Sunday, June 05, 2005

தேடல் - 3

தேடல் - 3


நல்ல வேள.... நீ என் மேல விழறத்துக்கு முன்னாடி நான் எழுந்துட்டேன் -– என்றான் என் தம்பி
விழுந்திருப்பேன்.. அதுக்குள்ள டீச்சரம்மா பிடிச்சுகிட்டாங்க -– என்றேன் நான்


இருளோவென்றிருந்த அந்த அறையில் சிகப்பு கண்ணாடி பேப்பர் சுற்றிய பத்து வாட்ஸ் பல்ப் மட்டுமே எரிந்துக் கொண்டிருந்தது. தடுக்கி விழுந்து தாராந்து போக இருந்த எங்களை தெய்வம் போல் அந்த அம்மையார் காப்பாற்றினார்.

ஆன்மீகம் ஆரம்பமாகியது

நீங்கள் யார்?

நான் பத்மப்ரியா, இவன் என் தம்பி

அது உங்கள் உடலுக்கான பெயர் -– நீங்கள் யார்?

( என்ன இழவுடா இது) – நாங்க நாங்கதான் - என்றேன்

நீங்கள் என்றால் உங்கள் ஆத்மா... ஆத்மா உருவமில்லாதது – பரம பிதா வான் வெளியில் இருக்கிறார் அவரோடு ஐக்கியமாக தியானம் ஒன்றுதான் வழி . . .

வீட்டில் சிறுவயதில் சின்ன சின்ன கதைகள் வழியாக பாட்டியும் , தாத்தாவும் . அம்மாவும், அப்பாவும் போக வரச் சொல்லித்தந்த நல்லொழுக்கங்களை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துவதைப் போல அவ்வம்மையாரின் ப்ரசங்கம் இருந்தது. பொய் சொல்லாமை. கோபம், காமம் விலக்கல், களவு செய்யாமை, கூடா நட்பு... இன்னும் பல

இதெல்லாம் எங்க வீட்ல ஏற்கெனவே சொல்லித் தந்திருக்காங்க - என்றேன்

நீங்க அதெல்லாம் மறந்திருப்பீங்க, இப்ப நீங்க கடை பிடிக்கறதில்லை – என்றார்.

இல்ல.. இல்ல .. நாங்க அதை கடை பிடிக்கறோம் என்றேன்

முறைத்தார். ... இழுத்து ஒரு அறை விடுவார் போல இருந்தது

அடக்கி வாசி -– என்பதைப் போல தம்பி முறைத்தான்.

இன்னைக்கு கிளாஸ் இத்தோட முடிந்தது நாளைக்கு வாங்க என்றார்

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியில் வந்தோம்.

ஆன்மீகம் சொல்லித் தருவதென்றால் டியூப் லைட்டே போட்டுக்க கூடாது என்று எந்த மடையன் சொல்லித் தந்தான் எனத் தெரியவில்லை. மாயாஜால மந்திரக் குகை எபக்ட்டோட சொல்லித்தந்தாதன் மண்டைல ஏறும்னு நினைச்சிருக்காங்க.

இந்த மாதிரி கிளாஸ் அட்டென்ட் பண்ண பிடிக்காமத்தான் கலையியல் இளைஞி பட்டத்துடன் நிறுத்தியாச்சு...திருப்பியும் அதே மாதிரி கிளாசா..?தப்பிக்க காரணங்களை தேடியது மனது.

வயத்தை பிடிச்சுகிட்டு வலிக்குதுன்னு சொன்னாலும் – பூலோக ராட்ச்சசி, புண்ணியவதி அம்மா பிசாசா விடுவாள்..? பூ. ஊதுபத்தி, சாம்பிரானி மட்டி எல்லாம் எடுத்து கொடுத்து கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாள் அம்மா.

அடுத்தவரது ஆன்மீக முன்னேற்றங்களில் தலையிடு வதில்லை என்ற கொள்கை பிடிப்போடு இருக்கும் அப்பா எங்களுக்கு நிகழ்ந்த இக் கொடுமைகளை கண்டு கொள்ளவே இல்லை.

எல்.கே.ஜி. கிளாசுக்கு போவதைப் போல கிளம்பினோம் – தம்பியும் தான்..வயசுப் பொண்ணை தனியா மடத்துக்கு அனுப்றதா? கிளம்புடா .. ம் .. ஆகட்டும் என்றாள் அம்மா.

