Sunday, May 08, 2005

பயணங்கள் முடிவதில்லை
“ எதுவுமே தேறாதுக்கா “ என்றாள் என் தங்கை

“ அப்படி இல்ல.... ஒன்னு , ரென்டு சுமாரா இருக்கு” – நான்
“எது? அந்த க்ரீம் கலர் ஷர்டை சொல்றியா?.... அவ்ளோ ஒன்னும் நல்லால..“ இருக்கறதுல ....அது தேறுதா? இல்லயா? அத சொல்லு ”
“தேறும்..... ஆனா மாங்கா மாதிரி நிக்குதே?
“அம்மாஞ்ஜியா இருந்தாதான் நல்லது. .... இல்லைன்னா சித்தப்பா சீட்டை மாத்திடுவாரு”
“ஆமாமா.... அம்மாஞ்ஜியாவே இருக்கட்டும்... அதான் நமக்கு நல்லது – ஆனா பார்கபிளா இருக்கு இல்ல”
“ம் ம் ... அது ” – என்றேன் நான்
“அப்டி பார்த்தா..... அந்த ப்ளூ டீ ஷர்ட் கூடத்தான் அழகா இருக்கு... இது ரெண்டும் தான் தேறும் போல” – என்றாள் .

இருபத்தி மூன்று பேர் கொண்ட எங்கள் குடும்ப கும்பலில் அடித்து பின்னி துவைத்து கட்டி ரவுடி ரங்கோலிகளாக ஜன்னல் சீட் பிடித்த நானும் எனது தங்கையும் –--- எங்கள் எதிர் சீட்டில் தூங்கிகொண்டே வரும் ஒரு ஜிப்பாகாரரும், கனகாம்பர கொண்டை போட்டு மூன்றுவட செயின் போட்ட ஒரு குண்டு அம்மவும், அந்தம்மா பக்கத்தில் அமர்ந்து, ஸ்வாரஸ்யம் ஏதும் வரவழைக்காமல் கொய்யா பழம் சாப்பிடும் வேஷ்டி கட்டிய ஒருவரும் எங்கள் சக பயணிகளாக வர வேண்டும் என நாங்கள் விரும்புவோம் என நீங்கள் நினைத்தால் -- மன்னிக்கவும் நீங்கள் நியாயத்திற்கு அப்பாற்பட்டவர்,

தூர தேச புகை வண்டிப் பயணம் நெடீஈஈ ய பயணமாக இருக்கும் பட்சத்தில் சக ப்ரயாணிகளாக வருபவர்கள் கொஞ்சம் சைட்டபிள்ளாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமில்லையா? நீங்களே சொல்லுங்க. . . கண்கள் அப்டி இப்டி போகும் போது கொஞ்சமாவது கலர் வேண்டாமா?
“ அம்மா.... கற்பகவல்லி தாயே..! அந்த ரெண்டு பசங்களும் எங்க பெட்டியிலயே ட்ராவல் பண்ண நீதாம்மா அருள் புரியனும் ” -தேங்காய் உடைப்பதாகவோ, கற்பூரம் ஏற்றுவதாகவோ எந்த கமிட்மென்ட்டும் இல்லாத சர்வ ஜாக்ரதையான ப்ரார்தனையை செய்தோம்.


“இதோ.. 20 ம் 21 ம் ... இங்க இருக்குதுங்க....”- என்று எங்கள் தலைகளை எண்ணியபடியே கடந்து சென்றார் எங்கள் சித்தப்பா.

நாலைந்து குடும்ப சமேதரராக வெளியூருக்கு கிளம்பும் சித்தப்பா ( மன்னிக்கவும்... நாலைந்து என்றால் அவருடையதே ... நாலைந்து அல்ல. அவர் குடும்பத்துடன் அண்ணன்கள் மற்றும் அக்கம் பக்கத்தாரின் குடும்பங்களையும் சேர்த்து) தவறாமல் அவரவர் வயதின் அடிப்படயில் அவரவர்க்கு ஒரு நம்பரை, அவர் வழங்குவதைப் பற்றி நான் இங்கு சிலாகித்தே ஆக வேண்டும்.

