அதி காலையிலேயே,பூக்களின் வாசம் குளுமையான காற்றோடு கலந்திருக்கும் ப்ரம்ம முஹுர்த்தத்தில், தோழிகளின் கலகலப்பான சிரிபொலிகளின் இடையே , பலவித உணர்வு கலப்பினூடே, கரம் பற்ற போகிறவரின் கடைவிழி பார்வையை கலந்து, மலர் மாலையோடு அவரின் பக்கத்தில் அமர்ந்து, கழுத்தில் மாங்கல்யம் புனையப்பட வேண்டுமென அவள் செய்த கற்பனைகள் எதுவும் அவளது திருமணத்தில் நடக்கவில்லை. நல்ல வெயில் ஏறிய 9-10.30 முஹுர்த்தம்.
ஒரு சிறிய மலைக் கோயிலில், பனியில் நனைந்த கருங்கல் படிக்கட்டுகளில், பட்டு புடவை சரசரக்க, புது தாலிச்சரடு மினுமினுக்க கணவனின் விரல்களை பற்றியும் பற்றாமலும் நடந்து செல்லும் கல்யாணப் பெண்ணை பார்க்கும் போதெல்லாம், நாமும் இப்படித்தான் கல்யாணம் முடிந்ததும் கணவனுடன் முதன் முதலில் நடந்து செல்லும் இடம் கோயிலாகத்தான் இருக்கவேண்டும் என விரும்பியிருக்கிறாள் .ஆனால் அவள் திருமணம் நடந்ததோ புழுதி பறக்கும் மாநில நெடுஞ் சாலையில் இருந்த ஒரு பழைய திருமண மண்டபத்தில்.
“ உன் மாமியார் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கனும்னு சொன்னாங்க.. இந்த சத்ரம் தான் காலியா இருந்தது.. உடனே அங்க இங்க பிரட்டி பணத்த கட்டினோம்..” - தம்பியின் விளக்கம்..
திருமணம் நிச்சயமாகியதுமே “ மொதல்ல மேரேஜ் அட்வான்ஸ் அப்ளை பண்ணி.. பணத்தை கொண்டா..” என அலுவலகத்திற்கே வந்து அட்வான்ஸ் பணத்தினை வாங்கிக் கொண்டவன் இவன்.. அம்மா இவளது திருமணத்திற்காக போதுமான அளவுக்கு ரொக்கமாக பணம் சேர்த்து வைத்திருந்தாள் என்று மட்டும் இவளுக்கு தெரியும்.. ஆனாலும் இவளது திருமணத்தை காரணம் காட்டி புற நகரில் அம்மாவும் அவளது அண்ணனும் பக்கத்து பக்கத்து மனைகளாக வாங்கி போட்டிருந்ததில் ,அம்மாவின் மனையை வந்த விலைக்கு விற்று பணமாக்கினர் அப்பாவும், தம்பியும். இவளின் அப்பாவுக்கும் மாமாவுக்கும் ஆகவே ஆகாது.
“நாலும் பையனா பெத்துட்டான்னு திமிரு .. நான் என் பொண்ண கிணத்துலயாவது பிடிச்சி தள்ளுவேனே ஒழிய அவன் பசங்களுக்கு தரவே மாட்டேன்”. – அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை வான வெளியில் செல்லும் தேவதைகள் கேட்டு “ததாஸ்து” என்று சொன்னதாலோ என்னவோ.. மாமாவும் பெண் கேட்டு வரவில்லை.. பாழுங்கிணறும் நகர்ந்து வந்து அவளை விழுங்கிக் கொண்டது.
“இந்த வீடே வேண்டாம்.. நல்லவர்களோ.. கெட்டவர்களோ.. இனி என் உலகம் என் கணவர் வீடு.. இவர்களிடம் எதுவும் எதிர் பார்க்கக் கூடாது, வாழ்ந்து காட்டணும் “- என அவள் தீர்மானித்த போதும், உன் வாழ்க்கையை தீர்மானிக்க நீ யார் என்றது விதி.. அவள் எதிர் பார்த்ததை விட அவளின் புக்ககத்தினர் கெட்டவர்களாக, நய வஞ்சகர்களாக, ஈவு இரக்கமற்றவர்களாக இருந்தார்கள். அதை அவள் புரிந்துக் கொள்ளும்முன் காலம் கடந்திருந்தது.
