Sunday, January 22, 2012

நல்ல கதைதான்.....ஆனாலும்

இந்த போட்டியிலேயும் எனக்கு பரிசு கிடைக்கவே இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் :

மெகா பரிசுப்போட்டி – நல்ல கதைதான் ஹீரோ – கடைசி தேதி 15.6.2011

பின் வரும் நான்கு வரிகள் பத்ரிக்கை காரர்கள் தந்த கதை ஆரம்பம்

(ஜெயாவும், ஆதியும் கணவன் மனைவி. அழகாக போய்க் கொண்டிருந்த வாழ்வில் ஒரு இலையுதிர் காலம். ஆதிக்கு ஒரு பெண் கவிஞர் சுமதியின் தொடர்பு. நட்பாகத் தொடங்கி காதலாக உறவாக மாறுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே பிரிவினை. .. சண்டை. விவாகரத்தில் முடிகிறது. ஆதி, சுமதி வாழ்வில் இணைய.. ஜெயாவுக்கு அலுவலகத்தில் ஒரு தோழன் அறிமுகமாகிறான்….)

இனி வருவது என்னுடைய கற்பனை : ( 2 பக்கங்களுக்கு மிகாமல் கதை எழுத வேண்டும் என்ற நிபந்தனையால் இப்படி சுருக்கி எழுதி இருக்கிறேன்)

அவன் பெயர் கார்த்திக். - “எந்த கவிதை எழுதும் திறமை ஆதியை சுமதியுடன் இணைத்ததோ –அந்த எழுதும் திறமை உனக்குள் இருக்கிறதா என சோதித்துப் பார்.. பொக்கிஷம் போன்ற உன்னை விவாகரத்து செய்தது தவறு என ஆதி வருத்தப்பட வேண்டும் “ - என எழுதத் தூண்டுகிறான் கார்த்திக் . சுய பரிசோதனைப் போல, தன் வாழ்கையையே ஒர் கதையாக எழுதுகிறாள். கார்த்திக்கும் அவனது பெற்றோரும் அவற்றையெல்லாம் படித்துவிட்டு ப்ரம்மிப்புடன் பாராட்டுகின்றனர் .கார்த்திக்கின் தீவிர முயற்சியால் ஜெயாவின் கதைகள் பல ப்ரபல வாரப் பத்ரிக்கைகளில் ப்ரசுரமாகி ஜெயா புகழின் உச்சிக்கு செல்கிறாள். தன்னை தனக்கே புரிய வைத்து, பணம், புகழ் பெற்றுத் தந்த கார்த்திக்கு நன்றிக்கடன் செலுத்தியே தீருவேன் என மிகுந்த மன நெகிழ்சியுடன் , மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு தன் அலுவலக தோழி க்ரிஸ்டியிடம் தெரிவிக்கிறாள் ஜெயா. க்ரிஸ்ட்டி மிகுந்த குழப்பத்துடனும் சந்தேகத்துடனும் ஜெயாவை பார்க்கிறாள். ஜெயா கார்த்திக்கை மறுமணம் செய்து கொள்வாளோ என பயப் படுகிறாள்.. ஏன் என்றால் கார்த்திக் க்ரிஸ்டி இருவரும் காதலிக்கின்றனர். இது ஜெயாவுக்கு தெரியுமோ ? தெரியாதோ? நன்றிக்கடன் தீர்க்க ஜெயா என்ன செய்வாளோ என் பதறுகிறாள்.