நம்பர்களை சத்தமாக கூப்பிட்டு யாரும் தொலைந்து போகாமல் பாதுகாக்கிறாராம்.

மேலும் அவரது உருவ பராக்கிரமும் இங்கு எழுத தக்கதே.. செயின் ஸ்மோக்கர்....அவருக்காகவே புதூ சிகரெட் பாக்டரி ஆரம்பித்தார்கள் என்றால் பார்துக்கொள்ளுங்கள்.

நடிகர் பார்த்திபன் சொல்வதானால்....என் சித்தப்பவை பற்றி இப்படி சொல்வார்
“ ஒரு பெரிய சிகரெட்

ஒரு சின்ன சிகரெட்டை .. பிடிக்கிறதே...! ?
கமா.. ஆச்சர்ய குறி..”

“ அக்கா.... அப்பா நம்மளை இங்க இருந்து எழுப்பி... அம்மா காபின்ல உக்கார சொன்னா என்னக்கா செய்றது”?
“வாந்தி வற்ற மாதிரி ஆக்ட் பண்ணி நாம இங்கயே இருக்கறோம்னு சொல்லிட்லாம்”


வாந்தி வரவேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லை... வாந்தி என்ற வார்த்தை மட்டுமே போதும்... அது யாருடைய வாயிலிருந்து வந்தாலும் வட்ட வட்டமான பின்புலத்துடன் தனது தேன் நிலவு நினைவுகளுக்குச் சென்று விடும் சித்தப்பா அதற்கு மேலும் எங்களை வலியுறுத்தவே மாட்டார் என்பதை நான் இங்கு வலியுறுத்தலாம்.

“அது என்ன...?அவரது தேன் நிலவு நினைவுகள்..? வாந்தியுடன் தொடர்பு படுத்தி..?” – என்று நீங்கள் கேட்டால்...
“ சாரீ.. அதை நீங்க சித்தப்பாவிடம் தான் கேக்கணும்... அது அவரோட பர்சனல் மேட்டர்” – என்ற பதில் மட்டுமே என்னிடம் உள்ளது.

( இருந்தாலும் ரசிகரா ஆய்ட்டீங்க.... சோ... உங்களுக்கு மட்டும்.. ரகசியம் .. ஓகே ..—புதூ பட்டு சட்டை, புதூ பட்டு வேட்டியொடு, தேன் நிலவு மூடுடன் தனது புதூ மனைவியுடன் இரயில் பயணத்தை அவர் துவக்கியதெல்லாம் வாஸ்தவம்தான்.. ஆனால்.. அடுத்த அரை மணி நேரத்தில்.. அவரது தோளில் இருந்து ஆரம்பித்து.. அவரது உள்ளங்கால் வரை வாந்தி எடுத்த சித்தி ஊட்டி போய் சேரும் வரை நிறுத்தவில்லை என்று கேள்வி)

சரி.. சரீ.. முக்கிய நீரோடைக்கு வரும் பட்ச்சத்தில் ( கம்மிங் டு தி மெயின் ஸ்ட்ரீம் என்பதின் தமிழாக்கம்....)

“ நம்ம கம்பார்ட்மென்ட் தான் கா அதுங்களும்” - என்றாள் என் தங்கை என் காதோரமாய். ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா என்பது அவள் கொள்கை.

“ சரீ.. சரீ.. அதுக்காக ஆயிரம் வாட்சை முகத்துல காட்ணுமா”? – என்றேன் 1500 வாட்ஸ் முகத்துடன்.