பெண் குழந்தைகளை தன்னந் தனியாக, ஒற்றை குழந்தையாக வளர்க்கவே கூடாது. தனக்கு என்ன வேண்டும், அதை எவ்வாறு கேட்டு பெற வேண்டும் என்பது தெரியாமலும், வெளி உலக மனிதர்கள் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்பதை புரியாமலும் வளரும் பெண் குழந்தைகள் இந்த மோசமான சமுகத்தால் அழிக்கப்படுவது உறுதி.
இரண்டு , முன்று சகோதரிகளுடன் பிறந்து வளரும் பெண் பிள்ளைகள் போட்டியிடும் குணத்துடனும், போராடி வெல்லும் திறமையுடனும் வளர்கிறார்கள். முதல் நிகழ்விலேயே ..” ஓ.. இவர் இப்படி பட்டவரா?” என புரிந்துக் கொண்டு மனிதர்களை எளிதில் கையாளுகிறார்கள். சகோதரிகளின் வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு எதையும் எதிர் கொள்ளும் திறன் கொள்கிறார்கள்.
“ என்னடி இது..? நித்யா பதினாலு .. பதினைஞ்சு வயசு வித்யாசத்தில இருக்கரவர கல்யாணம் பன்னிக்கிட்டா? இப்பவே வயசு வித்யாசம் பளிச்சுன்னு தெரியுது“ – தான் தனது அலுவலக சக ஊழியையின் திருமணத்தில் தனது தோழியுடன் பேசியது பவித்ராவின் நினைவுக்கு வந்தது
“ நித்யாவுக்கு ரெண்டு அக்காங்க.. சின்னவங்களா, ரெண்டு வயசு வித்யாசத்துல இருக்கனும்ணு, ப்ரைவேட் வேலயா இருந்தாலும் பரவா இல்லை, வெளிய தெருவில போனா ஜோடி பொருத்தம் நல்லா இருக்கனும்னு அவங்கப்பா கல்யாணம் செஞ்சு வச்சாராம்.. இப்போ வேலை நிரந்தரமில்லாம.. வேற வேற கம்பெனி மாறினாலும்.. சாப்பாட்டுக்கு கஷ்ட்டமாம்.. அதான் நித்யா பார்த்தா.. அக்கா ரெண்டு பேரும் படற கஷ்ட்டத்துக்கு.. வயசு வித்யாசம் பெரிய ப்ரச்சினையில்ல.. கவெர்ன்மென்ட் வேலை இருக்கா.. சொத்து பத்து இருக்கான்னு பார்த்து இந்த மாப்பிள்ளயே வேனும்னு கல்யாணம் செஞ்சுக்கரா..” – என நீண்ட விளக்கமளித்தாள் பவியின் தோழி.
இது போல் தானே தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.. “எனக்கு அம்மா அப்பா நல்ல இடமாத்தான் பார்ப்பாங்க.. அது அவங்க ப்ராப்ளம் …அம்மா பார்த்து பார்த்து செலெக்ட் பன்னிட்டு இருக்காங்க எனக்காக..” என தான் அன்று நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பது இப்போது புரிந்தது. இப்போது புரிந்து எந்த பயனுமில்லை என்பதும் அவளுக்கு தெரிந்தது.
தனியாக அடக்கி வளர்க்கப்பட்ட பெண் குழந்தைகளே எளிதில் ஏமாற்றப் பட்டு, சுரண்டப்பட்டு, கடவுளாக பார்த்து காக்கவில்லையெனில் மண்ணிலேயே அடக்கம் செய்யப்படும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்.
பாரதி சொன்னபடி பெண்ணே “ ரௌத்திரம் பழகு”. பொறுமை பெண்களுக்கு அணிகலனே இல்லை.. கை விலங்கினை வளையல் என அணிந்து கொள்ளாதே. உனது சவ ஊர்வலத்திலேனும் அது கழட்டப்படுவது இல்லை.