என்னை கொலை செய்துவிட்டு சிறைச் சாலைக்குப் போகத் தயாராக இருந்தான் என் தம்பி.. ஆனால் எதிர் பிளாட் காவ்யா கொஞ்சம் மடிவாள் போல இருந்ததால் என்னை கொலை செய்யும் ஐடியாவினை தற் சமயம் நிறுத்தி வைத்தான்

ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதாக காட்டிக் கொண்டால் தானே காவ்யாவையும் காவ்யாவின் அம்மாவையும் கவர்ந்திழுக்க முடியும் என மடத்தனமாக நம்பினான்.

இன்று அந்த அம்மையாரையே காணோம் – அப்பாடா தப்ச்சோம் என்று நினைத்து முடிப்பதற்குள் நீங்கதான் புது ஸ்டூடன்ட்ஸ்ஸா என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்..
மஞ்சள் பைஜாமா ஜிப்பாவில், சமீபத்தில் செத்துப் போனா ஆதிகால ஜெமினி கணேசனை நினைவூட்டினார்.

ஆமாம் - என்றோம் கசாப்பு ஆடுகளைப் போல
உள்ள வாங்க என்றார். உத்தேசமாக, குத்துமதிப்பாக, தோராயமாக போய் உட்கார்ந்தோம்.

நீங்கள் யார் ? என்றார்

ஆகா ஆரம்பிச்சிட்டாருயா ஆரம்பிச்சுட்டாரு... சுதாரித்துக் கொண்டோம்

இந்த கிளாஸ் நேத்தே நடத்திட்டாங்க என்றோம் ஒரே குரலில்

இல்லை ரெப்ரஷ் பண்ணிக்கலாம் -– என்றார் எதோ கோகோ கோலா, மிராண்டா குடிக்கப் போவதைப் போல

அதே விளக்கங்கள் அதே பாடங்கள் ஆனால்..அவன் மட்டமானவன் என்பதை அவனது பார்வைகள் சென்ற இடம் உணர்த்தியது. சட்டென எழுந்துக்கொண்டான் தம்பி.. வயத்தை வலிக்குது கிளம்பலாம் என்றான்.. அப்பாடா என்றிருந்தது எனக்கு.. வேகமாக வெளியில் வந்தோம்.

என் பின் பக்கம் வந்தவர்.. எங்கிருந்து வருகின்றீர்கள் என்றார்.

நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்கிறார் என நினைத்து – அந்த பரமாத்மாவிலிருந்து வருகின்றோம் - என்றேன்

விழுந்து விழுந்து சிரித்தது அந்த லூசு. போதாத குறைக்கு "ஜோவியலா பேசறீங்க... இ லைக் இட் என்றது. தம்பியின் முறைப்பு என் முதுகை துளைத்தது.

உங்க வீடு எங்க? என்றது -–

உலக பந்தங்களில் இருந்து பற்றருக்க, வீடு பேறு அடைய வழி சொல்லித்தரும் இடத்தில் .. என் வீட்டைப் பற்றிய விவரங்கள் எதற்கு..வேண்டுமென்றே தவறான விலாசத்தை தந்தேன். . . அதை பற்றியும் விலாவாரியாக கேட்டுக்கொன்டது..

எங்கள் பின்னாடியே கிளம்பி வந்து எங்கள் வீட்டை கண்டுபிடித்து விடுமோ என்றும் பயமாயிருந்தது.

நாளையிலிருந்து வரவே கூடாது என்று முடிவெடுத்தோம். ஆனால் பக்கத்து வீட்டு மாமி புண்ணியம் கட்டிக் கொண்டாள்.மூனு நாள் கிளாஸ் அட்டென்ட் பன்னா நேரா முக்தி தான்னு சொல்றா மாமீ என்றாள் அம்மாவிடம்.

இன்னைக்கு மட்டும் போயிட்டு கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிடுங்க- – என்றாள் அம்மா.விட்டா.. இந்த கோர்ஸ் கம்ப்ளீட் பன்னிட்டோம் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ல ரிஜிஸ்டர் பன்னிக்குவாங்களான்னு கேளும்பா.

மூன்றாம் நாள் நல்ல வேளையாக அவன் இல்லை.. அப்பாடா என்றிருந்தது. ஆனால் .. எதிர்பாராத விதமாக ஓர் இளம் வயது வாலிபர் எங்களை வரவேற்றார்.. இன்னைக்கு நான் கிளாஸ் எடுப்பேன் என்றார்.

நீங்கள் யார்..? ( போச்சுடா . . . இதே கேள்வியா?)

நாங்கள் ஆத்மாக்கள் என்றோம்.

