Monday, May 16, 2005

தேடல் - 1

தேடல் - 1
“ இதுக்கு மேல போகமுடியாது, நிறுத்து “ – என்றான் என் தம்பி. தெரு ஓரக் கோவில் தான் என்றாலும் அவள் அங்கே வசித்திருந்தாள். பாஸ்போர்ட் சைஸ் அம்மன் தான் என்றாலும், மூக்குத்தி எல்லாம் போட்டு , மலர்ந்த கண்களுடன், கடைவாய் புன்னகை கொண்டு அழகாக இருந்தாள்.

இடப்புறம் ஆண்களும், வலப்புறம் பெண்களும் – அட..! இந்த பெண்களும் அழகாத்தான் இருக்காங்க.. இவங்களைப் பார்க்கவே வாரா வரம் வராலாம் போலிருக்கே என்று நினைத்துக்கொன்டேன்.

வழக்கம்போல பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மஞ்சள், குங்குமம் இத்யாதி.. இத்யாதிகளை கடைசீ குட்டி பெண்வரை கொடுத்த பின்பே ஆண்கள் வரிசை என ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது பூசாரிக்கு... அவர் அவ்வளவு தாமதமாக தங்கள் பக்கம் திரும்பியதற்கு ஆண்கள் யாரும் வருந்தவில்லை..வருந்தினாலும் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதும் அவர்களுக்கே தெரியும்.

“அதோ அந்த ஆட்டோ காரரை கேளுடா” – என்றேன் நான்
“இங்க சாந்த சக்தி சங்கம் எங்கன்னு தெரியுமா உங்களுக்கு?” – என்றான் அவரிடம்
“தெரு பேரு தெர்யுமா?” – என்றார் அவர்
“ இல்ல.. ஏதோ கிறிஸ்டியன் நேம்..பேரு கரெக்ட்டா தெரியாது.. தியானம் சொல்லித்தராங்களே அது “ – என்றேன் நான்
“முந்திரிக்கொட்டை” – என்பதைப்போல முறைத்தான் என் தம்பி
தோராயமாக ஏற்கெனவே தூக்கி இருந்த கையை இன்னும் மேலே தூக்கி“ நேரா போயி பஸ்ட் ரைட் திரும்பி, அப்புறம் அதுலயே நாலாவது ரைட் திரும்புங்க” என்றார் ஒரு தீர்மானத்தோடு.

நாம் நமது வாழ் நாளில், யாரிடம் வழி கேட்டாலும்,“ வாங்க சார்.. கரெக்ட்டா வந்திருக்கீங்க.. இதோ எதிர் வீடு தான் நீங்க கேட்ட அட்ரஸ்... இதோ பக்கத்து பில்டிங்தான் நீங்க கேட்ட ஆபீஸ்” என்று யாராவது சொல்லி இருக்காங்களா? கிடையவே கிடையாது.
ஏப்பவும் “ நேரா போயி மூணாவது ரைட். இல்லைன்ன “ ஐயையோ.. ஏரியா தாண்டி வந்துடீங்களே … வந்த வழியே திரும்பி போயீ. . .போயீ... அப்டீயே வீட்டுக்கு போயிடுங்க “ – என்பதைப் போலத்தான் வழி சொல்கிறார்கள்.

இன்னும் ரெண்டு பேரை விசாரிக்கலாமே – என்று நான் நினைத்ததை என் முட்டைக் கண் மொழிகளால் புரிந்துக்கொண்ட ஆட்டோகாரர் “ ம். . கிளம்புங்க” என்பதைப் போல முறைத்தார். நாங்கள் நேரா போயி வலது பக்கம் தான் திரும்புகிறோமா என்பதை வேறு இடுப்பில் கை வைத்தபடி கவனித்ததாக, திரும்பி பார்த்த என் தம்பி சொன்னான்

மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில், அக்காவாகவே இருந்தாலும், அவள் வண்டி ஓட்டி, தம்பி பின்னால் உட்கார்ந்து வந்தால்... அந்த தம்பியின் இமேஜ்..!(?) ஒரு கெத்து.. !(?) என்னாவறது..? நாளை. . . பின்ன.. பிகருங்க மதிக்குமா அவனை?
“ நீ இறங்கி பின்னாடி உக்காரு, நான் ஓட்டறேன் “- என்றான் என் தம்பி. இது நான் எதிர் பார்த்தது தான்.

ஆட்டோகாரர் பார்வையிலிருந்து அகன்று விட்டோம் என்றாலும்கூட, அவர் மீதான மதிப்பு, மரியாதை காரணமாக அவர் சொன்னபடி நாலாவது ரைட் திரும்பினோம்.