வெகுளியாய் வளர்த்து திருமணம் என்ற பெயரில் காட்டு ஓநாய் கூட்டத்தில் தன் ஒரே மகளை அனுப்பும் படித்த தகப்பனைவிட, மூன்று சொட்டு எருக்கம் பாலை கொடுக்கும் ஏழை பாமர தகப்பன் மிக நல்லவன். தனது மகளின் மேல் உண்மையான பாசம் வைத்தவன் அவன். அதனால் தான் மன வலியோ, துரோகத்தின் வலிகளோ தெரியாத பருவத்தில் அக் குழந்தையை அவன் நிம்மதியான மரணத்திற்கு அனுப்பி வைக்கிறான்.
“ தாய் இல்லா பொண்ணு சீர் இல்லாம போகுது.. அவ அம்மா இருந்திருந்தா இதுக்கு சம்மதிப்பாளா? தவமா தவமிருந்து பெத்தாளேடி அவ..!! டாக்டரு.. எஞ்சினீயருன்னுதான் மாப்பிள்ளை பார்ப்பேன்னு சொல்லிட்டு இருந்தாளேடி அவ.. இருபத்திஅஞ்சு வயசு வரைக்கும் காக்க வச்சு, இந்த இடத்திலயா கொடுப்பான் இவ அப்பன் , ஒரு தாய் ஆயிரம் தகப்பனுக்கு சமம்.. ஆனா ஒரு தகப்பன் அரை தாய்க்கு கூட சமமில்லை.. என்னமோ போ..இவ தலை எழுத்து இப்படியா ..? இந்தப் பொண்ணை நினைச்சா கண்ணுல ரத்தம் வருதுடி..”
“ மாமியார்காரிய பாத்தியா .. ஸ்கூல் டீச்சரா இருந்து ரிட்டையர் ஆனவளாம் .. பசங்களை மிரட்டர தோரணையிலேயே இவ அப்பனயும் இவ தம்பியையுமே இப்படி மிரட்டறா.. பவி வாய் செத்தது.. அத என்ன பாடு படுத்தப் போறாளோ..? அவ கொண்டயும், அவ ஹேன்ட் பேக்கும்.. ராத்திரியில எதுக்குடி அவ கூலிங்க் க்ளாஸ் போட்டுக்கறா? –
“ஆறு மாசத்துக்கு முன்னாடி காட்ராக்ட் ஆபரேஷன் நடந்ததாம் “
“பவி கடைசி மருமகளா போறா.. மூத்தது, ரெண்டாவது, மூனாவது மருமகளுங்கள காணவே காணோமேடி !! “
“மாமனாருக்கு அவங்கள பிடிக்காதாம்.. அதனால கல்யாணத்துக்கே கூப்டலயாம்”
“ ஒரே நாத்தனாரு, வயசில பெரியவ, மூனாம் பெறப்புன்னு சொன்னாங்க.. அவளயும் மாப்பிள்ள அழப்பில காணோம்.. நாளைக்கு தாலிகட்டும் போது வெளக்கு யார் புடிப்பாங்க..?
“மாப்பிள்ளைக்கும் அவங்க அக்காக்கும் ஆகவே ஆகாதாம்..கூப்டா கூட வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். மாப்பிள்ளைக்கு நேர் மூத்தவர் இருக்கார் இல்ல..?
“ ஆமா.. பேங்க்ல வேலை செய்யறதா சொன்னாங்க”
“அவருக்கு அந்த வேலய வாங்கி கொடுத்ததே நாத்தனார்தானாம்.. இந்த மாப்பிள்ளயும் கொஞ்சம் மதிச்சு நடந்திருந்தா பெரிய தனியார் கம்பேனில வேலை வாங்கி தற்றதா இருந்தாங்களாம்.. இவர்தான் அக்கான்னாலே சிடு சிடுன்னுவாராம்”
“ இதெல்லாம் உனக்கு யார் சொன்னா?”