ஆம்... அவ்விரு கதா நாயகர்களும் தாவி ஏறி.. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நேரெதிர் இருக்கைகளில்... ஆமாம்.. எங்களின் நேர் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்,

“ அக்கா....!?”
“ அடக்கி வாசி.. சித்தப்பா வெளியில நின்னுட்டு இருக்காரு”

ரயில் கிளம்பும் கடைசி நொடி வரை ரயில் நிலைய குடி நீர் குழாய்களில் தண்ணீர் பிடிப்பதை ஒரு வாழ் நாள் கொள்கையாகவே வைத்திருந்தார் எங்கள் சித்தப்பா. கடைசி நிமிட கதா நாயகனாக ரயில் படிக்கட் ரஞ்ஜித் போல அவர் தாவி ஏறி பயணிப்பதை சித்தி கூட ரசிப்பதில்லை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

அது என்ன... இந்த ஜென்ட்ஸ் எல்லோரும்
ரயில் கிளம்பினதுக்கப்புறம் ஏற்றது

சினிமா ஆரம்பிச்சதுக்கப்புறம் சீட்ல வந்து உக்காற்றது
பஸ் கிளம்பினதுக்கப்புறம் ஓடி வந்து ஏற்றது

இதெல்லாம் மாத்திக்கவே மாட்டாங்களோ..?

வெளியில் நின்ற சித்தப்பா எங்களை நோக்கி சைகையால் –
“ தண்ணீ வேணுமா?”
நாங்கள் சைகையால் – “ வேண்டவே வேண்டாம்”

ரயில் தனது பயணத்தை “ என் இனிய தமிழ் மக்களே” என்று துவக்கியது.. “ ஐய்யோ... நம்ம கம்பார்ட்மென்ட்லதான் ஏறுராருக்கா சித்தப்பா ”- அதிர்சியில் உறைய ஆரம்பித்தாள் என் தங்கை.
“ ஆகா.. மாட்னோம் இன்னிக்கி .. அம்மா பக்கத்துல போயி உக்கார சொல்ல போறாரு ”- வருத்தத்துடன் சொன்னேன் நான்.


ஆனால்... எங்களிருவருக்கும் ஆளுக்கோர் பாப்பின்ஸ், விகடன், குமுதம் தந்துவிட்டு அடுத்த கம்பார்ட்மென்ட் போக நகர்ந்தவர் மீண்டும் நின்றுவிட்டார்..

ஐயோ..புன்னகை மன்னன் கிளைமாக்ஸ் பார்ப்பதுபோல எங்கள் இதயங்கள் ...தடக்..... தடக்.... தடக்...
ஆனால்... நின்று நிதானித்து ... அந்த பையன்களை நன்றாக பார்த்துவிட்டு.. பின்பு நகர்ந்தார் எங்கள் சித்தப்பா.


ஆப்பாடா.. இனி நம்ம ராஜ்ஜியம் தான்..

அவர் அப்படி போனதும்.. பசங்களை கவனித்தோம்..

ஆகா.. ஆரம்பிசிட்டாங்கையா.. ஆரம்பிசிட்டாங்க..

கலைந்திராத கிராப்பை 5 நிமிடங்களுக்கும் மேலாக சீவினார்கள். கட்டம் போட்ட கர்சீபை நிதானமாக நீவி மடித்து காலருக்கு பின் புறம் வைத்துக் கொண்டார்கள்.

அடுத்ததாக.. இக் கதையின் முக்கிய கட்ட திருப்பத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள்....
அவர்கள்... அவர்கள்... நாங்கள் பார்த்துக் கொன்டிருக்கும் போதே.....அவர்களது பைகளை பெர்த்தில் வைத்தார்கள்

உட்கார்ந்தார்கள்...
எழுந்தார்கள்...
பெர்த்தில் இருந்த பைகளை மீண்டும் கால்களுக்கடியில் வைத்துக் கொண்டார்கள்.

“ இதுங்க மாங்கான்னு நான் அப்பவே சொன்னன்ல...” என்பதைப்போல பார்த்தாள் என் தங்கை.அவளது பார்வையை தவிர்க்க வேறு பக்கம் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு.

