Sunday, May 01, 2005

பூந்தோட்டம்

இடது மதிற் சுவரில் படர
நித்ய மல்லி
வலது பக்கத்திற்கு ஜாதி

பின்புற மதிலில் அடுக்கு மல்லி
கூடவே வெறும் மல்லி
வாயில் பிறை வளைவில்
பிடித்துப் படர கொடி சம்பங்கி

அடர்தியாய் சிரிக்க
அடுக்கு செம்பருத்தி
ஆசைக்கு சிவப்பு ரோஜா
ஆன்மீகத்திற்கு செவ்வரளி

முடிந்தால் மூலையில்
முல்லைக் கொடி ஒன்று

சிறு வெந்தயம், கொத்துமல்லி
சிந்தினாற் போல் சிறு கீரை

அவ்வளவும் இந்த
அரை கிரவுண்ட்
அடுக்ககத்தில் வளர்க்க
ஆசை என்றதும் - என்னை
அடித்து துவைக்கும்
ஆவேசத்தில் என்
அகத்தினர்.

ஆனாலும் அடமாய்
ஆறேழு தொட்டிகளில்
முளைக்கவே முளைக்காத
வெந்தயம், மல்லி
மொட்டே விடாத ரோஜா
மூன்றே இலை மனி பிளான்ட்.

அறுவடையை மேற் பார்வையிடும்
நிலக்கிழாத்தி போல்
அரையடித் தொட்டிகளை
ஆராய்கையில். . .

ஐ. . . .சின்னூன்டு வேப்பங் கன்று...!
எங்கிருந்து வந்தாயடி நீ....?

என்னிடம் ஏன் சேர்ந்தாயடி. ..?

2 comments:

Pavals said...

//
அறுவடையை மேற் பார்வையிடும்
நிலக்கிழாத்தி போல்
அரையடித் தொட்டிகளை
ஆராய்கையில். . .
//
:-)

ப்ரியன் said...

நடாத செடிகள் முளைக்க கண்டு நானும் வியந்தது உண்டு ஆனால் அதிலும் ஒரு கவிதை அறுவடை செயலாகுமென்று நீங்கள் செல்லித்தான் தெரிந்து கோண்டேன்