“அவங்க வீட்டு வேலைகார பாட்டி தான் சொல்லுச்சு..அவ மருமவ என் வீட்ல தான வேலை செய்யறா”
தாய் வழி பாட்டிகள், அத்தைகள் கல்யாண சத்திரத்தின் மாடியில் நின்று புலம்பியதை அவர்களுக்கு போர்வையும் தலையணையும் கொண்டு சென்ற பவித்ரா கேட்டுக் கொண்டுதான் நடந்தாள்.
“அவர்களின் அனுபவ அறிவு என்னைவிட பல விஷயங்களை அவர்களுக்கு புரிய வைத்திருக்கிறது. கல்யாணம் என்பது இவ்வளவு கடினமான விஷயமா?”… பவித்ராவுக்கு எதிர் காலத்தை நினைத்தால் பயமாக இருந்தது.
சிறு வயதில் பக்கத்து வீட்டு பெண்ணோடு கோயில் குளத்தில் விளையாடிய தருணத்தில் சர்ரென்று தண்ணீரில் முழ்கும் போது ஏற்பட்ட ஒரு நொடி உயிர் பயம் இப்போது வந்தது. தனது அலுவலகத்தில் நடந்த சில கல்யாணங்களையும், அந்த பெண்களின் இனிய முகங்களயும் பார்த்த போது கல்யாணத்தின் மீது வந்த நம்பிக்கை இப்போது கடைசி நிமிட மெழுகுவர்த்தியாய் கரைந்தது.
நாளை காலை கல்யாணம் முடிந்துவிடும்.. கடவுளே.. ஏதாவது நடந்து இந்த திருமணம் நின்று விடக் கூடாதா?..
என்னை காப்பாற்று முருகா…
அவளது வேண்டுதலை கேட்க கடவுள் அங்கு இருந்தார் …ஆனால் விதி என்ற அரக்கன்
“ ஷ்.. இது என்னுடைய விளையாட்டு.. நான் தான் சோழியை உருட்டுவேன்” ..- எனக் கூறி பவியின் வாழ்க்கையை புரட்டிப் போட்டான்..
அவள் அதல பாதாளத்தில் உருண்டு உருண்டு சென்று கொண்டே இருந்தாள்.
தொடரும்….
2 comments:
வணக்கம்,
என்னங்க, அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டிய உங்கள் தொடர் (எனக்கல்ல) இந்த பாகம் கொஞ்சம் அனைவர் எதிர்பார்ப்பையும் ஈடு செய்யவில்லை என்றே எண்ணுகிறேன். ஆனாலும் பவி வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலயை எங்களுக்கு ஏற்படுத்திய வரைக்கும் யு ஆர் தி கிரேட் .
இது இன்றும் நடக்கும் நிஜம் என்றால், கடவுள் மனிதனுக்கு 6ஆம் அறிவை கொடுத்தே இருக்க வேண்டாம். இப்ப அடுத்த பாகம் என்ன என காத்து இருக்கின்றோம். ப்ளீஸ் இன்னும் 5 வருஷம் காக்க வச்சிராதிங்க!
- அருண் சிவா
ஹாய் பத்மபிரியா,
முதல் மூன்று பதிவுகளை (திரும்பவும்) படித்துவிட்டு இப்போது தான் இந்தப் பதிவினைப் படித்தேன்.
அந்த சுவாரசியமும் குறையவில்லை, பவித்ராவிற்கு ஏதேனும் நல்லது நடந்து இந்த விருப்பமில்லாக் கட்டாயத் திருமணம் நின்று விடாதா என்ற வாசகனின் எதிர்பார்ப்பும் மாறவில்லை.
அருண் சிவா சொன்னது மாதிரி, இப்போவே 7 மாசம் ஓடிப்போச்சே... எங்க போயிட்டீங்க திரும்பவும்?
சீக்கிரம் சூடு ஆறுவதற்குள் முடித்து விடுங்கள்...
உங்களை மாதிரியே நானும் 'கனாக் காணும் காலங்கள்' என்று ஒரு தொடரை 6 பாகங்கள் பதிவிட்டுப் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். ஆறு வருடங்கள் ஓடி விட்டன.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.... (நிச்சயம் புதுப்பொலிவுடன் தொடருவேன் வெகு விரைவில்..)
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
Post a Comment