குறிப்பு : - பின் வரும் 2 காட்சிகள் நிசப்தமாக திரையில் ஓடுகின்றன

ஜெயா கார்த்திக்கின் பெற்றோரிடம் சென்று நேரடியாக தைரியமாகப் பேசுகிறாள் . பலமணி நேர விவாதத்துக்குப் பின் அவர்கள் சம்மதித்து தலையாட்டுகிறார்கள் .(இவ்விரு காட்சிகள் மட்டும் மௌனமாக திரையில் ஓடுகின்றன) கார்த்திக் க்ரிஸ்டியின் கழுத்தில் தாலியை கட்டுகிறான். மதம் தடையாய் இருந்த கார்த்திக்கின் காதலை, தனது பேச்சாற்றலால், அவனின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடியச் செய்து தனது நன்றிக்கடனை தீர்க்கிறாள். தனது வீட்டிலிருந்து ஓர் லேடீஸ் ஹாஸ்டலுக்கு குடி பெயர்கிறாள். வயது வித்யாசமில்லாமல் அத்தனை பெண்களும் அவளுடன் மனமொன்றி பழகி தங்களது சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர். அவற்றையே தனது கதைகளுக்கான கருவாக எடுத்துக் கொண்டு அறிவு பூர்வமான தீர்வுகளை தன் கதைகளில் அவள் அளிக்கிறாள்.

இடை வேளை

ஜெயா சாகித்ய அகடெமி விருதையும் பெறுகிறாள். டெலிவிஷன் பேட்டிகளில், தான் எழுத்துலகில் இந்த நிலையை அடைய தனது கணவன் ஆதியும் ஒரு காரணம் என பெருமையாக கூறுகிறாள். அதனை பார்த்துக் கொண்டிருந்த ஆதி கண் கலங்குகிறான், சுமதியும் அதை கவனிக்கிறாள். அவர்களின் இரு குழந்தைகளும் அவர்களிருவரையும் கவனிக்கிறார்கள்.

பல லேடீஸ் ஹாஸ்டல், பல முதியோர் இல்லங்களில் மாறி மாறித் தங்கி பல நாவல்களையும், சிறு கதைகளையும், தொடர் கதைகளையும், பல நாடுகளுக்குப் பயணப்பட்டு அந்த அனுபவத்தை பயணக் கட்டுரைகளாக எழுதுகிறாள். ஒரு நொடியும் அயர்ந்து உட்காராத நீண்ட நெடும் பயணமாக அவள் வாழ்க்கையை ஓடிக் கடக்கிறாள்.

ஜெயா, ஆதி, சுமதி, கார்த்திக், க்ரிஸ்டினா ..அனைவரும் ஐம்பது வயதினை கடக்கிறார்கள். ஆதி-சுமதியின் இரு பெண் குழந்தைகள் கல்யாண வயதில். கார்த்திக் -க்ரிஸ்டினா தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் கல்லூரிப் பருவத்தில்.

ஓர் நாள் , விடியற் காலையில், நகரின் புற நகர்ப் பகுதியிலிருக்கும் ஓர் மருத்துவமனையிலிருந்து, ஜெயாவுக்கு தொலை பேசி அழைப்பு வருகிறது..அங்கு மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் ஒரு பெண்நோயாளி ஜெயாவுடன் பேச விரும்புவதாகவும் .. உடனே வந்தால் நல்லது எனவும் சொல்லப்படுகிறது. அவளால் வளர்க்கப் படும் கார்த்திக்கின் மகள் ஜெனிஃபெர் துணையுடன் ஜெயா தனது காரில் விரைகிறாள்.

அந்த நோயாளி – சுமதி.

