Monday, June 27, 2005

தேடல் –- நிறைவுப் பகுதி

" பம்ப் செட்ல குளிச்சாச்சு... அதோ உன் அம்மாவும் குளிசுட்டு வறா... இப்ப மணி ரெண்டு... ஐஞ்சு மணிக்குள்ளாற வேணுங்கறத சாப்டுக்குங்க... இதோட அடுத்த வாரம் தான் .. புறிஞ்சுதா? இங்க மண்டைய மண்டைய ஆட்டிட்டு நான் அந்தப் பக்கம் போனதும் வரப்ப விட்டு இறங்கி வயல்ல வாய் வச்சீங்க... நடக்கறதே வேற.. என் செல்லம்.. என் கன்னு குட்டி.. போ.. போயி வேணுங்கற புல்ல மேஞ்சுக்கோ.."

மேற்படி கொஞ்சல்ஸ் எங்கள் வீட்டு கன்றுக்கு என் அப்பாவிடமிருந்து கிடைத்தவை.
என் அப்பாவிடம் இருந்து மூன்று முத்தங்களைப் பெற்றுக் கொண்ட எங்கள் வீட்டு பாக்ய லக்ஷ்மி அவரது தோளில் தன் முகம் தேய்க்கும், காது மடல்களை கூர்மையாக்கி “கவனிக்கிறேன்” என்று உடல் மொழியால் உணர்த்தும்.

பசுவுக்கும் அதன் கன்றிற்கும் என்ன மொழி புரியும்? ஆனாலும் எங்களைக் கொஞ்சுவதைவிட ஒரு பிடி அதிக வாஞ்சையுடன் எங்கள் வீட்டு பசுவையும் அதன் கன்றுகளையும் கொஞ்சி வளர்க்கும் என் தந்தையின் அன்பில், ஆதூரத்தில் நான் உணர்ந்திருக்கின்றேன் தெய்வீகத்தை.

என் அப்பாவின் அன்புக் கட்டளையை புரிந்துக் கொண்டு, மணிலாவும், நெற் பயிரும் எவ்வளவுதான் செழுமையாய் விளைந்து கண்களைக் கவர்ந்தாலும், கண்களுக்கு தெரியாத தர்ம நியயங்களுக்கு உட்பட்டு... புல்லை மட்டுமே மேய்ந்து, வரப்பை விட்டு வயலில் ஒரு வாய் கூட மேயாத எங்கள் வீட்டு கன்றுகளிடம் கண்டிருக்கிறேன் – அந்த தெய்வத்தை.

--------------------------------------------------

" மொத்தம் அஞ்சு பொட்டி... அஞ்சுலயும் தலா இருபத்தி நாலு கம்பிங்க... இங்கதான் என்னோட ஷெல்ப்ல வச்சிட்டு தூங்கப் போறேன்.. மவளுங்களே.. நாளைக்கு காலைல எழுந்து எண்ணிப் பாப்பேன்... ஒரு கம்பி குறைஞ்சாலும் நாளைக்கு தீபாவளி சாமிக்கு இல்ல... உங்களுக்குத்தான்... அதுவும் என் கையாலத்தான் .. புறிஞ்சுதா? - நின்று மிரட்டிவிட்டு தூங்கப் போனான் எங்கள் வீட்டு தீவட்டி தடியன். இத்தனைக்கும் என்னைவிட நாலு வயது சிறியவன்.

அது என்ன ... தீபாவளின்னா .. ஆம்பிளைப் பிள்ளைங்க தான் அதிகமா வெடி வெடிக்கனும்.. பொம்பளை பிள்ளைங்க நின்னு வேடிக்கை பார்க்கணுமா?

குடும்பத்திலே ஒரு மத்யஸ்த்தம்.. பாகப்பிரிவினைன்னு வரும் போது தர்ம நியாயம் வேணாமா?

