்டர் உங்களை feel பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்..

நான் feel பண்ணலயே.. உனக்கு பீவர்ன்றதுதான் எனக்கு கஷ்ட்டமா இருக்கு..

இதோ.. நான் எழுந்துட்டேன் பா... கஞ்சி தாங்கோப்பா .. பசிக்குது.. அப்பாவின் தோள்களில் சாய்ந்துக் கொண்டே, கஞ்சியை குடித்தாள் வாந்தியை அடக்கிக் கொண்டு.

அவனது Hi இல்லாமல் அவளது காலைகள் விடியத்தான் செய்தன.. Time is the great healer.. அல்லவா? ஆற்றியது காலம்... ஆறத்துவங்கியது மனம்.. ஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..!
--------------------------------------------------------------
இரண்டு மாதங்கள் முடிந்த ஒரு திங்கள் நன்னாளில் காலை அலுவலகத்தில் இருக்கும் போது .. எஸ்.எம்.எஸ். டோன்... நம்பளோடது இல்ல என்று நினைத்தவள்.. இருந்தாலும் எடுத்துப்பார்த்தாள்... அதிர்ந்தாள் “ Hi பவித்ரா” – அவன்.. அவன்.. அவன்..அவனேத்தான் அனுப்பியிருந்தான்.. கடலலைகள் ஆர்ப்பரித்து காலை வந்து மோதியதைப் போல் இருந்தது.. தடுமாறினாள்..

வேண்டாம் சுஜீத்.. வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. நானே இப்பத்தான் கரை ஒதுங்கி ..ஒரு ஓரமா இருக்கேன்.. திரும்பவும் சுனாமியா? நான் தாங்க மாட்டேன்.. என்னை போய்டுன்னு சொன்னல்ல நீ? என்னை போய்டுன்னு சொல்லிட்டு திரும்பவும் எதுக்கு Hi அனுப்பற? விளையாட்டு பொம்மயா நான் உனக்கு?

வெட்க்கம், மானம், ரோஷம் என்பவைகள் தனக்கும் இருக்கின்றன என்பது தற்போது முக்கியமாகவே படவில்லை அவளுக்கு.. பதிலுக்கு Hi டா? எப்டி இருக்க? என்று மெசேஜ் அனுப்பு என்று குதித்த மனதை அடக்க பகீரத ப்ரயத்னம் தேவையாக இருந்தது அவளுக்கு. எப்படியோ.. பதிலே அனுப்பவில்லை அவள்.

அன்று முழுவதும்...
ப்ளீஸ் பவி.. என்மேல கோவமா?
ஒரே ஒரு முறை என்னோட பேசு.. நான் சொல்றதை கேளு..
இன்னும் கோவம் போகலயா?
நான் போன் பண்ணட்டா?
நாலைந்து முறை call செய்தான்

கட்டுப்படுத்திக் கொண்டாள்...தாங்க முடியாத கட்டத்தில் செல்லினை off செய்துவிட்டாள்.. அப்படி செய்து விட்டு.. அங்கு அவன் துடிப்பானே என இங்கு இவள் துவண்டாள்.

ஆறியதாக நினைத்த மனக்காயத்திலிருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.. அது அவளது கண்களின் வழி வெளி வரும் போது நிறம் இழந்து கண்ணீர் எனப் பெயரிடப் பட்டது.

அவளது மனக் கண்முன்.. சுஜீத் அறிமுகமாவதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் திரை விரிந்தன....

பக்கத்துல வந்து உக்காரு.... இன்னும் தள்ளி வா...

“இல்ல இது போதும் ”- கொண்டு சென்ற அர்சனை பையை இருவருக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள்

டாடா சுமோ பயங்கர வேகமெடுத்தது.. அந்த வேகத்தில் ஓட்டிக்கொண்டே அவள் வைத்த அர்ச்சனைப் பையை எடுத்து காலடியில் கடாசினார் திருவாளர். நட்ராஜ் அவர்கள்.
ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்த ப்ரஸாத பையையா... கால் கீழயா..? அதிர்ந்துதான் போனாள்

"அர்ச்சனை பை... அது உங்க கால் கிட்ட..."- என்றாள்
பதில் ஏதும் பேசாமல் ஸ்டியரிங்கை ஒரு கையால் பற்றிக் கொண்டு இடது கையால் அவளை தன் மேல் சாயும் படி இழுக்க முயன்றான் அவன்.. இதெல்லாம் அவள் எதிர்பாராதது... நல்ல வேளை சுதாரித்துக் கொண்டு.. தடுமாறி விழுந்து எழுந்து மீண்டும் ஜன்னலோரம் ஒடுங்கிக்கொன்டாள்

நட்ராஜ் ... என்னதிது... வண்டியை நிறுத்துங்கோ .. நான் சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வறேன்...
ரொம்ப சிலுப்பிக்கிற...! இன்னும் எவ்ளோ கடன் இருக்கு உங்கப்பாக்கு.. சொல்லச்சொல்லு.. ஒரே பேமென்ட்ல தீர்த்துடலாம்.. கையோட நிச்சயம் வெச்சு.. தேதி குறிச்சிடலாம் – என்றான். இந்த இரு வாக்கியங்கள் பேசுவதற்குள் சிகரெட், பான்பராக் மற்றும் சாராயத்தின் வாசனையை அவள் முகத்தின் மேல் துப்பினான்....
இதெல்லாம் சகிச்சுக்கனும்...ஏன்னா.. அப்பாவை காப்பாத்தி கொடுத்தவன் இவன்...

அப்பாவிற்கு முதல் அட்டாக் வந்த அந்த நாள்... வாழ்வின் அஸ்த்திவாரத்தை உலுக்கிய நாள்... மூவரும் பதறி துடித்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். அம்மா இதுதான் சமயம் என்பதைப் போல.. பதினைந்து வருடங்களாக துளியும் தொடர்பில்லாமல் சண்டையிட்டு பிரிந்திருந்த அவளது அண்ணனின் கால்களில் சென்று விழுந்தாள்.. அழுதாள்.. சொந்த ஊரில் பண்ணையார் ரேஞ்சில் உலா வரும் அவரும் அவரது சீமந்த புத்திரன் இந்த தடிராமன் நட்ராஜும் சேர்ந்து சில பல ஆயிரங்கள் செலவு செய்து அப்பாவை காப்பாற்றினர்.. அம்மா நெகிழ்ந்து நெக்குருகிப் போனாள்.. அண்ணன் குடும்பத்துடன் இழையோ இழையென இழைந்தாள்.. ஆனாலும் அவரது அண்ணன் மறக்காமல் “ மொத்தம் ஒன்னரை லட்சம் செலவாச்சு... நீ அதெல்லாம் திருப்பித் தர வேண்டாம்... பவித்ராவை மட்டும் நட்ராஜுக்கு கொடுத்துரு.. அவன் ஊர் மேயாம இருக்கனும்னா இவதான் லாயக்கு... நம்ம கும்பல்ல இவ்ளோ படிச்சுட்டு கவர்மெண்ட் உத்யோகம் எவ பாக்கறா? என்ன நான் சொல்றது..? என்றார்.