தனது படுக்கைக்கு பக்கத்தில் நின்றிருக்கும் ஜெயாவை தன்னருகில் அமரச் சொல்கிறாள். “ ஆதியுடன் காதலில் விழுந்து, திருமணம் முடியும் வரை, ஆதி ஏற்கெனவே திருமணமானவர் என்ற விஷயம் எனக்கு தெரியாது, அப்படி தெரிந்ததும் , நீங்கள் விரும்பினால், நீங்கள், நான் , அவர் மூவரும் ஒன்றாக வாழ்ந்து வாழ்க்கையை பகிர்ந்துக்கொள்ள நான் அவரிடம் அப்போதே எனது சம்மதத்தை தெரிவித்தேன். ஆனால் அதை நடை முறை படுத்த அவரும் முயலவில்லை, நானும் வற்புறுத்தவில்லை. ஆனால்.. இப்போது நான் புற்று நோயால் மரணத்தின் வாசலில் நிற்கும் போது எனது பெண் பிள்ளைகளை ஒரு தாயின் ஆதரவோடு கரையேற்ற நீங்கள் தான் பொருத்தமானவர், அதே போல நமது கணவரின் இறுதி காலத்திற்கு ஏற்ற ஒரே துணையும் நீங்கள்தான்.. இடையில் வந்தவள்.. இடையிலேயே போகப் போகிறேன்.. தொடக்கத்தில் வந்த நீங்கள் தான் வாழ்வின் முடிவிலும் அவரை அணுசரணையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.. இதை நான் உரிமையாக உங்களிடம் கேட்கிறேன்.. எனது குழந்தைகளை கல்யாணம் செய்து கரையேற்றுவதை நான் யாசகமாகத்தான் கேட்கிறேன் ” என்றாள். அறையின் ஓரத்திலிருந்து ஆதியும், அவரது இரு பெண் பிள்ளைகளும் அழுதவண்ணம் இதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஜெயா அமைதியாக எழுந்து நின்று, சிறிது யோசித்து – “ சரி “ என சொல்லிவிட்டு வெளியேறுகிறாள்.ஜெனிஃபர் அதிர்ச்சியாகி “ அத்தை.. உங்களுக்கு சுய கௌரவம் இல்லயா? உங்களை வேண்டாம் என்று விவாகரத்து செய்தவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் திரும்பவும் உழைக்கப் போகிறீர்களா? தனக்கே இரு முறை திருமணம் செய்யத் தெரிந்தவருக்கு தனது மகள்களுக்கு ஒரு திருமணம் செய்யத் தெரியாதா.. இரக்கப் படுங்கள் ஆனால் ஏமாந்து விடாதீர்கள்.” என வாதிட்டபடி காரை ஓட்டுகிறாள்.

இனி காட்சிகள் மட்டும் : 1) சுமதி நகரின் ஒரு சிறந்த மருத்துவ மணைக்கு மாற்றப்பட்டு உயர் தர நவீன சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன, தேவையானால் அயல் நாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன - கட்டணம் ஏதும் இன்றி.

2) அதே மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு உயர் தர முதியோர் இல்லத்தில் ஆதி சிறப்புடன் கவனிக்கப் படுகிறார். –அவரிடமிருந்து கட்டணம் வாங்க மறுக்கிறார்கள் நிர்வாகத்தினர். அவர் அவ்வப்போது சுமதியை சென்று கவனித்துக் கொள்கிறார்.

3) ஆதியின் மகள்கள் இருவரும் ஜெயா ட்ரஸ்ட்டின்ன் கீழ் வரும் அந்த மருத்துவமனை, முதியோர் இல்லம், அனாதை இல்லம் மற்றும் லேடீஸ் ஹாஸ்ட்டல் ஆகிய அனைத்தின் நிர்வாக அலுவலகத்தில் பணியில் அமர்த்தப் படுகிறார்கள். திருமண தகவல் மையத்தினர் பல வரன் களின் ஜாதகத்தையும், புகைப்படத்தையும் ஆதியிடம் பரிசீலிக்க தருகின்றனர்.

4)ஜெயா ட்ரஸ்ட்டின் நிர்வாக இயக்குனரான கார்த்திக் ஜெயாவை சந்திக்க வருகிறார் . அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல்:

கார்த்திக் : சுமதியே வேண்டி கேட்டுக் கொண்டாள் ..அப்புறமென்ன? உன்னோட பெரிய பங்களாவில் நீ, ஆதி அவரது மகள்களோட சேர்ந்து வாழலாமே ஜெயா?.

ஜெயா: அப்படி வாழ்ந்தால் என்னென்ன செய்வேனோ அதை எனது ட்ரஸ்ட் மூலம் நாம் தான் செய்து விட்டோமே கார்த்திக் “.