டீக்கடைக்கு சற்று தள்ளி இருந்த ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரிக்கடை நிறுவனரை கேட்போம் என நாங்களிருவரும் ஒரு மனதே முடிவெடுத்தோம். ஏனெனில் அவர்தான் சாதுவாக தானுன்டு தன் வேலை உண்டு என துணிகளை தேய்த்தபடி இருந்தார்.

“இங்க சாந்த சக்தி சங்கம் எங்க இருக்குன்னு தெரியுமா”? என்றான் என் தம்பி
“லோன் குடுப்பாங்களே அந்த கட்டடமா”? என்றார் அவர்
திரும்பி முறைத்தால் நேரமாகும் என்பதால் திரும்பாமலேயே என்னை முறைத்தான் என் தம்பி. அதெப்படி..? அவன் திரும்பாமலேயே உன்னை முறைத்தான்னு உனக்கு எப்படி தெரியும்..? என்று நீங்கள் கேட்டால்..
எல்லாம் ஒரு சைக்காலஜி தான்.. ரியர் வியூ கண்ணாடி எதுக்கு இருக்கு..?

அது என்ன..? அப்பா. அண்ணன், தம்பி கூட போகும் போது...
அவங்க மட்டும் தான் அட்ரெஸ் விசாரிப்பாங்க.. நாங்க விசாரிக்கவே கூடாது..அது வரைக்கும் கூட நடந்து வந்தாலும், அட்ரெஸ் விசாரிக்கும் போது ரென்டடி பின்னாடி நின்னுடனும்.. வண்டி பின் சீட்ல உக்கார்ந்திருந்தாலும் விளக்கங்கள் எதுவும் தரக்கூடாது...
அவங்களுக்கு புரியாத வழி எங்களுக்குப் புரிஞ்சாலும்
“ புரியலயே. . !!!!!!?
என்பதைப்போல முகத்தை வைத்துக்கொள்ளனும். கஷ்டம்டா சாமீ..!

புள்ளிக்கு வருவோம்... (அதாங்க.. கம் டு த பாயின்ட் தான்...)
“தெர்லீங்க” என்றார் ஓம் ராஜபாண்டி நடமாடும் இஸ்திரி நிலைய நிறுவனர்.
அதற்குள் மூன்று , நான்கு பேர் எங்களை சூழ்ந்தனர்.
“இன்னாப்பா. . . இன்னாது”? என்றார் ஒருவர். இவர் பிளம்பராக இருக்கலாம்.

அது ஏன் ஒருவர் செய்யும் தொழில் அவரது உடல் மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி அவரது ஆளுமையை மாற்றுகிறது ? ( எனக்கே ஒரு மண்ணும் புரியல.. உங்களுக்கு போயி புரியுமா என்ன? கொஞ்சம் ஓவர் தான்..என்ன பண்ணட்டும்..? இப்டி எழுதற எனக்கும் - புரியாம, படிக்கற உங்களுக்கும் - புரியாம ஒரு மையமா எழுதினாத்தான் சாகித்ய அகாடெமி விருது தருவாங்கன்னு என் பிரண்ட் சொன்னா அதான். ஆனா அவசரத்துல இப்படி எழுதிட்டேனா? இப்ப பாருங்க . .. அத வாங்கவேற லீவு போட்டுட்டு போகனும் இங்க இருந்து..ப்ச்)