தீபாவளிக்கு முதல் நாளிரவு நடந்த, மிக நீள சண்டை காட்சிகள் நிறைந்த பட்டாசு பாகப்பிரிவினையில் - அம்மா. அப்பா, சித்தி, சித்தப்பா அத்தனைபேரும் . . . அன்னியாயக் காரர்கள்.. எனக்கும் என் தங்கைக்கும் நாலு பெட்டி மத்தாப்பு.. ஆனால் என் தம்பிக்கு மட்டும் ஐந்து பெட்டி மத்தாப்பு.

பெட்டிங்க தானே உங்க கணக்கு...? பெட்டிங்க அப்டியே இருக்கும்.. உள்ள இருக்கற மத்தாப்புங்க..? தோல் இருக்க சுளையை முழுங்கறோம் இருங்க...- என்று கறுவிக் கொண்டோம் நானும் என் தங்கையும்.

எங்கள் தம்பி தூங்கியதும் அவனது பாகத்தின் பெட்டிகளிலிருந்து தலா இரண்டிரண்டு மத்தாப்புகளை திருட திட்டமிட்டதை எங்கள் திருட்டு முழிகளிலிருந்து புரிந்துக் கொண்ட என் தம்பியின் மிரட்டல் தான் மேற்படி நீங்கள் படித்த கொலை மிரட்டல்.

ஆனால் மறு நாள்

தீபாவளி விடியல் கருக்கலில் வாசல் விளக்குப் பிறையில் அகல் விளக்கை ஏற்றி எங்கள் தம்பி ஒவ்வொரு வெடியாக, சரமாக வெடிப்பதை, எங்கள் பட்டாசுக் கட்டுகளைப் பிரிக்கக் கூடத் தோன்றாமல் வேடிக்கை பார்த்து நின்றோம்.. அவனது பாகத்தை அவன் வெடித்து முடித்து விட்டால்... அவன் வெறுமையாய் நிற்கக் கூடாதேயென என் பாகத்தை தந்து விடலாம் என நானும், அவளது பாகத்தை தந்து விடலாம் என என் தங்கையும் உள்ளுக்குள் நினைத்தபடி வாசல் திண்ணையில் நின்றிருக்கையில்... எங்கள் கழனி வேலையாள், எங்கள் வயதொத்த அவரது மகனையும், மகளையும் அழைத்துக்கொன்டு வருவது தெரிந்தது. அருகில் வந்த போதுதான் புரிந்துக்கொண்டோம் அவர்களது உதடுகள் புன்னகைத்தாலும்.. கண்கள் ஏக்கத்தால் கசிந்தன என்று.

ஒரே ஓட்டமாக உள்ளே ஓடிய என் தம்பி அவனது பங்கில் பாதியை கொண்டுவந்து அவ்விருவருக்கும் தரும் முன்பே நானும் என் தங்கையும் எங்களது பங்குகளில் பாதியை கொடுத்துக் கொண்டு இருந்தோம். அங்கே... அந்த இடத்தில்.. அந்த தருணத்தில் எங்கள் ஐவரின் சின்னஞ் சிறு பிஞ்சு கைகளில் இறைவன் இருந்திருக்கலாம்..

" நீ வருவன்னு தெரியும் முனியா.. அதால உன் பிள்ளைங்களுக்கும் சேர்த்து ஒரு பாகம் போட்டு .. இதுங்களுக்கு தெரியாம எடுத்து வச்சோம்.. இந்தா இனிப்போட சேர்த்து பட்டாசை பிள்ளைங்களுக்கு கொடு " - என்று தந்த என் அம்மா, சித்தியின் கண்களில் இறைவன் இருந்ததாகத்தான் தோன்றியது எனக்கு. ..

" இதெல்லாம் எதுக்கு அம்மா.. எதோ வள்ளி புதுசா அதிரசம் பண்ணா.. ஐயா வூட்டு பிள்ளைங்க ஆசையா சாபிடுமேன்னு கருக்கல்ல கொடுத்தனுப்ச்சா - என்று தன் மூங்கில் கூடையில் அதிரசங்களை பொதிந்து, மூன்று மைல் நடந்து அந்த விடியலில் எங்கள் வாசலில் வந்து நின்ற எங்கள் முனியனின் நெஞ்சினில் இறைவன் இருப்பதாகத் தோன்றியது எனக்கு....