கார்த்திக் : இள வயதை விட இந்த ஐம்பதுகளில்தான் ஆண்களுக்கு ஒரு மனைவியின் துணை மிக முக்கியம் ஜெயா.. ஆதியை முதியோர் இல்லத்தில் பராமரிப்பதை விட உனது கணவராக உன் வீட்டில் நீ பாதுகாப்பதுதான் முக்கியம் ஜெயா..”

ஜெயா : இந்த ஐம்பது வயதை விட, இருபதுகளில் தான் ஒரு பெண்ணுக்கு கணவனின் பாது காப்பு மிக முக்கியம் கார்த்திக், அப்போதே என்னை விவாகரத்து செய்து அனாதை ஆக்கியவர் அவர். நடு வாழ்வில் அனாதையானால் என்ன மன நிலை இருக்கும் என்பதை ஆதி உணர வேண்டும் கார்த்திக்”

கார்த்திக் : உனக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறது ஜெயா.. சுமதியே சொல்லிவிட்டாள்.. உன்னோடு தங்கள் வாழ்வை பகிர்ந்துக் கொள்ள விருப்பம் என்று.. இன்னும் என்ன.. ? “

ஜெயா : சுமதியே சொல்லிவிட்டால் ….? அவர்களுடன் போய் நான் வாழ வேண்டுமா.. ? இப்போது சொன்னதை அவளுக்கு உண்மை தெரிந்த அன்று சொல்லியிருந்தால் அவளை குற்றமற்றவள் என எண்ணி ஒரு வேளை நான் சம்மதித்திருப்பேனோ.. இல்லயோ.. ஆனால் இப்போது இது அர்த்தமற்றது “

கார்த்திக் : தழைய தழய பட்டுப் புடவையுடன், தளரப் பின்னி மல்லிகை பூ சூடி உன்னுடைய ஆதியின் கை பிடித்து உனக்குப் பிடித்த மலைக்கோவிலுக்குப் போய்.. வாழ்க்கையை அனுபவித்துத்தான் பாரேன் ஜெயா ”

ஜெயா: “ மலைக் கோயிலுக்கு வேண்டுமானால் கை கோர்த்துக் கொண்டு போகலாம் கார்த்திக், ஆனால் மரண தேவன் வாசலுக்கு தனியாகத்தான் போயாக வேண்டும், 25 வயதிலேயே விவாகரத்தின் மூலம் அதற்கு என்னை தயாராக்கியவர் ஆதிதானே கார்த்திக் ?

கார்த்திக் : வாழா வெட்டி என்ற பெயரை துடைத்துவிட்டு, உன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் ஜெயா.. ப்ளீஸ் “

ஜெயா: “யார் வாழாவெட்டி? எனது வாழ்க்கை அர்த்தமற்றதா..? சொல்லப் போனால் எனது வாழ்க்கை இப்போதுதான் முழு அர்த்தமுள்ளதாக இருக்கிறது கார்த்திக்.. என் அனாதை இல்லத்திலும், முதியோர் இல்லத்திலும் என் எழுத்தால் வந்த பணத்தால் பராமரிக்கப்படும் ஒவ்வொருவரும் நான் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னங்கள்.. அதில் ஆதியும் ஒருவராகி இன்னும் அர்த்தமுள்ளதாக்கி விட்டார்”

கார்த்திக் : “ஆதியை மன்னிக்கவே மாட்டாயா ஜெயா? “

ஜெயா : “ஆதி உன்னிடம் சிபாரிசு செய்யச் சொன்னாரா கார்த்திக்? “

கார்த்திக் : “அவர் சொல்லவில்லை.. ஆனால் அதோ தூரத்தில் அங்கு தனியாக கடலலைகளை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஆதியின் உருவம் என்னை எதோ செய்கிறது.. அவரை நீ கவனித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது ..”- என சொல்லிக் கொண்டே அவளது அறையை விட்டு சோகமாக வெளியேறுகிறார் கார்த்திக்.