ஊர் மேயறவனை திருத்தும் உன்னத சமூக சேவகியா நான்... கடவுளே இவனா? இவனா எனக்கு? கால்களின் கீழ் பூமி நழுவுவதை போல் தோன்றியது.. அப்பாக்கு வந்த அட்டாக் எனக்கு வந்திருக்கலாம்.. தனியிடம் தேடிச்சென்று அழுதாள்...மனமொடிந்து போனாள்..

அப்பா அட்டாகிலிருந்து சுதாரித்து.. அன்றாட வாழ்க்கையில் கலந்து.. நார்மலான கொஞ்சனாளில்... அம்மா விவரத்தை சொன்னாள்... அதை கேட்டு அதிகமாக அதிர்ந்தார்..

"பைத்தியமாடி உனக்கு..!? அவன் முரடன்.. எல்லா கெட்ட பழக்கமும் ஒன்னு விடாம இருக்கு.. இப்பவே ரெண்டு மூணு தொடுப்பு இருக்றதா பேசிக்கறாங்க.. என்னை கேக்காம எப்டி நீ உங்கண்ணனை பேச விட்ட?
அம்மா மௌனம் அனுஷ்டித்தாள்.. அவள் மௌனிக்கிறாள் என்றால் அவளது தீர்மானத்தில் உறுதியாய் இருக்கிறாள் என அர்த்தம்..

அப்போ ஒன்னரை லட்சத்தை அவங்க முகத்துல தூக்கி எறிஞ்சுட்டு.. உங்க சம்பந்தமே வேண்டாம்னு சொல்லிடுங்கோ..

"பணத்துக்கும் பவித்ராவோட வாழ்க்கைக்கும் முடிச்சு போடாதே.. இந்த ப்ளாட்டை வித்துட்டு... வாடகைக்குப் போவோம் உங்கண்ணனுக்கு கொடுத்தது போக மீதி பணத்தை பேங்க்ல போட்டுட்டு நிம்மதியா இருப்போம்...

வீட்ட வித்துட்டு மீதி பணத்தை பேங்க்ல போட்டுட்டு உக்காந்துட்டா.. எல்லாம் ஆயிடுமா..? வெளியிடம் பார்த்தா.. இதுக்கு மேல வரதட்சணை செய்யனும்.. எங்கண்ணன் அதுபோல ஏதாவது கேட்டாரா..? அவரே ஒன்னரை லட்சம் செலவு செஞ்சு உங்களை காப்பாத்தி உக்கார வச்சிருக்காரு.. நன்றிங்கறது ரத்தத்துல வரணும் - என்றாள் அம்மா

என் ரிடயர்மென்ட் பணம் வந்ததும்.. அத வச்சு அவளுக்கு ஜாம் ஜாம்னு பன்னுவேன்..

இப்பவே அவளுக்கு 21.. ஊறுக்கா போட்டுட்டு உக்கரவச்சுக்கோங்கோ.. இப்பவே அவ சம்பாத்தியத்துக்காகத்தான் அவளுக்கு இடமே நாம பார்க்க ஆரம்பிக்கலைன்னு உங்க மனுஷங்களே சொல்ராங்க...

அப்பா கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாய் இருந்தார்... முகம் கழுத்து என வியர்வை வழிந்தது..
"எனக்கு உடம்புக்கு வந்து என் கொழந்தை வாழ்க்கை பாதிச்சுடுச்சே... பாதிச்சுடுச்சே" என்று புலம்பியவர் தான்... நெஞ்சை கையில் பிடித்துக் கொண்டு சாய்ந்தார்... இரண்டாவது அட்டாக்.
மீண்டும் அவர்கள் தான்... நல்லவர்களோ..கெட்டவர்களோ.. பலன் எதிர்பார்த்து செய்தார்களோ .. இல்லையோ.. அவர்களால்தான் அப்பா பிழைத்து எழுந்து வந்தார்.. ஆனால் இந்த முறை ஒரு லட்சம் செலவு செய்ததாக சொல்லிக் கொண்டார்கள்.. கணக்கு கேட்கும் நிலைமையில் இவர்கள் இல்லை..

இங்க பாருங்கம்மா.. சந்தோஷமோ.. துக்கமோ.. எதையும் வேகமா அவர்கிட்ட சொல்லிடாதீங்க.. குழந்தையைப் போல பார்த்துக்கணும்.. அப்படிப் பார்த்துக்கிட்டா.. தாராளமா.. சந்தோஷமா இன்னும் நிறைய காலம் உங்களோட இருப்பார் அவர்..- டிச்சார்ஜ் ஆகும் போது டாக்டர் சொல்லிய அட்வைஸ். நிறைய காலம் உங்களோட இருப்பார் என்ற வார்த்தைக்கு டாக்டர் தந்த அழுத்தத்தில் அவள் அப்பாவின் உடல் நிலையை உணர்ந்துக் கொண்டாள்.

அப்பாவின் உடல் நிலை.., அம்மாவின் ஆக்ரோஷம், மாமாவின் சாணக்யம், நட்ராஜின் அராஜகம்.. இவை அத்தனையும் எதிர் கொண்டு.. சுஜீத்தை கரம் பற்ற .. அவள் நாவல் கதா நாயகியோ... திரைப்பட புரட்சிப் பெண்ணோ இல்லை. சாதாரண வேளாளத்தி... எதோ படித்துவிட்டதால்.. அரசாங்க உத்யோகம் கிடைத்துவிட்டதால்.. கிண்டலும் கலாய்ப்புமாக.. ஆர்ப்பரிக்கும் துணிச்சலோடு இருப்பதாக பந்தா பண்ணும் பயந்தாங்கொள்ளி." காதல் வந்தா உடனே சொல்லிடனுமா? சொல்லமயேத்தான் சாகனும்.. உனக்கு விதிச்சது அவ்ளவுதான்னு தேத்திக்கனும்." என தனக்குத் தானே பேசி.. ஒரு நாள்ள எப்பெப்போ நேரம் கிடைக்குதோ அப்பப்பல்லாம் தனியாகப் போய் அழும் லூசு அவள்.அவளிடம் போய் "ஐ லவ் யூ பவி... மேடம்.. நகர்வலம் வந்து காட்சி கொடுத்திட்டாலும்னு " குத்தலாகப் பேசினால் அவள் என்ன செய்வாள்.. மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு ஜுரத்தில் படுப்பதைத்தவிர.