அவர்களை பார்க்கவே விருப்பமில்லாதவர்களைப்போல் எங்கள் முகங்களை வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.
காரணமே இல்லாமல் சிரித்தாள் என் தங்கை.அக்கா எண்ணும் பொறுப்பிலிருக்கும் நான் அவளை அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.


எதேச்சையாக பார்ப்பது போலவும், எதிர் பக்க ப்ளாட்பார்மை பார்க்க விரும்புவது போலவும், எதிர் பக்க மேல் பர்த்தை பார்ப்பதைப் போலவும் பல வழி முறைகளை கையாண்டு நாங்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க...
இவ்விதமான எந்த முயற்சிகளையும் கையாளாமல் நேருக்கு நேராக, காந்திக்கு நேராக பார்த்துக்கொண்டிருந்தனர் அவ்விருவரும் எங்களை..


இந்த அண்ணலும் நோக்கினான்.. அவளும் ஜன்னலில் நோக்கினாள் என்ற காட்சி முடிவுக்கு வரும் படி..... அவர்களில் ஒருவன் எழுந்தான்.... எழுந்து................ அந்த பைகளை எடுத்து மீண்டும் பெர்த்தில் வைத்தான்

எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை,

“ எங்களுக்கு இல்லயா பாப்பின்ஸ்”?
“ கொஞ்சம் விகடன் தற்றீங்களா”?
“ சென்னையா நீங்க "?
“ எங்க போறீங்க... விசாக பட்ணமா”?


இவற்றுள் ஏதேனும் ஒரு கேள்வியை கேட்பார்கள் , அப்போது தெலுங்கும் தமிழும் அறவே தெரியாததாக பாவிக்க எண்ணியிருந்தோம் ங்கள்.ஆனால்.. விதி வலியதாக இருக்குமென்றாலும்... இவ்ளோ வலியதாகவா..?!
கதை பேச தைரியம் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் கண்களிலாவது காவியம் படைப்பார்கள் என என்னாலும் என் தங்கையாலும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் இருக்கை ஏகாம்பரர்கள் மீண்டும் எழுந்தார்கள்...

என்ன செய்ய போகிறார்களோ என எதிர் பார்த்திருக்கையில்...
தங்களது பைகளை பெர்த்தில் இருந்து இறக்கினார்கள்.


விழுந்து விழுந்து சிரித்தோம்...
கண்களில் நீர் வரும் வரை சிரித்தோம்..
நிறுத்த நினைத்தால் கூட நிறுத்த முடியவில்லை எங்களால்.
பக்கத்து காபினிலிருந்து சித்தப்பாவின் கனைப்பு சத்தம் கேட்டதும் சிரிப்பதை நிறுத்திக் கொண்டோம்.. ஆனால் அப்போதுதான் அதிகமாக சிரிக்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால்... நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு சிரிசிட்டு இருக்கோம்.. அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுபோல்.. இந்தக் கதையின் (!?)இறுதி கட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள்..

இறுதியாக ... நீக்கள் எதிர் பார்த்த க்ளைமாக்ஸ் வந்தே விட்டது..அதிர்ஷ்டசாலி தான் நீங்க..போங்க வேற என்ன தான் சொல்ல முடியும் நான்?

ஆம்.. அவர்கள் தங்களது பைகளை திறந்து அதிலிருந்து இரண்டு பொட்டலங்களை வெளியே எடுத்தார்கள்..
அந்த பொட்டலங்களை சுற்றி இருந்த நூலை நிதானமாக... மென்மையாக ஆன்ட்டி கிளாக் வைசில் சுற்றி சுற்றி பிரித்தார்கள்...


பிரித்ததும்...?!

வேறு என்ன..? இட்லி...கோங்குரா சட்னி தான்.
ஒரு பிடி இட்டிலி... ஒரு பிடி சட்டினி... என்று கணக்காக சாப்பிட்டார்கள்.
முழு பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்தார்கள்.... கை கழுவினார்கள்...
மறக்காமல் அவர்களது பைகளை மீண்டும் பெர்த்தில் வைத்தார்கள்.