“இன்னாமோ சக்த்தி சாந்த சபாவாம்" . . . என்றார் ஓம் ரா. பா ந.இஸ். நி. நிறுவனர்
“அடப்பாவிங்களா. . . சொல்லி ரெண்டு நிமிஷம் ஆகல அதுக்குள்ள பேரையே மாத்திட்டீங்களா ? என நினைத்துக் கொண்டேன்.
“சபாவா..? அதெல்லாம் பீச்சாங்கரைப் பக்கம் “-என்றார் அவர்.
” இன்னா எடோம் அது” என்றார் மற்றொருவர். இவர் மேஸ்த்திரியாகத் தான் இருக்க வேண்டும்.
“டேய்.. வீட்டுக்கே போயிடலான்டா” என்றேன் நான்
“இதுக்கு ஒரு முடிவு கட்றேன்” என்பதைப்போல டீ கிளாசை வேகமாய் வைத்துவிட்டு எங்கள் அருகில் வந்தார் டீ குடித்துக் கொண்டிருந்தவர்.. இவர் நிச்சயம் எலெக்ட்ரீஷியனாத்தான் இருக்கணும்.. பால் பாயின்ட் பேனால்லாம் வச்சிருக்காரே.
சொன்னான். . . அனைத்தையும் சொன்னான் என் தம்பி..( தேவையா இது எனக்கு ? மவளே.. வீட்டுக்கு வா. . . அங்க இருக்கு உனக்கு. . . நற.. நற.. நற..”) – என்று அவன் மனதிற்குள் திட்டியது, திவ்யமாக என் மனக்காதுகளில் கேட்டது. (என்னாது..!? மனக் காதுகளா..? என்னா ஓவரா ரீல் சுத்தர..? அப்டீன்னு நீங்க கேட்டா – “ ஏங்க . . மனக் கண்கள் இருக்கும் போது. . மனக் காதுகள் இருக்கக் கூடாதா..?” அப்டீன்னு நான் பதில் சொல்ல வேண்டி வரும்)
"ஓ . . அதுவா. .. சாமி கும்ப்ட்டு. . பொங்கல் தராங்களே அந்த இடமா”? என்றார்
வேகமாய் தலயாட்டினோம் நாங்கள். அப்போதும்.. அவன் மட்டும் தான் தலை ஆட்ட வேண்டும் , நான் வெறுமனே நிற்க வேண்டும் என் தம்பிக்கு. மேல் சாவனிஸம் எதெதில் இருக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த எலக்ட்ரீஷியனும் – “ நேரா போங்க. பஸ்ட் ரைட் கட் பண்ணுங்க.. அங்கேர்ந்து எண்ணி நாலாவது ரைட் போங்க.. அங்க மிடில்ல இருக்கு “ என்றார் என்னையே பார்த்துக்கொன்டு. என்னவோ நான் அவரை "இங்க வாங்க மிஸ்டர்னு " - கூப்பிட்டு கேள்வி கேட்ட மாதிரி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
கேட்டது என் தம்பி, அவன் இருந்ததையே மறந்து விட்டார் போல.

“ பர்ஸ்ட் ரைட், அப்புறம் நாலாவது ரைட்டா”? என்று கேட்டான் தம்பி “ஆமாங்க பர்ஸ்ட் ரைட், அப்புறம் போர்த் ரைட்”? என்றார் என்னிடம் இதற்காகவே வண்டியை வேகமாக கிளப்பினான் தம்பி.

நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பி மீண்டும் நேராக போய் ரைட் திரும்பி, திருப்பி நாலாவது ரைட் திரும்பினால் இடுப்பில் கை வைத்த அதே ஆட்டோகாரரை சந்திப்போம் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை நாங்கள்.தூக்கி வாரி போட்டது எனக்கு.

“ நான் வர்ல இந்த ஆட்டத்துக்கு” – என்றேன்
-------------
தொடரும். . .
-----------

(இன்னாது. .?! தொடருமா..?! இதோடா. . .? பெரிய பெரிய ஜாம்பவான்க நாங்களே சிறுகதை, சிறு நீள சிறுகதை. . . மிக நீள சிறுகதை தான் எழுதறோம். . . இப்ப வந்த இந்தம்மா தொடர்கதை எழுதுவாங்களாமில்ல. . .? திஸ் ஈஸ் டூ மச்சுன்னு நீங்க நினைச்சாலும். . . சாரீ... தொடரும் தான். .

“தானா வருதுங்க. . . மடை திறந்த வெள்ளம் போல வருது. . . நான் என்ன பண்ணட்டும்? என்னோட மனோ வேகத்துக்கு என்னோட டைப்பிங் வேகம் போதல..”இப்படியெல்லாம் நான் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்தா - சாரீ ... நீங்க தேரமாட்டீங்க..

ஏன்னா. .? ஏதோ ஒரு லாஜிக், ஒரு ப்ளாட் இருக்கேன்னு நினைச்சு பந்தாவா ஆரம்பிச்சிட்டேன். . எப்படி முடிக்கறதுன்னு தெரியல. . . அதான். . .தொடரும்னு போட்டுட்டு ஒரு வாரத்துல, அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க நாலு பேரு கிட்ட கேட்டு வாங்கி டெவெலப் பண்ணலாம்னு இருக்கேன். . ஓகே யா? வர்ட்டா. . ஸீ யூ )

2 comments:

Anonymous said...

ம்ம்ம்ம் ......

நல்ல ஸ்டார்ட்டிங்க்!!!!

posted by:

Pavals said...

Mr. Jayabalan.. ungalukku phone panni comments kettaangala??.. enakku miratala oru mail vathuchu.. athukku bayanthuttuthaan..
| super |

:-)