------------------------------------------------

அக்கா உனக்கு போன்... (ஜுரம் வந்ததிலிருந்து அக்கா ஆகிவிட்டாள்.. வாடி போடி எல்லாம் மறைந்து அன்புள்ள அக்கா என்றழைக்கப்பட்டாள் ஆகாஷால்) அவசரமாக குளித்து வெளியில் வந்து செல்லை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டபடியே..
hello யாரு என்றாள்

நான் சுஜீத் பேசறேன் பவி..

அவனது குரல்.... அவளது உள்ளத்தை நிறைத்த அவனது குரல்.. அந்த குரலுக்கு அவ்வளவு ஈர்ப்பா..? அவனது குரல் அவளது உயிருக்குள் பரவி உறைந்தே போனாள்.. call ஐ கட் பண்ணுவது எப்படி என்று கூட மறந்து போனது அவளுக்கு...

பேச மாட்டியா என்னோட? ப்ளீஸ் லைனை கட் பன்னாதே.. கட் பன்னின.. அவ்ளவுதான்..

என்ன மிறட்ரியா.. கட் பன்னா என்ன பன்னுவ?

சிம்பிள்.. இன்னொரு கால் பன்னுவேன்..உன் குரல் கேப்பேனான்னு இருந்தேன் பவி.. உன்னோட நிறய பேசனும்

சொல்லு - என்றாள்

உன்னைவிட்டுட்டு என்னால இருக்க முடியாது

வேற ஏதாவது பேசு சுஜீத்

இன்னும் ஏன் பிடிவாதம் பிடிக்கற பவி.. நீ என்னை விரும்பறயோ இல்லையோ.. நான் உன்னை விரும்பறேன் பவி.. நீ இல்லாம நான் இல்ல.. எனக்கு நீ வேணும் பவி..

அப்பொ அன்னைக்கி ஏன் போறத்துக்கு முன்னாடி bye சொல்லிட்டு போய்டுன்னு சொன்ன?

வலுக்கட்டாயமாத்தான் அப்டி சொன்னேன்.. மரைன் கோர்ஸ் கடைசீ நள்ள சீட் கிடைச்சுடுச்சு... மறு நாள் கொச்சின் போய் ஜாய்ன் பண்ணணும்.... அந்த கோர்ஸ் காம்பஸ்ல செல் நாட் அலௌட்... உன்னை விட்டுட்டு எப்டி போறது? உன்னை மறக்கனும்னா உன்னோட சண்டை போட்டாத்தான் முடியும்.. அதான் அன்னைக்கு அப்டி சொன்னேன்... உனக்கு அப்டி எஸ்.எம்.எஸ். அனுப்பிட்டு.. நான் தனியா போய் அழுதேன் பவி.. நாலு பேக்கெட் சிகரெட் பிடிச்சேன்..

நாலு பேக்கெட்டா...! அடுக்குமாடா இது?

அதை விடு.. உன்னை நான் பார்த்தேன் பவி.. நீ அழகு பவி.. ரொம்ப அழகா இருக்க

அடப்பாவி.. போய் சொல்லாத.. எப்ப பார்த்த..!? எங்க பார்த்த!?

ஜூலை 7.. ஸ்பென்சர்ஸ்ல hand bag வாங்கிட்டு இருந்த...

அட ஆமாம்.. ஆனா நான் தான்னு எப்டிடா கண்டு பிடிச்ச..!?

.. வேற எப்டி..? எஸ்.எம்.எஸ் வழியாத்தான்... அன்னைக்கு நான் அக்காவுக்கு பர்த்டே ப்ரசண்ட் வாங்க வந்தேன்... நீ ப்ளாக் சூரி போட்டிருந்த.. குனிஞ்ச தலை நிமிராம எஸ்.எம்.எஸ் பண்ணிட்டிருந்த.. சூரிதாரை விட.. நீ மெசேஜ் பண்ணின அழகுதான் எனக்கு அது நீயா இருக்குமோன்னு லின்க் பண்ண தோணுச்சு.. பிளாக் சூரி போட்டவங்கல்லாம் பவித்ரா ஆக முடியுமா என்ன..?

ம்.. அவளுக்கு நினைவு வந்தது

என்ன பன்ற? – எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தான்

ஷாப்பிங்.... ஸ்பென்ஸர்ஸ்ல – பதில் அனுப்பினாள்

தனியாவா போன?

இல்லலல்ல.. ரம்யா கூட இருக்கா

ஒகோ... சரி.. என்ன கலர் ட்ரஸ் போட்டிருக்க?

ட்ரஸ் கலர்லாம் உனக்கெதுக்கு?

இன்னைக்கு ப்ளாக் கலர் போட்டவங்களுக்கெல்லாம்.. வாழ்க்கையில் இனிய திருப்பம்னு இந்த புக்ல போட்டிருக்கு.. நான் ப்ளாக் அண்ட் ப்ளாக்.. எனக்கு எப்பவுமே அதிர்ஷ்ட்டம் தான்.. மேடம்க்குதான் அதிர்ஷ்ட்டம் இருக்கோ என்னவோ – என பதில் வந்தது

Hello... நான் இன்னைக்கு புல் ப்ளாக் சூரி.. பிளாக் colour clip, பிளாக் cheppals... பிளாக் பொட்டு.. பிளாக் hand bag .. தெரிஞ்சுக்கோ.. உன்னைவிட நான் அதிர்ஷ்ட்டசாலி.. ஒகே..

அப்ப சரி.. பிளாக் டீ வாங்கி குடிங்க நீயும் உன் ப்ரண்டும்

நினைவலைகள் முடிந்தது

அடப்பாவி.. அவ்ளோ நெருக்கமா பார்த்திருக்க.. என்னொட பேசத் தோணலயா உனக்கு..?

நீயே வந்து என்கிட்ட பேசும்போது எனக்கு எதுவுமே தோணல பவி....

என்னது... நான் வந்து உன்கிட்ட பேசினேனா? எப்போ?

இந்த bag நீங்க செலக்ட் பண்ணிட்டீங்களா? வேணாம்னா நான் எடுத்துக்கவா? ரொம்ப நல்லாருக்குன்னு பேசினியே நினைவிருக்கா?