அப்போதுதான் ஜெயா தன் அறையை விட்டு வெளியேறி சில படிகள் இறங்கி பால்கனியில் இருந்து பார்க்கிறாள்.. அவளது முதியோர் இல்ல நீண்ட புல் வெளியின் முடிவில் இருந்த சிமென்ட் பென்ச்சில் தனியாக கடலை நோக்கி உட்கார்ந்திருப்பது… அவளின் ஆதிதானே.. ?எவ்வளவு பரந்து விரிந்த தோள்கள்..? இப்போது குறுகி, நொறுங்கலாக.. ஓடிப்போய் ஆதியின் பக்கத்தில் அமர்ந்து “ உங்களுக்கு நானிருக்கிறேன் ஆதி” என அவரது கைகளை பிடித்துக்கொள்ள தோன்றியது அவளுக்கு.

தனது அறையில் மேஜையில் கைகளை ஊன்றி முகம் புதைத்து அழுகிறாள்.. “ கடவுளே எனக்கு திடமான மனதை கொடு.. என் சுய கௌரவம் எனக்கு முக்கியம்.. என்னை பலவீனமாக்கி மீண்டும் ஆதியுடன் சேர்த்து விடாதே.. எனக்கு மனோ பலத்தை தா முருகா” என வேண்டியவண்ணம் அமர்ந்திருக்கிறாள்.

தான் செய்வது தவறோ என்ற குற்ற உணர்ச்சி அவளுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. தனது திருமண ஆல்பத்தினை எடுத்துப் பார்க்கிறாள். ஆதியோடு வாழ்ந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ஆதியோடு பேசி ஆறுதல் கூறலாம் என அவள் வேகமாக எழுந்திருக்கும் போது அந்தக் கல்யாண ஆல்பத்தில் இருந்து அவளுக்கு வழங்கப் பட்ட விவாகரத்து தீர்ப்பு கீழே விழுகிறது. அதை பிரித்ததும்- ஆதி அவளை பல விதங்களில் புறக்கணித்த நிகழ்வுகள் அவள் மனக் கண்ணில் தோன்றுகிறது. பரஸ்பர சம்மத விவாகரத்திற்கு தன்னை பலவந்தப் படுத்தி கையெழுத்து இட செய்தது. விவாகரத்துக்குப்பின் தன்னை வழியில் பார்த்தால் கூட முகம் திருப்பிக் கொண்டது என அனைத்தும் நினைவில் வந்தன.

இவ்வளவு புறக்கணிப்பு அவமரியாதை, துரோகத்திற்குப் பின்பும் தான் இவ்வளவு உதவிகளை ஆதியின் குடும்பத்திற்கு செய்தது மிக அதிகம் என தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள். எனக்கு மட்டும் ஏன் இப்படி.. அழகு, படிப்பு, வேலை என எல்லாம் இருந்தும்.. இந்தப் புறக் கணிப்பு ஏன்? நான் ஏன் இன்னொரு திருமணம் தைரியமாக செய்துக் கொண்டு இவர்கள் எதிரில் வாழ்ந்து காட்டவில்லை. அடுத்த திருமணமும் தோல்வியில் முடிந்து இன்னும் அவமானப்பட வேண்டாம் என தான் எடுத்த முடிவு.. அழகோ, படிப்போ, உத்யோகமோ இல்லாத பட்டிக்காட்டுப் பெண்களுக்குக் கூட அவர்களைத் தாங்கும் கணவன் அமையும் போது தனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது - என பல்வேறு நினைவுகளாலும் சுய பரிதாபத்தால் மீண்டும் அழுகிறாள். நெஞ்சம் கனப்பது போல தோன்றியதால் அன்றைய தினத்துக்கான ஏழெட்டு மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் அருந்துகிறாள்.