அதைத் தொடர்ந்துஅவர் தந்த ப்ரசங்கத்திற்கும் அவரது வயதுக்கும் சம்பந்தமே இல்லை.. நறுக்குத் தெறித்தார் போல் தெளிவான விளக்கங்கள்..அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் அமைதியான தீர்க்கமான பதில்.. கை கூப்பி வணங்க வேண்டுமெனத் தோன்றியது..குருவே சரணம்..

வாசலில் ஒரே பரபரப்பு. . . வந்துட்டார்.. வந்துட்டார் என்றார்கள்.

ஜிப்பாவும் இலாமல். . .சர்ச் பாதர் அங்கியும் இல்லாமல் ஒரு விதமான தோராய தொள தொளா அங்கி அணிந்து , அதற்குள்ளேயே நடமாடி நடந்து வந்த ஒருவர், அவருக்கென போடப்பட்டிருந்த சிறப்பு நாற்காலியில் அமர்ந்தார். தூங்கி வழிந்து அவர் ஆற்றிய உரையால் அவரும் தூங்கி அனைவரையும் தூங்க வைத்தார்.

அவர் விளக்கிய விளக்கங்கள் ஏற்கெனவே தாத்தா பாட்டியால் எங்களுக்கு நடைமுறையில் சொல்லித் தரப்பட்டிருந்தன. எனவே அவரது ப்ரசங்கத்தால் பரவசமோ, புளங்காகிதமோ. வேறு எந்த மண்ணாங்கட்டியுமோ ஏற்படவே இல்லை.

நான் மூன்று, தம்பி ஏழு -– ஆக மொத்தம் பத்து கொசுக்களை மட்டுமே அவரது உறையின் நடுவில் எங்களால் அடித்துக் கொல்ல முடிந்தது.

திவ்யமா இருந்துத்து ப்ரசாதம். . . உன் பிள்ளைகள் வாங்கவேயில்லை பார்த்துக்க... என்னதான் வளர்த்திருக்கியோ போ...! என்று அம்மாவிடம் போட்டுக் கொடுப்பாள் இந்த பக்கத்து வீட்டு மாமி, அதற்காகவே கூட்டம் கலையும் போது எஸ்கேப் ஆய்டலாம் என்ற எங்களின் இரண்டு அம்ச திட்டம் திவாலாகியது.

வரிசையில் நின்று நகர்ந்து நானும் தீர்த்தம் வாங்க கை நீட்டினேன்... அந்த ஆன்மீகக் குருவிடம் இருந்து நான் எதிர்பார்த்ததெல்லாம்... குழந்தையைப் போன்ற ஒரு சிரிப்பும்.. கண்களில் தெரியும் ஆத்ம ஒளியும் மட்டுமே.. ஆனால் துரதிருஷ்டவசமாக இரண்டுமே மிஸ்ஸிங்.. தீர்த்தம் கொடுக்கும் சாக்கில் அருகில் வரும் ஒவ்வொரு பெண்ணையும் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.. என்ன எழவுடா இது .. சே..!

தெய்வதம் என்பது காதலைப் போன்றது...உணரத்தான் முடியும்...ஒருவர் விளக்கி நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது அல்ல. தானே உணர்ந்து தானே அனுபவிப்பது தான் தெய்வீகம்.

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அந்த அனுபவம் என்பதே நான் தான் என்றான் – -( கவியரசு கண்ணதாசனிடம் சொல்லாமல் கொள்ளாமல் திருடியது)

நான் அனுபவித்து உணர்ந்த சில தெய்வீகத் தருணங்கள் - இத் தேடலின் முடிவுப் பகுதியில்.
---------------
தொடர்ந்துத் தொலையும்
------------

5 comments:

Chandravathanaa said...

yahtharththamaga ullatu.

posted by: Chandravathanaa

பத்ம ப்ரியா said...

Hi chandravathanaa,
Thanks for your comment. It is encouraging me.. then it is amazing that u r having so many blogs.. i will read them one by one and i will send my comments also. Bye c u

M. Padmapriya

பினாத்தல் சுரேஷ் said...

-னன்றாக உள்ளது.. தொடருங்கள் உங்கள் எழுத்தை.

posted by: suresh

பிரதீப் said...

தொடர்ந்து தொலையுங்கள்!

ப்ரியன் said...

அருமைப் பிரியா உங்களுடன் நானும் வந்தது போல் ஒரு உணர்வை தந்தீர் அவ்வளவு எதார்த்தம்.தேடல் 1 தேடல் 2 இனிதான் படிக்க போகிறேன்...