அட.. ஆமாம்.. அப்படித்தான் பேசி இந்த bag வாங்கினோம்.. அய்யோ சுஜீத்.. உன்னை நான் பார்த்திருக்கேனா? மெல்ல மெல்ல அவன் உருவம் மனக் கண்ணில் தோன்றியது.. அவனது உயரம் முதலில் மனதில் பதிந்தது நினைவுக்கு வந்தது.. எவ்ளோ உயரம் இவன் என தான் நினைத்ததும் நினைவுக்கு வந்தது.. அப்புறம்.. அவன் முகம்.. அழகா இருக்கான் பையன் என தான் மார்க் போட்டதும் நினைவுக்கு வந்தது.. அவனது அகன்ற தோள்களும் பிளாக் டீ ஷர்ட்டும்.. நினைவுக்கு வந்தன.. இவனும் இன்னைக்கு புல் பிளாக் கலர் டிரஸ் போட்டிருக்கான்.. இவனுக்கும் அதிர்ஷ்ட்ட நாள் போலிருக்கு என்று நினைத்ததும் நினைவுக்கு வந்தது.

ஒரு நிமிஷம் இரு சுஜி நீ தொட்டு தந்த bag அங்க இருக்கு .. இரு அதை எடுத்துட்டு வரேன்..- என்று ஓடினாள்

அவளது கூந்தலிலிருந்து சில்லென்ற நீர் துளிகள் தரையில் சிதறின ஆனால்.. அவளது கண்களிலிருந்துசூடான கண்ணீர் துளிகள் தரையில் சிதறின..

அழறியா பவி.. என்னைக்கோ நான் தொட்டு தந்த bagனு அதை இப்ப எடுத்துட்டு வற ஓடினியே.. இதுக்கு பேரு லவ்வுன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்வாங்க..?

பதில் பேசவில்லை அவள்.. பேச நினைத்தாலும் காதலாலும், கண்ணீராலும் நெஞ்சம் அடைத்தது அவளுக்கு...

பவி.. லைன்ல இருக்கியா.. வச்சுடாதே பவி.. இந்த போன்காலுக்காக நான் ஏங்காத நாள் இல்லை பவி.. நடுவில மெசேஜ் அனுப்பினேன் பதில் இல்லை.. கால் பண்ணா செல் off பண்ணிட்ட.. நான் எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? போன்னு சொன்னா உடனே போயிடனுமா?

அடப்பாவி ...போறத்துக்கு முன்னாடி bye சொல்லிட்டுப் போன்னும் சொல்லுவ..
திரும்பி வந்து..” போன்னு சொன்னா உடனே போயிடனுமான்னும் கேப்பியா?

சண்டைல இதெல்லாம் சகஜம் பவி..-என்றான்

கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டியா சுஜித்..?

ஆச்சு.. இன்னும் மூணு மாசம்.. முடிச்சுட்டா.. நேவில வேல கிடைச்சுடும் நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு எனக்கு சமைச்சு போட்டா போதும்

வேண்டாம் சுஜீத்.. வேண்டாம் .. நாம் பேசறதை இதோட நிறுத்திடுவோம்.

ஏன்.. ஏன் பவி என்னை வேண்டாங்கற.. நான் அழகா இல்லயா?

என்னைவிட நீதான் அழகாயிருக்க.. நான் உனக்கு சூட் ஆவேனோ இல்லயோ!

சூட் ஆகறதா? என் மனசு முழுக்க நீதான் இருக்க... சரி .. நாம எப்ப மீட் பண்லாம் பவி.. லீவ்ல வந்திருக்கேண்டா.. உன்னை பாக்கணும்போல இருக்குப்பா.. ப்ளீஸ்.

இதற்கு மேலும் அவளால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ன?

அத்தனையும் சொன்னாள்.. அப்பாவிற்கு வந்த முதல் அட்டாகிலிருந்து.. போனவாரம் அவளுக்கு காய்ச்சல் வாரம் ஆனது வரை சொன்னாள்.. அப்பாவுக்காக.. அப்பாவுக்காக மட்டுமே தனது வாழ்க்கையில் எதையும்.. அவன் உட்பட எதையும் இழக்க தயாராயிருப்பதை சொன்னாள்.

அவ்வளவையும் அமைதியாக உன்னிப்பாக கேட்டுக் கொண்டான்...

இவ்ளோதானா ப்ரச்சனை..? இதுக்கா ரேவதி ஸ்டைல்ல மூக்கை சிந்தி துடைச்ச? என்றான்

என்னது இவ்ளோதானான்னு கேக்கற? எவ்ளோ ப்ரச்சனை இருக்கு.. அப்பா எதோ நடமாடிட்டு இருக்காரு. இப்ப போய் அப்பா.. நான் சுஜீத்தை லவ் பன்றேன்.. அவனையே கல்யாணம் செஞ்சு வைங்கன்னு நான் போய் கேக்க முடியுமா? அம்மாவை எப்டி சமாளிக்கறது? அந்த நட்ராஜ்.. எங்க மாமா.. இவங்களை சமாளிக்க முடியுமா? எல்லாத்தையும் விட அப்பாவை பத்ரமா பாத்துக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு..

நீ சொல்றதும் வாஸ்தவம் தான் பவி.. சரி எதுக்கு.. உனக்கும் ரிஸ்க்கு..? எனக்கும் ரிஸ்க்கு? அப்ப என்னை மறந்துரு? என்று போனை வைத்துவிட்டான்.

விக்கித்து சிலையாய் நின்றாள்... அழுதாள்.. தேம்பித் தேம்பி அழுதாள்.. லவ் யூ பவின்னு சொன்னியேடா..? நீயிலாம நான் இல்லைன்னு சொன்னியேடா? ஏண்டா.. ஏன்டா இப்டி படுத்தற.. இந்த ஆம்பளைங்க எல்லாரையும் நிக்க வச்சு சுடணும்.. அழுதபடியே திட்டி தீர்த்தாள்.
----------------------------------------------------------------------------------

அம்மா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்மா.. அதான் நிச்சயம் ஆயிடுச்சு இல்ல.. ஒரே ஒரு தடவை ..கோயிலுக்குத்தானேமா போறோம்னு சொல்றோம்.. ப்ளீஸ்மா..

“ நிச்சயம் ஆனாத்தான் இன்னும் ஜாக்ரதையா இருக்கணும்னு சொல்வாங்க.. ஒருத்தர் கண்ணுபோல இருக்காது.. எனக்கு தெரியாது.. உங்கப்பா அனுப்பினா போங்க “ என்றாள் அம்மா

Hi அத்தை.. இந்தாங்க சின்ன மிக்சி ஜார்.. அம்மா சொன்னாங்க .. அன்னைக்கு விருந்து நடக்கும் போது இது இல்லாம கஷ்ட்டப்பட்டீங்கன்னு – என்று கொடுத்தான். அம்மாவுக்கு பாதத்திலிருந்து முழங்கால் முட்டி வரை காணாமல் போய்விட்டது.. நெக்குருகி நெகிழ்ந்து போய் விட்டாளாம்.

கிளம்பு... சீக்கிரம்.. என்று சைகையால் இவளிடம் சொல்லிவிட்டு.. அப்பா பக்கத்தில் போயி பவ்யமாய் அமர்ந்து அவருக்கென வாங்கி வந்த புத்தகங்களை தந்தான்..