திடீரென... எங்களை நோக்கி... எங்களை நோக்கி... ஒரு ஸ்னேகப் பார்வைப் பார்த்தார்கள்..
"இது என்னடா புது வம்பு ? " என்று நினைத்து முடிக்குமுன்பே ...ஆளுக்கு ஒரு பர்த்தில் ஏறினார்கள் ..பையை தலைக்கு வைத்து கால் நீட்டி வசதியாக படுத்துக் கொண்டார்கள்.


"அடங்கொக்கா மக்கா... கொல்ட்டீங்களா நீங்க”?

அம்மாஞ்சியா இருக்க வேன்டியது வாஸ்தவந்தான்... அதுக்குன்னு இவ்ளோ அம்மாஞ்சியாவா?"

சுத்த மாக்கான்களா இருக்கீங்க.. தேரவே மாட்டீங்கடா நீங்க ஜென்மத்துக்கும்"
என்று மனதிற்குள் திட்டி தீர்த்தோம்.


(லாஜிக் இல்லாம கதைய முடிசிட்டேன்னு நீங்க என்னை தப்பா நினைச்சுட கூடாது இல்லயா? அதுக்காக பின் வரும் வாக்கியத்தை படிக்கவும்)

எங்க சித்தப்பாக்கு நாங்க பயப்படனும்..... அது லாஜிக்... இவன்க ஏன்..?

( கவனிக்க...லாஜிக் வந்துடுச்சி...சரியா?)

ரயிலின் வேகம் அதிகமாகியது..... மெல்லிய இருளில் மரங்கள் அடர்த்தியாயின...தங்கை என் தோள் மீது தலை சாய்த்து தூங்கி இருந்தாள்... நான்.. செம்மையாகியிருந்த அந்தி வானத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.

நன்றி... வணக்கம்... சுபம்... முற்றும்...

(சினிமான்னாதான் கல்யாண சீன் போடுவாங்க.. சிறுகதைக்கு அதெல்லாம் போடமாட்டாங்க ... அதனால நான் கிளம்பறேன்.. நீங்களும் கிளம்புங்க)

8 comments:

Anonymous said...

என்னங்க பத்மப்ரியா,

'அட்டகாசமா இருக்குங்க உங்க கதை!!!'

நல்லா இருங்க! வாழ்த்துக்கள்!!!

posted by:

பினாத்தல் சுரேஷ் said...

nalla narration. Naan train-le pogumpothu intha maathiri figure maataliye!

posted by: suresh

Pavals said...

யாரோ என்னை மாதிரி நல்ல பசங்க ட்ரெயின்ல வந்திருப்பாங்க போல..

Anonymous said...

நல்ல கதை....பசங்க பாவம்.

posted by: மோகன்

பத்ம ப்ரியா said...

Hi Thulasi madam, Hi suresh, Hi Rasa & Hi Mohan - my heartiest thanks for you all. Your comments are encouraging me. Thankspa..

M. Padmapriya

குழலி / Kuzhali said...

// நேருக்கு நேராக, காந்திக்கு நேராக பார்த்துக்கொண்டிருந்தனர்//

ரொம்பத்தான் ரவுசு போங்க

Dr.Srishiv said...

நற..நற.....என்ன? கொல்டிங்கன்னா அவ்ளோ எளக்காரமா?? அம்மணி??? இருக்கட்டும், இருக்கட்டும், சில கொல்டி பசங்கள பார்த்திருக்கேன், நெட்லயே வல போட்டு பொண்ணுங்கள இங்க ஐஐடி வரைக்கும் வரவழைச்சி இருக்கானுங்கங்கோவ்.....:)
ஸ்ரீஷிவ்...

அருள் குமார் said...

எழுத்து நடை நல்லா இருக்கு...ஆனா இதை ஒரு சிறுகதையா என்னால ஏத்துக்க முடிலங்க...சாரி.