மேற் சொன்ன அத்தனை நிகழ்வுகளையும்... மௌனமாய்.. சின்ன சின்ன காற்றுச் சலனங்களுடன் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டு அகல் விளக்கின் சுடரில்...இப்போதும் இருக்கின்றான் இறைவன் .

--------------------------------------------------

"" பேப்பர்க்கு எழுதிப் போடணும்.. இவங்க எல்லாம் அனுபவிப்பானுங்க... நமக்குன்னா குடுக்க மனசு வராது... இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ஜி. எம்.. ஒழிகன்னு கோஷம் போட்டு ஸ்ட்ரைக் பண்ணணும்ப்பா.. நம்ம வயத்துல அடிசுட்டு.. இவங்க மட்டும் நல்லா இருப்பாங்களா?""

வக்கிர மனம் கொண்ட நிர்வாகிகளை தாக்கிப் பேசி, உள்ளிருப்பு வேலை நிறுத்தம், கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை முன் வைத்தல்.. அடையாள உண்ணா விரதம் ( உண்மையான உண்ணா விரதம் தான்) இருந்தும் மசியாத நிர்வாகத்தின் மேல் நிஜமாகவே கோபம் வந்தது.

நியாயமாக மூன்று வருடங்களுக்கு முன்பே தரவேண்டிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதையுமே தராமல்.. எதேனும் சாக்குப் போக்கு சொல்லும் எங்கள் ஜி. எம்.. கண்டிக்கத் தக்கவர்தான்.

" அவன் மட்டும் தனியா மாட்னான்... மவனே நானே போட்டுத் தள்ளிடுவேன்.. வேணான்டா கும்பலா அவனை போட்டு அமுக்கியே நசுக்கனும்..."" - சக ஊழியர்கள் பேசப் பேச... அவர் (ன்) கும்பலில் மாட்டினால், என் பங்கிற்கு ஒரு அடியாவது அடிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

மறு நாள்

"" வேன் எடுங்கப்பா.. யார் யார் பிளட் டொனேட் பண்ணப் போறது? அவங்க முதல்ல வண்டில ஏறுங்க.. சீக்கிரம்.. ஆப்பரேஷன் வெயிட்டிங்.. பணம் இருக்கோ என்னவோ?.. யார் யாருக்கு எவ்ளவு தரமுடியுமோ தாங்க... குணமாயி வந்தப்புறம் வாங்கிக்கலாம்..""- பரபப்புடன் யூனியன் லீடர் தலைமையில் மொத்தம் இருபத்தியோர் பேர் தங்களது நிர்வாகிக்காக இரத்தம் தர முன் வருவார்கள் என அந்த தனியார் மருத்துவ மனை எதிர் பார்க்கவில்லை.

இதுதான் சந்தர்ப்பம் என்று இருபது பேரிடமும் இரத்தம் தானமாக பெற்றுக் கொண்டது. விடுபட்ட அந்த இருபத்தியோராவது நபர் வேறு யாரும் இல்லை.. நான் தான். “ இந்தாங்கம்மா.. இதுல எழுதி இருக்கிற வைட்டமின் டானிக்கை தவறாம சாப்டுங்க.. ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க... நீங்கல்லாம் பிளட் டொனேட் பண்ண முடியாது.. இந்த அனீமிக்கை இப்படியே விட்டீங்கன்னா நியாபக மறதி வந்துரும் “ – என்ற அட்வைசை கேட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

மூன்று வருடங்களாக சம்பளமே உயர்த்தாமல், தொழிலாளர்களுக்கென ஒரு நெல் முனையளவும் நல்லது நடக்க விடாத ஒரு உயரதிகாரிக்கு மாசிவ் ஆர்ட் அட்டாக் என கேள்வி பட்ட அடுத்த நொடி, எதையும் மனதில் வைக்காமல், தங்கள் இரத்தத்தையும், பணத்தையும் வாரி வழங்கிய எங்கள் அலுவலக மக்களின் மத்தியில் நான் நின்ற போது நான் உணர்ந்தது வேறு என்னவாக இருக்க முடியும்?