ஆகாஷ்க்கென வாங்கி வந்தது வேற என்னவாக இருக்க முடியும்.. அதேதான்.. கிரிக்கெட் பேட்டும், ஷட்டில் காக்கும்தான்.

சரிப்பா .. போயிட்டு சீக்கிரம் வந்துடனும்.. கல்யானத்துக்கு முன்னாடி இப்படி அனுப்பறது தப்பு.. இவ காய்ச்சல்ல விழுந்து எழுந்து பொழைப்பாளான்னு இருந்தது.. கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போறீங்க.. பொய் சொல்லக் கூடாது “ – வாசல் வரை வந்து வழி அனுப்பினார் அப்பா. தெம்புதான்.. மகாதேவ முதலியாருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.. என் செல்லம்ப்பா நீங்க என மனதுக்குள் கொஞ்சினாள்.

சென்னையில் காதலிப்பவர்கள்.. அல்லது காதலிக்க விண்ணப்பிக்கும் பசங்க அனைவரும்.. தங்கள் காதல் வளர்ந்து.. அந்தக் காதலே கல்யாணத்திலும் தொடரனும்னு – அபத்தமா, முன்ன பின்ன யோசிக்காம, தெரியாத்தனமா, அவசரப்பட்டு வேன்டிக்கும் போது இப்டித்தான் வேன்டிக்குவாங்க ...” அப்பா பழனி ஆண்டவா.. எங்க காதலை காப்பாத்து... எங்க காதல் .. சக்ஸஸ் (!?) ஆயிடுச்சுன்னா... இந்த E.C.R ரோட்ல.. டூ வீலர்ல இறுக்க கட்டி புடிச்சிகிட்டு வேகமா அம்பது தடவை போயிட்டு வரோம்... நிச்சயம் ஆயிடுச்சுன்னா அவ துப்பட்டாவால அவ தலை முழுக்க மூடி.. அதுமேல என் Helmetடை மாட்டி.. மூஞ்சி முகறை தெரியாதபடிக்கு அவளை தள்ளிக்கிட்டு இதே E.C.R ல ஒரு நாளைக்கு நாலுதடவை வரேன்.. அதுக்கு நீதான் கருணை காட்டனும்னு வேண்டிக்குவாங்க.

சென்னை பொண்ணுங்க எப்டின்னா..- “அம்மா முண்டகக் கண்ணி தாயே.. அவன் என்னை லவ் பண்ணி.. .. அதுக்கப்றமும் என்னையே கல்யாணம் பன்னிக்கனும்னு லூஸ்தனமா முடிவெடுத்ததும்.. எவ்ளோ டைட்டா போடமுடியுமோ அவ்ளோ டைட்டா ஜீன்ஸ் ஷர்ட் , ஜீன்ஸ் பேண்ட்.. போட்டுகிட்டு.. அவனை டூ வீலரே ஓட்டவிடாம, நெறிக்றாப்ல அவன் கழுத்தை கட்டிகிட்டு, அவன் மேல சாஞ்சுகிட்டு இதே E.C.R ல sunday.. sunday ride வரோம்மா.. அதுக்கு நீதான் அருள் புரியனும் தாயேன்னு” – வேண்டிக்குவாங்க.
சுஜீ அண்ட் கோவும் சென்னை சிடிசன்கள் தானே.. ?விதிவிலக்காக முடியுமா..? வான்புகழ் E.C.R ரோடில் அறுபதில் விரைந்தது சுஜியின் Hero.

மெதுவா போ சுஜீத்.. பயமா இருக்கு

எந்தெந்த வண்டியை எவ்ளோ வேகம் ஓட்டணும்னு எனக்கு தெரியும் பவி.. சரி நாம போகப்போர கோயில் சாமி என்ன சாமின்னு சொல்லு பார்ப்போம்

நித்யகல்யாணப் பெருமாள்... அதுகென்ன இப்போ?

அதுக்கென்னவா.. தினம் ஒரு கல்யாணம் பண்ணிக்குவாராம்..

உன்கிட்ட வந்து சொன்னாரா.. இது இது .. இப்டி இப்டின்னு..?

எது எது எப்டி எப்டி..? என்கிட்ட் எதுவும் சொல்லலையே... சரி அவர் கதை நமக்கெதுக்கு.. ? நம்ம கதைக்கு வா.. எனக்கும் இடுப்புன்னு ஒன்னு இருக்கு பவி

ஆமா இருக்கு

உனக்கும் கை ந்னு ஒன்னு இருக்கு பவி

இதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல சுஜித்

நான் இவ்ளோ ஸ்பீடா ஓட்ரதே என் இடுப்பை உன் வளைகரங்கள் வளைக்குமான்னுதான்..!

அம்மா சொல்லி அனுப்பினாங்க.. தொட்டு கிட்டு பேசிக்க கூடாது.. தனியா மறைவா கூப்ட்டா போகக் கூடாதுன்னு

வேகமாய் போய்க் கொண்டிருந்த வண்டி ப்ளாட்பார்ம் பக்கத்தில் ஓரம் கட்டப்பட்டது.. கொஞ்சம் பயந்துதான் போனாள் அவள்.. ரோஸ் நிற டைல்ஸ் பதித்த ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்...

ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும் இப்போ.. - என்றான்

என்ன ரெண்டுல ஒன்னு..?

என் இடுப்பை பிடிச்சுகிட்டு வறியா..? இல்லை Hero ஓட்றியா?

நான் ஏற்க்கெனவே Heroவத்தானே ஓட்டிட்டு இருக்கேன்?

நான் சொல்றது வண்டிய..- என்றான்

இந்த வண்டியா.. எனக்கு கியர் போடத் தெரியாதே - என்றாள்

இதோடா.. கியர் போடத் தெரிஞ்சா... ஓட்டி ஓரங்கட்டிடுவீங்களோ..? குள்ள கத்ரிக்கா.. மவளே.. மரியாதையா இடுப்பை பிடிச்சுகிட்டு வா.. அவனவன் என்னை வேற மாதிரி பாக்கறான்.

வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுத்தது

அமைதியா அந்த இளம் காலை பயணத்தை ரசித்தனர்.. நிறைய பேசனும் என்று நினைத்தாலும் தற்போது ஏதும் நினைவிற்கு வரவில்லை..

சுய நினைவுக்கு வந்தவளாக... நான் ஜோக் சொல்லட்டா சுஜீ? என்றாள்

மீண்டும் வண்டி வேக வேகமாய் ஓரங்கட்டப்பட்டது.. அவளும் ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்..எதுக்கு நிறுத்திட்ட? - என்றாள்

நிச்சயதார்த்தம் ஆனவங்களுக்கு டைவர்ஸ் குடுப்பாங்களா பவி - என்றான்

எதுக்கு கேக்கற?

