Sunday, March 27, 2005

கடிதம்

கவிஞன் என்றாய்
" கவிதைகள் ஐம்பது " என வெளியிட்டாய்
இரண்டு கிடைத்தது. மற்றவை?

புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும்
புரட்சி தலைப்பிட்டிருந்தாய்
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய்.

உணர்ச்சி பூர்வமானவன் கவிஞன் என
உருவேறியிருந்த எங்களுக்கு - நீ ஒரு
மின்சார தாக்குதல்.

சண்டையிடும் சகாக்கள் இருவரை
சலனமின்றி கடந்து
" சமூக நீதி " கவிதையை
சமூகத்திற்கு அர்பணித்தாய்.

முறுகக் காயும் வெயிலில்
பிச்சை கேட்ட
முதியவரை விரட்டி
கார் கண்ணாடி உயர்த்தி
" கருணை மழை" கவிதையை
கண் பார்வை அற்றோருக்காக என்றாய்.

வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை - பின்பு
எப்படி கவிஞனாவாய் ?
அடிப்படையில் மனிதனாகு
அதன் பிறகு கவிஞனாகலாம்.

அச்சக உரிமையாளரான நீ
கவிதை தொகுப்பென ஒன்று
தாராளமாய் வெளியிடலாம்
யாராலும் தடுக்க இயலாது - ஆனால்
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல்

1. அட்டையின் மேல் " அபாயம் " என்றும்
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் " உபயம் " என்றும்
அச்சிட வேண்டும்.

5 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

hi friend
i like this poem very much. your writing is very superp. keep it up.
anbudan
Gnaniyar

இப்னு ஹம்துன் said...

//அடிப்படையில் மனிதனாகு
அதன் பிறகு கவிஞனாகலாம்.//

உங்கள் அக வரிகளின் முகவரிகளாக... !
அருமை, அருமை.

Sud Gopal said...

//1. அட்டையின் மேல் " அபாயம் " என்றும். இரு கவி தந்த கவியின் பெயர் முன் " உபயம் " என்றும்
அச்சிட வேண்டும்.//

சத்தமாய்ச் சிரித்தேன்.

நல்லதொரு கவிதை.

வாழ்த்துக்கள்...

நந்தா said...

இப்போதான் பார்க்கிறேன் இந்த கவிதையை. ரொம்ப நல்லா இருக்கு......

Arunsiva said...

வணக்கம்,
உங்கள் முதல் கவிதை விருந்தாளி சிட்டுகுருவி மீது கொண்ட பாசம், உயரினங்களின் மீது மட்டுமா என்று அடுத்த கவிதை கடிதம், என்ன ஒரு கோபம், சமூக எத்தர்கள் மீது, போலியாய் நடிபவர்கள் மீது அதிலும் அந்த 2 வேண்டுதல் கிரேட் ! சிறகுகள் பறக்கட்டும்.

By Arunsiva