அதேதான்.. அந்த தெய்வீகத்தைதான் நான் அங்கே உணர்ந்தேன்.

--------------------------------------------------

யாரும் நம் கையை பிடித்து அழைத்துச் சென்று வழி காட்ட முடியாத ஓர் இடம் தெய்வம் வசிக்குமிடம். கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர்.. நாமே உணர்ந்து உறைவதுதன் இறைவன்.

தொப்புள் கொடி நறுக்கி, மருத்துவர் முதுகில் தட்டும் தட்டில், தானாகவே மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் முதல் சுவாசத்தை யாரும் ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவதில்லை.. அது தானே தினறி, அழுது, பின் சுவாசிப்பதைப் போல.. நாமும் நமக்கு நாமே தினறி, யோசித்து பின் உணர்வதே தெய்வீகம்.

சுவாசிப்பதைப் போல தெய்வத்தை உணர்வதும் – இயல்பாய், தானாய் வர வேண்டும். அவ்வாறு வரப் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள் அல்லவா?

தெய்வீகம் என்பது நமக்குள் நாம் நிகழ்தும் தேடல்.. சரியா?

3 comments:

Agnibarathi said...

அற்புதமான பதிவு...தஞ்சாவூரில் எங்களது ஊரில் கொண்டாடும் தீபாவளியை நினைவு படுத்தியது. அத்தோடு ஆன்மீகத் தேடலுக்கு போட்டிருக்கும் முடிச்சு அபாரம்!! தாகூரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. The traveller has to knock at every alien door to come to his own, and one has to wander through all the outer worlds to reach the innermost shrine at the end. கீதாஞ்சலி படித்துப் பாருங்கள்...

வீ. எம் said...
This comment has been removed by a blog administrator.
வீ. எம் said...

பத்மபிரியா அவர்களே,

இன்று தான் தங்களின் தேடல் 1, 2 3, 4 படித்தேன். மிக அருமையாக எளிய நடையில் , சரளமாக எழுதியிருந்தீர்கள். ஒரு இடத்தில் கூட சலிப்படைய விடாமல் ..அடுத்தடுத்து படிக்கும் ஆர்வத்தை தூண்டியது.
ஆரம்பத்தில் இது ஏதேனும் புத்தகத்தில் வந்த தொடர்கதையை இங்கே தந்திருக்கின்றீர்களோ என்ற என்னம் வந்தது.
குறிப்பாக நகைச்சுவை உணர்வு அதிகமாக இருந்தது.. பல இடங்களின் என்னை அறியாமல் சிரித்தேன்..
குறிப்பாக
//என் பின் பக்கம் வந்தவர்.. எங்கிருந்து வருகின்றீர்கள் என்றார்.

நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்கிறார் என நினைத்து – அந்த பரமாத்மாவிலிருந்து வருகின்றோம் - என்றேன்//
படித்து விட்டு வாய் விட்டு சிரித்தேன்..

நிறைவு பகுதி மட்டும் கொஞ்சம் கோர்வையாக இல்லையோ என தோன்றியது.. ஆனால் "தேடல்" இப்படி முடிந்தால் தான் நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது.
மொத்தத்தில் மிக நல்ல அழகான, சரளமான எழுத்துக்கள்.. எழுத எழுத இன்னும் மெருகேறும்.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..
நானும் வலைப்பூவில் (இது உங்கள் முதல் கதையா என தெரியாது) வந்து தான் என் முதல் கதையை எழுதினேன். நேரமிருக்கும் போது படித்துவிட்டு சொல்லுங்கள்
கதை -1
கதை -2
வாழ்த்துக்கள்
வீ எம்