தடால்ன்னு தூக்கிப் போட்டாப்ல நீ ஜோக் சொல்றேன்னுட்டியா.. ரெண்டு திராபைங்களை ஒரே சமயத்துல என்னால சகிச்சுக்க முடியாது.. அதனாலத்தான் – என்றான்..

போ ..டா.. – என்று சிணுங்கினாள்

மீண்டும் வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுத்தது

ஆரம்பத்திலேயே நீ என்கிட்ட பொய் சொல்லியிருக்க பவி

என்ன சொன்னேன்?

உன் பேரு பவித்ரான்னு பொய் சொல்லியிருக்க

ஆமா சொன்னேன்..

அது தப்பு இல்லயா?

Hello... அப்ப நீ என் ப்ரண்ட் கூட கிடயாது.. ஜஸ்ட் எஸ். எம்.எஸ். ப்ரன்ட்தான்.. அப்போபோயி உனக்கு சத்யப்ரமாண பத்ரமா எழுதி தர முடியும்..? - என்றாள்

ஆமாம்.. அதுவும் வாஸ்த்தவம்தான்..-என்றான்

மீண்டும் வண்டி வேக வேகமாக ஓரங்கட்டப்பட்டது.. அவள் இறங்கி நின்றாள்..

இப்ப சொல்லலாமில்ல..? என்றான்

உனக்கு தெரியுமில்ல-என்றா

திரும்ப சொல்லலாமில்ல..? - என்றான்

ஐய்யோ.. ஆள விடு - என்றாள்

இந்தப் பேர் இல்லயே.. ஜாதகத்துல வேற போட்டிருந்ததே..?

சரீ.. சரீ.. சொல்றேன்.. தமிழ்ல சொல்லட்டா, சமஸ்கிருதத்ல சொல்லட்டா..?

எந்த லேங்வேஜா இருந்தாலும் ஒரே பேர் தானே?

இல்லை.. தமிழாக்கம் பண்ணா என் பேரு வேற - என்றாள்

அப்ப தமிழ்லயே சொல்லு - என்றான்

என்னோட பேரு வெண்மை

ஸ்வேதான்னா வெண்மையானவள்ன்னு அர்த்தம்.மொத்தம் எனக்கு மூணு பேரு
அப்டியா இதெல்லாம் சொல்றதில்லயா?.. என்றான்

என்னென்ன பேரு?

ஜாதகபேரு சரஸ்வதி, வீட்ல கூப்ட்றது பவித்ரா...ஸ்கூல் ரெகார்ட்ஸ்ல ஸ்வேதா – ஸோ கால் மீ வெண்மை.. ஒகே

அம்மா வெள்ளையம்மா.. நாங்க உங்களை கருவண்டுன்னு கூப்பிடுவோம்

ஏன் கருவண்டு..? என் கண்கள் கருவண்டு போல மின்னுகிறதா..?

இல்லை நீ என்னைவிட கருப்பு இல்லயா ?அதான்..

போ.. டா.. மீன்டும் சிணுங்கினாள்

சீ.. பைத்தியம்.. பொன் வண்டுபோல துரு துருன்னு இருக்க இல்லயா அதனால சொன்னேன்.

அப்ப.. ஸ்மார்ட்டுன்னு சொல்ற..?

அதெல்லாம் ஒன்னுமில்ல ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே நம்பிட்றதா - என்றான்

சரி.. சரி.. ரொம்ப ஆச படற.. கூப்டுக்கோ....பர்மிஷன் கிராண்ட்டட்

இந்த பர்மிஷன் மட்டும் தானா பவி...

வண்டி எடுக்கறியா.. கோயிலுக்கு போய்ட்டிருக்கோம்..

சரீ.. அப்ப சுஜீத்ங்க்ற என் பேரை தமிழாக்கம் செஞ்சு சொல்லுங்க புலவி - என்றான்

ம்... சமஸ்க்ருதத்தில் சு – என்றால் நல்ல, மங்களமான, மிகச் சிறந்த- அப்டீன்னு அர்த்தம் ஜீத் என்றால் – வெற்றி என்று அர்த்தம்.. ஸோ உன்னொட பேரு தமிழ்ல
நல்வெற்றின்னு அர்த்தம்- என்றாள்

ஐயையோ.. வெள்ளையம்மா.. என் பேரு நல்லாவேயில்ல வெள்ளையம்மா..- என்றான்

போதும்.. தாங்கல .. கிளம்பலாம்

வளைகரங்கள் வளைக்க வண்டி வேகமெடுதது

இளம் வெய்யில், இளங் காற்று.. இயற்கையே அழகுதான்...

இன்னும் நீ சொல்லலை என்றான்

என்ன சொல்லலை?

வண்டி மீண்டும் ஓரம் கட்டப்பட்டது, மீண்டும் ப்ளாட்பார்மில் இறங்கி நின்றாள்

என்ன சொல்லலை

ஐ லவ் யு சுஜீத்ன்னு இன்னும் முழுசா என் கண்ணை பார்த்து சொல்லலை.. சொல்லு இப்ப சொல்லு

இங்கயா..? இந்த ப்ளாட்பார்ம்லயா..!...?

hello... இது ப்ளாட்பார்மா?.. பாரின்காரனுக்கு காண்ட்ராக்ட் விட்டு கண்ணாடி போல மெயின்டெய்ன் பண்றான்.. இந்த ரோட்டோட அழகுக்கே அவவன் வண்டி எடுதிட்டு வரான்.. எவ்ளோ அழகா இருக்கு பாரு .. தூரத்துல தெரியற கடல்.. அடர்த்தியான மரங்கள்.. சூடே இல்லாத சூரியன்..ம்..சொல்லு

அதெல்லாம் இங்க சொல்ல முடியாது.. கோயில்ல வெச்சு சொல்றேன் என்றாள்.

அதுவும் சரிதான்.. நான் இயற்கை சாட்சியா சொல்லுன்னு சொல்றேன்.. நீ தெய்வம் சாட்சியா சொல்றேன்னு சொல்ற... சரி வா..

ஓரம் கட்டி.. ஓரம் கட்டி, அரட்டை அடித்து அரட்டை அடித்து நிறுத்தி நிதானமாகப் போனாலும் காலை 9 மணிக்குள் கோயிலில் இருந்தனர்

நீ கொடுத்து வச்சவன்பா.. தினம் ஒரு கல்யானம்.. தினம் ஒரு பொண்டாட்டி.. நான் பாரு ஒரே ஒரு பொண்டாட்டி.. அதுவும் இன்னும் கல்யானம் கூட ஆகலை.. – என்றான் சுவாமி சன்னதி நோக்கி.