உதவியாளர் கதவை தட்டி “ அம்மா.. உங்களை பார்க்க அய்யா வந்திருக்காங்க.. அனுமதிக்கவா? என கேட்டதும் அய்யாவா.. யார் அந்த அய்யா என வெனிஷியன் திரை சீலையை விலக்கிப் பார்க்கிறாள். ஆதி ரிசெப்ஷனில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. வேண்டாம்… வேண்டவே வேண்டாம்… என் மனது மாறி விடும்.. தனியாளாக சாதித்துக் காட்டியது அர்த்தமில்லாமல் போய்விடும்.. அதிகமாகவே உதவி இருக்கிறேன். கமண்டலத்தில் இருந்து கவிழ்ந்து விரிந்த காவிரியை மீண்டும் கமண்டலத்துக்குள் பிடித்து வைக்க முடியாது. மீண்டும் அந்த சிறைக்குள் அடைபட முடியாது – என பல வாறாக சிந்தித்து

“ வேண்டாம் ராமு.. அம்மா தொலை தூரம் பயணப் படறாங்க… உங்களை சந்திச்சா பயணம் தடை படும்னு சொல்லிடு..

“ எங்க பயணப் படறீங்க அம்மா.. கார் எதுவும் வரலயே.. டிரைவரும் இல்லயே.. ஐய்யோ..நான் அசமஞ்சமா உட்கார்ந்துட்டேனே .. பயணத்துக்கான துனி மணிகளை கூட சாரதாவ எடுத்து வைக்க சொல்லம்மா”

உடம்பு சரியில்ல .. இனி தொந்தரவு செய்யாதே ராமு” என சொல்லிவிட்டு, நெஞ்சை பிடித்தபடி மீண்டும் அன்றைக்கான மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் அருந்துகிறாள். திரையை விலக்கி ஆதி தளர்ந்த நடையுடன் அங்கிருந்து செல்வதை பார்க்கிறாள். கதவை திறந்துக் கொண்டு ஆதியோடு பேச ஓட வேண்டும் போலவும் இருந்தது… ஓட வேண்டாம் எனவும் இருந்தது.. மன உளைச்சலால் அவள் கண்களை கண்ணீர் மறைக்கிறது. ஸோஃபாவில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்திருக்கிறாள்.

அத்தை… அத்தை.. என்ன உடம்பு சரியில்லயா.. ஸோஃபாவிலேயெ தூங்கிட்டீங்க..?

இல்ல ஜெனி.. அதிகமா யோசிச்சேன்..

இன்னும் நீங்க கதை எழுதனுமா.. ? உடம்ப வருத்திக்கரீங்க.. அத்தை நீங்கள் சொன்ன அத்தனை வேலையையும் செய்து விட்டேன், ஆதி சாரோட மகள்கள் கல்யாணத்துக்காக நம்ம ட்ரஸ்ட் பணத்தில இருந்து பத்து லட்சம் தனியாக பேங்க்ல டெபொசிட் செய்துவிட்டேன் , வேற ஏதாவது செய்யனுமா அத்தை – என்கிறாள் ஜெனிஃபெர் ஜெயாவிடம்.

“வேறெதுவும் இல்லடி கண்ணம்மா.. அடுத்து உன்னோட கல்யானத்துக்கு ஏற்பாடு செய்யனும்”

அத்தை…! அழறீங்களா என்ன?

“இல்லடா செல்லம்.. லேப் டாப் வெளிச்சம் கண்ணுக்கு ஆகல”

“சரி.. நீங்க டின்னர் சாப்ட்டாச்சா ? மாத்திரை எல்லாம் சாப்டீங்களா?”

“எல்லாம் முடிஞ்சுது கண்ணா”

“வேற எதாவது வேல இருக்கா அத்தை.. நான் என் ரூமுக்கு போகட்டுமா?”

“விளக்கை அணைச்சிட்டு போ

ஜெயா ட்ரஸ்ட்டின் விளக்கும் அங்கேஅணைகிறது. ஜெயாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிகிறது.

அதே நேரம் நள்ளிரவில் சுமதி மயக்கம் தெளிந்து கண் விழித்து தனக்குள் ஏதோ நிகழ்ந்ததை உணர்கிறாள். படுக்கையில் இருந்து தானே இறங்கி வாசலை நோக்கி நடக்கிறாள். அவள் வியாதி குணமடைந்து விட்டதைப் போல உணர்கிறாள்.

No comments: