Sunday, May 22, 2005

தேடல் - 2

தேடல் - 2

“ நீ வீட்டுக்கு வா.. இன்னைக்கு இருக்கு பஞ்சாயத்து ” - என்றான் தம்பி.

அவன் வருந்துவதிலும் ஒரு வாஸ்தவம் இருக்கத்தான் செய்தது. ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் ஸிக்சர்லாம் அடிச்சி ஒழுங்கா சீன் காட்டிட்டு இருந்தான். நான் தான் “ இப்போ வரப்போறியா. . . இல்ல. . . சுமி மேட்டரை வீட்ல சொல்லட்டா” என்று மிரட்டி அழைத்து வந்தேன்.

(அது என்ன. . . சுமி மேட்டெர்? என்று நீங்க கேட்டா . . . விரைவில் வெளியாகும் என்னோட அடுத்த நாவலில் காண்க அப்டீன்னு பதில் சொல்லும் படியா ஆயிடும்)

( நாவலா ஆஆஆஆன்னு நீங்க மயங்கி விழுந்தாலும். . . கண்டிப்பாக நாவல் எழுதப்படும்)

“ இன்னா...! வந்டீங்க ” என்றார் இடுப்பில் கை வைத்த ஆட்டோ காரர்

“ அங்க போனோம். இங்க அனுப்னாங்க” என்றோம்

அதற்க்குள் “ இன்னா மேட்டரு” என்றபடி ஓர் கட்டிளம் ஆட்டோ காரர் வந்தார். டெரி காட்டன் காக்கி ஷர்ட் போட்டிருந்தார். பேக் கோம்பிங் செய்து, நீல நிற கர்சீப்பை காலருக்கு பின்னாடி மடித்து வைத்து ஒரு மார்க்கமாக இருந்தார்.

காக்கி ஷர்ட்டையும், காலர் கர்சீப்பையும் கழட்டி கடாசிவிட்டு க்ரீம் கலர் டீ ஷர்ட்டும். ஜீன்சும் போட்டால் விஜய் பக்கத்தில் குரூப் சாங்கில் ஆடக்கூடிய கெட்டபில் இருந்தார்.

“இவன்ட்ட சொல்லு” என்பதைப்போல என் தம்பியைப் பார்த்தார் இடுப்பில் கை வைத்த ஆட்டோ காரர்.

சொன்னான்.. அனைத்தையும் சொன்னான்
( இவ்வாறு சொல்லி சொல்லி நொந்து நூடுல்ஸ் ஆனாலும். . . அவனது முகக்களயை சிறிதும் இழக்கவில்லை என் தம்பி)

“ அட...! அது இந்த தெரு கட்சீல இருக்குதுங்க” என்றார் கட்டிளம் ஆட்டோகாரர்.

திடுக்கிட்டு “எதுடா” என்றார் இடுப்பில் கை வைத்த ஆட்டோகாரர். எனக்கு தெரியாம. . .! எப்போ? என்பதைப்போல முகத்தை வைத்துக்கொண்டார்

“அதான் தல. . . சௌகார் ஜானகி மாறி புல் கை ஜாக்கெட்லாம் போட்டுகிட்டு பூஜ பண்றாங்களே அந்த மடம் ” என்றார் கட்டிளம்

“அது நாலு தெரு தள்ளி டீக்கடை பக்கத்துல இல்ல இருந்துச்சி” என்றார் தல.

“இப்ப மாத்திட்டாங்க” என்றார் கட்டிளம்.

“இதெல்லாம் சொல்றதில்லியா? என்பதைப் போல முகபாவத்தை மாற்றி எங்களைப் பார்த்து
“ நேரா போங்க” என்றார் தல.

போனோம், நேரா போனோம்

நிலா முற்றம் வைத்துக் கட்டிய பழைய காலத்து பங்களா. தென்றல் தேகத்தை வருடி நின்றது. மஞ்சள் நிறக் கொடியில் அன்னப் பறவை - ஓ. . . இதுதான் அவர்கள் சின்னம்.

“வாங்க வாங்க”-என்று வரவேற்றனர் இரு பெண்மனிகள். . .

“ இங்க சாந்த சக்த்தி சங்கம்னு. . . .

இதுதான் இதுதான் - யார் அனுப்ச்சாங்க?

சரஸ்வதின்னு மடிப்பாக்கத்தில இருக்காங்களே அவங்க அனுப்ச்சாங்க.

ஓ. . .ஒல்லியா இருப்பாங்களே அவங்களா?

ஆமா. . .

(மடிப்பாக்கத்தில் ஒல்லியாக ஒரேஏஏஏஏ ஒரு சரஸ்வதி தான் இருப்பாங்களான்னு மட்டும் என்னை கேட்டுராதீங்க. . . ஏன்னா லாஜிக் எதிர்பார்க்காதீங்க ப்ளீஸ். . . லாஜிக்கோடத்தான் கதை எழுதனும்னா.. . ஒரு கதை கூட என்னால எழுத முடியாது. . . அப்புறம் மிகச்சிறந்த எழுத்தாளினியை இழந்து சோகமாயிடுவீங்க.)

"செப்பல்சை கழட்டிட்டு உள்ள வாங்க. . ."- என்றார் சின்ன பென்மணி

ஸ்ருதி, ஸ்ரேயா கம் இயர். அரேஞ் இட் - என்றார் பெரிய பென்மணி.

(ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை ஆங்கிலம்...!)

ஸ்ருதி, ஸ்ரேயா என்றதுமே என் தம்பியிடம் இருந்து அவசரமான உயிர் துடிப்பொன்றை உணர்ந்தேன் நான். தலை முடியை விரல்களாலேயே பேக் கோம்பிங் செய்தான், நேற்றைய கர்சீப்பால் முகத்தை அழு ழு ழு த்தி துடைத்தான். அழகாகி விட்டதாக நினைத்து ..... ஸ்டைலாக நின்றான்.

வாவ். . .! உள்ளிருந்து இரு மின்னல்கள். . . நூடுல்ஸ் ஸ்ட்ராப் வைத்த க்கிப் சீ டாப்ஸ் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்த இரு தேவதைகள். . . ஆகா. . . என்ன அழகு. .! என்ன களை ...! என்னை கவர்ந்துவிட்டார்கள் அவர்கள்.

அவர்கள் இருவரும் என் தம்பியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் என் தம்பி உருகிப்போய் நின்றான். கண்கள் மின்ன தயங்கி தயங்கி ஒருத்தியின் அருகில் சென்று தைரியமாக அவளின் கன்னங்களைத் தொட்டான். . . அவள் சிணுங்கினாள்.

( நினைச்சேன். . . ஆன்மீகம்ன்றாங்க. . மடம்ன்றாங்க இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்னு நீங்க நினைக்கறது எனக்குத் தெரியும். . நினைக்கறதை நிறுத்திட்டு அடுத்த வரியை படிங்க.. . )

ஆன்மீகம் என்பது ஆத்மாக்களின் சங்கமம், ஆத்மாவில் ஆண் பெண் பாகுபாடு கிடையாது. . . ஆனால் அந்த ஆத்மாக்கள் ஆண் பெண் உடல்களில் பிறப்பதால் நாம் அவற்றை வேறு
படுத்தி பார்க்கிறோம். . . ஆசையை அடக்க நினைக்காதே. . . .அது உன்னை அடக்கிவிடும். . ஆசையை அடைந்து விடு அது அடங்கி விடும் - இது தானே ஓஷோவின் தத்துவம் ? ( யாருக்கு தெரியும். . . சும்மா. .. ஜுஜூபி..)

ஒருத்தி கன்னத்தை தொட்டது போதாது என்று. . இன்னொருத்தி பக்கத்தில் சென்றான் என் தம்பி. . . விட்டால் முத்தம் கொடுத்து விடுவான் போல இருந்தது. . அப்படி அவன் செய்திருந்தாலும் அங்கு ஆட்சேபிக்க யாரும் இல்லை. . .

(ஓவரா பண்ணாத ப்ரியா, கம் டு தி பாயின்ட் - ந்னு சொல்றீங்களா? அப்ப சரி..)

வேற ஒன்னுமில்லீங்க. . .ஸ்ருதி, ஸ்ரேயா ரெண்டு பேருக்குமே சேர்த்து மொத்தம் எட்டரை வயசு இருக்கலாம்.

ஆனால் அடுத்ததாக அந்த பெரிய பெண்மணியின் கட்டளயின் படி ஸ்ருதி, ஸ்ரேயா செய்த செய்கைகள் என்னையும் என் தம்பியையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

வலப்புரமாக நாங்கள் கழட்டி விட்ட செருப்புகளை தூக்கிச் சென்று இடப்பக்கம் ஏற்கெனவே உள்ள செருப்பு வரிசையில் அடுக்கினர்.. மற்ற செருப்புகளையும் இடைவெளி இல்லாமல் அடுக்கத் துவங்கினர்

தூக்கி வாரிப் போட்டது எனக்கு. . . வேண்டாம் ஸ்ருதி. . . இரு...இரு.. நாங்களே அங்க வைக்கிறோம். . .டோண்ட் டச். . . என்று சொல்லி முடிப்பதற்குள் அடுக்கி முடித்திருந்தனர்

கோபமாக வந்தது எனக்கு.

" குழந்தைங்களைப் போய். . . செப்பல்சை அடுக்கச் சொல்லி. . இட் இஸ் நாட் ஐஜீனிக் மேம் "- என்றேன் நான்

" நோ...ஆன்மீகத்தின் முதல்படியே பணிவுதான். . அதைத்தான் இங்க சொல்லித்தறோம்" என்றார் கர்வப் புன்னகையுடன்.

பணிவா. . .! கண்ட செருப்புகளை அடுக்கி வைக்கறது தான் பணிவா? அதுவும் தெய்வதம் தங்கும் குழந்தைகளைப் போய். .! அழுகை வரும் போல இருந்தது.

எனக்கு அந்த இடமே பிடிக்காமல் போய் விட்டது. உடனே திரும்பி வீட்டுக்கு போய் விட வேண்டும் என்று இருந்தது.

"உள்ள வாங்க, க்ளாஸ் அட்டென்ட் பண்ணுங்க. . .கோடீயில ஒருத்தரைத்தான் அவர் தனது பிள்ளையா செலக்ட் பன்றார்" – என்றபடி உள்ளே சென்றார் அந்த அம்மாள்.

உள்ளே சென்றோம்.

ஆனால் ...எந்த தெய்வமும் அங்கே வசிக்கவில்லை.
எந்த தெய்வதமும் என்னால் அங்கு உணரப்படவில்லை.

------------------------
தொடரும். . .
--------------

2 comments:

பத்ம ப்ரியா said...

Hi Jayabalan
Excellent comment.. because I am unable to understand a single sentence of your comment. Any how my heartiest thanks for your esteemed comments.
M. Padmapriya

Anonymous said...

†§Ä¡ ÀòÁôÀ¢Ã¢Â¡,

¯í¸û §¾¼¨Ä ¾ÂצºöÐ ¿¢¨È× ¦ºöÔí¸û. Ò¾¢Ã¡¸ þÕ츢ÈÐ. ¿ýÈ¢.

ÓÕÌ.

posted by: Muruganantham