என்ன சுஜீத் இது.. எங்க என்ன விளையாடறதுன்னு இல்லயா.. ஒழுங்கா வேண்டிக்கோ என்றாள்.
ப்ரகாரம் சுற்றி வரும் போது கொஞ்சம் இருட்டாக இருந்த இடத்தில் “ இங்க கொஞ்சம் நில்லு சுஜித், அப்புறம் கொஞ்சம் குனி“ என்றாள்

பவீ... வேண்டாம்.. என்ன இது? அவசரப்படாதே..அம்மா என்ன சொல்லி அனுப்பினாங்க..? கொஞ்சம் பொறுமையா இரு.. கல்யாணம் ஆகட்டும்.. என்றான்.. உதடுகளை கர்சீப்பால் துடைத்து பள பளப்பாக்கிக் கொண்டான்

அடச்சே.. சும்மா இரு சுஜித்.. என்று சொல்லிய படி அவன் கால்களில் விழுந்து வணங்கினாள்.. அவன் காதருகில் ஐ லவ் யு சுஜித்.. ஐ லவ் யு டா செல்லம் என்றாள்.

வணங்கி எழுந்தவளை முன் நுதல் குழல் ஒதுக்கி நெற்றியில் முத்தம் + குங்குமம் இட்டான்.

இன்னைக்குத்தான் இதெல்லாம்.. கல்யாணம் ஆகட்டுமே.. நூறு ரூபா நோட்டை கீழே போட்டா கூட குனிஞ்சு எடுத்து தர மாட்டீங்க - என்றான்.

குனிஞ்சு எடுப்போம்.. ஆனா தர மாட்டோம் என்றாள்.

ஊரெல்லாம் சுற்றிவிட்டு.. அம்மாவும் அப்பாவும் திரும்ப திரும்ப செல்லில் கூப்பிட.. சென்னை நோக்கி விரைந்தது அவனது கேரொ. நீண்ட நெடிய மனப் போராட்டத்துக்குப் பின் வாழ்க்கை பயணத்தை இனிதே துவங்கிய அலுப்பில் அவன் தோளில் சாய்ந்து மௌனமாக கண்மூடியிருந்தாள் பவித்ரா.. அவளுக்கு மனதில் இடம் கொடுத்து.. அவள் தலை சாய்க்க தன் தோள்களைக் கொடுத்து, அமைதியாய் இடக்கையால் கிராப்பை கோதியபடி கேரோவை ஓட்டினான் சுஜீத்.

மெல்லிய புன்னகை அவர்கள் அறியாமல் அவர்களின் இதழ்களில் தவழ்ந்தது..

இதுதான் காதலென்பதா..? இதயம் பொங்கிவிட்டதா..?

--------------------------------------------------------------------------------------------------


Hello.... கதாசிரியை..! என்னதிது...ம்... நடுவில ஒரு அத்யாயம் எழுதவே இல்லயா? வசதியா.. ரொமான்ஸ் ஸீன் மட்டும் அலுக்காம ஆறு பக்கம் எழுதியிருக்கீங்க..? அதெப்படி.. பவித்ராவோட ப்ரச்சனைகள் திடீர்ன்னு தீர்ந்து போச்சு.. அவங்க அப்பாவுக்காகப் பட்ட கடனை எப்டி அடைச்சாங்க? இவளோட லவ் எப்டி வீட்டுக்கு தெரிஞ்சது..? தெரிஞ்சதும் எப்டி சம்மதிச்சாங்க..? இதுக்கு அந்த நட்ராஜ் வில்லத்தனம் ஏதும் பன்னலயா?சுஜீத் வீட்ல எப்டி இதுக்கு சம்மதிச்சாங்க..? இந்த மாதிரி இனிய சுபம் எல்லாம் கதையிலத்தான் நடக்கும்.. இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஒவெர்.. தெரியுமா..

கமெண்ட் போட்ட நாங்க எட்டு பேரும் “ சஸ்பென்ஸ் தாங்கலை... சீக்கிரம்.. சீக்கிரம்.. ஒரு நாள் லீவ் போட்டுட்டாவது கதையை எழுதுங்கன்னு” மன்றாடி கேட்டுகிட்டது வாஸ்த்தவம் தான்.. அதுக்காக நடுவில ஒரு அத்யாயமே எழுதாம.. கதையோட நாட் பிரிக்காம.. இப்டி கடைசி ஸீன் மட்டும் எழுதறது .. அவ்ளோ நல்லால்ல ... நிஜமாவே ரொம்ப ஒவர்ன்னு சொல்றீங்களா..?

மேற்படி கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனும்னு ஆரம்பிச்சா இதே கதையை இன்னொரு அத்யாயம் நீட்டுவேன்... பதில் வேண்டான்னா.. வேற ஒரு புத்தம் புதிய லவ் ஸ்டோரி இருக்கு கைவசம்... அத ஆரம்பிப்பேன்... எது வசதி..?

கொஞ்சம் சென்ட்டி கலந்து நினைவுப் பெட்டகத்தின் நடு அத்யாயம் எழுதட்டா.. ?

இல்ல..ரொமான்ட்டிக்கா...புத்தம் புதிய லவ் ஸ்டோரி எழுதட்டா..?

தீர்மானம் செஞ்சு comment & command pls.

10 comments:

Jayaprakash Sampath said...

congrats priya... u made it...

இந்த மாதிரி ரொமாண்டிக்கா படிச்சு ரொம்ப நாளாச்சு.. என்னிக்காது நான் சினிமா எடுத்தேன்னு வெச்சுக்கங்க...காதல் காட்சிகளுக்கு நீங்க தான் வசனம்....

ps: நடுவுலே திடுதிப்புன்னு ஒரு புது கேரக்டரை ( நட்ராஜ் ) நுழைக்கிறது, போங்காட்டம்.

பரணீ said...

//கதையோட நாட் பிரிக்காம.. இப்டி கடைசி ஸீன் மட்டும் எழுதறது .. அவ்ளோ நல்லால்ல ... நிஜமாவே ரொம்ப ஒவர்ன்னு சொல்றீங்களா..?//

ஆமாம்.

நாட் பிரிக்காமல் முடிச்சாலும் கதை கலக்கலோ கலக்கல்.

பத்ம ப்ரியா said...

Hi icarus and Barani thanks for your comments.

Icarus still i have to understand your latest Hiqu poem kasada thapara..

Barani your photos are too good. Now i am able to visit your blogs.

Jayaprakash Sampath said...

//Icarus still i have to understand your latest Hiqu poem kasada thapara..//

well... that's a spoof article

u'll have to be a part of the tamil blogosphere ( read thamizmanam) , to enjoy the piece, and i guess you are not.

Pavals said...

soopperrr!! tats all for now..

