Tuesday, April 05, 2005

தீபாவளி

தீபாவளி விடிந்தபின்
விலாவரியாய்
தினத்தந்தியில் சுருட்டி தந்து
திகைப்புறச் செய்த
குடும்ப தையல்காரரும் -
அவர் தைத்த மாடர்ன் உடைகளும். . .

ஒரு தாய் மக்களென்பதை - அந்த
ஒரே டிசைன் உடையணிந்து நிரூபித்த
நானும் எனது தம்பி தங்கையரும். . .

முப்பது ரூபாய் வெடிகளுக்கு
முதல் நாள் இரவே நடந்த
பாகப்பிரிவினையும். . . .
அதனால் வந்த மனத்தாங்கலும்
அதற்கு சித்தப்பாவின் மத்யஸ்தமும்....

விடிந்ததும்
அத்தனை பேர் பாகத்தையும்
ஒற்றை ஆளாய்
அசராமல் வெடித்து தீர்த்த
அதே சித்தப்பாவும். . . .

அவரை அடித்து பின்னி
துவைக்க ஆவேசித்து. . .
பின்
எதுவும் செய்யாமல்
அவர் அருகே
வெறுமனே நின்ற நாங்களும்...

தட்டு நிரம்பிய பட்சணங்கள்
போதாதென
வேகவைத்த உப்பு வேர்கடலையோடு
மழை விழும் முற்றம் சுற்றி
ஆளுக்கொரு தூணில் சாய்ந்து
ஆரவாரமாய் பேசி சிரித்த
ஊர்க்கதையும் . . . பேய்க்கதையும். . .

கடுங்காப்பி மணத்துடன்
வெட்டு, குத்து, கொலைப் பழியுடன்
தாயக்கட்டை விளையாடிய
அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பாவும்...

ம். . ஏனோ . .
நிகழும் பொழுதைவிட
நினைக்கும் பொழுதில்தான்
என்னை நெகிழ்விக்கின்றன
சில தீபாவளிகள். . ...

4 comments:

Balaji-Paari said...

kalakkalaa ezhuthi irukeenga.

முப்பது ரூபாய் வெடிகளுக்கு
முதல் நாள் இரவே நடந்த
பாகப்பிரிவினையும். . . .
அதனால் வந்த மனத்தாங்கலும்


posted by: பாலாஜி-பாரி

பத்ம ப்ரியா said...

Thank you balaji-parry for your comments

Sud Gopal said...

//கடுங்காப்பி மணத்துடன்
வெட்டு, குத்து, கொலைப் பழியுடன்
தாயக்கட்டை விளையாடிய
அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பாவும்...//
எனக்கும் பரமபதம் ஆடிய நாட்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இன்று தான் உங்கள் பதிவுக்கு முதன் முதலாய் வருகிறேன்.ஒவ்வொரு பதிவிலும் அசத்துகிறீங்க போங்க.

Arunsiva said...

வணக்கம்,
"நிகழும் பொழுதைவிட
நினைக்கும் பொழுதில்தான்
என்னை நெகிழ்விக்கின்றன
சில தீபாவளிகள். . ..."

சில தீபாவளி மட்டுமல்ல உங்கள் எல்லா கவிதைகளும் நினைக்கும் பொழுதில் எங்களை நெகிழ்விக்கின்றன .சிறகுகள் மேலும் சிறக்கட்டும்

By Arunsiva