(im out of station!! cudn't type tamil here. )

அருள் குமார் said...

chance-ஏ இல்லைங்க...! இந்த கதை ஏற்படுத்திய இனிய பாதிப்புகள் அப்படியே இருக்கட்டும். அதுவும் நீங்க சொல்ற பகுதி ரொமான்டிக் இல்லன்னு வேற சொல்றிங்க. இனிமேல் இந்த கதையில் எதும் தொடர வேண்டாம். நல்ல வேலை, ஆள் வச்சு அடிக்கிற வேலை இல்லாம பண்ணிட்டிங்க. அடுத்த கதையும் காதல் கதைன்னு சொல்லிட்டிங்க. சீக்கிரம் எழுதுங்க. ஆமா... இந்த கதைக்கு "நினைவுப் பெட்டகம்" -ணு ஏன் பேர் வச்சிங்க!

manasu said...

Hallo priya…

Ippa than 5 mints munbu unga ninaivu pettagam padithen…… “oru padi then” ayyo!!! eppadi namma kavithai…… copy nga…. Parthipanoda “kirukalkal” ku kalaigner ezuthiyathu!!!! unga hero sujith pazakkam enakkum ottikichu…. Avlo aaznthu padichirukken ( Priya-enna oru 5 KM irukuma..? kannan- 5 KM illinga kanakanden vivek joke mathiri boomiyoda adutha pakkam vara alavu aazlnthu)

Nalla irunthathunga… kathai na enna oru villan, hero, heroine ( heroine mattum rumba mukiyam….. director kooda vendam ) munnurai mudivurai climax ithellam venuma enna???? Oru nihazvai azaga, iyalba, sonna pothum….. solarthum konjam manasila nikira mathiri sollanum avlothan….

Ninaivu (O)pettagamum (desert irukirathala pettagam pathila ottagam ezuthitten sorry nga) konjam manasiala ninathunga (ippa utkara solli iurkken) eppadinaa….


Mazai peyyum pothu Car la (preferably Wagon R yellow colour ) glass full ah mooditu kannu moodi (kanna thorantha ethuthapila vara figure thanga theriyuthu…. Athu ennmo theriyala enna mayamo theriayala…. Figure vantha mattum ellam poiruthunga) ilayaraja voda “How to name it” ketkira mathiri……(ketrukingala?)

Kulichu mudichittu antha eeram nalla thuvattaama fan keela ninna kulichappa adicha kuliroda oru sinna thodarchi kidaikumla athu mathriri…….

Mazai peithu mudincha pinnal kathu adichu marithila irukka thuli vilunthu mazayin thodarchi ya sollum la athu mathiri…….


Coffee kudichapuram nakila konja neram antha suvai nikkumla anthamathiri…..

Kathai konja neram manasila ninnuchunga…. Athan… athethan…. Kavitha kavitha… illai katha….

Ethavathu magazine try pannalamla….. nanga mattum than kashtapadanuma….. tamiz koorum nalluluga makkal ellam kashtapadavendama….(ellorum inputrurikka ninaipathuveyandri verondrum ariyen paraparame……….)


Sari remba SMS pannathinga…. Unga viral venum adutha kathai ezutha….

kannan

பத்ம ப்ரியா said...

Hi
Icarus, Barani, Rasa, Balu, Arul Kumar & kannan.. my heartiest thanks to all of you. Your comments are encouraging.

Mr. Balu...there is no need to worry about the ways by which pavithra's problems had solved.. it is simple
1. suji convinced his father & mother and they discussed with pavi's father & mother and convinced them.
2.Suji attracted all -i.e pavi's father, mother and akash.
3.Due to the severe fever occured to pavi, her mother also worried about her selection of Natraj as Pavi's partner.
4.By obtaining loan from bank Pavi's father settles the amount to natraj's father .
4.Finally, as a notable rowdi, natraj is instructed by the local police to give attendence in the local police station. So he cant do any thing..
5.Finaly the information about suji&pavi's marriage is sent to natraj family while settling the loan without giving any time to react.
Thats all..subam

Then Mr.Arul kumar

Ninaivup pettagam - the title.. i selected this title as i liked it very much.

Pavithraa is still having in her cell's Archives
1. Hi Pavi.. enna panra? - sent by suji

2.pooidu..poraththukku munnaadi bye sollittu poidu - sent by suji

3.Pls pavi.. i cant live without you.. i love u pavi - sent by suji
she stored these memories as her prescious things.

I think for the word "memory" - in tamil Ninaivu is the suitable word, and the jewel box in which precious jewels and diamonds are stored are called in tamil as Pettagam. So, stored prescious memories in tamil - Ninaivup pettagam may be the suitable one.. ok.

Bye.. thanks.. M. padmapriya

அருள் குமார் said...

Oh...sorry padmappriya...! நான் செல் போனுடைய நினைவுப்பகுதி பத்தி யோசிக்கவே இல்லை. கதை மட்டுமல்ல தலைப்பும் மிக அருமை.

ப்ரியன் said...

ஹாய் பத்மா,

ரொம்ப நாள் கழிச்சு உங்க வலைப்பூ பார்த்தேன்(ஓவர் வேலைங்க சாரி!)ரொம்ப அருமையா கதைய முடிச்சிருகீங்க...கதையின் வேகம் அருமை...எடுத்தா படுச்சுட்டுத்தான் கீழே வைக்கமுடியும் ஒரு சில கதைகளை நடுவில விட்டா மனசு தாங்காது...அந்தமாதிரி அழுத்தமா...விறுவிறுப்பா எழுதுறது ரொம்ப கஷ்டம்...அது உங்களுக்கு நல்லா வந்திருக்கு...நினைவு பெட்டகம் தலைப்பும் அருமை...கதையும் மிக அருமை...முடிந்தால் "விகடனுக்கோ" "குமுதத்திற்கோ" அனுப்பி பாருங்களேன்...

இடையில் ஒரு அத்தியாயம் விட்டு அதை வாசகர்கள் எங்கள் கற்பனைக்கு விட்ட முயற்சி சரியே...அதை எழுதி இருந்தால் சாதாரண கதைப்போல் ஆகியிருக்கும்...

அப்புறம்,அவர்களைப் பிரித்திருந்தால் நான் கண்டிப்பாக சபித்திருப்பேன் தப்பித்தீர் பத்மா

கதை மட்டுமல்ல...கதை சொல்லப்பட்ட முறை...உபயோகபடுத்தப்பட்ட வார்த்தைகள் எல்லாமே அருமை பத்மா...

சர் போதும் நான் கதைப் பற்றி தனிதனியாக விலாவாரியாக எழுதினால் அது ஒரு பக்கத்தையும் தாண்டி ஓடிவிடும்...

சரி அடுத்த கதை...தொடர்கதை எப்பங்க...??